Posted on Leave a comment

தமிழகத்தின் முதல் இந்துத்துவப் பத்திரிகை – அரவிந்தன் நீலகண்டன்

தமிழ்நாடு என்றைக்குமே ஒரு இந்துத்துவப் பிரதேசமாகத்தான் இருந்திருக்கிறது. 14ம் நூற்றாண்டில் கங்காதேவியால் எழுதப்பட்ட மதுரா விஜயம் என்கிற வீர கம்பராய சரிதம், குமார கம்பண்ணர் மதுரையில் ஏற்பட்ட சுல்தானிய ஆதிக்கத்தை எதிர்த்து வெற்றி பெற்றதைக் கூறும் குறுங்காவியம். இக்காவியத்தின் பாட்டுடைத்தலைவனின் வாள் குறித்து கங்காதேவி கூறுவது முக்கியமானது. பாண்டியர்களுக்கு சிவனால் வழங்கப்பட்ட சந்திரஹாச வாள். பாண்டியர்களிடமும் சோழர்களிடமும் இந்த வாள் இருந்த காரணத்தினால் அவர்கள் நாடுகளில் செல்வம் இருந்தது. ஆனால் இப்போது பாண்டிய, சோழ வம்சங்கள் நலிவடைந்துவிட்டதால் அகத்திய மாமுனி இவ்வாளை கம்பண்ணரிடம் அளிக்கிறார். மதுரையில் ஏற்பட்ட சுல்தானிய ஆதிக்கத்துக்கான எதிர்ப்பை சிவபெருமானால் அளிக்கப்பட்ட வாள், சோழ-பாண்டிய பாரம்பரியங்கள் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்தி அப்பேரரசுகளின் பண்பாட்டுத் தொடர்ச்சியாக விஜயநகரப் பேரரசை கங்கா தேவி காட்டுகிறார். இந்த வாள் உண்மையில் பாரதத்தின் வரலாற்றில் பண்பாட்டுப் பாதுகாப்பு சக்தியாகத் தொடர்ந்து இயங்கி வரும் இந்துத்துவத்தின் ஆழமான குறியீடே. பின்னர் அருட்பெரும் ஜோதி வள்ளலார் ‘இந்து மதமே அமரத்துவத்தை அளிக்க வல்லது. பிற மார்க்கங்கள் அதன் ஏகதேசங்கள்’ எனக் குறிப்பிடுவதும் ஐயா வைகுண்டர் முதல் பாரதி வரையிலான தொடர்ந்து எழுப்பப்பட்ட மதமாற்ற எதிர்ப்புகளும், பாரத விடுதலை இயக்கக் குரல்களும் இந்துத்துவம் எனும் சிவ-வாளின் காலத்தொடர்ச்சியான இயக்கம் என்றே கருதலாம்.

அவ்விதத்தில் பத்திரிகைத் தளத்தில் ஒரு முழுமையான இந்துத்துவப் பத்திரிகை 1940களின் இறுதியில் தென் திருவிதாங்கூர் பகுதியில் இயங்கி வந்துள்ளது. அதன் பெயர் ‘தொண்டன்’. அதன் ஆசிரியர் கே. ஆறுமுக நாவலர் (யாழ்ப்பாண நாவலருடன் குழப்பிக் கொள்ளக் கூடாது.)

தமிழகத்தின் கடைக்கோடியில் இயங்கிய இந்தப் பத்திரிகை குறித்து பொதுவாக ‘ஆராய்ச்சியாளர்கள்’ எதுவும் அதிகம் பேசாதது அல்லது கண்மூடி மௌனிப்பது புரிந்துகொள்ளக் கூடியதுதான். அவர்களின் அரசியல்-சமூகப் பார்வை மண்டலத்தின் அடிப்படைகளைக் கேள்விக்குள்ளாக்கும் தரவுகள் இப்பத்திரிகைத் தொகுப்பில் உள்ளன. எனவே அவர்கள் இதை உதாசீனப்படுத்தியோ அல்லது மௌனமாகக் கடந்தோதான் சென்றாக வேண்டும். அவர்களுக்கு போலி ‘மறைசாட்சிகளின்’ புனித வரலாற்று புனைந்துரைகளுக்குப் பொய் சான்றளிக்கவே ஊதிய ஊழியக் காலம் போதுமானதாக இருக்கிறது. என்ன செய்வது!

எனக்குக் கிடைத்த நூல் கட்டு 1946-47 ஆண்டுகளில் உள்ள இதழ்கள்: ‘முதல் ஆண்டு முற்பகுதி ஒன்று முதல் ஆறு இதழ்கள் தொகுப்பு’. இந்நூலுக்கான வாழ்த்துகளை வழங்கியவர்களில் சிலர், கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, திரு.வி. கலியாண சுந்தரம், சி.பி. ராமசுவாமி அய்யர், மறை. திருநாவுக்கரசு, சுத்தானந்த பாரதியார், கி.வா. ஜெகன்னாதன், நாமக்கல் வெ. ராமலிங்கம் பிள்ளை ஆகியோர்.

இக்காலத்துக்குத் ‘தொண்டன்’ தேவையே என்கிறார் திரு.வி. கலியாண சுந்தரனார். ‘தங்கள் கருத்தெல்லாம் தொண்டன் மூலம் தமிழ்நாட்டை ஓம்பும் என்பதில் ஐயமில்லை.’ ‘செந்தமிழ்நாடு திருந்த வரும் தொண்டன் சந்ததம் வாழ்க தழைத்து’ என்கிறார் கவிமணி.

