Posted on Leave a comment

சிறகுகளின் சொற்கள் (சிறுகதை) – சத்யானந்தன்

தொலைக்காட்சிப் பெட்டியின் ஒலியை அவன் மனைவி நிறுத்தினாள். காரசாரமான சூடுபிடிக்கும் விவாதம் நின்றதில் அவன் பதைபதைத்து எழுந்தான். “என்ன வேண்டும் உனக்கு?”

“கொழந்தைக்குக் காலையில் பள்ளிக்கூடம் போணும். நீங்க வேலக்கிப் போணும். நான் சமைச்சி முடிச்சி வேலைக்கி ஒடணும். டிவி சவுண்டுல வூடேஅதிருதுப்பா…”

“ஒருத்தர் டிவி பாக்கும்போது ஆஃப் பண்றது என்ன மேனர்ஸ்?”

“மியூட்தான் பண்ணியிருக்கேன். ஆஃப் பண்ணலே.” அவள் குழந்தை தூங்கும் அறைக்குள் நுழைந்து கதவைத் தாழிட்டுக் கொண்டாள்.”

அந்தச் செய்தித் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பவரது உருவத்துக்குக் கீழே எழுத்து வடிவிலும் விவாதத்தின் சாராம்சம் வந்த வண்ணம் இருந்தது அவனுக்கு சற்றே ஆறுதல் தந்தது. ‘24 மணி நேரத்துக்குள் நிகழ்ந்திருந்த திடுக்கிடும் திருப்பங்கள் திடீரென நடந்தவை அல்ல’ என ஒருவர் கழுத்து நரம்பு புடைக்கக் கையை ஆட்டி ஆட்டி வாதித்துக் கொண்டிருந்தார்.

“எதிரிகளைப் போர்க்களத்தில் எதிர்கொள்வதில் கண் இமைக்கும் நேரத்தில் செய்யும் பதிலடி இது. இதைச் சதி என்று கூறுவது பொருந்தாது” என்று எடுத்துக்கூறினார் எதிர்த் தரப்பு.

ஒரு விளம்பர இடைவேளையை அறிவித்த தொலைக்காட்சி “உங்கள் ஓட்டு யாருக்கு? உடனே குறுஞ்செய்தி அனுப்புங்கள்” என்ற அறிவிப்பை எழுத்துவடிவில் விளம்பரங்களுக்குக் கீழே ஓட்டிக் கொண்டிருந்தது.

குறுஞ்செய்தி என்றதும்தான் அவனுக்குத் தன் கைப்பேசியின் நினைவு வந்தது. திறந்திருந்த அறைக்குள் சென்று அவனது உள்ளங்கை மற்றும் விரல்களைவிட நீண்டும் அகன்றுமிருந்த கைப்பேசியை எடுத்து வந்தான். அதன் வலப்புற உச்சி மூலையில் சிறு விளக்கொளி மினுக்கியது. ஏதோ செய்தி காத்திருக்கிறது. ‘ட’ வடிவமாய் விரலால் திரை மீது வரைய, அதன் பல செயலிகள் உயிர் பெற்றன. திரையின் இடதுபக்க உச்சி மூலையில் பச்சை நிறத்தில் ‘வாட்ஸ்அப்’புக்கான சின்னம் தெரிய, அதன் மீது விரலை அழுத்தினான்.

‘5 தொடர்புகளிலிருந்து 28 செய்திகள்’ எனப் பட்டியல் வந்தது.

