Posted on Leave a comment

ஆக்கம் – ஓகை நடராஜன்


பொறிஞன் மயன்,
கலைஞனுமாகி,
கவின் இயற்கைக் காதலனுமாகி,
கருணைமிகு மனித நேயனுமாகி
ஒரு நகரத்தை நிர்மாணித்தானால்,
அது சிங்கப்பூரைப் போலத்தான் இருக்கும்.

இந்த நான்கு முகங்களும் அவனை நான்முகனாகவே ஆக்கி அப்படி ஒன்றைச் செய்ய வைக்கும். அண்மையில் முதன்முதலாக சிங்கப்பூர் சென்று வந்ததன் தாக்கம் சற்று தூக்கலாகவே இருந்து, இப்படிச் சொல்ல வைக்கிறது. இப்படி ஓர் ஆக்கம், ஊர் ஆக்கம் – அதை அப்படித்தான் சொல்ல வேண்டும் – வரலாற்றால் செய்யப்பட்டிருக்கிறது என்பதும், இந்தியருக்கு, அதிலும் தமிழருக்கு அந்நிகழ்வில் பங்களிப்பும், பங்கேற்புச் செய்கின்ற தாக்கமும் இருந்திருக்கின்றன என்பது பிரமிப்பும் பெருமிதமும் கலந்த ஒரு நற்கலவை. ஓர் ஆக்கம், தாக்கத்தையும் ஏக்கத்தையும் ஊக்கத்தையும் ஒரு சேர உண்டுபண்ணுகிற அதிசயமாக சிங்கப்பூர் திகழ்ந்துகொண்டிருக்கிறது. சிங்கப்பூரைப் பற்றிப் பலரும் பலதும் சொல்லியிருந்தாலும் நகரில் பழகும்போது இதுவரை கேளாத, இதுவரை பலரும் சொல்லாத பலதும் பிடிபடுகின்றன. அதன் வரலாற்றோடு பிசைந்து அங்கு உணர்ந்தவற்றை ஊட்டிக் கொள்ளும்போது, இன்னும் இன்னும் இனிக்கும்படியான அனுபவ ஆக்கிரமிப்பு அள்ளிக் கொள்கிறது.

நான் சிங்கப்பூருக்குச் சுற்றுலா பயணியாகச் செல்லவில்லை. அந்த மனநிலையில் அவ்வூரைப் பார்க்கவுமில்லை. சிங்கப்பூருக்கு அது இன்னுமொரு வெளிநாடு அல்லது சுற்றிப் பார்ப்பதற்கான இடம் என்ற அளவில் சென்ற பலருக்கும், அது மற்றுமொரு வெளிநாட்டைப் போலத்தான் பிரமிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால் ஒரு நாடு அதன் பண்பாட்டாலும் வரலாற்றாலும் ஆக்கப்பட்டிருக்கிறது என்ற பிரக்ஞையோடு சிங்கப்பூரைப் பார்த்தபோது, விரிவையும் விரிவாக்குகிற தாக்கத்தையும் நான் பெற்றேன். வீதிகளின் சுத்தம் மற்றும் ஒழுங்கு, சட்டத்தை மதிக்கும் தன்மை, அமைதியான சாலைப் போக்குவரத்து, மக்களுக்கான விரிவான போக்குவரத்து வசதிகள், இன்னும் இவை போன்ற தன்மைகள் மற்ற எல்லா வளர்ந்த நாட்டு நகரங்களைப் போலவும் சிங்கப்பூரிலும் விரவியிருக்கின்றன. கூடுதலாக இதன் பல்கலாசாரத் தன்மை, பன்மொழிப்பயன்பாடு, திறந்த பொருளாதார வசதிகள் போன்றவை இந்நாட்டுக்கான தனித்தன்மையை அளிக்கின்றன. ஆனால் பல மேலை மற்றும் கீழை நாட்டு நகரங்களைப் போலல்லாமல் உச்சக்கட்ட தொழில்நுட்பத்தையும், அடிப்படை இயற்கைச் சூழலையும் ஒரு சேர பரிமளிக்க வைத்திருக்கும் அதிசயம் இங்கு நிகழ்கிறது. இந்நகரின் சில பகுதிகள் விஞ்ஞான வளர்ச்சியின் தொழில்நுட்ப உச்சத்தைத் தொட்டுக் காட்டுகின்றன. ஆனால் சில மையச் சாலைகளில் பயணிக்கும்போதோ ஒரு கடுங்காட்டு நெடுஞ்சாலையில் பயணிப்பது போன்ற இயற்கைச் சூழல் பிரமையை ஏற்படுகிறது. எங்கும் தாவரச் செல்வம் வியாபித்திருக்கிறது. இயற்கையை இப்படிப் பேணுவதை மனிதநேயத்தின் வெளிப்பாடாகவே நாம் பார்க்கலாம். இந்நகரின் கட்டமைப்பு நமக்குக் காட்டும் பல அம்சங்களில், நிறைந்த மனிதநேயச் சிந்தனையையே நாம் முதன்மையாகக் கருதலாம்.

