Posted on Leave a comment

காந்தி, அம்பேத்கர், சாவர்க்கர், ஹிந்துத்துவம்: அரவிந்தன் நீலகண்டன்

அண்மைக் காலத்தில் தமிழ் அறிவியக்கச் சூழலில் சில குரல்களைக் கேட்க முடிகிறது.

‘இந்துத்துவம் என்பது ஒரு அரசியல் சித்தாந்தம். அது ஒற்றைத் தன்மை கொண்டது. இந்துமதம் என்பதோ பன்மைத்தன்மை கொண்டது. இந்துத்துவமென்பது மேற்கத்தியக் கோட்பாடுகளிலிருந்து ஐரோப்பியத் தாக்கத்தால் உருவான ஒரு சித்தாந்தம். அது ஒரு பொது எதிரியைக் காட்டி இந்துக்களை ஒன்றாகக் கட்டமைக்க முற்படுகிறது. இருபதாம் நூற்றாண்டில் இந்து மதத்தின் திரண்ட வடிவமாக காந்தி காட்டப்படுகிறார். இந்துத்துவத்தின் பிதாமகராக விநாயக தமோதர ராவ் சாவர்க்கர்.’

ஆஷிஷ் நந்தி, ராமச்சந்திர குகா ஆகியவர்களைப் பிரதியெடுத்து, அவர்கள் பெயர்களைச் சொல்லாமலோ சொல்லியோ இவ்வாதம் தமிழ்ச் சூழலில் முன்வைக்கப்படுகிறது.

காந்தி ஒரு பிரச்சன்ன நவீனத்துவரா?

இதில் மற்றொரு முக்கிய வேறுபாடும் உள்ளது. குகாவின் பார்வையில் காந்தியே கிறிஸ்தவ ஐரோப்பியத் தாக்கம் கொண்டவர்தான். கிறிஸ்தவத்துடனான நீண்ட உரையாடல் மூலமே காந்தி உருவாகி வந்தார் எனும் எண்ணம் கொண்டவர் குகா. காந்தியில் பாரம்பரியத் தோற்றம் முதல் அவர் இந்திய மரபு சார்ந்த உணர்ச்சிகரமான குறியூடுகளைப் பயன்படுத்தியது வரை இந்திய மனதின் ஏற்புக்காக அவர் செய்ததென இப்பார்வை உள்ளீடாகக் கருதுகிறது. ஆஷிஷ் இதை மறுக்கிறார்:

‘காந்தியை மதச்சார்பற்றவர் என ‘விற்க’ முயற்சி செய்யும் பல நவீன இந்தியர்களுக்கு காந்தி சமயத்தையும் அரசியலையும் பிரித்துப் பார்ப்பதைக் குறித்து கொள்ளும் பார்வைகள் மிகவும் விரக்தியான நாணமளிப்பவை. ஏன் வேதனையளிப்பவை என்றே சொல்லலாம். உண்மையில் ஒரு மறைமுக நவீனத்துவரான காந்தி பாரம்பரிய மொழியாடலைப் பயன்படுத்தியதே கட்டுக்கோப்பற்ற சமுதாயத்தை, காலனியாதிக்கத்தை எதிர்த்துப் போராட ஒருங்கிணைப்பதற்குத்தான் என்று அவர்கள் இதற்கு ஒரு சமாதானத்தை சொல்லிக் கொள்கின்றனர். இதைவிட மோசமான சால்ஜாப்பு ஒன்று இருக்க முடியாது. காந்தியின் மதம் குறித்த சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மைக்கு எதிரான அவரது நிலைப்பாட்டிலிருந்தும் அந்நிலைப்பாடோ நவீனத்துவத்தை அவர் மறுப்பதிலிருந்தும் உருவாகிறது.’ (நந்தி, ‘Time Warps: The Insistent Politics of Silent and Evasive Pasts’, 2003)

ஆனால் ஆஷீஷ் நந்தி போன்றவர்களுக்கு சாவர்க்கர் ஒரு நவீனத்துவராகத் தெரிகிறார். இந்துத்துவம் என்பது ஐரோப்பிய அரசியல் கோட்பாடுகளிலிருந்து குறிப்பாக ஒற்றைத்தன்மை கொண்ட அதன் இன-தேசியவாதக் கோட்பாடுகளிலிருந்து உருவாவதாகத் தோன்றுகிறது. தனது இந்த அபிப்பிராயத்தை வரலாற்று உண்மையாக உருவகித்துக் கொண்டு ஒரு இருமையை உருவாக்குகிறார் ஆஷீஷ் நந்தி. இந்து மதம் vs. இந்துத்துவம்.

உண்மை என்னவென்றால், மீண்டும் மீண்டும் பேசப்படும் கடுமையான அன்றைய அரசியல் வேறுபாடுகளைத் தாண்டி, காந்தியும் சரி, சாவர்க்கரும் சரி ஒன்றுபடும் முக்கிய அடிப்படை புள்ளிகள் உண்டு.

காந்தி-சாவர்க்கர் லண்டன் சந்திப்பு:

அப்புள்ளிகளும் முரண்பாடுகளும் லண்டனில் சாவர்க்கரும் காந்தியும் சந்தித்த போதே வெளிப்பட்டன. தமிழர்கள் துரதிர்ஷ்டம் வாய்ந்த அதிர்ஷ்டசாலிகள். காந்தி சாவர்க்கர் சந்திப்பினைக் குறித்து அவர்கள் அஷீஷ் நந்தியை நம்பியிருக்க வேண்டியதில்லை. அச்சந்திப்பில் சாவர்க்கருடன் இருந்த இரு இளைஞர்கள் தமிழர்கள். ஒருவர் வரகநேரி வேங்கட சுப்ரமணிய ஐயர். வவேசு ஐயர் என அவரை நாம் அறிவோம். மற்றொருவர் திருவெங்கிமலை சேஷ சுந்தர ராஜன் என்கிற டாக்டர்.டி.எஸ்.எஸ்.ராஜன். பொதுவாக காந்தியும் சாவர்க்கரும் முதன்முதலாகச் சந்தித்த போது சாவர்க்கர் தடாலடியாக காந்தியைப் புலால் உண்ண அழைத்ததை ஆஷீஷ் நந்தி மூலமாக ’கண்டுபிடித்து’ பகுத்தாய்வு செய்யும் தமிழக அறிவுஜீவிகள் அந்நிகழ்வுகளின் முழுமையையும் கண்டறிந்து பேசினால் எத்தனை சிறப்பாக இருக்கும்! எனவேதான் தமிழர்களாகிய நாம் துரதிர்ஷ்டம் பிடித்த அதிர்ஷ்டசாலிகள்.