சுத்தானந்த பாரதி தம் கவிதை வாழ்த்தில் கூறுகிறார்:

‘ஹிந்து என்றால் ஏந்துயர் தீரன்
ஹிந்து தருமம் இன்பத் தடங்கடல்
ஹிந்து ஜாதி முந்திய அறவோர்
கூட்டம் என்று கொட்டுக முரசே!
எண்டிசையுலகிலும் இம்மதமோங்கத்
தொண்டு செய் அன்பர் துலங்குக வெற்றியே!’

நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை அவர்களின் வாழ்த்துரையில் இப்படிச் சொல்கிறார்:

‘வருக வருக தொண்டனே
வாழ்க மேன்மை கொண்டு நீ
தருக பெருக மங்களம்
தமிழகத்தில் எங்கணும்
வீர வாழ்வு சொல்லுவாய்
வினையின் தீமை வெல்லுவாய்

கடவுள் என்ற சக்தியைக்
கருதிடாத பித்தரின்
மடமை நீக்கும் சேவைதான்
மனிதர்க்கின்று தேவையாம்.’

இதழ்களுக்கு உள்ளே செல்கிறோம்.

1947லேயே இந்துக் கோயில்களின் நிதியைப் பொதுக்கல்விக்குப் பயன்படுத்தலாமா கூடாதா எனும் கேள்வி விவாதிக்கப்படுகிறது. பத்திரிகை ஆசிரியர் கெ. ஆறுமுகநாவலரும், வெ. இராமநாதன் செட்டியாரும் இணைந்து எழுதிய கட்டுரையில் இவ்வாறு காணப்படுகிறது:

“பிறமதத்தினர் பொது கல்விச்சாலையின் பெயரால், பொது ஆஸ்பத்திரியின் பெயரால், பொது மாணவர் விடுதியின் பெயரால், எண்ணற்ற இந்துக்களைத் தங்கள் மதத்தில் சேர்த்து வருகின்றனர். நடுநிலை தாங்கவேண்டிய அரசாங்கம் இதனை நாள்தோறும் நன்றாய் அறிந்துகொண்டே அவர்கட்கு வேண்டிய உபகாரநிதியையும் பொது நிதியிலிருந்து வழங்கி வருகிறது.

பிற மதத்தார் செய்யும் முறையில் சென்னை மாகாண இந்துமத ஆலய உபரி வருமானத்திலிருந்து பொதுக் கல்விச்சாலைகள் நடத்தலாம். அவர்களைப்போல நமது மதத்தையும் வளர்க்க பொதுக் கல்விச்சாலைகள் இந்து மத சீர்திருத்தக் கழக ஆட்சிக்குட்பட்டு அரசாங்க மேற்பார்வையில் நடத்தலாம். அரசாங்கம் பிற மதத்தினருக்கு வழங்கும் உபகார நிதியை நடுநிலைமையில் நின்று இந்து நிலையங்கட்கும் வழங்க வேண்டும். அவ்வாறு பொதுக்கல்வியை இந்து மத நிலையங்கள் வளர்ப்பது இந்து மத வளர்ச்சிக்கே ஏற்ற துணை புரியும்.

பிறமதங்கள் எத்துறையிலெல்லாம் காலநிலைக்கேற்ப பணி செய்து தங்கள் தங்கள் மதங்களை வளர்க்கின்றனவோ அவற்றைவிடப் பன்மடங்கு பணி செய்யும் தகுதி இந்து மதத்திற்குமுண்டு. ஆலயங்களின் உபரி வருமானத்தை நடுநிலை வகிக்க வேண்டிய அரசாங்கம் எடுத்து பொதுக் கல்விக்குப் பயன்படுத்துவதனால் மேற்கூறிய எந்தப் பணியும் இந்து மதத்தில் நடைபெறாமலாகி இந்து மதம் இருந்த இடம் தெரியாமல் ஒழிந்தே போய்விடும்.”

அதே இதழில் அல்லாடி கிருஷ்ணசுவாமி அய்யர் ‘இந்துமத ஸ்தாபன நிதியை பொதுக்கல்விக்குப் பயன்படுத்தல் பொருத்தமல்ல’ என்று ஒரு விரிவான கட்டுரையை எழுதியிருக்கிறார்.

‘பாராட்டுகிறோம்’ என்று ஒரு பகுதி. அதில் காணப்படும் பாராட்டுக்கள் முக்கியமானவை.

