Posted on Leave a comment

தீக்குறளை சென்றோதோம் – சுஜாதா தேசிகன்


ஆண்டாள் சம்பந்தமாக வைரமும் முத்துவுமாக இரண்டு சம்பவங்களை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

சம்பவம் 1:

அனந்தாழ்வான் ஸ்ரீராமானுஜரின் பிரதான சீடர்களில் ஒருவர். ஸ்ரீராமானுஜரின் ஆசையைப் பூர்த்தி செய்ய, திருமலை திருவேங்கடப் பெருமாளுக்குப் புஷ்ப கைங்கரியம் செய்து வந்தார். ஒரு நாள் அவருக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளை சேவிக்க வேண்டும் என்று தோன்றியது. திருவேங்கமுடையானிடம் தன் விருப்பத்தைச் சொல்ல, அவரும் “சரி” என்று உத்தரவு கொடுத்தார்.

அனந்தாழ்வான் உடனே அடியார்களுடன் ஸ்ரீவில்லிப்புத்தூர் வந்தடைந்தார்.

ஸ்ரீவில்லிப்புத்தூர் குளத்தில் நீராடிவிட்டு மற்ற அடியார்கள் ஆண்டாள் நாச்சியாரை சேவிக்க உள்ளே சென்றபோது, கோயிலில் அனந்தாழ்வானைக் காணவில்லை. அவர்கள் அவரைத் தேடிக்கொண்டு திரும்ப வந்தபோது அனந்தாழ்வான் குளத்திலேயே கையைவிட்டு எதையோ தேடிக் கொண்டிருந்தார்.

“ஏதாவது தொலைத்துவிட்டீரா?” என்றார்கள் உடன் வந்தவர்கள்.

“இல்லை.. இங்கேதான் ஆண்டாள் தினமும் குளித்திருப்பாள். அவள் தேய்த்துக்கொண்ட மஞ்சள் ஏதாவது கிடைத்தால் திருவேங்கடமுடையானுக்குப் பரிசாகக் கொடுக்கலாம் என்று தேடிக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

ஆண்டாள் வாழ்ந்த காலம் என்ன, இவர் வாழ்ந்த காலம் என்ன? பக்திக்கு பிரேமம்தான் முக்கியம். காலம் கடந்த பக்தி!

சம்பவம் 2:

ஸ்ரீராமானுஜருக்கு வலது கரம் கூரத்தழ்வான் என்று சொல்லலாம். ஆழ்வானுடைய மனைவி பெயர் ஆண்டாள், மகன் ஸ்ரீபராசர பட்டர். கூரத்தழ்வான் அவர் மனைவி ஆண்டாள், பராசரபட்டர் என மூவருமே மிகுந்த ஞானவான்கள்.

பட்டர் தன் இல்லத்தில் தினமும் அருளிச்செயல்களின் காலட்சேபம் சாதிப்பார். ஒருநாள் திருப்பாவையை காலட்சேபம் சாதித்து முடித்தபின் சிஷ்யர்கள் அவர் ஸ்ரீபாத தீர்த்தத்தைப் பிரசாதமாக வாங்கிக்கொண்டு சென்றார்கள்.

இதைக் கவனித்துக்கொண்டிருந்த அவர் தாயார் ஆண்டாள், தனக்கு அந்த ஸ்ரீபாத தீர்த்தப் பிரசாதம் வேண்டும் என்று பிரியப்பட்டார். தாம் சென்று கேட்டால் பட்டர் மறுத்துவிடுவார் என்பதால் அங்கேயிருந்த சிஷ்யன் ஒருவனிடம் வாங்கி வரச்சொல்லி அதை ஸ்வீகரித்துக்கொண்டார்.

இதைக் கவனித்த பட்டர் கலங்கினார். “மகனுடைய ஸ்ரீபாத தீர்த்தத்தைத் தாய் எடுத்துக்கொள்ளுவது தகுமோ?” என வினவினார். அதற்கு ஆண்டாள் சொன்ன பதில், “சிற்பி பெருமாள் சிலையை வடிக்கிறார் என்பதால் அவர் அதை வணங்காமல் இருப்பாரா? அதே போல்தான் நான் உன்னைப் பெற்ற தாயாக இருந்தாலும் ஆண்டாள் அருளிய திருப்பாவையைச் சொன்ன உன் ஸ்ரீபாத தீர்த்தத்தை எடுத்துக்கொண்டேன்.”

