ஏடுகள் தேடி அலைந்த அவரது அலைச்சலும், அதனை நூலாகப் பதிப்பிப்பதற்காக அவர் உழைத்த உழைப்பும் உடனே நினைவிற்கு வந்தது. கூடவே நூல்களின் அச்சாக்கம் என்பது எந்த அளவு இன்றைக்கு வளர்ந்திருக்கிறது என்ற பிரமிப்பும் ஏற்பட்டது. ஒவ்வொரு நூல் உருவாக்கத்திற்கும் அவர் உழைத்த உழைப்பு சாதாரணமானதில்லை. அதிலும் புறநானூறைத் தொகுப்பதற்காக அவர் பட்ட கஷ்டங்கள், ஒப்பிட்டுப் பார்த்த பிரதிகள், எது சரி என்று தீர்மானித்து முடிவு செய்தது என்பதெல்லாம் சாதாரணமானவையல்ல. அதுகுறித்தெல்லாம் அவர் தனது நூல்களில் விரிவாகவே எழுதியிருக்கிறார்.
ஒரு சான்றைப் பார்ப்போம். புறநானூற்றின் 299வது பாடல் இது.
“பருத்தி வேலிச் சீறூர் மன்னன்
உழுத்து அதர் உண்ட ஓய் நடைப் புரவி
கடல் மண்டு தோணியின் படை முகம் போழ
நெய்மிதி அருந்திய கொய் சுவல் எருத்தின்,
தண்ணடை மன்னர் தாருடைப் புரவி,
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலம் தொடா மகளிரின் இகந்து நின்றவ்வே’
பொன்முடி எழுதியது இந்தப் பாடல். பாடலுக்கு விளக்கமெல்லாம் வேண்டாம். “கலம் தொடா மகளிர்’ யார் என்று ஆராய்ந்தால் அது வேறு ஆராய்ச்சியில் கொண்டுபோய் விட்டுவிடும். ஆகவே, இந்தப் பாடலை மட்டும் பார்ப்போம். இந்தப் பாடலுக்காக உ.வே.சா. பயன்படுத்திய ஓலைச்சுவடிகளில் இரண்டு கிடைத்தன.
அதைப் பாடலுடன் ஒப்புநோக்கிப் பார்க்கும்போது பெரும் வியப்பு ஏற்பட்டது. காரணம், சுவடிகளில் பல வரிகள் விடுபட்டுள்ளன. இதை மட்டுமில்லாமல் சுமார் பத்திற்கும் மேற்பட்ட பல ஏட்டுப் பிரதிகளை ஒப்புநோக்கி, பிரதி பேதம் பார்த்துத்தான் நூலை அச்சிட்டிருக்கிறார் உ.வே.சா. ஒரு பாடலுக்கே இத்தனை கஷ்டம் என்றால் ஒவ்வொரு நூலுக்கும் எந்த அளவுக்குக் கஷ்டப்பட்டிருப்பார் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
தன்னுடைய புறநானூற்று நூல் பதிப்பு பற்றி உ.வே.சா., “ஒரு நூலைத் திருத்தமாகப் பதிப்பிக்க வேண்டுமென்றால் பல வகையான கருவிகளை முதலில் அமைத்துக் கொள்ளவேண்டும். ஏட்டுச் சுவடிகள் கிடைப்பது மட்டும் போதாது. ஏட்டில் இருப்பது அவ்வளவும் திருத்தமாக இராது. பல காலமாகப் பிழையாகவே வழங்கி வந்த பாடங்களை அவற்றிற் பார்க்கலாம்; அவற்றுள் இதுதான் சுத்த பாடம் என்று தெரிந்து கொள்வதற்குப் படும் சிரமந்தான் மிகவும் அதிகம். நூலில் உள்ள கருத்துகளுக்கும் சொற்களுக்கும் அகராதி எழுதி வைத்துக்கொள்வது மட்டும் போதாது. புறநானூற்றில் பல புலவர்கள் பாடியிருக்கிறார்கள். அப்புலவர்களுடைய பாடல்கள் வேறு நூல்களிலும் இருக்கின்றன. அந்தப் பாடல்களைப் பார்த்தால் அப்புலவர் வாக்கின் போக்கையும், அவருக்கு விருப்பமான கருத்துகளையும், நடையையும் உணர்ந்து கொள்ளலாம். அந்த ஆராய்ச்சியிலிருந்து சில திருத்தங்கள் கிடைக்கும். ஆகவே சங்கப் புலவர்கள் பெயர்களை வரிசையாக எழுதிக்கொண்டு அவர்கள் இயற்றிய பாடல்கள் எந்த எந்த நூல்களிலுள்ளனவென்று தெரிந்து தொகுத்துப் படித்தேன். புறநானூற்றை ஆராய்ச்சி செய்வதற்குச் சங்கநூல் முழுவதையும் ஆராய்ச்சி செய்வது அவசியமாயிற்று. இதனால் எனக்குப் பன் மடங்கு இன்பம் உண்டானாலும் சிரமமும் பன்மடங்காயிற்று’ என்கிறார். (என் சரித்திரம், உ.வே.சா.)
