
* சிந்தனையாளரும் கவிஞருமான திருவள்ளுவர் அலெக்ஸாண்டிரியாவிலிருந்து அப்பகுதிக்கே உரிய தனித்தன்மையுடன் வந்த கிறிஸ்தவ மதக்கோட்பாடுகளை உள்வாங்கி இருக்கிறார். ஏசுவின் மலைப்பிரசங்கக் கருத்துகளைத் தன் நூலில் புகுத்தி இருக்கிறார். வள்ளுவருக்கு, உத்வேகம் அளித்தவற்றில் கிறிஸ்தவ மதநூல்களும் உண்டு என நான் கூறுவேன்.
* தமிழர்கள் கிறிஸ்தவத்துக்கோ அல்லது இஸ்லாமுக்கோ மாறவேண்டும். இல்லையென்றால் தி.மு.க.வில் இணைவதன் மூலம் ‘திராவிட சமயத்துக்கோ’ மதம் மாறவேண்டும்.
முதல் பத்தி ஜி.யு. போப் தனது திருக்குறள் மொழிபெயர்ப்பின் முன்னுரையில் எழுதியது. இரண்டாவது பத்தி ஜூலை 2010ல் கோவையில் நடந்த செம்மொழி மாநாட்டில் பிஷப் எஸ்ரா சற்குணம் ‘தமிழ் மெய்யியல்’ என்ற அமர்வில் பேசியது. நூற்றாண்டுகள் கடந்தும் சிந்தனையில் ஒத்திசைவாக இரண்டு ஆளுமைகளும் இயங்கியதன் உள்நோக்கத்தை அறிய ‘கயாஸ் தியரி’யை அறிந்திருக்க வேண்டிய அவசியமில்லை.
பாகிஸ்தான் என்ற நாடு இந்தியாவில் பிரிவினையைத் தூண்டிவிடுவது ஏன்?
சீனா இந்திய மாவோயிஸ தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பது ஏன்?
மதமாற்ற அமைப்புகள் வட அமெரிக்க, ஐரோப்பிய ஆதரவுடன் பிரிவினை சக்திகளைத் தூண்டுவது ஏன்?
இந்த மூன்று கேள்விகளுக்குமான பதிலை ஐந்து வருட ஆராய்ச்சிகளின் முடிவில் பெறப்பட்ட அசைக்கமுடியாத தரவுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட முக்கியமான புத்தகம் ‘உடையும் இந்தியா? – ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும்.’ ராஜிவ் மல்ஹோத்ராவும் அரவிந்தன் நீலகண்டனும் இணைந்து ஆங்கிலத்தில் எழுதிய நூலை அரவிந்தன் நீலகண்டன் தமிழாக்கியுள்ளார். கிழக்கு வெளியீடு.
மொகலாயர்கள், டச்சுக்காரர்கள், ஃப்ரெஞ்சுக்காரர்கள், போர்த்துக்கீசியர்கள், பிரிட்டிஷ்காரர்கள் என சற்றேறக்குறைய ஆயிரம் ஆண்டுகளாக விதேசிகளால் ஆளப்பட்ட இந்தியா விடுதலைக்குப் பின்னர் தன்னுடைய வரலாற்றை துரதிர்ஷ்டவசமாக மேற்படி காலனிய ஆதிக்கவாதிகளால் எழுதப்பட்ட நூல்களின் மொழிபெயர்ப்பிலிருந்து பெருமளவு உருவாக்கிக்கொண்டது. இதன் விளைவாக, பாரதத்தில்
– மொகலாயர்களால் கலை, இசை வளர்ந்தன.
– ஐரோப்பியர்களால் அறிவியல் வளர்ந்தது.
– இந்துமத சாதி ஆதிக்கத்திலிருந்து தலித்துகள் விடுதலை பெற்றனர்.
சுருக்கமாகச் சொன்னால் ‘காட்டுமிராண்டிகளான இந்தியர்கள்’ நாகரிகம் அடைந்தனர் என்ற வரலாறு உருவாக்கப்பட்டுள்ளது.
