7) பசுமை நிறைந்த பாடல்
இந்திப் போராட்டத்தின் விளைவாக தமிழகத்தில் மாணவர்களின் உணர்வு கொதிநிலைக்குத் தூண்டப்பட்டது. காங்கிரஸ் தலைவர்கள்மீது சொல்லப்பட்ட பொய்யுரையான குற்றச்சாட்டுகளை இந்த மாணவர்கள் முன்னெடுத்துச் சென்றார்கள். அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்கிற கேள்வி அவர்கள் தரப்பிலிருந்து எழவில்லை.
முதலமைச்சராக இருந்த எம்.பக்தவத்சலம் மீது திமுகவினர் அடாத பழியொன்றைச் சுமத்தி அவரை ‘பத்து லட்சம் பக்தவத்சலம்’ என்று இழிவுபடுத்தினார்கள். சொந்தப் பணத்தைச் செலவழித்து தேசத்திற்காக உழைத்த குடும்பம் அவருடையது. பக்தவத்சலத்தின் மாமனார் முத்துரங்க முதலியார் சைமன் கமிஷனை எதிர்த்து ஊர்வலம் நடத்தியபோது போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தவர். ஆனால் இந்தத் தியாக வரலாறெல்லாம் அன்றைய மாணவர்களுக்குத் (எனக்கும்தான்) தெரியாது.
திரையுலகம் சார்ந்த விருப்பங்களும் மாணவர்களைப் பிளவுபடுத்தியிருந்தன. இதில் பெரும்பாலானவர்களின் ஆதரவு எம்ஜிஆருக்கு. சிவாஜியை ரசித்தவர்கள் சிறுபான்மையினர். இதற்கு ஒரு விதிவிலக்கு மட்டும் உண்டு.
இந்திய – சீனப் போரை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ரத்தத் திலகம். இதில் சிவாஜி கணேசன் கதாநாயகன். இந்தத் திரைப்படத்தில் ஒரு காட்சி, கல்லூரியிலிருந்து விடைபெறும் மாணவர்கள் பாடுவதாக அமைக்கப்பட்டிருந்தது. ‘பசுமை நிறைந்த நினைவுகளே…’ என்ற அந்தப் பாடல்தான் கல்விக்கூடங்களில் இருந்து விடைபெறும் மாணவர்களின் பாடலாக அங்கீகரிக்கப்பட்டது.
எங்கள் பள்ளியிலும் வெள்ளை துணிவிரித்த மேசையின் பின்னால் அமர்ந்துகொண்டு சமோசாவையும் காப்பியையும் சாப்பிட்டுக்கொண்டு கண்களில் கண்ணீரோடு ‘பசுமை நிறைந்த…’ பாடலோடு விடைபெற்றோம்.
*
நயினாவுக்கு பெங்களூரில் ஒரு டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் இருநூறு ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைத்தது. அவர் அங்கே தன்னுடைய தம்பி வீட்டில் தங்கிக்கொண்டு, 175 ரூபாயை அம்மாவுக்கு அனுப்புவார். அம்மாவும் தம்பிகளும் கோட்டூர் சேரியில் ஒரு வீட்டில் குடியேறினார்கள். கிராமத்தில் சகல சௌகரியங்களோடும் வாழ்ந்த அம்மா இந்த வீட்டில் மிகவும் சிரமப்பட்டார். வீட்டுக்குப் பின்புறம் கார்ப்பரேஷன் லாரிகள் குப்பை கொட்டும் இடம். ஒருபுறம் பக்கிங்ஹாம் கால்வாய். இன்னொரு பக்கம் அடையாறு ஓட்டம். வீட்டில் குடிநீர் கிடையாது. கொஞ்சதூரம் போய் குழாயில் அடித்துக் குடத்தைச் சுமந்துவர வேண்டும். இவ்வளவும் போதாதென்று அம்மாவுக்கு நிரந்தரமான சளி உபத்திரவம். பக்கத்து வீட்டுக்காரி ஒருத்தி அனாவசியமாக அம்மாவோடு சண்டை போட்டுக் கொண்டிருப்பாள். நான் பெரியம்மா வீட்டிலேயே தங்கிக்கொண்டு அன்றாடம் கோட்டூர் வீட்டுக்கும் போய் வந்து கொண்டிருந்தேன்.
பள்ளி இறுதித் தேர்வில் (1966) நான் குறைந்த மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றேன். எனவே, எந்தக் கல்லூரியிலும் எனக்கு இடம் கிடைக்கவில்லை. இதற்கிடையில் பெரியப்பா அரசாங்க வேலையை ராஜினாமா செய்துவிட்டு, கோடம்பாக்கத்திலுள்ள தனியார்க் கல்லூரியில் சேர்ந்துவிட்டார். AMIE பரீட்சைக்கு மாணவர்களைத் தயார் செய்யும் கல்லூரி அது. என்னையும் அங்கேயே சேர்த்து AMIE படிக்க வைப்பதென்று முடிவாயிற்று.
முதல் நாள் கல்லூரியில் சேர்ந்ததும், வகுப்பில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த ஆசிரியரிடம் ஃபீஸ் கட்டிய சீட்டைக் கொடுத்தேன். ‘நீ ராமஸ்வாமியின் சொந்தக்காரனா?” என்றார். ‘Yes Sir, He is my big father’ என்றேன். வகுப்பிலிருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டிச் சிரித்தார்கள். பெரியப்பாவுக்கான ஆங்கிலப்பதம் uncle என்பது எனக்குத் தெரியவில்லை. இஞ்ஜினியரிங் படிக்கிறோமோ இல்லையோ, முதலில் இவர்களைவிட நன்றாக இங்கிலீஷ் படிக்க வேண்டுமென்று உறுதி செய்து கொண்டேன்.
