Posted on Leave a comment

நம்பிக்கைகள், நம்பிக்கைச் சிதைவுகள் மற்றும் நியாயப்படுத்தல்கள் – அனீஷ் கிருஷ்ணன் நாயர்

சுமார் அறுபது வருடங்களுக்கு முன் சமூக உளவியல் துறையில் ஒரு புதிய கோட்பாடு உருவானது. பொதுவாக சமூகவியல், உளவியல் போன்ற துறைகளில் கோட்பாடுகளுக்கு நீடித்த ஆயுள் இருப்பதில்லை. Leon Festinger என்னும் உளவியல் ஆய்வாளர் சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் Cognitive Dissonance என்னும் கருத்தை / கோட்பாட்டை முன் வைத்தார். அது இன்றளவும் மிகவும் சமூக உளவியல் துறையில் பலமான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. (அவரது மற்றொரு கோட்பாடு Social Comparison Theory.) சமூகவியலும் உளவியலும் இணையும் புள்ளியில்தான் சமூக உளவியல் என்னும் துறை உருப்பெறுகிறது. தனி நபருடைய உளவியல் என்றல்லாமல் ஒரு ஒட்டுமொத்த சமுதாயத்தின் கூட்டு முடிவுகளின் உளவியலை, கூட்டு முடிவுகளின் இயங்குதலை ஆராய முயல்கிறது. இத்துறையில் இருக்கும் குறிப்பிடத்தக்க செல்வாக்கான செலுத்தி வரும் கோட்பாடுதான் Cognitive dissonance. Cognitive dissonance என்ற பதத்தை நேரடியாக மொழிபெயர்ப்பது சற்று சிரமம்தான். ஒரு நபரின் நம்பிக்கைகளுக்கும் அவரது செயல்களுக்கும் இடையே எப்போதும் ஒருமை இருக்காது. ஒரு நபர் தான் காத்து வரும் நம்பிக்கைகளுக்கு ஏற்ப எப்போதும் செயல்பட முடியாது. ஒருவர் கட்டிக்காத்து வரும் லட்சியத்திற்கும் அவரது செயல்பாடுகளுக்கும் இடையே வரும் ஒத்திசைவு இன்மையையே cognitive dissonance என்று சொல்வோம். அனைத்து நபர்களுக்கும் தங்கள் எண்ணப்படி நடக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். அப்படி இல்லாவிட்டால் ஒத்திசைவு இன்மை ஏற்படும். இந்த ஒத்திசைவு இன்மையைச் சரிசெய்ய அனைவரும் முயற்சி செய்வார்கள். அதற்குப் பல வழிகளையும் கையாள்வார்கள்.

ஒரு உதாரணத்துடன் விளக்க முயல்கிறேன். தான தர்மம் செய்வது நல்ல விஷயம் என்று எண்ணுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். யார் உதவி கேட்டாலும் அவருக்குத் தவறாமல் உதவி செய்யவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர் என்று வைத்துக்கொள்வோம். ஒருமுறை ஒருவர் உங்களிடம் ஆதரவற்றோர் இல்லத்திற்காக ஆயிரம் ரூபாய் கேட்கிறார். ஆனால் ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களால் அவருக்குப் பணம் கொடுக்கமுடியவில்லை. இந்தச் சூழலால் உங்கள் நம்பிக்கைக்கும் உங்கள் செயலுக்கும் இடையே ஒரு முரண் ஏற்படும். அந்த dissonanceஐ அதாவது ஒத்திசைவு இன்மையைச் சரி செய்ய முயல்வீர்கள். குறைந்த அதன் வீரியத்தைக் குறைக்க முயல்வீர்கள். இதற்கு மூன்று முக்கிய வழிகள் உள்ளன. ஒன்று நம் செயல்பாட்டினை மாற்றலாம். அதாவது இந்த ஒருமுறை போகட்டும், அடுத்த முறையில் இருந்து தவறாமல் பணம் கொடுப்பேன் என்று முடிவு எடுப்பது. இரண்டாவது, நமது மனநிலையை லேசாக மாற்ற முயலலாம். மூன்றாவதாக அது எத்தனை முக்கியமான விஷயம் அல்ல என்று நமக்கு நாமே சமாதானம் கூறலாம். உ.ம். அப்போது உங்களிடம் பணம் ஏதும் இல்லை அல்லது உதவி கேட்டவன் மேல் நம்பிக்கை இல்லை என்பவைபோல. இத்தகைய சமாதானங்கள் ஒத்திசைவின்மையைக் குறைக்கும் ஓரளவு மன ஆறுதலையும் தரும்.

