Posted on Leave a comment

மத்திய பட்ஜெட் 2018 | ஜெயராமன் ரகுநாதன்


“இந்தியா ஒரு விவசாய நாடு!”

ஃபிப்ரவரி ஒன்றாம் தேதி காலை எல்லோரும் டிவியின் முன் ஆவலோடு காத்திருக்க, அருண் ஜெய்ட்லியின் வார்த்தைகள் காதில் விழுந்தன..

இந்த வருட பட்ஜெட்டின் சார்பு நிலை அப்போதே ஓரளவுக்குப் பிடிபட்டுவிட்டது. விவசாயிகளும் கிராமப்புறப் பொருளாதாரமும் முன்னணியில் நிற்கப்போவதைக் கட்டியம் கூறிய வார்த்தைகள்.

பட்ஜெட்டுக்கு முன்னர் அளித்த ஒரு பேட்டியில் நமது பிரதமர், “இலவசங்களை சாதாரண இந்தியன் எதிர்பார்க்கவில்லை. அவன் எதிர்பார்ப்பது நேர்மையும் தகுதிக்கேற்ற சலுகைகளும்தான்” என்று ஆணித்தரமாகச் சொல்லியிருந்தார்.

மீடியாக்களிலும் அலுவலக காரிடார்களிலும் மிக அதிகமாகப் பேசப்பட்ட ஜனவரி மாதம் இது. அப்படிப் பேசின விஷயம், இந்த வருட பட்ஜெட் எப்படி அமையும் என்பதுதான். ஜிஎஸ்டி வரி விதிப்புக்குப்பிறகு வரும் முதல் பட்ஜெட். மேலும் இந்த பாஜக அரசின் கடைசி பட்ஜெட். இந்த இரண்டு விஷயங்களும் பலரை ஆவலுடன் எதிர்பார்க்க வைத்தன.

நிச்சயம் நடுத்தர வர்க்கத்துக்கு அதிகம் நன்மைகள் வரும் என்றும் கார்ப்பரேட்டுகளுக்கு வரிக் குறைப்பு இருக்கும் எனவும் வெளி நாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கும் வண்ணம் நிறைய சமாச்சாரங்கள் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்ட பட்ஜெட்.

விவசாயிகளின் நலன், சுகாதாரம், ஊட்டச்சத்து, பெண் முன்னேற்றம், கல்வி, கட்டுமானம், மலிவு வீட்டு வசதி போன்ற விஷயங்கள் இந்த பட்ஜெட்டில் முன்னிலை பெறப்போவதை உணர முடிந்தது.

மோதி அரசு பதவியேற்ற சமயத்தில் நாட்டின் பொருளாதாரம் ஒரு வெடிக்கக் காத்திருக்கும் வெடிகுண்டாக இருந்தது. ஏராளமான ஊழல்கள், பொருளாதார விரயம், குழப்பமான இறக்குமதிக் கொள்கை ஆகியவை நம் பொருளாதாரத்தின் வேரையே அசைத்திருந்தன. 2011–13 வரையிலான காலகட்டத்தில் பொருளாதார வளர்ச்சி நிலை குலைந்திருந்தது. விலைவாசி ஏற்றம் ஆண்டொன்றுக்கு கிட்டத்தட்ட 9.8% வரை உயர்ந்திருந்தது. பட்ஜெட்டில் விழுந்த துண்டு 5.1% அளவில் அதிகரித்து இருக்க, ஏற்றுமதியைவிட இறக்குமதி அதிகமாகி இந்தப் பற்றாக்குறை இன்னும் உயர்ந்தது.