கல்லூரியில் படிக்கும்போது என்னிடம் ஒரே ஒரு சிகப்பு நிறச் சட்டை மட்டும்தானிருந்தது. இரண்டாவது சட்டை வாங்கித்தர நயினாவால் முடியவில்லை. வாரத்தில் இரண்டு தடவை கல்லூரியிலிருந்து வந்ததும் சட்டையைத் துவைத்துவிடுவேன். காலையில் அதே சட்டையோடு கல்லூரிக்குப் போவேன். ஒருமுறை நயினாவிடம் இன்னொரு சட்டை வேண்டுமென்று கேட்டேன். நயினா பதில் பேசவில்லை. என்னையே உற்றுப் பார்த்தார். நானும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். கண்களில் நீர் முட்டியது. அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டேன்.
நயினாவால் எனக்குச் செருப்பு வாங்கித் தர முடியவில்லை. ரோட்டில் நடக்கும்போது ஜனங்கள் அணிந்து வரும் காலணிகளைப் பார்த்துக்கொண்டே நடப்பேன். நான் பணக்காரன் ஆனபிறகு என்ன மாதிரி செருப்பு ஷூ வாங்கலாம் என்று கற்பனை செய்து கொண்டேயிருப்பேன். செருப்பு வாங்கினால் போதாது. செருப்பு வைப்பதற்கென்று வேலைப்பாடு நிறைந்த மர ஷெல்ப், பிறகு காலுறை, லேஸ், பாலிஷ், கட்டை இப்படியே யோசனை விரியும். ஷூ கடையில் கண்ணாடிக்குப் பின்னால் இருக்கும் செருப்புக்களைப் பார்த்து விலையைக் குறித்துக் கொள்வேன். இன்னும் பத்து வருடங்களுக்குள் விலையேற்றம் இருக்கும் அல்லவா, அதையும் சேர்த்துக் கணக்குப் போட்டு மாதச் சம்பளத்தில் செருப்பு அல்லது ஷூவுக்கென்று ஒரு பகுதியை ஒதுக்கிவிடுவேன்.
இந்தச் சமயத்தில் எனக்கு பாலா என்றொரு நண்பன் இருந்தான். பாலா வசதியானவன். கல்லூரிக்கு அவனே காரை ஓட்டிக்கொண்டு வருவான். பகலில் என்னை டிரைவ் இன் ஓட்டலுக்கு காரில் அழைத்துப்போய் டிபன் வாங்கித் தருவான். ஏன் தினமும் அதே ஓட்டலுக்குப் போகிறான் என்று முதலில் எனக்கு விளங்கவில்லை. வேறு ஓட்டலுக்குப் போனால் செருப்பில்லாத காலோடு நான் நடப்பதை யாராவது கவனித்தால் நான் கஷ்டப்படுவேன் என்பதற்காக பாலா என்னை டிரைவ் இன் ஓட்டலுக்கு அழைத்துப் போயிருக்கிறான் என்பதை வெகுநாட்களுக்குப் பிறகு தெரிந்து கொண்டேன்.
அடையாரிலிருந்து சைதாப்பேட்டைக்குப் போய் சைதாப்பேட்டையிலிருந்து கோடம்பாக்கம் கல்லூரிக்கு எலக்ட்ரிக் ட்ரெயினில் போக வேண்டும். பெரியப்பா ட்ரெயினில் ஸீஸன் டிக்கெட் வாங்கப் பணம் கொடுப்பார். முதல் தடவை மட்டும் ஸீஸன் டிக்கெட் வாங்கினேன். பிறகு சிகரெட்டுக்கு காசு வேண்டியிருந்ததால் ஸீஸன் வாங்கவில்லை. தொடர்ந்து இரண்டு வருடங்களாக வித்தவுட்தான். சைதாப்பேட்டை வரை போக பெரியம்மாவிடமிருந்து பஸ் சார்ஜ் வாங்குவதற்கும் பெரிய பாடாகிவிடும். அல்லது கல்லூரிக்கு தாமதமாகிவிடும். சில நாட்கள் ரோசத்தில் காசு வாங்காமல் புறப்பட்டுவிடுவேன். மெயின் ரோடில் நடக்கும்போது பஸ் வந்தால் தலைதெறிக்க ஓடி ஏதாவது மரத்துக்குப் பின்னாலோ வேலிப்பக்கம் திரும்பியோ என்னை மறைத்துக் கொள்வேன். எனக்குத் தெரிந்தவர்கள் யாராவது பஸ்ஸிலிருந்து பார்த்துவிட்டால் அவமானமாகிவிடுமே என்ற பயம்தான் காரணம்.
வீட்டில் தயிர் சாதம் கட்டிக் கொடுப்பார்கள். சமயத்தில் கயிறு அவிழ்ந்து எலக்ட்ரிக் ட்ரெயினுக்குள் ஏறிய உடனே ஜன நெருக்கத்தில் பொட்டலம் கிழிந்து தயிர் சாதம் பிதுங்கும். அதைக் காப்பாற்றி கல்லூரிவரை எடுத்துப் போகத் தெரியாது. இதை விட்டால் பசியாற வேறு வழியும் கிடையாது. ஓடும் ரயிலில் கிழிந்த பொட்டலத்தை அவிழ்க்காமல் அத்தனை பேருமிருக்க கிழிசலில் விரலைவிட்டு தயிர் சாதத்தைச் சாப்பிடுவேன். பசிக்கு முன் மானம் பெரியதாகத் தோன்றாது.
…தொடரும்