கோவில்களையும் அவற்றின் அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களையும் பாதுகாப்பதாகச் சொல்லித்தான் அரசு அவற்றின் நிர்வாகத்தைக் கையகப்படுத்திக் கொண்டது. ஆனால் கடந்த 47 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ஆலய நிர்வாகம் என்கிற பெயரில் கோவில்களின் சீரழிவையும் கோவில் சொத்துக்களின் பேரழிவையும்தான் பார்க்கிறோம்.
கடந்த பல ஆண்டுகளில், கோவில் சொத்துக்கள் குறைந்தும் அழிந்தும் வருவதோடு மட்டுமல்லாமல், இருக்கின்ற சொத்துக்களிலிருந்து கிடைக்கவேண்டிய வருமானமும் நின்றுபோயுள்ளதைக் காண்கிறோம். ஊழலும் சீர்கேடும் நிறைந்த நிர்வாகத்தினால்தான் இந்த நிலை என்பது தெளிவு. உதாரணத்திற்கு, தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்களின் கணக்கை எடுத்துக்கொள்வோம். இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 36,488 கோவில்கள், 56 திருமடங்கள், 58 பிரம்மாண்ட கோவில்கள், 17 சமண கோவில்கள் ஆகியவை உள்ளன. இவற்றுக்குச் சொந்தமாக 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாக அரசு வெளியிட்ட அறநிலையத்துறைக்கான கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் 1986ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அறநிலையத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் மேற்கண்ட கோவில்களுக்கு மொத்தமாக 5.25 லட்சம் ஏக்கர் நிலங்கள் இருந்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. அதாவது 28 ஆண்டுகளில் 47,000 ஏக்கர் நிலங்கள் காணாமல் போய்விட்டன! (தினமலர் – 5 ஆகஸ்டு 2014). திராவிட மாயையில் கோவில் நிலங்கள் தொடர்ந்து காணாமல் போகின்றன என்பதற்குச் சமீபத்திய உதாரணம் ஒன்றைப் பார்ப்போம்.
காணாமல் போன சிவகங்கை சூரக்குடி கோவில் நிலங்கள்
சிவகங்கை மாவட்டம் சூரக்குடியில் ஆவுடைநாயகி அம்பாள் சமேத தேசிகநாத ஸ்வாமி திருக்கோவிலின் நிலங்களை முத்துச் செட்டியார் என்பவர் மோசடி செய்து விற்றுள்ளார். இது சம்பந்தமாகக் கோவிலின் பரம்பரை அறங்காவலராக இருக்கும் லட்சுமணன் என்பவர் கடந்த 2016 நவம்பர் மாதம் அறநிலையத்துறை ஆணையருக்கு மனு அளித்திருந்தார். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆணையர், “உடனடியாக விசாரணை நடத்தி கோவில் நிலங்களை மீட்கும் விதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்” என்று பரமக்குடியில் உள்ள அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
ஆனால், உதவி ஆணையரோ, அந்த உத்தரவின்படி நடந்துகொள்ளாமல், சிவில் நீதிமன்றத்தை அணுகி மேல் முறையீடு வழக்குத் தொடரும்படி பரம்பரை அறங்காவலருக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, உதவி ஆணையரின் உத்தரவை ரத்து செய்யக்கோரி அறங்காவலர் லட்சுமணனின் பிரதிநிதிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
உயர் நீதிமன்ற உத்தரவு
மனுவை இம்மாதம் (ஃபிப்ரவரி) 12ம் தேதி விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி மகாதேவன், “உதவி ஆணையர் அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்ட நோக்கத்தையும், சட்டத்தின் நோக்கத்தையும் கவனத்தில் கொண்டு பரிசீலிக்கத் தவறிவிட்டார். அறநிலையத்துறையின் ஒப்புதல் பெறாமல் சொத்துக்களை விற்க அனுமதித்தால் அறநிலையத்துறை ஏற்படுத்தப்பட்ட நோக்கமே பாழாகிவிடும்” என்று கூறி உதவி ஆணையரின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
ஏற்கெனவே தமிழகக் கோவில்களின் சொத்துக்களில் 47,000 ஏக்கர் நிலங்கள் காணாமல் போயுள்ளதையும் குறிப்பிட்ட நீதிபதி மகாதேவன், “ஒவ்வொரு பகுதிக்கும் குழுக்கள் நியமிக்கப்பட்டு கோவில் சொத்துக்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் பற்றிய விவரங்களைச் சேகரித்து ஆறு வாரங்களில் அறிக்கை அளிக்க வேண்டும். ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கோவில் சொத்துக்களை மீட்கத் தங்கள் அதிகாரங்களை ஆணையரும் இணை ஆணையர்களும் பயன்படுத்த வேண்டும். ஏற்கெனவே கடந்த 2014ம் வருடம் அக்டோபர் மாதம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவின் பேரில் அறநிலையத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இந்த இரண்டாவது முறையாக அளிக்கப்படும் இந்த உத்தரவை நிறைவேற்றத் தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க இந்த நீதிமன்றம் தயங்காது” என்று கூறி வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்குத் தள்ளி வைத்தார்.
