Posted on Leave a comment

இரத்தத்தால் ஒரு முற்றுப்புள்ளி – கோ.எ.பச்சையப்பன்


சுதந்திரம் பெற்று 68 ஆண்டுகள் கடந்த நிலையில் தெற்காசியாவின் வலிமை வாய்ந்த ஜனநாயக நாடாக இந்தியா தன்னுடைய மீட்சியை அடைந்துள்ளது. நூற்றாண்டுகளாக ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனிக்கும், தொடர்ந்து சூரியன் அஸ்தமிக்காதப் பேரரசு எனத் தற்பெருமை பேசிய பிரிட்டிஷ் அரசுக்கும் அடிமைப்பட்டிருந்த ஒரு நாடு, தன் இருப்பை அசைக்க முடியாத அளவிற்கு நிரூபித்துக்கொண்டது, வரலாற்றாசிரியர்களாலும், சமூகவியல் வல்லுநர்களாலும் விதந்தோதப்படுவது முற்றிலும் நியாயமே.

(ஜவாஹர்லால் நேரு, இஸ்மே, மௌண்ட்பேட்டன், ஜின்னா)

பொதுவாக இந்திய வரலாறு விடுதலைப் போராட்டத்தை மட்டும் விரிவாகப் பேசுகிறதே அன்றி, துலாக்கோல் பிடித்துக்கொண்டு பிரெஞ்சுக்காரர்களால் விலையேற்றம் செய்யப்பட்ட ஏலம் மற்றும் கிராம்பினை நேரடியாகக் கொள்முதல் செய்ய கடல் வழியாக வந்த வெள்ளையன், எவ்விதம் செங்கோலைப் பிடித்தான் என்பதை அதிகம் பேசுவதில்லை. அந்த வரலாறு முற்றிலும் தம்மைத்தாமே அடிமையாக்கிக் கொண்ட ஓர் இனத்தின் வரலாறு. வெள்ளையனிடம் மட்டுமல்ல, பாரதம் கடந்த 1000 ஆண்டுகளாக டச்சு, பிரெஞ்சு, மொகலாய அரசுகளால் அடிமைப்படுத்தப்பட்டிருந்தது. இன்றைய ஆப்கானிஸ்தானின் காந்தகார் முதல் இலங்கை வரை பாரதப் பேரரசு ஒரு காலத்தில் பரந்து விரிந்திருந்தது. மகாபாரதத்தில் பேசப்படும் காந்தாரியின் நாடான ‘காந்தாரம்’ காந்தகார்தான் என்பது சில வரலாற்றாசிரியர்களின் கருத்து. பலநூறு ஆண்டுகளாகப் பகுதிபகுதியாக பாரதம் நிலப்பரப்பில் சுருங்கிக்கொண்டே வந்தது. விடுதலை பெறும்போது 542 சமஸ்தானங்களாக இந்தியா பிளவுண்டிருந்தது.

“இந்தியர்கள் தம்மை ஆண்டுகொள்ளத் தகுதியற்றவர்கள். கடைசி பிரிட்டிஷ் போர் வீரன் கப்பல் ஏறிய அடுத்தகணம் பாரதம் தன் காட்டுமிராண்டித்தனத்திற்குத் திரும்பி வரும்” என்றார் வின்ஸ்டன் சர்ச்சில். அவருடைய ‘Never Never give up’ என்ற சொலவடை ஷேக்ஸ்பியரின் நாடக வசனத்திற்கு இணையாகப் புகழ் பெற்றிருந்தது. இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்திற்கு வெற்றியை ஈட்டித்தந்த வின்ஸ்டன் சர்ச்சில், (இந்தியாவிற்கு) அதிர்ஷ்டவசமாகத் தோற்று, கிளாமண்ட் அட்லி ஆட்சிப் பொறுப்பிற்கு வந்திருந்தார். சர்ச்சிலுக்கு மாறாக காலனி ஆதிக்க நாடுகளில் பிரிட்டிஷ் மேலாதிக்கத்தைத் திரும்பப் பெறுவது அட்லியின் கொள்கையாக இருந்தது இந்திய விடுதலையை விரைவுபடுத்தியது.