இந்தச் சம்பவங்கள் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. குருபரம்பரையில் உள்ளன. ஆண்டாளின் பெருமையும், திருப்பாவைக்கு ஆசாரியர்கள் கொடுத்த முக்கியத்துவமும் இதில் புலப்படும்.

குருபரம்பரைப்படி, ஸ்ரீவில்லிப்புத்தூரே நம் ஆண்டாளின் பிறப்பிடமாகும். கலியுகத்தின் ஒரு நள வருஷத்தில் ஆடி மாதம் சுக்ல சனிக்கிழமை கூடிய பூர நட்சத்திரத்தில் பெரியாழ்வார் கொத்தி வைத்த பூமியில் துளசி மடியில் கிடந்த பெண் குழந்தையைப் பெரியாழ்வார் எடுத்து ‘கோதை’ எனப் பெயரிட்டு வளர்த்தார்.

ஆண்டாள் யார் வைத்த பெயர்?

ஆண்டாள் என்ற பெயரைப் பல நூற்றாண்டுகளாகச் சொல்லிவருகிறோம். ஆனால் ஆண்டாள் தன்னை ‘ஆண்டாள்’ என்று எங்கும் சொல்லிக்கொள்ளவில்லை. அதே போல பெரியாழ்வாரும் ஆண்டாள் என்று எங்கும் குறிப்பிடவில்லை.

ஆண்டாள் தன்னை ‘சுரும்பார் குழல்கோதை’ (நாச்சியார் திருமொழி) என்றும் ‘பட்டர்பிரான்கோதை சொன்ன’ (திருப்பாவை) என்றும், தன்னைக் கோதை என்றேதான் அடையாளப்படுத்திக்கொள்கிறாள்.

தினமும் பூமாலை கைங்கரியம் செய்து வந்த பெரியாழ்வார் ‘கோதை’ என்ற பெயரை ஆண்டாளுக்குச் சூட்டினார். கோதை என்றால் மாலை என்று பொருள். கோதை சம்ஸ்கிருத சொல் கிடையாது. அதை சம்ஸ்கிருதத்தில் உச்சரித்தால் ‘கோதா’ என்று வரும் (உதாரணம் – ஸ்வாமி தேசிகனின் கோதாஸ்துதி) கோதா என்றால் ‘நல் வார்த்தையை அருளிச்செய்தவள்’ என்று பொருள். பூமாலையைச் சூடிக்கொடுத்தாள்; பாமாலையைப் பாடிக்கொடுத்தாள். இரண்டு தன்மைக்கும் ஏற்றபடி அமைந்துள்ளது இதன் சிறப்பு.

ஆண்டாள் பிரசித்தமான பெயராக விளங்குகிறது. அது யார் சூட்டிய பெயர் என்று தெரியவில்லை. நாதமுனிகளின் சீடரான ஸ்ரீ உய்யக்கொண்டார் திருப்பாவை தனியனில்

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள்நற் பாமாலை; பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

என்கிறார். இங்கேதான் முதன்முதலில் ஆண்டாள் என்ற பெயர் வருகிறது.

நாச்சியார் திருமொழியில் நாதமுனிகளின் இன்னொரு சீடரான ஸ்ரீ திருக்கண்ணமங்கையாண்டான் தனியனில் .

அல்லிநாள் தாமரைமேல் ஆரணங்கின் இன்துணைவி
மல்லிநாடு ஆண்ட மடமயில் – மெல்லியலாள்
ஆயர்குல வேந்தன் ஆகத்தாள், தென்புதுவை
வேயர் பயந்த விளக்கு.

மல்லிநாடு – ஸ்ரீவில்லிப்புத்தூர். அதை ஆண்ட மடமயில் என்கிறார். பாண்டிய அரசன் தன் செல்வாக்கினால் நாட்டை ஆண்டான். ஆண்டாள் தன் பக்தியின் சொல்வாக்கினால் நாட்டை ஆண்டாள். அதனால் ஆண்டாள் என்றால் மல்லிநாட்டை பக்தியால் ஆண்டவள்.

மீண்டும் ஆண்டாளின் கதைக்குப் போகலாம்.

