Posted on 3 Comments

ஒன்றுபட்ட இந்தியா – லக்ஷ்மணப் பெருமாள்

“சீக்கியர்கள் தனி அரசு அமைக்க முயற்சி செய்யலாம். அவர்கள் அப்படிச் செய்வார்கள் என்றே நினைக்கிறேன். அது இந்திய ஒற்றுமைக்கு எதிராகவும், இந்தியாவின் ஒட்டுமொத்த பிளவுக்குத் தொடக்கமாகவும் இருக்கும். ஏனெனில், இந்தியத் துணைக் கண்டம், ஐரோப்பாவைப் போல வித்தியாசங்கள் பல நிறைந்த நாடு. ஒரு ஸ்காட்லாந்துக்காரர் எப்படி இத்தாலியிடமிருந்து வேறுபடுகிறாரோ, அந்தளவுக்கு ஒரு பஞ்சாபி தமிழரிடமிருந்து வேறுபடுகிறார். பல தேசங்கள் அடங்கிய ஒரு கண்டத்தை, ஒற்றைத் தேசமாக ஆக்க முடியாது.”

– ஜெனரல் சர். கிளாட் ஆச்சின் லெக், முன்னாள் இந்தியத் தலைமைத் தளபதி, 1948

பல மேற்கத்திய அறிஞர்கள், அரசியல் வல்லுநர்கள், வரலாற்றாசிரியர்கள் கூறிய கருத்துகள் இவைதான்: “அரசியல் ரீதியாக, ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பு எல்லையை வைத்துக்கொண்டு வலுக்கட்டாயமாகக் கட்டமைக்கப்பட்ட ஒரு தேசம்தான் இந்தியா. இந்தியாவின் படிப்பறிவில்லாத மக்கள், பல மொழிகள், பல சாதிய வேறுபாடுகளுடன், பல மதக்குழுக்கள் மற்றும் பல்வேறு கலாசாரப் பின்னணி கொண்ட ஒரு தேசம், ஒரே தேசமாக ஒற்றுமையுடன் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை. ஐரோப்பாவைப் போல ஒரு நாடாக இருக்க ஒரேயொரு மொழி, ஒரேயொரு மத நம்பிக்கை மிக அவசியம். இல்லையெனில் சில ஆண்டுகளில் உள்நாட்டுக் குழப்பங்கள் காரணமாக அத்தேசம் சிதையும். அதுவே இந்தியாவிலும் பத்து – பதினைந்து ஆண்டுகளில் நடக்கும்” என்று மேற்கத்தியர்கள் எழுதினர். ஆனால் இன்றுவரை இந்தியா ஒற்றைத் தேசமாக, ஒரே நாடாக இருப்பதோடு மேலும் பலம் பொருந்திய தேசமாகவும் மாறியுள்ளது.

பஞ்சாப்பும், மதராசும் (சென்னை) ஒரே அரசியலமைப்பில் பங்கு பெறுவதைக் கற்பனை செய்தும் பார்க்க முடியாது என்று 1888ல் ஸ்ட்ராச்சி எழுதியிருந்தார். ஆனால் அரசியல்ரீதியாக இந்தியா 1947ல் அமைக்கப்பட்டபோது அவர் சேரவே சேராது என்று நினைத்த பல பிராந்தியங்களும் இந்தியாவுடன் ஐக்கியமாகி இருந்தன. ஆரம்பக் காலத்தில் மத ரீதியாக பாகிஸ்தானால் பல வன்முறைகள் தூண்டப்பட்டபோதிலும், ஆண்டுகள் செல்லச் செல்ல பொருளாதார ரீதியில், கலாசார ரீதியில் மக்கள் தாங்கள் உணர்வுபூர்வமாக இந்தியர்கள் என்று பெருமிதம் அடைந்தனர். ஆங்காங்கே சில வெறுப்புப் பிரசாரங்களும், தேசப் பிரிவினைக் கோஷங்களும், ஜன நாயகத்தை எதிர்த்து கம்யுனிஸம் என்ற பெயரில் மாவோயிஸ்டுகள் உருவாக்கும் பிரச்சினைகளும் இருந்தாலும் 90%க்கும் அதிகமான இந்தியர்கள் தங்களைப் பெருமைக்குரிய இந்தியர்களாகவே கருதி வருகின்றனர்.

