டிமானிடைசேஷன் என்னும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைச் சென்ற வருடம் நவம்பர் மாதம் 8ம் தேதி பாரதப் பிரதமர் மோதி திடீரென்று அறிவித்தார். இந்தியாவையே கலக்கிய, உலகத்தையே அசரச் செய்த அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ஒரு வருடம் முடிந்து விட்டது. பிரதமர் மோதி இதைத் தன் கட்சிக்காகவோ அல்லது தன் சுயநலனுக்காகவோ எடுக்கவில்லை. முழுக்க முழுக்க இந்தியாவின் ஒட்டுமொத்த நலன் கருதியும் நாட்டில் நிலவி வரும் கள்ளப் பொருளாதாரம், கள்ளப் பணம், கறுப்புப் பணம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தவும் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை இது. இது அவரது கட்சிக்கே பாதிப்பு ஏற்படுத்தி விடும், அதன் எதிர்கால வெற்றியைப் பாதித்துவிடும் என்ற அபாயங்கள் இருந்தன. இப்போதும் இருக்கின்றன.
இதற்கு முன்னால் இதைச் செயல்படுத்தியபொழுது அவையெல்லாமே பலத்த தோல்வியை மட்டுமே தழுவின. இந்தியாவில் ஏமாற்று நோக்கமுடைய கறுப்புப் பண முதலைகளும் அரசியல்வாதிகளும் கள்ளக் கணக்கு வைத்திருந்த நிறுவனங்களும் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள், அவர்கள் எந்தவொரு திட்டத்தையும் முறியடித்து விடுவார்கள் என்ற பயங்கரமான நிதர்சனமும் முன்னால் பூதாகரமாக நின்றது. அதைச் செயல்படுத்தப்போகும் ரிசர்வ் வங்கியும், வங்கிகளும், பிற அரசுத் துறைகளும் பெரும்பாலும் காங்கிரஸ் கால அலுவலர்களினாலும் கம்யூனிச யூனியன் ஊழியர்களினாலும் நிரப்பப்பட்டவை. அவர்கள் இந்தத் திட்டத்தினை தோல்வி அடையவே செய்வார்கள் என்ற பயங்கரமான யதார்த்தமும் முன்னால் நின்றது. இந்த எச்சரிகைகளை, அபாயங்களை எல்லாம் மீறி, நாட்டு நலன் என்ற ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு மிகத் துணிவாக இந்த நடவடிக்கையை எடுத்தார் மோதி.
இந்தத் திட்டம் தோல்வி என்று மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் இன்னும் பலரும் சொல்கிறார்கள். இந்தத் திட்டம் படுதோல்வி என்று எதிர்க்கட்சியினரும் சில பாஜகவினரும் கூடச் சொல்கிறார்கள்.
இத்திட்டத்தினை யாரெல்லாம் எதிர்க்கிறார்கள்?
* இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் ஆட்கள், மோசடி வியாபாரிகள், பணத்தைப் பதுக்கிய டாக்டர்கள், கல்வி வியாபாரிகள், அரசியல்வாதிகள், வரி கட்டாமல் கறுப்புப் பணத்தை ஒளித்து வைத்திருந்தவர்கள், மோசடிப் பேர்வழிகள் என்று இதனால் பாதிக்கப்பட்ட அனைவருமே மோதியைக் கடுமையாகத் தாக்கி இது தோல்வி என்று சொல்லி பிரசாரம் செய்து வருகிறார்கள்
* 70 ஆண்டுகளாக ஆட்சி செய்தும் கறுப்புப் பணத்தையும் ஊழல்களையும் மெத்தனமான நீதி அமைப்புகளையும் சீர் செய்ய எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல் அந்த ஓட்டைகள் வழியாகத் தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் சொத்து சேர்த்த காங்கிரஸ் கட்சிக்காரர்கள், திராவிடக் கட்சிக்காரர்கள் இன்னும் பல ஊழல் கறை படிந்த மாநிலக் கட்சிக்காரர்கள் அனைவரும் இந்தத் திட்டத்தினைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்.
* இன்னொரு தரப்பினர், மோதி ஒழியவேண்டும் என்பதை மட்டுமே குறியாகக் கொண்டவர்கள். இந்தியா அழிந்தாலும் பரவாயில்லை, மோதி ஒழியவேண்டும் என்பது இவர்களது தரப்பு. ஒரு பக்கம் ஊழல் ஒழியவேண்டும், லஞ்சம் அழியவேண்டும் என்று பேசிக்கொண்டே மறுபக்கம் இந்தத் திட்டம் தோல்வி என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் காந்திய நேருவியவர்கள். இந்தியாவை காங்கிரஸ் கட்சி மட்டுமே ஆள முடியும் என்று நம்பும், வேறு மாற்றுத் தலைமையை ஏற்க மறுக்கும், காலத்தால் உறைந்து போனவர்கள்.
* இன்னொரு தரப்பினர் அதிகம் யோசிக்க இயலாதவர்கள். இந்தத் திட்டம் துவங்கிய அன்றே இதை வசை பாடியவர்கள் இவர்கள். இது என்ன ஏது என்று எதுவும் தெரியாது. இதன் மூலம் லாபமோ நஷ்டமோ எதுவும் இவர்களுக்கு இருக்காது. இருந்தாலும் கருத்து மட்டும் சொல்வார்கள். எதைப் பற்றியும் எதிராக மட்டுமே பேசுவார்கள். பத்திரிகைகளின் வரும் கருத்துகளின் அடிப்படையில் இந்தியாவுக்கு எதிரான கருத்தை உருவாக்கிக்கொண்டு அதன்படிப் பேசுபவர்கள் இவர்கள்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கம்
நரேந்திர மோதி பதவியேற்பதற்கு முன்பாகத் தன் தேர்தல் பிரசாரங்களின்பொழுது இந்தியாவில் கணக்கில் வராத, வரி கட்டப் படாத கறுப்புப் பணத்தை எங்கு ஒளித்து மறைத்து வைக்கப்பட்டிருந்தாலும் மீட்டுக் கொண்டு வருவேன் என்று கூறினார். தலைக்கு 15 லட்சம் தருவேன் என்று அவர் எங்கும் சொல்லவில்லை. அப்படி மீட்டெடுத்து வந்தால் அது தலைக்கு 15 லட்சம் வீதமாக இருக்கும் அளவுக்குப் பெரிய தொகை என்று கூறினார்.
அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்பது அவருக்கும் தெரியும். அதற்கு அவர் முழு மூச்சாக இறங்கினால் அவர் கொலை கூடச் செய்யப்படக் கூடும் என்ற அபாயமும் அவருக்குத் தெரியும். இருந்தாலும் அந்தக் காரியத்தில் பல்வேறு வழிகளில் இறங்க முடிவு செய்தார்.
வெளிநாடுகளில் இருந்து கறுப்புப் பணத்தை மீட்பது ஒரு நடவடிக்கை. உள்நாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தை வெளியே கொண்டு வந்து பணப்புழக்கத்தை அதிகரிப்பதும் அதன் மூலமாக வரி வருவாயைப் பெருக்குவதும் இன்னொரு நடவடிக்கை.
உள்நாட்டில் உள்ள கறுப்புப் பணத்தை வெளியே கொண்டு வர அவர் முயற்சித்ததுதான் இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை. உள்நாட்டில் ரிசர்வ் வங்கி அச்சடித்து புழக்கத்தில் விட்டிருந்த பெரிய மதிப்புப் பணமான 1000/500 ரூபாய் கரன்ஸிகள் அனேகமாக அன்றாட வர்த்தகப் புழக்கத்திற்கு வரவில்லை. அவை பெரும் அளவில் பல இடங்களில் முடக்கப்பட்டுள்ளதாக நம்பப்பட்டது. ஆகவே அவற்றைச் செல்லாததாக ஆக்குவதன் மூலமாக வெளியே கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சி இது.
*
2016 நவம்பர் 9 அன்று ரூபாய் நோட்டுகள் செல்லாதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் டிசம்பர் 31 வரையிலும் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். கணக்கில் காட்டாத பணத்தை வங்கிகளில் கட்டத் துணிய மாட்டார்கள். ஆகவே அவை வெளியே வராது. அப்படித் திரும்பி வராத பணம் எப்படியும் ஒரு 5 லட்சம் கோடிகள் இருக்கும். அவ்வளவும் அரசாங்கத்துக்குச் சொந்தமாகிவிடும் என்று பலரும் கனவு கண்டார்கள். ஆனால் உண்மை நிலவரம் வேறு மாதிரி ஆனது. கிட்டத்தட்ட 99% பணம் திருப்பி வங்கிகளில் வந்து சேர்ந்து விட்டதாக ரிசர்வ் வங்கி அறிவித்துவிட்டது.
இப்படி 99% பணம் திரும்பி வங்கிகளுக்கே வந்து சேர்ந்து விட்டபடியால் இந்தத் திட்டம் ஒரு மாபெரும் தோல்வி என்று எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அதில் உண்மை இல்லை. ஏனென்றால் வெளியே இருக்கும் பணத்தின் எண்ணிக்கை என்ன என்பதிலேயே ஒரு திட்டவட்டமான தெளிவு ரிசர்வ் வங்கியிடம் இல்லை. இதை இந்தப் பெரும் அளவில் திரும்பிய பணம் நிரூபிக்கிறது. இது, ரிசர்வ் வங்கி கரன்ஸிக் கணக்கு வைக்கும் முறை மீது பெரும் அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. இதுவே இந்த நடவடிக்கையில் ஏற்பட்ட முதல் விளைவாகும்.
ரிசர்வ் வங்கியின் கணக்கின் மீதான அவநம்பிக்கை
ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிட்டதாகக் கணக்குக் காட்டிய அத்தனை 1000/500 கரன்ஸிகளும் வங்கிகளுக்குத் திரும்பி வருகிறது என்றால் இந்தியாவில் எல்லோரும் யோக்கியர்களா? ஒருத்தனிடம் கூட கறுப்புப் பணம் இல்லையா? அப்படி இருக்கவே முடியாது. அது சாத்தியமே அல்ல.
இப்பொழுது 99% திருப்பி வந்து விட்டது என்று சொல்வதைப் பார்க்கும் பொழுது ரிசர்வ் வங்கி சொல்லும் கணக்கில் ஏதோ தவறு உள்ளது என்பது உறுதியாகிறது. ஆனால் இன்னும் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பணம், நேபாளம் மூலமாக வரப் போகும் பணம், இன்னும் எண்ணப் படாத என்.ஆர்.ஐக்களின் பணம் எல்லாம் சேர்த்தால் ஒரு 120% கணக்கு வருமா? ரிசர்வ் வங்கி அச்சடித்ததோ 100%. ஆனால் திருப்பி வருவதோ 120%? அதெப்படி? இன்று அச்சடித்து வெளியில் விட்டதாகச் சொல்லப் படும் கரன்ஸிகளை விட அதிகமான பணம் மீண்டும் உள்ளே வரும் சாத்தியமிருப்பது, பல சந்தேகங்களை எழுப்புகிறது.
மோதி அரசாங்கம் பணமதிப்பிழப்புக்கான நடைமுறைகளைத் தனியே செயல்படுத்தி விட முடியாது. மத்திய ரிசர்வ் வங்கி, வங்கிகள், வருமான வரித் துறை மற்றும் பிற நிதித் துறைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய வேலை. இதில் முக்கியமான அங்கம் ரிசர்வ் வங்கி. ஆனால் ரிசர்வ் வங்கியோ ரகுராம் ராஜன் என்பவர் தலைமையில் இருந்தது. அவரை நம்பி இதில் இறங்க முடியாது என்பதற்காகப் பொறுமையாக அவர் வெளியேறும் வரை காத்திருக்க வேண்டி வந்தது. ரகுராம்ராஜனும் அவருக்கு முன்பாக கவர்னராக இருந்தவர்களும் அளித்த கணக்குகளின் அடிப்படையிலேயே மோதி அரசு செயல்பட வேண்டிய கட்டாயம் நிலவியது. ரிசர்வ் வங்கி சொல்லும் கணக்கை மட்டுமே நம்ப வேண்டும். வேறு வகைகளில் அதைச் சரிபார்க்க முடியாது.