1947 ஆகஸ்ட் 15 – பாரதம் விடுதலை பெற்றது. ஆனால், ஜனவரி 26தான் சுதேசிகளான காங்கிரஸ் தலைவர்களின் விருப்பத்திற்குரிய தேர்வாக இருந்தது. காரணம், பூரண சுயராஜ்யமின்றி வேறெதையும் ஏற்பதில்லை என 1930 ஜனவரி 26ல் காங்கிரஸ் லாகூர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி அதன்படி ஆண்டுதோறும் ஜனவரி 26ஐ விடுதலை நாளாக அனுஷ்டித்து வந்தது. ஆனால் ஆகஸ்ட் 15 மௌண்ட் பேட்டனின் தேர்வு. காரணம் பிரிட்டிஷ் விசுவாசியான அந்தக் கடைசி வைஸ்ராய், இரண்டாம் உலகப் போரில் ஜப்பான், இங்கிலாந்திடம் சரணடைந்த ஆகஸ்ட் 15ஐத் தேர்ந்தெடுத்து தன் ராஜ்ய விசுவாசத்தை நிரூபித்தார். அதனால் நம் சுதேசிகள் ஜனவரி 26ஐ 1950ல் குடியரசு நாளாக அனுஷ்டித்துத் திருப்திப்பட்டுக்கொண்டனர்.

இந்தியா கோரியது ஒரு தேசத்திற்கான விடுதலை. ஆனால் பிரிட்டிஷார் அளித்தது இரண்டு தேசங்களுக்கான சுதந்திரம். இந்தியா துண்டாடப்பட்டு பாகிஸ்தான் என்ற புதிய தேசம் உருவாக்கப்பட்டது, இரத்தத்தாலும் கண்ணீராலும் எழுதப்பட வேண்டிய வரலாறு.

துருக்கி கலீஃபாக்களுக்கு ஆதரவாக இந்தியாவில் கிலாஃபத் இயக்கம் நடைபெற்றபோது காந்தியின் திணிக்கப்பட்ட விருப்பத்தால் காங்கிரஸ் அதனை ஆதரித்தது. தவிர, முல்லாக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த காந்தி எப்போதும் தயாராக இருந்தார். காங்கிரசும், காந்தியும் முஸ்லிம்களை அரவணைத்து விட்டுக்கொடுத்துப் போக என்றென்றும் தயாராக இருந்தனர். ஆனால், அதிகாரப்பசி கொண்ட மற்றொரு முஸ்லிம் தலைவர் அதற்குத் தயாராக இல்லை. அவர் பெயர் முகம்மது அலி ஜின்னா. காந்தி கோரியது வெள்ளையனிடமிருந்து விடுதலை, ஆனால், ஜின்னா கோரியது காங்கிரஸ் அரசிடமிருந்து பாகிஸ்தானின் விடுதலை.

முகம்மது அலி ஜின்னாவும், காந்தி மற்றும் நேருவைப் போன்றே லண்டனில் பயின்றவர். தன் அரசியல் வாழ்வின் தொடக்க காலத்தில் காங்கிரஸில் இருந்தவர். காங்கிரஸிலிருந்து பிரிந்தபின்னர் முஸ்லிம் லீக் வடமாநிலங்களில் அடைந்த (அவை முஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருந்த இடங்கள்) பெரு வெற்றி, இந்தியாவிற்கு எதிராக முஸ்லிம்களை ஒருங்கிணைக்க முடியும் என்ற எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்திற்று.

