Posted on Leave a comment

காவிரி – தீரா நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினை | லக்ஷ்மணப் பெருமாள்


 காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்புக்கு எதிரான மேல் முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் 16-02-2018ல், தனது இறுதித் தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பின் சாராம்சம் இதுதான்.

“கர்நாடகா, தமிழகத்திற்கு 177.25 டிஎம்சி (டிஎம்சி என்பது ஆயிரம் மில்லியன் கன அடி) அளவு நீரை வழங்க வேண்டும். அடுத்த 15 ஆண்டுகளுக்கு இதே தீர்ப்பு அமலில் இருக்கும் என்பதால், இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது. அதில் உள்ள சிறு குறைகளை மட்டும் நீக்கிவிட்டு, தற்போதைய சூழலுக்கு ஏற்ற வகையில் இந்தத் தீர்ப்பு வழங்கப்படுகிறது. காவிரி ஆறு ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்குச் சொந்தமானது அல்ல. காவிரி ஆறு தேசியச் சொத்து. அதனை எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது.

தமிழகத்தில் காவிரி பாசனப்பகுதிகளில் 20 டிஎம்சி நிலத்தடி நீர் உள்ளது. அதில் குறைந்தபட்சமாக 10 டிஎம்சி நீரை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு, முன்னர் தரப்பட்டிருந்த 192 டிஎம்சி நீரில் இருந்து 177.25 டிஎம்சி நீராகக் குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் கர்நாடகாவில் வளர்ந்து வரும் தொழிற்சாலைகளையும், பெங்களூருவின் குடிநீர்த் தேவையையும் கருத்திற்கொண்டு கர்நாடகாவுக்குக் கூடுதலாக 14.75 டிஎம்சி நீர் ஒதுக்கப்படுகிறது.

பெங்களூரு சர்வதேச நகராக வளர்ந்துள்ளதால் நாளுக்கு நாள் மக்கள்தொகை அதிகரித்து வருகிறது. இதனால் பெங்களூருவின் குடிநீருக்காக 4.75 டிஎம்சி நீரும், தொழிற்சாலைகளின் தேவைக்காக 10 டிஎம்சி நீரும் ஒதுக்கப்படுகிறது. காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் தரப்பட்டிருந்த, கேரளாவுக்கு 30 டிஎம்சி, புதுச்சேரிக்கு 7 டிஎம்சி நீரில் எவ்வித மாற்றமும் இல்லை.

காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பாக மக்களின் நலன் கருதி 1892 மற்றும் 1924 ஆகிய ஆண்டுகளில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும். எனவே தமிழகத்தின் அனுமதியின்றி கர்நாடகா காவிரி ஆற்றின் குறுக்கே புதிய அணை கட்ட முடியாது. மழைக்காலங்களில் காவிரியில் அதிகப்படியாக வரும் நீரை கர்நாடகா முறையாகப் பங்கிட்டுக் கொள்ள வேண்டும்.

மத்திய அரசு இன்னும் 6 வாரங்களில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும்.”

இவ்வாறு உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

காவிரியின் கடந்த கால வரலாறு

18-02-1892ல் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையில் முதல் காவிரி நீர்ப்பகிர்வு உடன்படிக்கை செய்யப்பட்டது. அந்த ஒப்பந்தப்படி மைசூர் மாகாணம் கூடுதலாக வேளாண்மை செய்ய வேண்டுமென்றால் சென்னை மாகாணத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும். இல்லையேல் புதிதாக வேளாண்மை செய்யக்கூடாது என்று கூறப்பட்டிருந்தது.

14 ஆண்டுகள் கழித்து நடுவர் குழு மற்றும் ஆய்வுக்குழுவின் வழிகாட்டுதல்படி, 18-02-1924ல் மைசூர் – கண்ணம்பாடியில் கிருஷ்ணராஜ சாகர் அணையையும், இங்கே மேட்டூர் அணையையும் அடிப்படையாக வைத்து, இந்திய அரசின் மேற்பார்வையில் சென்னை மாகாணத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் 50 ஆண்டு கால உடன்படிக்கை செய்யப்பட்டது.

1956ல் மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்டபோது காவிரி உற்பத்தியாகும் குடகு கர்நாடகாவிற்குச் சென்றது. மேலும் காரைக்கால் காவிரி நீரால் பயனடைந்து வந்ததால் புதுச்சேரியும், கபினி நீரின் பிறப்பிடம் கேரளாவிற்குச் சென்றதால் 1960ல் கேரளமும் நீர்ப்பங்கீடு கேட்டு உரிமைப் பிரச்சினையை எழுப்பின.