’இந்தியா ஹவுஸ்’-இல் தங்கி, சாவர்க்கர், வவேசு ஐயர், TSS ராஜன் ஆகியோர் புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போதுதான் காந்தி அங்கே வருகை தந்தார். காந்தி மட்டுமல்ல ரஷிய புரட்சியாளர் லெனின் கூட ஜார் அரசின் ஏஜெண்ட்களால் தேடப்பட்ட காலகட்டமொன்றில் சில காலம் இந்தியா ஹவுஸில் சாவர்க்கரின் உதவியுடன் மறைவாகத் தங்கியிருந்தார்.

ஆண்டு 1909. அந்த ஆண்டு ஜூலையில் மதன்லால் திங்க்ரா கர்ஸான் வில்லியைச் சுட்டுக்கொன்று பலிதானி ஆகியிருந்தார். அவரை சிறையில் சென்று சாவர்க்கர் சந்தித்தார். அவரது இறுதி உரை தீவிர தேசபக்தியின் வெளிப்பாடாக இருந்தது. அடிப்படையில் அந்த இறுதி சாசனம் ஒரு இந்துத்துவ பிரகடனமே:

‘என்னுடைய தேசத்துக்குச் செய்யப்படும் ஒவ்வொரு தீமையையும் என் கடவுளை அவமானப்படுத்தியதாக, இந்துவாகிய நான் உணர்கிறேன். தேசமாதாவினுடைய கட்சியிலிருந்து நான் செய்வதெல்லாம் ஸ்ரீ ராமனுடைய திருப்தி; அவளுக்கு நான் செய்யும் கைங்கரியங்கள் ஸ்ரீ கிருஷ்ணனுக்குச் செய்யும் கைங்கரியங்கள். ஸம்பத்திலும் புத்தியிலும் எளியனான என்னைப் போன்ற மைந்தன் தன்னுடைய சொந்த ஜீவரத்தத்தையே அன்றி வேறெதை பாரத அன்னைக்குச் சமர்ப்பிக்க முடியும்? அவளுக்குச் சமர்ப்பிக்க அவனிடம் வேறெந்தக் கைமுதலும் கிடையாது. ஆனபடியால் நான் என்னுடைய ரத்தத்தையே அவளுடைய பலிபீடத்தில் சமர்ப்பித்துவிட்டேன்.’

திங்க்ராவின் இறுதிப் பிரகடனம் சாவர்க்கரே எழுதியதென்றும் கருதப்படுகிறது. ஆனால் திங்க்ராவுக்கு அப்பிரகடனத்தில் காணப்பட்டுள்ள விஷயத்துக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இருந்திருக்க முடியாது என்பது தெளிவான விஷயம். தனது இறுதிக் கோரிக்கையில் திங்க்ரா தன் பூத உடல் இந்து முறைப்படி எரியூட்டப்பட வேண்டுமென்றும் இந்துக்களைத் தவிர வேறெவரும் தம் உடலைத் தொடக் கூடாதென்றும் கேட்டிருந்தார். ஆனால் அவர் உடல் புதைக்கப்பட்டது.

இச்சூழலில்தான் சில மாதங்களுக்குப் பிறகு இந்தியா ஹவுஸ் உறுப்பினர்கள் 24 அக்டோபர் 1909 அன்று விஜயதசமி பண்டிகையைக் கொண்டாட முடிவெடுத்தனர். அந்த ஆண்டு ஜூலை 10 முதல் நவம்பர் 13 வரை காந்தி லண்டனில் இருந்தார். இந்தியா ஹவுஸ் ஏற்கெனவே பிரிட்டிஷ் உளவுத்துறையின் கண்காணிப்பில் இருந்தது. தசரா விழாவின்போது சம்பிரதாய முறைப்படி பிரிட்டிஷ் அரசன் ஏழான் எட்வர்ட்டுக்கு வாழ்த்து (’டோஸ்ட்’) செய்யப்படாது என்றும் அன்று ஸ்ரீ ராமருக்கும் பாரத அன்னைக்கும் புஷ்பாஞ்சலி செய்யப்படும் என்றும் விழா குறித்து அனுப்பப்பட்ட தகவலில் கூறப்பட்டது. அக்கூட்டத்துக்கு தலைமை தாங்க விபின் சந்திர பால் அவர்களை அழைப்பதாக ஏற்பாடு. ஆனால் அவர் வர மறுத்துவிட்டார். அவரது மகனையும் அனுப்பவில்லை.