வேதங்கள், புராணங்கள், சாஸ்திரங்கள், தத்துவங்கள், கலைகள் இவற்றால் பல்லாயிரம் ஆண்டுகளாக செழுமைப்படுத்தப்பட்ட இந்துமதமும் இந்தியாவும் ‘காலாசாரப் பண்பாட்டு வறுமை’யில் காலங்காலமாக இருந்ததாக வரலாறு திரிக்கப்பட்டு பாடப்புத்தகங்கள் வரை பரவியுள்ளது. அதனை மறுத்து உண்மையான வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்கிறது மல்ஹோத்ராவின் ‘உடையும் இந்தியா?’
500 பக்கங்களில் 19 அத்தியாயங்கள். அரிதான கடும் உழைப்பினால் பெற்ற தரவுகள், மேற்கோள்கள் அடங்கிய 260 பக்க பிற்சேர்க்கை எனப் புத்தகம் அரியதொரு ஆவணமாக மிளிர்கின்றது.
வீரமாமுனிவர் எழுதிய ‘பரமார்த்த குரு’ கதைகளை உவப்புடன் நமது தமிழ்மக்கள் போதிக்கின்றனர். கான்ஸ்டான்டைன் ஜோஸப் பெஸ்கி என்ற மதமாற்றம் செய்யவந்த பாதிரி, தைரியநாதராகி, பின் வீரமாமுனியாகி, இந்துமதத் துறவிகளை முட்டாள்களாகச் சித்தரிக்கும் உள்நோக்கத்துடன் எழுதப்பட்டதே ‘பரமார்த்த குரு கதைகள்’ என்பதை அறிய இந்நூலை வாசிக்க வேண்டும்.
பிராமணர்களை தமிழர்கள் அல்லாதோர் என்றும், ஆரிய வந்தேறிகள் என்றும் நிறுவப்படும் கருத்து வரலாற்று உண்மையல்ல. 1840களில் ஸ்காட்டிஷ் மிஷனர் சொஸைட்டியினரால் அனுப்பப்பட்ட ரெவண்ட் ஜான் ஸ்டீவன்ஸனால் விதைக்கப்பட்ட புனைவு என்பதையும், ஏழாம் நூற்றாண்டில் பிராந்தியம், மொழி ஆகியவற்றைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட சொல்லான ‘திராவிடன்’ என்ற சொல்லை முதன்முதலாக இனக்கோட்பாட்டுப் பொருளில் பிஷப் ராபர்ட் கால்டுவெல் 1856ல் பயன்படுத்தியதையும், ‘உடையும் இந்தியா’ ஆதாரங்களுடன் முன்வைக்கிறது.
மதமாற்றம் செய்ய வந்த ஜி.யு. போப்பும் ராபர்ட் கால்டுவெல்லும் தமிழுக்குத் தொண்டாற்றிய அறிஞர்களாக்கப்பட்டு சென்னை மெரீனா கடற்கரையில் சிலைகளாக நிற்கக் காரணம் நம் வரலாற்றினை நாம் அறியாத காரணம் என்பதைப் புத்தகம் கூறுகின்றது.
புத்தகத்தின் முக்கியமான அத்தியாயமாக நான் கருதுவது, பதினோராவது அத்தியாயமான ‘இந்தியப் பிளவுகள் குறித்த மேற்கத்திய புனைவாக்கம்’. இந்தியாவைப் பிளவுபடுத்தவும் இந்திய ஐக்கியத்திலிருந்து தமிழ்நாட்டை விண்டுபோகச் செய்யவும் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படும் நிதியாதாரம் வழங்கும் அமைப்புகள், ஆய்வு நிறுவனங்கள், கிறிஸ்தவச் சபைகள், ஊடகங்கள் ஆகியனவற்றைப் பற்றி இந்த அத்தியாயம் அசைக்க முடியாத ஆதாரங்களுடன் முன்வைக்கிறது. மேலும் இக்கூறுகள் இந்தியாவைத் துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு ஆதரவு அளிப்பதாக உள்ளதை விளக்குகிறது.
