Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 5: சோதிடத்தை மறுத்த கிராமம் – சுப்பு


அடையாறில் பெரியப்பா வீட்டில் தங்கிப் படித்தேன் என்று எழுதுகிறேன். என்னிடமிருக்கும் சில சிறப்புகளுக்கு பெரியப்பாதான் காரணம். எனவே, அவரைப் பற்றி இந்த இடத்தில் சொல்லிவிடுகிறேன்.

பெரியப்பாவைத் தெரிந்துகொள்ள நூறாண்டுகள் பின்னோக்கிப் பயணித்து வாரியங்காவலுக்குப் போக வேண்டும்…

சூரிய வெளிச்சம் உள்ளே வர விடாதபடி அப்படி ஓர் அடர்த்தி. தரையிலே படர்ந்திருக்கும் கிளைகளோடு முந்திரிக் காடுகள். காடுகள் விட்டு வைத்த இடைவெளியில் மல்லாக் கொட்டை விளைச்சல். ஊரின் நான்கு பக்கமும் வாரி என்கிற வாய்க்கால். இதனால் வாரியங்காவல்.

இதுதான் ‘வாரியங்காவல்’. இது இன்றைய அரியலூர் மாவட்டத்தில் இருக்கிறது.

நெசவைத் தொழிலாகக் கொண்ட செங்குந்த முதலியார்களின் ஊர் இது. இரண்டு வீடுகள் மட்டும் பிராமணர்கள். சேரியும் உண்டு.

முதலியார்கள் தறி நூலுக்கு விறைப்பு ஏற்படுவதற்காகப் பாவு போடுவார்கள்.

வீதி நீளத்திற்குப் பாவு போட்டு அதில் கஞ்சியைத் தடவுவார்கள். மீதமிருக்கும் கஞ்சி வீதியில் சிதறிவிடும். இதனால், இந்த மண்ணின் வாசனையில் உணவின் ருசி இருக்கும்.

தறியிலே உட்கார்ந்து, உட்கார்ந்து ஊர் ஜனத்திற்கு இயற்கையாகவே ஒரு பணிவு காட்டும் வளைவு இருக்கும். முதலியார்களிடம் காசு பணம் நடமாட்டம் அதிகம் இருக்காது என்றாலும், கருணையும் கட்டுப்பாடும் கூடுதலாக இருக்கும்.

சென்ற நூற்றாண்டின் துவக்கத்தில் இந்த ஊர் போஸ்ட் மாஸ்டராக இருந்தார் நாராயணசாமி ஐயர். ஊராருக்கு நல்லது கெட்டதுக்கான சடங்குகளைச் செய்து வைப்பதும் இவரே. அந்தக் கால நியாயப்படி இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியின் பெயர் மங்களம். இரண்டாவது மனைவியின் பெயர் மங்களம்! ஆமாம். அப்படி ஓர் ஒற்றுமை.

இரண்டாவது மங்களத்திற்கு ஒன்பது குழந்தைகள். அவர்களில் 1913ல் பிறந்த தலைமகன் ராமசாமிதான் என்னுடைய பெரியப்பா.

வெள்ளைக்காரன் ஆட்சியின் விளைவாக, இந்தியாவுக்கே பொதுமையாக இருந்த வறுமை வாரியங்காவலில் இன்னும் தீர்க்கமாகவே இருந்தது. ஐயர் வீட்டிலும் அப்படித்தான். பற்றாக்குறைகளை எல்லாம் பாசத்தால் நிரப்பிக் கொண்டார்கள்.

ராமசாமி பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இன்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்தார். படிப்பில் எப்போதும் முதல் மாணவனாக இருந்தார் ராமசாமி.

பரிட்சையில் தேர்ச்சி பெற்றபோது அவருக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது.

நாராயணசாமி ஐயர் காலமாகிவிட்டார். விதவைத் தாயாரையும், தம்பி தங்கைகளையும் காப்பாற்றவேண்டிய பொறுப்பு ராமசாமியின் தலையில் ஏற்றப்பட்டது.

மேற்கொண்டு என்ன செய்வது என்பதை ஆலோசிக்க ஊர் கூடியது. கிராமத்து ஜோஸியரை அழைத்து ராமுடுவின் ஜாதகத்தைப் பார்க்கச் சொன்னார்கள். ஜோஸியருக்கு குடும்பத்தில் பொருளாதாரப் பின்புலம் தெரியாதா என்ன? ராமுடுவுக்குப் படிப்பு வராது என்று சொல்லிவிட்டார்.

மக்கள் கொதித்து எழுந்துவிட்டார்கள். ‘ராமுடுவுக்குப் படிப்பு வராது என்று சொல்லும் ஜோஸியரை மாற்ற வேண்டும்’ என்று ஒருவர் தீர்மானம் போட்டார். இன்னும் சிலர், ரோசமாகப் பேசினார்கள். ராமுடுவை நாமே படிக்க வைப்போம் என்றார்கள்.