மோதி அரசு பதவியேற்ற முதல் இரண்டு ஆண்டுகளில் பொருளாதார வீழ்ச்சியைச் சரி செய்து சமன்படுத்துவதே முக்கியமாகிப் போனது. பட்ஜெட் பற்றாக்குறையைக் கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுக்கப்பட்டு இன்று அந்தப் பற்றாக்குறை 3.5% ஆகக் குறைந்துள்ளது. வெளிநாட்டு வர்த்தகப் பற்றாக்குறை கூடப் பாதிக்குப் பாதியாகக் குறைந்து இப்போதைய நிலைமையில் நல்ல முன்னேற்றத்துடன் இருந்து வருகிறது. கறுப்புப் பணப்புழக்கத்தால் ஏகத்துக்கும் உயர்ந்திருந்த தங்கம் மற்றும் ரியல் எஸ்டேட்டின் விலையேற்றம் தடுத்து நிறுத்தப்பட்டாலும் அரசு கொண்டு வந்த ரூ 1,000 மற்றும் ரூ 500 பண மதிப்புத் தடை சில மாதங்களுக்கு நாட்டைக் கொந்தளிப்பில் தள்ளியதை மறுக்க முடியாது. அறுவை சிகிச்சையானதால் அவசியத்தேவை என்றாலும் வலியை மறைக்க முடியவில்லை. கூடவே நாடு தழுவிய ஜிஎஸ்டியும் கொண்டு வரப்பட்டதால் கொந்தளிப்பு இன்னும் அடங்காமல் இருந்தாலும் ஒட்டுமொத்தப் பொருளாதாரம் ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டதை யாரும் மறுக்க முடியாது. ஆக, கடந்த வருடங்களில் மோதி அரசின் பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட நிலைமைகள் சற்றே அசாதாரணமானவை என்பது கண்கூடு.

இந்த வகையில் 2018க்கான பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டபோது சில விவாதங்கள் எழுந்தன.

தேர்தல் வருவதால்தான் மோதி அரசாங்கம் இந்த வருட பட்ஜெட்டில் பம்மியிருக்கிறார்கள் என்று மோதி எதிர்ப்பாளர்கள் சொல்கிறார்கள்.

முந்தைய அரசாங்கங்கள் போலன்றித் தேர்தலை மனதில் கொள்ளாமல் உண்மையான நலத்திட்டங்கள் நிறைந்த வளர்ச்சிக்கான பட்ஜெட் இது என்பது நடு நிலையாளர்களின் குரல்.

மிக அதிகமான வரி வருவாய் (18.7% அதிகரிப்பு)

முதலீட்டைத் திரும்பப்பெறும் முயற்சியில் வந்து சேர்ந்த அபரிமிதமான தொகை (ரூ 1 லட்சம் கோடி) இருந்தபோதிலும், ஜிஎஸ்டியில் எதிர்பார்த்ததற்கும் குறைவான வருவாயே வந்ததாலும் அரசுக்கு வந்து சேரவேண்டிய டிவிடெண்ட் வருவாய்க் குறைவாலும் அருண் ஜெய்ட்லி பட்ஜெட் பற்றாக்குறையை விட்டுத்தான் பிடிக்க முயன்றிருக்கிறார். போன பட்ஜெட்டில் இந்தப் பற்றாக்குறை 3.2% என்று திட்டமிடப்பட்டாலும் அதை 3.5% க்கு அனுமதித்து அடுத்த வருடத்திய பற்றாக்குறையை 3.3%ஆக நிறுவி இருக்கிறார். கூடவே பல சரி செய்யும் நடவடிக்கைகளையும் அறிவித்திருக்கிறார்.

இந்த பட்ஜெட் நிச்சயம் இந்தியக் கிராமப்புறச் சர்புடையதுதான் என்பதில் சந்தேகமில்லை. முக்கியமாக விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை, ஆன செலவைப்போல ஒன்றரை மடங்காவது இருக்கும் என்பதில் தொடங்கி அருண் ஜெய்ட்லி அறிவித்த பலப்பல திட்டங்கள் கிராமம் மற்றும் வளர்ச்சி சார்ந்ததாகவே இருக்கின்றன. அதனாலேயே இது தேர்தலைக்கொண்டு போடப்பட்ட பட்ஜெட் என்கிறது ஒரு வாதம்.

அதே சமயம் பல நல்ல முயற்சிகளும் எடுக்கப்பட்டிருப்பதை மறுக்கவும் முடியாது.

விவசாயம், சுகாதாரம், கல்வி, வேலை வாய்ப்பு என்னும் நான்கு தூண்களில் இந்த பட்ஜெட் இருப்பதாக பல விற்பன்னர்கள் கருத்துக் கூறியிருக்கிறார்கள். கூடவே மத்தியத்தர சிறு குறு தொழில் வளர்ச்சியும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.

விவசாயிகளுக்கு அடக்க விலைக்கு மேல் அம்பது சதவீதம் குறைந்த பட்ச விலை நிர்ணயம் அவர்களின் லாபத்துக்கு மிக முக்கியத் தேவையாகும். நாடு முழுவதும் கிட்டத்தட்ட 22,000 சந்தைகளில் இந்தக் குறைந்த அளவு விலை கிடைக்க ஏற்பாடும் செய்யப்போவதாக அறிவித்திருப்பது நன்மையே.