1924 -1974 உடன்படிக்கை முடிவுக்கு வந்தபோது கர்நாடகா நீர் தர மறுத்தது. இதற்கிடையே 1892, 1924 ஒப்பந்தங்களை மதிக்காமல், நீர்ப்பங்கீட்டை கர்நாடகா மறுக்கிறது என்று தமிழகம் 17-02-1970ல் மத்திய அரசிடம் நடுவர் தீர்ப்பாயத்தை அமைக்கக் கோரிக்கை வைக்கிறது. 16 ஆண்டுகளாகியும் நடுவர் தீர்ப்பாயத்தை அமைக்காத காரணத்தால் ‘மாநிலங்களுக்கிடையேயான நீர்த்தகராறு 1956 சட்டத்தின்’ கீழ் தமிழகம் நடுவர் தீர்ப்பாயத்திடம் செல்வதென முடிவெடுக்கிறது. நடுவர் தீர்ப்பாயக் குழுவை அமைக்காமல் மத்திய அரசு கால தாமதம் செய்கிறது. இதனையடுத்து உச்சநீதி மன்றம் தலையிட்டதன் பேரில் 1990, ஜுனில்தான் காவிரி நடுவர் தீர்ப்பாயம் (நடுவர் மன்றம்) அமைக்கப்படுகிறது. அக்காலக் கட்டத்திலிருந்த மத்திய அரசின் அலட்சியப் போக்கினால் தமிழகம் இழந்தது ஏராளம். ஏனெனில் கர்நாடகாவில் விவசாயம் செய்யும் நிலப்பரப்பு விரிவாக்கப்பட்டுக் கொண்டே சென்றது.

காவிரி நதிநீர் நடுவர் தீர்ப்பாயத்தில் மூன்று நீதிபதிகள் அதன் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். தீர்ப்பாயத்தின் முடிவான தீர்ப்பு அளிக்கப்படும் வரை, 25-06-1991 அன்று, இடைக்கால உத்தரவாக தமிழ்நாட்டிற்கு 205 டிஎம்சி நீரை ஆண்டுதோறும் வழங்க வேண்டும் என்று ஆணையிட்டது. பத்து நாட்களுக்குப் பிறகு தீர்ப்பாயத்தின் உத்தரவை ஏற்க மறுத்து, கர்நாடக சட்டமன்றம் ஒருமனதாகத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியது. தன்னுடைய அலுவலர்களுக்கும் கர்நாடக அரசு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி, மாநில விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் காவிரி நீரைக் காப்பாற்றிப் பாதுகாக்குமாறு உத்தரவிட்டது. விவகாரம் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. கர்நாடகாவின் தீர்மானம் அரசியலமைப்புச் சட்ட வரம்பை மீறுவது என்று உச்சநீதி மன்றம் கூறியது. இதனையடுத்து மத்திய அரசு கர்நாடகா விடவேண்டிய தண்ணீரின் அளவைக் குறிப்பிட்டு தனது கெஸட்டில் வெளியிட்டு, அதை அதிகாரப்பூர்வமாக்கியது. அதற்குப் பதிலளிக்கும் வகையில் அப்போதைய கர்நாடக முதல்வர் எஸ்.பங்காரப்பா பொதுவேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து தமிழகத்திற்கு எதிராக கர்நாடகம் முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. கலவரங்கள் நிகழ்ந்தன. தமிழகத்திலும் பல கோடி இழப்புகள் ஏற்பட்டது. அதுபற்றிப் பின்னர் விரிவாகக் காணலாம்.

இதற்கிடையே கர்நாடகம் அதன் பாசனப் பரப்பை அப்போதைய 11,20,000 ஏக்கருக்கு மேல் விரிவுபடுத்தக் கூடாது என்றும் தீர்ப்பாயம் ஆணையிட்டது. இந்த இடைக்காலத் தீர்ப்புக்கு எதிராக கர்நாடக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. பின்னர், குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டபடி, உச்ச நீதிமன்றம் தலையிட்டு அந்த அவசரச் சட்டத்தை நீக்கியது.

கர்நாடக அரசு பாசனப் பகுதிகளை அதிகப்படுத்தியது; அரசியல் லாபங்களை முன்வைத்து, உச்சநீதிமன்றம், நடுவர் தீர்ப்பாயம் அறிவிக்கும் நீரின் அளவை, மழைக் காலங்களில் அதிக நீர்வரத்து இருந்தால் திறந்து விடுவதும், மழை குறைவான ஆண்டுகளில் அல்லது நீர்ப்பற்றாக்குறை ஏற்படும் மாதங்களில் தண்ணீரைத் திறந்து விடுவதில் உள்ள சிக்கலைக் காரணம் காட்டி நடுவர் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி திறந்து விட இயலாது என்று காரணம் காட்டுவதும் வாடிக்கையானது. தமிழகம் தனக்கான நீதி கேட்டு உச்சநீதிமன்றம் செல்வதும், கர்நாடகமும் தனது பங்கிற்கு வழக்குகளைப் போடுவதும் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்தது. தமக்கான தண்ணீரின் அளவைக் குறைத்துவிடக்கூடாது என்ற கவலையில் கேரளாவும், புதுச்சேரி யூனியனும் கூட வழக்குகளைப் பதிவு செய்தன.

