Posted on Leave a comment

‘நதியற்ற’ சிந்துவெளி நாகரிகம்: புதிய ஆய்வுகள் – ஜடாயு

உலகின் ஆகத் தொன்மையான மெசபடோமியா, எகிப்து பிரதேசங்களின் நகர நாகரிகங்களுக்கு சமகாலத்தியதாக நமது சிந்துவெளிப் பண்பாடு கருதப்படுகிறது. ‘நதிக்கரை நாகரிகம்’ என்றே இதுநாள் வரை வரலாற்றாசிரியர்களால் இது சித்தரிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால், சமீபத்திய அகழாய்வுகளும் அறிவியல் ஆராய்ச்சிகளும் இதுகுறித்த புதிய உண்மைகளை வெளிக்கொணர்ந்துள்ளன.

சிந்துவெளிப் பண்பாட்டைச் சார்ந்த ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய ஒரு சில நகரங்கள், சிந்துநதியின் கிளை ஆறுகள் பாயும் தடத்தில் உள்ளன. ஆனால் வெண்கல காலகட்டத்தைச் சேர்ந்த மிகப் பல நகரங்கள் அந்தத் தடத்திலிருந்து தொலைவில், தார் பாலைவனத்திற்கு வடக்கில் கங்கை மற்றும் சிந்து நதிப் படுகைகளுக்கு இடைப்பட்ட பிரதேசத்தில் உள்ளன. 1800களின் இறுதிப் பகுதியில் அகழ்வாராய்ச்சியில் இந்த நகரங்கள் வெளிப்பட்டபோது, ஒரு பழைய நதிப்படுகைக்கான தடயங்கள் அங்கிருக்கலாம் என்ற ஊகம் தெரிவிக்கப்பட்டது. நதியின் பிரவாகத்தின்போது இந்த நகரங்களின் நாகரிகம் வளர்ந்தது, பின்னர் நதி வறண்டவுடன் தேய்ந்து மறைந்துவிட்டது என்று ஒரு கோட்பாடாக இது விளக்கப்பட்டு, இன்றுவரை அத்தகைய புரிதலே நிலவி வந்தது. இது முற்றிலும் தவறு என்று சமீபத்திய ஆய்வுகள் கருதுகின்றன.

சுமார் 5300 ஆண்டுகள் முன்பு, இந்த நகரங்களின் கட்டுமானமும் அவற்றில் சமூக வாழ்க்கையும் நிகழ்ந்த காலகட்டத்தில், இமயமலையில் உருவாகி மேற்குநோக்கிச் செல்லும் எந்த நதியும் இந்தப் பகுதிகளில் ஓடவில்லை. இன்று காக்கர் ஹாக்ரா நதிப்படுகை (Ghaggar-Hakra River) என அறியப்படும் இந்தப் பிரதேசத்தின் நீர்த்தடத்தின் வழியாகத்தான் ஆதியில் சிந்துவின் முக்கிய கிளையான சட்லெஜ் நதி பாய்ந்தது. ஆனால், 8000 ஆண்டுகளுக்கு முன்னால் (உச்சவரம்பாக 15,000 ஆண்டுகள்) அதன் வழித்தடம் மாறி இன்னும் மேல்நோக்கியதாக (Upstream) திரும்பியது. அந்தப் பூகோள நிகழ்வுக்கு 3000 ஆண்டுகளுக்குப் பின்புதான் மக்கள் குடியேற்றங்களும், சமூக வாழ்க்கையும் அப்படுகையில் ஏற்பட்டன. முன்பு நதிபாய்ந்து உருவாக்கிச் சென்ற பள்ளமான படுகைகள் வருடாந்திர பருவ மழையின்போது பொழியும் நீரைப் பெருமளவு சேகரித்து வைப்பதற்கான இயற்கையான தேக்கம்போல அமைந்துவிட்டன. அந்த நீர்வளத்தின் உதவியுடன்தான் அங்கு விவசாயமும் அதன் உபரியால் உருவாகி வந்த நகர நாகரிகமும் செழித்தன. இதுவே ஐஐடி கான்புர் மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரி ஆய்வாளர்கள் இணைந்து நிகழ்த்திய சமீபத்திய ஆய்வுகளின் முடிவாகும். இந்தக் கால இடைவெளியை சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கும் அறிவியல்பூர்வமான சான்றுகளை, அதிநவீன தொழில்நுட்பத்தின் துணைகொண்டு, லண்டன் கல்லூரியின் படிவு இயல் நிபுணர் (Sedimentologist) சஞ்சய் குப்தா தலைமையில் செயல்பட்ட ஆய்வாளர் குழு கண்டறிந்துள்ளது. பத்தாண்டுகளுக்கும் மேலாக இக்குழு இதுகுறித்த ஆய்வுகளில் ஈடுபட்டிருந்தது.

