Posted on Leave a comment

தமிழ்நாட்டில் இந்துமத அவமதிப்புகளும் எதிர்ப்புகளும் – ஜடாயு

திராவிட இயக்கம் வலுப்பெற்ற காலகட்டத்திலிருந்தே தமிழ்நாட்டில் இந்துமத அவமதிப்புக்கள் பல தளங்களில் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. அவ்வப்போது அவற்றுக்கான கண்டனங்களும் எதிர்ப்பலைகளும் ஆங்காங்கு சிறிய அளவிலாவது பதிவு செய்யப்பட்டும் வருகின்றன. இத்தகைய அவமதிப்புகள் அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சுக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள், பத்திரிகைகள், எழுத்தாளர்களின் படைப்புகள், பிரபலங்களின் கருத்துக்கள் எனப் பல்வேறு விதங்களில் வெளிப்பட்டுள்ளன. பல சமயங்களில் இஸ்லாமிய கிறிஸ்தவ மத அமைப்புகளும் நேரடியாக இதில் ஈடுபட்டுள்ளன. ஆனால் கடந்த 10-15 ஆண்டுகளாகத்தான் இது குறித்த செய்திப் பரவலும் விழிப்புணர்வும் கணிசமான அளவில் ஏற்பட்டுள்ளது. நாடு தழுவிய இந்து எழுச்சி, தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சியின் பெருவளர்ச்சி, இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்கள் என்று கருதலாம்.

தமிழ்நாட்டில் சமகாலத்தில் நடந்துவரும் பல இந்துமத அவமதிப்பு நிகழ்வுகளையும் எடுத்துப் பார்த்தால் அதில் ஒரு மாதிரி (pattern) இருப்பது தெரியவரும். சில குறிப்பிட்ட இந்துமத நம்பிக்கைகள், கருத்தாக்கங்கள் அல்லது வழிபாட்டுகுரிய பிம்பங்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு மோசமாக சித்தரிக்கப்படும், விமர்சிக்கப்படும் அல்லது கேலி செய்யப்படும். உடனே அது விவாதப் பொருளாக ஆகும். அந்த விவாதத்தில் இந்துக்களின் தரப்பு அமைதியாகவும், ஜனநாயக முறையிலும், பல்வேறு ஆதாரங்கள் மூலம் தங்களது நியாயத்தை நிறுவ முயலும். ஆனால் அத்தகைய எல்லா விவாதங்களும், ஊடகங்களாலும் சூழலிலுள்ள மற்ற சக்திகளாலும் திட்டமிட்டுத் திரிக்கப்படும். அதில் ஒரு சாதிசார்ந்த கண்ணோட்டம் புகுத்தப்படும். உடனடியாக அடுத்த கட்டத்தில் அது பெரும்பாலும் பிராமண வெறுப்புப் பேச்சாக உருவெடுக்கும். அல்லது இந்து சாதிகளிடையே மோதலை விதைக்கும் ஒரு கருதுகோளாக மாற்றப்படும். இந்துமதம் என்பதே பார்ப்பனீயக் கருதுகோள் என்ற பிரசாரம் செய்யப்படும். கூடவே, மொழிவெறி அரசியலும், இந்திய தேசிய விரோதமும், பிரிவினைவாதமும் முன்வைக்கப்படும். இந்துமதம் தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்க் கலாசாரத்துக்கும் எதிரானது என்பதான பரப்புரைகளின் ஓலம் காதைக் கிழிக்கும். சங்ககாலத்தில் இப்படி இருந்ததா என்று ஆரம்பித்து ஏதேதோ மேற்கோள்களைக் காட்டி வரலாற்று, ‘ஆராய்ச்சிகள்’ நடக்கும். தமிழ்நாடு முழுவதும் என்னவோ வரலாற்றிலேயே திளைத்திருப்பது போன்ற போலி பாவனைகளுடன் எந்தக் கல்விப்புலமும் துறைசார்ந்த தகுதிகளும் இல்லாதவர்களும்கூட வந்து இஷ்டத்துக்குத் தங்கள் திரிபுகளைக் கூற இடம் கொடுக்கப் படும். கூடுதலாக, 2017 தொடங்கி (ஜெயலலிதா மறைவுக்குப் பின்), இந்த எல்லாப் பிரசினைகளிலும் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அரசின் சூழ்ச்சிகள் சதிவலைகள் பற்றிய மசாலாவும் சேர்க்கப்படும். ஒருசில நிகழ்வுகளைத் தவிர மற்ற எல்லாவற்றிலும் நிகழ்ந்த அவமதிப்புக்கு எந்த விதமான நீதியும் பிராயச்சித்தமும் செய்யப்பட்டிருக்காது. அடுத்த சூடான விவகாரத்தை நோக்கி ஊடகங்களும் பொதுஜனமும் நகர்ந்திருக்கும். ஒட்டுமொத்தமாக, இந்துமதம் மீது வெறுப்பை உமிழும் நச்சுக்கருத்துக்கள் இதனூடாக சூழலில் பரவி வெகுஜன அளவில் குழப்பங்களையும் தவறான புரிதல்களையும் விட்டுச் சென்றிருக்கும். இது இப்படியே தொடரும். இது எல்லாம் இந்துமதம் மற்றும் அதன் நம்பிக்கைகள், அமைப்புகள் சார்ந்து மட்டுமே நடக்கும். இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்களைச் சார்ந்து எந்த ஒரு மோசமான விஷயமும் பொதுத்தளத்திற்கே வராது. இதுதான் தமிழ்நாட்டின் நிதர்சனம்.

சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

2009 அக்டோபரில் விஜய் டிவியின் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் பெண்கள் தாலி அணிவது அவசியமா என்ற விவாதம் ஒளிபரப்பானது. தமிழ்ப் பண்பாட்டில் திருமண பந்தத்தின் புனிதமான தெய்வீகச் சின்னமாக விளங்குவது தாலி. அதை அவமதிக்கும் வகையில் தாலி நாய்களின் உரிமம் போன்றது, அதை அணிவது மூட நம்பிக்கை என்ற ரீதியிலான பல கருத்துக்கள் அந்த நிகழ்ச்சியில் கூறப்பட்டன. (இவற்றைக் கூறியவர்கள் கிறிஸ்தவர்கள் என்பதும் பின்பு தெரியவந்தது.) தாலியை மதிக்கும் தரப்பில் பேசிய பெண்களிடம் மிகவும் அருவருப்பாகவும் சீண்டலாகவும் உளவியல் சித்ரவதை என்று சொல்லத்தக்க வகையிலும் கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் சங்கடமாக உணர்ந்ததும் கேலி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியினால் மனம் புண்பட்ட ஏராளமான பெண்கள் டிவி நிலையத்திற்கு அளித்த புகார்கள் பதிலளிக்கப்படவில்லை. சட்டரீதியான புகாருக்குப் பதிலாக விஜய் டிவி அளித்த மழுப்பலான விளக்கம் ஏற்கப்பட்டு நீதிமன்றமும் புகாரைத் தள்ளுபடி செய்தது. அந்த நிகழ்ச்சியின் விளம்பரதாரரான லயன் டேட்ஸ் நிறுவனத்திற்கு ஆயிரக்கணக்கில் எதிர்ப்புக் கடிதங்கள் குவிந்தன. ஆயினும் நேரடியாக வருத்தமோ மன்னிப்போ எதுவும் இரு தரப்பிலிருந்தும் கூறப்படவில்லை. இதன் விளைவாக, அடுத்தடுத்து வந்த நிகழ்ச்சிகளிலாவது இந்து விரோதப் போக்கு குறைந்ததா என்பதையும் உறுதியாகச் சொல்வதற்கில்லை.

கலைஞர் டிவியும் தன் பங்குக்கு 2010 ஜனவரியில் ‘தாலி ஒரு சமுதாய அவசியமா அல்லது அடையாளச் சின்னமா’ என்ற விவாதத்தை ‘கருத்து யுத்தம்’ நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது. அதிலும் அவமதிப்பான கருத்துக்கள் இடம்பெற்றன. தாலி தொடர்பான இந்த ஒட்டுமொத்த விவாதத்தின் போதும் மேலே கூறிய மாதிரி தெளிவாக வெளிப்பட்டது. தாலி பண்டைத் தமிழகத்தில் இல்லை, அது ஆரியர்களான பிராமணர்கள் புகுத்தியது போன்ற ஆதாரமற்ற திரிபுகளை ‘ஆய்வாளர்கள்’ என்ற பெயரில் உலவும் காழ்ப்புணர்வாளர்கள் கண்டபடி வந்து பேசிக்கொண்டேயிருந்தனர்.