இதனை இரண்டு வரலாற்றுச் சம்பவங்கள் வாயிலாக இன்னும் தெளிவாக விளக்கலாம். இன்று Seventh Day Adventist என்று தம்மை அழைத்துக்கொள்ளும் கிறித்தவ மதப்பிரிவை உருவாக்கியவர்களில் அல்லது உருவாகக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் வில்லியம் மில்லர் (William Miller). பழைய ஏற்பாட்டில் உள்ள தானியேல் 8:14 வரியை அடிப்படையாக வைத்து ஒரு தீர்க்க தரிசனத்தைக் கூறினார். அதனை தீர்க்கதரிசனம் என்றுகூட கூறக்கூடாது. ஒரு புதிரின் விடையைக் கூறினார் என்று கூறலாம். 22.10.1844 அன்று இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகை இருக்கும் என்றும் 1840களில் கூறிவந்தார். இதனை நம்பிய வேறு பல கிறிஸ்தவ பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் மில்லருடன் சேர்ந்து அந்த நாளுக்காகக் காத்திருந்தனர். கிறிஸ்தவ இறையியலின் அடிப்படைகள் அறிந்த அனைவருக்குமே தெரிந்த விஷயம் என்னவென்றால் இயேசு கிறிஸ்துவின் வருகை என்பது இறுதி தீர்ப்பு நாளைக் குறிக்கும் என்பது. அதாவது இரண்டாம் வருகையோடு உலகம் அழந்துவிடும். நான் 22.10.1844 அன்று இயேசு கிறிஸ்து மீண்டும் வரவில்லை என்பதைச் சொன்னது பலிக்காமல் போய்விட்டதால் அவரது மதக்குழு அப்படியே கலைந்திருக்கும் என்றுதானே எண்ணுகிறீர்கள்? அதுதான் இல்லை. பலர் அவரைத் திட்டித் தீர்த்துவிட்டு வெளியேறினாலும் உள்வட்ட நம்பிக்கையாளர்கள் தானியேல் 8:14 விடத் தயாராக இல்லை. அந்த வரிக்கான விளக்கம் சரிதான் என்றும், கிறிஸ்து அந்த நாளில் பூமிக்கு வருவார் என்று கணித்தது மட்டுமே தவறு என்றும் கிறிஸ்து சொர்க்கத்தின் ஒரு பகுதியில் இருந்து மேற்பட்ட மற்றொரு பகுதிக்குச் சென்ற நாள் அதுவென்றும் விளக்கங்களைக் கொடுக்கத் தலைப்பட்டனர். இது மட்டும் அல்லாமல் அந்த மாபெரும் வீழ்ச்சியில் இருந்து Seventh Day Adventists என்னும் மிகப்பெரிய கிறிஸ்தவ மத நிறுவனத்தையும் கட்டி எழுப்பினார். குறிப்பிட்ட தினத்தன்று தமது தலைவர் சொன்னபடி நடக்கவில்லை என்பதால் ஏற்பட்ட cognitive dissonanceஐ சமாளிக்கத்தான் அத்தனை தத்துவ விளக்கமும் என உளவியலாளர் கருதுவார்.

Cognitive Dissonance கோட்பாட்டை முன்வைத்த Festinger ஒரு ஆய்வை மேற்கொண்டு தமது வாதத்தை நிரூபித்துள்ளார். 1950களில் ‘Seekers’ என்ற பெயரில் உள்ள UFO + மத குறுங்குழுவிற்குள் ஊடுருவி ஆராய்கிறார். Dorothy Martin என்ற சிகாகோ பெண்மணி இந்தக் குழுவில் மீடியமாகச் செயல்படுகிறார். இவருக்கு க்ளாரியன் என்ற கிரகத்தில் இருந்து செய்திகள் வருவதாகக் கூறுகிறார். அச்செய்திகள் 21-2-1954 அன்று இரவு உலகம் அழிந்துவிடும் என்றும் Seekers குழுவினரை மட்டும் Clarion கிரகத்தில் இருந்து ஒரு விண்கலம் வந்து காப்பாற்றும் என்றும் கூறப்படுகிறது.