இந்நகரின் பரந்து விரிந்த பூங்காக்களும் அவற்றில் பயமின்றிப் பறக்கும் பல இனப் பறவைகளும் அந்தச் சூழலின் மகிழ்வையும் தாண்டி நாமும் சூழலைப் பேணவேண்டியதின் தாக்கத்தை அளிக்கின்றன. லேகியத்துக்காக அழிக்கப்பட்ட சிட்டுக் குருவி இனத்தைக் கூட்டம் கூட்டமாகக் காணும்போது பரவசம் மின்னுகிறது. இரவு பன்னிரண்டு மணிக்கும் ஒரு பருவப் பெண் தனியாக சாலைகளில் நடந்து செல்வது சிங்கப்பூரில் சாத்தியமென்பதைக் கேட்டிருந்தாலும், நேரிலேயே கண்ணால் காணும்போது அது கருத்தில் இறங்கி உறைக்கிறது. சிங்கப்பூரில் விமானத்திலிருந்து இறங்கியபோது விமானநிலையத்தில் தொடங்கிய மனித இணக்கம் மீண்டும் விமானம் ஏறும் வரை தொடர்ந்து இருந்தது ஆகப்பெரியதோர் மனிதநேயத் தாக்கம்.

சிங்கம் மற்றும் புரம் என்ற இரண்டு இந்தியச் சொற்களைக் கொண்டு அமைந்த பெயரைக் கொண்ட சிங்கப்பூர் எனும் தீவு, குழப்பமான முன் வரலாற்றைக் கொண்டிருந்தாலும், இன்றைக்கு ஒரு நாடாக அறியப்படும் சிங்கப்பூரின் வரலாற்றைக் கடந்த 200 ஆண்டுகளின் நிகழ்வுகளே நமக்கு உணர்த்துகின்றன. கிபி 1819ல் ராஃபெல்ஸ் என்ற ஆங்கில அதிகாரி இந்தத் தீவுக்குள் நுழைந்த காலத்திலிருந்து இன்றைய சிங்கப்பூர் கட்டப்பட்டிருக்கிறது. மலேய மற்றும் சீன மக்களோடு இந்தியத் தமிழர்களும் இணைந்து அன்றிலிருந்து இன்றுவரை இந்த நகரநாட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து வளர்ந்த நகரத்தின் வளர்ச்சியில் இரண்டாம் உலகப்போர் தன் பாதிப்புகளை ஏற்படுத்திய பின்னர் அதன் புனர் நிர்மாணம் ஒரு பிரசவ வேதனைக்குரிய வலிகளை அனுபவித்தது. மற்ற நாடுகள், போர்களினாலோ, சுதந்தரமாகப் போகவேண்டும் என்ற கிளர்ச்சியாலோ பிரிந்து போனதைப் போலல்லாமல், தாய்நாடான மலேயா, தனக்கு வேண்டாம் என்று வெட்டிவிட்ட நாடே சிங்கப்பூர். இங்கே, பொது வழக்கத்துக்கு மாறாக, தன்னைப் பிரித்துவிடவேண்டாம் என்ற சிங்கப்பூரின் மன்றாடலுக்கும் பிறகும் மலேயாவிலிருந்து 1965ம் ஆண்டு பிரித்துவிடப்பட்ட நாடுதான், அதன் பிறகு லீ க்வான் யூ என்ற ஒப்பற்ற தலைவரின் முன்னெடுப்பில் இன்று விஸ்வரூபமெடுத்து நிற்கிறது. இதில் 1965ம் ஆண்டிலிருந்து லீ க்வான் யூயால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு யுத்திகள், வியூகங்கள், நடவடிக்கைகள், புதுமை முயற்சிகள், இவை எல்லாமும், வளரும் நாடுகளுக்கான முன்னுதாரணங்களாகத் திகழும் வல்லமை கொண்டவை. 2014ம் ஆண்டு இந்தியாவில் ஏற்பட்ட மோடி அரசாங்கம் இவற்றைப் பற்றுக் கோடாகக் கொண்டு தன் சில திட்டங்களை அமைத்துக் கொண்டிருப்பது, அதை எண்ணிப் பார்க்கும் இந்திய மனத்துக்கு வலிய நம்பிக்கை கூட்டுவதாக இருக்கும்.