தனது நடுநிலையை நிரூபிக்கலாம் என்ற வீறாப்பினாலோ என்னவோ ‘முஸ்லிம் பெண்கள் பர்தா உடை அணிவது அவசியமா?’ என்ற தலைப்பில் ஒரு விவாத நிகழ்ச்சியை 2010 ஜனவரியில் நடத்துவதாகத் தேதி குறிப்பிட்டு விஜய் டிவி அறிவித்தது. முன்னோட்டத்தையும் ஒளிபரப்பியது. உடனடியாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இயக்கத்தினர் அவர்களது வழக்கமான பாணியில் மிரட்டலும் கோரிக்கையும் கலந்த ஒரு கடிதத்தை விஜய் டிவிக்கும், காவல்துறை ஆணையருக்கும் அனுப்பினர். அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது, மீறி நடந்தால் முஸ்லிம்கள் பொங்கியெழுவார்கள் என்ற தொனியும் அதில் அடங்கியிருந்தது. விஜய் டிவி நிர்வாகம் இதற்குப் பணிந்து நிகழ்ச்சியை ஒளிபரப்பாமல் இருந்தது மட்டுமல்ல, தவ்ஹீத் ஜமாத்திடம் மன்னிப்பும் கேட்டது.[1]

இந்துமதத்தைத் தொடர்ந்து அவமதிப்புச் செய்வது, அது கேள்விக்குள்ளாக்கப் படும்போது கருத்துச் சுதந்திரம், பகுத்தறிவு, பெண்ணுரிமை, ஜனநாயகம் என்று பேசுவது என்பதையே வழக்கமாகக் கொண்டிருக்கும் ஊடகக்காரர்கள் ஒரு சிறிய இஸ்லாமியக் கட்சியின் சாதாரண மிரட்டலுக்கே எப்படி அடங்கிப் போனார்கள் என்பதை மேற்கண்ட சம்பவம் விளக்குகிறது.

2015 டிசம்பரில் புதிய தலைமுறை டிவி தானும் ஒரு ‘தாலி தேவையா’ விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இதற்கான கண்டனங்கள் சமூக வலைத்தளங்களில் காட்டமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், ஒரு அனாமதேய நபர் டிபன் பாக்ஸ் குண்டை டிவி அலுவலகத்தின் முன்பு வீசிச்சென்றதாக நகைப்புக்குரிய வகையில் ஒரு செய்தியைப் பரப்பி அதனால் விளம்பரம் தேடிக்கொள்ளும் குயுக்தியையும் அது முயன்று பார்த்தது. அவதூறுகளை அமைதியாக எதிர்க்கும் இந்துத் தரப்பினரைக் கூடப் பொய்யாக வன்முறையாளர்கள் என்று முத்திரை குத்த நினைத்த இந்த முயற்சி தோல்வியடைந்தது.

சட்டரீதியாக, இத்தகைய அவதூறுகளுக்கு எதிராக வழக்குப் போட முடியாதா என்று கேட்கலாம். அதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இடமிருக்கிறது, அதே சமயம் அது மிகச் சிக்கலான வழிமுறையும் கூட.

இந்திய தண்டனைச் சட்டம் 295 A பின்வருமாறு கூறுகிறது – யார் ஒருவர் வேண்டுமென்றே, வன்மம் பாராட்டுகின்ற நோக்கில், எந்தக் குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த இந்தியக் குடிமக்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில், வார்த்தையாலோ (எழுத்தாகவோ, பேச்சாகவோ) அல்லது செய்கையினாலோ அல்லது கண்ணுக்குப் புலனாகும் வகையிலோ, அல்லது வேறெந்த விதத்திலோ, அவர்களது மதத்தையோ, மத நம்பிக்கையையோ அவமானப்படுத்தினாலோ, அல்லது அவமானப்படுத்த முயற்சி செய்தாலோ அவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும், அல்லது அபராதமும், அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

இதனுடன், சம்பந்தப்பட்ட அவதூறுகளைச் செய்பவர்கள் இரு சமூகத்தினரிடையே பகையை வளர்க்கும் விதத்திலும், மத நல்லிணக்கத்திற்கு எதிராகவும் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதனால் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153 A வின் கீழும் குற்றம் புரிந்தவர்களாவார்கள்.