காவிரி பற்றிய சில தகவல்கள்

காவிரி தலைக்காவிரி, குடகு என்ற இடத்தில் தற்போதைய கர்நாடகாவில் பிறக்கிறது. கர்நாடகாவின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியின் வாயிலாக தமிழகத்தில் நுழையும் காவிரி, தெற்கு, தென் கிழக்குப் பகுதிகளில் பாய்ந்து இரு கிளைகளாகப் பிரிந்துசென்று இறுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது.

காவிரி நதியில் கலக்கும் சிறு ஆறுகள்: சிம்ஸா, ஹேமாவதி, அர்காவதி, ஹொன்னுகோல், லக்ஷ்மண தீர்த்தா, காபினி, பவானி ஆறு, லோகபவானி, அமராவதி மற்றும் நொய்யல் ஆறு.

காவிரி பாயும் மாநிலங்கள்: கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி.
காவிரிப் படுகையின் நீர்த்தேக்கத்தின் அளவு : 81,155 Sq.KM (31,334 Sq.Miles)
நீளம்: 765 KM
காவிரி விடுவிப்பு சராசரியாக : 235.7 Cubic Meter/Sec (8,324 Cubic feet/Sec)

இந்தியாவில் நீர் பற்றிய சட்டங்களில் என்ன கூறப்பட்டுள்ளது?

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தில் நீர் மேலாண்மை பற்றிய சட்டங்களை வரையறுத்ததில் உள்ள உரிமைகள் இன்று மாநிலங்களுக்கிடையே நீரைப் பகிர்ந்து கொள்வதில் பல சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. சட்டங்கள் வரையறுக்கப்பட்ட போதிலும், முழுமையான அதிகாரமோ அல்லது மாநிலத்தைக் கட்டுப்படுத்தும் அதிகாரமோ முற்றிலுமாக மத்திய அரசின் கையில் இல்லை. அதே நேரத்தில் மாநிலங்களுக்கிடையேயான நீரைப் பகிர்ந்து கொள்வதன் மேற்பார்வை மற்றும் நீரைப் பகிர்ந்து கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டால் மத்திய அரசு என்ன முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வரையறைகள் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால் பெரும்பாலான நேரங்களில் இதுவரை ஆண்ட அனைத்து மத்திய அரசும் இப்பிரச்சினையை நேர்மையாக அணுகவில்லை என்பது வருத்தத்திற்கும் கண்டனத்திற்கும் உரியதாகும். இதுவே உச்ச நீதி மன்றத்திற்கும் பொருந்தும். நடுவர் தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களாக இருந்தும் மாநில அரசு தனது உரிமையைப் பயன்படுத்தி சில அவசரச் சட்டங்களைப் போடுவதை அவர்களால் நேரடியாகக் கேள்வி எழுப்ப இயலவில்லை. அதேவேளையில் நடுவர் தீர்ப்பாயத்தில் எத்தகைய ஆய்வை மேற்கொண்டு குறிப்பிட்ட அளவு நீரை, குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு வழங்க வேண்டும் என்று சட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டாலும், பருவ நிலை மாற்றங்கள், மழை குறைவாக பெய்தல் போன்ற பல்வேறு காரணிகளால், அவ்வுத்தரவைப் பல வருடங்களுக்குப் பின்பற்ற வேண்டும் என்ற உத்தரவுகளை ஏற்க இயலாது என்பது போன்ற மாநில அரசின் கோரிக்கைகளையும், வழக்குகளையும் முற்றிலுமாக நிராகரிக்க இயலவில்லை. தண்ணீர் கிடைக்காத மாநிலம் தன் தரப்பு நீதி கேட்டு வழக்குகளைப் போடுகிறது. இவ்வாறாக இந்தியாவில் மாநிலங்களுக்கிடையேயான நதிநீர்ப்பங்கீட்டுப் பிரச்சினை அரசியல் பிரச்சினையாகி, தற்போது மாநில விவசாயிகளின் உணர்வுப் பிரச்சினையாகவும் மாறியுள்ளது.

மாநில அரசின் கீழ் இருக்கும் அதிகார வரம்புகளில் ‘நீர்’ 17வதாக இடம்பெறுகிறது.

Water is a state subject as per constitution of India and Union’s role comes into only in the case of inter- state river waters.

The State List of the Seventh Schedule has the following as Entry 17:

“Water, that is to say, water supplies, irrigation and canals, drainage and embankments, water storage and water power”

17ல் (Entry 17) நீர் மாநில அரசின் அதிகார வரம்பிற்குள் வருவதால் குடிநீர் வழங்கல், விவசாயத்திற்கு வழங்கல், கால்வாய், வடிகால், நீர்த்தேக்கம், புனல் மின்சாரம் உள்ளிட்டவைகளில் முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது. அது தொடர்பான சட்டங்களையும் மாநில அரசு இயற்ற இயலும். இதைத்தான் கர்நாடகா பயன்படுத்துகிறது. தனது மாநிலத்தின் வேளாண்மையைப் பெருக்கும் வகையில் பல நீர்த்தேக்கங்களை, வடிகால்களை அமைக்கும் உரிமை தனக்குள்ளது என்ற அடிப்படையில்தான் கர்நாடகாவில் விவசாய நிலங்களைப் பெருக்கிக் கொண்டு சென்றது. 1970 லிருந்து 1990 வரை நடுவர் தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்காமல் போனதும் முக்கியக் காரணம்.