“திருவிதாங்கூர் மன்னர்பிரான் இந்துக்கள் அனைவருக்கும் ஆலயப்பிரவேச உரிமை அளித்து இந்து மத வளர்ச்சிக்கு இன்றியமையாத தொண்டுகள் புரிந்து வருதலைப் பாராட்டுகின்றோம். …எட்டையபுரம் ஜமீன் தனது சமஸ்தானத்திலுள்ள ஆலயங்கள் அனைத்திலும் எல்லா இந்துக்களுக்கும் பிரவேச உரிமை அளித்ததைப் பாராட்டுகிறோம். 16-10-46ல் மலபாரில் சரித்திரப் பிரசித்தி பெற்ற கள்ளிக்கோட்டை லோகனார்காள் என்ற ஆலயத்தில் எல்லா ஜாதி இந்துக்களுக்கும் பிரவேச உரிமை அளித்த காடாத்த நாட்டின் வலிய மகாராஜா அவர்களின் முற்போக்கான எண்ணத்தைப் பெரிதும் வரவேற்றுப் பாராட்டுகின்றோம். கொச்சி சமஸ்தானத்தில் திருச்சிவப் பேரூருக்கு அருகாமையிலிருக்கும் எய்யல் என்ற இடத்திலிருக்கும் வெள்ளித் திருத்திக் கோயிலை எல்லா இந்துக்களுக்கும் திறந்துவிட்ட அவ்வாலய நிர்வாகிகளின் செயலைப் பாராட்டுகிறோம். திருச்செந்தூர் பஞ்சாயத்துப் போர்டார் 12-10-’46ல் நடைபெற்ற விசேஷக் கூட்டத்தில் ‘ஸ்ரீ சுப்ரமண்ய சுவாமி கோயிலுக்குள் ஹரிஜனங்களையும் இதுவரை அனுமதிக்கப்படாதிருந்த இதர இந்துக்களையும் ஜாதி இந்துக்கள் போய்த் தொழுகிற இடம் வரை அனுமதிப்பதென்று’ ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. பஞ்சாயத்து போர்டு தலைவர் திரு. கனகசபாபதி பிள்ளை அவர்களுடையவும் இதற்காக ஒத்துழைத்த அன்பர்களுடையவும் எண்ணத்தைப் பாராட்டுகிறோம். சிவகங்கை மன்னர் அவர்கள் தமது எல்லைக்குட்பட்ட புராணப் பெருமை வாய்ந்த திருக்கோஷ்டியூர் – காளையார் கோயில் – மானாமதுரை ஆலயங்களில் நவம்பர் 15க்குள் எல்லா இந்துக்களுக்கும் பிரவேச உரிமை வழங்கி திறந்து விட முன்வந்திருப்பதை அறிந்து பெரிதும் மகிழ்வுடன் பாராட்டுகின்றோம்.”

இந்த இதழில் பண்டித மதன் மோகன் மாளவியாவின் அறிக்கையும் வெளியாகியுள்ளது:

“மனித வர்க்கத்திற்கே ஆபத்து ஏற்பட்டுவிட்டது என நான் நினைக்கிறேன். ஹிந்து கலாசாரத்துக்கும் ஹிந்து மதத்துக்கும் கூட ஆபத்து வந்துவிட்டது. ஹிந்து மக்கள் எல்லாம் ஒரே முகமாக ஐக்கியப்பட்டுக் கிடைக்கக்கூடிய உதவிகளையும் சகாயங்களையும் பயன்படுத்திக்கொண்டு தற்காப்பு செய்து கொள்வதுடன் சுய உரிமைகளையும் நிலைநாட்ட வேண்டிய அவசியமும் அவசரமுமான சமயம் நிச்சயம் வந்துவிட்டது. நவகாளி திப்பேரா அட்டூழியங்களால் ஒவ்வொரு ஹிந்துவின் நெஞ்சமும் கோபத்தால் கொதிக்க வேண்டும்… ஹிந்துக்கள் மெஜாரிட்டி வகுப்பினராயிருப்பதால் அவர்கள் புறக்கணிக்கப்படலாம் என்று பரவிவரும் சாவுமணியை எதிர்த்து இந்துக்கள் கிளர்ச்சி செய்ய வேண்டும்.”

அகில இந்திய இந்து மகாசபை தலைவராக அப்போது இருந்த டாக்டர் ஷியாமா பிரஸாத் முகர்ஜி அவர்களின் கருத்துகளையும் தொண்டன் தமிழ்நாட்டு மக்களுக்குக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது:

“இந்தப் பெரிய நாட்டில் இந்துக்கள் உயிர்வாழ்வதையே பயமுறுத்தும்படியான பெரும் நெருக்கடிகள் ஏற்படும் சமயத்தில் இந்துக்களின் நலன்கள், உரிமைகள் முதலியவற்றையும் இந்துப் பெண்மணிகளின் மானத்தையும் எவ்விதப் பயமும் இன்றிக் காப்பாற்றக்கூடிய இளைஞர்களைக் கொண்ட நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒழுங்கான ஸ்தாபனம் ஒன்று வேண்டுமென்ற தேவையைச் சமாளிப்பதற்காகவே இந்துஸ்தான் தேசியப் படையை நிறுவப் போகிறோம்.”

டாக்டர் முகர்ஜியின் இந்த அறிக்கை நவகாளி படுகொலை, கல்கத்தா பெருங்கொலை கலவரங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து வெளியிடப்பட்டிருக்கிறது.

அடுத்த இதழில் மிக முக்கியமான ஒரு கட்டுரை இருக்கிறது. அக்கட்டுரையின் தலைப்பு ‘நாம் இந்துக்களே’. தமிழக இந்துத்துவ வரலாற்றில் இக்கட்டுரை ஒரு முக்கிய சாசனம் என நான் கருதுகிறேன். இக்கட்டுரையிலிருந்து:

“இந்துக்களாகிய நமக்கு நேர்ந்து வரும் துன்பங்களும் கொடுமைகளும் புறச்சமயத்தவர்களால் மட்டுமன்று, நம்மவர்களாலேயே நமக்குப் பெரும்பாலும் தொல்லைகள் விளைந்து வருகின்றன என்பதை வரலாற்று நூல்களால் அறியலாம். பாருங்கள்! ஜயச்சந்திரன் என்னும் அரசன் அயல்நாட்டு முஸ்லிம் மன்னனை நம்மிந்திய நாட்டிற்கு வருவித்து தன் உறவினரான பிருதிவி மன்னனைத் தோற்கடித்தானல்லவா? அன்று மட்டுமல்ல; இன்றும் இம்மனப்பான்மையே நம்மிந்துக்களை வாட்டி வருகின்றது என்ற உண்மை இப்போதைய நிகழ்ச்சிகள் வாயிலாகச் சற்று ஆராய்ந்து பார்த்தால் வெள்ளிடை மலையென விளங்கும். இன்றும் இந்துக்களாகிய நாமும், நம் சமயமும் வாழ்கின்றோம்; வாழ்கின்றது என்றாலும் இன்று இந்துக்களுக்கிடையே உள்ள வேற்றுமைகளுக்கும் பகைமைகளுக்கும் இடமான குல வேற்றுமையை இன்றே கைவிட வேண்டும்; இன்றேல் இறந்தொழிய வேண்டும். வகுப்பு வேற்றுமைக் கொடுமைகளின் முன்னணியில் நிற்பது தீண்டாமை மட்டுமல்ல. வேளாளன், பார்ப்பான், படையாட்சி, நாயுடு, ரெட்டி, செட்டி முதலாய இனப்பிரிவுகளும் பகைமைகளும் இன்றே தொலைய வேண்டும். இன்றேல் இறந்தொழிய வேண்டும். குல வேற்றுமைக்குக் குறிப்பிட்ட ஒரு வகுப்பே காரணமென்று கூறிப் பழித்துப் பகைத்துத் தீயைக் கக்கும் ஒரு சார்புக் கட்சித் தலைவர்கள் தன் வகுப்புயர்வுக்கும் நன்மைக்கும் பாடுபடுவராகில் அவர்களால் இந்துக்களுக்குள் ஒற்றுமையை எப்படி வளர்க்கமுடியும்? இப்படிக் குறிப்பிட்ட வகுப்பின் மேல் அளவிறந்த வெறுப்புக் கொண்டு அவ்வகுப்பாரைப் பழிக்கும் ஆத்திரத்தில் ‘ஒரு வகுப்பார் ஆதிக்கத்தில் மதம் இருக்கின்றது, கோயில் இருக்கின்றது, ஆதலால் இந்து மதத்தையும் கோயிலையும் அழித்துவிட வேண்டுமென்று ஆரவாரம் செய்கின்றனர். தனி ஒரு வகுப்பினருக்குள்ள ஆதிக்கத்தைப் பிடுங்கும் ஆண்மையும் அறிவும் இந்துக்களில் ஒரு சாரார் தமக்கில்லை என்று நம்பும் அளவுக்குக் கோழைகளாகவும் தன்னம்பிக்கை அற்றவர்களாகவும் ஆகிவிட்டார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்துக்களின் கோயில்களையும் சமயத்தையும் அழிக்க வெறிகொண்டு திரிந்து படுகுழியில் விழும் தன்னம்பிக்கையற்ற தற்கொலையாளர்கள்போல ‘நாம் இந்துக்கள் இல்லை. நாம் திராவிடர்கள்’ என்கிறார்கள். இன்னும் சற்று எண்ணிப்பார்த்தால் அச்சாராருக்கு இனவேற்றுமையை விட இந்து சமய அழிப்பே அவர்கள் ஆர்வம் என்பது நன்கு புலனாகும். அதுமட்டுமல்ல அவர்களும் அக்கட்சிச் சொற்பொழிவாளர்களும் முஸ்லிம் லீக் முஸ்லிம் மதக் கூட்டங்களில் பேசி வருகிறார்கள். …ஏன் முயன்று வைதீகர்களின் கொடுமையைப் போக்கி புனித இந்து மதத்திற்குத் தொண்டாற்றலாகாது? இந்நல்வழியைத்தான் நம் நாட்டிலுள்ள இந்து சமய சங்கங்கள் பின்பற்றி நம் சமயத்தை உயர்த்தப் பாடுபடுகின்றன என்பதைச் சைவ சித்தாந்த மகா சமாஜம், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், வைஷ்ணவ மகா சங்கம், இராமகிருஷ்ணா மிஷன், ஆரிய சமாஜம், சமரச சன்மார்க்க சங்கங்கள் முதலிய இந்து சமய அமைப்புகள் செய்து வருகின்றன. வைதீகக் கொடுமையிலிருந்தும் இந்து சமயப் புனிதத்தை இக்கழகங்களும் இக்காலத் தலைவர்களான மகாத்மா காந்தியடிகள், மாளவியா, மறைமலையடிகள், சச்சிதானந்தம் பிள்ளை, வேங்கிட சாமி நாயுடு, திரு.வி.க முதலியோர் செய்து வருகின்றனர். வைதீகர்கள் என்றால் ஒரு குறிப்பிட்ட வகுப்பினரை மட்டும் நினைத்தல் தவறு. எல்லா வகுப்பினரிலும் வைதீகர்களும் சீர்திருத்தவாதிகளும் இருக்கின்றனர். இன்னுமொரு வியப்பும் திகைப்பும் யாதென்றால் அச்சாரார் தோல்வி மனப்பான்மையால் அரசியலில் பிற்போக்காளராகி நாட்டுணர்ச்சியையும் எதிர்க்கிறார்கள். முஸ்லிம் லீக்கை ஆதரிக்கின்றனர். சுதந்திரக் கட்சிகளைத் தாக்கி அதன் வாயிலாக பிரிட்டிஷ் ஆதிக்கத்துக்குழைக்கின்றார்கள். இங்ஙனம் இனப்போரில் ஈடுபட்டு இறுதியில் முஸ்லிம் லீக்கை ஆதரித்து முஸ்லிம்களாக வேண்டுமென்று பேசி நம் சமய சமூக கலை நாகரிகங்களை அழிக்க முன்வந்திருக்கும் இந்த ஜெயச்சந்திரர்கள் இந்துக்கள் இல்லை. இவர்கள் இன்றே முஸ்லிம்கள் ஆகட்டும். நம் சமய சமூக நாகரிகங்களை உயர்த்த ஆணவத்துடன் உழைக்கும் நாம் இந்துக்களே.”

