
நான் ஏழாவது வகுப்பில் படிக்கும்போது (1961) சென்னைக்கு எலிசபெத் மகாராணியார் வந்திருந்தார். கருப்புக் காமராசரும் சிகப்பு ராணியும் கை குலுக்கும் புகைப்படத்தை ஆனந்த விகடனிலிருந்து வெட்டி எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்னொரு புகைப்படத்தில் ராணியார் நடக்க, அவர் தோளிலிருந்து தொங்கும் ஆடையை இரண்டு பேர் பிடித்துக்கொண்டே பின்னால் நடந்து வருவார்கள். அரசியாரின் இந்தக் காம்பீர்யம் என்னைக் கவர்ந்தது. அரசியின் இடத்தில் என்னைப் பொருத்திப் பார்த்துக் கொண்டேன். அதற்கான வாய்ப்பும் கிடைத்தது.
எங்கள் வகுப்பில், ஓணம் கொண்டாட வேண்டுமென்று திட்டமிடப்பட்டது. இதற்குக் காரணம் ஓணத்தைப் பற்றிய பாடம் ஆங்கிலப் புத்தகத்திலிருப்பதா அல்லது எங்கள் ஆசிரியை ஒரு மலையாளி என்பதா என்று திட்டவட்டமாகச் சொல்ல முடியவில்லை. மாணவர்கள் இது விஷயமாய் அடிக்கடி சர்ச்சை செய்வார்கள். நான் ஒரு பொழுதும் டீச்சர் கட்சியை ஆதரித்ததில்லை.
ஓணம் கொண்டாடுவதில் வேலைப் பங்கீடு செய்யப்பட்டது. என் இயலாமையை மறைக்க சுறுசுறுப்பாய் ஒரு யோசனை சொன்னேன். பூக்கோலத்திற்குப் பூ எடுத்து வருவதாகச் சொல்லி உதவிக்கு இரண்டு மாணவிகளுடன் காந்தி மண்டபம் போனேன். எங்கள் வகுப்பில் நான்கு பையன்களும், நாற்பத்தெட்டு சிறுமிகளும் இருந்தார்கள் என்பதை இங்கு அவசியம் தெரிவிக்க வேண்டும்.
காந்தி மண்டபத்து வேலியிலிருந்து பூக்களையெல்லாம் நான் பறித்துப் போட, பையில்லாத காரணத்தால் தோழிகள் பாவாடையை மடக்கிப் பிடித்து அவற்றில் பூக்கள் நிரப்பப்பட்டன. இரண்டு பக்கமும் பூக்களைத் தாங்கியபடி அவர்கள் வர நடுவில் ராஜகம்பீரமாக நான் நடந்து என்னுடைய எலிசபெத் ராணி கனவை நிறைவேற்றிக் கொண்டேன்.
*
பள்ளியிலிருந்து வீட்டுக்குள் நுழைவேன். வாசலறையில் வாரியங்காவல் முதலியார் யாராவது உட்கார்ந்திருப்பார்கள். “என்ன, அதிகமாப் படிக்கறாரு போலிருக்குது” என்பார்கள். என் சட்டைப் பையில் மை கசிந்திருப்பதை அவர் கவனித்திருக்கிறார் என்பதை நாமறிய வேண்டுமாம். ‘இந்த ஊர்க்காரர்களுக்கு வேற ஜோக்கே தெரியாதோ” என்று யோசிக்கும் அளவுக்கு இது நடந்திருக்கிறது. பேனாவில் மை கசிவும், அதைத் தொடர்ந்து பெரியம்மாவின் தொந்தரவும் தாங்க முடியாமல் இது விஷயமாகத் தீவிர ஆலோசனை செய்தேன். அண்ணன்மார் பேனா மட்டும் ஒழுங்காயிருக்கிறதே என்ற எண்ணத்தில் ஆங்காரம் ஏற்பட்டு ஒருநாள் அவர்கள் எல்லோருடைய பேனாவிலும் மூடியை மட்டும் கழற்றிப் பக்கத்துக் குட்டையில் வீசி எறிந்துவிட்டேன். அன்றிரவு தூக்கத்தில், அண்ணன்மாரெல்லாம் வரிசையாக ஒலிம்பிக் வீரர்கள் மாதிரி ஓடிவருகிறார்கள். கையில் ஆளுக்கொரு மூடியில்லாத பேனா. இதைக்கண்டு நான் சிரித்துச் சிரித்து, சிரிப்பின் நடுவே தூக்கம் கலைந்து படுக்கையிலிருந்து எழுந்துவிட்டேன்.
