இந்நிலையில், கோவில்களையும் அவற்றின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களையும் பாதுகாப்பதாகச் சொல்லித்தான் அரசு அவற்றின் நிர்வாகத்தைக் கையகப்படுத்திக் கொண்டது. ஆனால் கடந்த 50 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஆலய நிர்வாகம் என்கிற பெயரில் கோவில்களின் சீரழிவையும், கோவில் சொத்துக்களின் பேரழிவையும்தான் பார்க்கிறோம். ஏன், கோவில் விக்கிரகங்கள் கூடக் கொள்ளையடிக்கப்படுகின்றன. அயல்நாடுகளுக்குக் கடத்தி விற்கப்படுகின்றன.
இருக்கின்ற சொத்துக்களிலிருந்து கிடைக்க வேண்டிய வருமானமும் நின்றுபோயுள்ளது. ஊழலும் சீர்கேடும் நிறைந்த நிர்வாகத்தினால், கோவில் சொத்துக்கள் குறைந்துகொண்டு வருகின்றன; அதனால் அவற்றின் மூலம் கிடைக்கவேண்டிய வருமானமும் குறைந்துகொண்டு வருகின்றது.
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 36,488 கோவில்கள், 56 திருமடங்கள், 58 பிரம்மாண்ட கோவில்கள், 17 சமணக் கோவில்கள் ஆகியவை உள்ளன. இவற்றுக்குச் சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாக 2014ம் ஆண்டு அரசு வெளியிட்ட அறநிலையத்துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் 1986ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் மேற்கண்ட கோவில்களுக்கு மொத்தமாக 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்ததாகக் கூறப்பட்டிருந்தது. அதாவது 28 ஆண்டுகளில் 47,000 ஏக்கர் நிலங்கள் காணாமல் போய்விட்டன! (தினமலர் – 5 ஆகஸ்டு 2014).
திராவிட மாயையில் கோவில் நிலங்கள் காணாமல் போவதற்கும், வருவாய் வராமல் போவதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதற்கு ஒரு உதாரணமாகத் திகழ்கிறது சென்னை நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில். அது பற்றிய விவரங்களைப் பார்ப்போம்.
அகஸ்தீஸ்வரர் கோவில் சொத்துக்கள்
சென்னையில் உள்ள பழமையான கோவில்களில் நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மற்றும் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலும் அடங்கும். 1959ம் ஆண்டிலிருந்து தமிழக அரசின் இந்து அறைலையத்துறையின் கீழ் இயங்கிவருகிறது இக்கோவில்.
இந்தக் கோவிலுக்குச் சொந்தமாகத் தற்போது வணிக மனைகள் 1,80,374 சதுர அடிகள்; குடியிருப்பு மனைகள் 11,16,445 சதுர அடிகள்; வணிக மனைகள் 89,550 சதுர அடிகள்; குடியிருப்புக் கட்டிடங்கள் 52,738 சதுர அடிகள் உள்ளன.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள வணிக மனைகளிடமிருந்து வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் தொகை ரூபாய் 739.37 லட்சம்.
குடியிருப்பு மனைகளிடமிருந்து வசூலிக்கப்படாமல் நிலுவையில் இருக்கும் தொகை ரூபாய் 420.68 லட்சம்.
ஆனால் இன்றைய வழிகாட்டி மதிப்பின்படி (ஒரு சதுர அடி குறைந்தபட்சம் சுமார் 8,000 ரூபாய் என்று வைத்துக்கொண்டால் கூட) சில ஆயிரம் கோடிகளுக்குச் செல்லும்.
சட்டத்துக்குப் புறம்பான விற்பனை
தற்போது இருக்கும் இந்தச் சொத்துக்குச் சம அளவிலான சொத்து ஏற்கெனவே சட்டத்திற்குப் புறம்பாகக் கடந்த பல ஆண்டுகளில் தனியார்களுக்குத் தாரைவார்க்கப்பட்டுவிட்டது.
இதில், வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையை ஒட்டிய சொக்கட்டான் சாலையில், 10 கிரவுண்ட் (சர்வே எண்.451/1,452/1) நிலங்களை (கிட்டத்தட்ட 10 கிரவுண்ட் அளவிலான நிலங்கள்) அப்போது தர்மகர்த்தாவாக இருந்தவரும், செயல் அலுவலராக இருந்தவரும் சேர்ந்து போலிப் பத்திரங்கள் தயார் செய்து தனியாருக்கு விற்றுவிட்டனர்.