திட்டமிடப்பட்ட நேரத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பிரதமரின் கிராமப்புறs சாலை அமைப்புத் திட்டம் முடிவடைந்துவிட்டது. ஐந்து கோடி குடும்பங்களுக்கு இலவச கேஸ் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இது இன்னும் மூன்று கோடி குடும்பங்களுக்கு வழங்கவும் ஏற்பாடுகள் நடக்கவிருக்கின்றன. கிராமப்புற நகர்ப்புற ஏழைகளுக்கான மலிவு விலை வீடுகள் வழங்கும் திட்டம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 3 கோடி வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பத்து கோடி ஏழைக் குடும்பங்களை உள்ளடக்கிய காப்பீட்டுத் திட்டம் உலகத்திலேயே மிகப்பிரம்மாண்டமான திட்டம் என்று வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

ஒன்றரை லட்சம் உடல்நலப் பரிசோதனை மையங்கள் அமைத்து பரிசோதனை செய்தல் மற்றும் மருந்து வழங்குதல், குறு தொழில்களுக்கு உத்திரவாதத்துடன் இன்னும் மூன்று லட்சம் கோடி கடனுதவி (ஏற்கெனவே ரூ 4 லட்சம் கடனுதவி வழங்கப்படுகிறது), மத்தியத்தரத் தொழில்களுக்கு வரி குறைப்பு என்று பல வளர்ச்சித்திட்டங்களையும் இந்த பட்ஜெட் உள்ளடக்கியிருக்கிறது.

“ஓட்டுப்போட்டு ஜெயிக்க வைத்த மத்தியத்தரத்துக்கு ஒன்றுமே இல்லை!” என்னும் குரல் ஒலிப்பதைக் கேட்க முடிந்தது.

அறுபது வயதுக்கு மேற்பட்ட சீனியர்களுக்கு வரிச்சலுகை, மாதச்சம்பளம் பெறுபவர்களுக்கு ரூ 40,000 standard deduction போன்ற சலுகைகள் மத்தியத்தர வர்க்கத்துக்கு உதவும் அம்சங்கள். சீனியர் சிட்டிசென்களுக்கு அவர்களது முதலீட்டிலிருந்து வரும் வட்டிக்கான வரி விலக்கு ரூ 10,000த்திலிருந்து ரூ 50,000மாக உயர்த்தப்பட்டிருப்பது, பணவீக்கம் மற்றும் குறைந்து வரும் டெபாசிட் வட்டி ஆகியவற்றிலிருந்து பெரிய விடுதலை. ஆனாலும் சம்பள வரி விலக்கை ரூ 3 லட்சத்திற்கு உயர்த்துவார் என்னும் எதிர்பார்ப்பு பலரிடம் இருந்ததையும், அது இல்லாமல் போனதால் ஏமாற்றமும் கோபமும் உண்டானதையும் கவனிக்க முடிகிறது.

ஆனால் கடந்த நான்கு வருடங்களில் பார்த்தால் மத்தியத்தர வர்க்கத்துக்காக இந்த அரசு கொண்டு வந்த சலுகைகள் முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு செய்ததற்கு எவ்விதத்திலும் குறைந்தது அல்ல என்பதை உணரலாம்.

அதேபோல கம்பெனிகளுக்கான வரிவிதிப்பு சராசரியாக 25% அளவில் குறைக்கப்படும் என்னும் எதிர்பார்ப்பும் இருந்தது. அதுவும் நடக்கவில்லை. ஐரோப்பாவில் கம்பெனிகளின் சராசரி வரி விகிதம் 20% தான். சமீபத்தில் அமெரிக்காவும் கார்ப்பரேட் வரியை 21% ஆகக்குறைத்துவிட்டது. இந்த நிலையில் நாமும் அதைக் குறைத்திருந்தால்தான் அந்நிய முதலீடுகள் நமக்கு வரக்கூடிய வாய்ப்புக்கள் பெருகும் என்னும் வாதம் எழுகிறது.