“வேணு வனலிங்க விலாசச் சிறப்பு’ (1878) என்பதுதான் உ.வே.சா. பதிப்பித்த முதல் நூல். இரண்டாவது “திருக்குடந்தைப் புராணம்’ (1883) அதன் பிறகு அவர் பதிப்பித்த பல நூல்களைப் பற்றி எல்லாருக்கும் தெரியும். நூற்றுக்கு மேற்பட்ட இலக்கிய, புராண நூல்களை அவர் பதிப்பித்திருக்கிறார். அவர் மட்டுமல்லாமல் அக்காலத்தில் சி.வை. தாமோதரம் பிள்ளை, நா. கதிரைவேற்பிள்ளை உள்ளிட்ட பலரும் நூல்களை அச்சிட்டு வெளியிட்டு வந்தனர். இதில் ஒருவருக்கொருவர் கருத்து வேற்றுமைக்கும், சண்டை, சச்சரவுகளுக்கும் குறைவே இல்லை.
ஒரு சமயம் உ.வே.சா.வின் “சீவகசிந்தாமணி’ நூல் பதிப்பிற்காக புலவர் ஒருவர் சண்டைக்கு வந்தார். சீவகசிந்தாமணியை முதன் முதலில் பதிப்பித்தது (1883ல்) புதுக்கோட்டை அரங்கசாமிப் பிள்ளை என்பவர்தான் என்றும், அதன் பிறகே 1887ல் ஐயரின் பதிப்பு முழுமையான நூலாக வெளிவந்தது என்றும் பூ. முருகேசபிள்ளை என்பவர் விளம்பரம் செய்தார். அதுமட்டுமல்லாமல், உ.வே.சாவின் பதிப்பில் பல பிழைகள் உள்ளன என்றும் அறிவித்து “சீவகசிந்தாமணி வழுப்பிரகணம்’ என்ற நூல் ஒன்றையும் வெளியிட்டார். உ.வே.சா.வையும் வலிந்து வாதுக்கழைத்தார்.
நல்லவேளையாக, உ.வே.சா. அதனை ஏற்று வாதுக்குச் செல்லவில்லை. அப்படி அவர் சென்றிருந்தால் நமக்கு இன்று நூற்றுக்கணக்கான பழந்தமிழ் நூல்கள் கிடைத்திருக்காது. உ.வே.சா.வின் நேரம் முழுவதுமே இதுமாதிரியான சச்சரவுகளை எதிர்கொள்வதிலேயே கழிந்திருக்கும்!
