Posted on Leave a comment

கோயில் அறிவோம் 2: சிற்பத் தொகுதிகள் – வல்லபா ஸ்ரீனிவாசன்


போன மாதம் ஆயிரக்கணக்கான சிற்ப வகைகளுள், மூர்த்தங்களுள் கொஞ்சமே கொஞ்சமாகச் சிலவற்றைப் பார்த்தோம். அதில் குறிப்பிட்ட மற்றொரு அம்சமான சிற்பத் தொகுதிகளைச் சற்றே பார்க்கலாம்.

கடவுள் வடிவங்களான மூர்த்தங்கள் தவிர இதிகாசங்களிலிருந்தும் புராணங்களிலிருந்தும் காட்சிகள் சித்திரிக்கப்பட்டிருப்பதைப் பல கோயில்களில் காணலாம். தூண்களிலும், சுற்றுச் சுவர்களிலும் இவை காணப்படுகின்றன. புராணக் கதைகள், ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்றவற்றிலிருந்து காட்சிகள், ஜாதகக் கதைகள் என்று இவை எண்ணிலடங்கா. இந்தியா முழுவதும், இன்னும் தாய்லாந்து, மலேசியா போன்ற பல கிழக்காசிய நாடுகளிலும் இத்தகைய காட்சிப்படுத்தும் சிற்பங்கள் காணப்படுகின்றன.

பா ரிலீஃப் எனப்படும் புடைப்புச் சிற்பங்களாகக் காணக்கிடைக்கின்றன. அதாவது தனிக்கல்லிலோ, கல்தூணிலோ ஒரு செவ்வக, சதுர வடிவ அமைப்பிற்குள் (ஃப்ரேம்) கல்லில் இருந்து புடைத்து வெளியே தெரிவதான அமைப்பு. ஒரு ஆழத்தில் உருவம் ஏற்படுத்தி கையால் தொடுகையில் நிரடுவது போல முன்புறம் மட்டும் செதுக்கப்பட்டு பின்புறம் கல்லோடு சேர்ந்திருக்கும். ஒரு தவறானாலும் அந்தப் பாறையோ தூணோ முழுவதும் வீணாகிவிடும். அதனால் கவனமாகச் செதுக்கப்பட வேண்டியவை. கவனம் மட்டுமின்றி கலையும் செம்மையும் சேர்த்துப் படைத்திருக்கின்றனர் நம் சிற்பியர்.

தனிச் சிற்பங்களில் ஒயில், பாவம் எனச் சிறப்புகள் என்றால், காட்சிகளை விவரிக்கும் இச்சிற்பத் தொகுதிகளில் பல்வேறு சிறப்பு அம்சங்களை ரசிக்க முடியும். சாதாரணமாக ஒரு காட்சி ஓவியம் என்பது அதன் கதாபாத்திரங்கள், அந்தக் காட்சியில் அவற்றின் நிலை, காட்சி நடக்கும் இடம், சூழ்நிலை, அதன் தன்மை, இயல்பு இவை யாவற்றையும் கொண்டதாயிருத்தல் சிறப்பு. இவற்றை விளக்கும்பொருட்டு லட்சக்கணக்கான சிற்பத் தொகுதிகளுள் ஒரு சிலவற்றைப் பார்க்கலாம்.

சிற்பக்கலைக்கு சிறப்பேற்றும் மாமல்லபுரம்! இதில் சில சிற்பத் தொகுதிகளைப் பார்ப்போம்.

1. மாமல்லபுரம் – மஹிஷாசுரமர்த்தனி போர்க்காட்சி: இது ஒரு அற்புதப் படைப்பு. உலகிலேயே மிகச்சிறந்த காட்சிச் சிற்பங்களில் ஒன்று.

புராணக்கதை: மகிஷாசுரனை யாராலும் அடக்க முடியாமல் போகவே ப்ரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் தங்களது சக்திகளைக் குவித்து, தத்தமது ஆயுதங்களை அளித்து உருவாக்கிய ஒரு சக்தி ஸ்வரூபம் மகிஷாசுரமர்த்தினி. அவள் எழில் கண்டு ஒரு கணம் மகிஷன் காதலுற்றான் என்கிறது புராணம். இந்த மகிஷாசுரமர்த்தினியை பல கோயில்களில் மகிஷன் தலை மீது நிற்பது போலவும், கூரிய வேலால் குத்தியபடி இருப்பது போலவும் பல கோயில்களில் காணலாம். ஆனால் மாமல்லபுரத்தில் நாம் காண்பது ஒரு காட்சி. எந்தவிதக் குரூரமுமில்லாமல் அதே சமயம் ஒரு போர்க்காட்சியை மிகச் சிறப்பாக விவரிக்கும் விதத்தைப் பாருங்கள்.

