Posted on 1 Comment

இந்தியாவுக்கெனத் தனது அனைத்தையும் அளித்தவள்: சகோதரி நிவேதிதா – ஜடாயு


“இந்தியாவில் பெண்களுக்கிடையில் பணியாற்ற சிங்கம் போன்ற ஒரு பெண் வேண்டும். நீ சிறப்பாகக் கல்வி கற்றவள். இந்தியாவிற்குத் தொண்டு செய்யவேண்டும் என்ற மனப்பூர்வமான எண்ணம் உனக்கு உண்டு. நீ தூய்மையானவள். உள்ளன்போடு மனித உயிர்களை நேசிப்பவள். மேலும் உன் உடலில் ஓடிக்கொண்டிருப்பது ஐரிஷ் க்ஷத்திரிய வீர ரத்தம் (Celtic blood). எனவே இங்கு ஆற்றவேண்டியுள்ள அரும்பெரும் செயலுக்கு நீ முற்றிலும் தகுதியானவள்தான்.”

இப்படித் தொடங்குகிறது 29 ஆகஸ்டு, 1897 என்று தேதியிட்ட அந்தக் கடிதம். பின்பு, “இங்கு கஷ்டங்கள் பல உண்டு. இந்த நாட்டில் மக்கள் படும் பெருந்துயரம், அவர்கள் கொண்டுள்ள மூடநம்பிக்கைகள், அவர்களது அடிமைத்தனம் பற்றியெல்லாம் இப்போது உனக்கு ஒன்றும் தெரியாது. இந்தியாவின் சீதோஷ்ண நிலை பயங்கரமானது. ஐரோப்பிய வசதிகள் ஒன்றுமே இங்கு கிடையாது. இவ்வளவு இன்னல்களுக்கிடையிலும் நீ பணிபுரிய விரும்புவாயானால், உன்னை வரவேற்கிறேன், பலமுறை கூவியழைத்து வரவேற்கிறேன். ஒருவேளை உன் முயற்சியில் நீ தோல்வியுற்றாலோ, சலிப்படைந்தாலோ எனக்கு எந்த ஏமாற்றமுமிருக்காது… யானையின் தந்தங்கள் வெளியே வருகின்றன, பிறகு உள்ளே போவதில்லை. நல்லோர் தனது உறுதிமொழியைத் திரும்பப் பெறுவதில்லை. என்ன நேர்ந்தாலும், என் உயிர் உள்ளவரை உனக்கு எனது உதவியும் ஆதரவும் உண்டு என்று உறுதி கூறுகிறேன்…” என்று முடிகிறது.  அந்தக் கடிதம் சுவாமி விவேகானந்தர் லண்டனில் உள்ள மார்க்ரெட் எலிஸபெத் நோபல் (Margaret Elizabeth Noble) என்ற தனது சீடருக்கு எழுதியது.

அப்போது முப்பது வயதுப் பெண்ணாக இருந்த மார்க்ரெட் 1867 அக்டோபர் 28ம் தேதி அயர்லாந்தின் கிராமப்புற ஊரின் நடுத்தர ஏழைக்குடும்பம் ஒன்றில் பிறந்தவர். உள்ளூர்ப் பள்ளி ஆசிரியரும் பாதிரியாருமான தனது தந்தையைப் பத்து வயதிலேயே இழந்திருந்தாலும், தன்னலமற்ற சேவை, கல்விப் பணி ஆகிய ஆதர்சங்களை அவரிடமிருந்து சுவீகரித்துக் கொண்டு, தனது 17ம் வயதிலிருந்தே ஆசிரியையாகப் பணி செய்யத் தொடங்கியிருந்தார். குழந்தைகளின் உளவியல் தேவைகளுக்கும் உணர்வுகளுக்கும் மதிப்பளித்துக் கற்பிக்கும் புதிய கல்விக் கொள்கைகள் அப்போது பரவத் தொடங்கியிருந்தன. அவற்றின் அடிப்படையில் விம்பிள்டன் நகரில் தானே ஒரு பள்ளியையும் அவர் நடத்தி வந்தார். சிந்தனையாளராகவும் பெண்ணிய ஆதரவாளராகவும் பத்திரிகைக் கட்டுரைகள் எழுதி லண்டன் அறிவுஜீவி வட்டங்களிலும் அறியப்பட்டிருந்தார். தான் விரும்பி மணம் புரிவதற்காக நிச்சயிக்கப்பட்டிருந்த வெல்ஷ் இளைஞரின் அகால மரணம் அந்த இளவயதில் அவரை உலுக்கியிருந்தது. கல்வி மேதைமை அளித்த சிந்தனைகளின் வீச்சால் சம்பிரதாய கிறிஸ்தவமதக் கோட்பாடுகளின் மீதான அவரது நம்பிக்கைகள் ஏற்கெனவே தளர்ந்து கொண்டிருந்தன. தத்துவத் தேடலிலும் பௌத்தம் உள்ளிட்ட கீழைமதங்களின் கோட்பாடுகளைக் கற்பதிலும் அவரது மனம் ஈடுபட்டிருந்தது.