காங்கிரஸ் அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் ரிசர்வ் வங்கி, கணக்கில் இல்லாமல் அதிகமான நோட்டுக்களை அச்சடித்துப் புழக்கத்தில் விட்டிருக்கலாம். அப்படி விட்டிருந்தால் அந்தப் பணம் என்றும் கணக்கில் வரப் போவதில்லை. ஒரு வேளை அப்படி ஒரே சீரியல் நம்பர்களில் இரண்டு தாள்களை அச்சடித்து வெளியிட்டிருக்கக் கூடுமோ என்ற சந்தேகத்தை இந்த நடவடிக்கையின் விளைவு ஏற்படுத்துகிறது.
ரிசர்வ் வங்கியை மேற்பார்வை செய்ய எந்த அமைப்பும் கிடையாது. அவர்கள் சொல்வதே கணக்கு. அதன் கவர்னர்கள் பெரும்பாலும் காங்கிரஸ் விசுவாசிகளாக இருந்தவர்கள். இதுவரை வெளியிட்டிருந்த முழு பணத்தையும் கணக்கில் வைத்திருந்தால், கணக்குக்குத் திரும்பாத கறுப்புப் பணம் திரும்பாத பணம் அரசுக்குச் சொந்தம் என்ற நிலை ஏற்பட்டிருக்கும்.
ஆகவே இந்த நடவடிக்கையின் முதல் விளைவு, ரிசர்வ் வங்கியின் கரன்ஸி கணக்கின் மீது ஏற்பட்டிருக்கும் மாபெரும் சந்தேகம். ஏன் மோதி அரசு எல்லாரையும் விசாரித்து அப்படி ஏதேனும் இரட்டைப் பணம் அச்சடிக்கப்பட்டுள்ளதா என்ற உண்மையை வெளியே கொண்டு வரக் கூடாது என்று கேட்கலாம். அது மோதியினால் மட்டும் அல்ல, அந்தக் கடவுளினால் கூட முடியாது. ஏன்?
மோதி அரசாங்கம் திருடவில்லை என்றாலும் கூட முந்தைய அரசுகள் திருடியதைக் கூட வெளியில் சொல்ல முடியாத நிலை. ஒருவேளை அது உண்மையாக இருக்கும்பட்சத்தில், இப்படி எங்கள் ரிசர்வ் வங்கியே முந்தைய ஆளும் கட்சியின் உத்தரவின் பேரில் கள்ள நோட்டு அடித்து வெளியில் விட்டு நாட்டின் பொருளாதாரத்தை செயற்கையாக அதிகரித்து ஏமாற்றியுள்ளது என்பதை உலக நாடுகளிடம் சொல்ல வேண்டி வரும். அது இந்தியாவின் நம்பிக்கையின் மீதான பெரும் அடியாக இருக்கும். இந்தியா உலக அளவில் மாபெரும் மோசடி நாடாக அறியப்பட்டு இந்தியாவின் பண மதிப்பும் ஒட்டுமொத்த அங்கீகாரமும் அதல பாதாளத்துக்குப் போய் விடும்.
ரிசர்வ் வங்கி நோட்டுக்களைக் கணக்கில் காட்டாமல் அதிகமாக அச்சடித்திருக்கலாம் என்ற அச்சம் ஒருவேளை உண்மையாக இருந்தாலும்கூட ஊமை கண்ட கனவு போல ஒருவரிடமும் சொல்லாமல் வலியை உள் வாங்கிக் கொள்வதைத் தவிர இன்றைய அரசுக்கு வேறு வழியில்லை.
*
இதற்கு முன்பாக 1978ல் மொரார்ஜி தேசாய் பிரதமராகவும் ஹெச்.எம்.பட்டேல் நிதி மந்திரியாகவும் இருந்த சமயத்தில் இதே போன்றதொரு டிமானிடைசேஷன் நடந்தது. மொரார்ஜியின் ஜனதா அரசு திடீரென்று ஜனவரி 16, 1978 அன்று புழக்கத்தில் இருந்த 1,000,5,000,10,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தது. அப்பொழுதும் கூட கையில் இருக்கும் செல்லாத கரன்ஸிகளை வங்கியில் செலுத்துமாறு சொல்லப்பட்டது. அப்பொழுது அச்சடித்துப் புழக்கத்தில் இருந்த மொத்த 1,000/5,000/10,000 கரன்ஸிகள் மொத்தமே 180 கோடி ரூபாய் மட்டுமே. அப்பொழுது வங்கிகளுக்குத் திருப்பி வந்த பணம் கிட்டத்தட்ட 160 கோடி ரூபாய். மீதமுள்ள 20 கோடி ரூபாய் மட்டுமே கறுப்புப் பணமாகக் கருதப்பட்டது
அதாவது 180 கோடியில் 20 கோடி என்பது கிட்டத்தட்ட 11%. அதாவது புழக்கத்தில் இருந்த பணம் வெறும் 180 கோடிகளாக இருந்த காலத்தில்கூட 11% கறுப்புப் பணம், அதாவது வரி கட்டாமல் ஏய்த்த பணம், ஒளித்து வைக்கப்பட்ட பணம் திரும்பி வந்துள்ளது. அப்பொழுது புழக்கத்தில் இருந்துள்ள மொத்த கரன்ஸிகளில், 1,000/5,000/10,000 கரன்ஸிகள் வெறும் 10% மட்டுமே. மீதமெல்லாம் சிறு மதிப்பு கரன்ஸிகளே. ஆக 10% புழக்கத்தில் இருந்த பெரு மதிப்பு கரன்ஸிகளில் 11% திருப்பி வராமலேயே அரசாங்கத்துக்கு வருமானமாகக் கருதப்பட்டது. இது 1978ன் நிலமை. இன்று 39 வருடங்கள் கழித்து, புழக்கத்தில் உள்ள 1000/500 கரன்ஸிகளின் மதிப்பு, ரிசர்வ் வங்கியின் கணக்குப் படி 87%. அதாவது பெரும்பாலான பணம் இந்த அதிக மதிப்புப் பணங்களாகவே காலப்போக்கில் அச்சடிக்கப்பட்டுள்ளன.
