Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் -3: வணக்கம் சொன்ன எம்.ஜி.ஆர் – சுப்பு


வாரியங்காவலுக்கு அருகில் மருதூர் என்ற சிற்றூர் இருக்கிறது. கிராமத்துப் பெண்கள் பகல் வேளையில் சுள்ளி ஒடிப்பதற்காக முந்திரிக் காட்டுக்குப் போவார்கள். ஐம்பது வருடங்களுக்கு முன்னால் ஒருநாள் காட்டுக்குப் போனவர்கள் தங்களோடு வந்த ஒரு பெண்ணைக் காணாமல் தேடியிருக்கிறார்கள். பின்னர் வீடு திரும்பினார்கள். இதற்குள் காணாமல் போன பெண் வீடு வந்து சேர்ந்துவிட்டாள். காட்டில் ஒரு முனிவரைக் கண்டதாகவும், அந்த முனிவர் இவளைக் கன்னத்தில் ஒரு அறை கொடுத்ததாகவும் அவள் கூறினாள். அன்று முதல் அந்தப் பெண் பல அற்புதங்களை நிகழ்த்தினாள். கூரையிலிருக்கும் ஓட்டை உடைத்து வந்தவர்கள் கையில் கொடுத்து மூடிக்கொள்ளச் சொன்னால், கொஞ்ச நேரத்தில் அவரவர் விருப்பப்படி கைக்குள் குட்டி விக்ரகம் கிடைக்கும். கொங்கண முனிவர் அவளுக்கு இவற்றை அருளியதாகக் கருதிய மக்கள் அவளை மருதூர் சித்து என்று அழைத்தார்கள்.

வீதியில் நின்றுகொண்டு மருதூர் சித்து கையைத் தூக்கி வேண்டினால் ரோஜா மாலையும், பழனிப் பஞ்சாமிர்தமும் கையில் விழும். குழந்தை இல்லாதவர்கள் மருதூர் சித்துவிடம் வேண்டிக்கொண்டு, குழந்தை பிறந்தவுடன் தூக்கிக்கொண்டு வருவார்கள். குழந்தையை மருதூர் சித்து கைகளில் தூக்கி வைத்துக் கொள்வாள். எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே குழந்தை காணாமல் போய்விடும். சித்து வீட்டு வேலை செய்யப் போய்விடுவாள். வந்தவர்கள் பயபக்தியோடு காத்திருப்பார்கள். கொஞ்ச நேரம் கழித்து சித்து ஓடிவந்து கையைத் தூக்கினால் குழந்தை மொட்டை அடிக்கப்பட்டு, சந்தனம் பூசப்பட்டு, மாலையோடு, வேலோடு தொப்பென்று விழும். பழனி விபூதியும், பஞ்சாமிர்தமும் கூட வரும். குழந்தை பழனிக்குப் போய் மொட்டை அடித்துக்கொண்டு வந்துவிட்டதாக ஐதீகம். மருதூருக்கும் பழனிக்கும், குறைந்தபட்சம் முந்நூறு கிலோ மீட்டர் இருக்கும்.

நானும் மருதூர் சித்தைப் பார்த்திருக்கிறேன். எனக்கும் விக்ரகம் கிடைத்திருக்கிறது.

பல வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் இரவு மருதூர் சித்துவின் வரலாற்றை மகாபலிபுரத்துக் குப்பத்துத் தோழர்களிடம் உற்சாகமாக விவரித்துக் கொண்டிருந்தேன். அவர்களில் ஒருவன் மொத்தக் கதையையும் கேட்டுவிட்டு நான் கப்ஸா விடுகிறேன் என்று சொல்லிவிட்டான். எனக்கு உண்மையை எப்படி நிரூபிப்பது என்று தெரியவில்லை. மருதூர் சித்து எவ்வளவோ அற்புதங்கள் செய்திருக்கிறதே, இங்கே இப்பொழுது ஒரு அற்புதம் செய்து தன்னை நிரூபிக்கக்கூடாதா என்று வேண்டினேன். அப்பொழுது குப்பத்துப் பையன் ஒருவன் அங்கே வந்து நாங்கள் என்ன பேசிக்கொண்டிருக்கிறோம் என்று கேட்டபோது, விவரத்தைச் சொன்னோம். “ஆமாம், நானும் டூர் போயிருந்தபோது அந்த மருதூர் சித்தைப் பார்த்திருக்கிறேன். இவன் சொல்வதெல்லாம் உண்மைதான்” என்று அடித்துப் பேசினான்.