இந்தச் சூழலில்தான், அமெரிக்காவில் புகழ்பெற்று இங்கிலாந்து வந்திருந்த இந்துத் துறவியான சுவாமிஜி, வேதாந்த தத்துவம் குறித்து நிகழ்த்திய ஒரு சொற்பொழிவை 1895 நவம்பர் மாதம் அவர் கேட்க நேர்ந்தது. சுவாமிஜியின் மகத்தான ஆளுமையையும், சத்தியம், சுதந்திரம், பிரபஞ்ச தரிசனம் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் முன்வைத்த தத்துவ நோக்கையும் கண்டு, மார்க்ரெட்டுக்கு அவர் மீது பெரும் மதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சுவாமிஜியிடம் கேள்விகள் கேட்டும் விவாதித்தும், ஆசான் (Master) என்று விளித்து கடிதங்களின் மூலம் உரையாடியும் வந்தார். இந்தியா, அதன் மக்கள், அதன் மதம், அதன் பண்பாடு ஆகியவற்றின் மீது அவருக்கு ஒரு பந்தம் ஏற்பட்டு வந்தது. “இந்திய மக்களுக்கு நான் எந்த விதத்திலாவது பயன்படுவேனா என்பது பற்றித் தெளிவாகவும், வெளிப்படையாகவும் எனக்குச் சொல்லுங்கள். இந்தியாவிற்கே வந்துவிட நான் விரும்புகிறேன். எனது வாழ்க்கைப் பயனை நான் அடைவது எங்ஙனம் என்பதை இந்தியாதான் எனக்குப் புகட்டியாக வேண்டும்” என்ற அவரது முடிவுக்கு பதிலளிக்கும் விதமாக சுவாமிஜி எழுதியதே நாம் முதலில் கண்ட கடிதம்.

தனது வாழ்க்கையின் திசையைக் கண்டுகொண்ட மார்க்ரெட் உடனே கிளம்பி இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார். இந்து மரபில், பழைய அடையாளங்கள் அனைத்ததையும் துறந்து புதிய ஆன்மிக அடையாளங்களை ஏற்பது ‘தீட்சை’ என்று அழைக்கப்படுகிறது. இதன்படி 1898 மார்ச் 25 அன்று சுவாமிஜி அவருக்கு பிரம்மசாரிணியாக தீட்சை அளித்து, நிவேதிதா என்ற அழகிய திருப்பெயரையும் சூட்டினார். தெய்வத்திற்கு நிவேதனம் செய்யப்பட்டவள், அர்ப்பணிக்கப்பட்டவள் என்பது அதன் பொருள். இக்காலகட்டத்தில் சாரா புல் (Sara Bull), ஜோசஃபின் மெக்லாயிட் (Josephine MacLeod) ஆகிய அமெரிக்கப் பெண்சீடர்களும் இந்தியா வந்திருந்தனர். இவர்கள் இறுதிவரை நிவேதிதாவின் உற்ற தோழிகளாகவும் உடன் பணியாற்றுபவர்களாவும் இருந்தனர்.

இயல்பாகவே தனது ஆங்கிலப் பாரம்பரியம் மீதான பெருமிதமும், பிரிட்டிஷ் ஆட்சி எந்தவிதத்திலும் நெறிதவறாது என்பது போன்ற முன்முடிவுகளும் நிவேதிதாவின் மனதில் இருந்தன. இதை உணர்ந்திருந்த சுவாமிஜி தனது பணிக்கு முற்றிலும் தகுதியுள்ளவராக நிவேதிதா ஆகவேண்டும் என்பதில் மிகுந்த கவனத்தையும் உழைப்பையும் செலுத்தினார். இந்துமத நூல்களையும் தத்துவங்களையும் புராணக் கதைகளையும், தியான முறைகளையும், ஆன்மிக வழிகளையும் சுவாமிஜியின் நேரடி உபதேசங்கள் மற்றும் அவருடனான தொடர்ந்த தர்க்கங்கள், விவாதங்கள் மூலமாக நிவேதிதா கற்றறிந்தார். வங்க மொழியைப் பயின்று விரைவில் அதில் சரளமாக உரையாடும் திறனையும் பெற்றார். கல்கத்தா நகரில் ஐரோப்பிய கனவான்கள் வாழ்ந்த பகுதிகளில் வசிக்காமல், பாக்பஜார் என்ற பகுதியின் சிறிய குடியிருப்புகளில் வசித்தார். அங்குள்ள பலதரப்பட்ட மக்களிடமும், குறிப்பாகப் பெண்களிடம், பழகியும் உடனுறைந்தும் நிவேதிதா ஒரு சராசரி இந்திய வாழ்க்கையைத் தானே வாழ்ந்து அறிந்தார். சுவாமிஜி மற்றும் பிற சீடர்களுடன் இணைந்து பாட்னா, காசி ஆகிய நகரங்களிலும், குக்கிராமங்களிலும், இமயமலைச் சாரலில் உள்ள அமர்நாத், பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய தலங்களிலும் பயணம் செய்தார்.