இலக்கிய, புராணச் சுவடிகள்தான் என்றில்லை. தேவார, திருவாசகச் சுவடிகள், தத்துவ விளக்கங்கள், ஜோதிடம், மாந்த்ரீகம், மருத்துவம் பற்றிய சுவடிகள், சமயம் சார்ந்த சுவடிகள், நாட்டுப்புறவியல் சார்ந்த சுவடிகள் என்று பல தலைப்புகளில் ஓலைச்சுவடிகள் இருக்கின்றன. உ.வே.சா. இலக்கியத்தில் மட்டுமே அதிக கவனம் செலுத்தியதால் பிற சுவடிகள் அதிகம் வரவேற்புப் பெறவில்லை. அவற்றில் பல இன்னமும் ஆதினங்களிடமும், ஆசியச் சுவடியியல் நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் ஆய்வு மையம் (இங்குள்ள சுவடிகள் தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்கு மாற்றப்பட்டுள்ளன), தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம், உ.வே.சா. நூலகம், கேரள பல்கலைக்கழக கீழ்த்திசைச் சுவடிகள் நிறுவனம், தமிழ்ப்பல்கலைக்கழகம், சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் போன்ற இடங்களில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் மாந்த்ரீகச் சுவடிகள் மிகுந்த சுவாரஸ்யமானவை. “சாலத்திரட்டு’, “சௌமிய சாகரம்’, “குறி சொல்ல எழுதிக் கட்ட மந்திரம்’, “குறளி வித்தை’, “குறளிச் சக்கரம்’, “குரல் கட்ட மந்திரம்’ என இவற்றின் பெயர்களே வித்தியாசமாக உள்ளன. சான்றாக, “குடிசை திவால்’ என்ற சுவடியைப் பார்க்கலாம். இது ஒரு மாந்த்ரீகச் சுவடி. “குடிசை திவால்’ என்ற பெயரிலிருந்தே இது பிற்காலத்து ஓலைச்சுவடி என்பதைத் தெரிந்து கொள்ளலாம் (திவால் – தமிழ்ச் சொல் அல்ல).
இந்தச் சுவடி என்ன சொல்கிறது?
அடிக்கடி கிராமப்புறங்களில் நாம் கேள்விப்படும் செய்தி. திடீர் திடீரெனக் குடிசைகள் தீப்பிடித்து எரிகின்றன; ஆடைகள் எல்லாம் திடீர் திடீரெனத் தீப்பிடிக்கின்றன என்பது. இதற்குக் காரணம் என்ன? தீயவர்களின் சதியா, ஏவல், பில்லி, சூனியமா, மர்ம, மாந்த்ரீகமா, சாமியார்களின் சாபமா, தெய்வத்தின் கோபமா? அல்லது யாரேனும் வெண் பாஸ்பரஸைக் கொண்டு புத்திசாலித்தனமாக சதி செய்கிறார்களா? தெரியாது. காரணமும் புரியாது. ஆனால் அவ்வப்போது செய்தித்தாள்களில் இது போன்ற நிகழ்வுகள் பற்றிய செய்திகள் வரும். பின்னர் அடங்கிவிடும்.
இந்த மர்மத் தீப்பிடித்தல் நிகழ்விற்கும் மேலே சொன்ன “குடிசை திவால்’ சுவடிக்கும் தொடர்பிருக்கிறது. அந்தச் சுவடியிலிருந்து ஒரு சிறு பகுதி:
“ஒரு மூஞ்சூரைப் பிடித்து, அதன் வயிற்றைக் கிழித்து, மசானச் சாம்பலை அதிலே திணித்து, அதற்கு மேலே இளந்தீட்டுப் பெண்ணின் சீலையைத் தூக்கிச் சுத்தி, மயானத்திலே, கன்னிப்பெண் பிணம் வேகுறபோது அதிலே வைத்து, வெந்து நீறான அந்தச் சாம்பலை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு, தனக்கு வேண்டாதவர்கள் வீட்டுப் பிரப்பிலே தூவினால் அந்த வீடு திவால்.’