இந்தியன் என்ற ஒற்றுமை உணர்வு

இந்தியா அரசியல் ரீதியாக சுதந்திரம் அடைந்த பிறகு ஒரு தேசமாகக் கட்டமைக்கப்பட்டு, அதன் சட்ட திட்டங்கள் வரையறுக்கப்பட்டிருக்கலாம். அதேபோல நிலப்பரப்பை வரையறுத்த அளவில் வேண்டுமானால் இது ஒரு தேசமாக உருவானது என்பதால், பிரிவினைவாதிகள், இனவாதிகள், ‘இது ஒரு தேசமல்ல, கட்டாயப்படுத்தி இணைத்து வைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு நாடு’ என்று குறை சொல்லிக் கொண்டிருக்கலாம். ஆனால், இந்தியா சுதந்திரம் அடைவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கும் முன்பாகவே தன்னை மற்ற பகுதிகளுடன் உணர்வுரீதியாகவும், கலாசார ரீதியாகவும் பல விஷயங்களில் பிணைத்துக்கொண்டிருந்தது.


இராமாயணமும் மகாபாரதமும்

தேசத்தின் கலாசார மையமாக இராமாயணம், மகாபாரதம் ஆகிய இரு பெரும் காப்பியங்கள் விளங்கின. இந்தியா என்ற தேசமாக உருவாக்கப்படுவதற்கு முன்பாகவே இவ்விரு காவியங்களும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பரதநாட்டியம், தெருக்கூத்து, பாவைக்கூத்து எனக் கலைகளின் மூலமாகவும் இலக்கியத்தின் மூலமாகவும் மக்களை உணர்வுபூர்வமாக இணைத்திருந்தது. கம்பனைப் போலவே பல மொழிகளிலும் ராமாயணத்தைப் பல இலக்கியவாதிகள் மொழி பெயர்த்திருந்தனர். கி.பி 12ம் நூற்றாண்டிலேயே கம்பன் ராமாயணத்தை இயற்றி இருந்தார். அரசியல் ரீதியாக இந்தியத் தேசம் பிறப்பதற்கு முன்பாகவே, மக்களிடம் உள்ள உணர்வுபூர்வமான ஒற்றுமைக்குக் காரணம் இவ்விரு காப்பியங்களும். கூடவே கலாசாரப் பரிமாற்றங்களும்.


பக்தி யாத்திரை

சுதந்திரத்துக்கு முன்பாகப் பல நூற்றாண்டுகளாக காசிக்கும் பத்ரிநாத் கோயிலுக்கும் ராமேஸ்வரத்திற்கும் ஸ்ரீசைலத்திற்கும் மக்கள் பக்தி யாத்திரை மேற்கொண்டுள்ளார்கள். காசிக்கும் ராமேஸ்வரத்திற்கும் தன் வாழ்நாளில் ஒருமுறையாவது செல்வதன் வாயிலாகத் தங்கள் பாவங்களைக் கழிக்கலாம் என்ற நம்பிக்கை பல நூறாண்டுகளாக இங்கு நடைமுறையில் உள்ளது. ஆன்மீகமும் பக்தியும் தேசம் அடிமைப்படுவதற்கு முன்பே தொடர்பில் இருந்தமைக்கான சான்றுகள் ஏராளம் உண்டு. வணிக ரீதியாகப் பல நாடுகளுடன்கூட நமக்குத் தொடர்புண்டு என்று கேள்வி எழுப்பலாம். தேச ஒற்றுமைக்கு உணர்வே பிரதானம். அவ்வகையில் தேசத்தின் பெரும்பான்மை மக்கள் எப்படி இரு துருவங்களில் உள்ள கோயில்களைப் பாவங்களைப் போக்கும் இடமாகக் கண்டறிந்தார்கள் என்கிற கேள்வி மிக முக்கியமானது.

ஜனநாயக சுதந்திர இந்தியா மலர்ந்த பிறகு:


இந்தியாவின் புவி நிலப்பரப்பும் அரசியல் சட்ட வடிவமைப்பும்

ஆங்கிலேயர்கள் தேசத்தைவிட்டு வெளியேறியபோது இந்தியாவின் 565 சமஸ்தானங்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பை சர்தார் வல்லாபாய் படேல் மேற்கொண்டார். ஹைதராபாத், ஜுனாகத், காஷ்மீர், திருவாங்கூர் தவிர்த்த மற்ற சமஸ்தானங்களை மிக எளிமையாகவே ஒருங்கிணைத்தார். ஆனால் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் மற்றும் ராணுவ பலத்தைக் கொண்டு எஞ்சிய நான்கு பகுதிகளும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டன. குறிப்பாக ஹைதராபாத்தின் நிஜாம் மன்னர் தனித்த நாடாக இருப்போம் என்று ஆரம்பத்தில் சொல்லித் திரிந்தாலும் அவரையும் இறுதியில் படேல் வழிக்குக் கொண்டுவந்தார்.