*

ஓவியம்: ஜீவா

வாரியங்காவலில் ஹோட்டலோ, டீக்கடையோ கிடையாது. வெளியூரிலிருந்து வருகிறவர்கள் வேண்டப்பட்டவர்களுடைய வீட்டில் சாப்பிட்டுக் கொள்ள வேண்டியதுதான். மற்றபடி அரசாங்க அதிகாரிகளோ, பள்ளிக்கூட இன்ஸ்பெக்டர்களோ வந்தால் அவர்களுக்கு நம்ம வீட்டில்தான் சாப்பாடு.

யாராவது ஒரு கூட்டுறவுத் துறை பதிவாளரை மதிய விருந்துக்காக அழைத்து வருவார் நயினா. சாப்பிட்டு முடித்து வெற்றிலை சீவல் போட்டு அலுவலக அரசியலைப் பேசி முடித்த பிறகு ஒரு சம்பிரதாயம் பாக்கி இருக்கும். விருந்தினருக்கு ‘சகலகலாவல்லி மாலை’, ‘முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்’ போன்ற தோத்திரங்களை நான் சொல்லிக் காட்ட வேண்டும். இதற்காகவே எனக்கு பளிச்சென்ற உடை. தவிர அப்பளாக்குடுமியோடு எண்ணெய் வைத்த ஜடை.

ஒருநாள், தாசில்தார் ஒருவர் வந்திருந்தார். சாப்பிட்டாயிற்று, சம்பிரதாயங்களும் ஆயிற்று. அவர்கள் இருவரும் சுவாரஸ்யமாக உரையாடிக் கொண்டிருந்தார்கள். என்னுடைய புத்தியோ வேறு திசையில் சஞ்சரித்துக் கொண்டிருந்தது. ஒரு கேள்வி, என்னை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. விஷயம் இதுதான்.

எதிர் வீட்டில் சுசீலா என்றொரு பெண் இருந்தாள். எட்டாம் வகுப்பை முடித்தவள். இருந்தாலும் எனக்குத் தோழிதான். எனக்கு ஆறு வயது என்றாலும் அவள் எனக்குத் தோழிதான்.

முதல்நாள் மாலை முதல் சுசீலாவைக் காணவில்லை. சன்னமான குரலில் ‘ஓடிப்போய்’விட்டதாகப் பேசிக்கொண்டார்கள். ‘எங்கே போயிருப்பாள்? கூட்டிப் போனவன் யார்?’ என்றெல்லாம் விதவிதமாக விசாரணைகள். நம்முடைய பிரச்சினை அதுவல்ல. ‘சுசீலா எவ்வளவு நேரம் ஓடிக்கொண்டே இருப்பாள். அவளுக்கு கால் வலிக்காதா?’ என்பதுதான் என்னுடைய கவலை. காலையிலிருந்து இந்தக் கேள்வி மூளையில் முட்டிக்கொண்டு நின்றது.
கேட்டுவிட்டேன்.

தாசில்தாருடன் பேசிக் கொண்டிருந்த நயினாவின் கையைப் பிடித்து இழுத்து, “சுசீலா ஓடிண்டே இருக்காளே அவளுக்குக் கால் வலிக்காதா?”

தாசில்தார் முகத்தில் கலவரம் படர்ந்தது.

நயினா ஒருவாறு சமாளித்தார். அம்மா என்னை உள்ளே இழுத்துப் போனார்.

*
இப்படி சுவாரசியமாகப் போய்க்கொண்டிருந்த என்னுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. ஐந்தாம் வகுப்புக்குப் பிறகு, நான் சென்னைக்குப் போய் பெரியப்பா வீட்டில் தங்கிப் படிக்க வேண்டும் என்பது நயினாவின் முடிவு.

நயினாவின் முடிவு எனக்குத் தெரிவிக்கப்பட்டவுடன் நான் எடுத்த முடிவு, குடுமியை எடுத்துவிட வேண்டும் என்பதுதான். அதுவும் அமல்படுத்தப்பட்டது.

சென்னை அடையாரில் பெரியப்பா வீடு. முத்தண்ணா, ஏகாம்பரம், சீதாராமன், தியாகராஜன் என்று அண்ணன்கள். விசுவநாதன் என்று ஒரு தம்பி.

சென்னையில் நுழைந்தவுடன் என்னை முதலில் தாக்கியது அதனுடைய அளவு. இரண்டாவது தொழில்நுட்பம்.