ராமசாமியின் தம்பி பசுபதி குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மற்றொரு தம்பி அரங்கநாதன் இந்த நிலைமையிலும் விடுதலைப் போரில் ஈடுபட்டுச் சிறை சென்றார்.

ராமசாமி இயற்பியல் ஆனர்ஸ் வகுப்பில் சேர்ந்தார். சத்திரமொன்றில் தங்கிக் கொண்டு, காய்கறி, குழம்பு எதுவுமில்லாமல் சோறைப் பொங்கிச் சாப்பிடுவார்.

கல்லூரிக் கட்டணம் செலுத்த வேண்டிய நேரத்தில் ஊருக்குச் சேதி போகும். ஏகாம்பர முதலியார் என்ற பெரியவர் நடு வீதியில் நின்றுகொண்டு வருவோர் போவோரை மடக்கி வசூல் செய்வார். மடியில் இருக்கும் நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவை ஓரளவு சேர்ந்த பிறகு சிதம்பரத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.

பி.எஸ்ஸி., ஆனர்ஸ் படித்த பிறகு, ராமசாமி பி.டி. படித்தார். இயற்பியல் படித்தாலும் அவருடைய நாட்டம் என்னவோ தமிழில்தான். நூலகத்தில் இருந்த தமிழ்ப் புத்தகங்களையெல்லாம் கரைத்துக் குடித்தார். அப்போது கல்லூரிகளுக்கான அறிவியல் பாடப்புத்தகங்களைத் தமிழில் எழுதுவோருக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகம் ஆயிரம் ரூபாய் பரிசை அறிவித்தது. பேராசிரியர் விஸ்வநாதனும், அவருடைய மாணவர் ராமசாமியும் இயற்பியல் புத்தகம் எழுதி பரிசு பெற்றனர்.

பிறகு, கொல்லத்தைச் சேர்ந்த லட்சுமியை மணம் புரிந்த ராமசாமி சில வருடங்கள் கோவையில் மின்சாரத் துறையில் பணிபுரிந்தார். கிண்டி பொறியியல் கல்லூரியில் இயற்பியல் துறையில் சேர்ந்தார். கிண்டி பொறியியல் கல்லூரிக்குப் பிறகு சென்னை கோடம்பாக்கம் ஐ.ஐ.இ.டி.யில் பணிபுரிந்தார்.

இந்தச் சமூகம்தான் தனக்கு வாழ்வும் கல்வியும் கொடுத்தது என்ற உணர்வோடு வாழ்ந்தார் ராமசாமி. தனிப்பட்ட முறையில் ஆயிரக்கணக்கான மாணவருக்கு அவர் இலவசமாகப் பயிற்சி அளித்தார்.

ராமசாமி பல ஆண்டுகளாக மேற்கு மாம்பலம், குப்பய்யாச் செட்டித் தெருவில் ஒரு வீட்டில் வாடகைக்குக் குடியிருந்தார். வீட்டின் உரிமையாளர் மாடியில். உரிமையாளரின் பராமரிப்பில் இருந்தது ஒரு உறவுக்கார இளைஞர். வேலைக்குப் போவதில் விருப்பமில்லாத அந்த இளைஞரின் நாட்டமோ நாடகத்தில் இருந்தது. அவர்தான் பிற்காலத்தில் தமிழகமே தலையில் வைத்துக் கொண்டாடிய திரைப்பட நடிகர் நாகேஷ்.

அறுபதுகளின் துவக்கத்தில் அடையாறில் காந்தி நகர் குடியிருப்புச் சங்கம் உருவாக்கப்பட்டது. ராமசாமி வீடு வாங்கிக்கொண்டு அங்கே குடிபெயர்ந்தார். நான் அங்கே வந்து சேர்ந்தது அதற்குப் பிறகு.

எந்தவிதமான தாக்கத்தை என்னளவில் பெரியப்பா ஏற்படுத்தினார் என்பதைப் புரிந்துகொள்ள ஒன்றிரண்டு நிகழ்ச்சிகளைச் சொல்கிறேன்.

பள்ளிப் புத்தகங்களைத் தவிர மற்ற விஷயங்களில் நான் தீவிர வாசகனாக இருந்தேன். தீவிர சிந்தனையாளராகக்கூட. யோசித்து யோசித்து மனிதர்களின் பெரும்பாலான சிக்கல்களுக்குக் காரணம் பசிதான் என்று தீர்மானித்துவிட்டேன். உடம்பிலிருந்து அறுவை சிகிச்சை செய்து வயிற்றை அகற்றிவிட்டால் இந்தப் பிரச்சனையை சரிசெய்து விடலாம் என்றும் முடிவெடுத்து விட்டேன்.