*
தீபாவளியின்போது பட்டாசு வாங்கிக் கொடுத்தார்கள். அவனவனுக்குத் தனிப்பெட்டி, ஒரு வாரத்திற்கு முன்பாகவே நாங்கள் பட்டாசு வெடிக்கும்போது தியாகு மட்டும் சும்மா வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பான். வெடித்தால் பட்டாசு தீர்ந்து போய்விடும் என்ற எண்ணம். ‘நீங்க வெடிக்கறத நான் ஜாலியா பாத்துக்கிறேன். உங்க பட்டாசெல்லாம் தீர்ந்தபிறகு நான் வெடிப்பேன்” என்று எங்களைக் கேலி செய்வான். நாங்கள் வெடிப்பதே அவனுடைய பெட்டியைத் திறந்து, அவனுடைய பட்டாசைத்தான் என்பது அவனுக்குத் தெரியாது. தெரிந்த பிறகு அழுதாலும் “நல்ல நாளும் அதுவுமாய் ஏன் அழுகிறாய்?” என்று அவனைத்தான் திட்டுவார்கள்.
*
பெரியண்ணன் ஒரு ஆட்டோகிராப் நோட்டு வைத்திருந்தான். அதில் மல்யுத்த வீரர் கிங்காங்குடைய கையெழுத்திருந்தது. அதை நான் பார்க்க விரும்பினேன். கிங்காங்குடைய கையெழுத்தும் குண்டாயிருக்குமா என்பது நியாயமான கேள்வி. அண்ணன் என்னுடைய சந்தேகங்களை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அவனிடம் கெஞ்சியும் பிரயோஜனமில்லை. ஆகவே, அண்ணனில்லாதபோது ஒருநாள் அந்த ஆட்டோகிராப் நோட்டை எடுத்துப் பார்த்துவிட்டு மீதமிருந்த பக்கங்களிலெல்லாம் என்னுடைய கையெழுத்தைப் போட்டுவிட்டேன்.
*
ஃபான்டம் (முகமூடி) காமிக்ஸ் படித்ததிலிருந்து அடுத்தவனை அடித்து முத்திரை பதிக்க வேண்டுமென்ற ஆசை அதிகமாயிற்று. இது தீபாவளி சமயத்தில் நிறைவேறியது. கம்பி மத்தாப்பு எரிந்தபிறகு செந்தணலாய் இருக்கும். அதைப் பையன்களின் பின்பக்கத்திலோ, தொடையிலோ இழுப்பது எனக்குத் தொழிலாயிற்று. பையன்கள் பூங்காவில் இருக்கும் சறுக்கு மரத்திலிருந்து வேகமாக சறுக்கிக்கொண்டே வரும்போது கீழே அவர்கள் இறங்கும் இடத்தில் சுடச்சுடக் கம்பி மத்தாப்பு. எங்கள் வீட்டுப் பக்கத்திலுள்ள பையன்கள் பலருக்கு இவ்வாறு ஃபான்டம் முத்திரை என்னால் போடப்பட்டது.
*
காந்தி நகரில் சுமார் இருநூற்று ஐம்பது வீடுகள் இருந்தன. கிட்டத்தட்ட அக்ரகாரம் போலத்தான். பிராமணர் அல்லாதாரும் பிராமணரைக் காப்பி அடிக்க முயற்சிப்பார்கள். அனந்தபத்மநாபஸ்வாமி கோவிலில் ராதா கல்யாணம் நடக்கும். ராதா கல்யாணத்தின்போது யாரும் வீட்டில் சமைக்க வேண்டிய அவசியமில்லை. எல்லோரும் கோவிலில் சாப்பிட்டுக் கொள்ளலாம். ராதா கல்யாணத்திற்காக உஞ்சவிருத்தி நடக்கும். உஞ்சவிருத்தி நடக்கும்போது சிறு பையன்கள் பைலட் மாதிரி முதலில் போய் ‘உஞ்சவிருத்தி வருகிறது’ என்று அறிவிப்பார்கள். இந்த வேலை எனக்கு மிகவும் பிடிக்கும். நாம் சொன்னவுடனே அவர்கள் தயாராகிறார்கள் என்பதில் ஒரு பெருமை.