அதேபோல இதுநாள் வரை முழுவிலக்குப் பெற்றிருந்த நீண்ட கால மூலதன ஆதாயம் (Long Term Capital gain) இந்த முறை 10% வரி விதிக்குள்ளாகியிருக்கிறது. இது பங்குச்சந்தையில் மிகப்பெரும் எதிர்ப்பைக் கண்டிருக்கிறது. இது நிச்சயம் மறு பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்னும் கோரிக்கை பரவலாக எழுந்திருக்கிறது. Indexing எனப்படும் சமன்பாட்டையாவது செய்ய அனுமதிக்கப்படவேண்டும் என்பது உரக்கக் கேட்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் பங்குச்சந்தை இரண்டு மடங்கு உயர்ந்திருக்கிறது. மற்ற எந்தச் சொத்தை விற்றாலும் பெறப்படும் நீண்ட கால லாபத்துக்கான வரி கட்டியாக வேண்டும். பங்குகளுக்கு மட்டும் வரி இல்லாமல் இருந்தது. 2004ல் இந்த விலக்கு வந்தபோது பங்குச் சந்தை 6,500 – 7,000 புள்ளிகளாக இருந்தது. அது இப்போது 35,000 வரை உயர்ந்துவிட்டிருக்கிறது. இதன் மூலம் கோடிக்கணக்கில் லாபம் ஈட்டியவர்கள் வரி கட்டவில்லை. போன நிதி ஆண்டில் மட்டுமே வரி இல்லாமல் பங்குகளில் ஈட்டப்பட்ட லாபம் 3.7 லட்சம் கோடியாகும். எனவே இந்த வரி விதிப்பு நியாயமானதுதான் என்பது அரசின் வாதம்.

மேலே சொன்னமாதிரி கடந்த நான்கு ஆண்டுகளில் சீர் திருத்தப்பட்டதால் நம் பொருளாதாரம் தன் வேர்களை உறுதியாக்கிக்கொண்டு இன்று உலகத்திலேயே மிக வேகமாக முன்னேறும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்று என்பதை உறுதி செய்துள்ளது. நிச்சயம் அடுத்த சில ஆண்டுகளுக்குப் பொருளாதார வளர்ச்சி 8%க்குக் குறைய வாய்ப்பே இல்லை என்பது புலப்படுகிறது.

ஊசலாடிக்கொண்டிருந்த பட்ஜெட் பற்றாக்குறை ஒரு வழியாக 3,5%க்குக் கொண்டு வரப்பட்டு, அடுத்த வருடத்தில் 3.3%ஆகக் குறைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

வரிகள் விஷயத்தில் நிதி அமைச்சர் சொன்னாற்போல வரி வட்டத்துக்குள் வருபவர் எண்ணிக்கை கணிசமாகக் கூடியிருக்கின்றது. தாமாகவே பதிவு செய்யும் வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை ஜிஎஸ்டியினால் உயர்ந்திருக்கின்றது. ஜிஎஸ்டி வந்துவிட்டதால் மறைமுக வரிகள் பற்றி இந்த பட்ஜெட் அதிகம் பேசவில்லையென்றாலும் இறக்குமதி வரி உயர்த்தப்பட்டு மொபைல் ஃபோன், அழகு சாதனப்பொருட்கள், கார், டெலிவிஷன் ஆகியவை விலையேற்றம் கண்டிருக்கின்றன. ஒரு வகையில் இது ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு ஊக்கம் கொடுப்பதாகும்.

பொது நலத்தையும் வளர்ச்சியையும் குறிக்கோளாகக்கொண்ட இந்த பட்ஜெட்டைக் குறை கூற அதிகம் காரணங்கள் அதிகமில்லைதான் என்றாலும் சில நெருக்கடியான கேள்விகள் ஒலிக்காமலில்லை.

அறிவிக்கப்பட்ட சில திட்டங்களுக்கான நிதி பற்றித்தான் சந்தேகங்கள் எழுகின்றன. பல நல்ல திட்டங்களுக்கான நிதியைப் பெற அமைச்சர் பட்ஜெட்டுக்கு வெளியிலிருந்து (Extra budgetary resources) பெற விழைந்திருக்கிறார். அந்த அளவு நிதி திரட்டப்படவில்லை என்றால் திட்டங்கள் அறிவிப்பிலேயெ நின்று போகக்கூடிய அபாயம் உண்டு. உதாரணமாக குறைந்த அளவு விலை நிர்ணயம் (Minimum Support Price – MSP) ஒண்ணரை மடங்கு என்று சொல்லிவிட்டு உணவுக்கான மானியம் ரூ 29,041 கோடிதான் என்றும்  இந்த MSP எந்த நிலையிலும் குறையாமல் பார்த்துக்கொள்ள, சரியாக முறைமைப்படுத்தும் கடமையை நிதி ஆயோக்கிடம் விட்டிருக்கிறார், அவர்கள் அதைச்செய்ய முடியாமல் போனால், இந்த நலத்திட்டமே உடைந்து போய்விடக்கூடும். அதே போல கிராமப்புறச் சந்தைகள் ஏற்படுத்துதல் விவசாயிகளுக்குப் பெரும் நன்மை பயக்கும் எனபதில் சந்தேகம் இல்லை. ஆனால் அதற்கான நிதி ஒதுக்கீடு வெறும் ரூ 2,000 கோடிதான் என்பதுதான் சிக்கல்.

