ஓம் எனும் ஓசையின் தோற்றம்: ஓர் ஆய்வு | மூலம்: கொய்ன்ராட் எல்ஸ்ட், தமிழில்: ஜடாயு


கொய்ன்ராட் எல்ஸ்ட் (Koenraad Elst) பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த சிறந்த வரலாற்றாசிரியர், இந்தியவியலாளர். கடந்த ஐம்பதாண்டுகளாக இந்தியாவுடன் ஆழ்ந்த பிணைப்புக் கொண்டு ஆய்வுகளைச் செய்து வருபவர். வேதப் பண்பாடு, பௌத்தம், அயோத்தி ராமஜன்ம பூமி, இந்துத்துவ இயக்கங்கள் ஆகியவை குறித்து காத்திரமான நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். இது அவர் 2013ல் எழுதிய கட்டுரை.


புனிதமான ஓசையாகிய ‘ஓம்’ என்பதைக் குறித்த இந்த ஆய்வு இந்துக்களில் பலருக்கு அதிர்ச்சிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. ஏன்? வேதங்களைத் தொகுத்தவராக அறியப்படும் வியாசர் இந்த ஓசையையே தேர்ந்தெடுத்து ரிக்வேதத்தின் முதற்சொல்லாக அமைத்தார். (“ஓம் அக்னிமீளே புரோஹிதம்…”) அதன் எழுத்து வடிவமான ॐ என்ற சின்னமே இன்று பரவலாக இந்துமதத்தின் அடையாளமாக அறியப்படுகிறது. எனவே, அதன் தோற்றத்தைப் பற்றிய ஒரு விவாதம் என்பது பலவிதங்களிலும் முக்கியமானதாகிறது.

“இந்து ஆன்மீகம் அறியல்பூர்வமானது” என்று சுவாமி விவேகானந்தர் கூறினார். அதனை அடியொற்றி, அறிவியலைப் போலவே அதுவும் படிப்படியாக வளர்ச்சியடைந்துள்ளது என்பதே நான் கூறவருவது. ஆதியில், இயற்கைக்கு அதீதமான ஒரு இருப்பால் ஆன்மீக சத்தியம் முழுதாக வெளிப்படுத்தப்படவில்லை. முதலில் எளிமையான ஆனால் ஆழமான அறிதல்கள் கண்டடையப்பட்டன. பின்பு அவை தொடர்ந்து சீராக மேம்படுத்தப்பட்டன.

மறுபிறவி

உதாரணமாக, மறுபிறவியையும் கர்மவினையையும் குறித்த கருத்துக்கள் தொடக்கத்திலிருந்தே வரவில்லை. ரிக்வேதத்தில் இந்த விஷயங்கள் குறித்து எதுவும் இல்லை. சாந்தோக்ய உபநிஷதம் இந்தப் புதிய கருத்தை அறிமுகப்படுத்துவதாக வெளிப்படையாகக் கூறுகிறது. கவனியுங்கள்: அதிகம் பழிக்கு ஆளாகியுள்ள ‘மேற்கத்திய இந்தியவியல் (Indology) ஆய்வாளர்கள்’ இதைக் கண்டுபிடிக்கவில்லை. இந்துமதத்தின் புனிதநூலே இதைத் தெளிவாக சொல்லியிருக்கிறது.

ஆனால், இதன் பொருள் மறுபிறவி பற்றிய நம்பிக்கையே வேதகாலத்தில் இல்லை என்பதல்ல. அப்போது புழக்கத்திலிருந்த பல்வேறு இந்தோ ஆரிய மொழிவழக்குகளில் (தற்போதைய வடஇந்திய மொழிகளின் மூலங்களில் இவற்றின் தாக்கம் உண்டு) மையமான ஒன்றே வேதமொழியான சம்ஸ்கிருதம். அப்போது புழக்கத்திலிருந்த பல்வேறு சமய மரபுகளில் (இவை பிற்கால நூல்களான புராணங்களில் குறிக்கப்படுகின்றன) மையமான ஒன்றே வேதமரபு. அதைப் போலவே, மரணத்துக்குப்பின் என்ன நேர்கிறது என்பதைக் குறித்தும் பல்வேறுவிதமான நம்பிக்கைகள் புழக்கத்திலிருந்தன. பண்டைய கிரேக்க, ரோமானிய கலாசாரங்களிலும் கூட, மறுபிறவியில் நம்பிக்கை, மரணத்திற்குப் பிந்தைய வாழ்வில் நம்பிக்கை, மரணத்தோடு எல்லாமே முடிந்து விடுகிறது அப்பால் ஒன்றுமில்லை என்ற நம்பிக்கை என்ற பலவித நம்பிக்கைகளும் இதே போன்று ஒரே காலகட்டத்தில் அருகருகே புழக்கத்திலிருந்தன என்பதை இதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