இப்பொழுது புழக்கத்தில் அச்சடித்து விடப்பட்ட 15.44 லட்சம் கோடி பணத்தில் 15.28 லட்சம் கோடி ரூபாய்கள் வங்கிகளுக்குத் திருப்பி வந்து விட்டதாக ரிசர்வ் வங்கி சொல்லியிருக்கிறது. அதாவது அச்சடித்து வெளியிட்ட மொத்த 15.44 லட்சம் கோடி கரன்ஸிகளில் 16,000 கோடி ரூபாய் மட்டுமே அதாவது வெறும் 1%க்கும் குறைவான கரன்ஸிகள் மட்டுமே திரும்பி வரவில்லை.
1978ல் 11% திருப்பிச் செலுத்தாமல், காணாமல் போன பணம், 2017ல் வெறும் 1% ஆகச் சுருங்கியது எப்படி? ஆக 39 ஆண்டுகளில் இந்தியர்கள் மாறி விட்டார்களா? ஒட்டுமொத்த இந்தியாவுமே தூய்மையாகி விட்டதா? இந்தியாவில் கறுப்புப் பணம் என்பதே இல்லையா என்ன? ரிசர்வ் வங்கி திருப்பி வந்ததாகச் சொல்லும் கணக்கில் தவறு இருக்கும் என்று சொல்ல முடியாது. அது சரியாகவே இருக்கலாம். இன்னும் சொல்லப் போனால் குறைவாகக் கூட வெளியில் சொல்லப்பட்டிருக்கலாம். அப்படியானால் அது அச்சடித்து வெளியிட்டதாகச் சொல்லும் 15.44 லட்சம் கோடிகளில்தான் தவறு இருக்கவேண்டும்.
இந்த நடவடிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டுவது என்ன?
1. ரிசர்வ் வங்கியிடம் அச்சடித்து வெளியிட்ட பணத்திற்கான சரியான கணக்கு விபரம் இல்லை. ஒழுங்காகக் கணக்கு வைக்கவில்லை.
அல்லது
2. ரிசர்வ் வங்கி கணக்கில் காட்டியதை விடவும் அதிக அளவில் கரன்ஸிகளை அடித்து யாருக்கோ கொடுத்துள்ளது. அப்படிக் கொடுத்திருந்தால் அதற்குப் பெயர் அரசாங்கமே அச்சடித்தக் கள்ளப் பணம். அது உலக வர்த்தகத்தையும் இந்திய மக்களையும் ஏமாற்றும் செயல். இந்திய மக்களின் மீதான ஒரு பொருளாதாரப் பயங்கரவாதம். உலக நாடுகளை ஏமாற்றிய ஒரு மாபெரும் பொருளாதார மோசடி.
யூகம் 1 சரியாக இருக்க வாய்ப்புக் குறைவு. ஏனென்றால் தான் அச்சடிக்கும் பணத்திற்கான கணக்கை ரிசர்வ் வங்கி தப்பாக வைத்திருக்க வாய்ப்பில்லை. அந்த அளவுக்கு நமது அக்கவுண்ட்டிங் முறை மோசமாக இருக்க முடியாது. அப்படியானால் யூகம் 2 மட்டுமே சரியாக இருக்க அதிகம் வாய்ப்புள்ளது. எதுவாக இருந்தாலும் இப்பொழுது ஆர்.பி.ஐ கரன்ஸி அச்சடிக்கும் முறையில் எங்கோ தவறு செய்கிறது என்பது இந்த டிமானிடைசேஷன் மூலமாக வெளி வந்துள்ளது.
அப்படியே திரும்பி வராத 16,000 கோடி ரூபாயும் கூட இந்திய அரசுக்கு லாபம் என்று சொல்லி விட முடியாது, ஏனென்றால் அதற்கும் மேலாகப் புது நோட்டு அச்சடிக்க செலவு செய்திருக்கிறார்கள்.
ஆக, மொத்தமாக இந்த டிமானிடைசேஷனினால் நஷ்டம் என்று சொல்லி விடலாமா? இதுபோக ஒட்டுமொத்த ஜிடிபி குறைவினால் ஏற்பட்ட இழப்புகளையும் இந்தக் கணக்கில் சொல்லி மாபெரும் தோல்வி என்று சொல்லி விடலாமா? அப்படித்தான் பி.சிதம்பரமும், ரகுராம் ராஜனும் சொல்லுகிறார்கள். ஆனால் அது உண்மையா? இதில் வேறு பலன்களே கிடையாதா? உண்டு. இந்த மேலோட்டமாகத் தெரியும் நஷ்டத்தை விடவும் அரசாங்கம் ஒட்டுமொத்தமாகப் பல நேரடியான மறைமுகமான குறுகிய கால/நீண்ட கால பலன்களை அடைந்துள்ளது.
கள்ளப் பணத்தின் பெரும்புழக்கம்
இந்தியப் பொருளாதாரத்தின் பெரும் தலைவலியாக இருந்தது பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்டு நேபாளம், கேரளா வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டு புழக்கத்தில் விடப்பட்ட கள்ளப் பணம். இது கறுப்புப் பணம் அல்ல. இந்திய ரிசர்வ் வங்கியினால் அச்சடிக்கப்படாமல் பாகிஸ்தானிலும் இந்தியாவுக்குள்ளாகவும் அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்ட போலி கரன்ஸிகள். இந்திய ரூபாய் தாள்களைப் போலவே தோற்றமளிக்கும் இந்தப் போலி கரன்ஸிகள் மிக அதிக அளவு, அதாவது இந்தியாவின் ஒட்டுமொத்த வளர்ச்சியையும் பொருளாதாரத்தையுமே அசைத்துப் பார்த்து விடும் அளவு நாட்டிற்குள் புழங்கிக் கொண்டிருந்தது.
