Posted on Leave a comment

ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி (1935-2018) | ஆங்கில மூலம்: அரவிந்தன் நீலகண்டன், தமிழில்: ஓகை நடராஜன்

தமிழ்நாட்டில் நேரடி அரசியல் சாராத முக்கியஸ்தர்களில் காஞ்சி காமகோடி மடத்தின் மடாதிபதிகளை நிச்சயம் சொல்லவேண்டும். சென்ற நூற்றாண்டில் ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி அவர்களின் சமுதாயப் பங்களிப்பு எந்த அளவில் இருந்தது என்பதை நாம் அறிவோம். அந்த அளவுக்கு இல்லாவிட்டாலும் அண்மையில் முக்தி அடைந்த ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்களின் சமுதாயப் பங்களிப்பு சமூகத்தின் ஆன்மிகம் சாராத தளங்களிலும் இருந்ததையும் நாம் அறிவோம். வரும் காலங்களிலும் அந்த மடத்தின் பங்களிப்பு எத்தன்மையில் இருக்கப் போகிறது என்பதையும் நாம் காணப்போகிறோம். ஶ்ரீ ஜெயேந்திரர் முக்தியை ஒட்டி வந்த பல கட்டுரைகளில் சற்றே வேறுபட்ட ஒரு கட்டுரையாக அரவிந்தன் நீலகண்டன் சுவராஜ்யா ஆங்கில இதழில் எழுதிய கட்டுரை அமைந்திருந்தது. அதன் தமிழாக்கத்தை கீழே தந்திருக்கிறேன்.


– மொழிபெயர்ப்பாளர்

நன்றி: https://swarajyamag.com/ideas/sri-jayendra-saraswathi-1935-2018

ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி அவர்களை நினைவுகூர்கிறேன். முதலில் அவர் எனது ஊரான நாகர்கோவிலுக்கு 1982ம் ஆண்டில் மண்டைக்காடு கலவரத்துக்குப் பிறகு வருகை தந்தது நினைவுக்கு வருகிறது. அப்போது கன்னியாகுமரி மாவட்ட இந்துக்கள் பயத்திலும் கலவரச் சூழலிலும் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். எப்போதெல்லாம் மாதாக்கோவில் மணி அடிக்கிறதோ அப்போதெல்லாம் ஒரு கும்பல் கூடி இந்துக் கிராமங்களின் மீது தாக்குதல் தொடுக்கும். இது, பின்னர் நிகழ்ந்த இந்துக்களுக்கு எதிரான தொடர் வெறுப்புப் பிரசாரத்துக்கும், இந்துக் கிராமங்களையும் நகரங்களையும் பெயர்மாற்றம் செய்யும் முயற்சிக்கும் முன்பாக நடந்த ஒன்று. கிறித்துவப் பாதிரியார்கள் அரசுக்கும் மீறிய அதிகாரத்துடன் நடந்துகொண்டிருந்தார்கள். கன்னியாகுமரி என்ற பெயரைக் கூட கன்னிமேரி என்று மாற்ற முயற்சித்தார்கள். இந்த நிலையில் பாரம்பரிய இந்துமதத் தலைவர்கள் யாரும் வரவில்லை. திராவிடக்காரர்களுக்கு நெருக்கமான குன்றக்குடி அடிகளார் பாதிரிமார்களைச் சந்தித்துவிட்டு அமைதி என்ற பெயரில் கிட்டத்தட்ட ஒரு கிறித்துவ ஆதரவாளரைப் போலப் பேசிவிட்டுச் சென்றார். அவர் இந்துக்களின் அவலக் குரலைக் கேட்கக் கூட மறுத்துவிட்டார்.

இந்த நிலைமையில்தான் அப்போது காஞ்சி மடத்தின் இளைய மடாதிபதியாக இருந்த ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி, எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு வந்தார். தம் சொந்த மாவட்டத்திலேயே அகதிகள் போல் கலக்கமடைந்திருந்த இந்துக்களைச் சந்தித்தார். மணிக்கணக்கில் அவர்களுடன் பேசினார். இந்துக்களின் பல ஜாதித் தலைவர்களிடம் பேசினார். அவர்களில் பலர் பிராமணர்கள் அல்ல. இதன் முக்கியத்துவம் அப்போது பதிவாகியிருக்கவில்லை. நாங்கள் என்ன உணர்ந்தோமென்றால், வெளிநாட்டுப் பண உதவியால் எங்களை ஆக்கிரமித்துச் சூறையாடும் சக்திகளிடம் நாங்கள் தனியாக விடப்படவில்லை; எங்கள் இந்துமத குருமார்கள் எங்களுக்காக வந்து நிற்பார்கள் என்று உணர்ந்தோம். அதிலிருந்து காஞ்சி மடம், அவரின் வழிகாட்டலோடு எங்கள் மாவட்டத்தில் பல இந்து நடவடிக்கைகளுக்குத் துணை நின்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் எங்களுக்கு ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஒளிவிளக்காகத் திகழ்ந்தார். அதன் பிறகு நான் வளர்ந்தபோது ஶ்ரீ ராமகிருஷ்ண-விவேகானந்த அத்வைதத்துடனும் தேவ்ரஸ் அவர்களின் இந்துத்துவத்துடனும் காஞ்சி மடம் அவ்வளவாகப் பொருந்தி வரவில்லை என்பதைப் புரிந்துகொள்ள ஆரம்பித்தேன்.