ஆனால், மறுபிறவி பற்றிய நம்பிக்கை ரிக்வேதத்தில் திட்டவட்டமாகக் குறிப்பிடப்படவில்லை என்பதும் உண்மை. மாறாக, மனித ஜீவன்கள் ஆகாச மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதிக்குச் சென்றுவிடுவதாகவே மரணச் சடங்குகள் குறித்த ரிக்வேதப் பாடல்கள் கூறுகின்றன. பல இந்துக்கள் இதை மறுத்து ரிக்வேதத்தில் மறுபிறவி குறித்துப் பேசும் பாடல்கள் உண்டு என்று எனக்கு மின்னஞ்சல்கள் அனுப்பியுள்ளனர். அதே ரிக்வேதப் பாடல்களுக்கு வேறுவிதமான அர்த்தங்கள் உண்டு, அவை மரணத்திற்குப் பிந்தைய புதிய உடலைப் பற்றிப் பேசவில்லை, நோயில் வீழ்ந்து மீண்டு ஆரோக்கியத்தைத் திரும்பப் பெறும் புதிய உடலைக் குறிப்பிடுகின்றன போன்ற வாதங்களை அவர்கள் முன்வைக்கின்றனர்.

ரிக்வேதத்தில் மறுபிறவி நம்பிக்கைகள் உள்ளதாகக் காண்பவர்கள், உலகெங்கும் மத நம்பிக்கையாளர்கள் காட்டும் அதே மனப்போக்கை வெளிப்படுத்துகின்றனர். தங்களது நிகழ்காலத்திய நம்பிக்கைகளை ஒட்டுமொத்த மரபுக்கும் நீட்டிப்பது (project) என்ற மனப்போக்கு. ஆனால், உண்மை என்னவென்றால், அவர்களது நிகழ்கால நம்பிக்கைகளுக்கு ஒரு வரலாற்றுத் தொடக்கம் உள்ளது. அவர்களது சமய மரபின் ஆரம்பக் கட்டங்களிலும் அந்த நம்பிக்கைகள் அப்படியே இருக்கவில்லை

இந்தக் குறிப்பிட்ட விஷயத்தில், மறுபிறவி குறித்த நம்பிக்கை புதியதாக எழுந்து, பல புதிர்களை திருப்திகரமாக விளக்கும் வகையில் அமைந்தது. தியான முறைகளில் ஈடுபட்டவர்கள் தங்களது அனுபவங்களின் ஒரு பகுதியாக கடந்த பிறவிகளின் வாழ்க்கையை நினைவுகூர்வதாக உணர்ந்தனர். புத்தர் தனது எல்லா முந்தைய பிறவிகளையும் அவற்றின் சம்பவங்களையும் நினைவுகூர்வதாக மட்டுமின்றி, கூடுதலாகத் தானே அந்தப் பிறவிகளில் இன்னின்னபடி இருந்ததாகவும் கூறினார்.

பின்னர் இது வேதங்களின் கர்மம் (பலன் விளைவிக்கக் கூடிய செயல்) என்ற கருத்தாக்கத்துடன் இணைந்து, பரவலாக இருந்த மற்ற சாதாரண மறுபிறவி நம்பிக்கைகளைக் காட்டிலும் நுட்பமான வகையில் மேம்படுத்தப்பட்டது. போர்வெற்றி, உடல்நலம், பெண்ணின் மன இசைவு ஆகிய லௌகீகமான பலன்களைக் கூடச்செய்யும் நுண் இயக்கம் அவற்றைக் கருதிச் செய்யப்படும் வேத வேள்விகளால் நிகழும் என்ற கருத்து ஏற்கெனவே இருந்தது. அதன் நீட்சியாகவே, இந்தப் பிறவி வாழ்க்கையில் நெறிமுறைகளின்படியோ அதற்கு விரோதமாகவோ செய்யப்படும் செயல்கள், அடுத்த பிறவியின் நிகழ்வுகளுக்கான நுண் இயக்கத்தை உருவாக்குகின்றன என்ற கருத்து வளர்ந்தது.

