Posted on Leave a comment

சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் – கிருஷ்ணன் சுப்பிரமணியன்

அது 1984ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி. டெல்லியின் திரிலோக்புரி பகுதியில் ஒரு குறுகிய சந்தில் இருந்த தன் வீட்டில் ஜோகிந்தர் சிங் தனது குடும்பத்தினருடன் மறைந்து கொண்டிருந்தார். ஒரே ஒரு ஜீரோ வாட்ஸ் பல்பின் வெளிச்சத்தில் அந்தக் குடும்பத்தில் உள்ள ஆண்களின் தலைமுடியை மழித்துக் கொண்டிருந்தார்கள். சீக்கியர்கள் உயிர்தப்ப வேண்டுமென்றால் அவர்கள் தங்கள் தலையிலும் முகத்திலும் உள்ள முடிகளை நீக்கிவிடுவது நல்லது என்று அந்தப் பகுதி மக்களுக்கு அறிவுரை கூறப்பட்டிருந்தது. ஆனால் ஜோகிந்தர் சிங் இந்த அறிவுரையை ஏற்க மறுத்தார். அப்படி ஒரு செயலைச் செய்வது தங்களது மதக் கடமைகளுக்குத் தான் செய்யும் இழுக்கு என்று நினைத்தார். தூரத்திலிருந்து தாக்குதல் நடத்த வரும் கூட்டத்தின் சப்தம் கேட்கும்போதெல்லாம், அந்தக் குடும்பம் ஒடுங்கி ஒளிந்துகொண்டிருந்தது. ஒருமுறை கலவரக்காரர் ஒருவர் அந்த வீட்டின் கதவைத் தட்டியபோது வங்காளம் தெரிந்த, தன் தலைமுடியை மழித்த அவரது குடும்பத்தவர் ஒருவர் அவர்களிடம் சமயோஜிதமாகப் பேசி அவர்களைத் தப்புவித்திருந்தார். ஆனால் இப்போது மற்றுமொரு ஆபத்து அவர்களை நெருங்கியது. மன அழுத்தத்தைத் தாங்க இயலாமல் ஜோகிந்தர் சிங்கின் மூத்த மருமகளுக்குக் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே பிரசவ வலி எடுத்திருந்தது. வேறு வழியில்லாமல், ஒரு சிறு துணியின் மறைவில் குடும்பத்திலிருந்த பெண் உறுப்பினர்களின் உதவியைக் கொண்டே தன்னுடைய குழந்தையைப் பிரசவித்தார் அவருடைய மருமகள். அடுத்த நாள் இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு வந்தது. அவர்கள் பகுதியில் நுழைந்த ராணுவம் அவர்களை வெளியே வருமாறு அறிவுறுத்தியது. அப்போது கூட அந்தச் செய்தியை அவர்கள் நம்பவில்லை. கதவிடுக்கிலிருந்து பார்த்து வந்தது ராணுவ வீரர்கள் என்று உறுதிப்படுத்திக்கொண்ட பின்னரே அவர்கள் கதவைத் திறந்தனர். ஒரு லாரிமூலம் அந்தக் குடும்பத்தினர் அகதிகள் முகாமிற்குப் பத்திரமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

அந்த ஆண்டு நவம்பர் முதல் வாரத்தில் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில், ஜோகிந்தர் சிங்கைப் போன்ற மிகச் சில சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களே உயிர்தப்பிக்கும் அதிர்ஷ்டம் படைத்தவர்களாக இருந்தனர். சுதந்தரத்தின்போது பிரிவினைக் கலவரத்திலிருந்து தப்பிப் பிழைத்து இந்தியா வந்த பாண்டா சிங்கின் கதையைப் பார்ப்போம். அவரது வீட்டைக் குறிவைத்து மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டபோது, அவர் தனது அண்டை வீட்டுக்காரரின் வீட்டில் பதுங்கியிருந்தார். தனது இரு மகன்கள், மருமகள்கள் ஆகியோரின் நிலை என்ன என்று அறியாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்தார். அவர்களைப் பற்றி பின்னால் அவர் அறிந்துகொண்டதை இப்படிக் கூறினார்…

“என் மூத்த மகனை அவர்கள் உயிரோடு எரித்தனர். அப்போது அவன் கேட்டதெல்லாம் தண்ணீர் மட்டும்தான். அவனை அந்த நிலையில் விட்டுவிட்டு அந்தக் கூட்டம் சென்றபோது அக்கம்பக்கத்திலிருந்த பெண்கள் அவனுக்குத் தண்ணீர் கொடுத்தனர். குற்றுயிராக இருந்த அவனை, மீண்டும் அங்கே வந்த கலவரக்காரர்கள் இரும்புத் தடிகளால் தாக்கிக் கொன்றுவிட்டனர். எங்கோ ஒளிந்திருந்த என் இரண்டாவது மகனை கலவரக்காரர்கள் அந்த இடத்திலிருந்து வெளியே இழுத்து அடுத்த நாள் அதிகாலை அவனையும் தாக்கிக்கொன்றனர்.”