ஆம், 70-80களில் கன்னியாகுமரியில் வளர்ந்த ஒரு சராசரி ஹிந்து மனத்தில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி மதிப்புடனும் விமர்சனத்துடனும் கூடிய ஒரு பிம்பமாக இருப்பார். அவருடைய சிற்சில பின்னடைவுகளுக்காக அல்லாமல், எல்லோரையும் அரவணைக்கும் இந்துப் பார்வையை முன்னெடுக்கத் துணிச்சலுடன் முயற்சித்ததற்காக நினைவுகூரப்படுவார். ஒட்டுமொத்த இந்துமதத் தலைவர்களும் ஒதுங்கி அமைதி காத்த சமயத்தில் அவர் எங்கள் பக்கம் நின்றார். ஓர் ஒட்டுமொத்த இந்துக் குடும்பத்தை உருவாக்கும் முயற்சியில் அவர் எந்த அளவுக்கு வெற்றிபெற்றார் என்பதைக் காலம்தான் சொல்லவேண்டும்.

அவர் மீதான குற்றச்சாட்டுகள், கிறித்துவ மிஷினரிகளின் சதியா அல்லது அகம்பிடித்த ஆட்சியாளரின் ஈகோவா அல்லது பிராமண வெறுப்புக்காகச் சேற்றைப் பூசும் ஊடகங்கள் செய்யும் அரசியல் பழிவாங்கலா என்பதை வருங்காலச் சந்ததி அறிந்துகொள்ளும். அவர் மீதான வெறுப்புப் பிரச்சாரத்துக்கு எடுத்துக்காட்டாக ஒன்றைச் சொல்லலாம். மத்திய அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் ஶ்ரீ ஜெயேந்திரர் முன் தரையில் அமர்ந்திருப்பதைக் காட்டும் ஒரு புகைப்படத்துடன் கூடிய கேலிப்படம் (Meme). இந்த மீமில், அமைச்சராக இருந்தாலும் ஒரு சூத்திரர் ஒரு பிராமணரின்முன் தரையில்தான் அமர வேண்டும் என்ற பிரசாரம் இருக்கும். அதே நேரத்தில், உருக்கமாகப் பாடும் இசைஞானி இளையராஜாவும், அந்தப் பாட்டை கேட்டு நெகிழும் ஜெயேந்திரரும் இணையாக நாற்காலிகளில் அமர்ந்திருப்பது போல ஒரு காணொளி இருக்கிறது. மதிப்பிற்குரியவர் முன் தரையில் அமர்ந்தால் அது ஜாதி காரணமாகத்தான் இருக்கவேண்டும் என்ற தவறான கருத்துருவாக்கத்தை அந்தக் கருத்துப்படத்தைச் செய்தவர்கள் முன்வைக்கிறார்கள். தமிழ்நாட்டின் வெறுப்பு மிகுந்த பொய்யான கருத்துப்பட மனநிலையை அந்தக் காணொளி வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

2004க்குப் பிறகு தமிழக ஊடக வரலாற்றில் அதிகம் வசைபாடப்பட்டவராக ஜெயேந்திரரே இருந்தார். எவரும் எதை வேண்டுமானாலும் அவரைப் பற்றி எழுதிவிடலாம். இதே மாநிலத்தில்தான் ஒரு காட்டுமரக் கடத்தல்காரரை, கொலைகாரரை, கொள்ளைக்காரரைக் குற்றவாளி என்று நீங்கள் எளிதாகக் கூறிவிடமுடியாது; சில அரசியல் வட்டங்களிலிருந்து வசைகள் வரும். ஜெயேந்திரர் மீது எல்லாவிதமான குற்றச்சாட்டுகளும் இருந்தன. அந்தக் குற்றச்சாட்டுகளில் உண்மை இருந்தால் அவர் தர்மத்திலிருந்து தவறியவர் ஆவார். ஆனால் அக்குற்றச்சாட்டுகள் தவறாக இருந்தாலோ மிகப்பெரிய அநீதி அவருக்கு இழைக்கப்படுகிறது.