1978ம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய பரம்பரை அறங்காவலர், அதே பகுதியில் இருந்த ஒரு கிறிஸ்தவருக்கு விற்றுள்ளார். அந்தக் கிறிஸ்தவர் 06.12.1968 அன்று முதல் கோவில் நிலத்தில் வாடகைதாரராக மட்டுமே பதிவு செய்யப்பட்டவர். இவர் ஏற்கெனவே இருந்த குத்தகைதாரரிடம் உள்வாடகைக்குச் சென்றவர். அந்தக் குறிப்பிட்டக் குத்தகைதாரர் சென்னை நகர வாடகைதாரர்கள் பாதுகாப்புச் சட்டம் (1921) 9ம் பிரிவின்படி, நிலத்தை வாங்குவதற்கான உரிமை பெற்றவர். ஆனால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள பரம்பரை அறங்காவலர் அவருடைய குத்தகையை ரத்து செய்யுமாறு கோரி 1974ம் ஆண்டு, வழக்கு (O.S.No:1186) தொடர்ந்துள்ளார்.
பிறகு, மேல்குறிப்பிடப்பட்ட கிறிஸ்தவர் அந்நிலத்தை (I.A.No: 7389 of 1974) சென்னை நகர வாடகைதாரர்கள் பாதுகாப்புச் சட்டம் (1921) 9ம் பிரிவின்படி விற்பனைக்கு உட்படுத்த வேண்டும் என்று மனு செய்தார். அதனைத் தொடர்ந்து 15 ஜூலை 1976 அன்று நகர சிவில் நீதிமன்ற 5வது துணை நீதிபதி குறிப்பிட்ட சொத்தை ரூ.2,700/-க்கு அவருக்கு விற்பனை செய்யுமாறு கோவில் அறங்காவலருக்கு இறுதி உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவின்பேரில், கிறிஸ்தவர் ரூ.2,700ஐ 30-12-1976 அன்று நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு, நகர சிவில் நீதிமன்ற 10வது துணை நீதிபதி முன்பு, அந்நிலத்தைத் தன் பெயருக்குப் பதிவு செய்து விற்பனைப் பத்திரம் (Sale Deed) அளிக்க உத்தரவிடுமாறு மனு (CMP 1150 of 1977) சமர்ப்பித்தார். அதன்படி நகர சிவில் நீதிமன்றமும் உத்தரவிட, பரம்பரை அறங்காவலர், அகஸ்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான, சர்வே எண் 452/1 நிலத்தில் இருந்த சொத்துக்கள் முழுவதையும் அந்தக் கிறிஸ்தவர் பெயருக்குப் பதிவு செய்து விற்பனைப் பத்திரமும் அளித்துள்ளார்.
கோவில் சொத்துக்களை குத்தகைக்கோ அல்லது வாடகைக்கோ விடுவதற்கு மட்டுமே அனுமதி உண்டு. அவற்றை விற்க அனுமதி இல்லை. ஆனால் சட்டத்திற்குப் புறம்பாகத் துறை அலுவலர்களின் உதவியோடு தர்மகர்த்தா விற்றுள்ளார். இந்தச் சட்டத்திற்குப் புறம்பான விற்பனையினால் ஏற்பட்ட நெருக்கடியைத் தவிர்க்க அந்த தர்மகர்த்தாவின் மனைவி, “எனக்கும் இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” என்று நோட்டீஸ் அடித்து நுங்கம்பாக்கம் பகுதிகளில் விநியோகம் செய்துள்ளார்.
இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியமான விஷயம் ஆலயங்களைச் சுற்றி அமைந்துள்ள கோவில் நிலங்களை நீண்டகால குத்தகைக்கு விடுவது தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த ஆணைதான்.
அரசு ஆணை எண் 4508 (05-12-1957) மற்றும் அரசு ஆணை எண் 689 (18.03.1957) ஆகியவற்றில், கோவில் நிலங்களை விற்றுக் கிரயம் செய்யக்கூடாது என்றும், குத்தகைக்கு மட்டுமே விடலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவ்வாறு குத்தகைக்கு விடும்போது, மாற்று மதத்தவருக்கு விடக்கூடாது என்றும் குறிப்பிடப்படுள்ளது. மாற்று மதத்தவருக்கு விடும் பட்சத்தில், எதிர்வரும் காலங்களில் கோவில் திருவிழாக்களும் மற்ற நிகழ்ச்சிகளும் பாதிக்கப்படலாம், சுமுகமாக நடைபெறாமல் போகலாம் என்கிற காரணத்தால், ஆணையர் அதற்கு அனுமதிக்கக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதோடு மட்டுமல்லாமல், குத்தகைக்கு எடுப்பவரும் மாற்று மதத்தவருக்கு மறுகுத்தகைக்கோ வாடகைக்கோ விடக்கூடாது என்றும், மாற்று மதத்தவரைக் குடியேறவும் அனுமதிக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இவ்வாறு சட்டமும், அரசு ஆண்களும் தெளிவாக இருக்கின்றபோது, பரம்பரை அறங்காவலரும், கிறிஸ்தவ வாடகைதாரரும் அறநிலையத்துறை அலுவலர்கள் உதவியுடன் மேற்கொண்ட இந்தச் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கையை நகர சிவில் நீதிமன்றமும் எப்படி அனுமதித்தது என்பதும் இங்கே கேள்விக்குள்ளாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.