இப்படி டெல்லியிலும் அதன் சுற்றுப்புறத்திலும் வசித்து வந்த சீக்கியர்களுக்கு இன்று நினைத்தாலும் பெரும் அச்சத்தைத் தந்த ஒரு காலகட்டம் அது. இப்படிப்பட்ட வன்முறை அவர்களுக்கு எதிராகத் தூண்டப்பட்டதின் காரணம் என்ன? ராஜீவ் கூறியது போல் ‘ஒரு பெரிய மரம் சாயும்போது, பூமி அதிர்வது இயற்கை என்பது போன்ற சாதாரண நிகழ்வா இது?

இந்தக் கலவரத்திற்கான விதை 1984ம் ஆண்டு நடந்த பொற்கோவில் தாக்குதலின்போதே (ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்) போடப்பட்டு விட்டது. அதற்கான மூலக் காரணத்தைத் தேடிப்போனால், இந்திராவினால் வளர்க்கப்பட்ட பிந்தரன்வாலேதான் நம்முன் நிற்பார். கத்தி எடுத்தவர் அதனாலேயே பலி ஆவார் என்ற பழமொழி இந்த விஷயத்தில் மெய்ப்பிக்கப்பட்டதாகவே நாம் கொள்ளவேண்டும். இன்னும் கொஞ்சம் விரிவாகப் பார்த்தோமானால், சுதந்தரம் அடைந்தது முதல், சீக்கியர்களுக்குத் தாங்கள் இந்தியாவில் சரியாக நடத்தப்படவில்லை என்ற உறுத்தல் இருந்து கொண்டேயிருந்தது. பிரிவினையின்போது தங்கள் சொத்துக்களை அப்படியே பாகிஸ்தானில் போட்டுவிட்டு ஏதிலிகளாக இந்தியாவிற்குக் குடிபுகுந்ததும், அப்போது பெருமளவில் தங்கள் இனம் கொல்லப்பட்டதும் அவர்கள் மனத்தில் ஆறாத வடுவாகப் பதிந்திருந்தது. அவர்களுடைய இந்த மனத்தாங்கலைப் போக்கி, சீக்கிய சமூகத்தின் நம்பிக்கையைப் பெற அப்போதைய ஆட்சியாளர்கள் முயலவில்லை என்பது பெரும் துயரம். கடும் உழைப்பாளிகளான சீக்கியர்களின் திறனைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் தொழில்வளர்ச்சி, விவசாய முன்னேற்றத்திற்கான உதவிகள் ஆகியவற்றை அளிக்கத் தவறியது அப்போதைய அரசு.

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோதும், பஞ்சாபிற்கென்று ஒரு தலைநகரை உருவாக்கும் முயற்சியிலும் பல குழப்படிகள். சீக்கியர்கள் விரும்பியது பஞ்சாபி மொழி பேசப்படும் தனி மாநிலம் ஒன்றை. இனரீதியான பிரிவாக அதை அவர்கள் அப்போது கருதவில்லை. ஆனால், மத்திய காங்கிரஸ் அரசு இப்படி ஒரு மாநிலத்தை உருவாக்குவது இனரீதியாகப் பிரிக்கும் முயற்சி என்று நினைத்தது. இந்தக் சிக்கல் நீடிக்கவே, குர்முகி எழுத்தை அடிப்படையாகக் கொண்ட பஞ்சாபி ஆட்சி மொழியாக இருக்கும் தனி மாநிலம் ஒன்றைக் கோரி, அகாலிதள இயக்கமும் பஞ்சாபி சுபா இயக்கமும் போராட்டத்தில் இறங்கின. ஆனால், 1966ம் ஆண்டு ஒட்டுமொத்த பஞ்சாப் பகுதியை ஹிந்தி மொழி பேசும் ஹிமாசலப் பிரதேசம், ஹர்யான்வி மொழி பேசப்படும் ஹரியானா, பஞ்சாபி மொழி பேசப்படும் பஞ்சாப் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து சீக்கியர்களுக்கு அதிர்ச்சி அளித்தது அரசு. நீர்வளம் மிக்க பல பகுதிகள் ஹிமாசலுக்கும் ஹரியானாவுக்கு சென்றதை சீக்கியர்கள் அறிந்துகொண்டபோது இந்த அதிர்ச்சி ஆவேசமாக மாறியது. சுதந்தரத்திற்கு முன்பு, பாகிஸ்தானில் உள்ள பகுதியையும் சேர்த்து ஒரு பெரும் மாகாணமாக இருந்த பஞ்சாப் இப்படிச் சுருங்கிப் போனதை சீக்கியர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியவேயில்லை.