இப்போது ஜெயேந்திரர் பேரமைதியில் ஆழ்ந்துவிட்ட நிலையில் இந்தியாவிலும் அயல்நாட்டிலும் தாழ்த்தப்பட்ட மக்களை அணுகுவதற்கு அவர் செய்த முயற்சிகளை நினைவு கூர்வோம். இந்த விஷயத்தில் அவர் பாரம்பரிய வழக்கங்களுக்கு மாறாகக் கூடச் செயல்படத் தயாராக இருந்தார். அதை அவருடைய சம்பிரதாயப் பூர்வமான வட்டங்களில் இருந்துகொண்டே செய்தது மிகவும் துணிச்சலான செயல். காந்தி அம்பேத்கர் பூனா ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இதற்கு முன்பிருந்த காஞ்சி மடாதிபதி சென்னையிலும் கேரளாவிலும் பட்டியலின மக்கள் ஆலயங்களில் நுழைவதை வன்மையாக எதிர்த்தார். ஆனால் சில பத்தாண்டுகளுக்குப் பிறகு ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி, பல ஜாதிகளிலிருந்தும் உருவான, ஶ்ரீ தந்த்ர வித்யாபீடத்தில் பயிற்சி பெற்ற கேரளப் பூசாரிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். இன்றைக்கு கேரளத்தில் எல்லா ஜாதிகளிலிருந்தும் நாம் பூசாரிகளைக் காண்கிறோம் என்றால் அதற்கு அந்த மாநில முதலமைச்சர் பினரயி விஜயனை விடவும் மிகவும் அதிகம் பங்களித்தவர் ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதிதான் என்பதை நாம் அறிந்துகொள்ளவேண்டும். தலித்துகளுக்கான இந்திய வணிக மற்றும் தொழில் மையம் (Dalit Indian Chamber of Commerce and Industry -DICCI) ஆரம்பிப்பதற்கு வெகு நாட்களுக்கு முன்னரே ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி, சமூக நல்லிணக்கத்துக்கான கருவியாக சுயதொழில் முன்னேற்றத்தைத் தன் தொலைநோக்குப் பார்வையாகக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றியிருந்த சுயநலமிகள் எந்த அளவுக்கு அவரை இந்த புதுமைச் சிந்தனைகளின்படி நடக்க விட்டிருப்பார்கள் என்பதை நாம் அனைவரின் யூகத்துக்கே விட்டுவிடலாம். ஆனால் முதன்மையான சில நகர்வுகளை இந்தத் திசையில் செய்யும் துணிச்சல் அவருக்கு இருந்தது.

இன்றைக்கு காஞ்சிமடம் ஒரு திருப்புமுனைப் புள்ளியில் நிற்கிறது. ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி, ஒரு துறவியின் தனிப்பட்ட வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் எனக் காட்டிச் சென்றார். அவருடைய சமூகக் கருத்துக்களை ஒருக்காலும் ஒப்புக் கொள்ளாதவர்கள் கூட மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட அவரது திறந்த, எளிய வாழ்க்கைக்காக அவர்மீது பெருமதிப்பு கொண்டிருந்தனர். ஶ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி, மடத்தின் மட்டுப்படுத்தப்பட்ட சமூகப் பார்வையிருந்து விலகி வருவதற்கான துணிச்சலைக் காண்பித்தார். அது ஒரு மிகத் துணிச்சலான, சற்று அபாயகரமான நகர்வும் கூட. முதுகில் குத்துபவர்கள், துரோகிகள், அதிகார துஷ்பிரயோகிகள் மற்றும் சூழ்ச்சிக்காரர்களின் வஞ்சக வலையில் அவர் தன்னை ஒப்புக்கொடுத்தார். ஆனால் இதையும் கூட நாம் பாரம்பரிய இந்து அமைப்புகள் நவீனத்தை நோக்கி நகர்வதாகவே எடுத்துக் கொள்ளவேண்டும். ஜெயேந்திரருடைய வருத்தங்களும் வலிகளும் அடுத்துவரும் மடாதிபதிக்குப் பாடமாக இருக்கவேண்டும்.

ஶ்ரீ சந்திரசேகர சரஸ்வதி அவர்களின் திறந்த எளிய ஆன்மிக வாழ்வையும் ஶ்ரீ ஜயெந்திர சரஸ்வதியின் ஒருங்கிணைந்த இந்துக்களின் முன்னேற்றத்துக்கான எண்ணங்களையும் ஶ்ரீ விஜயேந்திர சரஸ்வதி இணைக்கவேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

Leave a Reply