ஒவ்வொரு நாளும் பெரியாழ்வார் பெருமாளுக்குத் தொடுக்கும் மாலைகளைத் தானே ரகசியமாகச் சூடி கண்ணாடியில் அழகுபார்த்து, இந்த அழகு பெருமானை மணக்க தனக்குப் பொருந்துமோ என எண்ணிக் கொடுத்தனுப்பிக் கொண்டிருக்கும்போது ஒருநாள் பெரியாழ்வார் இதைப் பார்த்துவிட்டு, “இது தகாத காரியம்” என்று கோபித்துக்கொண்டார்.

அதன்படி மறுநாள் ஆண்டாள் சூடாத மாலையை எடுத்துக்கொண்டு அவர் கோயிலுக்குச் சென்றபோது பெருமாள், “அந்தப் பெண் சூடிய மாலைதான் எனக்கு உவப்பானது; அதை எடுத்து வாரும்!” என்றாராம்.

பெரியாழ்வார் வியந்து, ‘நம் பெண் மானிடப் பிறவி இல்லை; பூமிப்பிராட்டியின் அம்சம்’ என்றுணர்ந்து ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்று பெயரிட்டு அழைத்து வந்தார். அவளுக்கு மணப்பருவம் நெருங்க, பெரியாழ்வார் “நீ யாரை மணம் செய்துகொள்வாய்?” என்று கேட்க, “பெருமாளையே மணக்க விரும்புகிறேன். மனிதர்கள் என்கிற வார்த்தை காதில் பட்டாலே என்னால் வாழ முடியாது” என்று சொல்லிவிட்டாள்.

பெரியாழ்வார் எல்லாத் திவ்யதேசங்களின் பெருமாள் பெயர்களையும் சொல்ல, திருவரங்கனின் பெயர் கேட்டதும் ஆண்டாள் நாணினாள்.

இந்தத் திருமணம் எவ்வாறு சாத்தியம் என்று பெரியாழ்வார் கவலைப்பட, அவர் கனவில் பெருமாள் தோன்றி ‘அவளை அலங்கரித்துக் கோயில் என்னும் திருவரங்கத்துக்கு அழைத்து வா!’ என்று கட்டளையிட்டார். கோயில் பரிசனங்களுக்கும் அவள் வரவைத் தெரிவித்தார். அவ்வாறே பெரியாழ்வார் கோதையை அலங்கரித்து திருவரங்கத்துக்கு அழைத்து வர, அவர்களுக்கு அங்கே பெரிய வரவேற்பு. பெருமானிடத்தில் அவளை விட்டுவிட, கோதை அவருடன் ஐக்கியமாகி மறைந்து போனாள் என்பது குருபரம்பரைக் கதை.

சீதையை பூமியில் கண்டெடுத்த ஜனகர் மாதிரி ஆண்டாளை பெரியாழ்வார் கண்டெடுத்தார். அதனால் இருவரும் பூமாதேவியாகவே போற்றப்படுகிறார்கள்.

“பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே” என்று ஆண்டாளின் வாழி திருநாமம் பல காலமாகக் கோயில்களிலும் வீடுகளிலும் சேவிக்கப்படுகிறது (ஓதப்படுகிறது). பெரியாழ்வார் துளசித் தோட்டத்தில் கண்டெடுத்தார், அதனால் “பெரியாழ்வார் கண்டெடுத்த பெண்பிள்ளை வாழியே” என்றுதானே இருக்க வேண்டும்? பெரியாழ்வார் கண்டெடுத்தவராக இருக்கலாம். ஆனால் ஆண்டாளுக்கு அவர் என்றுமே பெற்றெடுத்தவர்தான்!.

பழந்தமிழ் இலக்கியமான பரிபாடலில் தான் விரும்பும் ஆண்மகனை அடைய, பெண்கள் நீராடி நோன்பு நோற்ற செய்தியைப் பரிமேலழகர் தன்னுடைய உரையில் குறிப்பிட்டுள்ளார். சாதாரண ஆண்மகனை அடைய விரும்பாமல், பெருமாளையே அடைய பாவை நோன்பு நோற்று அந்த மரபை மீறினாள் ஆண்டாள்.