மகிஷாசுரமர்த்தினி சிங்கத்தின் மீதேறி வருகிறாள். விஷ்ணுவின் சங்கு சக்கரம், சிவனின் சூலம் இன்னும் பல ஆயுதங்களையும் தன் கைகளில் தாங்கியவாறு ஆக்ரோஷத்தோடு மகிஷனை நோக்கி வருகிறாள். அவள் உடலழகையும், சிங்கத்தின் மீதமர்ந்திருக்கும் எழிலையும் பாருங்கள். மகிஷன் இனி வெற்றி தனதில்லை என்றறிந்துவிட்டான். தலை பின்னோக்கி அவளைப் பார்த்தவாறு புறமுதுகிட்டு ஓட எத்தனிக்கிறான். கையில் அவனது கதாயுதம் இன்னும் இருக்கிறது. ஆனால் அவன் உடல்மொழி அவன் தளர்ந்து சோர்ந்து ஓடும் விதமாகச் சித்திரிக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். தேவியின் வெற்றியை அழகாக உணர்த்தும் சிற்பம்.

தேவி உள்ளிருந்து வெளி வருவது போன்ற கோணத்தில் இருப்பதைக் கவனியுங்கள். இது ஒரு வேகத்தை நமக்கு சிறப்பாகச் சொல்கிறது. அதேபோல மகிஷன் ஓடுவதும். நாம் நடுவில் நின்று பார்க்கும்போது இடப்பக்கம் தேவி வருவதையும் வலப்புறம் மகிஷன் ஓடுவதையும் ஒரு சேர இணைத்துப் பார்க்க முடியும். தேவி ரூபம் சிறிதாக அவள் சற்றே தொலைவில் வருவதைக் குறிக்கிறது. மகிஷன் உருவம் பெரிதாக உள்ளது. இவ்வளவு தொலைவில் வரும்போதே மகிஷன் பயந்து கூனிவிட்டானென்றால் அருகில் வந்ததும் அவன் கதி என்னவாகும் என்ற ஒரு வியப்பை உணர்த்தி தேவியின் சிறப்பை உயர்த்துகிறது இக்காட்சி.

2. மாமல்லபுரம் – வராகமூர்த்தி பூமாதேவியைக் காத்தருளும் காட்சி: மற்றுமொரு அருமையான சிற்பத் தொகுதி.

புராணம்: இரண்யாட்சகன் பூமாதேவியை சமுத்திரத்திற்குள் சுருட்டி ஒளித்து வைத்து விடுகிறான். மஹாவிஷ்ணு வராக அவதாரம் எடுத்து சமுத்திரத்திற்குள்ளிருந்து பூமாதேவியைத் தாங்கி எடுத்து வருகிறார். ஆதிசேஷன் மீது (இதை சமுத்திர ராஜன் என்று சொல்வோரும் உண்டு) காலை வைத்தபடி அன்புடன் பூமா தேவியை அணைத்தபடி உயர்ந்தெழுகிறார். இது சித்திரிக்கப்பட்டிருக்கும் அழகைப் பாருங்கள்.
வராகத் தலையை மனித உடலோடு பொருத்தி அமைக்க வேண்டியது இந்த உருவம். ஒவ்வொன்றுக்கும் சிற்ப சாஸ்திரமும் ஆகமங்களும் இலக்கணம் வகுத்திருக்கின்றன. இவ்வாறு அமைக்கப்பட்ட சிலைகள் இந்தியா முழுவதும் உள்ளன. ஆனால் மாமல்லபுரச் சிற்பி போல இதைச் செம்மையாகச் செய்த சிற்பி எவரும் இல்லை. வராகத் தலையும் மனித உடலும் சேரும் கழுத்துப் பகுதி மிக அற்புதமாக இணைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.