“அந்த நீறிலே கொஞ்சம்போல அந்த வீட்டுக் கூரையிலே ஊதிப் போட்டு, “சாம்பவி, உமாதேவி, நசி மசி மசி நசி வாமா, தூமா ஓடிவா திவால்’ என 1008 தரம் ஜெபித்து உருவேற்ற அந்த வீடு திவால்.’
– இப்படி, தனக்குப் பிடிக்காதவர்களின் வீட்டைத் திவாலாக்க பல வழிகளைச் சொல்கிறது ஒரு சுவடி. இதெல்லாம் சாத்தியமா, எப்படி இந்த நிகழ்வுகள் ஏற்படுகின்றன, அது ஏன் ஏழைகள் வசிக்கும் குடிசை போன்றவை மட்டுமே எரிகின்றன. மாடி, ஓட்டு வீடுகள், பணக்காரர்கள் வசிக்கும் இல்லங்கள் எரிவதில்லையே ஏன் என்பது போன்ற கேள்விகள் நமக்கு எழத்தான் செய்கின்றன. ஆனால் விடைதான் கிடைக்கவில்லை. அதேசமயம் இந்தச் சுவடி சொல்வது அனைத்தும் உண்மை என்றும் ஏற்பதற்கில்லை. கற்பனையாகவும் இருக்கலாம். ஆனால், அக்காலத்தில் எதிரிகளை அழிக்க இதுபோன்ற பல வழிகளை முயற்சித்திருக்கின்றனர்; கையாண்டிருக்கின்றனர் என்பது மட்டும் பல மாந்த்ரீகச் சுவடிகள் மூலம் தெரிய வருகிறது. இவை தவிர்த்து பெண் வசியம், ஆண் வசியம், தேவதா வசியம், ஸ்தம்பனம், மாரணம், வெற்றி என பலவற்றிற்கும் பல வித சக்கரங்களையும், மந்திரங்களையும், குறியீடுகளையும் ஓலைச்சுவடிகளில் குறித்துள்ளனர்.
ஜோதிடம் பற்றிய சுவடிகள் “கேரள மணிகண்ட சாத்திரம்’, “குரு நாடி சாத்திரம்’, “அகத்தியர் நாடி சாஸ்திரம்’, “ஆரூடக்கையேடு’, “கிரகச் சக்கர ஏடு’, “ஞானம் – 32′, “சித்தராரூடம்’, “ஆதித்தன் பலன்’ என வித விதமான தலைப்புகளில் உள்ளன. மருத்துவச் சுவடிகள் “அகத்தியர் ருண வாகடம்’, “அகத்தியர் செந்தூரம்’, “அகத்தியர் நூறு’, “அகத்தியர் கற்பம்’, “அகத்தியர் உட்கரு சாத்திரம்’, “அகத்தியர் சவுக்காரத் திறவுகோல்’ என பல தலைப்புகளில் உள்ளன. கேரள மணிகண்ட சாத்திரத்தில் அரிஷ்ட காண்டம், சகோதர காண்டம், பித்ரு காண்டம், அற்பாயுசு காண்டம், யோக காண்டம், மாதுரு காண்டம் என மொத்தம் 20 காண்டங்கள் உள்ளன. இத்தகைய சுவடிகள் பற்றிய விளக்கத்தை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் போன்றவை நூலாகத் தொகுத்து வெளியிட்டுள்ளன.