இந்தக் கட்டத்தில் கருணை, பரிவு, கடுமை ஆகிய அனைத்தையும் சுவாமிஜி நிவேதிதா மீது பிரயோகித்தார். சமயங்களில் மிகவும் புண்பட்டு கதறி அழுததையும் நிவேதிதா வெளிப்படையாகப் பதிவு செய்திருக்கிறார். ஆனால் ஒருபோதும் தனது குரு மீதான பக்தியிலும், தனது உறுதியிலும் அவர் பின்வாங்கவில்லை.

‘நிவேதிதாவுக்கு ஆசிகள்’ என்று தலைப்பிட்டு சுவாமிஜி ஒரு கடிதத்தில் அனுப்பிய வாழ்த்துக் கவிதை, தனது சீடரைக் குறித்து அவர் கொண்டிருந்த தீர்க்க தரிசனத்தை உணர்த்துகிறது.

ஒரு அன்னையின் இதயம், ஒரு வீரனின் உறுதி
தென்திசைக் காற்றின் இனிமை
ஆரியரின் வேள்வித்தீச் சுடர்களில் ஒளிரும்
புனித வசீகரம், வலிமை
இவையனைத்தும், இதற்கும் மேலானதும்
எல்லாம் உனதாகட்டும்.
எந்தத் தொன்மையான ஆன்மாவும் கனவிலும் காணாதபடி
இந்தியாவின் எதிர்கால மகவாக நீ விளங்கிடுக –
அதன் தலைவியாக, சேவகியாக, தோழியாக.

அன்னை ஸ்ரீ சாரதா தேவி மிக்க வாஞ்சையுடன் தனது அன்பையும் ஆசிகளையும் நிவேதிதாவுக்கு அளித்தார். இறுதிவரை அன்னைக்கும் மகளுக்கும் இடையில் மிக நெருக்கமான உறவு தொடர்ந்தது. 1898 காளி பூஜை (தீபாவளி) தினத்தன்று நிவேதிதா கல்கத்தாவின் பாக்பஜார் பகுதியில் தனது பெண்கள் பள்ளியைத் தொடங்கினார். ஸ்ரீ அன்னை அதனைத் திறந்து வைத்து வாழ்த்தினார். ஆனால், பள்ளியை நடத்துவதில் பல்வேறு விதமான சவால்கள் இருந்தன. அன்றைய காலகட்டத்தில் கல்கத்தா போன்ற இந்தியப் பெருநகரத்தில்கூட  பெண்கள் ஒரு பொது இடமான பள்ளிக்கு வந்து கல்வி கற்பது என்பது நினைத்துப் பார்க்க முடியாததாக இருந்தது. வீடுவீடாகச் சென்று தங்கள் பெண்களைப் பள்ளிக்கு அனுப்புமாறு நிவேதிதா மன்றாடி, சிறுமிகளையும் அவர்களது தாய்மார்களையும் இளம் விதவைகளையும் அழைத்து வந்தார். பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆங்கிலக் கல்விக் கொள்கைக்கு மாறாக, இந்துப் பண்பாட்டு அம்சங்களையும் இந்தியக் கைத்தொழில்கள், கலைகள் ஆகியவற்றையும் இணைத்து அப்பள்ளியின் பாடத்திட்டத்தை நிவேதிதா உருவாக்கினார். தாமே ஆசிரியையாக இருந்து கற்பிக்கவும் செய்தார். பல்வேறு இடர்களைத் தாண்டி வந்து, இன்றுவரை இப்பள்ளி வெற்றிகரமாக இயங்குகிறது.

சுவாமிஜியின் இரண்டாவது மேற்கத்தியப் பயணத்தின் போது (1899 ஜூன் – 1900 டிசம்பர்) உடன்சென்ற நிவேதிதாவும் பல இடங்களில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். இந்தியாவில் தனது கல்விப் பணிகளுக்கான நிதிதிரட்டும் முயற்சிகளிலும் ஈடுபட்டார். 1902ல் சுவாமிஜி மகாசமாதி அடைந்தார். ஸ்ரீராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷன் இயக்கங்களுக்கு இது ஒரு பேரிழப்பாக இருந்தாலும், சுவாமிஜியின் வழிகாட்டுதல்களை நினைவிலிறுத்தி மேலும் உத்வேகத்துடன் அவை தங்கள் பணிகளைத் தொடர்ந்தன.

****

கல்விப்பணிகளோடு, பேரிடர்க் காலங்களில் சமூகசேவைப் பணிகளிலும் நிவேதிதா முனைப்புடன் ஈடுபட்டார்.