இந்த நம்பிக்கை உண்மையானதா அல்லது பொய்யானதா என்பதை விவாதிப்பது இங்கு நமது நோக்கமல்ல. இது வரலாற்று ரீதியான ஒரு வளர்ச்சிப் போக்கு என்பதைச் சுட்டிக்காட்டுவதே நோக்கம். முதலில் மறுபிறவியும் கர்மவினையும் குறித்த கோட்பாடு இல்லை, பிறகு அது ஏற்கப்பட்டது, மேம்படுத்தப்பட்டது. முதலிலேயே ‘வெளிப்படுத்தப்பட்டு’ அப்படியே அது பாதுகாக்கப்படவில்லை. மாறாக, படிப்படியாகக் கண்டறியப்பட்டது. இந்தியாவின் சமய மரபுகளுக்குள் சீரான மேம்பாடு என்ற இத்தன்மை இருந்தது என்பதே உண்மை.

ஓங்காரம்

மாண்டூக்ய உபநிஷதமும் மேலும் பல நூல்களும் ஓங்காரத்தின் ஆன்மீக ரீதியான மகத்துவத்தைப் பேசுகின்றன. அதிலுள்ள அ, உ, ம ஆகிய மூன்று ஒலிகளும் முறையே விழிப்பு (ஜாக்ரத்), கனவு (ஸ்வப்னம்), ஆழ் உறக்கம் (சுஷுப்தி) ஆகிய உணர்வு நிலைகளைக் குறிக்கின்றன. இந்த ஒலிகளுக்கு வேறு பல மும்மை சார்ந்த விளக்கங்களும் தரப்படுகின்றன – பூர்-புவ-ஸுவ (பூமி, ஆகாயம், சுவர்க்கம்), சத்வம், ரஜஸ், தமஸ் (முக்குணங்கள்) என்பது போல.

தியானத்தில் ஆழ்ந்திருந்த யோகிகள் தங்கள் அகத்தில் ஓங்கார ஓசையைக் கேட்டனர் என்பதாக இதன் தோற்றம் விவரிக்கப்படுகிறது. நாதயோகம் என்ற வகையில் வரும் பல்வேறு யோக முறைகளில் அகத்தில் ஒலிகளைக் கேட்பது என்பது யோகத்தில் முன்னேற்றமடைந்ததன் அறிகுறியாகக் கருதப்படுகிறது. ரீங்காரத்தின் ஓசைகளும், கோயில் மணியோசையும் ஓங்காரத்தின் வடிவங்களாகவே உணரப்படுகின்றன. இந்த வகையில், ஓங்காரத்தின் தோற்றம் யோகத்தின் தோற்றத்துடன் தொடர்புடையதாக ஆகிறது.

முன்பு சொன்ன கோட்பாட்டின்படி, ஓங்காரத்தைப் போல யோகத்திற்கும் வரலாற்று ரீதியான தோற்றமும் வளர்ச்சியும் உண்டு. யோகம் ஆதியிலிருந்தே வருவது, சிருஷ்டியின் தொடக்கத்திலேயே வெளிப்படுத்தப்பட்டது என்பதான நம்பிக்கை நமக்கு இல்லை. அது ஒரு மனிதக் கண்டுபிடிப்பு என்றும், குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்து, அதன் பண்பட்ட நிலையில் பதஞ்சலியின் யோக சூத்திரங்களில் செம்மையை அடைந்துள்ளது என்றும் கருதுகிறோம். அதற்குப் பின்னும் ஹடயோகம் போன்ற சேர்க்கைகளும் மாறுபாடுகளும், துரதிர்ஷ்டவசமாக, சில பலவீனமான திரிபுகளும் கூட அதில் ஏற்பட்டுள்ளன.

ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டில் ஊறிய மேற்கத்திய ஆய்வாளர்கள், தொன்மைக் காலத்திலிருந்தே ஓங்காரம் ஆன்மீக முக்கியத்துவம் கொண்டதாக இருந்து வந்துள்ளது என்பதை ஏற்கின்றனர். ஆனால், அதன் தோற்றம் ஆன்மீக ரீதியானது அல்ல, மண்ணில் வேர் கொண்டது (down to earth), பிறகு அதற்கு ஆன்மீகமான விளக்கம் அளிக்கப்பட்டது என்கின்றனர். இதுவரை, இந்தக் கருத்து சரிதான். இதுவே யதார்த்தமான சாத்தியம், மனிதகுலத்தின் சீரான பரிணாம வளர்ச்சி என்ற பொதுக் கருத்தாக்கத்துடன் பொருந்தி வருவது என்று நானும் கருதுகிறேன். ஆனால், ஆரியப் படையெடுப்புக் கோட்பாட்டைக் கேள்வியின்றி ஏற்றுக் கொண்டதால் இந்த ஆய்வாளர்கள் வேண்டுமென்றே ‘பூர்வகுடிகளான திராவிடர்களுடனான’ இனமோதல் என்பதையும் இதற்குள் கொண்டு வருகின்றனர். எனவே, திராவிட மொழிச் சொல்லான ‘ஆம்’ என்பதிலிருந்தே ஓம் தோன்றியிருக்கிறது என்று இவர்கள் முடிவு கட்டினர்.

ஏற்கெனவே முன்முடிவுகளுடன் இருப்பவர்களுக்கு இந்த முடிவு மிகவும் சரியானது என்றே தோன்றும். ஆனால், இது சிறிதும் ஆதாரபூர்வமானது அல்ல. திராவிட மொழி சார்ந்த தொடக்கக் கால இலக்கியங்கள் என்று அறியப்படுபவை, ஓங்காரத்தைத் தனக்குள் கொண்ட ரிக்வேதத்துடன் ஒப்பிடுகையில் ஆயிரமாண்டுகள் அல்லது அதற்கும் மேலாகப் பிற்பட்டவை (சங்க இலக்கியங்களையே இங்கு எல்ஸ்ட் குறிப்பிடுகிறார் – மொ.பெ.). இவை ரிக்வேதப் பண்பாட்டின் தொட்டிலாக இருந்த சரஸ்வதி நதி தீரத்திலிருந்து (இன்றைய ஹரியாணாவிற்கு மேற்கிலுள்ள பகுதி) ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தொலைவிலுள்ள இந்தியாவின் தென்கிழக்குக் கடற்கரையை ஒட்டிய பகுதியில் உருவானவை. வேதமொழியான சம்ஸ்கிருதம் மற்ற அறியப்படாத மொழிகளிலிருந்து சொற்களைக் கடன் வாங்கியுள்ளது என்பதற்கும் சான்றுகள் உள்ளனதான். ஆனால் திராவிட மொழிகளிலிருந்து இத்தகைய சில கடன்வாங்கல்கள் (உதாரணமாக, மீனைக் குறிக்கும் ‘மீன’ என்ற சொல்) மிகவும் பிற்காலத்தியவை. எனவே, வேதகால ரிஷிகள் இவ்வளவு முக்கியமான, மையமான ஒரு ஓசையை திராவிட மொழிகளிலிருந்து பெற்றிருக்கலாம் என்பதற்குச் சாத்தியமே இல்லை. ஒரு தடாலடியான ஊகம் சார்ந்த கோட்பாடு என்பதைத் தாண்டி, இது பொருட்படுத்தத்தக்கது அல்ல.