இக்கட்டுரையை எழுதியவர் வித்துவான் மறை. திருநாவுக்கரசு. மறைமலையடிகளின் புதல்வர். தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடியாக இருந்த மறைமலையடிகளின் புதல்வர் தமிழ்நாட்டில் இந்துத்துவக் குரல் எழுப்பிச் செயல்பட்ட மூத்தோரில் ஒருவர் என்பது எவ்வளவு முக்கியமானது!

அடுத்த இதழ் கொந்தளிப்பாக இருக்கிறது. ஆலயப்பிரவேச சட்டம் வருவதற்கான ஆயத்தங்கள் ஏற்படுகின்றன. சனாதனிகள் என தங்களை அழைத்துக் கொள்கிறவர்கள் அதனைக் கடுமையாக எதிர்க்கின்றனர். இந்நிலையில் ‘தொண்டன்’ தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்கிறது. ஆலயப் பிரவேச எதிர்ப்பாளர்களை எதிர்த்து ஒரு கருத்துப்படம். இந்து மத ஞானிகளும் சான்றோர்களும் வானுலகில் இருந்து ஆலயப் பிரவேசத்துக்கு அருட்பாலிக்கின்றனர். ஆனால் சனாதனிகள் என தன்னைச் சொல்லும் ஒரு சிறு கும்பல் ‘ஐயோ மதம் அழிகிறதே’ என கூச்சலிடுகின்றனர். தலையங்கத்தில் ஆறுமுகநாவலர், சட்ட அமலாக்கத்துக்குக் காத்திருக்காமல் ஒவ்வொரு ஊரிலும் தானாகவே முன்வந்து ஆலயப்பிரவேசம் ஊர் மக்களால் நடத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார். ஆலயப்பிரவேசத்தைத் தடுக்க முற்படுவோரின் செயல் ‘கொந்தளிப்போடு வரும் கடலை தன் கைத்துடப்பத்தால் பெருக்கித் தள்ளத்துணிந்த கிழவியின் செயலை ஒத்திருப்பதாக’க் கூறுகிறார்.

நவகாளியில் அல்லல் படும் இந்துக்களுக்கு திருப்பதி தேவஸ்தான நிதியிலிருந்து உதவியளிக்க வேண்டுமென்னும் கோரிக்கை இந்த இதழில் முன்வைக்கப்படுகிறது.

பாபு ஜகஜீவன் ராம் அவர்களின் கட்டுரை இந்த இதழில் வெளியாகியிருக்கிறது. இக்கட்டுரையின் தலைப்பு ‘நித்தியப் புதுமை கொழிக்கும் மதம் இந்து மதம்’. மிகக் கடுமையாக சாதியக் கொடுமைகளைச் சாடும் கட்டுரை இது. அவருடைய கட்டுரைப் பட்டியல் சமுதாய மக்களின் வேதனையையும் ஹிந்து சுய கௌரவ உணர்வையும் ஒருங்கே காட்டும் கட்டுரை.

“நாங்கள் ஹிந்துக்களா இல்லையா என்று தீர்மானிக்கும் விஷயத்தை ஜாதி ஹிந்துக்களிடம் விட்டுவிட ஹரிஜனங்களாகிய நாங்கள் விரும்பவில்லை. இந்தப் பிரச்சனையை நாங்களே தீர்மானித்துவிட்டோம். நாங்கள் இந்துக்கள்தான். இந்துக்களாகவே இருப்போம். ஆலயப் பிரவேச சம்பந்தமாக ஹரிஜனங்கள் கிளர்ச்சி செய்வது கூட எனக்குப் பிடிக்கவில்லை. இந்து தெய்வங்களிடம் எனக்குப் பரம பக்தியுண்டு. ஆகவே பக்திக்கும் வணக்கத்துக்கும் பாத்திரமான இவ்விஷயத்தை மட்டமான தர்க்க ரீதிக்கு இழுக்க விரும்பவில்லை. நாங்கள் வந்தால் ஓடிப் போய்விடும் என்ற பலஹீனமான சாமி கோயில்களுக்கு நாங்கள் போக விரும்பவில்லை. இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கே இடம் தரமுடியாத அவ்வளவு கேவலமான மதமா நம் மதம் என்பதை மட்டும் என் சனாதன நண்பர்களைக் கேட்க விரும்புகிறேன்…