1899ம் ஆண்டின் முற்பகுதியில் கல்கத்தாவை பிளேக் நோய் மிகக் கொடூரமாகப் பீடித்தது. அடிப்படை சுகாதாரமின்மை, மக்களின் அறியாமை, அரசு இயந்திரத்தின் மெத்தனம் அனைத்தும் சேர்ந்து நிலைமை மிகவும் கவலைக்குரியதாயிற்று. இச்சுழலில் ராமகிருஷ்ண மிஷன் துறவிகளும் தொண்டர்களும் களத்தில் இறங்கி நிவேதிதாவின் தலைமையில் நிவாரணப் பணிகளில் நேரடியாக ஈடுபட்டனர். நிவேதிதாவே பணிகளைத் திட்டமிட்டார், ஒருங்கிணைத்தார். தேவைப்பட்ட போதெல்லாம் பிரிட்டிஷ் அரசு அதிகாரிகளைச் சந்தித்தார். அதிகாலையிலிருந்து நள்ளிரவு வரை ஓய்வின்றி உழைத்தார். பிளேக் நோயாளிகளைத் தானே நேரடியாகக் கவனித்து சிகிச்சை செய்தார். நிவாரணப் பணிக்குத் தேவையான நிதி திரட்டினார். மாணவர்களையும் பொதுமக்களையும் தட்டி எழுப்பி இப்பணிகளில் ஈடுபடச் செய்தார். தெருவைச் சுத்தம் செய்ய எவரும் வராதபோது தாமே துடப்பத்தை எடுத்துச் சென்று சுத்தம் செய்து வழிகாட்டினார். அவர் படைத்திருந்த ஆற்றலையெல்லாம் பொது நலத்திற்குப் பயன்படுத்துவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது. வெறும் காய்கறிகளையும் பாலையும் மட்டும் உண்டு வாழ்ந்தபடி பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சேவையாற்றி வந்த நிவேதிதா ஒரு கட்டத்தில் அந்தப் பாலையும் மக்களுக்காகத் தியாகம் செய்தார். மரணத்தோடு போர் புரிவது போலிருந்தது, அவர் சலிக்காமல் செய்த சேவை.

1906ல் கிழக்கு வங்காளத்தைக் கொடும் பஞ்சமும் அதைத் தொடர்ந்து பெய்த பருவம் தப்பிய மழையால் ஏற்பட்ட பெருவெள்ளமும் ஆக்கிரமித்தன. எலும்புக்கூடுகள் போலப் பஞ்சடைந்து இடுங்கிய கண்களுடன் வாழும் மக்களையும், அந்தச் சூழலிலும் கிடைத்த உணவைத் தங்களின் மற்ற குடும்ப உறுப்பினர்களுக்குக் கொடுத்து தாங்கள் பட்டினி கிடந்த தாய்மார்கள், சகோதரர்கள், சகோதரிகளின் தியாகத்தையும், கிராமப்புறங்களுக்குத் தொண்டர்களுடன் சென்ற நிவேதிதா நேரே கண்டார். நிவாரணக் குழு கொண்டு சென்றிருந்த உணவைப் பார்த்தவுடன் கலவரத்தில் ஈடுபடாமல் அந்தச் சொற்ப உணவையும் பங்கீடு செய்து ஆளுக்கு ஒரு துண்டு என்று கொடுத்துவிடுமாறு கோரிய கிராமிய மனங்கள் நிவேதிதாவை நெகிழ்ச்சியுறச் செய்தன. இந்தியப் பண்பாடு குறித்து அவர் வந்தடைந்த ஒட்டுமொத்த தரிசனத்தில் இத்தகைய சம்பவங்களுக்கும் பங்கிருந்தது.

****
 ஒருமுறை தனது வகுப்பில் “உங்கள் அரசி யார்?” என்ற கேள்விக்கு “விக்டோரியா மகாராணி” என்று சிறுமி அளித்த பதிலைக் கேட்டு வேதனையும் கோபமும் அடைந்தார் நிவேதிதா. “உங்கள் மகாராணி என்றென்றும் சீதை மாத்திரமே என்று நினைவில் கொள்ளுங்கள்” என்று அறிவுறுத்தினார். தனது பள்ளியில் வந்தே மாதரம் பாடலை அனைத்து மாணவிகளும் பாடும்படி செய்தார்.

1905 வங்கப் பிரிவினையைத் தொடர்ந்து மாபெரும் தேசிய எழுச்சியும், சுதேசி விழிப்புணர்வும் வங்கத்தில் தோன்றி, பின்பு இந்தியா முழுவதும் ஜ்வாலையாகப் பரவின. இந்த எழுச்சியில் நிவேதிதா ஆற்றிய பங்கு மகத்தானது. தனது கூரிய சிந்தனைத் திறன் மற்றும் இந்திய வாழ்க்கை அனுபவங்களின் மூலம், மிக விரைவிலேயே பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் அடக்குமுறைகளையும் பொருளாதாரச் சுரண்டலையும் நிவேதிதா அறிந்து கொண்டார். காங்கிரஸ் கட்சியின் மிதவாதிகள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் சலுகைகளை வேண்டிக் கோரிக்கை மனுக்களை மட்டுமே அனுப்பி இயங்கிக் கொண்டிருந்த காலத்தில், முதன்முதலாக பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவிற்கு பரிபூரண சுதந்திரம் வேண்டும் என்று சிம்மக்குரல் எழுப்பியவர் நிவேதிதாதான்.

