Posted on Leave a comment

கோயில் நிலத்தில் பேருந்து நிலையமா? – பி.ஆர். ஹரன்

நந்திவரம் நந்தீஸ்வரர் கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரிக்கு அருகே உள்ளது நந்திவரம் கிராமம். உண்மையில் பல்லவர் காலத்தில் நந்திவரம் என்கிற பெயரில் இருந்த பெரும்பகுதியே இன்று கூடுவாஞ்சேரியாக மாறியுள்ளது. இங்கே புகழ் பெற்ற சிவஸ்தலம் இருந்ததால் நந்திகேச்சுரம் என்று பெயர்பெற்று, பின்னர் நந்திவரம் என்று மருவியது. நந்தி வழிபட்ட சிவபெருமான் என்பதால் நந்தீஸ்வரர் என்று இறைவன் பெயர். இறைவி சௌந்தர்யநாயகி. மூன்றாம் நந்திவர்ம பல்லவன் கட்டிய கோயில் என்பதாலும் நந்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

நந்திவனம் என்று இவ்வூரின் பகுதியைத் தல புராணம் சொல்கிறது. காடுகள் மண்டிக்கிடந்த இப்பகுதி நந்திவனம் என்று வழங்கப்பட்டதாயும், பசுக்களை வளர்த்து வந்த ஒருவரின் பசு தினமும் மந்தையில் இருந்து விலகி வந்து அவ்வனத்தில் இருந்த ஒரு புற்றின் வாயிலில் பாலைச் சுரந்து சென்றதாகவும், அதைக் கண்ட பசுவின் சொந்தக்காரர் அந்தப் புற்றுக்குள் ஒரு சிவலிங்கத்தைக் கண்டதாகவும், அப்போது அச்சிவபெருமானுக்குக் கோயில் கட்ட ஏற்பாடு செய்யச் சொல்லி அசரீரி கேட்டதாகவும், அதன்படி அவர் மன்னனிடத்துச் சொல்ல, மன்னன் நந்திவர்மன் அங்கே இறைவனுக்குக் கோயில் எழுப்பியதாகவும் தல புராணம் கூறுகின்றது. பசுக்களின் சொந்தக்காரர் புற்றைக் கலைக்க ஆயுதம் உபயோகப்படுத்தியதால், உள்ளிருந்த லிங்கத்தின் மேல் பட்டுள்ள வெட்டுக் காயம் இன்றும் காணப்படுகின்றது.

நந்தி தீர்த்தம் எனும் திருக்குளம் இருக்கின்றது. ஸ்தல விருக்ஷம் வில்வம். நூறு வருடங்களுக்கு மேலாக பிரமாண்டமாக வளர்ந்துள்ள நாகலிங்க மரம் ஒன்றும் உள்ளது. நடராஜர் சபையும் உள்ளது. பைரவர், வீர்பத்ரர், சூரிய பகவானும் உள்ளனர். இத்தலம் அப்பரால் பாடப்பெற்ற வைப்புத்தலமாகும்.

கோயில் நிலத்தில் பேருந்து நிலையம் அமைக்கும் திட்டம்

இப்பேர்ப்பட்ட சிறப்பு வாய்ந்த கோயிலின் நிலத்தில் புறநகர் பேருந்து நிலையம் ஒன்றை அமைப்பதற்குத் தமிழக அரசு முடிவு செய்து அம்முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது ஆன்மிக ஆர்வலர்களுக்கும் கோயில் பக்தர்களுக்கும் வருத்தத்தையும் கோபத்தையும் ஒருங்கே ஏற்படுத்தியுள்ளது. அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலங்களை எடுத்துக்கொள்ளாமல், கோயில் நிலத்தைக் கையகப்படுத்துவதை அவர்கள் விரும்பவில்லை.

முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதியன்று தமிழக சட்டமன்றத்தில், சட்டமன்ற விதி எண் 110ன் கீழ், தமது அரசின் பல்வேறு திட்டங்களை அறிவித்தபோது, ரூபாய் 376 கோடி செலவில் காஞ்சிபுரம் மாவட்டம் வண்டலூரில் ஒரு புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, ‘நிலம் கையகப்படுத்தும் சட்டம் – 1894’ அடிப்படையில், வண்டலூரில் புறநகர் பேருந்து நிலையம் கட்டுவதற்கான நிர்வாக அனுமதியை, அரசாணை (GO Ms. No.184) 10.07.2013 அன்று வெளியிட்டது. நிர்வாக அனுமதி வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து புறநகர் பேருந்து நிலையம் கட்டுவதற்காக நிலம் கையகப்படுத்தும் முயற்சிகளை நில நிர்வாகத்துறை மேற்கொள்ளுமாறு கூறப்பட்டது.