அவனது மேலாளர் ‘வாட்ஸ் அப்’ குழு வழியாக நாளை காலை செய்யவேண்டிய தலை போகும் விஷயங்களைத் தந்திருந்தார். அவனுடைய மனைவி ‘மூலிகைத் தேநீர்’ பற்றி, பெண்ணுரிமை பற்றி மற்றும் சுற்றுலாத் தலங்கள் பற்றிப் பல காணொளிகளைப் பகிர்ந்திருந்தாள். அண்ணன் தனது புதிய காரின் படத்தை அனுப்பியிருந்தான். ‘சண்டையிடும் இரு அரசியல் குழுக்களுமே மட்டமானவை’ என்னும் பொருள்படும் ‘மீம்ஸ்’ஐயும் மனைவி பற்றிய நகைச்சுவைத் துணுக்குகளையும் அவனது நண்பன் ஒருவன் அனுப்பியிருந்தான். பல செய்திகள் ‘நண்பர் குழு’ மற்றும் ‘குடும்பக் குழு’வில் இருந்தன. அவற்றைத் திறக்காமல் மறுபடி வரவேற்பறைக்கு வந்து, தொலைக்காட்சி முன் அமர்ந்தான். விவாதம் சூடுபிடித்துக் கொண்டிருந்தது. வீட்டின் வாயிலுக்கு வெளியே ஒரு இரும்பு கிராதிக் கதவு இருந்தது. அதைப் பூட்டிவிட்டு மரக்கதவைத் தாளிட்டுப் படுப்பது அவன் வழக்கம். மரக்கதவைத் திறந்தான்.

கிராதிக் கதவை இரண்டாக மடித்து ஒருக்களித்து வைப்பதே, எதிர் வீட்டாருக்கும், மேலே மாடிக்குப் போவோருக்கும் இடைஞ்சலில்லாதது. கிராதியில் அவர்கள் பகுதியின் வார விளம்பரப் பத்திரிக்கை செருகப்பட்டிருந்தது. அதை எடுப்பதற்காக அவன் வாயிலுக்கு வந்தான். ‘காக் கா… கர்… கர்ர்… கா…’ என்னும்ஒலியும், ‘பக்… பக்… பகப்ப்..பக்… க்குகு…க்குக்’ என்னும் ஒலியும் கூடத்திலிருந்து ஒரே சமயத்தில் காதில் விழ, திரும்பினான். தொலைக்காட்சித் திரையிலிருந்து ஒரு அண்டங்காக்காவும், குண்டான சாம்பர் வண்ணப் புறாவும் வெளிப்பட்டன. காக்கா திறந்திருந்த வாசற்கதவு வழியே பறந்து போனது. புறா ‘பால்கனி’க்குள் சென்றது. அதைத் தொடர்ந்து சென்றான். அது பால்கனியின் இரும்புக் கம்பித் தடுப்புக்குள் புகுந்து மெலிதாகப் பறந்து, கீழே ஜன்னல் மீதுள்ள ‘மழைத் தடுப்பு’ கான்கிரீட் பலகை ஓரத்தில் சென்று அமர்ந்தது. அதன்மீது இருந்த குளிர்சாதன இயந்திரத்தின் பின்பக்கம் ஒண்டிக் கொண்டது.

வீட்டு வாசலில் பதட்டத்தைக் காட்டிக் கொள்ளாமல் கிராதியை சார்த்தி உட்பக்கமாகப் பூட்டை மாட்டிப் பூட்டினான். மரக்கதவைத் தாழிட்டான். ‘வாஷ்பேசினி’ல் வியர்க்கும் முகத்தைக் கழுவினான்.

அறைக்குள் நுழைந்து படுத்துக்கொண்டான். காக்கா பறந்து சென்றதை அக்கம் பக்கத்துக் குடுத்தனக்காரர்கள் யாரும் பார்க்கவில்லை. மனைவி, குழந்தை இருவரும் பார்க்கவில்லை. அதனால் அவர்கள் பயப்பட ஏதுவில்லாமல் போனது.

“எந்திரிங்க” என்று உலுக்கி எழுப்பியது யார்? படைப்பாளி பாதி ராத்திரியில் விழித்துக் கொண்டார். கண் எரிந்தது. எதிரே முந்தைய கதையின் அச்சுப் பிரதி நின்றிருந்தது. “இது நள்ளிரவு. என்ன வேண்டும் உனக்கு?”

“இப்போது எழுதும் கதையில் புறாவையும் காக்காவையும் படிமமாக்கப் போகிறீர்கள் இல்லையா?”

“அது என் சுதந்திரம்.”

“காலையில் மொட்டை மாடியில் பேசுவோம்.” பிரதி நகர்ந்தது.

பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் நிறைய கோதுமை இறைத்திருந்தார்கள். ஒரு பக்கத்தில் இருந்து காக்கைகள் கொத்தி விரைவாய்ப் பறந்து உயரம் சென்றன. மறுபக்கம் புறாக்கள் அலகுகளிலேயே அடைத்துக் கொண்டு மெதுவாய் நகர்ந்தன. இரண்டும் நல்ல இடைவெளி விட்டே இரை தேடின. “புறாக்களையும் காக்கைகளையும் பாருங்கள். அவை ஏன் ஒன்றாய் இழையவில்லை?” தற்போது எழுதும் பிரதி கவனத்தைக் கலைத்தது. அதன் அருகில் பல அச்சுப் பிரதிகள் நின்றிருந்தன.

“மனிதனை ஒட்டி வாழ்ந்தும், தமக்குள் ஒட்டாமலும் வாழும் பறவை இனங்கள் இரண்டுக்குமே உடலில் இருந்து வீசும் வாசனையில் தொடங்கி உணவின் தேர்வு வரை எதுவுமே பிடிக்காமல் இருக்கலாம். அவை மட்டுமா? எத்தனை எத்தனையோ இனங்கள் ஒன்றுக்கு ஒன்று ஒட்டாமல் ஒன்றாய் வாழ்வதில்லையா?”

“நேற்று இரவு சுதந்திரம் என்று கூறினீர்கள்… உங்கள் சிந்தனையில் பறவை இனம் பற்றி, அவற்றைப் படிமமாக்கும் குறுகிய அணுகுமுறை மட்டுமே இருக்கிறது. சுதந்திரம் பற்றி எதற்கு அளக்கிறீர்கள்?”

வெய்யில் ஏற ஆரம்பித்தது. பிரதிகளின் உற்சாகம் குறையவே இல்லை.

வாசகன் 1 மூன்றாவது முறையாக 65 வார்த்தைகள் மட்டுமே ஆன கவிதையைப் படித்தான்:

புலியின் காற்தடம்
பாம்புச் சட்டை
கரையோர முதலை
இவற்றை மறைத்த
இரவு
கானகமெங்கும்
அப்பட்டமாய்
அலைந்து கொண்டிருந்தது

வாசகன் 2 தான் படித்த கல்லூரி முதல்வரின் அறைக்குள் உட்தாளிட்டு அவரது இருக்கையில் அமர்ந்தான்.

முதலில் மெதுவாக ஒரு தட்டல். பின்னர் இரண்டு… இடைவெளி விட்டபின் நான்கைந்து… கதவைத் தட்டும் ஒலி கூடிக் கொண்டே போனது. அவன் திறக்கவே இல்லை.

திடீரென, கதவை உடைத்துக் கொண்டு காயந்த மல்லிகைப் பூச்சரங்கள், காற்று இல்லாத காற்பந்துகள், ‘ராக்கெட்’ போலச் செய்யப்பட்ட காகித அம்புகள், பழுதான விஞ்ஞான ‘கால்குலேட்டர்கள்’ விதவிதமான கைப்பேசிகள், கண்ணீர் காயாத கைக் குட்டைகள், காலி மது பாட்டில்கள், காலி வாசனை வாயுக்குப்பிகள் உள்ளே வந்து விழுந்து அறையெங்கும் சிதறின. மேலும் மேலும் வந்து விழுந்துகொண்டே இருந்தன.

நாற்காலியைத் தற்காப்பாக முன்னே நிறுத்தி, அதன் பின்பக்கம் நின்று கொண்டான். அவன் காலுக்குக் கீழே இருந்த சதுரம் அசைந்தது. அவன் விலகி நின்றான். அதை ஒட்டி இருந்த பல சதுரங்களும் அசைந்து வழி விட, கீழே படிகள் இறங்குவது தெரிந்தது.

பறவைகளின் எச்ச வாடையின் வீச்சும் அரையிருட்டுமாயும் இருந்த தளத்தில் இறங்கினான். தொலைவில் தெரிந்த சன்னமான வெளிச்சத்தை நெருங்கினான். ஒரு பக்கம் புறாவின் சிறகும் மறுபக்கம் காக்கையின் சிறகும் கொண்ட பறவைகள் கிளியின் மூக்குடன் தென்பட்டன.
________________

Leave a Reply