Posted on Leave a comment

எரிப்பதும் புதைப்பதும்: ஒரு பதினேழாம் நூற்றாண்டு சர்ச்சை – அனீஷ் கிருஷ்ணன் நாயர்


சமீபத்தில் ஒரு அரசியல் தலைவர் இறந்தபோது அவரது உடலை எரிப்பதா, புதைப்பதா என்ற சர்ச்சை எழுந்தது. ஒரு வழியாகப் புதைப்பது என்று முடிவு செய்து அம்முறையில் இறுதி சடங்கையும் செய்து முடித்து விட்டார்கள். ஆனால் இன்றளவும் புதைத்தது தவறு என்று கூறுபவர்கள் இருக்கிறார்கள். அரசியல் தலைவர்களைப் பொருத்தமட்டில், அவர்கள் உயிரோடு இருக்கும்போதே தங்களது இறுதிச் சடங்குகளைக் குறித்தும் அவை நடத்தப்பட வேண்டிய முறை குறித்தும் தெளிவாக எழுதி வைத்திருந்தால் பிரச்சினை இல்லை. இல்லாவிட்டால் பெருங்குழப்பம்தான்.

இத்தகைய சர்ச்சைகள் புதிதல்ல. பதினேழாம் நூற்றாண்டிலேயே இத்தகைய சர்ச்சைகள் ஏற்பட்டிருக்கின்றன. அந்தச் சர்ச்சை பன்னிரண்டு வருடங்கள் வரை நீடித்திருக்கிறது.

இதனை தஞ்சை சரஸ்வதி மஹால் ஆவணங்கள் வாயிலாக அறியலாம். சரஸ்வதி மஹால் சேகரிப்பில் ‘ஞபரமானந்தயோகி சரித்திரம் (பூர்ணபிரம்மானந்த யோகி கூற்று)’ என்னும் பதினேழாம் நூற்றாண்டு ஆவணம் உள்ளது.

தஞ்சை மராத்திய பேரரசைச் சேர்ந்த மன்னன் ஷாஹாஜி போன்ஸ்லே 1684 முதல் 1712 வரை ஆண்டவர். முஹாலயப் படைகளுக்கு எதிராக வெற்றிகரமான பல தாக்குதல்களை நடத்தியவர். கலை இலக்கியப் புரவலர். இவரது மரணத்திற்குப் பிறகு அவரது பூத உடலைத் தகனம் செய்வதா புதைப்பதா என்று குழப்பம் எழுந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த சில விஷயங்கள் ‘சமாதிலிங்க பிரதிஷ்டை விளக்கம்’ என்னும் பெயரில் மஹால் வெளியிட்ட நூலின் பின்னிணைப்பாக உள்ளது. இவற்றைத்தான் மேற்கண்ட ஆவணம் விவரிக்கிறது.

ஷாஹாஜி இறந்த செய்தி கேட்டதும் பரப்பிரம்மானந்த யோகி (அவரது சீடர் பூரணப்பிரம்மானந்த யோகியும் உடன் வர) வல்லத்தில் இருந்து தஞ்சை கோட்டைக்கு வந்து கோட்டை ஹவில்தாரான சீத்தப்பராவிடம் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

‘சகசிராசீபரர் சரீர வாசம் விட்டு தவலோகம் போனார். அவர் நமக்கு ஆன்மபந்து. அவர் வாசம் பண்ணின கோயில் மந்திரபிண்டமான படியினாலே அவர் கோயிலான மந்திரபிண்டத்தை சமாதியிலே வையுங்கள்.’

ஹவில்தார் துரையிடம் கேட்டுத் தக்கபடிச் செய்வதாக கூறுகிறார். இங்கு துரை என்பது அடுத்த பட்டம் ராஜாவைத்தான் குறிக்கும் என்று எண்ணுகிறேன். துரை பரம்பரையாக நடக்கும் சம்பிரதாயத்தை மாற்றக்கூடாது என்கிறார். “இப்போது நூதனமாக ஒன்று செய்தால் பூர்வீகம் தவறி போகும்” (78) என்று கூறி ஷாஹாஜியின் உடலைத் தகனம் செய்து விடுகிறார்.