1928ல், காவிரி, இப்போதைய கர்நாடகத்தின் 1.1 கோடி ஏக்கர் விவசாய நிலங்களுக்கும், இப்போதைய தமிழ்நாட்டின் 14.5 கோடி ஏக்கர் நிலங்களுக்கும் பாசனவசதி அளித்து வந்தது. 1971ல் இடைவெளி மேலும் அதிகரித்தது. புள்ளிவிவரப்படி, கர்நாடகத்தில் 4.4 கோடி ஏக்கரும், தமிழ்நாட்டில் 25.3 கோடி ஏக்கரும் பாசன வசதி பெற்றன. எனினும், இருபதாம் நுற்றாண்டின் இறுதியில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி கர்நாடகாவில் 21.3 கோடி ஏக்கர் அளவிற்கும், தமிழ்நாட்டில் 25.8 ஏக்கரில் பாசன வசதி உள்ளது.

கர்நாடகாவின் இந்த மகத்தான பாசன வசதி விஸ்தரிப்பு மாண்டியா மற்றும் மைசூர் விவசாயிகளுக்கு அதிகப் பொருள் வளத்தை ஈட்டித் தந்தது. இப்போது கர்நாடகாவில் இரண்டு, மூன்று போகம் நெல், கரும்பு சாகுபடிகளைச் செய்கிறார்கள்.

1970, 1980களில் இரு மாநிலங்களுக்கும் சமரசமாக ஏற்கக்கூடிய வகையிலான காவிரி நதிநீர்ப்பங்கீட்டை முடிவு செய்ய மத்திய அரசு பல்வேறு கூட்டங்களைக் கூட்டியது. இக்காலக்கட்டத்தில் 26 முறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. தமிழ்நாடு, மேல் பகுதியில் விரைவான கால்வாய் அமைக்கும் பணிகள், தம் மாநில விவசாயிகளைப் பாதிக்கும் என்று அஞ்சியது. அதேபோல கர்நாடகம், ஏற்கெனவே காலம் தாழ்த்தி விட்டோம். காலம் கடந்து ஆரம்பித்ததால், தம் மாநிலத்தின் பாசன வசதி மேம்பாடு, எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது என்று வாதிட்டது. அதை உறுதிப்படுத்த மாநில அதிகார வரம்பில் நீர் இருப்பதால், அதைப் பயன்படுத்தியே பாசன வசதியை மேம்படுத்திக் கொண்டது. கூடுதலாக தேவையான கால்வாய்கள், வடிகால்களை அமைத்தது.

மத்திய அரசின் கீழ் இருக்கும் அதிகார வரம்புகளில் ‘நீர் மேலாண்மை’ 56வதாக இடம்பெறுகிறது.

Entry 56 of List I (Union list), reads as follows:

“Regulation and development of inter- state rivers and river valleys to the extent to which such regulation and development under the control of the Union, is declared by Parliament by law to be expedient in the public interest”.

பிரிவு 56, பல்வேறு மாநிலங்களுக்கிடையே பாயும் ஆறுகள், ஆற்றுப் பள்ளத்தாக்குகளை மேம்படுத்துவது, அவற்றை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளைக் கண்காணிப்பது உள்ளிட்ட பல்வேறு மாநில மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் அதிகாரத்தைத் தருகிறது.

மாநிலங்களுக்கிடையே நதி நீர்ப்பங்கீட்டால் ஏற்படப்போகும் பிரச்சினைகளை உணர்ந்த மத்திய அரசு சட்டப் பிரிவு 262ல் இதுபற்றிப் பேசுகிறது. இதற்குத் தேவையான ஒழுங்கு முறை வாரியம், நடுவர் தீர்ப்பாயம் போன்ற குழுக்களை அமைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்று வரையறுக்கப்பட்டது. மேலும் சட்டப் பிரிவு 262ன் படி இரு சட்டங்களை உருவாக்கியது.

River Board Act 1956:

பல்வேறு மாநிலங்களுக்கிடையே பாயும் நதிகள் மற்றும் ஆற்றுப் பள்ளத்தாக்குகளின் மேம்பாடுகளைக் கணக்கில்கொண்டு, மாநிலங்களுடன் கலந்தாலோசனை செய்து, வாரியம் அமைக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு உண்டு. மேலும் பிரச்சினைகளைத் தவிர்க்க மேலாண்மை வாரியம் அல்லது நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்.

