இஸ்ரேல் என்றதும் ‘துப்பாக்கிகள், கொலை, காட்டுமிராண்டித்தனம், எதேச்சாரதிகாரம், ஆரஞ்சுகள்’ என்று உங்கள் நினைவிற்கு வந்தால் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. நமக்கெல்லாம் ‘போதிக்கப்பட்டிருக்கும்’ இஸ்ரேல் அதுவே. ஆனால் உண்மையில் ‘எது இஸ்ரேல்?’ என்று உணர்த்துவது ‘Start-up Nation’ என்னும் அந்த நாட்டைப் பற்றிய இந்த நூல்.
‘A mournful expanse’ என்று மார்க் ட்வெயின் வர்ணித்த பாலைவனப் பிரதேசம் இன்று இஸ்ரேல் என்ற பெயருடன் உலகமே திரும்பிப் பார்க்கும் வண்ணம் உருவான கதையை விவரிக்கிறது இந்த நூல்.
இயற்கையால் வஞ்சிக்கப்பட்டாலும் பகைவர்களால் சூழப்பட்டாலும் இஸ்ரேலியர்கள் என்ற மாபெரும் மனித ஆற்றலின் அளப்பரிய முயற்சியால் அந்த நாடு உயிர் பெற்று, துளிர்த்து, மிளிர்ந்து, தொழில்நுட்பத்திலும் வேளாண்மையிலும் உலகிற்கே வழிகாட்டுவதாய் விளங்கும் பிரமிக்கத்தக்க வளர்ச்சியின் பின்னுள்ள காரணிகளை விளக்குகிறது ‘Start-up Nation’ என்னும் இந்தப் புத்தகம்.
வான் வழியில் ஏவுகணை மழை பொழிந்து வந்தாலும் தரைக்கடியில் மென்பொருள் எழுதும் மக்களின் அபரிமிதமான ஆற்றலை நமது முகத்தில் அறைந்து தெரிவிக்கும் இந்த நூல், அப்படியான மக்களைத் தூண்டுவது எது என்பதையும் விரிவாக விளக்குகிறது. தாங்கள் யூதர்கள், தங்களுக்கு என்று இருக்கும் ஒரே இடம் இஸ்ரேல் என்னும் பாலைவனம். அதில் மனித ஆற்றலும், எண்ண ஒருங்கிணைவும் சேர்ந்தால் என்னவெல்லாம் செய்யமுடியும் என்பதை முரசறைந்து தெரிவிக்கும் இந்த நூல் அந்நாட்டின் வரலாறு, கலாசாரம், தொழில் முனைவோரின் ஊக்க சக்திகள் என்று பல தளங்களில் பயணிக்கிறது.
நூல் முழுவதும் பயணிக்கும் ஒற்றைச் சரடு – 8200 என்னும் எண். இஸ்ரேலிய ராணுவத்தின் உயர் தொழில்நுட்பப் பிரிவான 8200ல் சேரும் இளைஞர்கள் எவ்வாறு தங்கள் பணிக்காலத்திலும், பின்னர் துணை ராணுவப் பிரிவுகளிலும் இருக்கும்போது ஒருங்கிணைந்து செயல்பட்டு, பணியில் இருந்து வெளியேறியதும் தொழில் முனைவோராகிறார்கள் என்று தெளிவாக விளக்குகிறது இந்நூல். 8200ல் சேர்வது எத்துணை கடுமையானது என்பதையும், அதில் சேர மாணவர்கள் இளம் வயதிலேயே தயாராவது பற்றியும் விவரிக்கும் ஆசிரியர், பிற்பாடு 8200 என்பதே எத்துணை பெரிய உயரிய அங்கீகாரம் என்பதையும், அது எவ்வகையில் இஸ்ரேலைத் தொழில் முனைவோரின் பெருங்கூட்டமாக ஆக்க உதவியது என்பதையும் விவரிக்கிறார்.
இஸ்ரேலில் ஆள்பற்றாக்குறை இருந்தது பற்றியும், அதை நீக்கப் பாலையில் விவசாயம் செய்ய ‘கிப்புட்ஸ்’ என்னும் கம்யூன் வகையைலான கூட்டமைப்புக்களை உருவாக்கிய பென் கியூரியன் முதலான பெருந்தலைவர்கள் பற்றியும், சொட்டு நீர்ப்பாசன முறையை உலகில் முதலில் உருவாக்கி அதன் மூலம் வேளாண்மை செழிக்க இஸ்ரேலியர்கள் செய்த முயற்சிகள், ஒவ்வொரு இஸ்ரேலியனும் எப்படி நாட்டின் தூதனாகச் செயல்படுகிறான் என்பதையும் மிக நீண்டு விளக்கும் ஆசிரியர், இஸ்ரேலியரின் வீரத்தையும், சமயோசித அறிவுப் பயன்பாட்டையும் பல இடங்களில் விவரிக்கிறார்.
