Posted on Leave a comment

புராண இதிகாசங்களில் பெண் ஹீரோக்கள் – சுமதி ஸ்ரீதர்

நம்மில் பலருக்குக் குழந்தைப் பருவத்தில் இரவு உறங்கப் போகும் முன் அம்மா சொன்ன குட்டிக் கதைகள் இன்றும் ஞாபகம் இருக்கும். நகர்ப்புறத்தில் வளர்ந்த பலருக்குப் பெரும்பாலும் இந்தக் கதைகள் ஐரோப்பாவில் இருந்து இறக்குமதியான தேவதைக் கதைகள் (fairy tales) என்னும் வகைக் கதைகளாகவே இருந்திருக்கும். Cindrella, Rapunzel, Snow White, Rose Red போன்ற கதைகள் இந்த வகையைச் சார்ந்தவையே.

Medieval period எனச் சொல்லப்படும் இடைக்காலத்தைச் சார்ந்த இந்தக் கதைகளின் கரு பெரும்பாலும் ஒன்றுதான். ஒரு இளவரசியை, ஒரு அரக்கனிடம் இருந்தோ, ஒரு கொடிய மிருகத்திடம் இருந்தோ அல்லது ஒரு கொடுமைக்காரச் சிற்றன்னையின் கொடிய பிடியில் இருந்தோ ஓர் அழகான அரசகுமாரன் வந்து காப்பாற்றுவான். பொதுவாக இந்தக் கதைகளில் வரும் இளம் பெண்கள் அபலைகளாக, சுயமாகச் சிந்திக்க இயலாதவர்களாக, என்று ஒரு இளவரசன் வந்து தம்மைக் காப்பாற்றுவான் என்று ஏங்கிக் கொண்டிருக்கும் வலிமையற்ற பெண்களாகவே சித்தரிக்கப்படுகிறார்கள்.

ஆனால், ஆச்சரியம் என்னவென்றால் ஆணாதிக்கச் சமுதாயமாகக் கருதப்படும் இந்தியச் சமூகத்தில், இந்த வகைக் கதைகள் (இராமாயணக் கதையைத் தவிர்த்து) நம் புராண இதிகாசங்களில் அதிகம் சொல்லப்படவில்லை என்பதே.

மாறாக, நம் புராண இதிகாசங்களில், பெண்கள், தங்கள் அன்புடையவர்களை, தங்கள் கணவன்மார்களையோ அல்லது காதலர்களையோ பல இக்கட்டான சூழ்நிலைகளிலிருந்து காப்பாற்றிய கதைகள்தான் அதிகம். இன்னும் சொல்லப் போனால் பெண்கள் தங்களவரை மரணத்தின் வாயிலிருந்து மீட்ட கதைகள் ஏராளம்.

ஜோசப் காம்பெல் என்ற ஒரு அமெரிக்க புராணக் கதை ஆய்வாளர் இருந்தார். அவர் பல கிரேக்கக் கதைகளை, காவியங்களை ஆய்வு செய்து ‘ஹீரோ’ என்பவனுக்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கினார். அந்தக் கட்டமைப்பை ஒரு ஹீரோவுக்கான இலக்கணம் என்று சொல்லலாம். ஹீரோ என்பவன் ஒரு மிகச் சாதாரண மனிதனாக இருந்து ஒரு அசாதாரண மனிதனாக உருமாறுகிறான். சாதாரணத்திலிருந்து அசாதாரணத்தை நோக்கி அவன் மேற்கொள்ளும் பயணத்தை காம்பெல் ‘A hero’s journey’ என்று குறிப்பிடுகிறார்.

கதையின் நாயகன் தான் மேற்கொள்ளும் பயணத்தில் பல இடையூறுகள் மற்றும் மைல்களைக் கடக்கிறான். இந்தப் பயணத்தில் அவனுக்கு ஏற்படும் கூட்டு அனுபவங்கள் அவனை மற்றொரு உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்கின்றன. அவன் ஆளுமையில் ஒரு மாற்றத்தை (transformation) ஏற்படுத்துகிறது. பல சிக்கல்கள் நிறைந்த தன் பயணத்தின் முடிவில் அவன் தன் இலக்கைச் சென்றடைகிறான். பிறகு தன் தேடலை முடித்துக்கொண்டு கடைசியில் அவன் தன் இருப்பிடத்திற்கே திரும்புகிறான்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த ஹீரோக்கள் தனக்கு மிகவும் பிரியமான ஆளையோ அல்லது பொருளையோ தேடிச் செல்லும் பாதையில் பல இன்னல்களைச் சந்திக்கின்றனர். ஆனால் துணிவுடன் அவற்றைச் சந்தித்து, எடுத்துக்கொண்ட சவாலை வென்று, தமது பயணத்தை பூர்த்தி செய்கின்றனர்.