 இந்நிலையில், ‘நிலம் கையகப்படுத்தல், மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியேற்றத்தில் இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமை சட்டம் – 2013’ 2014ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியில் அமலுக்கு வந்தது. ஆனால், அந்தச் சட்டத்திற்கான அரசு விதிகள் தயாரிக்கப்படாமல் இருந்த நிலையில், நிலம் கையகப்படுத்தல் இயலாத காரியம். எனவே, தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் பரிந்துரையை தமிழ்நாடு நிலம் கையகப்படுத்தும் சட்டம் – 1894, 17(2) பிரிவின்படி பரீட்சித்துச் செயல்படுத்த இயலாது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்குக் கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் நில நிர்வாகத்துறை ஆணையரின் கடிதம் (Letter No: S2/12637/2014) 2014ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதியன்று அனுப்பப்பட்டுள்ளது.

ஆகவே, நிலம் கையகப்படுத்த இயலாத சூழலில், சட்டமன்றத்தில் விதி எண் 110ன் கீழ் முதல்வர் அறிவித்தபடி, புறநகர் பேருந்து நிலையம் கட்டுவதற்கான மாற்று வழிகள் ஆலோசிக்கப்பட்டன. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள அருள்மிகு நந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 20.54 ஹெக்டேர் நிலமும், அதனையொட்டி இருக்கும் அரசுப்புறம்போக்கு நிலமும் தேர்வு செய்யப்பட்டு, அந்நிலங்களில் புறநகர் பேருந்து நிலையம் கட்டலாம் என்று செங்கல்பட்டு வருவாய்க் கோட்ட அலுவலர் பரிந்துரை செய்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, மேற்கண்ட குறிப்புகளைச் சுட்டி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைச் செயலர் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சி ஆணையத் துணைத்தலைவர் தர்மேந்திர பிரதாப் யாதவ் அவர்கள், ‘நந்திவரம் கிராமம் அருள்மிகு நந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 20.54 ஹெக்டேர் நிலம் தேசிய நெடுஞ்சாலை 45-ஐ ஒட்டி இருப்பதாலும், அது தமிழக அரசின் இந்து அறநிலையத்துறைக்குச் சொந்தமாக இருப்பதாலும், நிலம் கையகப்படுத்த வேண்டிய நடைமுறைகள் தேவையில்லை. தமிழகத்தின் தென்பகுதிக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தி வைப்பதற்கு மிகவும் பொருத்தமான இடமாகவும் உள்ளது. எனவே, அந்நிலத்தை எங்களுக்கு விற்பதன் மூலமோ அல்லது நீண்டகால குத்தகைக்கு அளிப்பதன் மூலமோ, தங்கள் துறைக்கும் பயனளிக்கும் விதமான வழிமுறைகளை ஆலோசித்து சம்மதம் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று அப்போதைய இந்து அறநிலையத்துறை ஆணையர் டாக்டர் வீர சண்முக மணிக்குக் கடிதம் (Letter No: NT1/331/2013) ஜனவரி 28, 2016 அன்று அனுப்பினார்.

 மேற்கண்ட கடிதத்திற்குப் பதிலாக, இந்து அறநிலையத்துறை ஆணையர், ‘குறிப்பிட்ட நிலத்திற்கான புல எண்கள், பட்டா, சிட்டா, அடங்கல் ஆகிய ஆவணங்கள் பெறப்பட்டுள்ளன. ஆனால், நிலத்திற்கு விலை நிர்ணயம் செய்வதற்கு மாவட்ட வருவாய் அலுவலருக்குச் சந்தை மதிப்பிற்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அது இதுநாள்வரை கிடைக்கப்பெறவில்லை. எனவே, மாவட்ட வருவாய் அலுவலரின் சந்தை மதிப்பினை வழங்கும் வகையில், மாவட்ட ஆட்சியருக்கு விவரம் தெரிவித்து சந்தை மதிப்பினை அரசுக்கு அறிக்கை அனுப்பும் வகையில் விரைவில் பெற்றளிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்’ என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைச் செயலருக்குப் பதில் கடிதம் (Letter No: 5828/2016) 27 ஜூலை 2016 அன்று அனுப்பியுள்ளார்.


அரசியல் சாஸன மற்றும் சட்ட மீறல்கள்

தமிழக அரசின் மேற்கண்ட முயற்சி அரசியல் சாஸன க்ஷரத்துக்களையும் இந்து அறநிலையத்துறை சட்டப் பிரிவுகளையும் மீறுவதாக இருக்கின்றது.

முதலாவதாக, ‘ஒரு கோயிலின் சொத்துக்கள் அனைத்தும் அந்தக் கோயிலின் தெய்வத்துக்குச் சொந்தமானது’ என்கிற உண்மையைப் பல மாநில உயர் நீதிமன்றங்களும் உச்ச நீதிமன்றமும் பல வழக்குகளில் உறுதி செய்துள்ளன. ஆகவே, நந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களும் சொத்துக்களும் அக்கோயிலின் தெய்வமான நந்தீஸ்வரருக்கு உரியவைதான்.