ஒரு கட்டத்தில் ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் பணிகள் தனது அரசியல் சார்புகளால் பாதிக்கப்படலாம் என்ற நிலையில், தான் அந்த ஆன்மிக அமைப்பிலிருந்து வெளியேறுவதாக நிவேதிதா அதிகாரபூர்வமாக அறிவித்தார்.  மடத்துத் துறவியரின் ஆசியும் ஒத்துழைப்பும் இருக்கவே செய்தன. ஆயினும் தனித்து இயங்கினார். காங்கிரசிற்குள் இருந்த தீவிரவாத சிந்தனையாளர்கள், இந்திய சுதந்திரத்திற்காக ஆயுதப் புரட்சியை முன்னெடுத்த அனுசீலன் சமிதி போன்ற ரகசியக் குழுக்களின் தலைவர்கள், ராஷ் பிகாரி போஸ், ஸ்ரீஅரவிந்தர் உள்ளிட்ட புரட்சியாளர்கள் ஆகியோருக்கு வழிகாட்டியது மட்டுமின்றி, நிதியுதவி உட்பட பல்வேறு விதங்களிலும் நிவேதிதா ஆதரவளித்தார். யுகாந்தர், கர்மயோகின், வந்தே மாதரம், தர்மா ஆகிய தேசியப் பத்திரிகைகள் தொடர்ந்து வெளிவருமாறு செய்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றின் முதல் தேசியக் கொடியாக, ததீசி முனிவரின் தியாகத்தையும் வலிமையையும் உணர்த்தும் சின்னமான வஜ்ராயுதமும் வந்தே மாதரம் என்ற வாசகமும் அடங்கிய கொடியை அவர்தான் வடிவமைத்தார். இந்தச் சூழலில்தான் 1906ம் ஆண்டு கல்கத்தா காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்ற பாரதியார், அங்கு நிவேதிதையைச் சந்தித்தார். அந்தச் சிறிது நேர சந்திப்பிலேயே நிவேதிதாவின் ஆன்மிகப் பேரொளியையும் வீர உணர்வையும் பாரதியார் தரிசித்து அக்கணமே அவரை ஞானகுருவாக ஏற்றுக்கொண்டார். பெண் விடுதலை, தேசபக்தி, சுதந்திர தாகம் என்ற தனது லட்சியங்களைக் கண்டடைந்தார். தனது நூல்களை நிவேதிதாவுக்கு சமர்ப்பணம் செய்து பாரதியார் எழுதிய கீழ்க்கண்ட வாசகங்களிலிருந்து இது புலனாகிறது.

“ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்துமநிலை விளக்கியதொப்ப, எனக்குப் பாரததேவியின் சம்பூர்ண ரூபத்தைக் காட்டி ஸ்வதேச பக்தி உபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச்சிறு நூலைச் சமர்ப்பிக்கிறேன்.” (ஸ்வதேச கீதங்கள், 1908)


“எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும், துறவுப் பெருமையையும் சொல்லாமல் உணர்த்திய குருமணியும் பகவான் விவேகானந்தருடைய தர்மபுத்திரியும் ஆகிய ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்.” (ஜன்மபூமி, 1909)


“ஓம். ஸ்ரீமதி நிவேதிதா தேவிக்கு ஸமர்ப்பணம் செய்யப்பட்டதும.” (ஞானரதம், 1910)

****

உண்மையான தேசிய மறுமலர்ச்சி என்பது அரசியல் விழிப்புணர்வோடு நின்றுவிடாமல், கல்வி, அறிவியல் கலை, தொழில் ஆகிய எல்லாத் தளங்களிலும் நிகழவேண்டும் என்று நிவேதிதா கருதினார். இத்திறக்கிலும் அவரது பங்களிப்பு நிகரற்றது.