உலகில் மிக வறிய நாடாக இருந்த ஒரு பாலைப் பிரதேசம், உலகின் வளம் கொழிக்கும் நாடாக மாறியதை, இஸ்ரேலிய முறையைப் பின்பற்றினாலும் அந்நாட்டின் அளவிற்குச் சுய தொழில் முனைவோரை உருவாக்க முடியாத சிங்கப்பூர், தென் கொரியா முதலிய நாடுகளைப் பற்றியும் ஆதாரபூர்வமாக எடுத்துரைக்கும் ஆசிரியர், ஐக்கிய அரபு எமிரேட்டுகளும் இஸ்ரேலிய முறையைப் பின்பற்றத் துவங்கியதைக் குறிப்பிடுகிறார். ஆனால் அந்த அரபு நாடால் எவ்வாறு இஸ்ரேல் அளவிற்கு முன்னேற இயலாது என்று ஆசிரியர் ஆதாரபூர்வமாக விவரிப்பது இந்த நூலின் சிறப்பம்சங்களில் ஒன்று.
துவக்கத்தில் சோஷலிசப் பாதையில் பயணித்த இஸ்ரேல் சந்தித்த சவால்கள், அந்நாட்டின் பண வீக்கம் 400 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்தது ஏன் என்பதற்கான காரணங்கள், அந்நாடு அப்பாதையில் இருந்து விலகிப் பொருளியலில் பெற்ற ஏற்றம் மற்றும் அதற்கான காரணங்கள், இஸ்ரேலின் மக்கட்தொகைப் பெருக்கத்திற்கான காரணங்கள், அதன் மூலம் அந்த நாடு அடைந்த வளர்ச்சி என்று பல பார்வைகளை வழங்கும் இந்த நூல் தமிழகப் பள்ளிகளில் துணைப்பாடமாக வைக்கப்பட வேண்டிய அளவிற்கு மனவெழுச்சி ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
நூல் முழுவதும் வந்து செல்கிற ஒரு செய்தி: சுய சிந்தனை. ராணுவமாகட்டும், பள்ளிகளாகட்டும், நிறுவனங்களாகட்டும் – எங்கும் அதிகாரத்துக்குக் கீழ்ப்படிவது என்பதே இல்லாமல், அதிகாரக் கட்டமைப்பில் எந்த நிலையில் இருந்தாலும், நிறுவனம் தவறான முடிவுகளை எடுக்கிறது என்று தெரிந்தால் உடன் அதனைச் சரிப்படுத்தும் வேலையில் கடைநிலை ஊழியரும் கூட இறங்குகிறார்கள், அதிகாரிகளைக் கேள்வி கேட்கிறார்கள், நிறுவனத்தையும் நாட்டையும் முன்னேற்றுகிறார்கள்.
சுற்றியுள்ள பகை நாடுகளால் தங்களது வாழ்வே கேள்விக்குறியாக இருக்கும்போது, இஸ்ரேலியர் உலகப் பயணங்களை விடாமல் மேற்கொண்டு உலக நிகழ்வுகளையும், உலக நிகழ்வுகளால் இஸ்ரேலுக்கு ஏற்படவிருக்கும் பாதிப்புக்களையும் கற்றறிந்தவண்ணமே உள்ளனர். ஒவ்வொரு இஸ்ரேலியனும் தன்னை நாட்டின் தூதுவனாகவே உணர்கிறான். தனது நிறுவனத்திற்கான வியாபாரப் பயணங்களில் கூட இஸ்ரேலைப் பற்றியே பேசுகிறான். இத்தகைய தேசப்பற்று வேறெந்த நாட்டிலும் இருக்குமா என்பது ஐயமே.
இண்டல் நிறுவனம் தனது பெண்டியம் சில்லுகளை வடிவமத்த பின், ஏ.எம்.டி. முதலான புதிய நிறுவனங்களின் வருகையால் திகைத்து நின்றிருந்த காலத்தில், அந்நிறுவனத்தின் இஸ்ரேலியப் பொறியாளர்கள் சென்றினோ சில்லை வடிவமைத்து, அதன் மூலம் மடிக்கணினிகள் அதிக அளவு பெருக வழி வகுத்ததையும், அதன் மூலம் இண்டல் நிறுவனமே காப்பாற்றப்பட்டதையும் காட்டும் பகுதிகள் படிக்கும் ஒவ்வொருவருக்கும் மிகுந்த மனவெழுச்சியை அளிப்பன.