கோவில் நிலத்தில் மசூதி
அகஸ்தீஸ்வரர் கோவிலுக்குச் சொந்தமான மற்றொரு இடத்தில் ஒரு இஸ்லாமியர் வாடகைதாரராக இருந்தார். பிறகு அவ்விடத்தில் மசூதி ஒன்றைக்கட்ட முயற்சித்தார். அதற்கு அப்பகுதி மக்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். அவரை வெளியேற்றக் கோரி ஒரு மனு (No: 136 of 1971) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அவர் வாடகையும் சரியாகக் கொடுக்காமல் இருந்தார். ஆயினும் அந்த இஸ்லாமியர் சென்னை நகர வாடகைதாரர்கள் பாதுகாப்புச் சட்டம் (1921) 9ம் பிரிவை உபயோகித்து அந்த நிலத்தைத் தனக்குச் சொந்தமாக ஆக்கிக்கொண்டார். தவணை முறையில் வாடகைக் கொடுப்பதற்கு ஏற்பட்ட தாமதத்தையும் அங்கீகரிக்கக் கோரி மனு (M.P. 203 / 1980) ஒன்றைச் சமர்ப்பித்து அதையும் சாதித்துக்கொண்டார். அவ்வாறு அவர் செய்வதற்கு அப்போதைய பரம்பரை அறங்காவலரும், அறநிலையத்துறை அலுவலர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். சிறு வழக்குகள் நீதிமன்றத்தின் பதிவாளர் அதற்கான விற்பனைப் பத்திரத்தைத் தயார் செய்து கொடுத்துள்ளார்.
அதன் பிறகு அந்த இஸ்லாமியர் அந்தச் சொத்தை நுங்கம்பாக்கம் முஸ்லிம்கள் நலச்சங்கம் என்னும் அமைப்பிற்கு விற்பனை செய்தார். அவ்வமைப்பு அவ்விடத்தில் மசூதி ஒன்றை எழுப்பியது. பெரும்பான்மையாக ஹிந்துக்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் ஒரு பகுதியில், மாநகராட்சியின் அனுமதியின்றி ஒரு மசூதியைக் கட்டுவது சட்டத்திற்குப் புறம்பானது. கோவில் நிர்வாகம், இஸ்லாமியருக்கு ஆதரவாக அளித்த மனுவை (A.S.No.87/1993) ஏற்றுக்கொண்ட சென்னை மாநகர சிவில் நீதிமன்றம், கோவில் நிர்வாகத்திற்குத் தெரிவிக்காமலே விற்பனைப் பத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது என்றும், விற்பனைப் பத்திரம் கொடுப்பது போன்ற சிறு வழக்குகள் நீதிமன்றப் பதிவாளரின் அதிகார எல்லைக்குள் இல்லை என்றும் கூறி, சட்டத்திற்குப் புறம்பான அந்த விற்பனையை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் விற்பனைப் பத்திரம் செல்லாது என்பதால், இஸ்லாமிய நபர் நுங்கம்பாக்கம் முஸ்லிம்கள் நலச்சங்கத்திற்கு அந்தச் சொத்தை விற்றதும் செல்லாது என்று கூறி, இரண்டு மாதங்களுக்குள் அந்தச் சொத்தைக் கோவில் நிர்வாகத்திடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
சென்னை நகர வாடகைதாரர்கள் பாதுகாப்புச் சட்டம் (1921) 9ம் பிரிவை உபயோகித்து விற்பனைப் பத்திரம் பெற்றாலும். அதே சட்டத்தின் 9(1)(b) பிரிவின்படி, சொத்தின் விலையில் ஒரு தவணையைக் கட்டாமல் விட்டாலும், மனுதாரரின் மனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்கிற குறிப்பையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
கீழ் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து, குறிப்பிட்ட இஸ்லாமியரும், நுங்கம்பாக்கம் முஸ்லிம்கள் நலச்சங்கமும் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி G.ஜெயச்சந்திரன் அவர்கள், சொத்தின் விற்பனையும், மசூதி கட்டப்பட்டதும் சட்டத்திற்குப் புறம்பானது என்றும், சொத்தைக் கோவில் நிர்வாகத்திடம் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றும், கீழ் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பை உறுதி செய்து இவ்வருடம் (2017) ஜனவரி மாதம் 5ம் தேதி அன்று உத்தரவிட்டார்.