உஞ்சவிருத்திப் பிரசித்தமான புதுக்கோட்டை கோபாலகிருஷ்ண பாகவதர், பெரியம்மா வீட்டில் வந்து தங்கினார். அவரோடு நாங்களும் உஞ்சவிருத்திக்குப் போனோம். கோட்டும், டையும் போட்டுக்கொண்டு கல்லூரிக்குப் போகும் பெரியப்பா, சட்டையில்லாமல் நடந்து வந்தது எனக்கு வேடிக்கையாய் இருந்தது. ஒரு வீட்டு வாசலில் நாங்கள் போனபோது, வீட்டுக்கார அய்யர் மாமியை ‘அடியே’ என்ற சத்தம் போட்டு அழைத்தார். அந்த வீட்டுக்கு அன்றுமுதல் ‘அடியே வீடு’ என்று பெயரிடப்பட்டது. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பெயருண்டு. பெரியம்மா வீட்டுக்கு புரபசர் வீடு என்று பெயர். இன்னொரு வீட்டுக்கு டான்ஸ் வீடு என்று பெயர். அந்த வீட்டுப் பெண்கள் நாட்டியமாடுவதற்காக ஒரு மேடை கட்டியிருந்ததால் டான்ஸ் வீடு என்று பெயர்.
டான்ஸ் வீட்டுப் பையன் ரவி என் வகுப்பிலேயே படித்துக் கொண்டிருந்தான். நல்ல வசதியான குடும்பம். வகுப்பிலும் முதல் இடம் அவனுக்குத்தான். பெரியம்மா என்னைத் திட்டுவதற்கு இவனும் வகை செய்தான். அவன் கண்ணில்படும் போதெல்லாம் அவனோடு ஒப்பிட்டு எனக்கு ஒரு சமாராதனை நடக்கும். நாம் படித்து இவனை ஜெயிக்க முடியாது என்பதால் இவனை ஃபெயில் ஆக்க என்ன வழி என்று மண்டையைக் குடைந்து கொண்டேன். அருமையான வழி பிறந்தது.
மந்தவெளியிலிருக்கும் இன்னொரு பள்ளிக்கும் எங்களுக்கும் ஒரே பாடத்திட்டம், ஒரே பாடப் புத்தகம்தான். எங்களுக்குத் தேர்வு நடப்பதற்குப் பத்து நாட்களுக்கு முன்பே அவர்களுக்குத் தேர்வு நடக்கும். அந்தப் பள்ளியில் ஏழாம் வகுப்பில் என்னுடைய சொந்தக்காரப் பையன் ஒருவன் படித்துக் கொண்டிருந்தான். அவனுக்குப் பரீட்சை முடிந்ததும் அவனுடைய கேள்வித்தாளைக் கைப்பற்றினேன். கேள்வித்தாளில் பள்ளிக்கூடத்தின் பெயரை அச்சிடவில்லை. இது என் வேலையை சுலபமாக்கியது.
கேள்வித்தாளோடு ரவி வீட்டுக்குப் போனேன். பள்ளியின் கேள்வித்தாள் அவுட் ஆகிவிட்டதென்றும், அதிர்ஷ்டவசமாக அது என் கைக்கு வந்திருப்பதாகவும் கூறினேன். அதை அவன் கண்ணில் காட்டுவதற்கச் சில சட்டங்களையும் விதித்தேன். அவன் வீட்டு ஊஞ்சலில் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ஆடுவேன். அவன் என்னைத் தடுக்கக்கூடாது. அவனிடமிருந்து ‘துப்பறியும் சாம்புவை’ நான் என் வீட்டுக்கு எடுத்துப்போய்ப் படிப்பேன். அவன் அதைத் திருப்பித்தா என்று கெடுபிடி செய்யக்கூடாது போன்ற பல சட்டங்கள். ரவி அத்தனை சட்டங்களையும் ஏற்றுக்கொண்டு எனக்கு எல்லா சௌகரியங்களையும் செய்த பிறகு கேள்வித்தாளை அவனிடம் ஒப்படைத்தேன். அந்தமுறை அந்தப் பரீட்சையில் அவன் தப்பித்ததே பெரிய விஷயம்.