வவேசு ஐயர் லண்டன் முழுக்க சுற்றியலைந்து காந்தியைக் கண்டுபிடித்தார். ஐயர் காந்தியைக் கண்டடைந்த விதத்தை விவரித்ததை ராஜன் ஆவணப்படுத்துகிறார்:

‘பல இடங்களில் அவரை விசாரித்துத் தேடினேன் . இந்தியாவிலிருந்து வந்திருக்கும் தலைவர்கள் தங்கியிருக்கும் பெரிய ஹோட்டல்களில் எல்லாம் அலைந்து திரிந்து , இரண்டு மணி நேரத்துக்கு அப்பால் , வண்டி புகமுடியாத ஒரு சிறிய சந்தில் இந்தியாவிலிருந்து வந்து சிற்றுண்டிச் சாலை ஒன்றை நடத்தி வரும் ஒருவர் வீட்டில், கடைசியாக அவரைக் கண்டேன். இரண்டு மூன்று பழைய நாற்காலிகள், ஒரு கிழிந்த ஜமுக்காளம், அதன் மேல் ஒரு படுக்கை, இவைகள் அடங்கிய ஒரு சிறிய அறையில் சதா புன்னகை புரியும் முகத்துடன், ஆங்கில உடுப்புடன் ஸ்ரீமான் காந்தியைக் கண்டேன்.’

மறுநாள் காந்தியைக் காண சாவர்க்கரும் ஐயரும் சென்றனர். அடுத்த மூன்று நான்கு நாட்களுக்கு காந்தியும் சாவர்க்கரும் ஐயரும் தொடர்ந்து உரையாடினார்கள். சாவர்க்கரின் புரட்சிகர நடவடிக்கைகளை காந்தி ஏற்கவில்லை. காந்தியின் அகிம்சையை சாவர்க்கர் ஏற்கவில்லை.

ஆனால் இந்தக் கருத்து வேற்றுமையைத் தாண்டி, புரட்சியில் நம்பிக்கை கொண்ட இதர ‘இந்தியா ஹவுஸ்’ உறுப்பினர்களிடம் சாவர்க்கரும் ஐயரும் காந்தியே தசரா பண்டிகைக்குத் தலைமை ஏற்க வேண்டுமென்று வலியுறுத்தினர். காந்தியும் வேற்றுமைகளுக்கு அப்பால் விழா தலைமை ஏற்க ஒத்துக் கொண்டார். ஆனால் ஒரு நிபந்தனை. விழா சம்பிரதாய ஐரோப்பிய பாணியில் உண்டு பேசிக் கலைவதாக இருக்கக் கூடாது. எனவே இந்திய பண்டிகை என்பதற்கு அடையாளமாக ‘இந்திய உணவு புலால் இன்றி ஏற்பாடு செய்யப்பட வேண்டும்.’ சாவர்க்கரும் ஐயரும் ஏற்றுக் கொண்டனர்.

விழாவில் காந்தியும் சரி சாவர்க்கரும் சரி வேற்றுமைகளைப் பேசவில்லை. இருவருமே பாரதத்தின் மகோன்னதத்தை நினைவு கூர்ந்தனர்.

காந்திய வரலாற்றாசிரியர் பிரமோத் கபூர் சாவர்க்கரின் உரையில் ‘ஹிந்துஸ்தானத்தின் இதயம் இந்துக்களே’ எனக் கூறினார் என்கிறார். தொடர்ந்து பேசிய சாவர்க்கர் ’வானவில்லின் அழகை அதன் பல்வேறு வண்ணங்கள் அதிகரிப்பது போல, ஹிந்துஸ்தானம் முஸ்லீம் பார்சி யூத சமுதாயங்களை உட்கொள்வதன் மூலம் அழகடையும்’ என்றார். இப்பார்வையுடன் காந்தியும் உடன்பட்டார் என்கிறார் கபூர்.

சிறையில் பல கொடுமைகளை அனுபவித்தார் சாவர்க்கர். சிறையில் எந்தக் கைதிகள் அதிகாரிகளுக்குத் தொந்தரவு கொடுத்தாலும் அதற்கு சிறை அதிகாரிகள் சாவர்க்கர் சகோதரர்களையே காரணமாகக் கூறி அவர்களுக்குத் தண்டனைகள் அளித்தனர். சாவர்க்கர் இக்காலகட்டத்திலேயே அரசுக்கு மனுக்களை அளித்தார். இம்மனுக்கள் குறித்த பிரசார புரளிகளுக்கு விரிவான விடைகள் ஏற்கெனவே வெளிவந்துள்ளன. இருந்தாலும் இங்கு இரு விஷயங்களை மட்டும் குறிப்பிட வேண்டும்.

சாவர்க்கர் மட்டுமல்ல, இதையொத்த நிர்ப்பந்தங்களுக்கு இதைவிடக் குறைவான கொடுமைகளை அனுபவித்த பல வரலாற்று ஆளுமைகள் இதைப் போன்ற தந்திரங்களைப் பயன்படுத்தியுள்ளனர். அறிவியலாளர் கலிலியோ கத்தோலிக்க சபையின் புனித விசாரணையின் முன் தம்முடைய நிலைப்பாடான ‘பூமியே சூரியனைச் சுற்றுகிறது’ என்பதை தானே மறுத்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். இது எவ்விதத்திலும் கலிலியோவின் மாண்பைக் குறைத்துவிடவில்லை. ஜாரின் ஆட்சியில் சைபீரியாவில் ’சிறையில்’ இருந்தார் லெனின். அங்கே அவருக்கு அது ஒரு விடுமுறை போலவே கழிந்தது. வேட்டையாடுவது முதல் நூல்கள் படித்துக் கட்டுரைகள் எழுதுவது என வாழ்க்கையை ‘சிறையில்’ கழித்த லெனின் சிறை அதிகாரிகளை வேண்டி தன் காதலியைத் தம் ‘சிறை வாசத்தின்’ போதே திருமணமும் செய்துகொண்டார். அவரது சிறைக் காலம் முடிந்து பீட்டர்ஸ்பர்க் வந்த லெனின் அப்போது ‘சிறையில்’ இருந்த தம் காதல் மனைவியுடன் மீண்டும் இருக்க ஜாரின் அதிகாரிகளுக்கு ’பாரம்பரிய உயர்குடிப் பிரபுவான விளாதிமீர் இலியிச் யுலியானவ்’ (‘the hereditary noble, Vladimir Ilyich Ulyanov…’) எனத் தம்மை தாமே அறிமுகப்படுத்தி தயையுடன் கடிதம் எழுதத் தயங்கவில்லை. ஆனால் இவற்றைக் கொண்டு லெனினையோ கலிலியோவையோ எவரும் மதிப்பிடுவதில்லை. சாவர்க்கரை மட்டும் அவரது மனுக்களின் அடிப்படையில் உளவியல் மதிப்பீடு செய்வது என்பது அபத்தமான அறிவியல் தன்மையற்ற அணுகுமுறை என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