உயர் நீதிமன்ற உத்தரவின் அம்சங்கள்
இரண்டு வாரங்களுக்குள் கோவில் சொத்துக்களை மீட்கும் விதமாக பரமக்குடி உதவி ஆணையர் விசாரணை நடத்தி மேல்நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
கோவில் நிலங்களுக்குச் சம்பந்தமில்லாத மூன்றாம் நபர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் பெயர்களில் பட்டாக்கள் வழங்கப்பட்டிருந்தால், அந்தத் தகவல்களைச் சேகரித்து நான்கு வாரங்களில் ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
சட்ட விரோதமாக தனிப்பட்ட பயனாளிகளுக்கு மாற்றப்பட்டுள்ள கோவில் நிலப் பட்டாக்களை மீண்டும் கோவில் பெயருக்கு மாற்றத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி, அனைத்துத் தாசில்தார்கள் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர்கள் ஆகியோருக்கு வருவாய்த்துறைச் செயலர் உத்தரவிட வேண்டும். அறநிலையத்துறையிடமிருந்து எழுத்துப் பூர்வ அனுமதி இல்லாமல் கோவில் நிலங்களுக்குப் பட்டா வழங்கப்படக் கூடாது.
அனைத்துக் கோவில்களின் சொத்துக்கள் பற்றிய விவரங்களைத் திரட்டி அறநிலையத்துறை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
கோவில்களின் சொத்துக்கள் விற்பனை, குத்தகை மற்றும் அடைமானம் செய்யப்பட்ட விவரங்களையும், அவற்றுக்கு அறங்காவலர்கள் தெரிவித்த ஆட்சேபனைகள் பற்றிய விவரங்களையும் நான்கு வாரங்களில் அறிக்கையாக ஆணையர் தாக்கல் செய்ய வேண்டும்
அறங்காவலர்கள் வசம் உள்ள சொத்துக்கள், சட்ட விரோதமாக மூன்றாம் நபர்கள் பெயர்களில் உள்ள சொத்துக்கள், அனுமதியுடனும் அனுமதியின்றியும் விற்கப்பட்டுள்ள சொத்துக்கள், நிலுவையில் உள்ள வழக்குகள் ஆகிய விவரங்களைச் சேகரித்து ஆறு வாரங்களில் அறிக்கையாகத் தாக்கல் செய்ய வேண்டும்.
கோவில் சொத்துக்கள் (விற்பனை, குத்தகை) விஷயத்தில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீது துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பதை ஆணையர் ஆராய வேண்டும்.
கோவில் சொத்துக்கள் சட்ட விரோதமாக விற்பனைக்கும் குத்தகைக்கும் விடப்படவில்லை என்பதை உறுதி செய்யுமாறு கீழ்நிலை அதிகாரிகளுக்கு ஆணையர் உத்தரவிட வேண்டும்.
ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை மீட்க உடனடி விசாரணை செய்யுமாறு உதவி ஆணையர்கள் மற்றும் இணை ஆணையர்களுக்கு ஆணையர் உத்தரவிட வேண்டும்.
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சொத்துக்கள் மற்றும் பொதுமக்கள் வசம் உள்ள சொத்துக்களை உடனடியாக ஒப்படைத்துவிடும்படியும், அவ்வாறு ஒப்படைக்காத பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆணையர் பொது அறிவிப்பு வெளியிட வேண்டும்.