காந்தி, ஓர் உண்மையான இந்துவாக இருந்தார். சமயச் சார்பற்ற ஒரு தலைவராகவும் இருந்தார். நேருவின் வாழ்வில் மதத்திற்குக் குறிப்பிடத்தக்க இடமே இல்லை. தன்னை ஒரு நாத்திகவாதி எனக் கூறிக்கொண்டார் அவர். அவருடைய தன் வரலாற்றில் கீதையை ஒரு மேலாண்மைக் கருத்துக்கள் கொண்ட நூலாகவே அடையாளம் காணுகிறார். ஆனால் இவர்களை எதிர்த்து அரசியல் நடத்திய ஜின்னா, தன் அரசியலை மதத்தினை மையப்படுத்தியே அமைத்துக்கொண்டார். ஓர் உண்மையான முஸ்லிம் ‘ஹராம்’ எனக் கருதியவற்றை செய்தவர் ஜின்னா. அவர் மதுவை அருந்தினார். பன்றிக் கறியும் உண்டார். ஆக, இந்தியப் பிரிவினை, ஒரு மகாத்மா மற்றும் ஒரு நாத்திகவாதியும் மதவெறியருமான ஜின்னா இவர்களுக்கிடையேயான போராட்டங்களில் நிகழ்ந்தது.

பிரிவினை குறித்தான பேச்சுவார்த்தைகளின்போது உடனிருந்த ராம் மனோகர் லோகியா எழுதுகிறார்.

“பேச்சுவார்த்தைப் பொருளின் தீவிரத்தை யாரும் உணர்ந்ததாகவே தெரியவில்லை. மௌலானா ஆஸாத் தொடர்ந்து புகைத்துக்கொண்டிருந்தார். நேரு ஓர் ஓரமாகச் சுருண்டிருந்தார். காந்தி, ஜின்னாவிடம் கெஞ்சியபடி இருந்தார். ஒரு கட்டத்தில் சுதந்திர இந்தியாவின் தலைமைப் பதவியைக்கூட தரத் தயாராக இருந்தது காங்கிரஸ். ஆனால், முஸ்லிம்களுக்கான ஒரு தனித் தேசத்திற்குக் குறைந்தது எதனையும் ஏற்க ஜின்னா தயாராக இல்லை. காந்தியைப் பற்றிய அவருடைய நிலைப்பாடு இதுதான். தந்திரமிக்க கிழட்டு இந்து நரி.”

கடைசியில் அது நிகழ்ந்தேவிட்டது. தேசங்களின் எல்லைகளை வரையறுக்க சர் பட்டம் பெற்ற சிரில் ராட் க்ளிப் இந்தியாவிற்குத் தருவிக்கப்பட்டார். அவருக்கு ஆலோசனை கூற இரண்டு முஸ்லிம்கள், ஓர் இந்து மற்றும் ஒரு சீக்கியர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. ஆனால், அவர்கள் தமக்குள் இட்ட சண்டையைப் பொறுக்கமாட்டாது க்ளிப் அவர்களைத் துரத்திவிட்டார். அவரிடம் இல்லாதது ஒன்றே ஒன்றுதான், அது நேரம். பிளவுபடப்போகும் இரு தேசங்களின் எல்லைகளைத் தீர்மானிக்க அவருக்கு ஆறு வாரங்களே இருந்தன.

எத்தகைய பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் இன்றி உலகின் மிகப்பெரிய மக்களின் குடிபெயர்வு நடந்தேறியது. பிரிட்டிஷ் அரசின் காவல்துறை முழுக்க முழுக்க வெள்ளையர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்திற்று. ஆனால், அவர்கள் அஞ்சியதற்கு மாறாக இரத்த ஆறு ஓடியது வேறிடங்களில். வெள்ளையர்களின் விரல் நகத்திற்குக் கூடச் சேதம் ஏற்படவில்லை.

பிரிவினையின்போது கொல்லப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள், ஊனமடைந்தவர்கள் பற்றிய திட்டவட்டமான தகவல்கள் ஏதும் இல்லை. உத்தேசமான தகவல்படி 15 இலட்சம் பேர் கொல்லப்பட்டனர். எண்ணிக்கையில் இந்துக்களும், அதற்கடுத்து சீக்கியர்களுமே அதிகம். முஸ்லிம்களைப் பாதுகாக்க இங்கே காந்தியும் நேருவும் இருந்தனர். பாகிஸ்தானில் இருந்தது சந்தேகத்துக்கிடமின்றி ஒரு மதவெறியர். 1945களில் காவல்துறைக்கு விடுமுறை அளித்த கல்கத்தா முஸ்லிம் லீக் அரசு, மதப்படுகொலைகளுக்கான ஒத்திகையை நிகழ்த்தி இருந்தது. அது மீண்டும் ஒருமுறை அரங்கேற்றப்பட்டது.