இந்தச் சட்டப்பிரிவைப் பயன்படுத்தி இதுவரையிலும் எந்த மத்திய அரசும் காவிரி மேலாண்மை வாரியத்தை (No River Board) அமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


 Inter-State Water Dispute Act, 1956:

மாநிலங்களுக்கிடையே ஏற்படும் நதிநீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையைத் தீர்க்க மாநிலங்களுடன் கலந்தாலோசனை செய்து பிரச்சினையைத் தீர்க்க முயல வேண்டும். அவ்வாறு முயற்சித்தும் பிரச்சினையைத் தீர்க்க இயலவில்லையெனில், நடுவர் தீர்ப்பாயம் அல்லது நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்.

குறிப்பு: உச்சநீதி மன்றம் தீர்ப்பாயம் கொடுக்கும் அளவு பற்றி கேள்வி கேட்கக் கூடாது அல்லது தீர்ப்பாயம் நீரின் அளவை எதனடிப்படையில் அடைந்தது என்ற கேள்விகளைக் கேட்க முடியாது. ஆனால், அது வேலை செய்யும் முறையைக் கேள்வி கேட்கும் அதிகாரம் உண்டு.


காவிரிப் பிரச்சினையின் உண்மை நிலவரம்

காவிரி நதிநீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையில் 1974ம் ஆண்டிலிருந்தே தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்கவில்லை. எம்ஜிஆர் 1974ல் ஒப்பந்தம் முடிவிற்கு வந்ததை அடுத்து உச்சநீதி மன்றத்தை அணுகினார். பின்னர் இந்திராவின் கோரிக்கையை ஏற்று வழக்கை திரும்பப்பெற்றுக் கொண்டது தமிழக அரசு. ஆனால், நடுவர் தீர்ப்பாயம் அமைக்க கர்நாடகம் தெரிவித்த கடும் எதிர்ப்பை மட்டும் கருத்திற்கொண்டு உடன்பாடு எட்டப்படாததால் நடுவர் தீர்ப்பாயக் குழுவை அமைக்காமல் காலம் கடத்தி வந்தது. இதனால் மீண்டும் தமிழ்நாடு 1986ல் உச்சநீதி மன்றத்தை அணுகியது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல நடுவர் தீர்ப்பாயக் குழு அமைக்கப்பட்டதும், அதன் இடைக்கால உத்தரவாக 25-06-1991ல் 205 டிஎம்சி நீரை வழங்க வேண்டும் என்ற உத்தரவை முழுமையாக கர்நாடகா நிறைவேற்றவில்லை.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் (05-02-2007) வழங்கப்பட்ட 192 டிஎம்சி தண்ணீரையும் கர்நாடகா தொடர்ச்சியாக வழங்கியது கிடையாது. இதை எதிர்த்தும் இரு மாநில அரசுகளும் சிறப்பு மனுவை (Special Leave Petition) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தன. கூடவே கேரளாவும், புதுச்சேரியும் கூடத் தம்மையும் வழக்கில் இணைத்துக் கொண்டன. அதன் இறுதித் தீர்ப்பு 16-02-2018ல் வந்தபோது 192 டிஎம்சியிலிருந்து 14.75 டிஎம்சி-ஐக் குறைத்து தமிழகத்திற்கு 174.75 டிஎம்சி அளவு வழங்க வேண்டும் என்ற உத்தரவைப் பிறப்பித்துள்ளது. கடந்த ஆண்டு கூட உச்சநீதி மன்றம் வலியுறுத்தியும் பாராளுமன்றத்தில் இதுபற்றி விவாதித்து புதிய சட்ட வரைவுடன்தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும், உச்சநீதி மன்றம் விடுத்த நான்கு வாரங்களுக்குள் அமைக்க இயலாது என்று மத்திய அரசு தெரிவித்தது ஞாபகமிருக்கலாம். சட்ட ரீதியாக சரி என்றால் கூட தமிழகம்தான் இதனால் இழப்புக்குள்ளாகி உள்ளது.

இந்தத் தீர்ப்பைக் கர்நாடகா 14 ஆண்டுகளுக்கும் ஏற்றுச் செயல்படும் என்று நம்ப இடமில்லை.

உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதால் மழை மற்றும் அணையின் கொள்ளளவைப் பொறுத்துக் குறைந்தபட்சம் ஆண்டுதோறும் நீரின் அளவை முன்வைக்கும். மேலும் உபரி ஆறுகளிலிருந்து காவிரியில் கலக்கும் நீரையும் கணக்கில் கொண்டு வெளியிடப்படும் நீரின் அளவைத் தீர்மானிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தில் நான்கு மாநிலத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள், துறை சார்ந்த வல்லுநர் குழு, தொழில்நுட்பக் குழு மற்றும் அதன் தலைமைப் பொறுப்பை வகிக்கும் நீதிபதி குழு அறிக்கையை சமர்ப்பிப்பதன் மூலம் மாநிலங்களுக்கிடையே எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நீரைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்பதே, மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பவர்களின் கோரிக்கையாக உள்ளது. மேலாண்மை வாரியத்தின் முடிவை ஏற்று கர்நாடகமும் தமிழகமும் செயல்பட வேண்டும். குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு ஒருமுறை இதன் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை மாற்ற வேண்டும். குழுவைக் கூடச் சில ஆண்டுகளில் மாற்ற வேண்டும். தனி அமைப்பாக சுதந்திரமாக செயல்படும் மேலாண்மை வாரியமாக அமைக்கப்பட வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டால் கூட, ஆண்டுதோறும் நீரின் அளவைக் குறைக்கச் சொன்னாலோ அதிகரிக்கச் சொன்னாலோ, இரு மாநிலங்களில் ஏதோ ஒரு மாநிலம் உச்சநீதி மன்றத்தை அணுகி வழக்கு தொடரும் என்றே அனுமானிக்கிறேன். தனக்கு எதிரான எந்த முடிவை மேலாண்மை வாரியம் எடுத்தாலும் அதையே அரசியல் பிரச்சினையாக்கி மாநில அரசுகள் முன்னெடுத்துச் செல்லும். ஆயினும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது ஒன்றே தற்போதைக்கு மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு செய்யும் நற்செயலாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.


வஞ்சிக்கப்படும் தமிழகம்

மூன்று விஷயங்களில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டிருக்கிறது.

இன்று வரையிலும் தொடர்ச்சியாக ஆட்சியிலிருந்த மத்திய அரசு காவிரிப் பிரச்சினையை நேர்மையாக அணுகவில்லை. மேலும் குறிப்பிட்ட கால அளவுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை.

கர்நாடகாவின் காவிரிப் பாசனப்படுகையில் விவசாயம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் இருக்கக்கூடாது என்ற சட்ட உத்தரவும் போட இயலாத காரணத்தால் தமிழகம் இன்று பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இதனால் திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் குறைகிறது.

பருவ மாற்றங்களால் ஏற்படும் வெப்பம், கர்நாடகாவில் பெய்யும் மழையின் அளவுக் குறைவு போன்ற காரணங்களாலும் தமிழகத்திற்குக் கொடுக்கவேண்டிய குறிப்பிட்ட அளவிலான நீர் வர இயலாமல் போகிறது.


கர்நாடக தரப்பின் வாதங்கள்

மத்திய நீர் கமிட்டி (Central Water Commission), 1971- 2004 வரையிலான காலக்கட்டத்தில் பெய்த மழை பற்றிய ஓர் ஆய்வை மேற்கொண்டது. அது காவிரிப் படுகையில் மழையின் அளவு குறைந்து வருகிறது எனத் தெரிவித்தது. இந்தியன் இன்ஸ்டிடுயுட் ஆப் சயின்ஸ் மேற்கொண்ட ஆய்விலும் பருவ நிலை மாற்றங்களால் காவிரிப்படுகையில் மழையின் அளவு குறைந்து வருகிறது என்று தெரிவித்தது. குடகு பகுதியிலும் மழையின் அளவு குறைந்து வருவதாகவும் தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காவிரி நீர்ப்பிரச்சினை வாரியம் (CWDT- Cauvery Water Dispute Tribunal ) 205 டிஎம்சி வழங்கச் சொல்லி இருந்தது. ஆனால் மழையில்லாக் காலக்கட்டத்திலோ, தண்ணீர் வரத்து குறைவாக இருக்கும் மாநிலங்களில் எந்த அளவு நீர் வழங்க வேண்டும், அதை எவ்வாறு கணக்கிடுவது என்ற தெளிவை முன்வைக்கவில்லை. ஏனெனில் காவிரி மேலாண்மை வாரியம் இன்று வரையிலும் அமைக்கப்படவில்லை. கர்நாடகாவில் உள்ள விவசாயிகளின் நலன், 95-96, 2003-2004 மற்றும் சில வருடங்களில் பெய்த குறைந்த மழையைக் காரணம் காட்டியது கர்நாடகம். அதே வேளையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவும் எதிர்ப்பு தெரிவித்தது.

விவசாயம், மின்சாரம் ஆகியவற்றைக் கொடுக்கும் கடமை தனக்குள்ளது என்ற வாதங்களை தன் தரப்பிலிருந்து முன்வைத்தது கர்நாடகம்.