மானுட நோன்பை தெய்வத்தை அடையப் பயன்படுத்தும்போது, அந்தரங்கமும் அன்னியோன்யமும் எச்சிலும் வாசனைகளும், முலைகளும், ‘கொச்சை’ நீக்கப்பட்டு, காமம் காதலாகிப் பக்தியாகிறது.

கடவுளுக்காகத் தன்னையே அர்ப்பணித்த பெண்கள் என சரித்திரத்தில் மீராபாய், காரைக்கால் அம்மையார் என்று பல உதாரணங்கள் உண்டு. ஆண்டாள் இவர்களுக்கெல்லாம் முன்னோடி.

மற்ற ஆழ்வார்கள் நாயகி பாவத்தில் பெருமாளை அணுகினார்கள். ஆடவரை ஆடவர்கண்டு காமுறுவதைக் காட்டிலும் பெண் காமுறுதல் என்பதில் ஏற்றம் அதிகம். ஆண்டாள், நாயகியாகவே பெருமாளை அணுகினாள்.

‘ஒழிக்க ஒழியாத’ உறவானது பகவானுக்கும் பக்தனுக்கும் உள்ள பரஸ்பர பந்தத்தை நிலைநிறுத்துவது என்பது ஸ்ரீவைணவத்தின் ஆதாரக் கருத்து.

ஸ்ரீராமானுஜருக்கு முன்பு ஒருவழிப் பாதையாக இருந்த ஸ்ரீவைணவ மரபை, எந்தத் தகுதியும் வேண்டாம், ‘ஆசை’ என்ற ஒரு தகுதி இருந்தாலே போதுமானது என்று ஸ்ரீராமானுஜர் மாற்றியமைத்தார். அவர் மனதில் மாற்றத்துக்கான காரணம் ஆண்டாளின் திருப்பாவை. ஸ்ரீராமானுஜர் தன்னை ‘திருப்பாவை ஜீயர்’ என்றே அழைக்கவேண்டும் என்றும் அதுவே தனக்கு உவப்பான பெயர் என்றும் கூறியுள்ளார். இன்றளவும் ஆண்டாளின் ஆசையை நிறைவேற்றிய அண்ணனாகக் கொண்டாடப்படுகிறார்.

ஸ்வாமி தேசிகன் கோதாஸ்துதியில் ஆண்டாளின் பெருமையைப் போற்றுகிறார். மணவாள மாமுனிகள் “இன்றோ திருவாடிப் பூரம் எமக்காக அன்றோ இங்காண்டாள் அவதரித்தாள்” என்று அனுபவிக்கிறார்.

ஸ்ரீவைணவ ‘வ்யாக்யான சக்கரவர்த்தி’ என்று போற்றப்படும் உரையாசிரியர் ஸ்ரீபெரியவாச்சான் பிள்ளை ஆண்டாளைப் பற்றி இப்படிக் கூறுகிறார்

“முனிவர்களையும் ஆழ்வார்களையும் ஒப்பிட்டால் முனிவர்களின் பக்தி அணுவளவாகவும், ஆழ்வார்களின் பக்தி மலைபோலவும் இருக்கும். ஆழ்வார்களை எடுத்துக்கொண்டாள் மற்ற ஆழ்வார்களின் பக்தி அணுவளவாகவும், பெரியாழ்வார் பக்தி மலை போலவும் இருக்கும். பெரியாழ்வார் பக்தியையும் ஆண்டாளின் பக்தியையும் ஒப்பிட்டால் பெரியாழ்வாரின் பக்தி அணுவளவாகவும், ஆண்டாளின் பக்தி மலையளவாகவும் காட்சி அளிக்கிறது” என்கிறார்.

ஐயங்கார்கள் மட்டும் இல்லாமல் சைவர்கள், ரெட்டியார், செட்டியார், நாயுடு என்று பல சமூகத்தினரும் ஆண்டாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்டாளே பூமிப்பிராட்டி என்பது ஸ்ரீவைணவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. எல்லா திவ்யதேசக் கோயில்களிலும் ஆண்டாளுக்குத் தனி சன்னதியே உண்டு.

‘அம்மா அப்பா’ ‘மம்மி டாடி’யாக மாறி, டைனிங் டேபிளில் கூட ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்ளும் சமூகத்தில், இன்றும் மார்கழி மாதம் முழுவதும் பல இடங்களில் ஆண்டாளின் திருப்பாவை ஒலித்துக் கொண்டிருப்பது அதிசயமே.