இந்தக் கள்ளப் பணம் பெரும்பாலும் இஸ்லாமியப் பயங்கரவாதிகளினாலும் இந்திய விரோதிகளினாலும் கள்ளப் பண விநியோகிப்பாளர்களினாலும் புழக்கத்தில் விடப்பட்டு ஒன்று. இவற்றைக் கண்டுபிடிப்பதும் சிரமம். இந்தக் கள்ளப் பணத்தின் உதவியினால் இந்தியாவில் பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்தன. காஷ்மீரில் ராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. கட்டுப்படுத்த முடியாத விதத்தில் மிக அதிக அளவு கள்ளப் பணம் புழக்கத்தில் இருந்தது. ஒரு கட்டத்தில் இந்தியாவின் இருப்பையே அச்சுறுத்தும் அளவுக்கு வளரும் அபாயகரமான கட்டத்தை எட்டியபொழுது அதைக் கட்டுப்படுத்தும் விதமாகவும் இந்த டிமானிடைசேஷன் கொண்டு வரப்பட்டது
இந்த நடவடிக்கையின் ஆகச் சிறந்த வெற்றிகளில் ஒன்று கள்ளப் பணத்தின் புழக்கம் அறவே ஒழிக்கப்பட்டது. கள்ளப் பணங்கள் பெரும்பாலும் 1000/500 நோட்டுகளாகவே அச்சடிக்கப்பட்டுப் புழக்கத்தில் விடப்பட்டன. அந்த வகையான கள்ளப் பணங்கள் வங்கிகளுக்குள் நுழைய முடியாது என்பதினால் அப்படி அச்சடிக்கப்பட்ட அத்தனை கள்ள போலி கரன்ஸிகளும் பயனில்லாமல் எரிக்கப்பட்டன. அந்த வகையில் இந்தியாவில் ஊடுருவிய கள்ளப் பணம் ஒழிக்கப்பட்டது. அதன் மூலமாக இந்தியாவில் நிலவி வந்த மாற்றுப் பொருளாதாரம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது. டிமானிடைசேஷனுக்குப் பிறகு புதிய ரூபாய் தாள்களுக்கு இணையான போலி கரன்ஸிகள் வெகுவாகக் குறைந்துவிட்டன. உள்ளே வந்த போலி கரன்ஸிகளும் கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக ஒழிக்கப்பட்டன.
கறுப்புப் பணம்
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அச்சடித்தாகச் சொல்லும் அனைத்து கரன்ஸிகளுமே உள்ளே வந்திருக்கலாம். ஆனால் அவை உள்ளே வந்ததினாலேயே அவை வரி கட்டப்பட்ட பணம் என்று எடுத்துக் கொள்ள முடியாது. இந்த நடவடிக்கையின் மூலமாக ஏராளமான கறுப்புப் பணப் பதுக்கல்காரர்கள் தாங்கள் வரி கட்டாமல் ஒளித்து வைத்திருந்த கறுப்புப் பணத்தை எல்லாம் பினாமிகள் மூலமாக அவர்கள் வங்கிக் கணக்குகளில் செலுத்தவேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளானார்கள். அப்படி வங்கிகளுக்குச் சந்தேகமான முறையில் வந்துசேர்ந்த அத்தனை பரிமாற்றங்களும் இப்பொழுது விசாரிக்கப்படுகின்றன. அவற்றிற்கான வரி கட்டப்பட்ட தகவல்கள் அளிக்கப்படாமல் போனால் அவை கறுப்புப் பணமாகக் கருதப்பட்டு வரிகளும் அபராதங்களும் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்படவிருக்கின்றன.
மென்பொருள் துறையின் பிக் டேட்டா அனாலிடிக்ஸ் மென் பொருட்கள் மூலமாக அப்படி சந்தேகத்துக்கிடமான வகையில் செலுத்தப்பட்ட கணக்குகள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் 17.74 லட்சம் சந்தேகத்துக்கிடமான வங்கிக் கணக்குகள் இப்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ளன.
அந்தக் கணக்குகளில் உள்ள 3.68 லட்சம் கோடி ரூபாய் குறித்து இப்பொழுது விசாரிக்கப்பட்டு வருகிறது. உரிய வரி செலுத்தப்பட்ட விபரம் தரப்படாமல் போகும்பட்சத்தில் பெரும் வரி விதிப்பும் அபராதக் கட்டணமும் விதிக்கப்படும். ஆக இந்த 3.68 லட்சம் கோடிகளில் பெரும்பான்மையான பணம் கறுப்புப் பண மீட்பாகவே கருதப்பட வேண்டும்.
இந்திய மக்கள் தொகையான 150 கோடி மக்களில் வெறும் 1.5 லட்சம் பேர்கள் 5 லட்சம் கோடிகளை வங்கிகளில் கொண்டு வந்து செலுத்தியுள்ளார்கள். அது மூன்றில் ஒரு பங்கு திருப்பிக் கொணரப்பட்ட பணமாகும். அதாவது 0.011% மக்கள் 33% பணத்தை மீண்டும் வங்கிக்குள் கொண்டு வந்துள்ளார்கள். இவை அனைத்துமே சந்தேகத்துக்கிடமான, வருமான வரி கட்டாமல் ஏய்க்கப்பட்ட பணமாகும். இவை அனைத்தும் விசாரிக்கப்பட்டு உரிய வரியும் அபராதத் தொகையும் வசூலிக்கப்படும்.
கிட்டத்தட்ட 2 லட்சம் போலி நிறுவனங்கள் கண்டு பிடிக்கப்பட்டு அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு அவற்றின் கணக்குகள் விசாரிக்கப்பட்டு வருகின்றன.
வருமான வரி ஏய்ப்பிற்காக மட்டுமே துவக்கப்பட்ட நிழல் நிறுவனங்கள் (ஷெல் நிறுவனங்கள்) இந்த டிமானிடைசேஷன் நடவடிக்கை மூலமாக அடையாளம் காணப்பட்டு அவற்றிற்கான உரிமைகள் ரத்து செய்யப்பட்டு இழுத்து மூடப்பட்டன. கிட்டத்தட்ட 2 லட்சம் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டு மூடப்பட்டுள்ளன. அவை விசாரிக்கவும் படுகின்றன. ஒரு சில கணக்குகளில் டிமானிடைசேஷனுக்கு முன்பாக வெறும் 63 லட்சம் ரூபாய் மட்டுமே இருக்க டிமானிடைசேஷனுக்குப் பிறகு 18 கோடி ரூபாய் அதற்குள் கொண்டு வரப்பட்டு எடுக்கப்பட்டுள்ளன. டிமானிடைசேஷனின் பொழுது 53,000 வங்கிக் கணக்குகளில் 35,000 போலி நிறுவனங்கள் 17,000 கோடி ரூபாயைப் போட்டு எடுத்துள்ளன. இவை அனைத்துமே இப்பொழுது விசாரணையின் பிடியில் சிக்கியுள்ளன. இந்த நிழல் நிறுவனங்களின் இருப்புகளோ அதை வைத்திருப்பவர்களின் விபரங்களோ இந்த நடவடிக்கை இல்லாமல் போனால் வெளி வந்திருக்காது.