எனவே, 295 A மற்றும் 153 A என்ற இந்த இரண்டு பிரிவுகளின் கீழ், சம்பந்தப்பட்ட இந்துமத அவதூறில் ஈடுபடும் தனிநபர் அல்லது அமைப்புகள் மீது காவல் நிலையங்களில் அதனால் பாதிக்கப்பட்டதாகக் கருதும் பொதுமக்கள் யாரும் புகார் அளிக்கலாம்.

ஆனால், அந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறை எந்த நடவடிக்கையும் உடனடியாக எடுக்க முடியாது என்பதுதான் அதிலுள்ள சிக்கல். இந்தக் குற்றம் அரசுக்கும் சமூகத்திற்கும் எதிரானதாக ஆகிறதே அன்றி, தனிநபர்களுக்கு எதிரானது அல்ல. எனவே இந்தப் பிரிவுகளில் குற்றம் இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் பரிந்துரை செய்யவேண்டும். அப்போது மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும். குற்றத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு அது துஷ்பிரயோகம் செய்யப்படக் கூடாது என்ற நோக்கில் இவ்வாறான கட்டுப்பாடு உள்ளது. புகார் கொடுத்தவர்கள் இந்திய அரசு இயந்திரம் தனக்கே உரிய வேகத்தில் செயல்பட்டு ஆணை பிறப்பிக்கும் வரையில் நடவடிக்கைக்குக் காத்திருக்கவேண்டும்.

2013ம் ஆண்டு, சிவலிங்கத்தைக் குறித்து மோசமாகவும் வக்கிரமாகவும் சீமான் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அவை கிறிஸ்தவ மிஷனரிகளின் அபத்தமான கருத்துக்களின் மறுசுழற்சிகளே. பன்னிரு திருமுறைகளிலும் கொண்டாடப்பட்டு தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான சிவாலயங்களிலும் தினந்தோறும் நடைபெறும் சிவலிங்க வழிபாட்டை ஆரிய திராவிட இனவாதத்தின் அடிப்படையிலும் பார்ப்பனர்களுடன் தொடர்பு படுத்தியும் சீமான் இகழ்ந்து பேசினார். இங்கும் முதலில் குறிப்பிட்ட மாதிரி செயல்பட்டிருப்பதைக் காணலாம். பிராமணர்களுக்கு எதிரான விஷம் தோய்ந்த வெறுப்புகளும், ‘நீ நல்ல அப்பனுக்கு பிறந்திருந்தா லிங்கத்தோட பொருளை சொல்லுடா’ போன்ற வாசகங்களும் அடங்கிய அந்தப் பேச்சின் காணொளி இணையத்தின் மூலமும் பரவலாகப் பரப்புரை செய்யப்பட்டது. நடிகர் எஸ்.வி.சேகர் சிறப்பாகச் செயல்பட்டு சீமானுக்கு எதிராக மேற்கண்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்தார். ஆனால், இன்று வரை அதை முன்னிட்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ‘சர்வம் கிருஷ்ணார்ப்பணம்’ என்ற பெயரில் இயங்கும் சமூக வலைக்குழு குறிப்பிட்ட பேச்சுக்கு எதிராகப் புகாரளித்து முதலமைச்சருக்குக் கடிதம் எழுதுமாறு ஒரு பிரசாரத்தை மேற்கொண்டது.

இந்துமதத்தைத் தொடர்ந்து அவமதிக்கும் சீமானை எந்த நிகழ்ச்சிக்கும் அழைக்கக் கூடாது என்று தந்தி டிவி, புதிய தலைமுறை ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் கோரிக்கைகள் அனுப்பப்பட்டன. இதனால் பெரிதாக எந்தத் தாக்கமும் ஏற்படவில்லை. சீமானின் நச்சுப் பிரசாரங்கள் பல தளங்களிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன[2].