ஜாம்ஷெட்ஜி டாடா இந்திய அறிவியல் கழகத்தைத் தொடங்க முயல்கையில் பிரிட்டிஷ் அரசுத் தரப்பிலிருந்து அதற்குப் பல தடைகள் ஏற்பட்டன. “இந்தியர்கள் அறிவியல் ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதைத் தடுப்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, அறிவியலுக்கும் ஆபத்தானது” என்று பிரிட்டனின் கல்வி அதிகாரிக்கு நேரடியாக நிவேதிதா எழுதினார். அறிவியலாளர் ஜகதீஷ் சந்திர போஸ் மற்றும் அவரது மனைவி அபலா போஸ் இருவரும் தொடக்கத்திலிருந்தே நிவேதிதாவின் நண்பர்களாகவும் சீடர்களாகவும் இருந்தனர். தனது அறிவியல் சாதனைகள் அனைத்திற்கும் பின்னால் நிவேதிதாவின் வழிகாட்டலும், ஊக்குவிப்பும் உதவிகளும் ஆசிகளும் உள்ளன என்று போஸ் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார். அறிவியல் சிந்தனைகளை ஆராய்ச்சிக் கட்டுரைகளாகப் பதிவுசெய்தால் மட்டுமே அவை உலகுக்குத் தெரியவந்து நிலைபெறும் என்று நிவேதிதா கூறியபோது, தன்னால் எண்ணங்களைத் திரட்டி அவ்வாறு எழுத இயல்வதில்லை என்று வருந்தி மனத்தளர்ச்சியுற்றார் போஸ். அவரைத் தேற்றிய நிவேதிதா, தாமே உதவியாளராக இருந்து போஸ் எழுதிய கட்டுரைகளை நெறிப்படுத்தியும் பிழைதிருத்தியும், நிதி திரட்டி அவை புத்தகங்களாக வெளிவரச் செய்தும் உதவினார். போஸின் அறிவியல் சாதனைகளை விளக்கிப்
பல பத்திரிகைகளில் எழுதினார். மேரி கியூரி உள்ளிட்ட ஐரோப்பிய அறிவியலாளர்களையும், மற்ற நாடுகளில் உள்ள இந்திய அபிமானிகளையும் தொடர்புகொண்டு போஸின் அறிவியல் கண்டுபிடிப்புகள் உலக பிரசித்தி அடைய உதவி செய்தார். இந்த ஆசிகளனைத்தையும் நினைவுகூறும் விதமாக 1917ல் தான் உருவாக்கிய போஸ் அறிவியல் கழகத்தின் முகப்பில் நிவேதிதாவின் சிலையையும் அஸ்திக் கலசத்தையும் ஜகதீஷ் சந்திர போஸ் நிறுவினார். நூற்றாண்டு காணும் இந்த நிறுவனம் இந்திய அறிவியல் வளர்ச்சியில் இன்றளவும் சிறப்புமிக்க பணியாற்றி வருகிறது.

ஓவியக்கலைப் போக்குகள் 19, 20ம் நூற்றாண்டுகளின் நவீன, புரட்சிகர சிந்தனைகளின், மறுமலர்ச்சியின் அடையாளமாகவே கருதப்பட்டன. இந்நிலையில் அக்காலத்திய இந்திய ஓவியர்கள் தங்களது கலைப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியை முற்றிலும் இழந்து ஐரோப்பியக் கலைப் பாணியை அப்படியே பிரதியெடுக்கும் போக்கினைக் கண்டு நிவேதிதா வருந்தினார். புகழ்பெற்ற வங்க ஓவியர்களிடமும், ஆனந்த குமாரசுவாமி போன்ற கலை விமர்சகர்களிடமும் தொடர்ந்து உரையாடி இது குறித்த தெளிவான பிரக்ஞையை ஏற்படுத்தினார். ஒரு நாட்டின் கலை அதன் ஒட்டுமொத்த தேசிய உணர்வுடன் எப்போதும் இயைந்திருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இதன் விளைவாகவே அவனீந்திர நாத் தாகூர், நந்தலால் போஸ், அஸித் ஹல்தர் போன்ற மகத்தான ஓவியக் கலைஞர்கள் இன்றுவரை உயிர்த்துடிப்புடன் வாழும் புகழ்பெற்ற நவீன வங்க ஓவியப் பாணியை வளர்த்தெடுத்தனர்.

****

மாபெரும் கர்மயோகியாக செயலாற்றிக் கொண்டிருந்த நிவேதிதா, ஒரு சிறந்த சிந்தனையாளராகவும் எழுத்தாளராகவும் மிளிர்கிறார். தனது மகத்தான 13 ஆண்டுகளின் இந்திய வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து பல தளங்களில் அவர் எழுதியும் உரையாற்றியும் வந்திருக்கிறார். The Complete Works of Sister Nivedita என்ற தலைப்பில் 5 தொகுதிகளாக சுமார் 2,500 பக்கங்களுக்கு விரிகின்றன அவரது எழுத்துக்கள். இதுதவிர ஜோசஃபின் மெக்லாயிடுக்கு அவர் எழுதிய முக்கியமான கடிதங்கள் சமீபத்தில்தான் பதிக்கப்பட்டு வருகின்றன. அக்காலகட்டத்தின் அலங்காரமான விக்டோரிய ஆங்கில மொழியில் (Victorian English) இருந்தாலும், வரலாற்று முக்கியத்துவம் என்பதைத் தாண்டி, இந்த எழுத்துக்களின் வசீகரத்தையும் வீரியத்தையும் ஆழத்தையும் வீச்சையும் இன்று அதை வாசிப்பவர்களும் உணர முடியும்.