இந்தியாவின் நிலப்பரப்பே இந்தியாவிலிருந்து மாநிலங்கள் பிரிந்து போவதைத் தடுக்கும் வண்ணமே பெரும்பாலும் உள்ளது. ஒருசில வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் காஷ்மீர் தவிர்த்து மற்ற எந்த நாட்டுடனும் தரை வழியில் இணையும் வாய்ப்புகள் கூட இல்லாத வகையில், இந்தியாவின் நிலப்பரப்பு ஒரு புறம் இமயமலையாலும், மற்ற மூன்று புறமும் இந்தியப் பெருங்கடலாலும் சூழப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தில் சட்டங்களை உருவாக்கியதில் அங்கங்கு சில சிக்கல்களும், அன்றைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு மதச் சட்டங்களை உருவாக்கியதில் சில விடுபடல்கள் இருந்தாலும், மாநில உரிமைகளைக் கணக்கில் கொண்டும், இந்தியா என்ற தேசம் வலிமையாக இருக்கும் வகையில் வெளியுறவு, ராணுவம், உள்நாட்டுப் பாதுகாப்பு என முக்கியத் துறைகள் மத்திய அரசின் கையிலும் இருக்கும் வகையிலும் சட்டங்கள் இயற்றப்பட்டன. மொழியின் அடிப்படையில் மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது, இது இந்தியாவிற்குத் தலைவலி என்றே கருத்துரைத்தனர். அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியபோதே மாநிலங்கள் தங்களின் ஆட்சி மொழியைத் தீர்மானிக்கும் உரிமை தரப்பட்டது. எந்தத் துறைகளெல்லாம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்குமென்றும் அவற்றில் மத்திய அரசு தலையிட இயலாது என்றும் தெளிவுறுத்தப்பட்டது.

ஆட்சி மொழியாக இந்தி மட்டுமே இருக்கும் என்று முடிவு எடுக்கப்பட்டபோது எழுந்த எதிர்ப்பை உள்வாங்கிய சாஸ்திரியின் அமைச்சரவை அந்த முடிவைக் கைவிட்டது. மேலும் இந்தி, ஆங்கிலம் இரண்டுமே அலுவல் மொழியாக இருக்கும் என்ற உறுதியையும் தந்தது. மாநிலங்கள் தங்கள் உரிமை என்று பெரிய அளவில் போராடியபோதெல்லாம் மத்திய அரசு தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் நடந்துகொள்ளாமல் வளைந்து கொடுத்தும், மாநிலங்களின் உரிமையை மதித்தும் நடந்தே வந்துள்ளது. இந்தியா ஒற்றைத் தேசமாக இருப்பதற்கு இது மிக முக்கியக் காரணம்.


இந்தியத் தேர்தல் நாள் ஒரு பண்டிகை நாள்

இந்தியா சுதந்திரமடைந்து ஏழு ஆண்டுகள் கழித்து, 1952ல் முதல் பாராளுமன்றத் தேர்தல் ஜனநாயக முறையில் நடந்தது. படிப்பறிவு குறைந்த மக்களைக் கொண்ட தேசம், பெண்ணடிமை தேசம் என்று மேற்கத்தியர்களால் வர்ணிக்கப்பட்ட தேசத்தின் முதல் தேர்தலிலேயே பெண்களும் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றிருந்தார்கள். சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் கூட 1970க்குப் பிறகே பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றார்கள். இங்கிலாந்து தன்னை மூத்த ஜனநாயக நாடாக அறிவித்துக் கொண்டாலும் அங்கும் பெண்களுக்கான வாக்குரிமை 1928ல்தான் வழங்கப்பட்டது. சுதந்திரம் வாங்கிய முதல் தேர்தலில் 46% அளவிற்கே வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆனால் இன்று, தேர்தல் ஆணையம் எடுத்து வந்த சீரிய முயற்சியாலும் வாக்காளர்களை ஒழுங்குபடுத்திய காரணத்தாலும் 75% க்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கிறார்கள். இதுவே ஜனநாயகத்தில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பதற்கான சான்று. 125 கோடி மக்கள் தொகையைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. அங்கு தேர்தல் நடத்துவதில் உள்ள நடைமுறைச் சிக்கல், பொருளாதாரச் செலவு தாண்டி அனைவருக்குமான ஜனநாயக உரிமையை வழங்கி, மக்கள் ஆதரவு பெற்ற கட்சிகள் ஆட்சி செய்யும் வழிமுறை போற்றுதலுக்குரியது. இந்தியாவில் தேர்தல் நாளை ஒரு பண்டிகையைப் போன்றதொரு கொண்டாட்ட மனநிலையுடன்தான் மக்கள் எதிர்கொள்கிறார்கள். முன்பெல்லாம் இதற்காகப் பேருந்துகள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஆட்களை ஏற்றி வரும் நிகழ்வுகளுண்டு.