2010 டிசம்பரில் மன்மதன் அம்பு திரைப்படத்தில் வரலட்சுமி விரதத்தையும் ஆண்டாள் பாசுரங்களையும் மலினமாகச் சித்தரித்து கமல்ஹாசனால் எழுதப்பட்ட பாடல் இடம் பெற்றிருந்தது. படம் வெளிவருவதற்கு முன்பாக அந்தப் பாடலை தொலைக்காட்சியில் பார்த்த பல இந்துக்கள் கொதித்தனர். பாடலை நீக்கவேண்டும் என்று எதிர்ப்புப் போராட்டங்களும் நடந்தன. சென்சார் துறையினால் ஏற்கெனவே சான்றிதழ் வழங்கப்பட்ட பாடலை நீக்கமுடியாது என்று கமல்ஹாசன் முறுக்கிக் கொண்டு கூறினார். இந்நிலையில் இந்துக்களின் எதிர்ப்புணர்வு நேரடியாகச் சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனங்களுக்கு இந்து இயக்கத் தலைவர்களால் தெரிவிக்கப்பட்டது. குடும்பத்துடன் வந்து இந்துக்கள் இந்தப் படத்தைப் பார்க்கமாட்டார்கள் என்று எச்சரிக்கை விடப்பட்டது. அதைத் தொடர்ந்து பாடல் படத்திலிருந்து நீக்கப் பட்டது[3].

2012ம் ஆண்டு சோலை சுந்தரப்பெருமாள் என்பவர் எழுதிய ‘தாண்டவபுரம்’ என்ற நாவல் பாரதி புத்தகாலயத்தாரால் வெளியிடப்பட்டது. திருஞான சம்பந்தரின் வாழ்க்கை வரலாற்றுச் செய்திகளை வக்கிரமாகவும் மலினமாகவும் திரித்து எழுதப்பட்ட இந்த நாவலை எதிர்த்து சைவ சமய அமைப்புகள் உண்ணாவிரதப் போராட்டங்களையும் கண்டனப் பேரணிகளையும் நடத்தின. நாவலைத் தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டது. சட்டரீதியான நடவடிக்கைகள் எதுவும் பெரிதாக இல்லாததால், இந்த விவகாரம் அப்படியே கைவிடப்பட்டது. அனாவசியாமாக ஒரு கீழ்த்தரமான நாவலையும் அதன் ஆசிரியரையும் எதிர்ப்புகள் மூலம் பிரபலமடையச் செய்ய வேண்டாம் என்ற சமயோசிதமான எண்ணமும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இது இப்படியே முடிந்துவிடக் கூடிய விஷயமல்ல. இன்னும் ஒரு பத்து வருடம் கழித்து, ஏதேனும் ஒரு பிரபலப் பேச்சாளர் இந்த நாவலை ‘ஆதாரமாக’ காண்பித்து சம்பந்தரைக் குறித்த அவதூறான சித்தரிப்புகளை வெகுஜன ஊடகங்களில் பேசுவதற்கான அத்தனை சாத்தியங்களும் உள்ளன என்பதை மறந்து விடக் கூடாது.

உண்மையில் ஆண்டாள் மீதான அவதூறு குறித்த சமீபத்திய விவகாரத்தில் நடந்திருப்பதும் அதுவேதான். ஆண்டாளின் தெய்வப் பாசுரங்களை பாலியல் கவிதைகளாகவும், ஆண்டாளை ஒரு தேவதாசியாகவும் கற்பனை செய்து 1960களில் ‘நோன்பு’ என்ற மட்டமான சிறுகதை டி.செல்வராஜ் என்பவரால் எழுதப்பட்டது. டேனியல் செல்வராஜ் என்ற முழுப்பெயரைக் கொண்ட இவர் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்த ‘முற்போக்கு’ எழுத்தாளர். அப்போது இந்தக் கதைக்கு ஏதும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டதா என்று தெரியவில்லை. ஆனால் பல வருடங்கள் கழித்து தூசிதட்டி எடுத்து 2012-13ம் கல்வியாண்டில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகத் தமிழ்ப் பாடத்திட்டத்தில் இந்தச் சிறுகதையைச் சேர்க்க சில இந்து விரோத விஷமிகளால் திட்டமிட்டு முயற்சி செய்யப்பட்டது. தொடர்ந்த எதிர்ப்புகளால் அந்த முயற்சி கைவிடப் பட்டது[4]. ஆனால் பிறகு 2018 ஜனவரியில் அதே குப்பையை எடுத்து இன்னும் பல ஜோடனைகளுடன் வைரமுத்து தனது தினமணி நிகழ்ச்சியில் பேசி கட்டுரையாகவும் எழுதுகிறார்.