இந்தக் கட்டமைப்பின் ஆதாரத்தின் மேல், காம்பெல், இலியட், ஒடிசி போன்ற கிரேக்க காவியங்களில் தோன்றும் ஆண் கதாபாத்திரங்களை வைத்து ‘Hero Myth’ என்னும் ஒரு கோட்பாட்டை எழுப்பினார். அந்தக் காலத்துத் திரைப்படங்களான வேதாள உலகம், பால நாகம்மா ஆகியவற்றின் கதாநாயகர்கள் காம்பெல்லின் கோட்பாட்டின்படி ஹீரோக்கள் ஆவார்கள். பல எம்ஜிஆர் படங்களும் இந்த வகையைச் சார்ந்தவையே.

ஆனால், இந்தியக் கதைகளை ஆராய்ந்த காம்பெல், நம் புராண இதிகாசங்களில் ஹீரோ என்றொரு கருத்துப் படிவம் இல்லை என்றே சொன்னார். நம்முடைய இராமரும் கிருஷ்ணரும் பிறவியிலேயே அசாதாரணமான சக்தி கொண்டவர்கள். அவதாரங்கள். இந்திரனும் பிற தேவர்களும் கூட அப்படித்தான். இவர்களை கதையின் நாயகர்களாகக் கொள்ளலாம், ஹீரோக்களாக அல்ல.

இதை வைத்துப் பார்த்தால், காம்பெலின் Hero with a thousand faces புத்தகத்தில் கௌதம புத்தர் மட்டுமே இடம் பெற்றுள்ளார் என்ற விஷயம் ஆச்சரியமாகப் படவில்லை.

கௌதம புத்தர் ஒரு சாதாரண மனிதனாகப் பிறந்து, ஒரு அசாதாரண நிலையை அடைந்து, பின் தான் கண்டுபிடித்ததை மக்களுடன் பகிர்ந்து கொள்ள மறுபடி ஒரு சாதாரண நிலைக்கே திரும்பினார் எனக் காம்பெல் கூறுகிறார்.

புத்தரின் கதையில் ஹீரோயிசத்தைத் தேடிய காம்பெல் ஏனோ நம் கதைகளில் பெண் ஹீரோக்களைத் தேடவில்லை. தேடியிருந்தால் நிறையவே கிடைத்திருப்பார்கள்.

நம் இராமாயணக் காவியத்தை எடுத்துக்கொண்டால், கைகேயி ஒரு மறக்க முடியாத கதாபாத்திரம். இராமாயணக் கதையைக் கேட்ட நாம் அனைவரும் அவளை ஒரு கொடுமைக்கார அம்மாவாகவே கற்பனை செய்திருக்கிறோம். நம்மில் கதை கேட்ட பலருக்குத் தெரியாது அவள் ஒரு சிறந்த தேரோட்டி என்று.

தசரதர் ஒருமுறை போருக்குச் செல்லும்போது கைகேயி அவருக்குத் தேரோட்டிச் சென்றாள். போரில் தசரதர் அடிபட்டு விழுந்தபோது, அவரது தேரை லாகவமாக ஒரு பாதுகாப்பான இடத்திற்கு ஓட்டிச் சென்று அவரைக் காப்பாற்றினாள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், தசரதர் தன் பெயருக்கேற்பத் தேரை ‘தச’ அல்லது பத்து திசைகளிலும் செலுத்தக்கூடிய வல்லுநர். அப்பேர்ப்பட்ட தசரதரே கைகேயியின் தேரோட்டும் திறமையின் மேல் நம்பிக்கை வைத்துத் தனது உயிரை அவள் கையில் ஒப்படைத்தார் என்றால், அது சாதாரண விஷயமில்லை. தன் உயிரைக் காப்பாற்றியதற்கு நன்றிக் கடனாகவே தசரதர் கைகேயிக்கு மூன்று வரங்கள் அளித்தார். அந்த மூன்று வரங்கள்தான் இராமாயணக் கதைக்கான விதைகள் என்பது எல்லோரும் அறிந்ததே.