ஜிபிடியும் கரன்ஸியும்
எந்தவொரு நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார மதிப்பான ஜிடிபிக்கும் அந்த நாட்டில் வெளியே புழங்கும் கரன்ஸிக்கும் உள்ள விகிதாசாரம் குறைந்த அளவில் இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த நடவடிக்கைக்குப் பின்னால் வெளியே மக்களிடம் புழக்கத்தில் உள்ள பணத்துக்கும் இந்தியாவின் ஜிடிபிக்குமான விகிதம் 4% வரை குறைந்துள்ளது. இது இந்தியாவின் பொருளாதார ஆரோக்கியத்தின் ஒரு முக்கியமான அளவுகோலாகும். இப்பொழுது இந்தியாவின் கேஷ் டு ஜிடிபி ரேஷியோ எனப்படும் அளவீட்டு எண், வளர்ந்து முன்னேறிய நாடுகளான ஜெர்மனி, ஃப்ரான்ஸ் போன்ற நாடுகளில் நிலவும் மதிப்பிற்கு நிகராகக் குறைந்துள்ளது. டிமானிடைசேஷனுக்கு முன்பாக 12.2% ஆக இருந்த இந்த விகிதாசாரம் டிமானிடைசேஷனுக்குப் பிறகு 8.8% ஆகக் குறைந்து ஆரோக்கியமான ஓர் அளவுகோலை எட்டியுள்ளது.
ரியல் எஸ்டேட்
இந்தியாவில் கறுப்புப் பணம் அதிக அளவில் புழங்கிய வர்த்தகமாக ரியல் எஸ்ட்டேட் என்னும் வீடு கட்டும் துறை இருந்து வந்தது. பெரும்பாலான வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், மனைகள் உள்ளிட்ட வர்த்தகப் பரிமாற்றங்கள் எவையுமே அதன் உண்மையான பண மதிப்பில் பதியப்படுவதில்லை. மேலும் ஊழல் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் தங்களது லஞ்ச ஊழல் பணங்களை பினாமி பெயர்களில் ரியல் எஸ்டேட்களிலேயே முடக்கி வந்தனர். ஆகவே அபரிதமான கறுப்புப் பணப் புழக்கத்தினால் ஊழல் பேர்வழிகளிடம் இருந்த கறுப்புப் பணம் நிலங்களாகவும், வீடுகளாகவும், மனைகளாகவும், அப்பார்ட்மெண்டுகளாகவும் மாற்றப்பட்டன. அப்படி இந்தத் துறையில் அதிக அளவில் கறுப்புப் பணம் புழங்கியதினால் சாதாரண மக்களின் சொந்த வீட்டுக் கனவு என்றும் கனவாகவே தேங்கிப் போனது. விண்ணை எட்டிய ரியல் எஸ்டேட் விலைகளின் காரணமாக சாதாரண மக்கள் வீடுகள் வாங்குவது அவர்கள் வாழ்நாளில் இயலாமல் போன ஒரு கனவாகவே இருந்து வந்தது
இந்த நிலை டிமானிடைசேஷனுக்குப் பிறகு வெகுவாக மாறியுள்ளது. டிமானிடைசேஷன் காரணமாக அரசியல்வாதிகள், பணக்காரர்கள், ஊழல் அதிகாரிகள், வரி கட்டாத டாக்டர்கள் ஆகியோரிடம் இருந்த கறுப்புப் பணம் பினாமிகள் மூலமாக வங்கிகளுக்குள் வந்துவிட்டபடியால் வெளியே இருந்த கறுப்புப் பணம் அனேகமாக இல்லாமல் போனது. இதன் காரணமாகக் கறுப்புப் பணம் மூலமாக ரியல் எஸ்டேட் வாங்குவது வெகுவாகக் குறைந்தது. மேலும் பண பரிவர்த்தனைகள் முன்னெப்போதையும் விட அதிகமாக உன்னிப்பாக வருமான வரித் துறையினால் கவனிக்கப்படுவதினால் கறுப்புப் பணம் கொண்டு ரியல் எஸ்டேட் வாங்குவது மிகவும் குறைந்திருக்கிறது. இதன் காரணமாக சந்தையில் வீடு வாங்குபவர்கள் குறைந்தனர். வாங்குபவர்கள் இல்லாமல் வீட்டு விலைகளும் சரிய ஆரம்பித்துள்ளன. மேலும் வங்கிகள் வீடு வாங்கும் கடனுக்கான வட்டியைக் குறைத்துள்ளது. இவை அனைத்தினாலும் ரியல் எஸ்டேட் சந்தை சாதாரண மக்கள் வாங்கும் நிலைக்கு இறங்கி வருகின்றது.
பயங்கரவாத நிகழ்வுகள்
கள்ளப் பணம் கறுப்புப் பணம் தடுப்பினால் மாவோயிஸ்டுகள் / நக்சலைட்டுகளிடமும் காஷ்மீர் பயங்கரவாதிகளிடமும் புழங்கிய பணம் காணாமல் போய் அவர்கள் நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதமும் சரி, மாவோயிஸ்டுகளின் நக்சல் பயங்கரவாதங்களும் சரி, காஷ்மீரில் ராணுவத்தினர் மீதான கல்லெறி சம்பவங்களும் சரி, எல்லாமே கறுப்புப் பண ஆதாரம் மூலமாகவே நிகழ்த்தப்பட்டு வந்தன. இந்த நடவடிக்கையினால் திடீரென்று கள்ளப் பணமும் கறுப்புப் பணமும் காணாமல் போய்விட, தங்களது பயங்கரவாதங்களைத் தொடர நிதி ஆதாரம் இல்லாமல், ஆயுதங்கள் வாங்க முடியாமல், கலவரங்களில் ஈடுபடுவோருக்குக் காசு கொடுக்க முடியாமல், தங்கள் நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர் பயங்கரவாதிகள். இதன் காரணமாக பெரும் அளவு பயங்கரவாத நடவடிக்கைகளும் நக்சல் நடவடிக்கைகளும் குறைக்கப்பட்டன.