கம்யுனிஸ நாடுகள் ஒருபோதும் ஜனநாயகத்திற்கு மதிப்பளித்ததில்லை. கம்யுனிஸ நாடுகளோடு இந்தியாவை ஒப்பிட்டால் ஜனநாயகத்தின் அருமை புரியும். ஜோசப் ஸ்டாலின் என்ற ரஷ்ய கம்யுனிஸ அதிபர் ஒற்றை மொழியை மட்டுமே கற்க வேண்டும் என்று காரணம் கற்பித்தார். அதுவே தேசத்தின் ஒற்றுமைக்கு வழிவகுக்கும் என்றார். அவ்வாறே ரஷ்ய மொழி கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் 90களில் சோவியத் ரஷ்யா உடைந்து சிதறியதைக் கண்டோம். சீனா பொருளாதார ரீதியில் முன்னேறிய நாடாக இருக்கக் காரணம், உலக மயமாதலை நம்மைவிட முன்பே ஏற்றுக்கொண்டது மட்டுமே! இந்தியா சோஷலிச பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடித்ததால் சீனாவைக் காட்டிலும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்திருக்கலாம். ஆனால் அரசியல் ரீதியாக இந்தியா உலகிற்கு மிக முன்னோடியான நாடு என்பதை உறுதியாகச் சொல்லலாம். கருத்துச் சுதந்திரம் உள்ள நாடு. இங்குள்ள ஊடகங்கள் அரசியல் தலைவர்களைக் கேள்வி கேட்கலாம். அனைத்துப் பிரச்சினைகளையும் ஆட்சியாளர்களையும் எதிர்த்துப் பேசலாம். இவை எதையும் கம்யுனிஸ நாடுகளில் நீங்கள் கனவில் நினைத்தாலும் பார்க்க இயலாது.


ரயில் சேவையும் இந்திய நிர்வாக அமைப்பு முறையும்

ஆங்கிலேயர் காலத்திலிருந்தே (அவர்களின் சுயநலத்திற்காக) ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பெற்று இருந்தாலும், அதன் பிறகு அமைக்கப்பட்ட பல வழித் தடங்களும் தேசிய நெடுஞ்சாலைகளும் இந்தியர்களை ஒருங்கிணைக்கின்றன. தங்கள் கல்விக்கேற்ற வேலை எந்த மாநிலத்தில் கிடைத்தாலும், அதற்குரிய தொழிற்சாலைகள் இந்தியாவில் எங்கு இருந்தாலும், தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்துள்ள இந்தக் காலக்கட்டத்தில் இத்தகைய போக்குவரத்து வசதிகளால் மக்கள் பயணிக்கும்போதும் சரி, வேற்று மாநிலத்தில் பணியாற்றினாலும் சரி, தாங்கள் மிகப் பாதுகாப்பாக வாழ்வதாகவே உணர்கிறார்கள். வெளிநாட்டில் பணி புரிபவர்கள் எத்தனை வசதியோடு இருந்தாலும் பாதுகாப்பான உணர்வு அவர்களுக்குக் கிடைப்பதில்லை என்கிற உண்மை புரிந்தால் இந்தியாவில் எந்த நிலப்பகுதியில் பணி புரிந்தாலும் இந்தியனாக இந்திய பூமியில் இருப்பதால் பாதுகாப்புணர்வு இயல்பாகவே கிடைத்து விடுகிறது.

மேலும் மத்திய அரசின் பணிகளில் குறிப்பாக இந்திய ஆட்சிப் பணிகளான ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் மற்றும் இதர மத்திய அரசுப் பணிகளில் தேர்வுகள் மூலம் வேலை கிடைக்கப்பெறுபவர்கள், பல மாநிலங்களுக்கும் செல்ல வேண்டி இருக்கிறது. மேலும் இந்திய ஆட்சிப் பணியில் இருப்பவர்கள் எங்கு வேலை பார்த்தாலும் மாவட்ட மக்களுக்கான நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வதில், மாநில நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்வதில், இது எனது நாடு, எனது பணி என்ற உணர்வுடன் நடப்பதுவே அடிப்படையான விஷயமாகிறது. சாமானிய மக்களும் அவர்களைத் தனது நாட்டின் அதிகாரியாகவே பார்க்கிறார்கள். இவையெல்லாம் நம்மையறியாமலேயே இந்தியர்களாக நம்மை நாம் அறியும் எளிய தருணங்கள்.

உலக மயமாதலுக்குப் பின் பல்வேறு மாநிலத்தவர்களும் பெரும் நகரங்களில் தொழில் நிமித்தமாகத் தங்கி விடுவதைக் காண்கிறோம். இன்று பலரும் தொழில் நிமித்தமாகப் பல மாநிலங்களுக்குக் குடிபெயர்வது இயல்பாக உள்ளது. பல மொழிகள் பேசுபவர்கள் வாழும் இடமாக நகரங்கள் மாறுவதால் இயல்பிலேயே இந்தியர்களாகக் கலக்கிறோம்.

தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் ஏற்படுத்திய இந்திய ஒற்றுமை

சுதந்திரம் அடைந்த பிறகு தமிழ்நாட்டை முதல் 17 ஆண்டுகளுக்கு தேசியக் கட்சிகளே ஆட்சி செய்து வந்தன. 1967ல் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் விளைவாக திமுக ஆட்சியைப் பிடித்தது. முதல் மாநிலக் கட்சியாக ஆட்சியைப் பிடித்த திமுக தனது கொள்கையாக ‘அடைந்தால் திராவிட நாடு… அடையாவிட்டால் சுடுகாடு’ என்ற கொள்கை முழக்கத்தை முன்வைத்தது. திராவிட இனவாதிகள் என்ற முழக்கத்தை முன்வைத்தாலும் தேசிய நீரோடையில் கலந்த பிறகு அக்கொள்கையிலிருந்து மெல்ல வெளிவந்தது. அதன் பின்னர் பல மாநிலங்களிலும் காங்கிரசிற்கு எதிராக மாநிலக் கட்சிகள் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தன. அப்போதும் பல அறிஞர்கள் மாநிலக் கட்சிகள் வளர்வது இந்திய தேச ஒற்றுமையைப் பிரிக்க வழிவகுக்கும் என்றே கருத்துரைத்தார்கள். மாநில நலன் என்ற பெயரில், மொழியின் அடிப்படையிலான அரசியல், இனவாத அரசியல் முன்னெடுப்புகள், மாநிலங்களுக்கிடையேயான நீர்ப் பிரச்சினைகள் போன்றவற்றைக் காரணங்களாக முன்வைத்தார்கள்.

சில மாநிலக் கட்சிகள் மொழியின் பெயரில், மாநிலத்தின் பெயரில், இன அடிப்படையில் கட்சிகளை உருவாக்கின. மேலும் மாநில உரிமைகள் பறிபோகின்றன என்ற முழக்கங்களை முன்வைத்து மக்களிடம் செல்வாக்குப் பெற்று வந்தாலும், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு இந்திய தேச ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடவில்லை. இன்னமும் சொல்லப் போனால், மாநிலக் கட்சிகள் தேசியக் கட்சிகளான பாஜகவுடனும் காங்கிரசுடனும் கூட்டணி அமைத்துத் தேர்தலில் போட்டியிட்டார்கள். ஆட்சியிலும் பங்கேற்றார்கள். தேச ஒற்றுமையை வலுப்படுத்தியதில் மாநில ஆட்சியாளர்களுக்கும் மத்திய ஆட்சியாளர்களுக்கும் உள்ள பொறுப்பையுணர்ந்தே இரு தரப்பிலும் செயல்பட்டு வந்துள்ளார்கள்.


இந்திய ஒற்றுமைக்கு ஊறு விளைவிப்பவர்கள்

1. காஷ்மீர், நாகலாந்து, பஞ்சாப் போன்ற மாநிலங்களில்தான் அதிக அளவிற்கான தேசப் பிரிவினைவாதங்கள் முன்வைக்கப்பட்டன. பஞ்சாப்பில் தற்போது ஒப்பீட்டளவில் இல்லையென்றாலும் மற்ற இரு மாநிலங்களிலும் பிரிவினைவாதங்கள் இன்றும் முன்வைக்கப்படுகின்றன. பிரிவினையாளர்கள் மத அடிப்படையிலும், பிராந்தியத்தை முன்வைத்தும் தங்களை இந்தியாவிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்கின்றனர். அங்குள்ள மக்களிடம் இந்தியா இந்து தேசம் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி ஒற்றுமையைக் குலைக்க முயல்கிறார்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

2. மாவோயிஸ்டுகள்: கம்யுனிஸம் என்ற பெயரில் ஜனநாயக அமைப்பே விரோதமானது என்று நம்பும் இவர்கள் சத்தீஸ்கர், ஆந்திரா, மேற்கு வங்காளம், பீகார் போன்ற மாநிலங்களில் வன்முறையில் ஈடுபடுவதும், இளைஞர்களை, குறிப்பாக வேலை வாய்ப்பில்லாத இளைஞர்களைப் பயன்படுத்திக்கொண்டு, ‘புரட்சி’ என்ற பெயரில் ஒற்றுமையைக் குலைக்க முற்படுகிறார்கள். இவர்கள் எல்லைப் பகுதிகளிலும் மலைவாழ் பகுதிகளிலும் எவ்வளவோ முயன்றும் மக்களைத் தேர்தல் அரசியலில் இருந்து பிரிக்க இயலாமல் தவிக்கிறார்கள். பலமுறை அரசு அலுவலகங்கள் மீது குண்டு வீசுவதும், ஓட்டு போடுபவர்களின் முகத்தில் கரியைப் பூசுவது போன்ற பல காரியங்களில் ஈடுபட்டும் வருகின்றனர். ஆனால், மாநில மற்றும் மத்திய அரசின் ராணுவ நடவடிக்கைகளால் இவர்களால் வெற்றிபெற இயலவில்லை. கடுமையாக ஒடுக்கப்பட்டுள்ளார்கள்.