சாவர்க்கரைப் பொருத்தவரையில் இஸ்லாமியர் மீதான வெறுப்பு என்பதை வட இஸ்லாமியப் பிரிவினைபோக்கின் மீதும் இஸ்லாமிய விரிவாதிக்க அரசியலின் மீதுமே கடும் விமர்சனங்கள் இருந்தன.

ஒன்றுபடும் இடங்கள்: அம்பேத்கர், சாவர்க்கர், காந்தி

சாவர்க்கரும் காந்தியும் உடன்படும் இடங்கள், அவர்கள் முரண்படும் இடங்களைப் போலவே முக்கியமானவை. இந்தியா என்பது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட ஒரு போலி தேசியக் கதம்பமோ ஒருவித சமரச உடன்பாடோ மட்டும்தான் என்பதை காந்தியும் சரி சாவர்க்கரும் சரி ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்திய தேசியத்தின் அடிப்படை அதன் பண்பாட்டு தேசியம் என்பதை சாவர்க்கரும் சரி காந்தியும் சரி தெளிவாகவே உணர்ந்திருந்தனர். சாவர்க்கர் அதை ஹிந்துத்துவம் என வரையறை செய்தார். காந்தி ’ஹிந்த் ஸ்வராஜ்ஜியம்’ என அதை அழைத்தார். ஆசேது ஹிமாலய பரியந்தம் தலைமுறைகளாக நடைபெறும் தீர்த்த யாத்திரைகளை தேசிய ஒருமைப்பாட்டின் வரலாற்றியக்கங்களாக அவர் கூறினார்.

சுவராஜ்ஜியம் என்பதை மேற்கத்தியப் பாணியிலான அரசியல் விடுதலையாக காந்தி வரையறை செய்யவில்லை. அவர் அதை ஹிந்துக் கோட்பாடாகவே கண்டார். ஸ்வராஜ்ஜியம் என்பதை ஏற்கெனவே சத்ரபதி சிவாஜி பயன்படுத்தியிருந்தார். ஆரிய சமாஜத்தை நிறுவிய தயானந்த சரஸ்வதியும் லோகமான்ய திலகரும் அதே பதத்தைப் பயன்படுத்தியிருந்தனர். காந்தி ஸ்வராஜ்ஜியத்தைக் குறித்த தம் கருத்தை இவ்விதமாகக் கூறுகிறார்;

‘சுவராஜ்ஜியம் என்பது வேதத்திலிருக்கும் பதம். புனிதமான பதம். அது தன்னாட்சி சுயக்கட்டுப்பாடு எனும் பொருள் கொண்டது. அது அனைத்திலிருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ளும் independence அல்ல.’ (’யங் இந்தியா’, 1931)

அம்பேத்கரும் இந்திய தேசியத்தின் தனித்தன்மையாக அதன் ஆழமான பண்பாட்டு ஒற்றுமையையே வலியுறுத்துகிறார். காந்தி , சாவர்க்கர் ஆகியோர் இந்தியச் சூழலில் இந்திய வரையறைகளை மட்டுமே கொண்டு தேசத்தை வரையறை செய்யும்போது அம்பேத்கர் மேற்கத்திய வரையறைகளையும் தரவுகளையும் கணக்கில் கொள்கிறார். மேற்கத்திய மானுடவியல் கோட்பாடுகளின் அடிப்படைகளில் இந்தியாவின் சமுதாயக் குழுக்களின் பன்மைத்தன்மையைக் கொண்டு பாரதத்தின் தேசியத்தன்மையை நிராகரிப்பதில் உள்ள தவறை அவர் உணர்ந்திருக்கிறார்.

கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மானுடவியல் கருத்தரங்கில் பேசுகையில் அம்பேத்கர் பாரதத்தின் ‘ஒரு ஆழமான பண்பாட்டு ஒற்றுமையை’ கூறுகிறார். ‘எந்த ஒரு ஆங்கிலேயர்களைக் காட்டிலும் இந்தியர்களாகிய நாம் ஒன்றாக இருக்கிறோம்’ எனப் பண்பாட்டு தேசிய ஒற்றுமையை காந்தி ‘ஹிந்த் ஸ்வராஜ்’ஜில் கூறினார் என்றால் அம்பேத்கர் கருத்தரங்கில் கூறுகிறார்: ‘இந்திய தீபகற்பத்துக்கு நிகரான பண்பாட்டு ஒற்றுமை கொண்ட நாடு வேறெதுவும் கிடையாது.’ அம்பேத்கரைப் பொருத்தவரையில் இந்தப் பண்பாட்டு ஒற்றுமையே வேறெதையும் விட மக்களை ஒருமைப்படுத்தும் ஒரே வரையறை.