பேபால் (Paypal) நிறுவனத் தலைவரைச் சந்திக்கும் சிறுவன் கள்ளப்பணப் பரிமாற்றத்தைத் தடுக்கும் தனது புதிய மென்பொருளைக் காட்டுவதும், அதனை நம்பாத தலைவர் அவனிடம் கடுமையான சோதனை வைப்பதும், அதனை ஓரிரு நாட்களிலேயே அச்சிறுவன் தனது மென்பொருளின் துணை கொண்டு செய்து முடிப்பதும், பின்னர் அச்சிறுவனின் ஃபிராடு சையின்ஸஸ் (Fraud Sciences) நிறுவனத்தை பேபால் நிறுவனம் மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்குவதையும் படிக்கும் இடங்களில் ஒரு தேர்ந்த ஹாலிவுட் திரில்லர் திரைப்படம் காண்பது போன்ற உணர்வதைத் தவிர்க்க முடியாது.
நல்ல நண்பன் என்று நம்பியிருந்த பிரான்ஸ் நாடு மிக முக்கியமான போர் நேரத்தில் தன்னைக் கைவிட்ட நிகழ்வை மறக்காத இஸ்ரேல், ‘இனியும் யார் தயவையும் நம்பியிருத்தல் முடியாது’ என்று தானே போர் விமான உற்பத்தியில் இறங்கிய நிகழ்வு வரும் பகுதி படிப்பவர்களுக்குப் பெரும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. இஸ்ரேலிய அரசின் விமானத்துறை உருவான விதமும், அத்துறையில் தன்னை நிலை நாட்டிக் கொள்ள இஸ்ரேல் உலகச் சட்டத்தினுட்பட்டும், அவற்றை ஏமாற்றியும் செய்துள்ள அளப்பரிய செயல்கள், அந்நாட்டின் மீதும் அதன் ஆட்சியாளர்களின் மீதும் பெரும் மதிப்பை ஏற்படுத்துகின்றன.
இஸ்ரேலில் தொழில்முனைவோருக்குப் பண உதவி செய்ய அந்நாளில் யாரும் முன்வராத போது, அரசாங்கமே தற்போது எங்கும் பரவலாக உள்ள ‘Venture Capital’ என்று முறையை முதன்முதலாக மேற்கொண்டு உயர் தொழில்நுட்பத்தில் இஸ்ரேலில் பல புதிய சிறு நிறுவனங்கள் உருவாக வழி செய்தது என்பதை நூலின் வாயிலாக அறியும்போது 40 ஆண்டுகளுக்கும் முன்னமேயே அந்நாட்டரசின் தீர்க்கதரிசனத்தை எண்ணிப் பெரும் வியப்பே ஏற்படுகிறது.
முதல் வளைகுடாப்போரில் சதாம் ஹுசேன் இஸ்ரேல் மீது தினம் சில ஸ்கட் ஏவுகணைகளைப் பொழிந்தபோது இஸ்ரேலிய அரசு தொழில் நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்தது. வீட்டின் பதுங்கு அறைகளில் தங்கியிருக்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தியது. ஆயினும், அரசாணையைப் புறந்தள்ளி இண்டல் நிறுவன ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் தொழிற்சாலைக்கு வேளைக்கு வந்து கடமையாற்றிக்கொண்டிருப்பதையும், ஒரு நாள் இரவு ஏவுகணைத் தாக்குதல் முடிவுற்றவுடன் இண்டலின் தலைவர் இரவோடிரவாகத் தொழிற்சாலையில் ஏற்பட்டிருக்கும் சேதங்களைப் பார்க்க விரைவதையும், ஆனால் அவ்விடத்தில் ஊழியர்கள் இரவிலும் வேலை செய்துவந்ததைக் கண்டு கண்ணீர் மல்குவதையும் காணும் போது இதைவிட தேசபக்தி வேறென்ன இருக்க முடியும் என்கிற எண்ணமே ஏற்படுகிறது. போர் தொடர்ந்தபோது இண்டலின் ஊழியர்கள் அலுவலகத்திலேயே பால்வாடி அமைத்துச் சிறு பிள்ளைகளைப் பாதுகாத்தவாறே நிறுவனத்திற்கு உழைத்ததையும், ‘ஏன் இப்படி உழைக்கிறீர்கள்?’ என்கிற கேள்விக்கு ‘இஸ்ரேலில்தான் போரே தவிர, எமது வாடிக்கையாளர்களுக்குப் போர் இல்லை’ என்கிற தெளிவான பதிலுடன் பணியாற்றிய அதி தீவிர தேச பக்த இஸ்ரேலியர்களைக் கையெடுத்துக் கும்பிட வைக்கிறார் ஆசிரியர்.