3. அந்நிய தேசக் கைக்கூலிகள், இந்தியா ஏழைகளுக்கு எதிரான நாடு என்ற பிம்பத்தைக் கட்டமைப்பதும், வெளி நாட்டு நிதி பெற்று இந்தியாவின் வளர்ச்சித் திட்டங்களை NGO என்ற பெயரில் (சில NGOக்கள் மட்டுமே) சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற வகையில் பிராந்திய மக்களின் மனதில் விஷத்தைப் பரப்பும் செயல்களைப் பரப்பி இந்திய அரசு உங்களுக்கெதிரானது என்ற எண்ணத்தை விதைக்கிறார்கள்.

4. மொழி அடிப்படைவாதிகள், இன அடிப்படைவாதிகள், மத அடிப்படைவாதிகள் சிலரின் செயல்களும், பேச்சுகளும் இந்திய ஒற்றுமையைக் குலைக்க முடியாதெனினும் ஒரு வகையில் அது தேச அமைதிக்குப் பங்கம் விளைவிக்கின்றன.

5. மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்சினை அமைதியைக் கெடுக்கிறது. அரசியல் கட்சிகள் தாங்கள் ஆட்சிப் பொறுப்பிற்கு வர வேண்டும் என்பதற்காக பிராந்திய மக்களின் உணர்வுகளைத் தூண்டிப் பிரச்சினையைப் பெரிதாக்குகிறார்கள். தேர்தல் அற்ற நேரங்களில், மழைக் காலங்களில் இது பெரும் பிரச்சினையாக இல்லாவிட்டாலும் தேர்தல் நெருங்கும் வேளைகளில் இதனால் ஏற்படும் பிரச்சினைகள் தேசத்திற்கு நல்லதல்ல. நதிகளை தேசிய அளவில் இணைக்க தற்போதைய பாஜக அரசு 6,00,000 கோடியை ஒதுக்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது. நீர்ப்பிரச்சினை சொந்த மாவட்டத்திலேயே உண்டு என்றாலும் ஒரே ஆட்சியாளர் என்பதால் கட்டுக்குள் வைக்க இயலும். ஆனால் மாநிலங்களுக்கிடையே என்பது குறிப்பாக மொழி வாரி மாநிலங்களில் உள்ள அரசியல் கட்சிகள் இதை மொழிப் பிரச்சினையாகவும் திரிப்பது, தங்கள் சொந்த நலனுக்கே என்றாலும், தேச ஒற்றுமைக்கு அது பங்கம் விளைவிக்கும். தேசிய நதிகளை இணைத்துவிட்டு, முற்றிலுமாக இவை தேர்தல் ஆணையம் போலத் தனி அமைப்பாகச் செயல்பட வேண்டும். அப்போதுதான் சுய அரசியல் லாபங்களுக்காகக் கட்சிகள் அரசியல் செய்யாமல் இருக்கும் சூழல் உருவாகும். அப்படி நடக்குமானால், அண்டை மாநிலங்கள் தங்களுக்குள் இருக்கும் வெறுப்பைக் கைவிடும்.

தனித்தமிழ் தேசக் கோஷங்கள்

மாநில உரிமைகள் பற்றிப் பேசுவதற்கும், தனி நாடு என்று பேசுவதற்கும் பெரும் வித்தியாசமுள்ளது. மாநில உரிமைகள் பற்றி அரசியலமைப்புச் சட்டம் மிகத் தெளிவாகவே வரையறுத்துள்ளது. மாநிலத்தில் எந்த வளர்ச்சித் திட்டத்தையும் மத்திய அரசு தானாகக் கொண்டு வரமுடியாது என்பதில் ஆரம்பித்து, ஆட்சி மொழி, உள்ளாட்சி நிர்வாகம், மாநில நிர்வாகம், சுகாதாரம், விவசாயம் என அரசியலமைப்புச் சட்டத்தில் கூறிய அனைத்தும் மாநில உரிமைகள் பற்றியே பேசுகின்றன. அதை மீறி சில விஷயங்கள் எமெர்ஜென்சி காலக்கட்டத்தில், உதாரணமாக கல்வியில் மத்திய அரசிற்கும் பங்குண்டு என்று எடுத்துச் செல்லப்பட்டதுண்டு. மற்ற எந்தக் காலக்கட்டத்திலும் பெரும்பான்மை மாநிலங்களின் ஒப்புதலோடும் மாநிலக் கட்சிகள் பலவற்றின் ஒப்புதலோடும்தான் மத்திய மாநில அரசின் அதிகாரப் பகிர்வுகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