இதனை சனாதன நண்பர்களிடம் நேரடியாகக் கேட்கிறேன். அவர்கள் இதை யோசித்துப் பார்க்கட்டும். ஹரிஜனங்கள் நன்மைக்காக இது பற்றி அவர்கள் ஆலோசிக்க வேண்டாம். இந்து மதத்தின் நலனை முன்னிட்டு யோசிக்கட்டும். இந்து சமூகம் பூராவினுடைய நலனைக் கருத்திற்கொண்டு யோசிக்கட்டும். ஆகவே நமது மகத்தான புராதன மதத்தின் பெயரால் சனாதனிகளை நான் கேட்டுக்கொள்வது இதுதான். மதத்தில் கூறி இருப்பவைகளின்படி மனப்பூர்வமாக நடவுங்கள். பக்தியுடன் கடவுளை வணங்க விரும்பும் ஹரிஜனங்களை ஆண்டவனைத் தரிசிக்க ஆலயங்களைத் திறந்து விடுங்கள். இப்படிச் செய்தால் அழியா நித்தியப் புதுமை கொழிக்கும் மதம் இந்து மதம் என்பதை உலகத்திற்கு நீங்கள் காட்டியவர்களாவீர்கள். ஏதோ பழைய செத்துப்போன மதமல்ல என்பதைக் காட்டுவீர்கள். இல்லையேல் நம் மதம் ஜீவனின்றி தேங்கிப் போன, செத்துப் போன மதமென்றே உலகத்தவர் எண்ணுவர். இந்தியாவிலுள்ள பல்வேறு கட்சிகளிடையுள்ள வேற்றுமைகளைச் சாக்குச் சொல்லி தங்கள் ஆட்சியை நீடித்துக்கொள்ள முயலும் பிரிட்டீஷ் பிற்போக்குக் கும்பல் ஏமாறுவது நிச்சயம்.”

பெண்களும் ‘தொண்டன்’ இதழில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார்கள். ‘கோதையின் காதல்’ என ஒரு தொடரை தூத்துக்குடியில் இருந்து இராம.சீதாபாய் எழுதியிருக்கிறார். இன்றைக்கு வாசிக்கும்போதும் அது எத்தனை ஆழமாகவும் துணிகரமாகவும் பேசுபொருளைக் கையாள்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது:

“இசையெழுவது அகக்கரணங்களிலிருந்தே. கரணங்கள் ஒரு பொருளில் பற்றுக் கொண்டு அதனோடு ஒன்றிய நிலையில் பொறிகளின் செயல் தான் விரும்பிய பொருளிலேயே லயித்துவிடுகின்றன. அந்த நிலையில்தான் இசை எழுகிறது. நீலமேனியில் அழகிய ஆபரணம் மின்ன வந்தான். அதோடு நின்றானா? இல்லை. தன்னழகிய வாயில் வெண் சங்கை வைத்து ஏதோ வெற்றியடைந்துவிட்டவன் போல் பும்… பும்… என்று முழக்கம் செய்கிறான். காதல் அதே நிமிடத்தில் பல பாணங்களாகத் தன்னை வருத்துகிறதாம். அதே நிமிடத்தில் சங்கோடு பெருமை கொள்கிறாள். அதை அவனோடு ஒப்பிடுகிறாள். ஆஹா! அந்த சங்குதான் என்ன பாக்கியம் செய்ததோ! சங்கே! நீ சொல்ல மாட்டாயா? சொல்லு சங்கே சொல்லு. அவன் பவள வாய்ச்சுவையும் வாசமும் எப்படி இருக்கின்றன? அதை வாயில் வைத்து முழக்கும்போது அதில் அவன் வாயமுதம் பட்டிருக்கும். சங்குக்கு அதன் சுவை தெரியும் என்றும் அதன் மணம் எப்படியிருக்கும் என்றும் கேட்கிறாள்.

கற்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ?
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல் ஆதி வெண்சங்கே

சங்கு பெற்ற செல்வம் இந்திரனும் பெறவில்லை.”

இதை இங்கே சுட்டுவதன் அவசியம். பொதுவாக இன்றைய இலக்கியவாதிகளுக்கு ஒரு எண்ணம் இருக்கிறது. ஏதோ ஆண்டாளின் இலக்கியம் ‘உடல் இலக்கியம்’ என்றும் அதையெல்லாம் இந்துத்துவவாதிகள் பேச மாட்டார்கள் என்றும் ஒரு எண்ணம். ஆனால் அஜந்தா குகை ஓவியத்தில் உள்ள பெண் ஓவியங்களைக் கூட மார்க்சிய-விக்டோரிய மனநிலையில் கோசாம்பி போன்றவர்கள் தாழ்த்திப் பேசிய காலகட்டத்துக்கு ஒரு முப்பதாண்டுகள் முன்னர் தமிழகத்தின் இந்துத்துவப் பத்திரிகை ஒன்றில் ஆண்டாளின் காதல் அதன் உடல்மொழியுடன் ஒரு பெண்ணாலேயே தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கீழ்மைப்படுத்தாமல்.

ஆலயப்பிரவேசம் அருகாமையில் வர வர அதற்கான சனாதனிகளின் எதிர்ப்பு அதிகமாகிறது. சென்னையில் பிப்ரவரி 1947ல் முதல் இந்து மாநாடு என்று ஒரு கூட்டம் கூட்டப்படுகிறது. கோவர்த்தன மடத்தின் சங்கராச்சாரியார் கொடியேற்றித் தொடங்கி வைக்கிறார். மகாநாட்டுத் தலைவராக ஸ்ரீ.விவி. ஸ்ரீநிவாச அய்யங்கார் பேசுகிறார். அதில் அவர் ‘ஹரிஜனங்கள் மீது எனக்கு எந்தவித க்ஷாத்திரமும் இல்லை. மனிதர்களை நடமாடும் கோயில்கள் என்று கருதுபவன் நான். ஆயினும் ஹரிஜன ஆலயப் பிரவேசத்தை எதிர்க்கிறேன். ஹரிஜனங்களே ஆலயப் பிரவேசத்தை விரும்பவில்லை என்பது என் அபிப்பிராயம்’ என முழங்குகிறார்.

