Posted on 1 Comment

கணிகையரும் தேவரடியாரும் – பத்ரி சேஷாத்ரி


இளங்கோ அடிகள் எழுதிய சிலப்பதிகாரத்தின் முக்கியப் பாத்திரம் மாதவி. இவள் கணிகையர் குலத்தைச் சேர்ந்தவள். மாதவி கல்வியிலும் கலைகளிலும் சிறந்தவள். ஆடல், பாடல் மட்டுமல்ல, கவிதை எழுதத் தெரிந்தவள். பேச்சுக்கலையில் வல்லவள். சோழ அரசன்முன் நாட்டியம் ஆடி, முத்துமாலையையும் தலைக்கோலையும் பொற்காசுகளையும் பரிசாகப் பெற்றவள்.

அவளுடைய கலையும் அறிவும், ஆடவர்களைத் தம்பால் இழுத்து அவர்களிடமிருந்து தன் வாழ்க்கைக்கான பொருளைப் பெறுவதற்காகப் பயன்பட்டது. சங்ககாலக் கணிகையர்மீது இன்றைய இருபத்தொன்றாம் நூற்றாண்டு அற மதிப்பீடுகளைக் கொண்டு தீர்ப்பு எழுதல் தகாது. எனவே தள்ளியிருந்து, அந்தக் கால நடைமுறைகளை விருப்பு வெறுப்பின்றிப் பார்ப்போம்.

மாதவியின் தாயார் என்ன செய்கிறார்? மாதவி பரிசாகப் பெற்ற முத்துமாலையைக் கடைத்தெருவில் ஏலம் விட வேலைக்காரியை அனுப்புகிறார். மாலையை அதிக விலைக்கு எடுக்கும் ஆடவனுக்கு மாலை மட்டுமல்ல, மாதவியும் கிடைப்பாள். அப்படி மாலையை வாங்கியவன்தான் கோவலன். அவன் உடனேயே தன் மனைவி கண்ணகியை விட்டுவிட்டு மாதவியுடன் வாழ்க்கை நடத்தத் தொடங்குகிறான். பின் மாதவிமீது கோபம் கொண்டு, கண்ணகியிடம் திரும்பச் செல்கிறான்.

மாதவி கணிகையர் குலத்தவள்தான். ஆனால் அந்தக் குல வழக்கப்படி, அவள் உடனே இன்னொரு ஆடவனைத் தேடிச் சென்றுவிடவில்லை. தன்னைக் கோவலன் மறந்தாலும் தான் அவனை மறக்கமாட்டேன் என்று வாழ்கிறாள். அவனுடன் கூடிப் பெற்ற மணிமேகலை என்ற பெண்ணை வளர்க்கிறாள். அந்தப் பெண் பின்னர் புத்த பிட்சுணியாக ஆனதை சீத்தலைச் சாத்தனார் எழுதிய ‘மணிமேகலை’ காப்பியம் கூறுகிறது.

சங்க இலக்கியத்தில் மருத நிலத்துக்கு உரிய உரிப்பொருள் ‘ஊடலும் ஊடல் நிமித்தமும்’. வேறு ஒருத்தியுடன் வாழ்ந்த தலைவனிடத்தில் தலைவி பிணங்கியிருத்தல்தான் ஊடல் என்கிறார்கள் உரையாசிரியர்கள். இந்த வேறு ஒருத்தி என்பவள், மாதவி போன்ற கணிகை. சங்க இலக்கிய காலம் தொட்டே கணிகையர்கள் இருந்துவந்திருக்கின்றனர். தொல்காப்பியமும் சங்கப் பாடல்களும் இதற்குச் சான்று. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இதற்குச் சான்று.