சென்னைக்கு வந்த புதிதில், பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருப்பேன். ஜன்னலில் மழைத் தடுப்புக்காக ஒரு பிளாஸ்டிக் திரையும், அதைப் பொருத்துவதற்காக சின்னச் சின்னக் குமிழ்களும் அமைக்கப்பட்டிருக்கும். இந்தக் குமிழ்கள் இதற்காகத்தான் இருக்கின்றன என்ற விவரம் அப்போது தெரியாது. தெரியாத விஷயத்தைக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென்ற பணிவும் கிடையாது. அந்தக் குமிழ்களை பஸ் இஞ்சினுடைய ஒரு உறுப்பு என்று நானாகவே ஊகித்துக் கொண்டேன். அதன் விளைவாக இந்தப் பகுதியை இப்படி கவனிப்பாரற்று விட்டுவிட்டார்களே, இதனால் ஏதாவது விபத்து ஏற்படுமோ என்ற கலக்கம். சமயத்தில் ஜன்னலோரமாய் அமர்ந்திருக்கும் பயணி அதை எதேச்சையாகத் திருகிக் கொண்டிருப்பார். நான் மரண பயத்தில் உறைந்துபோய் அவரையே பார்த்துக் கொண்டிருப்பேன்.

எனக்கு ஜன்னல் சீட் கிடைத்தால், அவர் திருப்புவதைக் கண்காணித்து அதற்கு நேர்மாறான திசையில் எனக்கருகிலிருக்கும் குமிழை நான் திருப்பி பஸ்ஸையும், பயணிகளையும் காப்பாற்ற முயற்சிப்பேன். பஸ்ஸை விட்டு இறங்கிய பிறகுதான் எனக்கு உயிர் வரும். இந்தச் சின்ன விஷயத்தை ஒழுங்காய்த் தெரிந்து கொள்ள எனக்கு ஒரு வருடம் ஆயிற்று.

*
பெரியப்பா வீட்டில் ரேடியா உண்டு. ரேடியோவில் இரண்டு விஷயங்கள்தான் அனுமதிக்கப்படும். ஒன்று ஆங்கிலச் செய்தி. இன்னொன்று நாதஸ்வரம். என்னால் தவுல்காரன் வாசிப்பைத் தாங்க முடியாது. ரேடியோ எப்படி வேலை செய்கிறது என்று அண்ணன்மாரிடம் விசாரித்தேன். உள்ளே நாதஸ்வர கோஷ்டி உட்கார்ந்துகொண்டு வாசிப்பதாக எனக்குச் சொல்லப்பட்டது. ஆளில்லாத நேரம் பார்த்து தவுல்காரனுக்கு ஒருமுறை எச்சரிக்கை விடுத்தேன். அவன் என்னை மதிப்பதாயில்லை. கோபத்தில் ரேடியோ பெட்டி மீது ஓங்கி ஒரு குத்து. கண்ணாடி உடைந்து களேபரம். என்னைச் சுற்றி வீட்டார். ‘இந்தத் தவில்காரன் சொன்னா கேக்க மாட்டேங்கிறான்’ என்றேன். எதிர்வீடு, மாடி வீடு, பக்கத்து வீடு, பள்ளி நண்பர்கள் என்று செய்தி மெல்லப் பரவி எல்லோரும் என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பித்தார்கள்.

விஷயம் இதோடு முடியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு வீட்டு வாசலறையில் இருந்தேன். ரேடியோ மெக்கானிக் ரேடியோவை ரிப்பேர் செய்து எடுத்து வந்தார். கை நீட்டி வாங்கும்போது கை தவறி ரேடியோ கீழே விழுந்து உடைந்தது. எனக்கு யார் மீதும் கோபமில்லை. ஏதோ அதுவே கீழே விழுந்துவிட்டது என்று நான் சொன்னதை யாரும் நம்பத் தயாராயில்லை. மீண்டும் ரேடியோ சம்பவம் அக்கம்பக்கங்களில் சுவாரசியமாகப் பேசப்பட்டது.

*

இல்லஸ்ட்ரேடட் வீக்லியில் மணமக்களின் புகைப்படம் வெளிவரும். அனேகமாக எல்லா மணமகனும் கோட் சூட்தான் அணிந்திருப்பார்கள். சில ஜோடிகளைப் பார்க்கும்போது பொருத்தம் சரியில்லையென்று நினைப்பேன். கழுத்தோடு மணமகனை வெட்டி என் ரசனைக்கேற்றவாறு வேறு மணமகளோடு இருப்பவனின் இடத்தில் ஒட்டிவிடுவேன். ஒருநாள் இந்த வேலையில் மும்முரமாயிருந்தபோது பெரியப்பா கவனித்துவிட்டார். அன்று அவர் காட்டிய கோபத்திற்கு நல்ல பலனிருந்தது. இந்தத் தவறை அதற்குப் பிறகு நான் செய்யவில்லை.