மார்கழியே ஸ்ரீவைஷ்ணவ மாசம். இது ‘மதி’ நிறைந்த நாளில் ஆரம்பிக்கிறது. அப்பேர்ப்பட்ட மார்கழியில் வைரமுத்து அவர்கள் ஆண்டாள் பற்றி கூறிய கருத்துகள் சர்ச்சையாகி, வருத்த அறிக்கைகளும், கண்டனப் போராட்டங்களும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன.

ராஜாஜி கூட ஆண்டாளைப் பற்றி கருத்துக் கூறியிருக்கிறார், அவரை எதிர்க்கவில்லையே என்ற ரீதியில் பலர் பேசுகிறார்கள். ராஜாஜி ஸ்ரீராமாயணம், ஸ்ரீமஹாபாரதம், நம்மாழ்வார் பாசுரத்தின் சாரம் (பக்தி நெறி) என்று பல முக்கியமான விஷயங்களை எழுதியிருக்கிறார். அவர் பெரியாழ்வார் பாடலின் சாயல் ஆண்டாளிடம் இருக்கிறது, பெரியாழ்வாரே ஆண்டாள் என்ற பெயரில் எழுதியிருந்தாலும் எழுதியிருக்கலாம் என்றார்.

ஆனால் வைரமுத்து? அவர் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு இஸ்லாமியக் கூட்டத்தில் ஸ்ரீராமர் பற்றிப் பேசிய இரண்டு நிமிடப் பேச்சு இந்துக்களின் ரத்தக் கொதிப்பை அதிகப்படுத்தும். “ராமர் அவதாரமா, மனிதனா? மனிதன் என்றால் எதற்குக் கோயில்? அவதாரம் என்றால் அவர் பிறக்கவே இல்லை, பிறகு எதற்குப் பிறப்பிடம் (அயோத்தியா)?” என்ற ரீதியில் பிதற்றிக்கொண்டு போகும் நாத்திகப் பேச்சு.

ஆண்டாள் ஸ்ரீராமரை ‘மனதுக்கு இனியான்’ என்கிறார். ராமர் மேல் இவ்வளவு காழ்ப்புணர்வு வைத்துக்கொண்டு ஆண்டாளைப் பற்றி இவர் உயர்த்திப் பேசினேன், அவள் என் தாய் என்று எல்லாம் பேசுவது எப்படி ‘மனதுக்கு இனிமையாக’ அமையும்?

தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கலைஞர் கண்ணனைத் திருடன் என்றார், ராமர் என்ன என்ஜினியரா என்றார். ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பு பெரியார் சிலையை நிறுவினார்கள், ஸ்ரீரங்கம் தாயார் சன்னதி வாசலில் தி.க கொடியை உயர்த்தினார்கள்… அந்தப் பள்ளியிலிருந்து வரும் இவர் ஆண்டாளைத் தெய்வமாகப் பார்க்கவே முடியாது.

பல திராவிடத் தலைவர்கள் கொச்சையாகப் பேசி, செயல்பட்டபோதும் இந்நாள் வரை கண்டனம் தெரிவித்துவிட்டு வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீவைணவர்கள், ஆண்டாள் பற்றி, அதுவும் கடைசியில் ஒரேயொரு மேற்கோள் காட்டியவுடன் பொங்கியதற்கு என்ன காரணம்?

பொதுவாகவே பெண்களிடம் நமக்கு ஒரு பரிவு உண்டு. அம்மா, அக்கா காதலி என்று சொல்லிக்கொண்டே போகலாம். தமிழக அரசியலில் உற்று நோக்கினால் எம்.ஜி.ஆர் வயதான பாட்டிகளிடம் அன்பாக போஸ் கொடுக்கும் தேர்தல் பிரச்சார படங்கள்; ‘தாயில்லாமல் நானில்லை’ போன்ற பாடல்கள் – இவையெல்லாம் பெண்களை டார்கெட் செய்பவை. பல அரசியல் தலைவர்கள் வேட்டி கிழிந்து சட்டசபையிலிருந்து வெளியே வரும்போது நமக்குச் சிரிப்புதான் வரும், ஆனால் ஜெயலலிதா சட்டசபையில் தாக்கப்பட்டபோது?