1916 முதல் 1946 வரையில் அம்பேத்கரின் பார்வையில் ஒரு வியக்கத்தகு ஒற்றுமை இழை ஓடுகிறது. அம்பேத்கர் நிலப்பரப்பு சார்ந்த தேசியத்தை (territorial nationalism) சட்டை செய்யாமல் ஆன்மிக – பண்பாட்டு தேசியத்தையே முன்வைக்கிறார். 1942ல் மும்பையில் ஒரு கூட்டத்தில் பேசும்போது அம்பேத்கர் கூறினார்:

‘பாகிஸ்தானால் இந்த மண்ணில் இஸ்லாமைப் பரப்ப முடியும் எனக் கருத வேண்டாம். ஹிந்துக்கள் அதை மண்ணைக் கவ்வச் செய்வார்கள். எனக்கு சாதி இந்துக்களுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன என்பதை ஒத்துக் கொள்கிறேன். ஆனால் உங்கள் முன்னால் நான் ஒரு வாக்குறுதி அளிக்கிறேன். நம் தேசத்தின் பாதுகாப்புக்காக நான் என் வாழ்க்கையையே அர்ப்பணிப்பேன்.’

இதை அம்பேத்கர் கூறியது 1942ல் என்பது முக்கியமானது. இங்கு பாகிஸ்தான் என அம்பேத்கர் கூறுவது பாகிஸ்தான் என்று உருவான ஒரு நாட்டை அல்ல. இஸ்லாமிய விரிவாதிக்க மனநிலை கொண்ட மக்கள் திரளை என்பது தெளிவு. பட்டியல் சமுதாய மக்கள் இஸ்லாமியர்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ ஆகும் போது அவர்கள் தேசியத்தன்மையை இழந்து விடுகிறார்கள் என அம்பேத்கர் கூறியதும் இங்கு நினைவுபடுத்தப்பட வேண்டும். 1946ல் ஒரு தேசம் அதன் ஆன்மிகத் தன்மையினாலேயே தேசமாகிறது எனக் கூறுகிறார் அம்பேத்கர்.

இறுதியாக இந்தியப் பாராளுமன்றத்தில் சட்ட நிர்ணயக் குழு உரையில் இந்தியாவின் ஒற்றுமையைக் குறித்தும் அதன் பாதுகாப்புக் குறித்தும் அம்பேத்கர் ஆற்றும் உரையில், இந்திய வரலாற்றை அவர் அணுகும் விதம் சர்வ நிச்சயமாக ஒரு இந்துத்துவ அணுகுமுறையே எனக் கருதலாம்.

இங்கு அவர் இந்திய மக்கள் இன்னும் இந்திய தேசமாகவில்லை என்கிறார். இதற்குக் காரணம் சாதிகள் என்கிறார். சாதிகள் தேசத்தன்மைக்கு விரோதமானவை என்கிறார். இந்தியாவின் பண்பாட்டு ஒற்றுமையை முழுமையாக ஏற்ற அம்பேத்கர் ஏன் இந்தியா ஒரு தேசமாகவில்லை எனக் கருதுகிறார் என்பது தெளிவு. அவர் தேசத்தை மக்களின் ஆன்மிக இணைப்பாகக் கருதுகிறார். அந்த இணைப்பு முன்பு இருந்தது, அதை நாம் இழந்துவிட்டோம், அதை நாம் மீட்க வேண்டும் என்பது அவர் எண்ணம்.

அவர் கூறுகிறார்:

‘இந்தியா ஒரு சுதந்திர நாடாக இருந்ததில்லை என்பதல்ல. அவள் தன் சுதந்திரத்தை முன்பு இழந்திருக்கிறாள். அவள் மீண்டும் தன் சுதந்திரத்தை இழப்பாளா? இந்த எண்ணமே என்னை வருங்காலம் குறித்து அல்லலுறச் செய்கிறது. என்னை மேலும் நிம்மதியிழக்க வைக்கும் விஷயமென்னவென்றால் இந்தியா சுதந்திரத்தை இழந்தாள் என்பது மட்டுமல்ல அவள் அச்சுதந்திரத்தை தன் சொந்த மக்களின் விசுவாசமின்மையாலும் துரோகத்தாலும் இழந்தாள் என்பதுதான். முகமது பின் காசிம் சிந்து பிரதேசத்தைப் படையெடுத்தபோது தாஹிர் அரசரின் இராணுவ தளபதிகள் கையூட்டு பெற்றுக்கொண்டு தம் அரசருக்காகப் போரிட மறுத்துவிட்டார்கள். பிருத்விராஜ் சௌகானுக்கு எதிராக முகமது கோரியைப் படையெடுக்க தன் ஆதரவை அளித்து அழைத்தவன் ஜெய்சந்த். சிவாஜி ஹிந்துக்களின் விடுதலைக்காகப் போராடியபோது வேறு சில மராட்டியப் பிரபுக்களும் ராஜபுத்திரர்களும் முகலாயப் பேரரசின் பக்கம் போராடினார்கள். பிரிட்டிஷார் சீக்கியப் பேரரசை அழிக்க முயன்றபோது குலாப் சிங் சீக்கியர்களுக்கு உதவ மறுத்துவிட்டார். 1857ல் இந்தியாவின் பெரும்பகுதி பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராடியபோது சீக்கியர்கள் மௌனமாகக் கைகட்டி வேடிக்கை பார்த்தார்கள்.

இவ்வரலாறு மீண்டும் நிகழுமா? இந்த எண்ணமே என்னை இன்னலுறச் செய்கிறது. நமக்கு எதிராக சாதிப் பிரிவுகளாகவும் மதங்களாகவும் செயல்படும் பழைய எதிரிகளுடன் இன்றைக்குப் புதிதாக அரசியல் கட்சிகளும் எதிர்நிலை கொண்ட சித்தாந்தங்களும் உருவாகிவிட்டன. இந்தியர்கள் தாம் சார்ந்த பிரிவுகளுக்கு மேலே தேசத்தை வைப்பார்களா அல்லது தம் சித்தாந்த மதப் பிரிவினைகளை தேசத்துக்கு மேலாகப் பார்ப்பார்களா? எனக்கு தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். மக்கள் தேசத்துக்கு மேலாக தங்கள் சித்தாந்தங்களை மதங்களைப் பார்ப்பார்களென்றால் நம் விடுதலை மீண்டும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும். இம்முறை அது நிரந்தரமாகப் பறி போய்விடும். இந்தச் சூழல் ஏற்படாமல் இருக்க நாம் உறுதி பூணுவோம். நம் விடுதலையை நாம் நம் இறுதிச் சொட்டு இரத்தம் உள்ளவரை பாதுகாக்க வேண்டும்.