நம்முடைய இன்னொரு மாபெரும் காவியமான மகாபாரதத்தில், பெண் ஹீரோக்களின் கதைகள் மண்டிக் கிடக்கின்றன.

உலூபி என்றொரு நாக கன்னிகை இருந்தாள். அர்ஜுனனை ஒருதலையாகக் காதலித்தவள். அர்ஜூனனுக்கும், அவனது இன்னொரு மனைவி சித்திராங்கதைக்கும் பிறந்த பப்ருவாகனனை அன்போடு வளர்த்தவள்.

ஒருமுறை அர்ஜுனன் தனது மகன் பப்ருவாகனனிடம் போர் புரிய நேரிட்டது. அந்தப் போரில் பப்ருவாகனன் அர்ஜுனனைக் கொன்றான். அப்போது உலூபி, நாகர்களிடம் இருக்கும் மிருதசஞ்சீவனி என்னும் உயிர் மீட்கக்கூடிய மணியைக் கொண்டு அர்ஜுனனின் மார்பில் வைத்து அவனை உயிர் மீட்டாள்.

இந்தக் கதை இன்னொரு விதமாகவும் சொல்லப்படுகிறது. அர்ஜுனன், பிதாமகர் பீஷ்மரைக் கொன்றதற்காக அவரின் சகோதரர்களான வசுக்கள் அர்ஜுனனை சபித்துவிடுகிறார்கள். இதை அறிந்த உலூபி வசுக்களின் சாபத்திலிருந்து அர்ஜுனனைக் காப்பாற்ற வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் அவன் சொந்த மகனான பப்ருவாகனனைக் கொண்டு அர்ஜுனனைக் கொல்லச் செய்ததாகச் சொல்கிறது. அதாவது, உலூபிதான் இந்தப் போர் நாடகத்தின் சூத்திரதாரி என்கிறது இந்தக் கதை.

இதே மகாபாரதத்தில், இந்திரனின் துணைவி ஷசி பற்றிய ஒரு கதையும் உண்டு. ஷசி, இந்திரனின் துணைவி மட்டும் அல்ல, அவனை இயக்கும் சக்தியும் கூட. ஒருமுறை இந்திரன், விருத்திரன் என்னும் பிராமணனைக் கொன்றதற்காக மிகவும் வெட்கப்பட்டு, பிற தேவர்களின் வசைச் சொற்களுக்குப் பயந்து தன்னுடைய இருப்பிடமான அமராவதியில் இருந்து மிகுந்த தொலைவில் ஒரு குளத்தில் இருக்கும் தாமரையின் தண்டில் போய் ஒளிந்துகொண்டான். தேவர்கள், தங்கள் தலைவனைத் தேடித்தேடித் தோற்றனர். அவன் இருக்கும் இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் வேறு வழி இன்றி நஹுஷன் எனும் மானுடனைத் தங்கள் தலைவராக நியமித்தனர்.

சிறிது காலம் நல்லாட்சி புரிந்த நஹுஷனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாகத் தலைக்கனம் ஏறியது. தேவலோகத்து வாசிகளை, தேவர்களை, முனிவர்களை, வாட்ட ஆரம்பித்தான். பின்பு இந்திரனின் துணைவி ஷசியையும் தனக்குத் துணைவியாக ஆகும்படி வற்புறுத்த ஆரம்பித்தான். ஆனால் இந்திராணியோ இதற்கு உடன்படவில்லை. அவள் எப்படியாவது இந்திரனைத் தேடிக் கண்டுபிடிக்க விரும்பினாள். தன் இஷ்ட தேவதையின் உதவியைக் கொண்டு காடு, மலை கடல் கடந்து இந்திரனை ஒருவாறு கண்டுபிடித்தாள். அங்கு சென்று அவனை சந்தித்து, அவனுக்கு தைரியம் கொடுத்து அவனை மீட்டெடுத்தாள். மீண்டும் அவன் இந்திர பதவி பெற உதவினாள். இவ்வாறு ஷசி தன் கணவனை மட்டும் திரும்பப் பெறவில்லை, தேவர்களுக்கு அவர்களது தலைவனையும் திரும்பப் பெற்றுக் கொடுத்தாள்.

