
பெரிய பெட்டிகளிரண்டும், ஒரு பெரிய பயண தோள் பையும் இன்னும் இரண்டு மூன்று சாமான்களுமாக அவர்கள் உள்ளே வந்தார்கள்.
அப்பாவோட வேலை செய்பவராக இருப்பவர் ஏன் பெட்டி படுக்கையோடு வந்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டே அம்மாவைப் பார்த்தேன், அம்மாவுக்கும் அதே சந்தேகம் தோன்றியிருக்க வேண்டும்.
அவர் புரிந்து கொண்டவராக, “நான் சேலத்தில வேலை பாக்கறேன், சாரை நல்லாத் தெரியும்” என்றார்.
கூடத்தில் நடுவில் அவர்கள் கொண்டு வந்த சாமான்களை வைத்துவிட்டுத் தான் கொண்டுவந்த பெட்டியின் மேலேயே அந்த மாமி உட்கார்ந்து கொண்டாள். அந்த மாமாவும், பையனும் கட்டிலில் அமர்ந்துகொண்டார்கள்.
அம்மா காபி கலக்க உள்ளே போனாள். போகும் போதே கேட்டாள், “பையன் என்ன குடிப்பான்?”
“ஹார்லிக்ஸ், போர்ன்விடா எதுனாலும் குடிப்பான் மாமி.”
அவர்கள் காபி குடிக்கும்போது அப்பா வந்தார். உள்ளே நுழையும் போதே அந்த மாமா எழுந்து “வாங்க சார்” என்றார்.
அப்பா புரியாமல் அவர்களைப் பார்த்தார்.
“சார், நாந்தான் சார் தனசேகர்.” குழப்ப மேகம் இன்னும் விலகவில்லை.
“சார், நாம சேலம் கான்ஃபெரன்ஸ்ல பாத்தோமே. நீங்க கூட மதுரை வந்தா அவசியம் வீட்டுக்கு வரணும்னு சொன்னீங்களே.”
அப்பா தபால் தந்தி ஊழியர்களுக்கான தொழிற் சங்கத்தின் மதுரை மாவட்டப் பொதுச் செயலாளராக இருந்தார். நல்ல பேச்சாளர். இரண்டு மாதத்திற்கு முன்னால் சேலத்தில் நடந்த மாநில அளவிலான மாநாட்டுக்குப் போயிருந்தார். எல்லாரிடமும் உண்மையான தோழராக இருந்த அவரைக் கடைநிலை ஊழியரிலிருந்து, பெரிய அலுவலர் வரை எல்லாருக்கும் பிடிக்கும். பழகுவதற்கு இனியவர்.
“ஓ, ஓ! வாங்க வாங்க. எப்பிடி இருக்கீங்க?”
“நல்லா இருக்கேன் சார்.”
அதற்குள் அம்மா, “குழந்தைக்கு கையில என்ன கட்டு?” அந்த மாமியிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அதை ஏன் மாமி கேக்கறீங்க? இவன் மரத்து மேல ஏறி விளையாடிருக்கான், கீழ விழுந்து கை முறிஞ்சுடிச்சு. அங்க டாக்டர்கிட்ட காமிச்சோம். அக்கம் பக்கத்துல சொன்னாங்க, மதுரையில பெரிய எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் சீனுவாசன்னு இருக்காரு, அவர்கிட்ட காட்டுங்கன்னு சொன்னாங்க. அதான் வந்தோம்!” என்று பெரிய குரலில் அப்பாவுக்கும் கேட்கும்படிச் சொன்னாள்.
நான் அந்த பையனைப் பார்த்து, “உன் பேர் என்ன?” என்று கேட்டேன்.
அவன் அம்மாவைப் பார்த்தான். “சொல்லேண்டா.”
அவன் மெதுவான குரலில் “குமாரு!” என்றான்.
“எந்த கிளாஸ் படிக்கறே!”
மறுபடியும் அம்மாவைப் பார்த்தான். “சொல்லுடா.”
“அஞ்சாவது.”
“எம் பேரு அம்ச வேணி. அம்சான்னு நிறைய பேர் கூப்பிடுவாங்க. சில பேர் வேணின்னும் கூப்பிடுவாங்க.” மாமி தானாக அம்மாவிடம் சொன்னாள். ஒரு வேளை அம்மா கேட்கவில்லையே என்று நினைத்தாள் போலிருக்கிறது.