இந்துத்துவம் இன-தேசியக் கோட்பாடா?

சாவர்க்கருக்கு இனத் தூய்மை எனும் கோட்பாடோ அல்லது மானுடம் வெவ்வேறு இனங்களாலானது எனும் கோட்பாடோ ஒவ்வாமை அளிக்கிறது. அன்று ஐரோப்பா முழுக்க கோலோச்சிய கோட்பாடு இது. அன்று மிகவும் மானுட நேய வாதிகளாக அறியப்பட்ட ஐரோப்பியர்கள் கூட இனவெறுப்பாளர்களாக இல்லாவிட்டாலும்கூட இனகோட்பாட்டாளர்களாக இருந்தார்கள். இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில்தான் இனக்கோட்பாடுகள் கைவிடப்படலாயின. ஆனால் சாவர்க்கர் 1920களின் தொடக்கத்திலேயே ஐரோப்பிய தேசிய வாதங்கள் பலவற்றின் அடிப்படையில் அமைந்த இனக்கோட்பாட்டையும் இனத்தூய்மைக் கோட்பாட்டையும் முழுமையாக நிராகரித்துவிடுகிறார்.

‘சரியாகப் பார்த்தால் மானுடனைப் பொருத்தவரையில் உலகம் முழுவதும் ஒரு இனம்தான். அனைவருக்கும் பொதுவான ரத்தம் ஓடும் ஒரே மானுட இனம். மற்ற அனைத்து (இனக்) கோட்பாடுகளும் கூடி கூடிப் போனால் தற்காலிகமானதோ அல்லது சார்புத்தன்மை கொண்டவைதாம். நீங்கள் இனத்துக்கு இனம் உருவாக்கும் செயற்கைப் பிரிவினைச் சுவர்களையெல்லாம் இயற்கை தொடர்ச்சியாக உடைத்துக்கொண்டே இருக்கிறது. உங்கள் அனைத்து இறைத்தூதர்களின் வார்த்தைகளையும் ஆணைகளையும் காட்டிலும் பாலினக் கவர்ச்சி அதிக வலிமை கொண்டது. …உண்மையில் நம்மில் எவரொருவரும் சொல்லிக் கொள்ள முடிந்ததெல்லாம் தன் ரத்த நாளங்களில் அனைத்து மானுடத்தின் ரத்தமும் கலந்தோடுகிறது என்பதைத்தான். உலகின் வட துருவம் முதல் தென் துருவம் வரை மனித குலத்தின் அடிப்படை ஒருமைத்தன்மை மட்டுமே உண்மையானது, மற்றனைத்தும் சார்புடையவைதாம்.’

மார்க்சியரோ வேறெவரோ ஐரோப்பாவில் இதே காலகட்டத்தில் இதே எண்ணம் கொண்ட ஒரு எழுத்தை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

முரண்பாடுகள்

காந்திக்கும் சாவர்க்கருமான அடிப்படை முரணை இப்படிப் புரிந்து கொள்ளலாம். ஹிந்து தேசியத்தின் நீடித்த உள்வாங்கும் தன்மை நூற்றாண்டுகளில் இஸ்லாமைத் தன்வயப்படுத்திவிடும் என காந்தி கருதினார். மாறாக சாவர்க்கர் ஹிந்து தேசியம் இஸ்லாமைப் போர்க்களப் பாணியில் தோற்கடிக்க வேண்டுமெனக் கருதினார். டாக்டர் அம்பேத்கர் இவ்விரு முறைகளையும் தவிர்த்தார். ஒன்று ஹிந்து தேசம் இஸ்லாமை முழுமையாகத் தோற்கடித்து அதன் தனித்தன்மைகள் அனைத்தையும் இழக்க வைத்து உள்வாங்க வேண்டும், இல்லையென்றால் பிரிவினையே நன்மை பயக்கும் என அம்பேத்கர் கருதினார்.

சாவர்க்கர் முழுக்க அவர் கண்ட புரட்சி, இரண்டு உலகப் போர்கள் ஆகியவற்றின் அடிப்படையில் எதிர்கால சமுதாயத்தை நோக்கினார். காந்தி ஒரு இலட்சியவாதக் கனவின் அடிப்படையில் உலகைக் கண்டார். அம்பேத்கர் கடுமையான யதார்த்தவாதியின் பார்வையிலிருந்து பிரச்சினைகளை அணுகினார். அனைவரின் அணுகுமுறைகளிலும் இன்றைய காலகட்டத்தின் பார்வையிலிருந்து தவறுகளையும் குறைகளையும் காண முடியும். ஆனால் சில அடிப்படை தேசியப் பிரச்சினைகளை நோக்கும்போது அம்பேத்கரும் சாவர்க்கரும் ஒத்து வருவதைக் காண இயலும். அது சிந்து நதி நீரை பாகிஸ்தானுடன் பங்கீடு செய்வதாக இருக்கலாம்; இந்தியா முழுவதும் ஒற்றைத் தொடர்பு மொழியாக இந்தியைக் கொண்டு வருவதாக இருக்கலாம்; கிழக்கு பாகிஸ்தானிலுள்ள இந்துக்களின் பாதுகாப்பாக இருக்கலாம்; சீனா குறித்த கவனமாக இருக்கலாம். இவை அனைத்திலும் சாவர்க்கரின் பார்வையும் அம்பேத்கரின் பார்வையும் ஒன்றுபட்டே இருக்கின்றன.