ரஞ்சித் சிங் போன்ற சீக்கிய வம்சத்தின் முன்னோடிகள் ஆட்சி செய்ததும், தங்களுடைய பெருமை மிக்க தலைநகருமான லாகூர் பாகிஸ்தானிடம் சென்றதனால் அதற்கு இணையாக சண்டிகரை அழகாக வடிவமைத்திருந்தனர் பஞ்சாபிகள். ஆனால் மாநிலங்கள் பிரிக்கப்பட்டதும், சண்டிகரின் மக்கள்தொகையைக் கணக்கில்கொண்டு அது ஹரியானாவைச் சேரவேண்டும் என்று ஷா கமிஷன் அறிவித்திருந்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போன்ற இந்த அறிவிப்பால் மீண்டும் சீக்கியர்கள் போராட்டத்தில் இறங்கினர். ஒருவழியாக இந்திரா சண்டிகர் பஞ்சாபிற்கே என்றும் அதற்கு ஈடாக அபோஹர், பஸில்கா என்ற பகுதிகளை ஹரியானவுக்குத் தரும்படி உத்தரவிட்டார். பருத்தி வளம் அதிகமான இந்தப் பகுதிகளை ஹரியானாவிற்கு அளிப்பதை அகாலிகள் ஒப்புக்கொள்ளவில்லை. எனவே இந்த உத்தரவு அப்படியே நின்று போனது. சண்டிகரும் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டு இரு மாநிலங்களுக்கும் பொதுத்தலைநகராக இன்று வரை உள்ளது. இந்தக் காரணங்களால் தொடர்ந்து தங்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதாகச் சீக்கியர்கள் கருதினர்.

அகாலிகளில் மிதவாதிகள் 1973ம் ஆண்டு அனந்தபூர் என்ற சீக்கியர்களின் புனிதத் தலமொன்றில் கூடி தன்னாட்சித் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினர். அனந்தபூர் சாகிப் தீர்மானம் என்று அழைக்கப்பட்ட இந்தத் தீர்மானம் நாட்டைத் துண்டாடும் ஒரு முயற்சி என்று கூறி காங்கிரஸ் போன்ற பல கட்சிகள் இதைக் கடுமையாக எதிர்த்தன. இதனைத் தொடர்ந்து அகாலி தளத்தின் தலைவரான லோங்கோவால், இதில் சில திருத்தங்களைக் கொண்டுவந்து அரசால் ஏற்கக்கூடிய வடிவம் ஒன்றைத் தர முனைந்தார். இந்தத் திருத்தப்பட்ட வடிவத்தில் மாநில சுயாட்சி அதிகமாக வற்புறுத்தப்பட்டிருந்தது. தவிர, சீக்கியர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை ஆராய்ந்து அவற்றைச் சரி செய்ய குழு ஒன்றை அமைக்குமாறும், சண்டிகரைப் பஞ்சாபிற்கே ஒப்படைக்குமாறும் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த நேரத்தில் காங்கிரஸோடு அகாலிகள் கூட்டணி ஒன்றை அமைத்திருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்க விஷயமாகும். இருப்பினும் இந்தத் தீர்மானமும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவே 1980 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் டெல்லியில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, போராட்டம் ஒன்றை அகாலிகள் அறிவித்தனர். உலக நாடுகளின் பார்வை இந்தியாவில் இருக்கும் அத்தருணத்தில் சிக்கல் ஏதும் நிகழ அப்போதைய பிரதமர் இந்திரா விரும்பவில்லை. எனவே பஞ்சாப் எல்லைகள் சீல் வைக்கப்பட்டன, அதைத் தாண்டும் அனைவரும் கடும் பரிசோதனைக்குப் பின்னரே வெளியே அனுமதிக்கப்பட்டனர். இது சீக்கியர்கள் மத்தியில் பெரும் ஆத்திரத்தைக் கிளப்பியது. இந்த ஆத்திரத்திற்கான வடிகாலை அளிக்க முன்வந்தவர் ஜர்னயில் சிங் பிந்தரன்வாலா என்ற இளைஞர்.

அனந்தபூர் சாகிப் தீர்மானத்தின் மூல வடிவை அடிப்படையாகக் கொண்டு தனது போராட்டங்களை அறிவித்த பிந்தரன்வாலா, சீக்கியர்களுக்குத் தனி நாடு என்ற கோரிக்கையை நாளடைவில் முன்வைத்தார். தொடர்ந்து தொல்லை கொடுத்துக்கொண்டிருந்த அகாலிகளைக் கட்டுக்குள் வைக்க விரும்பிய இந்திராவும், ஜெயில் சிங் மூலமாக பிந்தரன்வாலேயின் கரத்தைப் பலப்படுத்த முன்வந்தார். இதனால் தன்னிச்சையாகச் செயல்படத்துவங்கிய பிந்தரன்வாலே தனக்கு எதிராகச் செயல்பட்ட எவரையும் கொல்லத்துவங்கினார். அகாலி தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் என்று பலதரப்பட்டவர்கள் அவரால் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.

பிறப்பிலேயே அடிப்படைவாதியான பிந்தரன்வாலே மாற்று நம்பிக்கை உடைய சீக்கியர்களையும் விட்டு வைக்கவில்லை. ஜலந்தரில் இருந்து வந்து கொண்டிருந்த சீக்கியர்களின் மாற்றுப் பிரிவினரான நிரங்காரிகளின் ஆதரவுப் பத்திரிகையான ஹிந்த் சமாசாரின் ஆசிரியர் 1981ம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் பிந்தரன்வாலே இருந்ததாகக் கூறி அரசு அவரைக் கைது செய்தது. இதனைத் தொடர்ந்து பஞ்சாபில் பெரும் கலவரம் வெடித்தது. கலவரத்தை அடக்குவதற்குப் பதிலாக அப்போது மத்திய உள்துறை அமைச்சராக இருந்த ஜெயில் சிங், பிந்தரன் வாலேவுக்கு எதிராகப் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார். பிந்தன்வாலே விடுதலை செய்யப்பட்டார்.