மத்திய அரசின் அலட்சியம்

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பில் (05-02-2007) 192 டிஎம்சி தண்ணீரைத் தமிழகத்திற்கு வழங்க உத்தரவிட்டிருந்தது. காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில் வரும் தண்ணீரை நான்கு மாநிலங்களிடையே ஒவ்வொரு மாதமும் (ஏன் ஒவ்வொரு 10 நாட்களுக்கும்) பிரித்து வழங்கும் பொறுப்பும் அதிகாரமும் காவிரி மேலாண்மை வாரியம் என்ற அமைப்புக்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு வழிகாட்டி நெறிமுறைகளை / அறிவுரை வழங்குவதற்காக காவிரி ஒழுங்குமுறை குழு என்ற ஒரு அமைப்பும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்த இரு அமைப்புகளையும் அரசிதழில் இறுதித் தீர்ப்பு வெளியிட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் மத்திய அரசு நியமித்திருக்க வேண்டும். (மே 18, 2013க்குள்) ஆனால், எப்போதும்போல் காங்கிரஸ் அரசு காலம் தாழ்த்தியது. இதையடுத்து, கடந்த 08-04-2013ல் மீண்டும் உச்ச நீதிமன்றத்தின் கதவுகளை தமிழக அரசு தட்டியது. ஆனால், 10-05-2013ல் உச்ச நீதிமன்றமும் (காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை ஓரங்கட்டும் வகையில் அதன் அரசியல் சட்ட அமைப்புகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் எந்தவித முகாந்திரமும் இன்றி) காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட மத்திய அரசுக்குக் காலக்கெடுவும் அறிவுறுத்தலும் செய்யாமல் அதிகாரமற்ற காவிரி மேற்பார்வைக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. இந்தக் குழுவும், கண்துடைப்பு நாடகமாக கடந்த 2013 ஜூன் 1, 12ல் கூடியது. ஆனால், எந்த முடிவும் எடுக்காமல் கலைந்தது.

2016 செப்டம்பரில் மீண்டும் உச்சநீதி மன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை நான்கு வாரங்களுக்குள் அமைக்கச் சொல்லி மத்திய அரசிற்கு உத்தரவிட்டது. மத்திய அரசு பாராளுமன்றத்தில் கலந்துகொண்டே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கால தாமதம் செய்தது. அதன் பின்னர் தற்போதைய மத்திய அரசு ‘Inter-State River Water Disputes (Amendment) Bill 2017’ கடந்த ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தது. இந்த சட்ட மசோதா நதிநீர்ப்பங்கீட்டுப் பிரச்சினையை அணுகும் விதத்தில் சற்றுக் கடுமையான வழிவகைகளை முன்வைத்துள்ளது. இது முக்கியமான முன்னகர்வுதான் என்றபோதிலும் அது எந்தளவுக்கு நடைமுறையில் செயல்படப் போகிறது என்ற ஐயமும் உள்ளது. ஏனெனில் கடந்த கால வரலாறு அவ்வாறாக இருப்பதே இதற்குக் காரணம்.

தற்போதைய மத்திய அரசு அறிமுகப்படுத்தும் இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

சட்டம் 1956 படி, பிரச்சினை ஏற்பட்டால் மட்டுமே தீர்ப்பாயம் அமைக்கப்படும் என்று இருந்தது. மேலும், குறிப்பிட்ட கால அளவுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது கொண்டு வருகிற சட்டத்தில், தற்காலிகமாகவோ அல்லது பிரச்சினை காலத்திற்கு மட்டுமே என்றில்லாமல் நிலையாக ஒரு ஒழுங்குமுறைக்குழு (permanent Inter-State River Water Disputes Tribunal (ISRWDT) அமைக்கப்படும் என்கிறது. மேலும் அதிகபட்சமாக ஐந்தரை ஆண்டுகளுக்குள் தமது அறிக்கையைக் குழு வல்லுநர்களின் உதவியோடு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது. உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி உட்பட்ட எட்டு உயர்நீதி மன்ற நீதிபதிகளைக் கொண்ட குழுவின் முன்பாக மூன்று பேர் கொண்ட தீர்ப்பாயக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றும் தெரிவிக்கிறது. மேலும் அவர்களின் பதவிக் காலம் 70 வயது என்ற உச்சவரம்பையும் புதிய சட்டத்தில் சமர்ப்பித்துள்ளது.

2017ல் சமர்பிக்கப்பட்ட சட்ட மசோதாவில், பிரச்சினையைத் தீர்க்கும் குழு (DRC-Dispute Resolution Committee ) அமைக்கப்படும் என்றும் அது துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டதாக இருக்குமென்றும் தெரிவிக்கிறது. துறை சார்ந்த நிபுணர்கள் மாநிலங்களின் கோரிக்கைகள், தண்ணீரின் அளவு, மழையின் அளவு என பல்வேறு விஷயங்களைத் தொகுத்து தீர்ப்பாயத்திற்கு வழங்குவார்கள் என்கிறது.

மத்திய அரசே அதற்கான குழுவை அமைக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதை எந்த அளவிற்கு மாநில அரசுகள் ஏற்கும் என்பது தெரியவில்லை. புள்ளிவிவரங்களைத் தொகுப்பதோ, உண்மை நிலவரத்தைத் தொகுத்து வழங்குவதோ இங்குப் பிரச்சினையல்ல. உண்மையில் தண்ணீரைத் திறந்துவிடும் இடத்திலுள்ள மாநில அரசும், தண்ணீரைக் கோரும் மாநில அரசும் எப்படி அணுகும் என்பதே பிரச்சினை.