*
நான்கு அண்ணன்கள் இருந்தது சில விஷயங்களில் அசௌகரியமாய் இருந்தது. நான் புதுப்புத்தகம் வாங்க முடியாது. பெரியண்ணனிடமிருந்து கைமாறிக் கைமாறிக் கடைசியாகப் புத்தகம் என்னிடம் வரும்போது அது சிரமதசையிலிருக்கும். எல்லோரும் அட்டை போட்டு லேபிள் ஒட்டிய புத்தகங்களை எடுத்து வருவார்கள். எனக்கோ புத்தகத்தைத் தொட்டுப் பார்க்கவே எரிச்சலாய் இருக்கும். துக்கம் தாளாமல் ஒருநாள் நார்நாராய் இருந்த ஆங்கிலப் புத்தகத்தை தனித்தனி பேப்பராகக் கிழித்து எடுத்துவிட்டேன். அன்றையப் பாடத்தை மட்டும் மடித்து டவுசர் பாக்கெட்டில் செருகிக்கொண்டு ஸ்கூலுக்குப் போனேன். டெஸ்க் மேல் கால்மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு ஹிந்து பேப்பரைப் படிப்பதுபோல் ஆங்கிலப் பாடத்தை விரித்துப் படித்தேன்.

எல்லாப் பெண்களும் என்னை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். ‘இனிமேல் எந்தப் பாடம் நடக்கிறதோ அதை மட்டுமே நான் எடுத்து வருவேன்’ என்றும், ‘எல்லாவற்றையும் தூக்கிக்கொண்டு வரவேண்டிய அவசியமில்லை’யென்றும் அறிவித்தேன். இரண்டுபேர் என்னைப் பின்பற்றி அப்பொழுதே தங்கள் புத்தகங்களைப் பிரித்து எடுத்துவிட்டார்கள். டீச்சர் வந்ததும் அவர்களுக்கு மட்டும் பூசை. டீச்சரின் கருத்துப்படி சில தவறுகளை மாணவர்கள் செய்யலாம். ஆனால் மாணவிகள் செய்யக்கூடாது.

*       
நான் படித்த ராணி மெய்யம்மை உயர்நிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஜார்ஜ். இவர் குள்ளமான உருவமுடையவர். கோட்டு, பேன்ட் அணிந்திருப்பார். கையில் ஒரு போலீஸ் விசிலை வைத்து ஊதிக்கொண்டே பள்ளியைச் சுற்றி வருவார். ஜார்ஜுடைய தோரணைகள் நாடக பாணியிலிருக்கும். இவர் பையன்களைத் தண்டிக்கும் விதமே அலாதி. தவறு செய்தவன் ப்ரேயர் நடக்கும்போது, மேடையில் ஏறி ஓரமாக நிற்க வேண்டும். தலைமையாசிரியர் நடுநாயகம். ப்ரேயர் முடிந்தபிறகு பையன் செய்த குற்றத்தை ஜார்ஜ் அனைவருக்கும் அறிவிப்பார்.

அறிவிப்புக்குப் பிறகு தீர்ப்பு. யார் என்ன தவறு செய்தாலும் தீர்ப்பு ஒன்றுதான். அது மாறாது. ‘நான் நீதிபதியாய் இருந்தால் இவனுக்குத் தூக்குத் தண்டனை விதித்திருப்பேன். நான் தலைமையாசிரியராய் இருப்பதால் என் முழு பலத்தையும் பிரயோகித்து இவனுக்கு ஆறு அடிகள் வழங்குகிறேன்’ என்பார். இந்த வாசகத்திற்காகவே காத்திருந்த ப்யூன், மேடை மீதேறி தலைமையாசிரியரிடம் பிரம்பைக் கொடுப்பான். இதற்குள் பையனும் அவர் அருகில் வந்துவிட வேண்டும். நீட்டிய கைகளில் ஆறு அடிகள். வலிதாங்காமல் கை மடக்கப்பட்டால், எண்ணிக்கை மீண்டும் ஒன்றிலிருந்து துவங்கும்.