ஷசியை போன்றே மகாபாரதத்தில் இன்னொரு பெண் ஹீரோ தமயந்தி. கலியின் சாபத்துக்கு ஆளான நளன் தன் மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து சில காலம் அஞ்ஞாதவாசம் இருக்க நேரிட்டது. அவன் அஞ்ஞாதவாசக்காலம் முடியும் தருணம் நெருங்குகையில் நளன் எங்கு ஒளிந்திருக்கிறான் என்று தேட விரும்பினாள் தமயந்தி. அவனைக் கண்டுபிடிக்க ஒரு திட்டம் போட்டாள். தன் கணவனுக்கு மட்டுமே பதில் தெரிந்த விடுகதையைச் சொல்லித் தன் தூதனை ஒவ்வொரு ராஜ்ஜியமாக அனுப்பி வைத்தாள். இப்படி நளனைக் வலைவீசித் தேடும்போது அவன் ரிதுபர்ணன் என்னும் ராஜாவின் சபையில் பாஹுகன் என்ற பெயரில் உருவம் மாறி ஒளிந்திருப்பதைத் தெரிந்து கொண்டாள். ரிதுபர்ணனின் சபையில் அவள் தன் தூதனை விட்டுத் தனக்கு இரண்டாவது மணம் நடக்க இருப்பதாக ஒரு பொய்யைச் சொல்லச் சொன்னாள். இதை நிஜம் என நம்பிய நளன் இரவோடு இரவாக தமயந்தியின் தந்தையின் வீட்டுக்கு விரைந்தான். அப்பொழுதே அவனுடைய அஞ்ஞாதவாசம் முடிய, நளன் தன் மனைவி குழந்தைகளுடன் ஒன்று சேர்ந்தான்.

இப்படிப்பட்டப் பெண் வீராங்கனைகளைப் பற்றிப் பேசும்போது சாவித்திரியின் கதையை நினைவுகூராமல் இருக்க முடியாது. சாவித்திரி, தன் கணவன் சத்யவானின் உயிரைக் காப்பாற்ற யமதர்மராஜனுடனேயே சொற்போர் புரிந்த வீராங்கனை. சத்யவானின் உயிரை இழுத்துக் கொண்டு போன காலனை நெடுந்தூரம் பின்தொடர்ந்து, அவனைத் தன் நண்பனாக்கிக் கொண்டு, சாதுரியமாகப் பேசி, அவனிடமிருந்து தன் கணவனின் உயிரை திரும்பப் பெற்றாள்.

சாவித்திரியின் கதை ஆச்சரியப்படும் வகையில் மிக அழகாக காம்பெல்லின் Hero Myth கோட்பாட்டுக்குள் பொருந்துகிறது. சாவித்திரி மிக எளிமையாகத் தன் மணவாழ்க்கையைத் தொடங்கி, தன் கணவனின் மரணத்திற்குப் பிறகு அவன் உயிருக்கான போராட்டத்தில் ஒரு உயர்ந்த பரிணாமம் தொட்டு, அவனை உயிரோடு மீட்ட பிறகு மீண்டும் அவள் கணவனுக்குப் பின் உறுதுணையாக நிற்கும் ஒரு சாதாரண பெண்ணின் வாழ்க்கைக்கே திரும்புகிறாள்.

சாவித்திரியைப் பற்றி பேசும்போது, நம்ம ஊர் பத்தினி தெய்வமான கண்ணகியை மறந்துவிட முடியுமா? பாவம் கண்ணகி, சாவித்திரியைப் போல அவளால் தன் கணவனின் உயிரைக் காப்பாற்றி இவ்வுலகில் அவனோடு இணைய முடியவில்லை.

ஆனால் அவளால் கோவலனின் மேல் விழுந்த வீண் பழியைத் துடைத்தெறிய முடிந்தது. மானத்தை உயிருக்கு மேலாகக் கருதிய தமிழ்ச் சமூகத்தின் வீரத் தமிழ்மகளல்லவா அவள். கோவலனின் மானத்தைஅவள் காப்பாற்றியதே அவனை உயிருடன் திரும்பப் பெற்றுவிட்டதாக ஆகிறது. நீதி கேட்டு அரசவையில் அவள் எழுப்பிய குரல் அன்று பாண்டிய நாட்டையே வேரோடு உலுக்கியது மட்டுமல்லாமல் இன்றுவரை நம் சமூகத்தின் கூட்டு நினைவில் (collective consciousness) ரீங்காரித்துக்கொண்டே இருக்கிறது.