என்னுடைய அண்ணன்மார்களுக்கோ, நண்பர்களுக்கோ இந்த மாதிரி ஆலோசனைகளை ரசிக்கும் பழக்கம் இல்லை. எனவே, முடிவாக என் கருத்தை பெரியப்பாவிடம் வைத்தேன். அவர் சொன்னது: ‘வயிற்றை மட்டும் எடுத்து பிரயோஜனம் இல்லைடா. அதற்குக் கீழே இன்னொன்று இருக்கிறது. அதையும் சேர்த்து எடுக்க வேண்டும்.’

எதையும் எளிதில் புரிந்துகொள்ள முடியாத எனக்கு இது சட்டென்று புரிந்துவிட்டது.

ஒரு நாள், வீடே பரபரப்பாக இருந்தது. பெரியப்பாவிற்கு பி.பி. என்று பேசிக் கொண்டார்கள். ஏதோ உடல் சம்பந்தமான பிரச்சினை என்பதை மட்டும் புரிந்து கொண்டேன். எனக்கு விளக்கிச் சொல்வார் யாரும் இல்லை. யாரும் கவனிக்காத ஒரு சமயத்தில் பெரியப்பா தனியாக இருந்தார். அறைக்குள் போனேன். கட்டிலில் படுத்திருந்தார்.

‘‘பி.பி.ன்னா என்ன பெரியப்பா?” என்று கேட்டேன். படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்தார். அறைக் கதவைத் தாளிட்டார். பேப்பரையும், பேனாவையும் எடுத்துக்கொண்டு இதயத்தையும், இரத்தக் குழாய்களையும் வரைந்து காட்டினார். ‘‘உப்பு போன்ற விஷயங்கள் இரத்தக் குழாய்களை அடைத்துக் கொள்கின்றன. இந்த அடைப்பையும் மீறி இரத்தம் பாய வேண்டும். இதற்காக இதயத்தின் வேலை அதிகமாகிறது. அதை அளக்கும் முறைதான் இரத்த அழுத்தம்” என்று விளக்கினார்.

அதற்குள் வீட்டிலிருப்பவர்கள் கலவரம் அடைந்து கதவைத் தட்ட ஆரம்பித்து விட்டார்கள். ஆனால், பெரியப்பா அசரவில்லை. விளக்கத்தை முடித்து, நான் புரிந்து கொண்டேன் என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே கதவைத் திறந்தார்.

கதவு திறக்கப்பட்டவுடன் வெளியே வந்தேன். உள்ளே என்ன நடந்தது என்று பெரியப்பாவிடம் கேட்க யாருக்கும் துணிவில்லை. என்னைக் கேட்டார்கள். இரத்த அழுத்தம் குறித்து, நான் பேச ஆரம்பித்தேன். அந்தச் சபை அதை ரசிக்கவில்லை.

காந்தி நகரில் இருப்பவர்கள் எல்லாம் வசதியானவர்கள்தான். மிராசுதாரர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என்கிற மாதிரிதான் இருக்கும். அங்கே ஒரு லேடீஸ் கிளப் இருந்தது. அதில் பலர் சீட்டாடுவார்கள், சிலர் டென்னிஸ் ஆடுவார்கள். அவ்வப்போது, பக்கத்தில் இருக்கும் சேரியில் சமூக சேவை செய்வார்கள்.

பெரியம்மாவிற்கு லேடீஸ் கிளப்பில் சேர வேண்டும் என்கிற ஆசை இருந்தது. ரொம்பவும் தயங்கித் தயங்கி ஒருநாள் பெரியப்பாவிடம் கேட்டுவிட்டார்.

பெரியப்பா கேட்டார், ‘‘லேடீஸ் கிளப்பில் என்ன பண்றாங்க?”

‘‘அவங்க, சேரியில போய் அங்கிருக்கிற குழந்தைகளைக் குளிப்பாட்டறாங்க. பாடம் சொல்லித் தராங்க.”

‘‘அப்ப அந்த லேடீஸ் வீட்டில் இருக்கிற குழந்தைகளை யார் குளிப்பாட்டறாங்க?”

‘‘அதுக்குத்தான் வேலைக்காரி இருக்காளே…”

‘‘எதுக்கு இவ்வளவு கஷ்டம்? இவங்க போய் வேலைக்காரி வீட்டிலிருக்கும் குழந்தைகளைக் குளிப்பாட்டணும். வேலைக்காரி இவங்க வீட்டிலே இருக்கும் குழந்தைகளைக் குளிப்பாட்டணும். இதெல்லாம் வீண் வேலை” என்று பெரியப்பா முடித்துவிட்டார்.

Leave a Reply