அதாவது கோவில் பரம்பரை அறங்காவலரும், அறநிலையத்துறை அதிகாரிகளும் சட்டத்திற்குப் புறம்பாக மாற்று மதத்தவருக்கு மோசடிகள் மூலம் விற்பனை செய்த கோவில் சொத்தை, மீண்டும் பெறுவதற்கு 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராட வேண்டியிருந்தது.
அரசின் அக்கறையின்மை
2003ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சி.பி.ராமசாமி அகஸ்தீஸ்வரர் கோவில் நிலங்களில் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி சொத்துக்களை மீட்டுள்ளதாகச் சட்டசபையில் தெரிவித்தார், ஆனால் சமூக ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் 2009, 2010, 2011 ஆண்டுகளில் கேட்டபோது அவர் சட்டசபையில் கூறியது பொய் என்பதும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நிலங்கள் மீட்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. மேலும், கோவிலுக்குச் சொந்தமான இடங்களில் குடியிருப்போர், யாரிடம் வாடகை கொடுக்கின்றனர், என்ன விதமான ஒப்பந்தம் செய்திருக்கின்றனர் உள்ளிட்ட விவரங்களும் அறநிலையத் துறையிடம் இல்லை. கோவிலுக்குச் சொந்தமான இடங்கள், போலி பட்டாக்கள் மூலம் விற்கப்பட்டுள்ளன என்பதை, 2010ல் அப்போதைய அறநிலையத் துறை ஆணையரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
அறநிலையத்துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை தமிழ்நாடு தகவல் ஆணையமும் உறுதிப்படத் தெரிவித்துள்ளது. அதாவது, 2011ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி நடத்தப்பட்ட விசாரணையில், 451/1 மற்றும் 452/1 ஆகிய சர்வே எண்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என்றும், அவ்வாறு செய்யாவிடில் துறை ரீதியான நடவடிக்கைக்குப் பரிந்துரை செய்யப்படும் என்றும் எச்சரிக்கை செய்தும் அறநிலையத்துறை அதிகாரிகள் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பதை தமிழ்நாடு தகவல் ஆணையம் உறுதிப்படக் கூறியுள்ளது
இவ்வாறான சூழ்நிலையில், ஹிந்து ஆலய வழிபடுவோர்கள் அனைவரும், 21 செப்டம்பர் 2015 அன்று ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோவிலுக்கு வந்த அறநிலையத்துறை அதிகாரிகள் குழுவைச் சந்தித்தனர். கோவிலில் உள்ள ஆவணங்களைச் சரிபார்க்க வந்த அந்தக் குழுவினரைச் சந்தித்த பக்தர்கள் தங்கள் அதிருப்தியையும், கண்டனங்களையும் தெரிவித்தனர். கோவில் சொத்துக்களை விரைவில் மீட்டால் அவற்றின் மூலம் கிடைக்கும் வாடகை போன்ற வருமானத்தைக் கோவிலின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த ஏதுவாக இருக்கும் என்று தங்கள் கருத்தையும் தெரிவித்தனர்.
தற்போது அகஸ்தீஸ்வரர் மற்றும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலின் நிலங்களையும் சொத்துக்களையும் மீட்க வழக்குகள் பல்வேறு நீதிமன்றங்களில் நடந்துகொண்டிருக்கின்றன. அறலையத்துறையின் அலட்சியமான நிர்வாகத்திற்கு அகஸ்தீஸ்வரர் கோவில் ஒன்றே உதாரணமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் இருக்கும் ஒரு கோவிலில் மட்டுமே இவ்வளவு பிரச்சினை என்றால், மாநிலம் முழுவதும் உள்ள 36,000க்கும் மேற்பட்ட கோவில்கள் ஒவ்வொன்றின் கணக்குகளையும் சரிபார்த்து விசாரணை செய்தால் எவ்வளவு பூதங்கள் புறப்படும் என்பது அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்.
அடிக்குறிப்புகள்:
ஆதாரம்: தினமலர் 9 மே 2013 http://www.dinamalar.com/news_detail.asp?id=709082
தினமலர் 5 ஆகஸ்டு 2014 http://www.dinamalar.com/news_detail.asp?id=1038126