இதன் காரணமாக பெரும் ஊக்கமடைந்த பிந்தரன்வாலே மேலும் பல தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டார். தனது ஆதரவாளர்களுடன் பொற்கோவில் வளாகத்தில் குடிபுகுந்தார். சீக்கியர்களின் புனிதமான அந்த இடத்திற்குள் நுழைந்து தன்னைக் கைது செய்ய அரசு இயந்திரத்தால் இயலாது என்று எண்ணினார் அவர். அங்கு தங்கியிருந்து தொடர்ந்து வன்முறைச் செயல்களில் ஈடுபட்டார். அவரது நடவடிக்கைகளைக் கண்காணிக்க வந்த போலீஸ் அதிகாரி ஒருவரையும் அவருடைய இயக்கத்தினர் கொலை செய்தனர். பொற்கோவில் வளாகத்திலேயே மிகப் புனிதமான இடமான அகால் தக்தில் ஆயுதங்களுடன் குடிபுகுந்தது மட்டுமின்றி, பொற்கோவில் வளாகத்தில் காலிஸ்தான் கொடியையும் ஏற்றினார்.

1984 மே மாதம் தீவிரவாதம் பஞ்சாப் எங்கும் கொடிகட்டிப் பறந்தது. உடனடியாக நடவடிக்கை ஒன்றை எடுக்கவேண்டிய நிர்பந்தத்தில் இருந்த மத்திய அரசு பொற்கோவிலில் இருந்து தீவிரவாதிகளை வெளியேற்றும் பொறுப்பை லெப்டினண்ட் ஜெனரல் குல்தீப் சிங் ப்ராரிடம் ஒப்படைத்தது. ஆனால் கோவிலை விட்டு வெளியேற மறுத்து பிந்தரன்வாலே முரண்டு பிடித்தார். அகாலி தளத் தலைவர்களான தோரா போன்றோர் கோரிக்கை விடுத்தும் அதற்குச் செவிகொடுக்காமல் பொற்கோவில் வளாகத்தை ஆயுதக் கிடங்காக மாற்ற முயன்றார் பிந்தரன்வாலே. முடிவில் ஜுன் 5ம் தேதி இரவு ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. ராணுவம் எவ்வளவோ பொறுமையுடன் செயல் பட்டும் பெரும் உயிர்ச்சேதத்தைத் தவிர்க்க இயலவில்லை. பிந்தரன்வாலேயும் அவர் சார்ந்த இயக்கத்தினர் பலரும் கொல்லப்பட்டனர். அகாலித் தலைவர்களான தோரா, பாதல், லோங்கோவால் ஆகியோர் கைது செய்யப்பட்டு மீட்கப்பட்டனர். இரு தரப்பிலும் கடுமையான சண்டை நடந்ததால் ஒரு கட்டத்தில் டாங்கிகளைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ராணுவம் தள்ளப்பட்டது. இந்த டாங்குகளின் தாக்குதல்களினால் அகால் தக்த் சேதமடைந்தது. சீக்கியர்களின் குருமார்கள் அமர்ந்து ஆட்சிசெய்த அகால்தக்திற்குச் சேதம் நேர்ந்ததை சீக்கியர்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

ராணுவத்தின் பேரில் வைக்கப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தீயைப் போலப் பரவின. அவற்றில் பெரும்பாலானவை இட்டுக்கட்டப் பட்டவையாக இருந்தபோதிலும் சீக்கியர்கள் அவற்றை நம்பினர். தங்களது புனித இடத்தின் மீது தொடுக்கப்பட்ட போராகவே இந்த ராணுவ நடவடிக்கையை அவர்கள் கருதினர். பொற்கோவிலின் புனிதத்தை அங்கு ஆயுதங்களைக் கொண்டுசென்று சீர்குலைத்தது பிந்தரன்வாலேதான் என்ற எண்ணம் அவர்கள் மனதில் பதியவே இல்லை. நீறுபூத்த நெருப்பாகப் பழிவாங்கும் உணர்ச்சி அவர்கள் மனத்தில் கனன்றுகொண்டே இருந்தது.

அக்டோபர் 31, 1984, டெல்லி நகரம் வழக்கமான குளிருடன் விடிந்தது. காலை 9 மணி வாக்கில் பிரதமர் இந்திராவை பீந்த் சிங் தன்னுடைய கைத்துப்பாக்கியால் அவரது அடிவயிற்றில் மூன்று குண்டுகளைச் சுட்டார். தலைகுப்புற விழுந்த அவரின் மேல் சத்வந்த் சிங் தன்னுடைய இயந்திரத் துப்பாக்கியினால் முப்பது முறை சுட்டார். அதன்பின் இருவரும் தங்களது துப்பாக்கிகளைக் கீழே போட்டனர். ‘நான் செய்யவேண்டியதைச் செய்துவிட்டேன். நீங்கள் செய்யவேண்டியதைச் செய்யுங்கள்’ என்று பீந்த் சிங் கூறினார்.