இவ்வாறு அரசரது உடல் புதைக்கப்படாமல் தகனம் செய்யப்பட்டதை அறிந்த பரப்பிரம்மானந்த யோகி மிகவும் வருத்தம் அடைகிறார். அவர் ஹவில்தாரைக் கண்டு கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.

“சம்பிரதாயம் பார்த்தீர்களே தவிர மகிமை அறியாது போனீர்கள்… இராசாவுக்கும் தேசாதிபதிக்கும் மண்டலாதிபதிக்கும் ஆகிய இவர்களிடத்திலே சிவம் மாத்திரை போது இருக்கும். சகஜிராசீசுபரர் சதாசிவ பிரம்மம். அவர் வாசம் பண்ணின கோயில் மந்திரபிண்டமான திருக்கோவில். அது தகனமான தோஷம் பதினாறு வருடம் வருத்துமே இராசாவுக்கு ஆகாதே. இராக்சியத்துக்கு ஆகாதே.”

இவ்விடத்தில் இரண்டு விஷயங்கள் கவனிக்கத்தக்கது. யோகி அரசனின் உடலை எரிக்கக் கூடாது என்று கூறுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். சிலர் கூறுவது போல மன்னர் இறுதி நாட்களில் சன்னியாசம் எடுத்துக் கொண்டார் என்பது உண்மையாக இருக்கலாம். அதனால்தான் மன்னனை ‘சதா சிவ பிரம்மம்’ என்று கூறி இருக்கலாம். இல்லையெனில் அரசர்கள் விஷ்ணு அம்சம் என்ற நம்பிக்கை இருப்பது போல, அரசர்கள் சிவ அம்சம் (‘மாத்திரை அளவு சிவம் இருக்கும்’) என்ற நம்பிக்கை கூட அரசன் உடலை எரியூட்டக் கூடாது, புதைக்கத்தான் வேண்டும் என்று வலியுறுத்தியதற்குக் காரணமாக இருக்கலாம். அரசனிடம் சிவ ஸ்வரூபம் உள்ளது என்பது சோழர் காலம் தொட்டு, அதற்கும் முன்பிலிருந்தே இருக்கும் நம்பிக்கை எனக் கொள்ளலாம். முன்னர் அரசர்களுக்கு அவர்களைப் புதைத்த இடத்தில் பள்ளிப்படை கோவில்கள் இருக்கும. பள்ளியடைதல் எனில் உறங்குதல் என்றும் இவ்விடத்தில் நீங்காத உறக்கம் என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால் பள்ளிப்படை கோவில்களில் ஆதிசைவர் பூஜை செய்யவில்லை. காளாமுகர்கள்தான் பூஜை செய்துள்ளனர்.

ஹவில்தார் நடந்த விஷயத்திற்கு வருத்தம் தெரிவித்து பரிகாரம் கேட்கிறார். பரமானந்தயோகி தக்க பரிகாரத்தைக் கூறுகிறார். தனது சிஷ்யனான பூரணபிரம்மானந்த யோகியை பதினாறு வருடம் தஞ்சை நகரில் தவம் இருக்க வைப்பதே தக்க பரிகாரம் என்கிறார். அவ்வாறு தியான சமாதியாகிய தவத்தில் அவர் சகலருக்கும் நன்மை வேண்டி பிரார்த்தனை செய்வார் எனவும், அவரது தியானத்திற்கும் தவத்திற்கும் இடையூறு வராமல் காக்க வேண்டியது ஹவில்தார் சீத்தப்பாராவின் பொறுப்பு என்றும் கூறி ஸ்ரீங்கத்திற்குச் சென்று விடுகிறார்.

அவ்வாறு பூர்ணபிரம்மானந்த யோகி தவம் செய்து வருகையில் சீத்தப்பாராவ் இறந்து விடுகிறார். ஆனாலும் அவரது மகன் வைத்தியோசி ஹவில்தார் யோகியைப் பராமரித்து வருகிறார். ஆனால் தவம் இடையில் தடைபடுகிறது. யோகி, “…சமாதி நின்று போய் அடியேனையும் பட்டணம் விட்டு வெளியே கொண்டு போய் பத்திரம் செய்து விட்டார்கள்” என்கிறார். எதற்காக அவர் காவலில் வைக்கப்பட்டார் என்பது சொல்லப்படவில்லை. பிறகு வைத்தியோசி ஹவில்தார் உதவியுடன் திரும்பி தஞ்சைக்கு வருகிறார்.