Seekers இச்செய்தியைக் கொண்டு பிரபலமடைய முயலவில்லை. மாறாக அவர்கள் முடிந்தமட்டும் தங்கள் இடையேயே இச்செய்தியை வைத்துக் கொள்கிறார்கள். Festinger ஆட்கள் மிகுந்த சிரமத்தோடுதான் அக்குழுவில் ஊடுருவுகின்றனர். குழு உறுப்பினர்கள் தங்கள் சொத்துக்களை எல்லாம் விற்றுவிட்டு 20.12.1954 அன்று ஒரு இடத்தில் கூடி விண்கலத்திற்காகக் காத்திருக்கின்றனர்.

21ம் தேதி பிறந்த பிறகும் எந்த விண்கலமும் வரவில்லை. உடனடியாக டாரதிமார்டின் ஒரு தற்காலிக விளக்கத்தைக் கூறுகிறார். உறுப்பினர்களிடம் உலோகப் பொருட்கள் இருந்ததுதான் விண்கலம் வராமைக்குக் காரணம் என்கிறார். தங்களுடைய வைக்கப்பட்ட பற்கள் உட்பட அனைத்து உலோகப் பொருட்களையும் உறுப்பினர்கள் வெளியே ஏறிகின்றனர். 21.12.1954 அன்று உலகமும் அழியவில்லை விண்கலமும் வரவில்லை. தங்கள் நம்பிக்கைக்கும் நடைமுறைக்கும் இடையே உள்ள ஒத்திசைவின்மையை (Cognitive Dissonance) அவர்களால் தாங்க முடியவில்லை. ஏதாவது தீர்வு வந்தாக வேண்டும். சிறிது நேரத்தில் மீடியம் டாரதி ஒரு புதுச் செய்தி கிடைத்திருப்பதாகக் கூறுகிறார். இவர்களுடைய பிரார்த்தனையையும் நம்பிக்கையையும் பார்த்து மகிழ்ந்த கடவுள் பூமிக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க முடிவு செய்துவிட்டார் என்றும் அதனால்தான் உலகம் அழியவில்லை என்றும் கூறுகிறார். ஒத்திசைவின்மை ஓரளவு சமன்படுத்தப்படுகிறது. உறுப்பினர்களும் நிம்மதி அடைகின்றனர். உடனடியாக இந்த விளக்கத்தை அனைவருக்கும் சொல்லவும் முயல்கின்றனர். அந்தக் குழுவும் 1991கள் வரை துடிப்பாகவே இயங்கி வந்தது. இந்த விவகாரத்தை ‘When Prophecy Fails: A Social and Psychological Study of a Modern Group That Predicted the Destruction of the World’ என்னும் நூலில் விளக்கியுள்ளர்.

உலகு எங்கிலும் மக்கள் நம்பிக்கை உடையும்போது, அவர்கள் நம்பிய அறங்களுக்கு மாறாகச் செயல்பட வேண்டி வரும்போது ‘Cognitive Dissonance’ஐ எதிர்கொள்கின்றனர். இந்த ஒத்திசைவின்மையை எப்படிச் சரிசெய்வது என்பதில் அதிக ஆற்றலைப் பயன்படுத்துகின்றனர்.

Cultural Studies துறையிலும் இலக்கியத்திலும் இதனைப் பொருத்திப் பார்க்கலாம். பாலகுமாரனின் மெர்க்குரிப் பூக்களில் ஒரு இடம் வரும். சியாமளி தனது கணவனையும் குழந்தையையும் விட்டு காதலனுடன் ஓடிப்போகத் தீர்மானம் செய்வாள். ஓடிப்போகத் திட்டமிட்ட அன்று காலையில் சாமர்த்தியமாகக் கணவனை குழந்தையையும் விலங்குக் காட்சி சாலைக்கு அனுப்பி வைப்பாள். கணவனை விட்டு வருவதில் பிரச்சனை இல்லை. ஆனால் குழந்தையை, அதுவும் பெண்குழந்தையை விட்டு வருவது அப்படி அல்லவே. ஓடிப்போனவள் மகள் என்ற பட்டத்தை அந்தக் குழந்தை வாழ்நாள் முழுவதும் சுமக்க வேண்டி இருக்கும், சியாமளிக்குத் தாய்மை என்ற கருதுகோளில் இருந்து தான் விலகத் தீர்மானித்ததால் Cognitive Dissonance வருகிறது. போதாக்குறைக்குக் காதலனும் அதனைக் குறித்துக் கேட்கிறான். சியாமளி நூதனமான முறையில் இந்த ஒத்திசைவு இன்மையைச் சரி செய்ய முயல்கிறாள். குழந்தை தன் குடும்ப ஜாடை இல்லை என்கின்றாள். குழந்தைகளுக்கு க்ரூர குணம் என்கிறாள். இதெல்லாம் Dissonanceஐக் குறைக்க அவள் எடுக்கும் முயற்சிகளே.