அதிர்ச்சியடைந்திருந்த பாதுகாவலர்கள் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். அவர்களைக் கொண்டுசெல்லும்போது பீந்த் சிங் காவலர் ஒருவருடைய துப்பாக்கியை எடுக்க முயற்சி செய்தார். அப்போது நடந்த கைகலப்பில் பீந்த் சிங் கொல்லப்பட்டார். சத்வந்த் சிங் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின், இந்தக் கொலை வழக்கு நீதிமன்றத்திற்கு வந்தபோது, சத்வந்த் சிங்கிற்கும் அவருக்கு உடந்தையாக இருந்ததற்காக கேகர் சிங் என்பவருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டு 1989ல் இருவரும் தூக்கிலிடப்பட்டனர்.

ஆனால், இவையெல்லாம் நடப்பதற்கு முன், இந்திரா சுட்டுக்கொல்லப்பட்டவுடன், அவரைக் கொன்றது சீக்கியர்கள் என்ற செய்தி நாடெங்கும் பரவியவுடன், மக்கள் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர். இந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரைப் பார்க்க வந்த ஜெயில் சிங்கின் கார் மீது கல்லெறி வீச்சு நடந்தது. அன்று இரவு நாடெங்கும் துக்கத்தில் மூழ்கியிருந்தபோது ஒரு பெரும் கலவரத்திற்கான திட்டம் தீட்டப்பட்டது. ‘கூன் கா பத்லா கூன்’ (ரத்தத்திற்கு ரத்தம்) என்ற கோஷங்கள் எழுந்தன. அதற்கான கூட்டங்களில் காங்கிரஸ் எம்பிக்கள் பலர் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது. குறிப்பாக சஜ்ஜன் குமார் பல இடங்களில் சென்று தன் ஆதரவாளர்களுடன் பேசினார் என்றும், இந்திரா தன் அன்னையைப் போன்றவர், அவரைக் கொன்றவர்களைப் பழி தீர்க்கவேண்டும் என்றும் அவர் சொன்னதாகக் குற்றம் சாட்டப்பட்டார். சாராயம் தாராளமாகப் புழங்கியது. கலவரத்தில் ஈடுபட முனைந்தவர்களுக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களிடமிருந்து மண்ணெண்ணெய் தரப்பட்டது. இரும்புத் தடிகள், மூங்கில் கம்புகள், கத்திகள் ஏன் துப்பாக்கிகள் போன்ற ஆயதங்கள் கலவரக்காரர்களுக்கு அளிக்கப்பட்டன. அரசு அவர்கள் கையில் இருந்ததால் வாக்காளர் பட்டியல், ரேஷன் கார்டுகளில் உள்ளோர் பட்டியல் என்று தெருவாரியாக சீக்கியர்களின் பட்டியல் அவர்களிடம் தரப்பட்டது. இவற்றைக் கொண்டு சில இடங்களில் சீக்கியர்கள் வீடுகளில் அடையாளக் குறிகளும் இடப்பட்டன. தெருக்களில் நடமாடும் சீக்கியர்களைத் தாக்குவது போதாதென்று வீடுவீடாகச் சென்று அவர்களைத் தாக்கும் எண்ணம் இதன்மூலம் தெளிவாயிற்று. உதாரணமாக, பொகாரோ, கோஆப்பரேடிவ் காலனியில் வசித்து வந்த ஏழு குடும்பங்களில் சீக்கிய சமூகத்தைச் சார்ந்த ஒரே ஒருவராக ஓங்கார் சிங் பிந்த்ரா என்பவர் இருந்தார். அந்த இடத்தைக் கூட்டம் தாக்கியபோது, வீட்டின் உரிமையாளர் இங்கு சீக்கியர்கள் யாரும் இல்லை என்று கூறினாலும், ஓங்கார் வசித்து வந்த இடத்தை தாக்குதல் நடத்த வந்தவர்கள் துல்லியமாக அடையாளம் காட்டினர்.

நவம்பர் 1ம் தேதி சீக்கியர்கள் மீதான இந்த வெறித்தாக்குதல் துவங்கியது. கிழக்கு டெல்லியில் பலியான சீக்கிய இளைஞர் ஒருவர்தான் கலவரக்காரர்களின் முதல் பலி. படிப்படியாகக் கலவரம் டெல்லியில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான சுல்தான்புரி, திரிலோக்புரி, மோங்கோல்புரி, பாலம் காலனி ஆகியவற்றிற்குப் பரவியது. சீக்கியர்களின் குருத்வாராக்கள் தாக்கப்பட்டன. கலவரத்திற்குப் பின் கிட்டத்தட்ட 131 குருத்வாராக்கள் பழுது பார்க்கப்பட்டன என்று ஒரு செய்தி அறிவிக்கிறது.

சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும், உயர்ந்த நிலையில் இருந்தாலும், தாழ்ந்த அந்தஸ்தில் இருந்தாலும், எந்த ஒரு பெரும் பதவியை வகித்துக்கொண்டிருந்தாலும், பாரபட்சமில்லாமல் தாக்கப்பட்டனர். 1971ம் ஆண்டு இந்திய – பாகிஸ்தான் போரில் குறிப்பிடத்தக்க பங்கை வகித்தவரும், அதற்காக விருது பெற்றவருமான காப்டன் மன்மோகன் சிங்கின் வீட்டை நவம்பர் 1ம் தேதி காலை ஒரு கூட்டம் முற்றுகையிட்டது. தான் ஒரு விமானப் படைத் தளபதி என்று அவர்களிடம் பலமுறை கூறியும் அவர்கள் வீட்டை விட்டு நகர மறுத்தனர். மதியம் ஒரு பேருந்து முழுவதும் கலவரக்காரர்கள் கூட்டம் ஏற்கெனவே அங்கிருந்தவர்களுடன் சேர்ந்து கொண்டது. கிட்டத்தட்ட நான்காயிரம் பேர் கொண்ட குழுவை அவர் எதிர்கொள்ள நேரிட்டது. வீட்டை உடைத்து உள்ளே புகுந்த அவர்கள் இரும்புத் தடிகளால் அவரையும் அவர் குடும்பத்தாரையும் தாக்கத் துவங்கினர். வேறு வழியில்லாமல், அவர்கள் மேல் துப்பாக்கிப் பிரயோகம் செய்து அவர்களை விரட்டினார் மன்மோகன் சிங். விடாமல், பக்கத்து வீட்டிற்குள் புகுந்த அவர்கள் அங்கிருந்து பெட்ரோல் குண்டுகள் மூலம் அவர் வீட்டைத் தாக்க முயன்றனர் கலவரக்காரர்கள். இரவு 8:30 மணியளவில் அங்கே வந்த போலீசார் அவரையும்
குடும்பத்தினரையும் தங்களிடம் சரணடையும் படியும் அதன்மூலமே தாங்கள் அவருக்குப் பாதுகாப்பு அளிக்க முடியும் என்று கூறினர். அதை ஏற்றுச் சரணடைந்த அவர் மீது மூன்று கொலை வழக்குகளைத் தொடுத்த போலீசார் தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்.

இதுபோன்று சீக்கியர்களைக் கொல்லும் முயற்சியில் ஈடுபட்டது மட்டுமின்றி அவர்கள் மீது பல்வேறு தவறான வதந்திகளும் பரப்பப்பட்டன. டெல்லியின் குடிநீர் ஆதாரங்களில் சீக்கியர்கள் விஷத்தைக் கலந்துவிட்டதாக ஒரு வதந்தி பரவியது. இதற்குக் காவல்துறையினரே உடந்தையாக இருந்ததாகக் கூறப்பட்டது. டெல்லியின் ஷாத்ரா பகுதியில், பஞ்சாபில் உள்ள ஹிந்துக்கள் பலரைச் சீக்கியர்கள் கொன்றுவிட்டதாகவும் அவர்களின் உடல்களைப் புகைவண்டிகளில் அனுப்பிக்கொண்டிருப்பதாகவும் காவல்துறையினர் கூறினர். இது போன்ற வதந்திகள் மேலும் பலரை சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தத் தூண்டியது. படித்தவர்கள் கூட சீக்கியர்களின் மேல் ஆத்திரம் கொண்டு தாக்குதலில் இறங்கியதாகக் கலவரத்தை நேரில் பார்த்த பலர் கூறினர். அந்தக் கூட்டத்தின் தாக்குதலுக்கு ஆளான சீக்கியர்கள் யாரும் தப்ப இயலவில்லை. திரிலோக்புரியில் ஒரு குருத்வாராவைப் பாதுகாத்துக்கொண்டிருந்த சீக்கியர்கள் மீது ஒரு கும்பல் கொலைவெறித்தாக்குதல் ஒன்றை நிகழ்த்தியது. அங்கிருந்து தப்பி ஓடி இரு சீக்கியர்கள் வயலில் மறைந்துகொண்டனர். அந்த வயலைக் கொளுத்திய அந்தக் கூட்டம், அவ்விரண்டு சீக்கியர்களையும் உயிரோடு எரித்தது.

இப்படி ஆண்களைக் கொன்று குவித்தது மட்டுமில்லாமல் பெண்களையும் கலவரக்காரர்கள் மானபங்கப்படுத்தினர். இதைப் பற்றி தனது ‘மானுஷி’ பத்திரிகையில் எழுதிய எழுத்தாளர் மது கிஷ்வர், திரிலோக்புரியில் குர்தீப் கௌர் என்பவருக்கு நிகழ்ந்ததைப் பற்றிக் கூறுகையில், “ஒரு கும்பல் குர்தீப்பின் கணவரையும் அவரது மூன்று மகன்களையும் கொன்றது. குர்தீப்பை அவரது இளைய மகன் முன்னால் பலமுறை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி, அதன் பின் அவனைக் கொன்றனர் அவர்கள்.” என்கிறார். ஒன்பது வயதுச் சிறுமி முதல் எண்பது வயதுக் கிழவி வரை சீக்கியப் பெண்கள் கூட்டம்கூட்டமாகப் பாலியல் வன்முறைக்கு இலக்காகினர். நவம்பர் 1ம் தேதி ஒரு பூங்காவில் கிட்டத்தட்ட 200 பெண்கள் சரண் புகுந்திருந்தனர். அங்கு வந்த ஒரு கும்பல், அவர்களை இழுத்துச் என்று அடித்து உதைத்து இரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்தனர்.