ஒருகாலத்தில் உயிர்த்துடிப்புடன் நதி பாய்ந்து, பின்பு முற்றிலுமாக வறண்டு போய்விட்ட நீர்த்தடத்தின் பூகோள அமைப்பு பேலியோ சேனல் (Paleochannel) என்று அழைக்கப்படுகிறது. அங்கு பூமிக்கடியில் புதைந்துள்ள வண்டல், கசண்டு மற்றும் படிவுகளின் மூலமாகப் பழைய வழித்தடத்தை நிலவியலாளர்களால் (Geologists) அடையாளம் காணமுடியும். இதற்கு இந்தப் பிரதேசத்தின் ஒட்டுமொத்த நிலவியல் தன்மை விரிவாக ஆராயப்படவேண்டும்.

ஆய்வுக்குழு தொடக்கத்திலிருந்தே ஒரு தெளிவான திட்டத்துடன் படிப்படியாக செயல்பட்டது.

முதலில், விண்வெளியிலிருந்து செயற்கைக்கோள்களால் எடுக்கப்பட்ட அந்தப் பிரதேசத்தின் படங்களையும், ரேடார் படங்களையும் இணைத்து நிலப்பரப்பு வரைபடங்களை (Topographical maps) உருவாக்கினார்கள். அதன் துணைகொண்டு, காளிபங்கன் என்ற புகழ்பெற்ற சிந்துவெளி அகழாய்வுப் பகுதியில் உள்ள பேலியோ சேனல் பிரதேசத்தில், கான்பூர் ஐஐடியின் ராஜிவ் சின்ஹா மற்றும் அஜித் சிங் தலைமையிலான குழு களமிறங்கியது. அங்குள்ள மணல் படுகையில் சுமார் 131 அடிக்கு ஆழ்துளைகளை உருவாக்கி அடுக்கடுக்காக உள்ள வண்டல் மற்றும் படிவுகளைச் சேகரித்தார்கள். இது போர்வெல் தோண்டுவது போன்று கடகடவென்று ஒரேயடியாகத் துளை போடும் வேலை அல்ல. ஒவ்வொரு மூன்று அடி தோண்டிய பின்பும் மணல் வந்து மூடிவிடாமல், பரிசோதனைக்குத் தகுதியான சிதறாத படிவப் பாளங்களை (Cores of sediment that won’t crumble) பொறுமையாகச் சேகரிக்க வேண்டும். ஐந்து இடங்களில் துளையிட்டு ஐந்து வாரங்கள் இந்த சேகரிப்புப் பணி நிகழ்ந்தது.

இவ்வாறு சேகரித்த வண்டல் படிவப்பாளங்கள் பல்வேறு விதமான பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டன. இமயத்தின் பனிமலைகளிலிருந்து உற்பத்தியாகும் நதிகளுக்கே உரியதான கரும்பழுப்பு மற்றும் சாம்பல் நிறத்திலான மலைப்பாறைகளின் வண்டல்களின் தடயங்கள் ஆரம்பத்திலேயே வெளிப்பட்டன. அந்த வண்டல்கள் குறிப்பிட்ட எந்த நதியினுடையவை என்பதைக் கண்டுபிடிக்க, அவற்றில் படிந்துள்ள மைகா மற்றும் ஜிர்கான் (Zircon) ஆகிய உலோகங்களின் ஆயிரக்கணக்கான துகள்களின் வயதைக் கணக்கிட்டார்கள். அவை இப்போது வடக்கில் பஞ்சாப் பகுதியில் பாயும் சட்லெஜ் நதியின் வண்டல்களுடன் முழுமையாகப் பொருந்தி வந்தன.