தமிழாசிரியர் செவ்வாய்க் கிழமைகளில் மிகவும் கோபமாயிருப்பார். இதற்கான காரணத்தை கமலக்கண்ணன்தான் கண்டுபிடித்தான். செவ்வாய்க்கிழமைகளில் ஆசிரியர் ஷேவிங் செய்து கொள்ளுகிறார், அந்த எரிச்சலில் நம்மை விரட்டுகிறார் என்று கமலக்கண்ணன்தான் சொன்னான். வகுப்பிலேயே அவன்தான் உயரம். வயதும் அதிகம். கமலக்கண்ணன்தான் எங்கள் வகுப்பில் ஒரே கம்யூனிஸ்ட். பெரிய ஜிகினா போட்ட அரிவாள் சுத்தியல் பேட்ஜை பனியனில் குத்திக்கொண்டு வருவான். சட்டையை நீக்கி பாட்ஜைக் காட்டு என்ற நாங்கள் அவனைக் கேட்க வேண்டும். எல்லோரும் எம்.ஜி.ஆர்., சிவாஜியைப் பற்றிப் பேசும்போது இவன் மட்டும் விடாமல் ‘சோவியத் ரஷ்யாவில் எத்தனை ஐந்தாண்டு திட்டங்கள் நிறைவேறிவிட்டன என்று தெரியுமா?’ என்று ஒவ்வொருத்தரையும் கேட்பான். எங்களுக்குத் தெரிந்ததெல்லாம். அதிகமான ஐந்தாண்டு திட்டம் என்றால் அதிகமாகப் பாடம் படிக்க வேண்டியிருக்கும் என்பதுதான்.

*       
மாலை நேரத்தில் அடையாறு ஆற்றங்கரையில் நான்கு பேராக (இரண்டு இந்து, ஒரு கிறித்துவர், ஒரு முஸ்லீம்) சேர்ந்துகொண்டு உண்டிவில்லால் ஓணான் அடிப்போம். அடிபட்டு விழுந்த ஓணானை எடுத்து முதலில் கிறித்துவர் முறைப்படி மரியாதை செலுத்தி ஒரு டப்பாவுக்குள் போடுவோம். பிறகு முஸ்லீம் முறைப்படி ஓணான் டப்பாவைப் புதைத்துவிடுவோம். கடைசியாக ஓணான் டப்பா தோண்டியெடுக்கப்பட்டு இந்து முறைப்படி மந்திரங்கள் சொல்லிக் கொளுத்தப்படும். இந்தக் கிறித்துவன் இப்போது அமெரிக்காவில். இந்து, வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தில் காம்ரேட் (சி.எச். வெங்கடாசலம்). தொலைக்காட்சிகளில் பிரதமர் மோடியைக் கண்டிக்கிறார். முஸ்லீம் என்னவானான் என்று தெரியவில்லை.

*
எங்கள் வீட்டிற்கு அருகில் திரைப்பட நடிகர் கே.ஆர்.ராமசாமி குடியிருந்தார். அவரைப் பார்ப்பதற்காக தி.மு.க.வினர் வந்து போவார்கள். ஒருநாள் நானும் ஞானசேகரன் என்ற பையனும் கே.ஆர்.ராமசாமி வீட்டு வழியாகப் போய்க் கொண்டிருந்தோம். வாசலில் ஒரு கார் நிறுத்தப்பட்டிருந்தது. எம்.ஜி.ஆர். கேட்டைத் திறந்துகொண்டு வெளியே வந்தார்.

ஞானசேகரன் ‘டேய், எம்.ஜி.ஆர்.டா. எம்.ஜி.ஆர்.டா’ என்று என்னை இடித்தான். நானும் எம்.ஜி.ஆரைப் பார்த்துவிட்டேன். இருந்தாலும் அதற்காக இவன் இப்படிக் கத்துவது எனக்குப் பிடிக்கவில்லை. ‘எம்.ஜி.ஆராக இருந்தால் என்னடா’ என்று அவனைத் தள்ளிவிட்டேன். இத்தனையும் எம்.ஜி.ஆர். முன்னிலையில் நடந்தது. அவர் புன்முறுவலுடன் கைகூப்பி எங்களைப் பார்த்து ‘வணக்கம்’ என்றார். பதட்டத்தில் நான் பதிலுக்கு மரியாதை செய்யவில்லை. அவர் காரில் ஏறிப் போய்விட்டார். ஞானசேகரன் எம்.ஜி.ஆரைப் பார்த்ததைப் பற்றியும், நான் எம்.ஜி.ஆருக்கு வணக்கம் சொல்லவில்லை என்பதையும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டான்.

(…தொடரும்)

Leave a Reply