இத்தனை கலவரங்கள் நடந்துகொண்டிருந்த போதிலும், அப்போதிருந்த ஒரே தொலைக்காட்சியான தூர்தர்ஷன் இந்திராவுக்குப் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதையும் அவரது இறுதி ஊர்வலத்தையும் மட்டுமே ஒளிபரப்பிக் கொண்டிருந்தது. கலவரத்தைப் படம் பிடிக்க முயன்ற வெளிநாட்டுத் தொலைக்காட்சி நிருபர்கள் தாக்கப்பட்டனர். ஏபிசி டிவியின் நிருபர்கள் தாக்கப்பட்டு அவர்களது காமிராக்கள் பறிக்கப்பட்டு உடைக்கப்பட்டன. இத்தாக்குதலைக் காவல்துறை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. ஆனால் இந்தத் தாக்குதல்களைப் பொருட்படுத்தாது பல நிருபர்கள் களத்தில் இறங்கி செய்தி சேகரித்தனர். கலவரத்தை விசாரிக்க மிஸ்ரா கமிஷன் நியமிக்கப்பட்டபோது அதன் முன் ஆஜராகி சாட்சியும் அளித்தனர்.

கலவரங்கள் கட்டுக்கடங்காது நடந்துகொண்டிருந்தபோது அதைத் தடுக்க வேண்டிய போலீசார் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது ஒரு வரலாற்றுத் துயரமாகும். உதவி கோரி பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த அழைப்புகளுக்கும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. தாக்குதல்கள் பலவற்றை நேரில் பார்த்தபோதும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, கேப்டன் மன்மோகன் சிங்கிற்கு நடந்தது போல், தற்காப்புத் தாக்குதலில் ஈடுபட்ட சீக்கியர்கள் பலர்மேல் குற்றம்சாட்டி வழக்குத் தொடுத்தனர் காவல்துறையினர். கலவரக்காரர்களைத் தடுத்து நிறுத்தக்கூடாது என்றும் தாக்குதல்களில் தலையிடக்கூடாதென்றும் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டதாகப் பல போலீசார் பின்னால் தெரிவித்தனர். நிலைமை எல்லைமீறிப் போயும் கூடப் பல பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தவும் அவர்கள் மறுத்தனர். தங்களிடம் சரணடைந்த சீக்கியர்கள் பலரை சித்தரவதை செய்த போலீசாரின் கதைகளும் பின்பு தெரியவந்தன. இந்தக் கலவரங்களைப் பற்றிய ஆவணங்களையும் சாட்சிகளையும் திட்டமிட்டு அழித்தது காவல்துறை. நவம்பர் 2ம் தேதி ராணுவம் வரவழைக்கப்பட்ட போதிலும் அவர்களோடு ஒத்துழைக்க மறுத்தனர் காவல்துறையினர். இது உயர்மட்டத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு நிலைமையின் தீவிரம் புரியவைக்கப்பட்ட பிறகே, நவம்பர் 3ல் ராணுவம் முழுவதுமாகக் களமிறங்கி நிலைமையைச் சிறிது சிறிதாகக் கட்டுக்குள் கொண்டுவந்தது.

கிட்டத்தட்ட மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தக் கலவரத்தில் சுமார் 2,800 பேர் கொல்லப்பட்டனர் என்று அரசு அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதில் 2,100 பேர் டெல்லியைச் சேர்ந்தவர்கள். ஆனால் அதிகாரபூர்வமற்ற தகவல்களின் படி 8,000 சீக்கியர்கள் இந்தத் தாக்குதலின்போது கொல்லப்பட்டிருந்தனர். சீக்கியர்கள் மீதான இந்த வன்முறை வெளிநாட்டுப் பத்திரிகைகளாலும் மனித உரிமைக் குழுக்களாலும் கடுமையாகக் கண்டிக்கப்பட்ட பின்பே அரசு இயந்திரம் விழித்துக்கொண்டது. தாக்குதலில் ஈடுபட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அதில் நாற்பத்து ஒன்பது பேருக்கு ஆயுள் தண்டனை அளிக்கப்பட்டது. ஆறு போலீஸ் அதிகாரிகள் கடமையைச் செய்யத் தவறிய குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டனர்.