நதிகளின் தடமாற்றம் நிலவியலில் Avulsion என்று அழைக்கப்படுகிறது. இங்கு பாய்ந்த சட்லெஜ் நதி வரலாற்றில் எந்தக் காலகட்டத்தில் இப்படித் தடம்மாறிச் சென்றது என்பது அடுத்த புதிர். அதை விடுவிப்பதற்காக, Optically Stimulated Luminescence (ஒளிக்கற்றைகளால் தூண்டப்பட்ட ஒளிர்வு) என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தினார்கள். குவார்ட்ஸ் போன்ற படிகங்களின் துகள்கள் பூமிக்குள் புதையும்போது அவற்றைச் சுற்றியுள்ள மண்துகள்களிலிருந்து வெளிப்படும் கதிரியக்கம், இந்தப் படிகங்களில் உள்ள எலக்ட்ரான்களின் மீது தாக்கம் செலுத்துகிறது. இவ்வாறு தூண்டப்பட்ட எலக்ட்ரான்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும். இது அந்தப் படிகத் துகள் சூரிய வெளிச்சத்திலிருந்து பூமிக்குள் வந்து எவ்வளவு காலமாயிற்று என்பதை அளவிட உதவும் ஒரு இயற்கையான ‘ஸ்டாப் வாட்ச்’ கடிகாரம்போல செயல்படுகிறது. இந்த அளவீட்டின் மூலம், சுமார் 4800லிருந்து 3900 ஆண்டுகள் முன்பு, அதாவது சிந்துவெளி நகர நாகரிகம் அதன் உச்சத்தில் இருந்தபோது, இப்பகுதிகளில் சிறுமணல் துகள்களும் சேற்று வண்டலும் மட்டுமே இருந்தன என்ற முடிவுக்கு வந்தனர். இத்தகைய ‘துகள் சூழல்’ நதி நீரோட்டத்தில் ஒருபோதும் இருப்பதில்லை.

சட்லெஜ் நதியின் இந்தத் தடமாற்றத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. பூகம்பம் போன்ற இயற்கை நிகழ்வுகளோ அல்லது வானிலை மாற்றங்களின் விளைவுகளோ எதுவாகவும் இருக்கலாம். ஆனால், இந்தத் தடமாற்றம் உருவாக்கி விட்டுச்சென்ற பகுதியானது வெள்ளங்களால் பாதிக்கப்படும் சாத்தியம் கொண்ட நதிப்படுகையை விடவும் விவசாயத்திற்கும், வாழ்க்கைக்கும் சௌகரியமானதாக இருந்திருக்கிறது. அதுவே நாகரிகம் இங்கு செழித்ததற்குக் காரணம் என்று ஆய்வுக்குழுவினர் கருதுகின்றனர். நதிகளைச் சாராமல் நிலத்தடி நீரை ஆதாரமாகக்கொண்டு தான் இன்றளவும் இப்பகுதியில் விவசாயம் செய்யப்பட்டு வந்திருக்கிறது. சமீபகாலங்களில்தான் பல்வேறு புறச்சூழல் காரணிகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இந்த ஆராய்ச்சி முடிவுகள் இந்தியாவின் தொல்வரலாற்றைக் குறித்து இதுவரை நமது வரலாற்றாசிரியர்கள் சொல்லிவந்த பல விஷயங்களை ஒரேயடியாகப் புரட்டிப் போடுவதாக உள்ளன. ஏற்கெனவே காக்கர் ஹாக்ரா நதி வேதங்களிலும் இதிகாச புராணங்களிலும் கூறப்படும் சரஸ்வதி நதியே என்பது பல ஆய்வாளர்களாலும் ஏற்கப்பட்ட ஒரு கருத்தாக உள்ளது. மைக்கேல் டேனினோ சரஸ்வதி நதி குறித்த தனது நூலில் பல சான்றுகளுடன் இதை விளக்குகிறார். அறிவியல் ஆய்வுகள் எவ்வாறு நமது பழைய நூல்களின் விவரணங்களுடனும் பொருந்துகின்றன என்பதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.