ஒரு வகையில் பார்த்தால் ஜெயமோகனின் ‘பின் தொடரும் நிழலின் குரல்’ நாவலே இந்த cognitive dissonance ஐ அடிப்படையாகக் கொண்டதுதான். இரண்டு இடதுசாரிகள் தாங்கள் நம்பும் சித்தாந்தம் பிறழ்கிறது என்னும்போது dissonanceம் அதனை எதிர்கொள்ளும் விதமும்தான் இந்த நாவல் என்று கூறலாம்.

சுராவின் வார்த்தைகளில் கூறுவது எனில் பலரும் மனிதனுக்குச் சொறிந்து கொடுக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர். குறிப்பாக ஊடகங்கள் மக்கள் தங்களுக்கு ஏற்படும் cognitive dissonance ஐக் குறைப்பதற்கான வழிமுறைகளைச் சுட்டிக்காட்ட திரைப்படங்கள், குறும்படங்கள் முயல்கின்றன. சமீபத்திய சர்ச்சைக்குரிய படமான ‘லஷ்மி’யை இவ்விதத்தில் பார்க்கலாம். கற்பு என்பது வள்ளுவர் காலம், சிலப்பதிகார காலம் தொட்டு மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படும் ஒரு அறம். திருமணத்திற்கு வெளியே உள்ள உறவு என்பது தவறானது என்பது நமது மனதில் ஆழப்பதிந்த விஷயம். எனவேதான் திருமண பந்தத்திற்கு வெளியே உள்ள உறவைக் குறித்த குற்றவுணர்ச்சி நம்மவர்களிடையே உண்டு. அதுதான் நம் பண்பாட்டையும் காக்கிறது. திருமணத்திற்கு வெளியே உள்ள உறவைக் குறித்து கனவு காண்கின்றவர்கள், அதில் ஈடுபடுகிறவர்களுக்குக் கடுமையான cognitive dissonance ஏற்படுகிறது. இதற்கு ஆறுதல் அளிக்கும் முயற்சியைத்தான் மேற்படி குறும்படம் செய்கிறது. அதாவது விவாகரத்து வேண்டாம் பொருந்தாத திருமணம் உறவு என்றபோது எப்போதாவது வேலிதாண்டுவதில் தவறில்லை என சொல்ல முயல்கிறது. Dissonance ஐ குறைப்பதற்கான வாதங்களைத் தருகிறது. அதுதான் அப்படத்தின் பிரபலத்தன்மைக்குக் காரணம்.

எல்லா விதமான அறமீறல்களுக்கும் நியாயம் கற்பிக்க முயல்வது மனித இயல்பே. இதில் தங்களைத் தாங்களே முட்டாள் ஆக்கிக் கொள்வதும் ஒரு பகுதி. அதற்கான உளவியல் ரீதியான அடிப்படை cognitive dissonanceல் உள்ளது. என்ன, இனி வரும் காலத்தில் ஒழுங்காக இருப்பவர்கள் அனைவரும் அசமந்தங்கள் என எதிர்தரப்பினர் கூறாமல் இருந்தால் சரிதான்.

பின் குறிப்பு: இந்தக் கட்டுரையின் இறுதி வடிவைத் தயாரித்துக்கொண்டு இருக்கும்போது குஜராத் பொதுத் தேர்தல் முடிவுகள் வந்துவிட்டன. ஒரு கட்சியின் வெற்றியைப் பார்த்து எதிர் தரப்பினர் வாக்களிக்கும் இயந்திரத்தை எந்த வித முகாந்திரமும் இல்லாமல் குறை கூறுகின்றனர். இதுவும் cognitive dissonanceதானோ?

Leave a Reply