ஆச்சரியமளிக்கும் வகையில் வைரமுத்துவுக்கும் தினமணிக்கும் எதிராக தமிழ்நாட்டின் பல இடங்களில் எதிர்ப்புப் போராட்டங்கள் உடனடியாக எழுந்தன. பற்பல ஆழமான, விரிவான எதிர்வினைகள் வைரமுத்துவின் அணுகுமுறையைக் கண்டித்து எழுதப்பட்டன[5]. தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் ஆண்டாள் சன்னிதியில் வந்து மன்னிப்பு கேட்டுவிட்டார். வைரமுத்து வருத்தம் தெரிவித்தது போதாது, மன்னிப்பும் கேட்கவேண்டும் என்று சில இடங்களில் இன்னும் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. சமீபத்திய வரலாற்றில் இந்துமத அவதூறுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுதிரண்டது என்பது இந்த விஷயத்தில்தான் நடந்திருக்கிறது. நாட்டுப்புறப் பாடல் ஆய்வாளர் விஜயலட்சுமி நவனீதகிருட்டிணன் உட்பட பல சமூகங்களைச் சேர்ந்த இந்துக்களும் சம்பிரதாய வைணவர்களுடன் இணைந்து போராட்டங்களில் ஈடுபட்டபோதும், இது பிராமணர்கள் சார்ந்த பிரச்சினை என்பதாகவே தமிழ் வெகுஜன ஊடகங்கள் அனைத்தும் இதைச் சித்தரிக்க முயன்றன. இந்த விவகாரத்திலும் கட்டுரையில் முதலில் கூறிய அதே மாதிரி-தான் செயல்பட்டது. ஆனால், அதையும் மீறிப் போராட்டத்தின் வீச்சு இருந்தது என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

அந்த மாதிரி தொடர்ந்து செயல்படுவதற்கான ஒரு உளவியலை திராவிட இயக்கத்தின் இத்தனை ஆண்டுகால வெறுப்புப் பிரசாரங்கள் விதைத்து விட்டுப் போயிருக்கின்றன. கடந்த காலங்களில் ஜாதிய மேட்டிமையைக் கடைப்பிடித்தவர்கள் பிராமணர்கள் மட்டுமல்ல. ஆதிக்க சாதிகளான அத்தனை பேரும்தான். உண்மையில் தாழ்த்தப்பட்ட சாதியினரை அதிகமாகவும் நேரடியாகவும் கொடுமைப்படுத்தியதும் (படுத்துவதும்) பிராமணரல்லாத ஆதிக்க சாதியினர்தான். ஆனால் அதை உணரும் மனசாட்சியைக்கூட மழுங்கடித்து பிராமணர்களை மட்டுமே வெறுப்புக்கு இலக்காக்கியது ஈவேராவின் சித்தாந்தம். இந்த 21ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நேரடியான அருவருப்பான பெரியாரிய பாணி நாத்திகப் பிரசாரங்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. திராவிடக் கட்சிகளைச் சார்ந்தவர்களிலும் பெரும்பாலர் இந்துமத வழிபாடுகளைப் பின்பற்றுபவர்களாகவும் கோயில்களில் சென்று வழிபடுபவர்களாகவும்தான் உள்ளனர். ஆனாலும், தங்களைக் கடவுள் நம்பிக்கையுள்ளவர்களாகவும் அதே சமயம் பெரியாரை சமூக நீதிக் கொள்கைகளுக்காக மதிப்பவர்களாகவும் கூறிக்கொள்பவர்களே கணிசமான சராசரித் தமிழர்கள் (பிராமண வெறுப்பு + தலித் வெறுப்பு என்றால் நாகரிகமாக இருக்காதே, அதனால் இப்படி). அதாவது மானசீகமாக ஈவெராவின் கடவுள் மறுப்பை வடிகட்டிவிட்டு ஆனால் பிராமண வெறுப்பை மட்டும் உள்வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள். இது எவ்வளவு கீழ்த்தரமான போலித்தனம் என்பதைக் குறித்து எந்த வெட்கமும் நாணமும் இவர்களிடம் கிடையாது. ஆண்டாள் குறித்த சர்ச்சையைத் தொடர்ந்து, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தமிழ்த்தாய் வாழ்த்தின் போது எழுந்து நிற்கவில்லை என்ற விவகாரத்தை ஒரு முகாந்திரமாக்கி, காஞ்சி மடத்தின் மீதும் அதன் துறவிகள் மீதும் அபாண்டங்களை சுமத்தி அருவருப்பாக வசைபாடும் கும்பல்களிலும், அதற்கு ஒத்து ஊதுபவர்களிலும் கணிசமானவர்கள் இப்படிப்பட்டவர்களே. தமிழ்நாட்டின் சராசரி வெகுஜன மனநிலையே இப்படியிருப்பதால்தான் அந்த மாதிரி தொடர்ந்து வேலை செய்கிறது. அந்த மனநிலையில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியதே தமிழ்நாட்டின் உண்மையான இந்துமத அபிமானிகளும் சமூக நல்லிணக்க நேயர்களும் செய்ய வேண்டிய பணியாகும்.