‘தொண்டன்’ பத்திரிகை இந்த மாநாட்டை மிகக் கடுமையாகத் தாக்குகிறது. அக்கட்டுரையிலிருந்து சில பகுதிகள்:

“சென்னை சைவ சித்தாந்த மகா சமாஜம், சென்னை மாகாண இந்து மத சீர்திருத்தக் கழகம், தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை, இந்து மகாசபை, ஆரிய சமாஜம், இராமகிருஷ்ணா மிஷன் ஆகிய பிரபல கழகங்கள் ஆலயப் பிரவேசத்தை ஆதரித்து ஆவன புரிகின்றன. இவ்வேளையிலும் சென்னை மாகாண இந்துக்கள் முதல் மகாநாடு ஆலயப் பிரவேச உரிமை விஷயத்தில் முட்டுக்கட்டை போடுவது மிகமிக வியப்பினை விளைவிக்கிறது. (மாநாட்டு) தலைவரவர்களால் நடமாடும் கோயில்களென்று நம்பப்படும் ஹரிஜனங்கள் படமாடும் கோயில்களுக்குட் புகுந்தால் விளையும் பாதகம் என்னவென்று விளங்கவில்லை. பிறமதத்தினர் பெரிதும் விரும்பி உபசரித்து உரிமையனைத்தும் வழங்கி தங்கள் தங்கள் மதங்களுக்கு நமது இந்து ஹரிஜனங்களை அழைத்துச் செல்லும் இக்காலத்தில் அம்மதங்களுக்கு மகிழ்ச்சியுடன் போகாமல் உயர்ந்த ஜாதி இந்துக்களின் திருவடிகளில் மண்டியிட்டு வேண்டி நிற்க அவர்களுக்கு என்ன அவசியம் வந்தது? தீண்டப்படாதார் சுப்பிரமணியன், நாராயணன், லட்சுமி, பார்வதி என்ற இந்துப் பெயர்களைத் தாங்கி இந்துக்களாயிருப்பது வரையும் அவர்களை நாமாகப் போற்றவும் மாட்டோம். ஏற்கவும் மாட்டோம். மேற்கூறியவர்களே மோஸஸ்-ஜான் – மேரி-லில்லி என்ற பெயர்களைத் தாங்கி கிறிஸ்தவர்களாகிவிட்டால் அவர்களை நண்பர்களாகக் கொண்டு விருந்தும் செய்வோம். வெள்ளைக் கிறிஸ்தவர் வந்துவிட்டால் கோயிலுக்குள் அழைத்துச் சென்று பாவாடை போட்டு பரிவட்டம் கட்டி பாதகாணிக்கையும் வைப்போம். அவர்களே மகமதியர்களாகிவிட்டால் மதிப்பனைத்தையும் வழங்குவோம். இவ்வாறிருக்க இந்து ஹரிஜனங்கள் ஏன் இந்துக்கோயில் நுழைவை விரும்பப் போகிறார்கள்? ஹரிஜனங்கள் இஸ்லாமாகி நவகாளி, திப்போரா கொடுமையை நம் நேருக்கே செய்ய வருவார்களானால் அப்போதுதான் ஜாதி இந்துக்களுக்கு அறிவு விளங்கும். பத்ராஜலம் ஸ்ரீ இராமர் கோயில், திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் ஆகிய பெருமை வாய்ந்த கோயில்களில் மட்டுமாவது ஹரிஜன ஆலயப் பிரவேசத்தை அளிக்காமல் சனாதனிகளின் மனதை சந்தோஷப்படுத்த வேண்டுமென்று இக்கழகத்தார் விரும்புவதுதான் விந்தை. இந்த நான்கு கோயில்களையும் பாகிஸ்தான் கொள்கைபோல சனாதனிகளின் பாதுகாப்பிடமாக்கிக் கொள்ளப் பார்க்கிறார்களா?”

ஆலயப் பிரவேச எதிர்ப்பாளர்களின் சென்னை மாகாண இந்து மாநாட்டுக்கு எதிரான ‘தொண்டன்’ கட்டுரை மகாத்மா காந்தியின் மேற்கோளோடு முடிகிறது: “இந்து மதம் சாகாமல் இருக்க வேண்டுமென்றால் சாதிகளை எல்லாம் ஒழித்துவிட வேண்டும் என்பதேயாகும்…” இன்றைக்கும் நம்மிடையே இருக்கும் சமூக மூலதனக் கோட்பாட்டாளர்கள் படிக்க வேண்டிய ஒரு முழக்கத்தை அன்றே ‘தொண்டன்’ வெளியிட்டிருக்கிறது.