சாவித்திரியைப் போலவே கண்ணகியும் ஒரு சராசரிப் பெண்ணாக வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி, சந்தர்ப்பவசத்தால் தன் கணவனின் மேல் விழுந்த வீண் பழியைத் துடைக்க வேறொரு உயர் நிலைக்கு எழுந்து, அவள் வேண்டியதை அடைந்து, பின் தன் கணவனுடன் மேலுலகத்தில் ஒன்று சேர்கிறாள்.

நம் இதிகாசங்களும் காவியங்களும் மட்டும் அல்ல, நம்முடைய புராணங்களும் இப்படியான மகளிரைப் பற்றிப் பேசுகின்றன.

பாகவதப் புராணத்தில் சொல்லப்பட்டிருக்கும் கண்ணனின் மனைவி சத்தியபாமாவின் கதை கைகேயி – தசரதனின் கதையை நினைவுபடுத்துகிறது. சத்தியபாமா சத்ரஜித் என்னும் யாதவகுலச் சிற்றரசனின் மகள். அவள் பூமாதேவியின் அவதாரமாகவும் கருதப்படுகிறாள். சத்தியபாமா சிறு வயதிலேயே வீரவிளையாட்டிலும், போர்க்கலையிலும் தேர்ச்சி பெற்றவள்.

கிருஷ்ணனின் நரகாசுர சம்ஹாரத்தின்போது அவருக்கு இணையாகப் போர் புரிந்தாள் என்று பாகவதம் சொல்கிறது. யுத்தத்தின் போது, நரகாசுரனின் அஸ்திரம் ஒன்று கிருஷ்ணனைப் பதம் பார்த்துவிட, அதைக் கண்டு கொதித்தெழுந்த சத்தியபாமா நரகாசுரன்மேல் அம்பு மழை பொழியலானாள். மயங்கி விழுந்த கிருஷ்ணன் அதற்குள் விழித்துக்கொள்ள, சத்தியபாமாவின் உதவியுடன் மறுபடி வில் ஏந்திப் போர் புரிந்து நரகாசுரனைக் கொன்றார்.

ஒரு பக்கம் சத்தியபாமா தன் கணவனுக்கு இணையாகப் போர் புரிந்து ஒரு கொடிய அரக்கனைக் கொல்ல உதவினாளென்றால், காமதேவனுக்குப் போர்க்கலையைக் கற்றுக் கொடுத்ததே அவன் மனைவி ரதிதான்.

ஸ்கந்த புராணத்தில் காமதேவன் – இரதிதேவியின் கதை கூறப்படுகிறது. அரக்கர்களை அழிக்க தேவர்களுக்கு சிவனின் குமரன் தேவைப்படுகிறான். குமாரசம்பவம் நேர்வதற்கு, சிவனும் உமையும் ஒன்று சேர வேண்டும். அதற்காக காமதேவன் சிவனின் தவத்தைக் கலைக்க முற்படுகிறான். ஆனால் சிவனோ தன் தவத்தைக் கலைத்தற்காகக் கோபம் கொண்டு காமனை எரித்து விடுகிறார். கணவனை இழந்த ரதி உமையின் உதவியை நாடி தன் கணவனை மறுபடி உயிர்பித்தெழுப்ப முயல்கிறாள். உமையின் சிபாரிசால் சிவன் காமனுக்கு உயிர்ப் பிச்சை அருளுகிறார். காமன் தன் காதலி ரதியின் கண்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய அரூபனாக (உருவமற்ற வடிவத்தில்) உயிர்த்தெழுகிறான்.

ரதி தன் காதலனை மீட்டெடுத்து எப்படி அவனுடன் மறுபடி இணைந்தாள் என்ற கதை பாகவதப் புராணத்தில் வேறுவிதமாகச் சொல்லப்படுகிறது. காமதஹனத்திற்குப் பின், ரதி காமதேவனைத் திரும்பப் பெற கடும் தவம் மேற்கொள்கிறாள். உமையிடம் காமனுக்காகக் கோரிக்கை வைக்கிறாள். அவள் கோரிக்கையை ஏற்ற உமை, காமன் தனது அடுத்த பிறவியில் கிருஷ்ணனின் மகன் பிரத்யும்னனாகப் பிறப்பான் என்றும், ரதி மாயாவதியாக மறு பிறவி எடுத்துத் தன் கணவனுக்காக, சம்பாரன் என்னும் அரக்கன் வீட்டில் காத்திருக்க வேண்டுமென்றும் சொல்கிறாள். இதற்கு உடன்பட்டு ரதியும் மாயாவதியாக உருவமெடுத்து சம்பாரன் வீட்டுச் சமையல்காரியாகிறாள்.