வராக முகத்தில் லேசான ஒரு புன்னகை. ஒரு விலங்கு முகத்தில் புன்னகை தருவிப்பது சாதாரண விஷயமா? அதுவும் கருங்கல்லில் செதுக்கும்போது. மேலாடை நழுவி தொடையில் வழிந்து தொங்கும் நிலையில் ரசிக்கும்படியான தேவியின் நாண பாவத்தைப் பாருங்கள். கீழே ஆதி சேஷன் எந்தையைக் கைகூப்பித் தொழுகிறார். அருகில் அவர் மனைவி அவரைக் காக்கும்படிக் கைகூப்பி நிற்கிறார். உயர்ந்து நிற்கும் பெருமானின் சிறப்பைக் கூறும் விதமாக சூரிய சந்திரர்களும் கைகூப்பி மேலே இருபுறமும் காணப்படுகின்றனர்.

ஒரு நிமிடம் அந்தக் காட்சி இருக்கும் இடத்தைப் பார்ப்போம். சற்றே பின் வந்து நோக்கினால், அந்தச் சிற்பம் இருப்பது, ஒரு பெரிய பாறையைக் குடைந்தெடுக்கப்பட்ட கோயிலின் ஒரு சுவரின் பகுதி எனத் தெரியும். எங்கு ஆரம்பித்திருப்பார்கள் எவ்வாறு செய்திருப்பார்கள் என வியக்க வைக்கும் ஒரே கல்லில் (மோனோலித்) குடைந்து செய்யப்பட்ட ஆச்சரியங்கள்.

3. காஞ்சி கைலாசநாதர் கோயில் – சிவபெருமானும் இந்திரனும் – ஒரு காட்சி

இந்திரன் சிவபெருமானைக் காண வருகிறாராம். வாசலில் அவரை விடாமல் கணங்கள் விளையாடி ஆர்ப்பரித்து அட்டகாசம் செய்கின்றன. சிவபெருமானும் கணங்களோடு கணமாக விளையாட்டில் ஈடுபடுகிறார். இதில் வலதுபுறம் காணப்படும் கணத்திற்கு நான்கு கைகள் இருக்கும். இரண்டுக்கு மேல் கைகள் அமைக்கப்பட்டிருந்தால் அது தெய்வ ஸ்வரூபம் என அறிகிறோம். எனவே அது கணமாக உருவெடுத்த சிவபெருமான்.

பொறுமையிழந்த இந்திரன் கோபத்தில் தன் வஜ்ராயுதத்தை எறிய ஆயத்தமாகிறான். நடுவில் வலக்கையை உயர்த்தி ஆயுதமேந்தி நிற்பவன் இந்திரன். அவன் சிவபெருமானைத் தாக்க எத்தனிப்பதைக் கண்டு கலங்கிய விஷ்ணு, ப்ரம்மா, அக்னி தேவர் மூவரும் அவனைத் தடுக்கின்றனர்.

விஷ்ணு: மேலே ஆட்காட்டி விரலைத் தூக்கி எச்சரிக்கை செய்வதாக சித்திரிக்கப்பட்டிருக்கிறார்.

ப்ரம்மா: தனது ஒரு கரத்தால் இந்திரனின் வலக்கையைத் தடுத்துப் பிடிக்கிறார். உற்றுப் பார்க்கவும். மற்றொரு கை “யாரை அடிக்க கிளம்பினாய் இந்திரா? அது சாக்‌ஷாத் சிவபெருமான். அறியவில்லையா?” எனக் கேட்கும்படி கை விரித்துக் காண்பிக்கப்பட்டிருக்கிறது. மற்றுமொரு கை இந்திரனின் இடதுகையைத் தடுத்தவாறு இருக்கிறது.

அக்னி பகவான்: இந்திரனின் மார்பைப் பிடித்துப் பின்னிழுக்க முற்படுகிறார். அவர் முகத்தில் கவலையையும் இந்திரனைத் தடுக்கும் வேகத்தை உடல்மொழியிலும் சித்திரித்திருப்பதைக் காணலாம்.