ஜின்னாவால், தந்திரமிக்க இந்து கிழட்டு நரி என வர்ணிக்கப்பட்ட தலைவர்தான் இந்திய முஸ்லிம்களைப் பெருமளவு காத்தார். நவகாளி உள்ளிட்ட பல இடங்களில் காலணி இன்றி நடந்தார். உலகப்புகழ் பெற்ற தன் ஆயுதமான உண்ணாவிரதமும் இருந்தார். கிரியாட்டினின் அதிகமாக சிறுநீரகங்கள் பழுதடைந்திடும் நிலையை எய்திய பின்பும் காந்தி தன் வீரத்தைக் கைவிடவில்லை. கொதித்துப்போன இந்துக்களில் சிலர், ‘காந்தி இறந்து போகட்டும்’ என கோஷமிடும் அளவிற்கு, காந்தி முஸ்லிம்களைப் பாதுகாத்தார்.

சுதந்திர தினச் செய்தியாக காந்தியிடம் கேட்டபோது அவர் கூறியது, “நான் வெகுவாக உலர்ந்து போய்விட்டேன்” என்பதுதான். லண்டன் பி.பி.ஸி. நேருவின் மூலம் காந்தியை அணுகியபோது “எனக்கு ஆங்கிலம் மறந்துபோய்விட்டது” என அவர்களிடம் கூறுங்கள் என்றார். ‘நள்ளிரவில் பாரதம் விழித்தெழிந்து விதியுடனான தன் ஒப்பந்தம் பற்றிய’ உலகப் புகழ்மிக்க நேருவின் உரை நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருந்தபோது நோற்பவரின் பயணம் நவகாளியில் நிகழ்ந்து கொண்டிருந்தது.

பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் துண்டுகளாகச் சிதறிக்கிடந்த 542 சமஸ்தானங்களில் மூன்றைத்தவிர மற்றவை வல்லாபாய்ப் படேல் மற்றும் வி.பி.மேனன் ஆகியோரின் முயற்சியால் இணைந்தன. முரண்டு பிடித்த திருவிதாங்கூர் சமஸ்தானம், அரசர் மற்றும் அரசியைப் பொம்மைகளாக்கி ஆட்சிபுரிந்து வந்த திவான் புரட்சிப்படையால் தாக்குதலுக்கான பின்னர் இந்தியாவுடன் இணைந்தது. ஹைதராபாத் நிஜாம், ரஜாக்கர்கள் துணையுடன் வெறியாட்டம் ஆடினார். இந்திய ராணுவத்தின் துணையுடன் படேலின் இரும்புக்கரம் அவரை அடக்கிற்று. காஷ்மீர் மன்னர் ஹரிசிங், பாகிஸ்தான் ஆதரவுடன் பதான்கள் தாக்கியதும், ஆகஸ்ட் 14ம் தேதி இந்தியாவுடன் இணையும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். காஷ்மீர் பிரச்சினையை மௌண்ட்பேட்டனின் ஆலோசனையை ஏற்று ஐ.நா.விற்குக் கொண்டு சென்ற நேரு தன் ஆட்சிக்காலத்தின் முதல் தவற்றைச் செய்தார்.

1930களில் வேலூர் சிறையிலிருந்தபோது ராஜாஜி சுதந்திரம் பற்றித் தன் நாட்குறிப்பில் எழுதிய வரிகள் வெகு பிரசித்தி பெற்றவை. அதன் சாராம்சம் இதுதான். ‘சுதந்திரத்தின் அருமை தெரியாத மக்களிடம் அதனை அளிக்கப்போகிறோம். சுயராஜ்யத்தினால் ஏற்படும் ஒரே விளைவு, அதிகாரம் சுதேசிகளிடம் கைமாறுவது மட்டுமே. எதிர்கால ஆட்சியாளர்களின் செயல்பாடுகளால் மக்கள் வெள்ளையர் ஆட்சியே மேல் என நினைத்தாலும் வியப்பதற்கில்லை.’

Leave a Reply