மிகப்பெரும் கிராமப்புறத் திட்டங்களுக்கான நிதித்தேவை கிட்டத்தட்ட ரூ 14.34 லட்சம் கோடி. அதில் 80%க்கு மேலாக அருண் ஜெய்ட்லி எதிர்பார்ப்பது பட்ஜெட்டுக்கு வெளியிலிருந்து என்னும் போது நமக்கு வேர்த்து விடுகிறது.

பத்து கோடி குடும்பங்களுக்கு தலா ரூ 5 லட்சம் மதிப்பில் காப்பீட்டுத்திட்டம், தனியார் காப்பீட்டு கம்பெனிகளால்தான் செயல்படுத்தப்பட வேண்டும் என்பதும் கொஞ்சம் சந்தேகத்துக்கு இடமளிக்கும் அம்சம்தான். இது எப்படி நிர்வகிக்கப்படும் என்பது பெரிய கேள்வி.

கட்டுமானத் திட்டங்களில் நிச்சயம் உறுதித் தன்மை இருப்பதைப் பார்க்க முடிகிறது. ரூ 5.97லட்சம் கோடிக்கான ஒதுக்கீட்டில் முக்கால்வாசித் திட்டங்களை பொதுத்துறை நிறுவனங்கள் ஏற்றுக்கொண்டுவிட்டிருப்பது ஆறுதல்.

குமாரமங்கலம் பிர்லா, என்.சந்திரசேகரன் (TCS), தீபக் பாரிக், உதய் கோடக், சந்தா கோச்சர் போன்ற தொழிலதிபர்கள் இந்த பட்ஜெட்டை சிலாகித்திருக்கிறார்கள். முக்கியமாக, கிராமப்புற, கல்வி, சுகாதார முனைப்புக்கொண்ட அம்சங்கள் இந்தியாவின் எதிர்காலப் பொருளாதாரத்துக்கு நல்ல மேடை அமைக்கும் என்பது இவர்களின் கணிப்பு. கட்சி சார்பில்லாத இந்த விற்பன்னர்களின் கருத்து நிச்சயம் நம்பகத்தன்மை வாய்ந்ததுதான்.

கழுகுப் பார்வையில் பார்த்தோமானால் இந்த பட்ஜெட்டின் நோக்கம் அதன் வீச்சு, நீண்ட காலப் பார்வை ஆகியவற்றில் குறை சொல்ல ஏதுமில்லை. வளர்ச்சியைவிட தேர்தலைக்கொண்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் என்னும் குற்றச்சாட்டில் பெரிய அளவில் உண்மை இல்லை. இன்னும் சொல்லப்போனால் தனி மனிதருக்கான வரிவிலக்கு கூட்டப்படாதது, இந்த அரசு தேர்தலை மட்டுமே மையமாக வைத்து இந்த அறிக்கையைச் சமர்ப்பிக்கவில்லை என்பதை உறுதிபடுத்துகிறது. ஒருவேளை தேர்தலை மையாக வைத்து சிறிய சாய்வு இருக்குமானால் கூட அதைப் புரிந்துகொள்ள முடியும். அந்த சாய்வு கூடப் பொருளாதாரத்தின் அடிப்படையை எந்தவிதத்திலும் சிதைப்பதாக இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கவலை தரும் அம்சம் நிதிப்பற்றாக்குறையும் அதனால் பாதிக்கப்படப்போகும் நல்ல திட்டங்களும்தான். கூடவே ஜிஎஸ்டி வருவாயும் பரந்துபட்டிருக்கும் வரி வருவாயும் எதிர்ப்பார்த்த அளவுக்கு வருமானால் எதிர்கால பட்ஜெட்டுகள் இந்த பட்ஜெட்டின் அஸ்திவாரத்தைக் கட்டிக்காத்து நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமாக்கிவிட முடியும்.

அது நடக்கும் என்று நம்புவோம்.

Leave a Reply