இதற்குக் கடந்த காலத்தில் பல உதாரணங்கள் உண்டு. ஒவ்வொரு முறையும் காவிரி விஷயத்தில் தமிழ்நாடு அதிக அளவிலான டிஎம்சி நீரைக் கோருவதும், கர்நாடகா குறைந்த அளவைத் தர இயலும் என்று சொல்வதும் நாம் பார்த்ததே. இரு தரப்பிலும் அடுத்தவர் தரப்பின் நியாயங்களை உணர்ந்து செயல்படுவதில்லை. அதைத் தடுக்க வேண்டிய இடத்திலுள்ள மத்திய அரசோ காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதில் கால தாமதம் செய்கிறது.


காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வுதான் என்ன?

காவிரிப் பிரச்சினையின் மையப்புள்ளி, நீரின் இருப்பைக் காட்டிலும் தேவையின் அளவு அதிகமாக இரு தரப்புக்கும் இருக்கிறது. இப்பிரச்சினையை மாநிலங்கள் பரந்த மனப்பான்மையுடன், வெளிப்படைத் தன்மையுடன், ஜனநாயக முறையை மதித்தும், துறை சார்ந்த நிபுணர்களின் பங்களிப்புடன் ஒரு முறையான சட்ட வடிவை மதித்து நடப்பதே இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை விரைவில் அமைக்க வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியமும் நீர்ப்பிரச்சினை தீர்க்கும் குழுவும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத வகையில் தனி அமைப்பாகச் செயல்படும் சுதந்திரம் வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் நீரின் அளவைப் பொறுத்தும், மழையின் தன்மையைப் பொறுத்தும் விடக்கூடிய நீரின் அளவை ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் பரிசீலனை செய்ய வேண்டும். பல்வேறு மாநிலங்களுக்கிடையே செல்லும் நதிகள் தேசியச் சொத்து என்ற உச்சநீதி மன்றத்தின் கூற்றை நிருபிக்க கர்நாடகாவின் தலையீடு நீர் வெளியிடுவதில் இருக்கக் கூடாது.

அரசியல் சட்ட வரைவில் மாநிலங்கள் கூடுதல் நிலங்களை விவசாயத்திற்குப் பயன்படுத்துவது பற்றிய ஒப்பந்தங்கள் இருக்க வேண்டும்.

இரு மாநிலத்திலும் பெரும்பாலும் நெல் மற்றும் கரும்பே அதிக அளவில் பயிரிடப்படுகிறது. இதற்கு ஆகும் நீரின் அளவு மற்ற பயிர்களையோ தானியங்களையோ ஒப்பிடும் போது மிக அதிகமாகச் செலவாகிறது. இரு மாநில விவசாயிகளையும் இரு போகங்களில் மாற்றுப் பயிர்களை பயிரிட வைப்பதன் மூலமாக விவசாயத்தையும் காப்பாற்றலாம். விவசாயிகளின் பிரச்சினையும் குறையும். ஆனால் அத்தகைய முன்னெடுப்புகளை எந்தத் தரப்பும் செய்வதில்லை என்பது சோகமான செய்திதான்.

மத்திய அரசு, மாநில அரசு, உச்சநீதி மன்றம் போன்றவை காவிரி மேலாண்மை கூறிய விஷயங்களை ஏற்று நடக்க மட்டுமே அறிவுறுத்தப்பட வேண்டும். அவ்வாறு முன்வைக்கும் தீர்வு நடைமுறையில் செயல்படுத்தக்கூடியதாகவும், நீண்ட காலத்திற்குப் பொருந்தக் கூடியதாகவும் இருக்க வேண்டும். மாறாக மத்திய அரசு நிலையான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் சென்றால் அது இன்னும் பிரச்சினையைப் பெரிது படுத்துமே ஒழிய தீர்வை நோக்கி நகராது.

மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு காரணத்தை முன்வைத்து கர்நாடகமோ தமிழகமோ இதை அரசியலாக்கும் வகையில் செயல்படும் பட்சத்தில் காவிரிப் நீர்ப்பங்கீட்டுப் பிரச்சினை தீராப்பிரச்சினைதான்.

உதவியவை:

https://interstatedisputes.wordpress.com/2013/10/06/case-study-cauvery-river-water-sharing-dispute/ | https://www.clearias.com/inter-state-river-water-disputes-india/ | http://www.livemint.com/Opinion/JDRZ3dpZdFPes9qiULWUgO/Addressing-Indias-water-dispute-problem.html | https://interstatedisputes.wordpress.com/ | https://sandrp.wordpress.com/2016/10/06/inter-state-river-water-disputes-in-india-history-and-status/ | http://tamil.thehindu.com/tamilnadu/article22771035.ece?homepage=true | http://tamil.thehindu.com/tamilnadu/article22771035.ece?homepage=true | http://tamil.thehindu.com/india/article22781477.ece | http://www.prsindia.org/uploads/media/Inter-state%20river%20water%20dispute/SCR-%20Inter-State%20River%20Water%20Disputes(A)%20Bill,%202017.pdf | http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=164541

Leave a Reply