புதிய குடியேறிகளை ஊக்குவிக்கும் நாடுகள் முன்னேற்றத்தையே கண்டுள்ளன. அமெரிக்கா, இஸ்ரேல் முதலிய நாடுகள் உதாரணம். இதன் காரணம் – புதிய குடியேறிகள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள அதிக துணிச்சலுடன் தீவிரமாக உழைப்பர், புதிய தொழில்கள் துவங்குவர். இஸ்ரேல் நாடே அப்படிப் புதியதாகத் துவங்கப்பட்ட நாடாகையால், புதிய குடியேறிகளைப் பெருமளவில் வரவேற்றது. அதன் பலன் – ரஷ்யாவிலிருந்து அணு விஞ்ஞானிகள், கணிதப் பேராசிரியர்கள், அமெரிக்காவிலிருந்து உயர் கல்வி கற்ற பொறியாளர்கள், எத்தியோப்பியா முதலிய நாடுகளில் இருந்தும் உழைக்க அஞ்சாத யூதப் பெருமக்கள் என்று பலதரப்பட்ட மக்கள் லட்சக்கணக்கில் குடியேறினர். அதன் மூலமும் இஸ்ரேல் தற்போதைய வியக்க வைக்கும் பெருவெற்றிகளைப் பெற்றது.
பெண்களுக்குக் கல்வி, சம உரிமை, சமூகத்தில் அவர்களுக்கான அவர்களுக்கான உயரிய இடம் என்று அளித்து, அவர்களையும் தனது புத்தாக்கப் பயணத்தில் ஈடுபடுத்தியது இஸ்ரேல். ஆனால், அருகில் உள்ள அரபு நாடுகளோ இதற்கு நேரெதிராக நடந்துகொண்டு தங்கள் நாட்டின் பெரும் வளமான பெண்கள் குலத்தைச் சரியான வகையில் பயன் படுத்தாததாலும், அவர்களுக்குச் சரியான கல்வி அளிக்காததாலும் அளப்பரிய எண்ணெய் வளங்கள் இருந்தாலும் எண்ணெய் தவிர்த்த பொருளியல் வளர்ச்சியோ, புத்தாக்கமோ இல்லாமல் பண்டைய காலத்திலேயே தேங்கி நிற்கின்றன. துபாய் போன்ற ஓரளவு முற்போக்கான நாடுகள் கூட தொழில்நுட்பத் துறையில் புத்தாக்கம் இல்லாமல் மந்த நிலையில் இருப்பதையும் ஆசிரியர் சுட்டுகிறார்.
உதவாத இயற்கை, சுற்றுப்புற நாடுகள் பகை, உலக நாடுகளில் யூதர்கள் பட்ட அவதி, அவர்களின் உழைப்பை உறிஞ்சி எடுத்து குருதி பிழிந்த ஏகாதிபத்திய, எதேச்சாதிகார நாடுகளின் வஞ்சகம் என்ற பல்முனைத் தாக்குதல்கள் தாண்டி, மக்களின் அயராத உழைப்பு, அரசுகளின் நேர்பட்ட பார்வை, தங்களின் மேன்மையை விட நாட்டின் மேன்மையே அத்தியாவசியம் என்கிற யூதர்களின் ஒன்றுபட்ட சிந்தனை போன்றவை ஒன்றிணைந்து இஸ்ரேலை சொர்க்கமாக மாற்றியிருப்பதை இந்த நூல் தெளிவாகக் காட்டுகிறது.
இஸ்ரேலின் அளப்பரிய சாதனைகளுக்கும், அசுர வளர்ச்சிக்கும் காரணிகள் இவையே:
1. கட்டாய ராணுவச் சேவை.
2. ராணுவத்தின் உயர் தொழில்நுட்பக் குறிக்கோள்.
3. ராணுவத் தொழில்நுட்பங்களை மக்கள் முன்னேற்றத்திற்குப் பயன் படுத்துவது.
4. அதிகார மட்டத்தைக் கண்டு அஞ்சாமல் சிந்திக்கும் மக்கள் மன நிலை.
5. லாபகரமான தேசப்பற்று (Profitable Patriotism ) என்னும் கருதுகோள்.
6. பெண்களின் சக்தியைப் புரிந்து சமூகத்துடன் ஒன்றிணைத்தது.
7. கல்விக்கு முதலிடம்.
8. யூதர்கள் யாராக இருந்தாலும் விசா இல்லாமல் சென்று தங்க என்று உலகில் ஒரு தேசம் தேவை என்ற பல நூற்றாண்டுகால எண்ண ஓட்டம்.
உடனடியாக இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் படவேண்டிய நூல் ‘Startup Nation’.