சுவாமி விவேகானந்தரின் முழு ஆளுமையையும் நாம் அறிந்து கொள்வதற்கு, நிவேதிதா எழுதிய The Master as I saw Him (நான் கண்ட எனது ஆசான்) என்ற அற்புதமான நூலே சிறந்ததொரு வழிகாட்டி. சுவாமிஜியுடனும் மற்ற துறவிகளுடன் இணைந்து அவர் செய்த பயணங்கள் குறித்து, Notes of Some Wanderings with Swami Vivekananda, Kedar Nath and Badri Narain – A Pilgrims Diary ஆகிய நூல்களில் குரு சிஷ்ய உறவின் மலர்ச்சி, இமயத்தின் காட்சிகள், ஆன்மிக தரிசனங்கள் எனப் பல வண்ணங்களைக் காண முடியும்.

1904ல் லண்டனில் வெளிவந்த The Web of Indian Life (இந்திய வாழ்வெனும் வலைப்பின்னல்) என்ற அவரது நூல், அன்றைய காலகட்டத்தில் இந்தியா, அதன் பண்பாடு மற்றும் இந்துமதம் குறித்து அதுகாறும் மேற்கத்தியர்கள் எழுதியிருந்த அத்தனை நூல்களிலிருந்தும் முற்றிலும் வேறுபட்டிருந்தது. The Studies from an Eastern Home என்ற நூல், அவரது முதல் சில ஆண்டுகளின் இந்திய வாழ்க்கையின் நேரடி அனுபவங்களை அவ்வப்போது எழுதிய பதிவுகளின் தொகுப்பு. இந்தியக் குடும்பங்கள், அவற்றின் மகிழ்ச்சிகள் துயரங்கள், பண்டிகைகள் போன்றவற்றின் உயிர்த்துடிப்பான சித்திரம் இவற்றில் உள்ளது. முதன்முதலாக, நமது இதிகாச புராணங்களில் உள்ள கதைகளை குழந்தைகளுக்காக சுவாரஸ்யமான எளிய ஆங்கிலத்தில் எழுதிய பெருமை நிவேதிதாவையே சாரும். The Cradle Tales of Hinduism என்ற அவரது நூல் இத்திறக்கில் ஒரு கிளாசிக் என்றே கூறலாம். அன்னை காளியின் தீவிர பக்தையாக இருந்த நிவேதிதா சக்தி தத்துவத்தின் சாரத்தைத் தனது அன்மிக அனுபூதியில் உணர்ந்து எழுதியது Kali The Mother என்ற கவித்துவமான நூல். 

தான் கண்ட பஞ்சம் மற்றும் வெள்ளப் பேரிடரின் யதார்த்தமான காட்சிகளை மட்டுமில்லாமல், அதுகுறித்த ஒட்டுமொத்த சமூக, பொருளாதாரப் பின்னணியையும் ஆய்வுசெய்து Glimpses of Famine and Flood in East Bengal in 1906 என்ற நூலில் நிவேதிதா எழுதியிருக்கிறார். உணவுப் பயிர்களை விடுத்து, பிரிட்டிஷ் ஆட்சியின் வற்புறுத்தல்கள் மற்றும் குறுகிய காலப் பேராசைகளால் சணல் பயிரை விளைவிக்க முயன்றதன் கோர விளைவுகளை விவரிக்கும் இந்த நூலின் அத்தியாயங்கள் (The Commonwealth based on Rice, The Tragedy of Jute) தம்மளவில் மிகச்சிறந்த சமூக ஆய்வுகள் என்றே கூறலாம்.

இந்தியக் கல்வியாளர்களின் வரிசையில் முதலிடத்தில் வைத்து எண்ணுதற்குரிய நிவேதிதா, தேசியக் கல்விக் கொள்கை குறித்த தனது எண்ணங்களை Hints on National Education என்ற நூலில் மிக நேர்த்தியாகப் பதிவு செய்திருக்கிறார். இந்திய வரலாறு குறித்த அவரது ஆழமான புரிதல் Footfalls of Indian History என்ற நூலில் வெளிப்படுகிறது. Indian Art என்ற நூலில் இந்தியக் கலை குறித்த தனது அவதானிப்புகளையும் மதிப்பீடுகளையும் எழுதியிருக்கிறார். சில குறிப்பிட்ட இந்திய, ஐரோப்பிய ஓவியங்களை ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டு எழுதியுள்ள விமர்சனங்கள் அவரது நுட்பமான ரசனையையும் கலைமனத்தையும் வெளிப்படுத்துகின்றன.