‘அன்னையரில் சிறந்தவளே, நதிகளில் சிறந்தவளே, தேவியரில் சிறந்தவளே, சரஸ்வதி!’ என்கிறது ரிக்வேதம். சரஸ்வதி சமகாலத்தில் உயிரோட்டமுள்ள ஒரு நதியாகவே ரிக்வேதத்தில் பல இடங்களில் புகழப்படுகிறது. ஆனால், மகாபாரதத்தில், ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பாய்ந்து பிறகு ‘வினாசனம்’ என்ற இடத்தில் பூமிக்குள் மறைந்துவிடும் நதியாக சித்தரிக்கப்படுகிறது. பிற்காலப் புராணங்களில் ஒரு தொல்நினைவாக, அந்தர்வாஹினி என்ற பெயரில் பூமிக்கடியில் கண்ணுக்குத் தெரியாமல் ஓடும் நதி என்று கூறப்படுகிறது. நதியின் மறைவே, சிந்து சரஸ்வதி நதி பிரதேசங்களிலிருந்து கங்கை யமுனை பாயும் பிரதேசங்களுக்கான இடப்பெயர்வுக்கான காரணமாக ஒரு சாராரால் கருதப்பட்டது. ஆனால், தற்போதைய ஆய்வுகள் சரஸ்வதி படுகையின் நாகரிகமே ‘நதியற்ற’ காலகட்டத்தைச் சார்ந்தது என்ற திசையில் செல்கின்றன. இதன் மூலம், ரிக்வேதத்தில் செழுமையாக வர்ணிக்கப்பட்ட சரஸ்வதி நதி, இமயப் பனிமலையிலிருந்து பெருகிக் கடலை நோக்கிப் பாயும் பேராறு அல்ல, பெரிதும் மழைநீரைச் சார்ந்து பிரவகித்த நதி (Rain fed River) என்ற கருத்தை சில ஆய்வாளர்கள் வந்தடையக்கூடும். ரிக்வேதத்தை வரலாற்று பூர்வமாக ஆராய்ந்து நூல்களை எழுதியுள்ள ஸ்ரீகாந்த் தலாகேரி (Shrikant Talageri) ரிக்வேதத்தின் சூக்தங்களை மிகப்பழையவை, இடைக்காலத்தவை, இறுதிக்காலத்தவை என்று வகைப்படுத்தி, இவற்றுக்கிடையே பல நூற்றாண்டுக்கால இடைவெளி உண்டு என்றும் கருதுகிறார். ரிக்வேதத்தின் ஆறாவது, ஏழாவது மண்டலங்களில் உள்ள மிகப்பழைய சூக்தங்களில் சரஸ்வதி மையமான பெருநதியாக போற்றப்படுவதையும், இறுதியாக உள்ள பத்தாவது மண்டலத்தின் நதி சூக்தத்தில் மற்ற நதிகளின் பெயர்களுடன் ஒன்றாகப் பட்டியலிடப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். இந்தச் சித்தரிப்பை சமீபத்திய நிலவியல் ஆய்வு முடிவுகளுடன் இணைத்து மேலும் ஆய்வுகள் செய்யப்படவேண்டும்.

எப்படியானாலும், இந்தப் புதிய வரலாற்றுப் புரிதல், ஆரியப் படையெடுப்பு என்ற பொய்யான கோட்பாட்டின் மீது அடிக்கப்பட்ட இன்னொரு சாவுமணி என்பதில் ஐயமில்லை.

சான்றுகள்:

1) News in The Hindu – http://www.thehindu.com/sci-tech/energy-and-environment/indus-civilisation-developed-around-extinct-river-study/article21111749.ece

2) Live Science report – https://www.livescience.com/61039-ancient-indus-civilization-survived-without-rivers.html

3) சரஸ்வதி: ஒரு நதியின் மறைவு – மிஷல் தனினோ, தமிழில்: வை. கிருஷ்ணமூர்த்தி, வெளியீடு: கிழக்கு பதிப்பகம்.

Leave a Reply