இதற்கிடையில் காவேரி சம்மந்தமான பிரச்சினை ஒன்று வருகிறது. அனேகமாக நாயக்கர்கள் மற்றும் தஞ்சை மராட்டியர்கள் இடையே நீர் பகிர்தல் மற்றும் உபரிநீரை வெளியேற்றுதல் தொடர்பான சச்சரவாக இருக்கக் கூடும். இவ்விஷயத்திலும் சிஷ்ய யோகி தலையிடுகிறார். அவர் “…அதனால் திருச்சிராப்பள்ளிக்குப் போய் சமூக மீனாட்சி நாயக்கரைக் கண்டு விசயரருரங்கச் சொக்கநாத நாயக்கருக்கும் பயபக்தி வரத்தக்கதாய் தாகீதை செய்து…” என்று கூறுகிறார்.

ஒரு வழியாக 16 வருடம் முடிகிறது. தவக்காலம் முடிந்ததால் சாந்தி செய்து முறையாகப் பரிகாரச் செயல்களை முடிக்க வேண்டும் என்கிறார். இது விஷயமாக ஆறு முறை அரண்மனைக்குச் செய்தி அனுப்புகிறார். ஆனால் பதில் ஏதும் வரவில்லை. செய்தி பலர் வழியாக எழுத்து மூலமாக அனுப்பி வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. அவற்றால் எந்தப் பயனும் இல்லாததால் சிஷ்ய யோகி நேரடியாக அரண்மனைக்குச் சென்று ஒரு தாக்கீதைக் கொடுக்கிறார். அதன் பிரதி வழியாக நாம் அறிந்து கொண்ட விவரங்கள்தான் மேலே சொன்னவை.

மேற்கண்ட ஆவணத்தை நவசரித்திரக் கோட்பாடு (New Historicism) வழியாக அணுகலாம். Pramod. K. Nayar , From Text to Theory : A Hand book of Literary and Cultural Theoryல் கூறிய இரண்டு விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1. “In New Historicist readings, texts (both literary and non-literary) are material practices and not simply linguistic acts because they actively shape a collective imagination and identity.” (108).

2. “Cultural forms such as literary texts embody social relations and power structures in a society and age…” (109).

இவ்விரண்டு கருத்துக்களையும் மேற்கண்ட ஆவணத்தில் பொருத்திப் பார்க்கும் போது சில கருத்துக்கள் தெளிகின்றன.

1. தஞ்சை மராத்தியர் ஆட்சியிலும் சைவ யோகிகள் பலமாகத்தான் இருந்தனர்.

2. மன்னர் உடலை எரிப்பதா புதைப்பதா என்று வந்த சர்ச்சை இரண்டு கலாசாரங்கள் மற்றும் மரபுகள் மோதி இணையும் / பிரியும் இடத்தில் உருவாவதுதான்.

3. அதிகாரிகள் யோகிகளை வருடகணக்கில் வைத்துப் பராமரிப்பதைச் சுமையாகக் கருதவில்லை.

4. ஹவில்தாரால் பராமரிக்கப்படும் யோகிகள் கூட அரச நடவடிக்கைகளில் இருந்து தப்பவில்லை.

5. ஹிந்து மதம் என்றுமே பாரதத்தை இணைக்கும் சரடாகவே இருந்துள்ளது. சைவரான யோகி கூறியதை வைணவ நாயக்கர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

6. ஆன்மிகவாதிகள் முக்கிய பிரச்சினைகளில் தூதுவர்களாகச் செயல்பட்டு சமரசம் செய்துள்ளனர்.

7. அரச வாரிசுகளுக்குத் தங்களுக்குமுன் ஆட்சி புரிந்தவர்களின் இஹலோக பரலோக வாழ்க்கையைக் குறித்து அதிகம் அக்கறை இருக்கவில்லை.

வரலாற்றின் விசித்திரமே அது மீண்டும் மீண்டும் தன்னை நிகழ்த்திக் கொள்வதில்தான் உள்ளது. இந்தச் சுழற்சியில் இருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் என்பதுதான் முக்கிய கேள்வி.

Leave a Reply