தீர்க்கதமஸ்

ரிஷி தீர்க்கதமஸ் வேதகால மன்னரான பரதரின் புரோகிதராக இருந்தவர் என்று கருதப்படுகிறார். வேதப்பண்பாட்டை உருவாக்கி வளர்த்தவர்களில் முக்கியமானவர் இந்த மன்னர். புருவின் வழித்தோன்றல்கள் என்பதால், பௌரவ என்றழைக்கப்பட்ட வம்சத்தில், இவர் முன்னோராக இருந்த குடி, பரத குலம் என்றழைக்கப்பட்டது. இந்த பரதகுலத்திற்குள் நடந்த சகோதரச் சண்டையையும் அதனால் விளைந்த போரையும்தான் மகாபாரதம் வர்ணிக்கிறது. இந்தியாவிற்கு பாரதம் என்ற பெயர் ஏற்பட்டதும் இந்த பரதரால்தான். ‘நீண்ட இருள்’ என்ற பொருள் கொண்ட தீர்க்கதமஸ் என்ற ரிஷிக்கு, அந்தப் பெயர் ஒரு குறிப்பிட்ட காரணத்திற்காகக் கொடுக்கப்பட்டிருக்கலாம். அவர் இரவில் நட்சத்திரங்களைக் கண்டு ஆராய்பவராக இருந்தார் என்பது கண்கூடு. அவர் பெயர் வழங்குகின்ற ரிக்வேதப் பாடல்களில் (முதல் மண்டலம், சூக்தங்கள் 140-164) அவரது வானியல் சார்ந்த கண்டறிதல்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. ரிஷி பரத்வாஜரின் சகோதரராகவும் இவர் அறியப்படுகிறார். பரத்வாஜர் ரிஷிகுலங்களில் தொன்மையானதான ஆங்கிரசர் குழுவின் தலைவர். ரிக்வேதம் ஆறாவது மண்டலத்திற்கு உரியவர்.

உலக மதங்களின் வரலாற்றில், புத்தர், ஏசு, முகமது போன்ற பெரிய பெயர்கள் அனைவருக்கும் தெரியும். ஒப்பீட்டில் சிறிய பெயர்கள் சிலருக்கே தெரியும். மேற்குலகில் ஒரு சராசரி மனிதரைக் கேட்டால், ஒருவருக்கும் தீர்க்கதமஸ் என்ற பெயர் தெரிந்திருக்காது. இந்தியாவில் கூட, சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஆயினும், ஆத்மாவைக் குறித்த அதிமுக்கியமான தத்துவத்தை (ஆத்மவாதம்) முதன்முதலாக உருவாக்கிய ரிஷி யாக்ஞவல்கியருடன் சேர்த்து, ரிஷி தீர்க்கதமஸ் மனித குலத்தின் மகத்தான சிந்தனையாளர்களில் ஒருவர்.

அவரது மிகப்பிரபலமான கொடை என்பது ரிக்வேதம் முதல் மண்டலத்திலுள்ள 164வது சூக்தம். அதிலுள்ள அற்புதமான விஷயங்களில் பலருக்கும் தெரிந்த ஒன்று ‘இரு பறவைகள்’ உருவகம். ஒன்று பழங்களைத் தின்று கொண்டிருக்கிறது, மற்றது அசையாமல் பார்த்துக் கொண்டிருக்கிறது (பின்னாளில் ஜீவனையும் ஆத்மாவையும் இவை குறிப்பதாக முன்வைத்து விரிவுரைகள் எழுந்தன). இன்னொன்று, ஒரு வட்டத்தைப் பன்னிரண்டாகவும் 360 ஆகவும் பகுக்கும் முறை பற்றிய குறிப்பு. மற்றொன்று, வேள்வியிலிருந்து சிருஷ்டி உண்டாவது குறித்த கருத்தாக்கம். மற்றொன்று, ‘சத்தியம் ஒன்றே; முனிவோர் அதைப் பலவாறு அழைக்கிறார்கள்’ (ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி) என்று தொடர்ந்து மேற்கோளாகக் காட்டப்படும் (திரிபுகளுக்கும் உள்ளாகும்) வாசகம். இந்த அற்புதமான சூக்தம்தான் ஓங்காரத்தின் தோற்றம் குறித்ததான ஒரு தடயத்தையும் எனக்கு அளித்தது.

பசு

ஓங்காரத்தின் தோற்றத்தைக் குறித்து அப்படி என்னதான் சொல்கிறார் தீர்க்கதமஸ்? வெளிப்படையாக ஒன்றுமில்லை. அப்படியிருந்தால், அது மிகவும் தெளிவாகவும் எளியதாகவும் இருந்திருக்கும். அடிப்படை ஆதார நூலே இந்துக்களுக்கு அதனை நினைவூட்டுவதாக இருந்திருக்கும். ‘தெய்வங்களுக்குப் புதிர்கள் பிரியமானவை’ என்கிறது உபநிஷதம். எனவே வரிகளுக்கு இடையில் வாசித்துத்தான் நீங்கள் உண்மையை அறியவேண்டும்.