ஹிந்து என்பதற்கான வரையறை, அதில் வனவாசிகளையும் வேத மரபைத் தாண்டிய பல்வேறு சமூகங்களையும் இம்மண்ணின் வழிபாட்டு முறைகளையும் இணைப்பது என்பது சாவர்க்கரின் இந்துத்துவ வரையறை. இது ஐரோப்பிய தேசிய வரையறைகளைப் போல ஒற்றைத்தன்மையற்றது. தன்னியல்பிலேயே பன்மைத்தன்மை கொண்டது. இவ்வரையறையை அம்பேத்கர் பாராட்டுகிறார். இதே வரையறையை அம்பேத்கர் சட்ட வரையறையாக ’இந்து’ எனும் பதத்துக்கு அளிக்கிறார். காந்தியும் என்றென்றைக்கும் வனவாசிகளை இந்துக்களிலிருந்து பிரித்துப் பார்ப்பதை ஏற்கவில்லை. வனவாசி சமுதாயங்களுக்காக உழைக்க காந்தியால் உத்வேகம் பெற்ற தக்கர் பாபா பின்னாட்களில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் வனவாசி சேவை பிரிவின் நிறுவனருக்கு வழிகாட்டியாகிறார்.

காந்தியே கூட இந்திய தேசத்தில் வாழும் முஸ்லீம்கள் குறித்து சில கடுமையான விமர்சனங்களை முன்வைக்க வேண்டியதாயிற்று. அவர் இந்தியாவில் முஸ்லீம்கள் தாக்கப்படுவதைக் கடுமையாகக் கண்டித்தார். தனிப்பட்ட முஸ்லீம்களின் தேச பக்தியை சந்தேகப்படுவதை அவர் எதிர்த்தார். இந்தியாவில் உள்ள முஸ்லீம்களுக்காகவும் பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்காகவும் அவர் உண்ணா விரதமும் இருந்தார். ஆனால் சில குறிப்பிட்ட இஸ்லாமியவாதப் போக்குகளை அவர் அவதானித்து கண்டிக்கத் தவறவில்லை.

அவர் சுட்டுக் கொல்லப்படுவதற்கு பதினேழு நாட்களுக்கு முன்னர் அவர் ஆற்றிய உரையில் காந்தி தன்னிடம் வந்து சர்தார் படேலைக் குறித்துக் குறை கூறும் முஸ்லீம்களுக்குப் பதிலளித்தார்:

‘சர்தார் வெளிப்படையாகப் பேசக் கூடியவர். சில சமயங்களில் அவர் பேச்சு கசப்பாகத்தான் இருக்கும். அது அவரது நாக்கின் இயல்பு. அவர் இருதயம் அவர் பேச்சு போல் இல்லை என்பதற்கு நான் உறுதி அளிக்க முடியும். படேல் லக்னோவிலும் கல்கத்தாவிலும் அனைத்து முஸ்லீம்களும் இந்தியாவில் வாழ முடியும், வாழ வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். அதே நேரத்தில் அவர் என்னிடம் நேற்று வரை முஸ்லீம் லீக்கை ஆதரித்துக் கொண்டு, இந்துக்களையும் சீக்கியர்களையும் எதிரிகளாக பாவித்துவிட்டு இன்றைக்கு இந்தியாவில் தங்கிவிட்ட முஸ்லீம்கள் ஓரிரவில் மனம் மாறிவிட்டதாக தான் நம்பவில்லை என்றும் கூறினார். இன்றைக்கு லீக் இங்கே இருந்தால் இந்த முஸ்லீம்கள் யாரை ஆதரிப்பார்கள்? யாருக்குக் கீழ்ப்படிவார்கள்? பாகிஸ்தானுக்கா? நம் அரசுக்கா? முஸ்லீம் லீக் அதன் அதே பழைய மனநிலையில் இருப்பது படேலுக்கு ஐயத்தை ஏற்படுத்தியுள்ளது. அது சரியும் கூடத்தான். லீக் முஸ்லீம்களை தாம் நம்பவில்லை என்றும் நம்ப முடியாது என்றும் அவர் கூறுகிறார். அவர்கள் முதலில் தாம் நம்பத் தக்கவர்களே என நிரூபிக்கட்டும். அதன் பிறகு நான் ஹிந்துக்களிடமும் சீக்கியர்களிடமும் அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென்று சொல்கிறேன்.
இன்றைக்கு இஸ்லாமியவாத அரசியல்வாதிகளாலும், காங்கிரஸில் ஒரு பிரிவு நேருவியவாதிகளாலும் மதிக்கப்படும் இஸ்லாமியவாத அரசியல்வாதி மௌலானா ஹபிபுர் ரஹ்மான். அவர் காந்தியிடமும் நேருவிடமும் அவ்வப்போது தங்களுக்கு இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என்றும் தங்களுக்கு இங்கிலாந்து செய்ய வழி ஏற்படுத்திக் கொடுத்தால் தாம் ஆங்கிலேயரிடம் சென்று அவர்களுக்கு எதிராகச் செயல்பட்டதற்கு மன்னிப்பு கேட்டு அங்கே தங்கிவிடுவதாகவும் சொல்லிச் சீண்டுவார். ஒருமுறை இப்படி காந்தியிடம் சொல்லியபோது பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் சிறுபான்மையினரின் பாதுகாப்புக்காக உண்ணாவிரதத்தைத் தொடங்கியிருந்த காந்தி பொறுமை இழந்து சீறினார் என பியாரேலால் பதிவு செய்கிறார்.