ஏற்கெனவே கூறியது போல திராவிட நாடு என்ற கோரிக்கையை முன்வைத்து அரசியலை ஆரம்பித்தாலும் தேசியத்தோடு இணைந்த கட்சிகள் திராவிடக் கட்சிகள். ஆகையால் தனித்தமிழ்தேசம் என்ற பிரசாரத்தை முன்னிறுத்தி வெற்றி பெற்றால்கூட, ஆட்சியில் பொறுப்பேற்ற பிறகு இந்தியத் தேசியத்துடன் கலந்து விடுவார்கள். அதற்கு சிறந்த உதாரணம் திமுக. இந்திய தேசியத்தை வலுப்படுத்தும் பல சட்டங்களை உருவாக்க இதே கட்சிகள் ஆதரவு தெரிவித்தே வந்துள்ளன. இன்று சில அரசியல் கட்சிகளும், சில இயக்கங்களும் தனித்தமிழ்த் தேசம் என்ற பரப்புரையுடன் அடிப்படைவாதம் பேசுகின்றன. யார் தமிழர் என்று வரையறுப்பதில் ஆரம்பித்து தமிழர்கள் முற்றிலுமாக வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள் என்ற கோஷத்தின் வாயிலாக அரசியலை முன்வைப்பவர்கள் இவர்கள். நதிநீர்ப் பங்கீட்டில் தமிழகத்திற்கு உரிய நீதி சில நேரங்களில் கிடைத்துள்ளது. சில நேரங்களில் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால் தமிழகத்தின் பிரச்சனைகளை முன்வைத்து அரசியல் செய்யாமல் மத்திய அரசை மாற்றான் தாய் என்ற கோணத்தில் வைத்து எத்தனை பிரசாரத்தை முன்வைத்த போதும் இவர்களது பிரசாரம் எடுபடவில்லை என்பதைத் தேர்தல் முடிவுகள் உறுதி செய்துள்ளன.

சில விஷயங்களின் அடிப்படையைப் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவேளை தனித்தமிழ் தேசப் பிரிவினையாளர்கள் இந்திய அரசை எதிர்த்தால் என்ன நடக்கக் கூடும்? உள்நாட்டுக் கலவரங்களை ஏற்படுத்தி அதன் வாயிலாக தனித்தமிழ் தேசத்தைக் கட்டமைப்பது இயலாத காரியம். மத்திய அரசை எதிர்த்துப் போராட்டங்கள் நடத்துவதைத் தவறு என்று எவரும் சொல்ல மாட்டார்கள். முன்னேறிய மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்பது வேறு. அதற்காக தனித்தமிழ் தேசம் என்ற கோரிக்கையை முன்வைப்பதால் தமிழகம் எதையும் சாதிக்க இயலாது. மாறாகப் பேரழிவையே சந்திக்க வேண்டிவரும். உலக நாடுகளின் உள்நாட்டுக் கலவரங்களில் நேரடியாகப் பங்கேற்க எந்த அந்நிய நாட்டாலும் இயலாது. ஆயுதங்கள் கொடுத்து உதவலாம், பணம் கொடுத்து உதவலாம். ஆனால் நேரடியாக உதவிக்கு வர இயலாது.

இந்திய அரசிடம் வலிமையான ராணுவம் உள்ளது. கப்பல்படை உள்ளது. விமானப்படை உள்ளது. வெளியுறவுக் கொள்கையை மற்ற நாடுகளுடன் தீர்மானிக்கும் இடத்தில் உள்ளது. அவ்வளவு ஏன், விளையாட்டில் கூட எந்த மாநிலமும் தன் மாநிலத்தை முன்னிறுத்த இயலாத வகையிலான சில முக்கியமான வலிமையான முடிவை எடுக்கும் விஷயங்கள் மத்திய அரசிடம் உள்ளன. வலுவான பொருளாதார வலிமை உள்ளது. அண்டை மாநிலங்கள் எவையும் தனித்தமிழ் தேசம் போல எந்தத் தேசப்பிரிவினை கோஷத்தையும் முன்வைக்கவில்லை. அதிலும் மத்திய அரசு பாரபட்சம் செய்கிற விஷயங்களில் உள்ள நியாயத்தை அண்டை மாநிலங்களையும் புரிந்துகொள்ள வைத்து, மாநில உரிமைகளைப் பெறுவதற்கான அரசியலை முன்னெடுக்காமல், அண்டை மாநிலங்களிடம் நல்லுறவைப் பேணாமல் பிரச்சினைகளைப் பெரிதாக்கிவிட்டு, தனித்தமிழ் தேசக் குரல் எழுப்புபவர்களுக்கு அவர்களிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காது. ஆகையால் எவருடைய ஆதரவும் தமிழகத்திற்கு இல்லை என்கிற உண்மையை உணர வேண்டும். இந்த யதார்த்தத்தைப் புரியாமல் வாள் சுற்றுவதால் எந்தப் பலனும் இல்லை. இன்று நேரடி அரசியலில் இருக்கும் கட்சிகள் கூட நாளை வெற்றி பெற்றால் மத்திய அரசுடன் திராவிடக் கட்சிகளைப் போல இணக்கப்போக்கையே கடைப்பிடித்தே ஆகவேண்டும் என்பதே யதார்த்தம்.