முந்தைய வருடத்தை விடவும் காஷ்மீரில் ராணுவத்தினர் மீதான கல்லெறித் தாக்குதல் 75% குறைந்தது. அது போலவே மாவோயிஸ்டுகளின் பயங்கரவாத நிகழ்வுகளும் 20% குறைந்திருக்கின்றன.
வங்கிக் கடன் வட்டி விகிதம் குறைப்பு
டிமானிடைசேஷன் நடவடிக்கையினால் வங்கிகளில் சேமிப்புகள் அதிகரித்தன. ஒளிக்கப்பட்ட கறுப்புப் பணம் மற்றும் வெளியே உலாவிய அத்தனை கரன்ஸிகளையும் தங்கள் அக்கவுண்டுகளிலோ அல்லது தங்களது பினாமி அக்கவுண்டுகளிலோ கொண்டு வந்து கட்டினார்கள் கறுப்புப் பணத்தைப் பதுக்கியவர்கள். அதில் பல கணக்குகளில் இருந்து மீண்டும் பணத்தைத் திருப்பி எடுக்க முடியாதபடி முடக்கப்பட்டதாலும் வங்கிகளில் பணத்தை வைத்திருப்பதே பத்திரம் என்ற உணர்வினாலும் வங்கிகளில் சேமிப்புகள் பல மடங்கு அதிகரித்தன. இதனால் வங்கிகளின் சேமிப்பு இருப்பும் அதன் மூலமான வட்டிகளும் அதிகரித்தன. வங்கிகளின் கடன் கொடுக்கும் சக்தியும் இதனால் அதிகரித்தது. விளைவு, அதிக இருப்பினால் வங்கிகள் தங்கள் கடன்களை மிக அதிகமானோருக்கு வழங்கும் விதமாகக் கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்தன. வீட்டுக் கடன், கல்விக் கடன், தொழில் துவங்கக் கடன், முத்ரா கடன் போன்ற கடன்களுக்கான வட்டி விகிதம் கிட்டத்தட்ட 1% அளவு குறைக்கப்பட்டது.
வங்கிகளில் சேமிப்பு
பணத்தை மறைத்தோ ஒளித்தோ வைக்க முடியாத நிலையில் கட்டாயமாக தங்களிடம் உள்ள கணக்கில் காட்டாத பணத்தை எப்படியாவது வெளியே கொண்டு வர முயன்றனர். விளைவு, தங்களுக்கு இருந்த கடன்களையெல்லாம், வரி பாக்கிகளையெல்லாம், அரசாங்கத்துச் சேர வேண்டிய கட்டணங்களையெல்லாம் உடனடியாகக் கட்டினர். அதுபோக சேமிப்பு கணக்குகளிலும், பங்குச் சந்தை மற்றும் பிற ஃபண்டுகளிலும் இன்ஷூரன்ஸ்களிலும் ஏராளமான பணத்தைச் சேமிக்க ஆரம்பித்தனர். இதன் விளைவாக சேமிப்பு அபரிதமான அளவில் அதிகரித்தது. இந்த டிமானிடைசேஷனுக்குப் பிறகு சேமிப்பின் அளவு மொத்த சேமிப்பு அளவீட்டு எண்ணில் கிட்டத்தட்ட 47% அதிகரித்துள்ளது. ம்யூச்சுவல் ஃபண்டுகளில் சேமிக்கப்பட்ட பணமானது கிட்டத்தட்ட 20 லட்சம் கோடியை எட்டியது. தனி நபர்களின் பெட்டிகளிலும் மறைவிடங்களிலும் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பணமானது, தேசத்தின் பொருளாதாரத்தில் கலந்து ஒட்டுமொத்தப் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டுள்ளது. இந்த அபரிதமான சேமிப்பு இந்த டிமானிடைசேஷன் நடவடிக்கை இல்லாவிட்டால் நடந்திருக்காது. பணம் ஒளிக்கப்பட்டு எவருக்கும் பயன் இல்லாமல் வீணாகக் கிடந்திருக்கும்.
கரன்ஸி புழக்கம்
நாட்டில் புழக்கத்தில் உள்ள பெரும் மதிப்பு கரன்ஸிகளான 1000/500 ரூபாய் நோட்டுக்கள் கிட்டத்தட்ட மொத்த கரன்ஸி மதிப்பில் 84% இருந்ததை முன்பு பார்த்தோம். அந்த அளவுக்கு ஏன் 1000/500 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்க வேண்டும்? ஏன் அவ்வளவு பெரிய விகிதத்தில் அச்சடித்தார்கள்? ஏனென்றால் அரசியல்வாதிகளுக்குப் பெரிய மதிப்புப் பணத்தைப் பதுக்குவதும் கடத்துவதும் மிக எளிதாக இருந்ததுதான். அதற்காகவே முந்தைய காங்கிரஸ் அரசு 1000/500 நோட்டுக்களை அதிக அளவில் அச்சிட்டது. 1000/500 நோட்டுக்களின் வெளிப் புழக்கம் 18 லட்சம் கோடிகளில் இருந்து 12 லட்சம் கோடிகளாக இந்த டிமானிடைசேஷன் நடவடிக்கைக்குப் பிறகு குறைந்துள்ளது. மாறாகச் சிறிய கரன்ஸிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வரி கட்டுவோர் எண்ணிக்கை
டிமானிடைசேஷன் காரணமாக வங்கிகளில் பணத்தைக் கட்டியவர்களில் பெரும்பான்மையானவர்கள் இதற்கு முன்னால் வரி கட்டியிராதவர்கள். இப்பொழுது வங்கிகளில் கொண்டு போய்ப் பணத்தைக் கட்டிய பின்னர் வேறு வழியில்லாமல் வருமான வரியைக் கட்டவேண்டிய கட்டாயத்துக்குள்ளானார்கள். ஆகவே நாட்டில் வரி கட்டுவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. நாட்டில் வரி கட்டுவோரின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 26.6% அதிகரித்துள்ளது. வருமான வரி கட்டுவோரின் எண்ணிக்கை 64.53 லட்சத்தில் இருந்து 84.21 லட்சமாக அதிகரித்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. மேலும் இன்னும் பல லட்சம் பேர்கள் விசாரணைக்குப் பிறகு வருமான வரி வலைக்குள் கொண்டு வரப் படுவார்கள் என்பது இதன் நீண்டகால பயனாகும்.