திட்டங்களின் அடிப்படையில், தூய்மை இந்தியா (ஸ்வச் பாரத்), அனைவருக்கும் வீடு (ஆவாஸ் யோஜனா), டிஜிடல் இந்தியா, எழுந்திடு இந்தியா (Stanup India), தொடங்கிடு இந்தியா (Startup India) போன்றவற்றின் முன்முயற்சிகளையும் அவற்றின் வெற்றிகளையும் சிங்கப்பூரின் வரலாறு பதிவு செய்திருப்பதைக் காணமுடிகிறது. ஒரு நகரநாட்டின் வெற்றிப் பாதையை, பரந்து விரிந்த நமது நாட்டுக்கு, பண்டிட் தீன் தயாள் உபாத்தியாவின் ஒருங்கிணைந்த மனிதநேயக் கோட்பாட்டோடு (Integral humanism) நாட்டு வளர்ச்சித் திட்டங்களாக மோடி அரசாங்கம் தீட்டியிருப்பதை சிங்கப்பூரும் நினைவுபடுத்துவது ஓர் ஆச்சர்யம்தான்.

சிங்கப்பூர் ஏற்படுத்தும் தாக்கம், ஒரே நேரத்தில் நமக்கு ஏக்கத்தையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தவல்லது. எந்த சொந்த வளமும் இல்லாத, தனக்கென்ற தனிக் கலாசாரப் பின்னணி இல்லாத, செழித்த நீண்டகால வரலாறு இல்லாத, மனிதவளம் மட்டுமே கொண்ட இந்த நாட்டின் பூரிப்பு, ஏராளமான மனித வளமும் இவை எல்லாமும் இருக்கின்ற நமது நாட்டுக்கு இல்லையே என்ற ஏக்கம், பிரக்ஞையுள்ள ஒவ்வொரு இந்தியனுக்கும் ஏற்படும். அதிலும் தமிழனாக இருந்தால் அந்த ஏக்கம் கூடுதலாகவே இருக்கும். பன்மொழிப் பயன்பாடு, பல இனங்களின் கூட்டு மக்கள்தொகை, தட்பவெப்பம் இவற்றில் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இருக்கிற ஒற்றுமை வேறு எந்த நாட்டுக்கும் இல்லை. ஆனாலும் அந்நாட்டின் அபரிமித வளர்ச்சி போல் நம்நாடு இல்லையே என்ற ஏக்கம் ஓர் ஒளிந்திருக்கும் பூனைக் குட்டியைப் போல் அவ்வப்போது எட்டிப்பார்க்கும். பொதுவாக இவ்வகையில் நம்நாட்டை வெளிநாட்டோடு ஒப்பிடும்போது நம்மை இகழ்வதும் வெளிநாட்டைப் புகழ்வதும் பலரும் செய்கிற ஒன்று. இது இயல்புபோல் தோன்றும். ஆனால் அதுவும் இந்த ஏக்கத்தை வெளிப்படுத்தமுடியாத வெட்டி கௌரவத்தின் வெளிப்பாடுதான்.