‘ஆரிய சூழ்ச்சிக்குத் திராவிடர்கள் பலியானார்கள்’ என்று கால்டுவெல் விதைத்த நச்சுவிதையை, இனக்கோட்பாட்டினை, ஓர் அரசியல் இயக்கமாக ஈ.வெ. ராமசாமி விருட்சமாக வளர்த்தெடுத்தார். பிராமணர்களுக்கு எதிராக அதிதீவிரமான வன்முறையைச் செயல்படுத்துமாறு பேசியும் எழுதியும் அழைப்பு விடுத்தார். ஏறக்குறைய ஹிட்லர், முஸோலினி போன்றவர்களின் பிரதிபலிப்பான ‘இனச்சுத்திகரிப்பிற்கு’ அருகில் அமைந்த கோட்பாட்டினை அவர் விதைத்ததை நூல் பேசுகிறது.
இந்தியாவின் விடுதலை நாளை கறுப்பு தினமாக அனுசரிக்கவேண்டும் என்று ஈ.வெ.ரா கூறியது தனது ‘எஜமான விசுவாசத்தால்’ அன்றி வேறில்லை என்பதைப் புத்தகம் நிறுவுகின்றது.
தமிழக அளவில் பிரிவினைவாதத்திற்கு திராவிட அரசுகள் வித்திட்டன என்றால், இந்திய அளவில் இந்தக் குரலை சில அறிவுஜீவிகளாகத் தம்மை நிறுவிக்கொள்வோர் முன்மொழிவதை இப்புத்தகம் கூறுகின்றது. ‘தேபக்தி’ என்பதையே ஆரியச்சாதிச் சதியாகவும் இந்தியா என்ற அமைப்பையே மேல்சாதி அடக்குமுறையின் அமைப்பாகவே கூறும் ரொமிலா தாப்பர், மீரா நந்தா, விஜய் பிரசாத் மற்றும் அங்களா பி.சட்டர்ஜி போன்றோர், இந்திய அளவில் விளிம்புநிலை மக்களின் பெயரால் இயக்கங்கள் நடத்துவோருக்குத் தம் எழுத்தால் பேச்சால் சித்தாந்த மதிப்பு அளிப்பதை நூலாசிரியர்கள் விளக்குகிறார்கள். அவ்விதமே விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு போன்றவை ‘தமிழ்த்தேசியம்’ பேசுவதையும், அதன் தலைவர் திருமாவளவனுக்கு 2009ல் குருகுல் லுத்தரன் கிறித்துவ அமைப்பு ‘இறையியல் முனைவர்’ (Doctor of Divinity) பட்டம் அளித்ததையும் ஆராய்கின்றனர்.
இந்தியா சமயச்சார்பற்ற நாடு, அனைத்து சமய மக்களும் வாழும் பன்மைத்துவம் கொண்ட தேசம் என்பதையே அரசியல் சட்டம் கூறுகின்றது. இந்நூல் கிறித்துவம், இஸ்லாம் இவற்றிற்கு எதிராக வெறுப்பை உமிழ்வதைப்போல் இக்கட்டுரையை வாசிப்பவர்கள் உணரக்கூடும். அதற்கான பதிலும் இந்நூலில் உள்ளது.