இந்திரன் தாக்க முற்பட்டதைக் கண்டு சிவபெருமான் கோபம் அடைந்து நெற்றிக் கண்ணைத் திறக்கிறார். அதிலிருந்து புறப்பட்ட கோபமானது துளியாக மாறி கமண்டலத்தில் அடைக்கப்படுகிறது. அதுவே ஜலந்திரன் எனும் அசுரனாக இந்தச் சிற்பத் தொகுதியின் கீழே கைகூப்பி நிற்பதாகக் கூறப்படுகிறது. புராணக் கதைகளைப் புரிந்து கொள்ளுதல் ஒருபுறம். அவற்றின் காட்சிப்படுத்தலை வியக்க கதை மட்டுமே போதுமானது.

ஆர்ப்பரிக்கும் கணங்கள், இந்திரனின் கோபம், அக்னியின் கவலை, ப்ரம்மாவின் முயற்சி அத்தனையும் காணலாம். நிறைய சிதிலமான போதிலும் இவற்றைக் காண முடிகிறது. முதலில் எப்படி இருந்திருக்கும்?

இதைப் போல கட்டுரையில் எழுதி மெச்சுவதற்கு இடமே போதாமல் போகும் அளவு சிறப்பான பிரம்மாண்டமான மாமல்லபுரம் அர்ச்சுனன் தபசு, கோவர்த்தன கிரி சிற்பத் தொகுதிகள். அழகழகான காஞ்சி கைலாச நாதர் கோயில் காட்சிச் சிற்பங்கள். இவ்வாறு பல கோயில்களிலும் இருக்கும் எண்ணிலடங்கா சிற்பங்கள்.

பெரிய மிகப் பெரிய தொகுதிகள் ஒரு பக்கம். இப்போது நாம் பார்ப்பது ஒரு ராமாயணக் காட்சி.

4. குகன் படகு விடும் காட்சி: கும்பகோணம் அருகே புள்ளமங்கை என்ற ஊரில் உள்ள ஒரு சிறு கோயிலில் அருமையான ராமாயணச் சிற்பக் காட்சிகள் காணக் கிடைக்கின்றன.

ராமனும், லட்சுமணனும் சீதையும் கங்கை ஆற்றைக்கடந்து செல்லும் பொருட்டு குகனின் படகில் ஏறிச் செல்கின்றனர். ஊரே கரையில் நின்று அழுதவாறு ராமனுக்குப் பிரியாவிடை அளிக்கிறது. குகனோ என்னுடனே தங்கி விடலாமே, வனவாசம் போக வேண்டாம் ராமா என்கிறான்.

தந்தை சொல்லை நிறைவேற்ற முடியாமல் களங்கம் உண்டாகலாம் என உணர்ந்த ராமன் இனியும் தாமதிப்பதில் அர்த்தம் இல்லை என்று புரிந்துகொண்டு படகில் ஏறிக் கொள்கிறான். “விடு நனி கடிது என்றான்…” என கம்பர் இந்தக் காட்சியை விவரிக்கிறார். ராமனின் கட்டளைக்கு அடிபணிந்து குகன் துடுப்பை அழுத்திப் படகைச் செலுத்துகிறான். படகு விரைகிறது. ராமர், சீதை, லட்சுமணர் – இவர்களின் உடல் சற்றே சாய்ந்திருப்பது, இந்தப் படகு செல்லும் வேகத்தை உணர்த்துவதாக இருக்கிறது.

*

ஆளுயரச் சிற்பத் தொகுதிகள் மாமல்லபுரத்தில் மலைக்க வைக்கின்றன என்றால் இந்தக் காட்சி செதுக்கப்பட்டிருப்பது ஒரு உள்ளங்கை அளவே உள்ள கல்லில். ஒரு ஆட்காட்டி விரலின் உயரம் இந்தக் காட்சிச் செவ்வகத்தின் உயரம்.

இவை ஒரு புராணக் காட்சியின் கலைப் பார்வை மட்டுமே. புராணப்பகுதி, நுணுக்கமான கலையம்சங்கள், அழகுணர்ச்சி, இவை தவிர பல்வேறு படிகளில் (லேயர்ஸ்) இச்சிற்பத் தொகுதிகள் அடுக்கடுக்காகப் பல விஷயங்களைச் சொல்கின்றன. அவை ஒரு ஆன்மிக அனுபவத்தை நமக்குத் தரக் காத்திருக்கின்றன.

Leave a Reply