தமிழர் வீரம், ஜல்லிக் கட்டு என்றெல்லாம் பேசுபவர்கள்கூட, தங்களால் ஒருவனை வீழ்த்த முடியவில்லை என்றால் உடனே அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் வேலோ கத்தியோ இல்லை. ஜாதி, இனம் அல்லது இருக்கவே இருக்கிறார்கள் பெண்கள். இந்த வீரத்திற்குப் பெயர் கையாலாகாத்தனம்.

தமிழக அரசியலில் பல உதாரணங்கள் உண்டு. எம்.ஜி.ஆர் மலையாளி, ரஜினி ஒரு கன்னடர். ஜெயலலிதா ‘பாப்பாத்தி’, எங்கள் முன்னாடி ‘டான்ஸ்’ ஆடினாள் என்ற வசைப்பேச்சுகள் எப்படியாவது அவர்களை வீழ்த்தப் பேசிய பேச்சுக்களே.

தமிழகத்தில் நாத்திகம் என்பது ஹிந்து துவேஷம், குறிப்பாகப் பிராமணத் துவேஷம். பல ஆண்டுகளாக இந்த துவேஷத்தைப் பொறுத்துக்கொண்டவர்கள் ஆண்டாள் பற்றிய பேச்சுக்குப் பின் நிமிர்ந்து நிற்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இன்று பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதுபவர்கள் அவர்களின் கொள்ளுத்தாத்தாவின் கொள்ளுத்தாத்தா யார் என்றால் முழிப்பார்கள். ஆனால் அவர்கள் ஆண்டாள் எங்கே பிறந்தாள், ராமர் பிறந்தாரா என்று ஆராய்ச்சி செய்வது விந்தை.

ஆண்டாள் யார் என்பதை அவள் எழுதிய திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் மட்டுமே நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறது. முழுத் திருப்பாவையில் வருவதையும் பட்டியலிட்டால் ஒரு அழகிய கிராமம் நம் கண்முன்னே தெரியும். திருப்பாவையை நிறைவு செய்யும் முப்பதாம் பாடல் ‘பட்டரின் மகளான கோதை சொன்ன சங்கத் தமிழ்மாலை’ முப்பதையும் தப்பில்லாமல் சொல்பவர்கள் திருமாலின் திருவருள் பெற்று இன்புறுவர் என முடிகிறது.

சில மாதங்களுக்கு முன் கயாவிற்குச் சென்று அம்மாவிற்கு 64 பிண்டம் வைத்தபோது கண்கலங்கினேன். ஏன் வைக்கிறோம் என்று சொன்ன ஸ்ரீ உ.வே.வேளுக்குடி கிருஷ்ணன் கண்கலங்கினார். பகுத்தறிவு, நாத்திகம் பேசும் ஞாநி, ‘எதிக்ஸ்’ பற்றிப் பேசும் ஒரு விடியோவில் தன் அம்மாவைப் பற்றிக் குறிப்பிடும்போது ஒரு நிமிடம் கண்கலங்குகிறார். தாய் என்றால் அன்பு. நம் எல்லோருக்கும் பூமித்தாயாக மதிக்கும் ஆண்டாளைப் பற்றி பேசினால் கோபம் வராதா?

திருப்பாவையின் இரண்டாம் பாசுரத்தில் ஆண்டாள் “தீக்குறளை சென்றோதோம்” என்கிறாள். அதாவது பிறர்க்குத் தீமை விளைவிக்கின்ற பொய்யான சொற்களை ஒருக்காலும் சொல்ல மாட்டோம் என்கிறாள்.

வாழைப்பழத்தை விட்டுவிட்டு அதன் தோலைச் சாப்பிடுவது மாதிரி வைரமுத்து ஆண்டாளைச் சரியாக படிக்காமல் ‘தீக்குறளை சென்று ஓதியதால்’ வந்த வினை. ஆங்கிலத்தில் சொல்லுவது போல இது ஒரு ‘snowball effect’. பல காலமாகவே கோபத்தில் இருந்த சமூகம், பெற்ற தாயைப் பழித்ததால் இன்று எதிர்ப்புடன் வெளிவந்திருக்கிறது.

*****

Leave a Reply