“இந்தக் கிருபானந்தவாரியார் எத்தனை காலிப்பயல். எத்தனை பாப்பாத்தியைக் கெடுத்திருக்கிறான். எத்தனை பெண்களைக் கெடுத்திருக்கிறான் என்பது எனக்குத் தெரியும். பேசும்போதே பெண்களைப் பார்த்துக் கண்ணடிப்பான். இன்று அவன்தான் பெரிய மனிதன். காந்தி வழி நடப்போம், வெங்காய வழி நடப்போம் என்கிறானே! என்ன காந்தி வழி? அவரால் ஒரு ஊசி முனை அளவு கூட நம் மக்களுக்கு நன்மையில்லையே.”
– விடுதலை 08.04.1969.

தமிழ்நாட்டில் பிராமணர்கள் உட்பட அனைத்துச் சாதிகளையும் சார்ந்த இந்துக்களாலும் மதித்துப் போற்றப்பட்ட வாரியார் சுவாமிகளைக் குறித்து ஈவெரா கூறியது இது. 1969ல் வாழும் மகான் ஒருவரைக் குறித்த இத்தகைய அவதூறுக்கு எந்தவிதமான எதிர்ப்புணர்வையும் காட்டாமல் கெக்கலித்துக் கொண்டிருந்த தமிழ்நாடு, 2018ம் ஆண்டுத் தொடக்கத்தில் ஸ்ரீ ஆண்டாள் குறித்த அவதூறுக்காக வெகுண்டெழுந்தது என்பதே நன்னம்பிக்கைகளுக்கான அறிகுறி.

இந்தச் சுடர் பரவட்டும்.

*

சான்றுகள்:

[1] விஜய் டிவி தாலி, பர்தா நிகழ்ச்சிகள் தொடர்பான தமிழ்ஹிந்து பதிவுகள் – https://goo.gl/eqUQaC & https://goo.gl/vpWXbi

[2] அவதூறுகளை எதிர்கொள்ளுதல்:சீமானை முன்வைத்து – https://goo.gl/gk921u

[3] மன்மதன் அம்பு படப்பாடல் விவகாரம் [செய்திஊடகங்கள் சொல்லாத சேதி] – https://goo.gl/e6hCw1

[4] ஆண்டாள் மீது வக்கிர அவதூறு – https://goo.gl/CZGcjv

[5] ஆண்டாள் குறித்து வைரமுத்துவின் அவதூறுகள் – https://goo.gl/wBEuwv

Leave a Reply