சிவகங்கை கோவில் விஷயம்
சிவகங்கை கோவில் நிலங்கள் வழக்கு விஷயத்தில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சம் என்னவென்றால், முத்துச் செட்டியார் என்கிற கோவிலுக்குச் சம்பந்தமில்லாத மூன்றாம் நபர் கோவில் நிலங்களை விற்பனை செய்துள்ளார் என்பதுதான். பரம்பரை அறங்காவலருக்குத் தெரியாமல் நடந்துள்ள விற்பனையாகும் இது. அறநிலையத்துறை அதிகாரிகளின் உதவி இன்றி இந்த விற்பனை நடந்திருக்க வாய்ப்பேயில்லை என்பது தெளிவு.
மற்ற சில கோவில்கள் சம்பந்தப்பட்ட வழக்குகளை ஆராய்ந்தால், கோவில் நிலங்களின் மோசடி விற்பனைகளில் அறநிலையத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கும் வாய்ப்பு அதிகம் என்கிற உண்மை உறுதி செய்யப்படுகிறது. இவ்வுண்மையைக் கவனத்தில் கொண்டுதான் நீதிபதி மகாதேவன் மேற்கண்ட சிறப்பான உத்தரவை இட்டுள்ளார்.
சட்டமும் கோவில் சொத்துக்களும்
இந்து அறநிலையத்துறைச் சட்டத்தின்படி கோவில் அறங்காவலர்களுக்கு மட்டுமே கோவிலை நிர்வாகம் செய்யும் அதிகாரம் உண்டு. ஆனால், கடந்த ஏழு ஆண்டுகளாக தமிழக அரசு எந்தக் கோவிலுக்கும் அறங்காவலர்களை நியமனம் செய்யவில்லை. வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது. இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 47வது பிரிவின்படி கோவில்களுக்கு அறங்காவலர்கள் அமைப்பது தமிழக அரசின் தலையாய கடமையாகும். இந்தக் கடமையைச் செய்யத்தவறிய தமிழக அரசும் அறநிலையத்துறையும், அவர்கள் இஷ்டத்திற்கு அறங்காவலர்களுக்குப் பதிலாக அவர்கள் இடத்தில் ‘பொருந்தும் நபர்கள்’ (Fit Persons) என்கிற பெயரில் அறநிலையத்துறை அலுவலர்கள் சிலரையே நியமிக்கின்றன. ஆனால் இந்து அறநிலையத்துறை சட்டத்தில் அரசு அலுவலர்களை கோவில் அறங்காவலர்களாக நியமிக்க இடமோ அதிகாரமோ கொடுக்கப்படவில்லை.
அறங்காவலர்கள் என்று யாரும் இல்லாதபோது, கோவில் சொத்துக்களை நிர்வாகம் செய்வதற்கும், விற்பதற்கும், வாடகைக்கோ குத்தகைக்கோ விடுவதற்கும் செயல் அலுவலருக்கோ, உதவி/துணை/இணை ஆணையருக்கோ, பொருந்தும் நபருக்கோ சட்டப்படி அதிகாரம் இல்லை. இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 23வது பிரிவு ஆணையருக்கு மட்டும் குறைந்தபட்சமாக மேற்பார்வை செய்யும் அதிகாரம் மட்டுமே கொடுத்துள்ளது. அவரும் கூட, குறிப்பிட்ட சொத்து எதற்காகக் கோவிலுக்குக் கொடுக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டுத் தேவையான வருமானம் வருகிற அளவில்தான் அந்தச் சொத்தைக் கையாள வேண்டும்.
இந்து அறநிலையத்துறை சட்டம் 45வது பிரிவின்படி ஆணையர் செயல் அலுவலரை நியமித்தது செல்லாது. இதை சிதம்பரம் கோவில் வழக்கில் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆகவே, அந்தச் சட்டத்தின்படி, தமிழகத்தில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில்கள் அனைத்திலும் இருக்கும் செயல் அலுவலர்களின் நியமனமும் செல்லாததாகிவிடுகிறது. எனவே, அந்தச் செயல் அலுவலர்கள் கோவில் சொத்துக்களைக் குத்தகைக்கு விடவோ குத்தகைதாரர்களுடன் ஒப்பந்தம் செய்யவோ அதிகாரம் அற்றவர்கள் ஆவார்கள்.