கட்டுரைகள் மட்டுமல்ல களச்செயற்பாட்டிலும் ‘தொண்டன்’ இறங்கியுள்ளது. ஏப்ரல் 1947 ‘தொண்டன்’ இதழில் பின்வரும் செய்தி பதியப்பட்டுள்ளது. செங்கல்பட்டு ஜில்லா திருக்கழுங்குன்றத்துக்கு இரண்டு கல் தொலைவில் எச்சூரில் 32 ஆதி இந்து குடும்பத்தினர் வசிக்கின்றனர். (அன்று அனைவராலும் பயன்படுத்தப்பட்ட ஹரிஜன் என்பதற்கு மாற்றாக ஆதி இந்து என்கிற பெயரை ‘தொண்டன்’ பயன்படுத்துகிறது.) அங்கே போய் ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கிறிஸ்தவராக மதம் மாறினால் ஆங்கிலேய அரசாங்கத்திடமிருந்து நிலமும் ஆளுக்கு இருநூறு ரூபாய் பணமும் வாங்கித் தருவோம் என்று கூறி ஆசைகாட்டுகிறார். அங்கிருந்த கங்கை அம்மன் கோயிலை இடித்து மாதா கோயில் கட்ட முதல் கட்டமாக மூங்கில் கிழிகளும் தென்னங்கீற்றுக் கட்டுகளும் கொடுக்கப்பட்டன. இதை அவர்கள் மனமொப்பிச் செய்வதாக கைச்சாத்தும் வாங்கப்பட்டுவிட்டது. இதை அப்பகுதியிலுள்ள கோதண்டராமன் என்கிற இளைஞர் அதை வித்துவான் மறை.திருநாவுக்கரசரிடம் சொல்லி முறையிட்டார். இதனை அடுத்து சில ஊர்ப் பெரியவர்களுடன் மறை. திருநாவுக்கரசர் அவ்விடம் சென்று ஆதி இந்துக் குடும்பங்களிடம் பேசினார். இதன் விளைவாக அம்மக்கள் தங்களுக்கு உண்மையான இன்னல்களான சில சாதி இந்துக்களால் ஏற்படும் இன்னல்களைக் கூறினர். இனி ஒருபோதும் கிறிஸ்தவச் சூழ்ச்சிக்கு இரையாவதில்லை என்றும் இந்துக்களாகவே தாம் வாழ்வோம் என்றும் சூளுரைத்தனர். அவர்களின் இன்னல்களைப் போக்க டாக்டர் வெங்கடாசலம், பாலகிருஷ்ண நாயுடு, முத்துமணி முதலியார், கோதண்டராமன் ஆகியோர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.

இப்படி நான்கு இதழ்கள் வந்துவிட்டன. இந்நிலையில் குற்றாலத்திலிருந்து ஒரு கடிதம்:

“வணக்கம். ‘தொண்டன்’ நான்கு இதழ்கள் வெளியாகிவிட்டது. நல்ல கட்டுரைகள் வந்திருக்கின்றன. சமயத்துக்கு தீவட்டி பிடிக்கிறார்கள் வேறுபலர். நல்ல தொண்டன் தான் பத்திரிகை.”

எழுதியவரின் பெயர் டி.கே. சிதம்பரநாத முதலியார்.

என்னதான் இந்துத்துவக் கருத்துகள் இருந்தாலும் அன்றைய தமிழகத்தின் மிகச்சிறந்த ஆன்றோர்களின் ஆதரவு இருந்தாலும் தொண்டன் எப்போதுமே பணக்கஷ்டத்துடன் தான் ஓடிக்கொண்டிருந்திருக்கிறது. விய ஆண்டு ஆவணியில் ஆரம்பிக்க வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை, கார்த்திகை மாதம்தான் இதழ் வெளிவந்தது என எழுதுகிறார் நாவலர். நல்ல தாள் கிடைக்கவில்லை என முறையிடுகிறார். ஆண்டுச் சந்தா ஐந்து ரூபாய், வேறு வழியில்லை இதற்கு குறைக்க முடியவில்லை என வருத்தத்துடன் தெரிவிக்கிறார். ஆனால் ‘தொண்டன்’ இதழில் பல முன்னோடித் திட்டங்கள் இந்து மறுமலர்ச்சிக்காக முன்வைக்கப்படுகின்றன. ‘இந்து போதகர்கள்’ பயிற்சிக்கான தொடர் ஒன்று வெளிவந்திருக்கிறது. இப்படியெல்லாம் நடத்தப்பட்ட இதழ் மெல்ல மெதுவாக நின்று நினைவிலிருந்தும் அழிந்துவிட்டது.

ஆனால் நான் அறிந்த வரையில் இத்தனை முழுமையாக வெளிவந்த முன்னோடி தமிழ் இந்துத்துவ இதழ் ‘தொண்டன்’ பத்திரிகைதான். முற்போக்குகளும் உள்ளூர் ஆராய்ச்சித் திலகங்களும் இந்தப் பத்திரிகையையும் நாவலரையும் மறந்துவிட்டது அதிசயமல்ல. ஆனால் இந்துத்துவர்கள் என தம்மைக் கருதுவோரும் தமிழ்நாட்டில் தங்கள் பாரம்பரிய வேர்களை மறந்துவிட்டிருப்பதுதான் அவசியம். தமிழ்நாட்டில் இந்துத்துவம் என்றென்றும் நீறு பூத்த நெருப்பாக உள்ளது. அதனை வெளிப்படுத்த தமிழ்நாட்டு இந்துத்துவர்கள் தங்கள் குறுகிய சம்பிரதாய சுவர்களைத் தாண்டி தங்கள் முழுமையான பாரம்பரியத்தை மீட்டெடுக்க வேண்டும். தமிழக இந்துத்துவ இந்து சமுதாய இந்து ஆன்மிக வரலாற்றில் மையப்படுத்தி பேசப்படாத, ஆனால் மாபெரும் அருளாளர்களின் வரிசை ஒன்று உண்டு. சுவாமி சித்பவானந்தர், சுவாமி சகஜானந்தர், திருமுருக கிருபானந்த வாரியார் என நீளும் வரிசை அது. அதில் இடம் பெறத் தகுதியானவர் நாகர்கோவில் கெ. ஆறுமுக நாவலர்.

Leave a Reply