1982ல் மண்டைக்காடு பகுதியில் ஏற்பட்ட மதக்கலவரத்திற்குக் காரணமாக கிறிஸ்தவ மதமாற்றமே அடிப்படை என அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் அமைத்த விசாரணைக்குழுவின் தலைவர் வேணுகோபால் கூறியதை மல்ஹோத்ரா விளக்குகிறார். கன்னியாகுமரி என்ற மாவட்டத்தின் பெயரை கன்னிமேரி என மாற்ற முயன்றதைச் சுட்டிக்காட்டிய நீதியரசன் வேணுகோபால், திராவிடக் கோட்பாட்டுச் சாய்வுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘திருக்குறள் கிறிஸ்தவக் கோட்பாட்டையே உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது. சிலப்பதிகாரம் என்ற சமணகாவியமோ, தனது 33 வயதில் சுவர்க்க உடலை அடைந்த தேவகுமாரனைப் பற்றியே பேசுகிறது. கம்பனின் ராமாவதாரம் கிறிஸ்தவப் பார்வை கொண்டது’ என்று கிருஷ்ணப்பிள்ளை நிறுவுகிறார். ‘பக்தி இயக்கம் முழுக்க கிறிஸ்தவ மதிப்பீடுகளே நிறைந்து உள்ளன. பல சித்தர் பாடல்களில் ஏசு குறித்த மறைமுகக் குறிப்புகள் உள்ளன.’ இப்படிக் கூறுவது ‘புத்தம் வீடு’ என்ற நாவலைப் படைத்த ஹெப்சிபா ஜேசுதாஸன் என்ற எழுத்தாளர் என்பதை மல்ஹோத்ரா காட்டும்போது, ஒட்டுமொத்தமாக பாரதத்தின், குறிப்பாக தமிழகத்தின் மதம், காலாசாரம், மொழி, பண்பாடு போன்றவற்றினை கிறித்தவம் செரிக்க முயல்வதை அறிந்து அதிர்ந்துபோகிறோம்.
இன்றைய ஊடகங்களும் மேற்படி மதமாற்றங்களுக்கு ஒத்திசைவாக இயங்குவதைக் கண்கூடாகக் காணலாம். ‘தீபாவளி – அவசியமா? ஆடம்பரமா?’ என விவாதம் நடத்தும் தொலைக்காட்சி அக்கேள்வியை ரம்ஜான், கிறிஸ்துமஸிற்கும் நீட்டிக்காதது ஏன் என்ற கேள்வி எழுகிறதல்லவா?
பட்டாசு வெடித்து, மருதாணி வைத்து தீபாவளி கொண்டாடிய குழந்தைகள் கல்வி நிறுவனமொன்றில் தண்டிக்கப்பட்டதை செய்திகளில் வாசித்தோமல்லவா?
சனாதனமான இந்துமதத்தின் சகிப்புத்தன்மையைப் பிற மதங்கள் எப்படிப் பார்க்கின்றன என்பதையும் தமது மதங்களைப் பரப்ப இந்திய இறையாண்மையையே அவை பலி கேட்கின்றன என்பதையும் ராஜிவ் மல்ஹோத்ராவும் அரவிந்தன் நீலகண்டனும் அருமையாக விளக்குகிறார்கள். அரவிந்தன் நீலகண்டனின் தனித்துவமான மொழிபெயர்ப்பு தெள்ளிய நீரோடை போன்ற வாசிப்பு அனுபவத்தை வழங்குகிறது. இந்துமத வெறுப்பா, இந்தியா மீதான வெறுப்பா என்ற கேள்விக்கு இந்நூலில் சான்றாகக் காட்டும் நூல் ஒன்றை உதாரணமாகக் கூறலாம். சுதந்திரப் பொன்விழாவையொட்டி சேவியரின் பெயரால் நடத்தப்படும் ஏசு சபைக் கல்வி நிறுவனம் வெளியிட்ட நூல் ஒன்றில், தேசியப்பாடலான வந்தே மாதரம் பாடலை சிறுவர்கள் கீழ்க்கண்டவாறு பாடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
‘வந்தே மாதரம்
வந்துருச்சே மூத்திரம்
கொண்டுவா பாத்திரம்
குடிடா சீக்கிரம்.’
‘உடையும் இந்தியா?’ ஏன் முக்கியமான நூல் என்பதை விளக்க மேற்படி ஆதாரம் ஒன்றே போதும்.