திருக்குறள் இப்படிப்பட்ட கணிகையர்களைக் கண்டிக்க ஒரு முழு அதிகாரத்தையே ஒதுக்கியுள்ளது. 92ம் அதிகாரம், ‘வரைவின் மகளிர்’ குறித்தது. இந்த அதிகாரம் முழுவதும் திருவள்ளுவர் கணிகையர்களைக் காய்ச்சி எடுக்கிறார். கடுமையான சொற்களால் அவர்களைத் திட்டுகிறார். ‘பொருள்விழையும் ஆய்தொடியார்’, ‘பண்பின் மகளிர்’, ‘பொருட்பெண்டிர்’, ‘மாய மகளிர்’, ‘வரைவிலா மாணிழையார்’, ‘இருமனப் பெண்டிர்’ என்று தூற்றுகிறார். கணிகையருக்குப் பொருள் ஒன்றே பிரதானம். அவர்களுக்கு வரம்பு கிடையாது. பண்பற்றவர்கள். ஆண்களை மயக்கி ஏமாற்றுபவர்கள். உடல் ஓரிடம், மனம் ஓரிடம் என்று இருப்போர். இப்படிப்பட்ட பொதுமகளிரை நாடுபவன் பற்றி லேசாகத் திட்டினாலும், பெரும்பாலான சுடுசொற்கள், இந்தப் பெண்கள்மீதுதான்.

பன்னிரு ஆழ்வார்களின் வாழ்க்கை வரலாற்றை நமக்குச் சொல்வது ‘குரு பரம்பரப் பிரபாவம்’ என்னும் நூல். அதிலும் ஒரு கணிகையைக் காண்கிறோம். தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் வாழ்க்கையில் அப்படி ஒருத்தி வருகிறாள்.

தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் இயற்பெயர் விப்ர நாராயணன். மணவாழ்வில் ஈடுபட விருப்பம் இல்லாதவராக, திருவரங்கக் கோயிலில் பூச்செடிகளை நட்டுப் பராமரிக்கும் நந்தவனக் கைங்கர்யம் செய்துவந்தார். பார்க்க அழகான இளைஞர். ஒருநாள் உறையூரில் இருந்த சோழ மன்னனிடம் பரிசுகளைப் பெற்றுத் திரும்பிவந்துகொண்டிருந்த கணிகையான தேவதேவி என்பவள், அரங்கனைச் சேவிக்க வந்தாள். வந்தவள், விப்ர நாராயணன்மீது மையல் கொண்டாள்.

விப்ர நாராயணன் போன்றோர் தேவதேவி போன்றோரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார் என்றாள் தேவதேவியின் சகோதரி. சகோதரிகள் இருவரும் பந்தயம் வைத்துக்கொண்டனர். தேவதேவி விப்ர நாராயணனை மயக்கிவிட்டால், அவளுக்கு அவளுடைய சகோதரி ஆறு மாதம் அடிமையாக இருப்பாள். அப்படிச் செய்யத் தவறிவிட்டால், தேவதேவி தன் சகோதரிக்கு ஆறு மாதம் அடிமை.

தேவதேவி, சாதாரண உடை தரித்து, விப்ர நாராயணனுக்கு உதவியாக இருக்கத் தொடங்கினாள். தினசரி நந்தவனக் கைங்கர்யம் முடிந்ததும், விப்ர நாராயணன் உள்ளே உறங்க, இவள் வெளியே உறங்குவாள். ஒரு மழை நாளில், தேவதேவி குளிரால் நடுங்குவாளே என்று அவளை உள்ளே உறங்க அனுமதிக்கிறார். அவளோ அதனைச் சாக்காக வைத்து, அவரை மயக்கித் தன்வயப்படுத்துகிறாள். விப்ர நாராயணன் அரங்கனை மறக்கிறார். இனி தேவதேவிதான் எல்லாம் அவருக்கு.

தன் பந்தயத்தில் வெற்றியடைந்த தேவதேவி, விப்ர நாராயணனை விட்டுவிட்டு, மீண்டும் தன் தொழிலுக்குச் சென்றுவிடுகிறாள். தேடிச் செல்லும் விப்ர நாராயணனை தேவதேவி அவமதிக்கிறாள். பொருள் இருந்தால் மட்டுமே அவரை வீட்டுக்குள் அனுமதிக்க முடியும் என்கிறாள். ஏங்கித் தவிக்கும் விப்ர நாராயணனைக் காப்பாற்ற முன்வருகிறான் திருவரங்கன்.