இந்து அறநிலையத்துறை சட்டத்தின் 78, 79 மற்றும் 79-C பிரிவுகள் கோவில் நிலங்களின் ஆக்கிரமிப்பைத் தடுப்பதற்கும், அக்கிரமிப்பாளர்களை வெளியேற்றுவதற்கும், வாடகை மற்றும் குத்தகைத் தொகைகளை வசூல் செய்வதற்கும் அறநிலையத்துறை அதிகாரிகளுக்குத் தேவையான அதிகாரமும் உரிமையும் அளிக்கின்றன. அந்த அதிகாரங்களைக் கொண்டும் தேவையான அலுவலர்களைக் கொண்டும் கோவில் நிலங்களை சரிவர நிர்வாகம் செய்யாமல் இருப்பது, அறநிலையத்துறை தன்னுடைய ஊழல் நிறைந்த திறமையற்ற நிர்வாகத்தை ஒத்துக்கொள்வதாகும்.
அரசு ஆணை (G.O. Ms. No. 689, Home dated 18th February 1958) படி, கோவில் சொத்துக்களை ஹிந்து அல்லாதவர்களுக்கு வாடகைக்கு விடக்கூடாது என்று உள்ளது. மேலும், D.Dis.No.2599/58, dated 1st February 1958 – D.Dis.No.2311/58, dated 7th April 1958 படி, கோவில் நிலங்களையும், மனைகளையும், கட்டிடங்களையும் வாடகைக்கு விடும்போது, அவற்றை உள்வாடகைக்கு விடக்கூடாது என்றும், அந்நிலங்களில் வாடகைதாரர்கள் எந்தவிதமான கட்டிடங்களையும் கட்டக்கூடாது என்றும் விதிகள் இருக்கின்றன. அவ்வாறு இருக்கும் பட்சத்தில், அந்தக் குறிப்பிட்ட தேதியில் வாடகை ஒப்பந்தம் தானாகவே ரத்தாகிவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஏல அறிவிப்பிலும், வாடகை அறிவிப்பிலும் இந்த விதிகளைக் கட்டாயமாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கோவிலுக்கும், ஒவ்வொரு ஆண்டும் ‘கேட்பு, வசூல், நிலுவை பதிவேடு’ என்கிற ஆவணத்தைத் தயார் செய்ய வேண்டியது அறநிலையத்துறையின் கடமை. அதில் சொத்தின் பயனாளிகள் மற்றும் வாடகை ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் இருக்க வேண்டும்.
இந்து அறநிலையத்துறை சட்டம் 29ம் பிரிவின்படி கோவிலைப் பற்றிய அனைத்து விஷயங்களும் அடங்கிய பதிவேடு (Ledger 29) ஒன்று தயாரிக்கப்பட வேண்டும். சட்டப்பிரிவு 30ன் படி, அப்பதிவேடும் ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ஆண்டின் கூட்டல்கள், கழித்தல்கள் கணக்கில் கொண்டு (Updating) சரி செய்யப்படவேண்டும். சட்டப்பிரிவு 31ன் படி, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் பதிவேடு (Ledger 29) முழுமையாகத் தயாரிக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட சட்டங்களையும் விதிகளையும் கருத்தில் கொண்டு, உயர் நீதிமன்றத்தின் உத்தரவில் உள்ள முக்கிய அம்சங்களைப் பார்த்தோமானால், உயர் நீதிமன்றத்தின் உத்தரவு எந்த அளவிற்குக் கோவில்களின் நலனைக் கருத்தில் கொண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது புரியும். தமிழ் ஹிந்துக்கள் உயர் நீதிமன்றத்தின் உத்தரவைப் பாராட்ட வேண்டும்.
தங்களுடைய அரை நூற்றாண்டுக்கும் மேலான நிர்வாகச் சீர்கேட்டைச் சரிசெய்வதற்கான ஒரு நல்வாய்ப்பாக அறநிலையத்துறையும், தமிழக அரசும் இவ்வுத்தரவைக் கருத்தில் கொண்டு செயல்பட்டால் மக்களின் மதிப்பைப் பெற முடியும். ஆனால் அரை நூற்றாண்டுக்கும் மேலான திராவிட அரசுகளின் செயல்பாடு நமக்கு அந்த நம்பிக்கையைத் தரவில்லை. எனினும், தமிழக அரசுக்கு நல்லபுத்தி வரவேண்டும் என்று கோவில்களில் உள்ள கடவுளர்களை வேண்டிக்கொள்வோம்.