இந்தத் தாக்குதல்களை விசாரிப்பதற்காகப் பல கமிஷன்களையும் கமிட்டிகளையும் அரசு நியமித்தது. அவற்றில் குறிப்பிடத்தகுந்தது 1985ல் நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையில் அமைந்த மிஸ்ரா கமிஷன். திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று கூறப்பட்ட இந்தக் கலவரத்தைப் பற்றி விசாரிக்குமாறும், இது போன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் நடைபெறாமல் தடுக்க செய்யவேண்டியவற்றைப் பரிந்துரைக்குமாறும் அந்தக் கமிஷன் பணிக்கப்பட்டது. தாக்குதலுக்கு உள்ளானோர், பத்திரிகையாளர்கள், காவல்துறை அதிகாரிகள், டெல்லியின் நிர்வாக அதிகாரிகள் போன்ற பல்வேறு தரப்பினரும் கமிஷனால் விசாரிக்கப்பட்டனர். இந்த விசாரணைகள் ரகசியமாகவே நடைபெற்றன. இதனால் அளிக்கப்பட்ட சாட்சியங்களின் விவரங்கள் வெளியே தெரியவரவில்லை. ஆனால் கமிஷனின் முன் சாட்சியம் அளித்த டெல்லி நிர்வாகத்தினர், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்லவென்றும், பிரதமரின் படுகொலைக்கு எதிராக உணர்ச்சி வசப்பட்டுக் கிளம்பிய கும்பலின் எதிர்வினை மட்டுமே என்று கூறிய தகவல்கள் வெளியாயின.

ஆகஸ்ட் 1986ம் ஆண்டு மிஸ்ரா கமிஷன் தனது அறிக்கையைத் தாக்கல் செய்தது. ஆனால், சீக்கியர்களுக்கு இந்த அறிக்கை பெரிதும் ஏமாற்றமளிப்பதாகவே இருந்தது. அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தனர். கீழ் மட்ட அதிகாரிகள் மீதே குற்றம் சாட்டியிருந்தது இந்தக் கமிஷன். காவல்துறை தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த செய்திகளையும் மறுத்தது அது. இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் இல்லை, மக்கள் உணர்ச்சிவசப்பட்டுச் செய்ததுதான் என்று தன் அறிக்கையை நிறைவு செய்திருந்தது மிஸ்ரா கமிஷன்.

இப்படித் தொடர்ந்து நியமிக்கப்பட்ட கமிட்டிகள் அதிருப்தியைத் தோற்றுவித்ததால், 2000ம் ஆண்டு ஓய்வுபெற்ற நீதியரசர் ஜி டி நானாவதி தலைமையில் ஒரு கமிஷன் நியமிக்கப்பட்டது. இந்த கமிஷனும் பல்வேறு தரப்பினரை விசாரணை செய்து தனது அறிக்கையை 2004ம் ஆண்டு சமர்ப்பித்தது. ‘காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஊக்கம் அளித்ததாக’ கடுமையாகச் சாடியிருந்த நானாவதி கமிஷனின் அறிக்கை, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ஜகதீஷ் டைட்லரை நேரடியாகக் குற்றம் சாட்டியிருந்தது. சீக்கியர்களுக்கு எதிரான இந்தக் கலவரத்தில் அவருடைய பங்களிப்பு இருந்தது என்று தெரிவித்திருந்தது அது. இதனைத் தொடர்ந்து டைட்லர் மீது சிபிஐ வழக்குத் தொடர்ந்தது. ஆனால் 2009ம் ஆண்டு சிபிஐயே அவர் குற்றமற்றவர் என்று சொல்லி அவரை வழக்கிலிருந்து விடுவித்தது. இதனால் ஆத்திரமடைந்த சீக்கியர் ஒருவர் அப்போதைய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது ஷூ ஒன்றை வீசிய நிகழ்வும் நடந்தது. அவரை எதிர்த்து சீக்கியர்கள் போராட்டத்தில் ஈடுபட முயல்வதாக அறிந்த டைட்லர் தான் மக்களவைக்குப் போட்டியிட விரும்பவில்லை என்று அறிவித்து விலகினார்.

இன்றுவரை இந்தக் கலவரத்திற்கான உறுதியான தண்டனை, தாக்குதலைத் தூண்டிய குறிப்பிடத்தக்க பிரமுகர்களுக்கு வழங்கப்படவில்லை என்பதே நிதர்சனம். தண்டிக்கப்பட்டதெல்லாம், கீழ்மட்ட அதிகாரிகள் சிலரும் கலவரத்தில் ஈடுபட்ட சாதாரணப் பொதுமக்களும்தான். இச்செயல்களைத் தங்கள் மீதான தொடர் தாக்குதல்களின் ஒன்றாகக் கருதிய சீக்கியர்களும் வன்முறையில் ஈடுபட்டனர். பஞ்சாப் முழுவதும் தீவிரவாதம் தழைத்தோங்கி அது யுத்த பூமியாக மாறியது. கலவரத்திற்குக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் என்று கூறப்பட்ட லலித் மக்கான் போன்றோர் சீக்கியத் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். கேபிஎஸ் கில் போன்ற ஒரு திறமையான அதிகாரி பொறுப்பேற்று பஞ்சாப் தீவிரவாதத்தை அழிக்கும் வரை இந்நிலை தொடர்ந்தது. இருப்பினும் 1984ல் நடைபெற்ற கலவரத்தை ஒரு இனப்படுகொலையாகவே சீக்கியர்கள் இன்று வரை கருதிவருகின்றனர். அதற்கு மூலகாரணமாகச் செயல்பட்டவர்கள் தகுந்த தண்டனை பெறவேண்டும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பு.

Leave a Reply