அழகிய மணவாள தாஸன் என்ற பெயர் தரித்து, கோயிலில் இருக்கும் பொன்வட்டிலை எடுத்துக்கொண்டுபோய் தேவதேவியிடம் அளித்து, விப்ர நாராயணன் கொடுக்கச் சொன்னதாகச் சொல்கிறான் திருவரங்கன். பொன்வட்டில் களவு போன செய்தி அரசனுக்குப் போகிறது. அரசன் காவலர்களை நாலா திசைக்கும் அனுப்புகிறான். தேவதேவியின் வீட்டு வேலைக்காரி, தன் எஜமானி வீட்டில் கண்ட பொன்வட்டில் குறித்துத் தகவல் சொல்கிறாள். தேவதேவி கைதாகிறாள். அவள் காட்டிக் கொடுக்க, விப்ர நாராயணனும் கைதாகிறார்.

பின், அரங்கனின் திருவிளையாடல் முடிவுக்கு வருகிறது. அரசனின் கனவில் போய் நடந்த உண்மைகளைக் கூற, அரசன் விப்ர நாராயணனையும் தேவதேவியையும் விடுதலை செய்கிறான். விப்ர நாராயணன் தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஆகிறார். திருமாலை, திருப்பள்ளியெழுச்சி என்னும் பாசுரங்களைப் பாடுகிறார்.

தேவதேவி என்னவாகிறாள்? அவள் கணிகை வாழ்க்கையை விடுத்து, தன் இறுதிக்காலம் வரையில் திருவரங்கன் கோவிலில் கைங்கர்யம் செய்து வாழ்கிறாள்.

கணிகையர் யார் என்று தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் ‘அநாதி காலம்’ தொட்டே தமிழ்ச் சமூகத்தின் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக இருப்பதும் தெளிவாகத் தெரிகிறது. ஆனால் தேவரடியார் என்போர் யார்? அவர்கள் எப்போதிலிருந்து தமிழ்ச் சமூகத்தில் தென்பட ஆரம்பித்தனர்?

தேவரடியார் என்பார் சிவன், விஷ்ணு ஆகிய பெருந்தெய்வக் கோயிலுக்கு உரித்தானோர் என்று தெரிகிறது. சங்க இலக்கியத்திலோ, காப்பியங்களிலோ, இந்த வார்த்தையை அல்லது இதனை ஒத்த வார்த்தையைக் காண முடிவதில்லை. கோயில் கல்வெட்டுகளிலும் ஆகமங்களிலும்தான் தேவரடியார் அல்லது தளிப்பெண்டுகள் பற்றிய குறிப்புகள் வர ஆரம்பிக்கின்றன.

சோழர் காலக் கல்வெட்டுகளில்தான் முதல்முறையாக தேவரடியார் குறித்த தகவல்கள் வர ஆரம்பிக்கின்றன என்று நினைக்கிறேன். கிட்டத்தட்ட பல்லவர் ஆட்சியின் இறுதிப் பகுதியில்தான் சைவ, வைணவ ஆகமங்கள் எழுதப்பட்டிருக்கவேண்டும். சைவ ஆகமங்களும் வைணவ பாஞ்சராத்ர ஆகமங்களும் கடவுள் வழிபாட்டின்போது நாட்டியத்தின் தேவை குறித்துப் பேசுகின்றன. பாஞ்சராத்ரத்தில் வழிபாட்டின்போது பல்வேறு முத்திரைகள் காட்டப்படவேண்டும். இன்றும் அர்ச்சகர்கள் இவற்றைச் செய்வதை நீங்கள் பார்க்கலாம். ஆகம வழிபாடு நிலையான காலத்தில், நாட்டியப் பெண்டிர் இவற்றைச் செய்திருக்கலாம் என்று தெரிகிறது. அப்படிப் பார்க்கையில் தேவரடியார் என்போர், ஆகமக் கோவில்களில் அர்ச்சகர்களுக்கு அடுத்தபடி கடவுள் வழிபாட்டுக்கு முக்கியத் தேவையாக இருந்திருக்கிறார்கள்.