இந்த ஏக்கத்தைச் சற்றே ஆக்கபூர்வமான சிந்தனைக்கு உட்படுத்தினால் அதுவே ஊக்கமாக மாறக்கூடிய சாத்தியமிருக்கிறது. அது போன்ற ஓரெண்ணம் நமது மோடி அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கிறது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன். நம் நாட்டின் மேல் கரிசனமும் நம்பிக்கையும் இருக்கிற எவருக்கும், ஊக்கமே விஞ்சி நிற்க சிங்கப்பூர் தன்னைக் காட்சிப்படுத்துகிறது. வேறு நாடுகளில் இது நிகழ்வதற்குச் சூழலும், மொழியும், தட்பவெப்பமும், பண்பாடும், சட்டதிட்டங்களும், மக்களும், இனைந்து தருகின்ற அந்நியத் தன்மை அவ்வளவாக இடம் கொடுப்பதில்லை. அவ்வகையில் சிங்கப்பூர் இந்தியாவாக இல்லாத ஓர் இந்தியாவாக இருப்பது அதிசயம்தான்.

இத்தனை அருகில் இத்தனை அணுக்கமாய் இருக்கின்ற சிங்கப்பூரில் இந்தியர்களின் ஊடாட்டம் எப்படி இருக்கிறது? பலருக்கு அது இன்னொரு வெளிநாடு. சுற்றுலாவுக்கான இன்னுமொரு சிறந்த இடம். சில ஆண்டுகளுக்கு முன்வரை எலெக்ட்ரானிக் சாதனங்களின் கடத்தல் துறை. எப்போதும் பல தமிழருக்கு வேலை தேடுமிடம். இப்போது சில பட்டப் படிப்புகளுக்கான ஊர். தமிழ்த் திரைப்படங்களுக்கு நல்லதொரு சந்தை. தமிழர் சார்ந்த சிலபலப் பொருட்களுக்கும் இன்னுமொரு சந்தை. இவை போன்ற இன்னும் சில. அவ்வளவுதான். ஆனால் சிங்கப்பூர் இந்தியர்களுக்கு இன்னும் அதிகமான ஊடாட்டத்தை அளிக்க வல்லது. வணிகரீதியில் இந்தியப் பங்களிப்பு இருக்க வேண்டிய அளவில் இல்லை. இந்திய நிறுவனங்களின் கிளைகள் மற்ற பன்னாட்டு நிறுவனங்களைப் போல் கண்களில் படுவதில்லை. இந்திய வங்கிகளின் கிளைகள் இல்லை. இந்தியாவில் மட்டுமே கிடைக்கும் பொருட்களைத் தவிர வேறு இந்தியப் பொருட்கள் அன்றாடச் சந்தைகளில் இல்லை. அங்கிருக்கும் இந்தியர்களுக்கும் இந்திய வம்சாவழியினருக்குமே அனைத்து இந்தியப் பொருட்களுமே கிடைப்பதில்லை.

சிங்கப்பூர் தனது பெரும்பாலான தேவைகளை இறக்குமதி செய்கிறது. எல்லா நாடுகளின் வணிகத்துக்கும் சிங்கப்பூர் இடமளிக்கிறது. இந்திய வணிகத்துக்கும் அங்கிருக்கும் இடம், நம்மவரால் இன்னும் தீவிரமாகப் பார்க்கப்படவில்லையோ என்ற எண்ணம் சிங்கப்பூர் சென்றுவரும் ஒவ்வோர் இந்தியருக்கும் ஏற்படவேண்டும்.

சிங்கப்பூர் நமது நிரந்தர ஊடாட்டத்துக்கான அதி சிறந்ததொரு திறப்பு.

****

Leave a Reply