நிவேதிதாவின் அரசியல், சமூக சிந்தனைகள் மிகவும் தீர்க்கமானவை. Civic Ideals and Indian Nationality (குடிமைப் பண்புகளும் இந்திய தேசியமும்), Aggressive Hinduism (தீவிரம்கொண்ட இந்துமதம்) ஆகிய நூல்களும், On political, economic and social problems என்று தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகளும் இன்றும் இந்தியாவில் நாம் பொதுத்தளத்தில் மையமாக விவாதித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளையும் கருத்தியல்களையும் கோட்பாடுகளையும் குறித்துப் பேசுகின்றன.

இந்திய தேசிய மறுமலர்ச்சிக்காக தனது சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் ஆகுதியாக அளித்த சகோதரி நிவேதிதா, தனது வாழ்வின் கடைசிக்கட்டத்தில் உடல் தளர்ந்து நோயுற்றார். வங்காளத்தின் சுதந்திரப் புரட்சி இயக்கங்கள் பிரிட்டிஷாரால் ஒடுக்கப்பட்டது அவருக்கு மிகுந்த சோர்வை அளித்தாலும், அவரது வேதாந்த மனம் வாழ்வையும் மரணத்தையும் சமநிலையுடன் நோக்கும் முதிர்ச்சியைப் பெற்றிருந்தது. இந்தியா எழுச்சியுற்று உலகில் தனக்கான இடத்தைப் பெறும் என்ற அவரது உறுதி தளரவில்லை. டார்ஜிலிங்கில் ராய்வில்லா என்ற போஸ் குடும்பத்திற்குச் சொந்தமான வீட்டில் தனிமையிலும் தியானத்திலும் தன் இறுதி நாட்களைக் கழித்தார். 43 ஆண்டுகளே இப்பூவுலகில் வாழ்ந்திருந்த அந்தத் தாரகை 1911 அக்டோபர் 11ம் நாள் மரணத்தைத் தழுவியது. இந்தியாவின் ‘தலைவியாக, சேவகியாக, தோழியாக’ விளங்குவாய் என்ற தனது குருவின் ஆசியை அவர் மிகச்செம்மையாக நிறைவேற்றி விட்டிருந்தார்.

அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர்
கோயிலாய், அடியேன் நெஞ்சில்
இருளுக்கு ஞாயிறாய், எமதுயர்
நாடாம் பயிர்க்கு மழையாய், இங்கு
பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப்
பெரும்பொருளாய்ப் புன்பைத் தாதச்
சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய்
நிவேதிதையைத் தொழுது நிற்பேன்

என்று பாரதியார் எழுதிய சொற்கள் ஒரு சிறிதும் அலங்காரமானவையல்ல. அவை சத்திய வாசகங்கள்.

பனிமலைகளின் அடிவாரத்தில் அமைந்த எழில் தவழும் டார்ஜிலிங் நகரில் அந்த எளிமையான புனித நினைவிடத்தில் உள்ள இந்த வாசகங்கள் அதை இன்றும் அறிவித்துக் கொண்டிருக்கின்றன.

Here reposes Sister Nivedita, who gave her all to India.

இங்கு துயிலில் ஆழ்ந்திருக்கிறாள் சகோதரி நிவேதிதா – இந்தியாவுக்கெனத் தனது அனைத்தையும் அளித்தவள்.

****

(28 அக்டோபர் 2017 சகோதரி நிவேதிதாவின் 150வது பிறந்த நாள். அதனை
நினைவு கூரும் வகையில் இந்த ஆண்டு முழுவதும் பல நிகழ்ச்சிகளும்
கருத்துப்பரவல்களும் நடந்து வருகின்றன)

துணைபுரிந்த நூல்கள்:

[1] நிகரில்லா நிவேதிதா – யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா, வெளியீடு: ராஷ்டிர சேவிகா சமிதி, சென்னை (தொ.பே: 94449-15979)

[2] Complete Works of Sister Nivedita, Vol. 1 to 5, Published by Sister Nivedita Girls School, Kolkata. Online version – https://archive.org/details/The.Complete.Works.of.Sister.Nivedita

1 thought on “இந்தியாவுக்கெனத் தனது அனைத்தையும் அளித்தவள்: சகோதரி நிவேதிதா – ஜடாயு

  1. அன்புள்ள ஜடாயு மிகவம் சிறந்த கட்டுரை. உணர்வும், பொருளும் கலந்து எழுதி உள்ளீர்கள். கட்டுரை அதன் அதன் எல்லையை ஆற்றலுடன் சென்று தொடுகின்றது. நன்றி.
    //ஆண்டுகளே இப்பூவுலகில் வாழ்ந்திருந்த அந்தத் தாரகை 1911 அக்டோபர் 11ம் நாள் மரணத்தைத் தழுவியது.// -இந்த வரியில் வரும் மரணம் என்ற சொல் அவருக்கு உரியது அல்ல. அவர் தனது முத்தி நிலையை அடைந்தார் என்பதுதான் சரி. நீங்கள் மரணம் என்ற சொல்லை தவிர்த்து இருக்கலாம். முடிந்தால் சரிசெய்யவும்.

Leave a Reply