நமக்குக் கிடைத்திருக்கும் கல்வெட்டுகள், அவர்களுடைய உயர்ந்த சமூக நிலையைக் காட்டுகிறது. அரசர்கள் இப்பெண்களுக்கு நிலங்களை எழுதிவைத்துள்ளனர். இப்பெண்கள், கோயில்களுக்குப் பெருங்கொடைகளைக் கொடுத்துள்ளனர்.

இவர்கள் நிச்சயமாக விலைமாதர் அல்லர் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஏனெனில் பொருள் வேண்டி அவர்கள் பிற ஆண்களை நாடிச் செல்லவேண்டிய அவசியம் இருந்திருக்கவில்லை. அதே நேரம், இவர்கள் விரும்பினால், தேவரடியாராக இருப்பதை விடுத்து மண வாழ்விலும் ஈடுபட முடிந்திருக்கிறது. இதற்கான ஆதாரங்களும் கல்வெட்டுகளில் கிடைக்கின்றன.

சோழர் காலத்தில் பெரிதாக நிலை பெற்ற தேவரடியார் வழக்கம், பாண்டியர் காலத்திலும், பின்னர் விஜயநகர, நாயக்கர் காலத்திலும் தொடர்ந்து வழக்கில் இருந்துள்ளது. நாயக்கர் வீழ்ச்சிக்குப்பின், இம்முறையில் மாற்றம் வந்திருக்கவேண்டும். அப்போதுதான் தேவரடியாராக இருந்த பலரும் வாழ வழியில்லாமல் கணிகையர் தொழிலை நாடியிருக்கவேண்டும். அதுவும்கூட அனைவரும் அத்தொழிலில்தான் ஈடுபட்டார்கள் என்று சொல்ல முடியாது.

1947ம் ஆண்டு, சென்னை சட்டமன்றத்தில் ‘தேவதாசி ஒழிப்புச் சட்டம்’ கொண்டுவரப்பட்டது. கோயிலுக்குப் பெண்களை ‘நேர்ந்துவிடுவது’ அதன்மூலம் தடை செய்யப்பட்டது. இதன் அடிப்படை நோக்கம், உண்மையில் விபசாரத்தைத் தடை செய்வதுதான். கோயிலுக்கு தேவரடியார்களாக நேர்ந்துவிடப்பட்டவர்கள்தான் விபசாரத்தில் ஈடுபடுகிறார்கள் என்று இந்த மசோதாவைக் கொண்டுவந்தவர்கள் கருதினர். இது முழு உண்மையன்று என்று அப்போதே தேவரடியார் பலரும் வாதிட்டனர். தேவரடியாராக இருந்த பல பெண்கள் விபசாரத்தில் ஈடுபடவில்லை; ஆடல் பாடல் கலைகளை மட்டுமே அவர்கள் கைக்கொண்டிருந்தனர். அதே நேரம் தேவரடியாராக இல்லாத பலரும் விபசாரத்தில் ஈடுபட்டுவந்தனர். இந்தச் சட்டம் இயற்றப்பட்டப்பட்ட பின்னரும் விபசாரத்தில் எந்தக் குறைவும் இருக்கவில்லை. அத்தொழில் தொடர்ந்து நடந்தபடியே இருந்தது.

இருபதாம் நூற்றாண்டில்தான் ‘தேவரடியார்’ என்ற சொல், கடும் வசவுச் சொல்லாக மாறியது என்பதை யூகிக்க முடிகிறது. தேவடியா, தேவடிச்சி போன்ற சொற்கள் வழக்கில் புழங்க ஆரம்பித்தது இக்காலத்தில்தான். தேவடியா மகன் என்னும் சொல் ஆங்கிலத்தின் பாஸ்டர்ட் என்ற சொல்லுக்கு இணையாகப் புழங்கியது. ஆக, பரத்தையர், கணிகையர், வரைவின் மகளிர், வேசி, விபசாரி போன்று பல நூறு ஆண்டுகளாகப் புழங்கிவந்த சொற்கள் கடந்த நூறாண்டுக்குள்ளாகத் தூக்கி எறியப்பட்டு, முற்றிலும் வேறு பொருள் கொண்டிருந்த தேவரடியார் என்ற சொல்லாக மாற்றப்பட்டது. இதற்குக் காரணம் யார் என்பதை உண்மையில் ஆராய்வது பொருத்தமாக இருக்கும்.