இவ்வகை ஓலைச்சுவடிகள் பல வித அளவுகளில் இருக்கின்றன. ஒரு சில அரை அடி நீளத்தில் இருக்கின்றன. உள்ளங்கை அளவே அகலமிருக்கும் குறுஞ்சுவடிகளும் உள்ளன. சில இடங்களில் ஒரு முழ நீள அளவிற்கு மிக நீளமான ஓலைச்சுவடிகளும் காணக் கிடைக்கின்றன. சிலவற்றில் படங்கள், விளக்கக்குறிப்புகள் எனத் தற்பொழுது காணப்படும் நூல்களைப் போன்று பல்வேறு தகவல்களும் காணப்படுகின்றன. சிலவற்றில் இரு புறமும் எழுத்துகள் காணப்படுகின்றன. சிலவற்றில் ஒரு புறம் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. நாட்டுப் பாடல், கதைப்பாடல், நாடகங்கள் வடிவிலும் பல சுவடிகள் உள்ளன (சாத்தாவையன் கதை, சாத்தான் கதை போன்றன). பல சுவடிகள் இதுவரை பதிப்பிக்கப்படவில்லை. சொல்லப்போனால் நிறைய ஓலைச்சுவடிகளில் என்ன உள்ளது, அது எதைப் பற்றியது என்கிற ஆய்வு இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. பல ஓலைச்சுவடிகள் மிகவும் சிதைந்து காணப்படுகின்றன. சிலவற்றைப் படிக்க இயலவில்லை. சில படிக்க எளிதாக, பழங்காலத் தமிழ் நடையில் உள்ளன. சில தொன்மையான ஆலயங்களில் சுவடிகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. சில எவ்விதப் பாதுகாப்பும் இல்லாமல் அலட்சியமாகக் குவித்து வைக்கப்பட்டும் கிடக்கின்றன.
இவற்றில் நாடிஜோதிட ஓலைச்சுவடிகள் மிகுந்த சுவாரஸ்யமானவை. நாடி ஜோதிடர்கள் பலரும் கட்டுக்கட்டாக ஓலைச்சுவடிகளை வைத்துள்ளனர். உண்மையிலேயே அவை அனைத்தும் ஜோதிடச் சுவடிகள்தானா அல்லது வேறு துறையைச் சார்ந்தவையா என்பது ஐயமாகவே உள்ளது. மேலும் அவை அனைத்துமே உண்மையானதுதானா என்பதும் ஆய்வுக்குரியது.
சான்றாக, இந்தச் சுவடியின் படத்தைப் பாருங்கள்.
ஒரு சுவடிக் கட்டு, ஜாதகக் குறிப்பு, ஓலைச்சுவடியைப் பார்த்து பலன் எழுத முனையும் ஒருவரின் கை எல்லாம் தெரிகிறதா? சரி, இதில் என்ன விசேஷம் என்று கூறுகிறீர்களா?
இருக்கிறது. அதில் இருக்கும் தமிழ் எழுத்துகளை உங்களால் வாசிக்க முடிகிறதா? சற்று முயன்றால் வாசிக்கலாம். வேப்பம்பட்டை, சாது மிளகு, முடக்கத்தான், வால் மிளகு என்றெல்லாம் வார்த்தைகள் தெரிகின்றன. இது ஜோதிடச் சுவடியே அல்ல; மருத்துவச் சுவடி. ஆனால் இதை வைத்துதான், இது பழங்கால முனிவர்களால் எழுதப்பட்ட நாடி ஜோதிடச் சுவடி என்றெல்லாம் கூறி, தம்மை நாடி வரும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள் சில நாடி ஜோதிடர்கள். குறிப்பாக, ஏதாவது ஒரு ஓலைச்சுவடியை வைத்துக்கொண்டு (அது ராம நாடக கீர்த்தனையாகவும் இருக்கலாம். மருத்துவச் சுவடியாகவும் இருக்கலாம். அல்லது யோகம், மாந்த்ரீகம் என்று வேறு எதுவாகவும் இருக்கலாம்.) அது நாடிஜோதிட ஓலைச்சுவடி என்று கூறி, அதைப் படித்துப் பார்த்துப் பலன் எழுதுவதுபோல மக்களை ஏமாற்றி வருகின்றனர். தொன்மை, எழுத்துகளின் தன்மை, அதன் உண்மையான காலம் பற்றி அறிய, கார்பன் பரிசோதனை (Carbon Treatment) செய்தால் போதும். ஆனால் அதற்கு இவ்வகை ஓலைச்சுவடிகளை வைத்திருப்பவர்கள் ஒத்துழைப்பதில்லை.