அங்கு, சிறு குழந்தையாக வந்து சேரும் பிரத்யும்னனை, ரதி வளர்த்து ஆளாக்கி, அவனுக்கு மந்திரக்கலை மற்றும் போர்க்கலையைப் பயிற்றுவித்து சம்பாரனை சம்ஹாரம் செய்ய உதவுகிறாள். பின் பிரத்யும்னனுக்கு அவனது முன்கதையை நினைவூட்டி, அவன் காமதேவனின் மறுபிறப்பெனப் புரியவைத்து, அவனுடன் மீண்டும் இணைகிறாள். ரதி தனது கணவனுக்கு மனைவியாக மட்டும் இல்லாமல், அவனுக்கு ஒரு தாயாகவும், ஆசானாகவும் உருவெடுக்கும் இந்தக் கதை ஒரு பெண்ணைச் சித்தரித்த விதத்தில் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

இந்த கதைகளைப் படிக்கும்போதோ, கேட்கும்போதோ கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், பெரும்பாலும் இப்பெண்கள், ஆண்களைப்போல் அல்லாது, கத்தியையும், வாளையும் ஏந்தாமல், தங்களது மனோ பலத்தையும், கூர்மையான அறிவாற்றலையும் மற்றும் தங்கள் சொல்வன்மையையும் (power of persuasion) மட்டுமே ஆயுதங்களாக ஏந்தி, களத்தில் குதித்திருக்கிறார்கள்.

இன்னொரு விஷயம் என்னவென்றால் பொதுவாக புராணக் கதைகளில் வரும் பெண்களைக் கற்புக்கரசிகளாக மட்டுமே சித்தரிப்பது வழக்கம். ஒரு பெண்ணின் கற்பில்தான் அவளை உடையவனது நன்மை அடங்கியுள்ளதாகவும், அவளது கற்புதான் அவனுடைய கவசம் என்றும் அச்சமூகம் நம்பியதாகத் தெரிகிறது.

ஆனால், இந்தக் கதைகளில் வரும் பெண்களை, வெறும் கற்புக்கரசிகளாக மட்டுமே சித்தரிப்பது, தன் கணவன்மார்களுக்கு அவர்கள் காட்டிய பாலியல் விசுவாசத்தை மட்டுமே வைத்து இப்பெண்களை எடை போடுவது, இவர்களை ஒரு மிகக் குறுகிய கண்ணோட்டத்தில் பார்ப்பதாகும்.

பெண்ணினம் என்பது மிகவும் வலிமையான ஒரு சக்தி. அது உக்ரமானதும் கூட. அதனால்தான் நம் உக்கிர தேவதைகளில் மாரியம்மன், சூலி, நீலி பத்திரகாளி போன்ற பெண் தேவதைகள் அதிகமாக இருக்கின்றனர். தனக்குப் பிரியமான ஒன்றைக் காப்பாற்ற விண்ணையும் மண்ணையும் நகர்த்தப் கூடியவர்கள் பெண்கள். தங்களின் அன்புக்குப் பாத்திரமானவர்களுக்காக, தங்கள் உயிரைக்கூட பணயம் வைக்கக்கூடியவர்கள். அப்படிப்பட்ட பெண்கள் தேவை எழுந்தால் எத்தனை தூரம் வேண்டுமானாலும் தாண்டக்கூடியவர்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

காம்பெல்லின் ஹீரோவுக்கான தேடலில், இந்தியக் கதைகளில், அவருக்கு ஆண் ஹீரோக்கள் சிக்காமல் இருந்திருக்கலாம், ஆனால், ஏழு மலை தாண்டி, ஏழுகடல் தாண்டிச் சென்று, தனக்கான சவாலில் வென்று, ஒரு மிகப்பெரிய பரிணாம வளர்ச்சியை அடைந்த பெண் வீராங்கனைகள் நிச்சயம் கிடைத்திருப்பார்கள், அவர் மட்டும் தேடியிருந்தால்.

******

Leave a Reply