டிஜிடல் பரிமாற்றம்
கரன்ஸி புழக்கம் குறைக்கப்பட்டு டிஜிட்டல் பொருளாதாரம் என்னும் கிரிடிட் கார்டுகள். டெபிட் கார்டுகள், செல் ஃபோன் செயலிகள் போன்ற கரன்ஸியற்றப் பயன்பாடுகள் அதிகரித்துள்ளன
இந்த டிமானிடைசேஷன் நடவடிக்கையின் காரணமாக ஏற்பட்ட தற்காலிக கரன்ஸி தட்டுப்பாட்டின் காரணமாக ஏராளமான மக்கள் டிஜிடல் பரிவர்த்தனைக்குள் சென்றார்கள். டிஜிடல் பரிவர்த்தனைகள் முந்தைய ஆண்டின் 87 கோடிகளில் இருந்து இந்த ஆண்டில் 168 கோடியாக வளர்ந்துள்ளது. ஒரு வளர்ந்து வரும் நாட்டின் பொருளாதாரத்தில் கரன்ஸியின் புழக்கம் குறைவாகவும் மற்ற பரிவர்த்தனைகள் அதிகமாகவும் இருக்க வேண்டும். அப்படி இருத்தலே ஊழலைக் குறைக்கவும் கறுப்புப் பணத்தைக் கட்டுப்படுத்தவும் பெரிதும் உதவும். டெபிட் கார்ட், கிரிடிட் கார்ட், ரூபே கார்ட், செக் பரிவர்த்னைகளின் எண்ணிக்கையும் அதன் பண மதிப்பும் முந்தைய ஆண்டுகளைவிட இரு மடங்கு இந்த டிமானிடைசேஷன் நடவடிக்கைக்குப் பிறகு அதிகரித்துள்ளது.
வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு அதன் மூலம் பண விரயங்கள் தவிர்க்கப்பட்டுள்ளன. வங்கிகளில் கணக்கு துவங்கியவர்களின் எண்ணிக்கை 50 லட்சமாக அதிகரித்துள்ளது.
*
அச்சடித்து வெளியே சென்ற அனைத்து பணமும் திரும்பி வந்ததினால் அரசாங்கத்துக்கு எதிர்பார்த்த வருமானம் இல்லை என்ற ஏமாற்றம் இந்தத் திட்டத்தின் சிறிய நஷ்டம் என்றாலும்கூட, மேலே சொல்லப்பட்டுள்ள ஏராளமான பயன்களினால் இந்த டிமானிடைசேஷன் நடவடிக்கை மாபெரும் வெற்றி என்றே கருதப்பட வேண்டும். இந்த டிமானிடைசேஷன் நடவடிக்கை மட்டும் துணிவாகச் செயல்படுத்தப்படாமல் போயிருந்தால் அரசாங்கம் பெரும் பொருளாதாரச் சிக்கலில் தவித்திருக்கும். இந்தியாவின் வளர்ச்சி பெரும் அளவில் முடங்கிப் போயிருந்திருக்கும். கறுப்புப் பண முதலைகள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றித் தங்கள் இந்திய எதிர்ப்புச் செயலில் ஈடுபட்ட வண்ணம் இருந்திருப்பார்கள்.
அந்த வகையில், கடுமையான எதிர்ப்புகளையும் பொய்யான பிரசாரங்களையும் மீறி இந்த அளவுக்கு இந்த டிமானிடைசேஷன் வெற்றி அடைந்திருப்பது மோதி அரசாங்கத்தின் மகத்தான சாதனைகளில் ஒன்று. உலக அளவிலும் கூட இந்த அளவுக்குப் பிரமாண்டமான ஒரு நடவடிக்கையை இந்த அளவுக்குப் பரந்து விரிந்த நாட்டில் மிகக் குறைந்த பாதிப்புகளுடன் நடத்தியது மோதி ஒருவராக மட்டுமே இருக்கமுடியும். மோதிக்கு ஒவ்வொரு இந்தியனும் நன்றிக் கடன்பட்டிருக்கிறான்.
இந்த நடவடிக்கைளினால் சில சங்கடங்கள் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் இருந்தன. இந்தத் திட்டம் அமுல்படுத்தும் சமயத்தில் பல்வேறு தவிர்க்கப்பட்டிருக்கக் கூடிய குறைபாடுகள் இருந்தன. இவற்றையெல்லாம் தவிர்த்திருக்கலாம் என்பது சிறிய குறைதான். ஆனால் இந்தத் திட்டம் சாதித்திருக்கும் விஷயங்களின் முன்னால் இவையெல்லாம் சிறிய குறைகள் மட்டுமே.
இந்தத் திட்டத்தின் மூலமாகக் கண்டுபிடிக்கப்பட்ட அத்தனை ஏய்ப்பாளர்களையும் தொடர்ந்து சென்று அவர்களிடம் வசூலிப்பது இன்னும் பெரிய ஒரு இமாலய சவாலாக இருக்கும். இருந்தாலும். அனைத்தையும் மீறி, இந்தத் திட்டம் பல லட்சம் கோடி கறுப்புப் பணத்தை மீட்டு, நீண்ட கால பயன்களை அளித்திட்ட ஒரு மாபெரும் வெற்றி திட்டம் என்பதில் சந்தேகமில்லை.