இவ்வகை ஓலைச்சுவடிகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், முனிவர்களால்தான் எழுதப்பட்டது என்பதையும் முழுக்க ஏற்க முடியவில்லை. ஏனெனில் இவ்வகை ஜோதிடச் சுவடிகளில் பெரும்பாலான பாடல்கள் அந்தாதி யாப்பிலேயே அமைந்துள்ளன. சங்ககாலப் பாடல்களில் ஆசிரியப்பாவே ஏற்றம் பெற்றிருந்தது. சங்ககாலத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ இவை இயற்றப் பெற்றதாக இருந்திருந்தால் பாடல்கள் பெரும்பாலும் ஆசிரியப்பாவில் தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லை. எனவே “அகத்தியர்’ போன்ற முனிவர்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தாலும் அந்த முனிவர்களால் தான் அவை இயற்றப்பட்டன என்ற கருத்தை முழுமையாக ஏற்க இயலாது. சங்கம் மருவிய காலத்தும் அதன் பின்னரும் வெண்பா ஏற்றம் பெற்றது. எனவே அக்காலத்திற்குப் பின் தான் இவ்வகை நூல்கள் தோன்றியிருக்கும் என்பது உறுதி. குறிப்பாகக் கூறின், தமிழில் முதலில் தோன்றிய அந்தாதி நூலான, காரைக்காலம்மையாரின் அற்புதத் திருவந்தாதிக்குப் பின்னரே இவ்வகை நூல்கள் தோன்றியிருக்க வேண்டும். காரைக்காலம்மையாரின் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியாகும். அதுபோல நாடிஜோதிடச் சுவடிகளில் சில வெறும் கிறுக்கல்களாகவும் அமைந்துள்ளன.
இவற்றை தங்களைத் தவிர வேறு யாராலும் படித்துக் கூற முடியாது என்று கூறும் நாடிஜோதிடர்களின் கருத்தும் ஏற்பதற்கில்லை. இவற்றில் இருப்பது வட்டெழுத்தும் இல்லை. கூட்டெழுத்தும் இல்லை. கிரந்தமும் கிடையாது. பழந்தமிழும் கிடையாது. எல்லாம் சும்மா ஏமாற்று வேலை என்பதே டாக்டர் நாகசாமி போன்ற வரலாற்றாய்வாளர்களின் கருத்து.
அகத்தியரால் எழுதப்பெற்றதாகக் கூறப்படும் அகத்தியர் வாகடம் என்பது உண்மையில் அகத்தியரால் எழுதப்பெற்றதுதானா என்பதும் சந்தேகமே! ஏனெனில் அதிலும் பாடல்கள் அந்தாதி முறையில் காணப்படுகின்றன. எழுத்துகளின் அமைப்பும், வடசொற்களின் ஆதிக்கமும் அவையெல்லாம் பிற்காலத்தைச் சார்ந்ததாகவே கருத இடமளிக்கின்றன. சான்றாக, அந்தச் சுவடியின் இறுதியில், ஹரி ஓம் நன்றாக வாழ்க, குருவே துணை, தம்பிரான் அண்ணாமலைப் பரதேசி, அண்ணாமலை மடம் என்ற தகவல்கள் காணப்படுகின்றன.
சமய நூல்கள் பற்றிய சுவடிகளும் சுவாரஸ்யம் மிகுந்தவை. சான்றாக இந்தச் சுவடிகளைப் பாருங்கள்.
இது திருவாசக ஓலைச்சுவடி. ஒற்றில்லாமல் (அதாவது மெய்யெழுத்தின் மீது புள்ளியில்லாமல்) எழுதப்பட்டிருக்கும் இச்சுவடி மிகத் தொன்மையானது என்பதில் ஐயமில்லை.
முப்பூ, ரசமணி, ரசவாதம் பற்றியெல்லாம் சுவடிகள் கூறும் கருத்தை ஆராயப்புகுந்தால் அது வேறு எங்கோ சென்றுவிடும் என்பதால், இத்தோடு சுபம்.