மேற்கூறிய கற்பனைக்கு அவசியமே இல்லை. ஏனெனில், பெரும்பாலான தமிழர்கள் தங்களைத் தமிழர்களாகவும், இந்தியர்களாகவும், கேரளத்தினர் தங்களை மலையாளிகளாகவும் இந்தியர்களாகவும், பஞ்சாபியினர் பஞ்சாபிக்காரர்களாகவும் இந்தியர்களாகவும், குஜராத்திகள் இந்தியர்களாகவும் குஜராத்திகளாகவும், இந்தி பேசும் மாநிலத்தினர் இந்திக்காரர்களாகவும், இந்தியர்களாகவும்தான் உணர்கிறார்கள். அந்த வகையில் இந்தியா பன்மைத்தன்மையை பல நூறாண்டுகளுக்கு மேலாகவே தன்னுடைய ஆன்மாவில் உள்வாங்கி இருப்பதால், இன்றும் ஒற்றைத் தேசமாக இருக்கிறது, நாளையும் தொடரும்.

******

3 thoughts on “ஒன்றுபட்ட இந்தியா – லக்ஷ்மணப் பெருமாள்

  1. This comment has been removed by the author.

  2. நீங்கள் சொன்ன காசி ராமேஸ்வரப் புனிபுயாத்திரை, இந்திய மொழிகளில்லுள்ள இலக்கண அமைப்பு பல்வேறு ஒற்றுமைகள் இருப்பதை பார்க்கலாம். குழந்தைகளுக்கு கூறும் கதைகளில் உள்ள ஒற்றுமை. ஹிந்துஸ்தானி, கர்நாடக சங்கீதத்தில் இருக்கும் ஒற்றுமை. இரண்டுமே சங்கீத ரத்னாகரத்தை அடியோற்றியது. சங்கீத ரத்னாகரம் பழந்தமிழிசை மரபை அடியோற்றியது. பழமொழிகளை ஆராய்ந்தால் அவற்றிலும் ஒற்றுமையை உணரலாம். நாட்டார் மரபிலும் ஒற்றுமையை பார்க்கலாம் இந்தியா முழுவதிலும் நாட்டார் மரபுகள் பேரிலக்கியத்தை பரப்ப உபயோகப்படுத்தப்பட்டது. புறநானூற்றில் அகநானூற்றில் இராமன் வருகிறார். சிலப்பதிகாரத்தில் கோவலன் புகாரை விட்டு நீங்கியது இராமன் அயோத்தியாவை விட்டு நீங்கியது போல என்கிறார் இளங்கோ. இந்தியாவின் கோவில்களில் இருக்கும் ஒற்றுமை.அவற்றின் கட்டுமான முறையில்யுள்ள ஒற்றுமை, சில்பசாஸ்த்திரத்தில் இருக்கும் ஒற்றுமை. முகலாய படையெடுப்பினால் பல வடக்கத்திய கோவில்கள் அழிந்து விட்டது இருந்தாலும் எஞ்சிய வற்றில் ஒற்றுமையை பார்க்கலாம். சைவம் காஷ்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரை எங்கும் இருந்தது. வைணவம் ஆசாம் குஜராத் தமிழ்நாடு என்று எல்லா இடத்திலும் இருந்தது. சாக்தமும் அதைப்போல ஆசாமில் காம்கியா கோவில் காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, கல்கத்தாககாளீ, கேரளத்தில் பல கோவில்கள், கர்நாடகத்தில் பிரத்ய்ங்கரா இவை அனைத்தும் எளிய உதாரணம். சூரிய வழிபாடும் இந்தியா முழுவதுமாக இருந்தது காஷ்மீரத்தில் மார்த்தாண்ட சூரிய கோவில் கோனார்க் கோவில் இது போல இந்தியா நாற்திசையிலும் இருந்தது பிறகு படையெடுப்பினால் அவை அழிந்தது. இந்திய பஞ்சாங்கத்தில் உள்ள ஒற்றுமை. இந்திய lunar calendar solar calendar உள்ள ஒற்றுமை. இந்தியப் பண்டிகைகளில் உள்ள ஒற்றுமை. இந்தியாவின் ஒற்றுமை இன்னும் கணக்கிலடங்காதவை. அதில் ஏதோ அடியேனுக்கு தெரிந்ததவை பதிவிட்டேன்.

  3. எல்லோரும் இந்தியனாக நினைத்தால் ஏன் கர்நாடகாவில் தமிழர்களை அடித்து துரத்திவிட்டனர்?

Leave a Reply