இரண்டாவதாக, நந்தீஸ்வரர் கோயிலில் அர்ச்சகர்களாகப் பணிபுரிபவர்கள் சிவாச்சாரியார் எனப்படும் மத உட்பிரிவினர். எப்படி சிதம்பரம் கோயில் தீக்ஷிதர்கள் மத உட்பிரிவினராகக் கருதப்பட்டு அவர்களுக்குச் சிறப்பு உரிமைகள் அளிக்கப்பட்டுள்ளதோ, அதேபோல சிவாச்சாரியார்களுக்கும் சிறப்பு உரிமைகள் உள்ளன. சிவச்சாரியார்கள் மத உட்பிரிவினர் என்பதை அனைத்து ஜாதி அர்ச்சகர்கள் சட்டத்திற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அரசியல் சாஸனத்தின் 26வது க்ஷரத்து, ‘மதம் மற்றும் அறம் சார்ந்த செயல்பாடுகளுக்கு நிறுவனங்களைத் தொடங்கி நடத்துவதற்கும், மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களை நிர்வாகம் செய்வதற்கும், அசையும், அசையாச் சொத்துக்களை வாங்குவதற்கும், சொந்தம் கொண்டாடுவதற்கும், அவ்வாறு வாங்கப்பட்ட சொத்துக்களை சட்டப்படி நிர்வகிப்பதற்கும் ஒவ்வொரு மத உட்பிரிவினருக்கும் (Religious denomination) உரிமையும் மதச்சுதந்திரமும் உண்டு’ என்பதை உறுதி செய்கிறது. எனவே, நந்தீஸ்வரர் கோயில் மத உட்பிரிவுக் கோயிலாகிறது. அது மட்டுமல்லாமல் அந்தக் கோயிலின் சொத்துக்கள் மீதான உரிமைகள் அடிப்படை உரிமைகளின் கீழ் வந்துவிடுகின்றன.

மூன்றாவதாக இந்து அறநிலையத்துறை (1959) சட்டத்தின் 34வது பிரிவு, ‘கோயில் நிலங்களைக் கையகப்படுத்தப்படுவது கூடிய மட்டும் தவிர்க்கப்பட வேண்டும். மற்ற வழிகளை முயற்சி செய்த பிறகு மாற்று நிலங்கள் கிடைக்காத, வேறு வழியில்லை என்கிற நிலையில், பொதுநன்மைக்கும் கோயிலுக்கும் பயன் ஏற்படும் என்று இருந்தால் மட்டுமே கோயில் நிலங்களைக் கையகப்படுத்தலாம்’ என்று தெளிவாகக் கூறுகிறது. 26.09.1984 தேதியிட்ட அரசு ஆணையும் (எண் 1630) இதை உறுதி செய்கிறது.

மேலும், அறநிலையத்துறைச் சட்டத்தின் 78ம், 79ம் பிரிவுகள்  கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்பது, வருமான பாக்கிகளை ஜப்தி செய்து எடுப்பது போன்ற கோயிலுக்குப் பயனளிக்கும் சிறப்பான அதிகாரங்களை அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அளிக்கின்றன. கோயிலுக்குப் பயனில்லாத வகையில் அதன் நிலங்களை விற்பதற்கு அல்ல.

அது மட்டுமல்லாமல், தமிழகத்தில் கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிப்பதைக் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக அரசு நிறுத்தி வைத்துள்ளது. கோயிலின் பயன் கருதிச் செயல்படும் அறங்காவலர்கள் இல்லாத நிலையில் வெறும் அரசு ஊழியர்களான நிர்வாக அலுவலர்கள் போன்றவர்கள் கோயில் சொத்துக்களைக் கையாளுவதும் அவற்றை விற்பனை செய்வதும் குற்றமாகும்.


ஆலய வழிபடுவோர் சங்கத்தின் நடவடிக்கை

அரசியல் சாஸனத்திற்கு விரோதமான இந்து அறநிலையத் துறையிடமிருந்து கோயில்களை மீட்க வேண்டும் என்கிற உன்னத நோக்கத்துடன் கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்து வருகிறது ஆலய வழிபடுவோர் சங்கம். அதன் தலைவரான டி.ஆர். ரமேஷ் அவர்கள் நந்தீஸ்வரர் கோயில் நிலத்தை புறநகர் பேருந்து நிலையம் கட்டுவதற்காக கையகப்படுத்தக் கூடாது என்று கூறி, அறநிலையத்துறை ஆணையருக்கும், முன்னாள் ஆணையருக்கும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறைச் செயலருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேற்கண்ட அரசியல் சாஸன க்ஷரத்து, இந்து அறநிலையத்துறைச் சட்டப் பிரிவுகள், அரசு ஆணைகள் ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி, மேற்கூறப்பட்ட அரசு அதிகாரிகள் நந்தீஸ்வரர் கோயில் நிலத்தைக் கையகப்படுத்தும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றும், மீறினால், நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

புறம்போக்கு நிலங்கள் நிறைய இருக்கும் அந்தப் புறநகர் பகுதியில், கோயிலுக்குச் சொந்தமான நிலத்தைக் கையகப்படுத்துவது தவறு என்பதை உணர்ந்து தமிழக அரசு அதற்கேற்றார்போல மாற்று வழிகளை யோசிக்க வேண்டும்.

Leave a Reply