இன்றைய பொதுப்புத்தி என்ன சொல்கிறது? தேவரடியார் முறையைக் கோயில்களில் புகுத்தியது இந்து மதம். அதன்மூலம் சுத்தபத்தமாக இருந்த தமிழ்ச் சமூகத்தில் விபசாரத்தைப் புகுத்தியது இந்துமதம். இந்தக் கறையைப் போக்கியது திராவிட இயக்கம். முத்துலட்சுமி ரெட்டி (பெயரைக் கவனியுங்கள்), ஈ.வெ.ரா பெரியாரின் சமயோசிதமான அறிவுரையைப் பின்பற்றி சட்டமன்றத்தில் இந்த மசோதாவைக் கொண்டுவந்தார். இதனை எதிர்த்தவர் காங்கிரஸ் கட்சியின் சத்தியமூர்த்தி ஐயர் (பெயரைக் கவனியுங்கள்). ஆக, இந்துமதமும், காங்கிரஸ் கட்சியும், பிராமணர்களும் தமிழ்ச் சமுதாயத்தின் அற மதிப்பீடுகளைக் குலைத்து, பெண்களைக் கேவலப்படுத்தினர். ஈ.வெ.ராவும், அவருடைய நீட்சியாக திராவிட இயக்கமும், பிராமணர் அல்லாதோரும் தேவதாசி முறையை ஒழித்து, தமிழ்ச் சமூகத்தைச் சுத்தப்படுத்தி, உயர்த்தினர்.

ஆனால் உண்மை என்ன?

1947ல் மெட்ராஸ் மேலவையிலும் சரி, கீழவையிலும் சரி, பெரும் எண்ணிக்கையில் இருந்தது காங்கிரஸ்தான். முத்துலட்சுமி ரெட்டி ஒரு காங்கிரஸ்காரர் மட்டுமல்ல, அவர் ஒரு பிராமணரும்கூட. அக்காலப் பெண் குழந்தைகள்போல் அல்லாது, அவருடைய தந்தை நாராயணசாமி ஐயர், சிறு வயதிலேயே அவருக்குத் திருமணம் செய்துவைக்காமல், தொடர்ந்து படிக்கவைத்தார். முத்துலட்சுமி பிறகு மருத்துவர் பட்டம் பெற்றார். சுந்தர ரெட்டி என்ற மருத்துவரை சாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்டபின், முத்துலட்சுமி ரெட்டி என்று பெயரை மாற்றிக்கொண்டார்.

தேவதாசி முறை ஒழிந்தபின், அதனால் பாதிக்கப்பட்ட சில பெண்கள் முத்துலட்சுமி ரெட்டியின் வீட்டுக்கு வந்து தங்கள் நிலையை விளக்கிச் சொன்னார்கள். அவர்களுடைய துயர நிலையைப் பார்த்து வருந்திய முத்துலட்சுமி, ஆதரவற்ற பெண்களுக்கு உதவ ‘ஔவை இல்லம்’ என்னும் அமைப்பை ஏற்படுத்தினார்.

*
ஆண்டாள் விஷ்ணுமீது இயற்றிய பாசுரங்கள் ‘பச்சை பச்சையாக’ காமத்தைப் பற்றிப் பேசுகின்றனவா?