*
இந்த நேரத்தில் என்னோடு பழகியவர்களில் மகேஷைப் பற்றிக் கட்டாயம் சொல்லியாக வேண்டும். மகேஷ் பணக்கார வீட்டுப் பையன். மகேஷுடைய அண்ணன் ஒருவன் காணாமல் போய்விட்டான். அவன் யோகியாகிவிட்டான் என்று ஒரு வதந்தி இருந்தது. மகேஷுக்கும் என் வயதுதான். என்னை மாதிரியே படிப்பில் சுமார். குறும்பில் முன்னணி. மகேஷ் வீட்டில் அவன் வைத்ததுதான் சட்டம். அப்பா, அம்மா வீட்டிலிருக்கமாட்டார்கள். மரத்தில் ஏறி பக்கத்து வீட்டு மாங்காயைப் பறிக்கலாம். ப்ரிட்ஜிலிருந்து ஐஸ் வாட்டர் குடிக்கலாம். சமையற்கட்டிலிருந்தோ, புத்தக அலமாரியிலிருந்தோ எதை வேண்டுமானாலும் எடுக்கலாம். இத்தனையையும் நாங்கள் செய்வதை மகேஷ் அனுமதிப்பான். ஆனால் எப்போதாவது ஒருமுறை அவன் Paul Brunton, விவேகானந்தா என்று ஆங்கிலத்திலும், அழகுத் தமிழிலும் பேசுவான். சுத்தானந்த பாரதியார் எழுதிய ஆதிசங்கரர் வரலாற்றை வரிக்குவரி அபிநயித்துக் காட்டுவான். இந்த பிரக்ஞை எங்களுக்கும் ஏற்பட வேண்டுமென்று அயராது பாடுபடுவான்.
மகேஷுக்கு யோகத்தில் நாட்டம். மகான்கள் சரிதத்தைப் பற்றி விவரிப்பது சலிக்காத விஷயம். அடிக்கடி திருவண்ணாமலை போய் வருவான். வீட்டிலேயே அறையைத் தாளிட்டுக் கொண்டு மணிக்கணக்கில் தியானம் செய்வான். ஆனால் மகேஷின் விசேஷத் தன்மைகள் அன்றைய நிலையில் என்னை ஈர்க்கவில்லை. அவன் சொல்ல வந்ததை ஒரு பொழுதும் நான் கவனித்துக் கேட்டதில்லை என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் பல வருடங்களுக்குப் பிறகு இளமைக் காலத்தில் எனக்கு தியானத்தில் ஈடுபாடு வந்தபோது இதனால் எனக்குப் பலனிருந்தது.
*
ஒருமுறை புல் அப்ஸ் எடுக்க முயன்று, தவறி சுவரில் மோவாய் மோதிக் காயம் ஏற்பட்டது. முகமெங்கும் ரத்தக் கலவையாய் இருந்த என்னை அருகிலிருந்த டாக்டரிடம் அழைத்துச் சென்றார்கள். அந்த டாக்டருக்கோ ஊசி போடத் தெரியாது. செலவுக்குப் பயந்து வேறிடம் போக வீட்டார் தயாராக இல்லை. விளைவு – மயக்க மருந்து இல்லாமல் நாலு பேர் என்னை அமுக்கிப் பிடித்துக் கொள்ள, மிருகத்தைத் தைப்பது போல் தாடையில் ஐந்து தையல்கள். காயம், ரணம், வலி, வசவு ஆகியவை என் நாட்குறிப்பில் தவறாமல் இடம் பெற்றன.
*
ஏழாம் வகுப்பு படிக்கும்போது, இடைவேளையில் வீட்டுக்கு வந்தவன் உள்ளறையிலிருந்த தந்தியைக் கண்டேன். ‘குஞ்சம்மா பாட்டி இறந்துவிட்டார்.’ இவ்வளவு பெரிய துக்கத்தை நான் இதுவரை அனுபவித்ததில்லை. யாரும் என்னிடம் இது பற்றி எதுவும் சொல்லவில்லை. நான் ஊருக்குப் போக விரும்புகிறேனா என்று யாரும் என்னைக் கேட்கவில்லை. பகல் பொழுதும், மாலையும் கடந்து செல்வது மிகக் கடினமாயிருந்தது. இரவின் வரவை எதிர்ப்பார்த்துப் பொறுமையாயிருந்தேன். இரவு சாப்பாடு முடிந்தது. எல்லோரும் படுத்துவிட்டார்கள். எல்லோரும் தூங்கிவிட்டார்கள் என்று நிச்சயமாகத் தெரியும்வரை பல்லைக் கடித்துக்கொண்டு காத்திருந்தேன். பிறகு போர்வையை இழுத்து மூடிக்கொண்டு, மனம்விட்டு, வாய்விட்டு வெகுநேரம் அழுதேன்.
– தொடரும்