இந்த விஷயத்தில் இரண்டு விஷயங்களை அடுத்தடுத்து வைத்துள்ளது (juxtaposition) முக்கியமானது.

சூக்தத்தின் 39வது பாடலில் தெய்வங்களை அழைக்கும் ஓரெழுத்தை (‘ரு’சே அக்ஷரே பரமே வ்யோமன்’) ரிஷி வேண்டுகிறார். அது பரம ரகசியம், ஆனாலும் இங்குக் கூடியுள்ளவர்கள் அனைவரும் அறிந்தது என்கிறார். இந்த சூக்தம் முழுவதும் ஓரெழுத்திற்கு மிகாத ஓசையைக் குறிப்பிடுகிறது.

அதே சமயம், இந்த சூக்தத்தில் இதற்கு முந்தைய பாடல்களில், பசுக்கள் எழுப்பும் ஒலியையும், கன்றின் மீது பசு கொள்ளும் பரிவையும் பற்றித் தொடர்ந்து கூறப்படுகிறது. ‘வத்’ என்ற வேர்ச்சொல் வருடத்தை / வயதைக் குறிக்கிறது (Latin vetus, “having years”, “old”). ‘வத்ஸ’ என்றால் ஒரு வயதான குழந்தை (yearling), அதாவது கன்று. பசுவுக்கும் கன்றுக்கும் இடையிலுள்ளது ‘வாத்ஸல்யம்’ அதன் பொருள் அன்பு, பரிவு என்பதாகும். பசு எழுப்பும் ஒலியிலும், அதற்கு கன்று எழுப்பும் மறு ஒலியிலும் இந்த பரஸ்பர அன்பு வெளிப்படுகிறது. இந்த சூக்தத்தில், பசுவும் அது எழுப்பும் ஒலியும் பலமுறை போற்றப்படுகின்றன.

அங்கு, உடனே எனக்குப் பொறி தட்டியது. ஆம், அனைத்து வேதமந்திரங்களையும் அடக்கிய ஓசையும், வேதத்தில் முதலாவதாக அமைந்த ஓசையுமான ஓங்காரம், உண்மையில் பசு எழுப்பும் ஓசையின் மானுட குரலொலியாக்கம் (vocalization) தான். ஆங்கிலத்தில் பொதுவாக அதை Mooh என்று எழுதுகிறோம்.

சில மதங்களில் அதன் புனிதமான மந்திர ஓசை பசு எழுப்பும் ஒலியிருந்து உருவானது என்று கூறுவது தண்டனைக்குரிய மதவிரோதமாகக் கருதப்படும். ஆனால், வேதநெறியான இந்துமதத்தில் அப்படியல்ல. பசுவை ஒருபோதும் கொல்லக்கூடாது என்பது ஆரம்பக் காலத்திலும் கறாராகக் கடைப்பிடிக்கப்பட்டது என்று கூறமுடியாது. ஆனால் பசுவின் புனிதத்துவம் என்பது எப்போதுமே இருந்துவந்த ஒன்று. பசுவே வேதகாலத்திய பொருளாதாரத்தின் மையமாக இருந்தது. எந்த ஒரு வைதீகச் சிறுவனும் கிருஷ்ணனைப் போல முழுநேரமும் பசுக்களைக் கவனித்துக்கொண்டும் பேணியும் அவற்றின் ஒலிகளைக் கேட்டுக்கொண்டும்தான் வளர்ந்தான். யோகி தனது தியானத்தினூடாக அகத்தின் ஓசையைக் கேட்பதற்கு நெடுங்காலம் முன்பு, வேதகாலச் சிறுவனுக்குப் பசுக்களின் ஒலி பரிச்சயம் மிகுந்ததாக இருந்தது. அதையே அவன் ஓங்காரமாக குரலொலியாக்கம் செய்தான். தான் புனிதமாகக் கருதியவை அனைத்திலும், தெய்வங்களை அழைக்கும் வேதப்பாடல்களிலும் அதனைப் பிரதி செய்தான்.

மூலம்: http://beta.valamonline.in/2013/05/the-origin-of-aum.html

Leave a Reply