‘இப்போது உங்களுக்குத் திருப்தியா?’ எனக் கேட்ட காந்தி இங்கிலாந்து போக ஏற்பாடு செய்ய சொன்னவருக்காகத் திரும்பி ‘…நான் இப்போது அரசிடம் பேசி நீங்கள் இங்கிலாந்து செல்ல ஏற்பாடு செய்யட்டுமா? இதோ விசுவாசமில்லாத சில முஸ்லீம்கள் இந்தியாவிலிருந்து செல்ல விரும்புகிறார்கள். அவர்களுக்கு ஏற்பாடுகள் செய்து கொடுங்கள் என நான் சொல்ல முடியும்’ என்றார். மௌலானா தம் வார்த்தைகள் காந்தியைப் புண்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவிப்பதாகச் சொன்னார். காந்தி ‘உங்களை வேண்டுமென்று உதைத்துவிட்டு வெள்ளைக்காரன் ‘தங்கள் மன்னிப்பைக் கோருகிறேன்’ எனச்ச் சம்பிரதாயமாகச் சொல்வது போல உள்ளது’ என்றார். பிறகு கடுமையாகப் பேசலானார், ‘இங்கிலாந்துக்குப் போவோம் எனக் கூற உங்களுக்கு வெட்கமாயில்லையா? அதற்குப் பிறகு சுதந்திர இந்தியாவில் இருப்பதைக் காட்டிலும் பிரிட்டனின் அடிமைகளாக இருப்பது மேல் என்றும் சொன்னீர்கள். அப்படிச் சொல்ல, உங்களை நீங்களே தேசபக்தர்கள் எனச் சொல்லும் உங்களுக்கு எவ்வளவு தைரியம் வேண்டும்! நீங்கள் உங்கள் இதயத்தைச் சுத்தம் செய்துகொண்டு நூறு சதவிகிதம் உண்மையாக நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இந்தியா உங்களை அதிக காலத்துக்கு சகித்துக் கொள்ளாது. பிறகு என்னால் கூட உங்களுக்கு உதவ முடியாமல் போய்விடும்.’

சில நேரங்களில் இன்னும் ஒரு படி மேலே போய், காந்தி இந்திய அரசையே ஆதரிக்கவில்லை, ஏனெனில் அவர் அரசு இயந்திரத்துக்கே எதிரானவர் என்று சொல்கிறவர்களெல்லாம் இருக்கிறார்கள்.

1947ல் சுதந்திரம் அடைந்து சில மாதங்களில் பாகிஸ்தான் காஷ்மீரைத் தாக்கியது. அதன் ஆதரவு பெற்ற முஜாகிதீன்கள் காஷ்மீர் மீது படையெடுத்து வந்தனர். படுகொலைகளையும் வன்புணர்ச்சிகளையும் சூறையாடல்களையும் நடத்தியபடி அவர்கள் முன்னேறினர். அவர்களுடன் போராட இந்திய ராணுவம் அனுப்பப்பட்டது. அப்போது ராணுவ அதிகாரியாக அங்கே அனுப்பப்பட்ட லினோயல் பிரதீப் சென், அங்கே செல்லும் முன்னர் காந்தியை, தன்னை சந்திக்க வேண்டுமென்று காந்தியடிகள் சொல்லி அனுப்பியதன் பேரில் சந்தித்தார்.

அச்சந்திப்பில் காஷ்மீர் சூழலைக் குறித்து காந்தி கேட்டார். அதை விளக்கி முடித்த பிறகு சென் காந்தியிடம் நீங்கள் கேட்க ஏதாவது இருக்கிறதா என்றார். ’இல்லை எதுவும் இல்லை’ என்றார் காந்தி. சில நொடிகள் மௌனமாகக் கடந்தன. பின்னர் காந்தி ‘போர்கள் மானுடகுலத்தின் சாபக் கேடுகள். அவற்றால் துன்பமும் அழிவுமே வருகின்றன ‘ என்றார். சென் எழுதுகிறார்:

‘இன்னும் சில மணி நேரங்களில் போர் களத்தில் போர் செய்யப் போகும் ராணுவ அதிகாரி எனும் முறையில் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. இறுதியாக நான் அவரிடம் கேட்டேன். “நான் காஷ்மீரில் என்ன செய்ய வேண்டும்?” மகாத்மா காந்தி புன்னகைத்தார். “அப்பாவி மக்களைக் காப்பாற்றவும் அவர்களைத் துன்பத்திலிருந்தும் அவர்களின் உடைமைகளை அழிவிலிருந்தும் காப்பாற்ற நீங்கள் செல்கிறீர்கள். இதனைச் செய்ய உங்களால் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை உங்களிடம் இருக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்திச் செய்யுங்கள்.” அதுவே நான் அவரை இறுதியாக உயிருடன் பார்த்தது.

காந்தி, சாவர்க்கர், அம்பேத்கர் ஆகிய மூவரின் அரசியலிலும் பல முரண்பாடுகள் இருந்தன. மோதல் போக்குகளும் ஒவ்வாமைகளும் இருந்தன. ஆனால் மூவரும் அதிசயிக்கத்தக்க விதத்தில் ஒற்றுமைப்படும் இடம் இந்தியாவின் தேசியத்தின் தனித்தன்மையைக் குறித்தது.

இன்று அந்த தனித்தன்மையை முன்வைத்து சமூக நீதியையும் பன்மைத்தன்மையையும் பேசும் ஒரே இயக்கமாக இயங்குவது இந்துத்துவ முதன்மை அமைப்பான ஆர்.எஸ்.எஸ்ஸும் பாஜகவும்தான். ஆஷிஸ் நந்தி, ராமச்சந்திர குகா ஆகியவர்களை பெயர் சொல்லியோ சொல்லாமலோ பிரதி எடுக்கும் தமிழ் ‘அறிவுஜீவிகள்’ கோட்டை விடுவதும் இதைத்தான். அவர்கள் இந்துத்துவத்தைப் புரிந்து கொள்ள வறுத்த இறால் மீன் சட்டிகளுக்கு அப்பாலும் சென்றாக வேண்டி உள்ளது.

Leave a Reply