ஶ்ரீவைணவ இலக்கியத்தின் அடிப்படை புரியாதவர்கள்தான் அப்படிப் பேசுவார்கள். ஶ்ரீவைணவ தத்துவத்தின்படி, ஜீவாத்மா என்பது அடிமை. பரமாத்மா எஜமானன். ஜீவாத்மா என்பது ‘சேஷ’. பரமாத்மா ‘சேஷி’. ஜீவாத்மா, பரமாத்மாவை முழுமையாக அண்டியிருக்கிறது. அது பரமாத்மாவைப் பிரிந்தால் துயருருகிறது. சேர்ந்தால் மகிழ்ச்சிக் கடலில் மூழ்குகிறது. ஆக, ஒப்புமை சொல்வதென்றால், பக்தி என்பது லௌகீகமான ஆண்-பெண் காதல் போன்றது. இங்கு பரமாத்மாவான நாராயணன் மட்டுமே ஆண் தன்மை கொண்டவன். அனைத்து ஜீவாத்மாக்களும் பெண் தன்மை கொண்டவர்கள். எனவேதான் ஆண்டாள் மட்டுமின்றி, நம்மாழ்வாரும் திருமங்கை ஆழ்வாரும் தங்களைப் பெண்ணாகப் பாவித்து ஆண்டாளை மிஞ்சும் அளவு காதல் வார்த்தைகளை விஷ்ணுவிடத்தில் பேசுகின்றனர். பக்தி இலக்கியத்தில் மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழ் இலக்கியத்திலுமே உச்சம் இவை என்று சொல்லலாம்.

சரி, பெரியாழ்வார், தன் பெண்ணான ஆண்டாளை திருவரங்கத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்துவிடுகிறார். அவளுக்கு என்ன ஆனது? ஶ்ரீவைணவ மரபின்படி அவள் அரங்கனுடன் கலந்துவிடுகிறாள். அவ்வளவுதான். ஜீவாத்மா, பரமாத்மாவை அடைந்துவிட்டது. உயிரான பரமாத்மாவின் உடலின் ஒரு பகுதியாக ஆகிவிடுகிறது. இதனைப் பகுத்தறிவு ஏற்காது. ஏற்கவேண்டிய அவசியமும் கிடையாது. ஆனால், பகுத்தறிவு, குரு பரம்பரப் பிரபாவத்தையே ஏற்காது. அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பிய்த்து, வேண்டியதை வைத்துக்கொண்டு புதிதாகப் புனைந்துகொள்ள சான்றுகள் ஏதும் இல்லை.

ஆய்வாளர்கள் தன்னிச்சையாகப் பலவற்றை எழுதிவிடுகின்றனர். இது ஆய்வுப் புலத்தில் சர்வசாதாரணம் என்பதாகச் சொல்லப்படுகிறது. மரபார்ந்து கற்றறிந்த ஆய்வாளர்கள், இந்தக் குறைபாடுகளை நீக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வார்கள் என்று நம்புவோம். வெகுஜனத் தளத்தில் மரபு அறியாமல், சரியான புரிதல் இன்றி யாரேனும் பேசினால், மக்கள் வெகுண்டெழ வேண்டியதில்லை. சரியான தகவலைக் கொடுத்துவிட்டு அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டு போவதே முறையானது.

*****

1 thought on “கணிகையரும் தேவரடியாரும் – பத்ரி சேஷாத்ரி

  1. fairly good summation by a non-specialist historian/sociologist. Shulman calls Devadasi abolition Act , the last great act of cultural destruction by the soon-to-be ending British Indian empire. Ideally , instead of abolishing and outlawing Deavadasis , they should have be given monthly salary to work for a temple or another . To combat prostitution, there are other laws whose proper implementation would have minimized prostitution and pimping. n some countries like Britain a prostitute soliciting business is not a crime, but any (man) approaching a prostitute can be nicked by police. In Britain, the onus of keeping within the law falls on a man i.e. a prostitute's prospective customer. Britain does not penalize supply, but demand. Devadasis could have been part of Government cadre – paid by the population – to do there traditional business and as a government cadre thrown open to all the castes and religions. But mid-20th century Indian prudishness , typified by the dravidian movement could not think of better alternatives

Leave a Reply