அந்தப் பையன் பொதுவாக ரொம்ப பேசாதவனாக இருந்தான். அந்த மாமி அவனுக்கும் சேர்த்து வைத்துப் பேசினாள். நாங்கள் விளையாடும் பொழுது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்பான். கையில் அடி வேறு பட்டிருந்ததால் அவனால் எங்களுடைய விளையாட்டில் சேர்ந்து கொள்ளவும் முடியவில்லை.
அவர்கள் வெளியில் போயிருந்த ஒரு சமயத்தில் நான் கேட்டேன்
“இவர் யாருன்னு உங்களுக்கு சட்னு தெரியலையே, ஏம்பா?”
“இல்லம்மா. இவரை கான்ஃப்ரென்ஸ்ல தனிப்பட்ட முறையில பாத்துப் பேசலை. அதுக்கு முன்னாடியும் பழக்கம் இல்ல. ஒரு தரம் என்னோட மேடைப் பேச்சு முடிஞ்சவுடன வந்து பாராட்டினவங்களில் இவரும் இருந்தார். அஞ்சு, பத்து நிமிஷம் பேசிண்டிருந்தார், அதான் சட்னு தெரியல.”
அவர்கள் ஐந்து ஆறு நாட்கள் இருந்தார்கள். தினமும் டாக்டரிடம் போய் விட்டு வரும் நேரம் தவிர அந்த மாமி பெட்டியின் மேலேயே பெரும்பாலான நேரத்தைக் கழித்தாள்.
அம்மாவிடம் ஏதேதோ பேசிக் கொண்டிருப்பாள்.
“இங்கதான் மாமி ஷெனாய் நகரில எங்க பெரியப்பா பையன் இருக்கான். பாங்கில ஆஃபிஸரா இருக்கான். நல்ல பெரிய வீடு. அப்புறம் மதுரை டவுனுக்குள்ள மேல வாசல் பக்கத்தில இவங்க தங்கச்சி இருக்காங்க. அவங்க புருஷன் பிசினஸ் பண்றாரு. அப்புறம் அரசரடியில இவங்க மாமா இருக்காங்க. டிவிஎஸ்ல பெரிய வேலை பாக்காறாரு.”
“ஊருக்கு போறதுக்கு முன்னால அவங்களை எல்லாம் ஒரு தரம்பாக்க போகணும் இல்லையா?” அம்மா பொறுக்கமாட்டாமல் கேட்டாள்.
“மாமி! உதவின்னு கேட்டு யார் வீட்டு வாசல்லயும் போய் நிக்கக் கூடாது. என்ன நான் சொல்றது? ஃபிரண்ட்ஸ் சமாசாரம்னா அது வேற, இல்லையா? நான் சொல்றது சரிதானே மாமி?” என்றாள் அம்சா மாமி.
“சரிதான்” என்றாள் அம்மா.
தெரிந்தவர்களோ இல்லையோ, அவர்கள் இருந்த அத்தனை நாட்களிலும் வேளா வேளைக்கு அம்மா வித விதமாகச் சமைத்துப் போட்டாள். பெரிய கால் படி டம்பளரில் வழிய வழிய வாசனை பொங்க காபி கொடுத்தாள்.
அவர்களுக்குப் படுப்பதற்குக் கூடத்தை ஒழித்துக் கொடுத்துவிட்டு, நாங்கள் வீட்டின் பல்வேறு பகுதிகளில் படுத்துக் கொண்டோம்.
ஒரு வாரம் கழித்து அவர்கள் ஊருக்குப் போய் விட்டார்கள்.
இத்தனை வருடங்கள் கழித்து யோசித்துப் பார்க்கையில் அந்த மாதிரி யாரோ பழக்கம் இல்லாத முன் பின் தெரியாதவர்களுக்கு, ஆசாரமான கிராமத்துக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அம்மா, வசதி குறைவான அந்த நகரத்து வீட்டில் செய்த விருந்து உபசாரம் உண்மையிலேயே ரொம்ப ஆச்சரியப்பட வைக்கிறது.
*
அவனுக்குப் பதினான்கு அல்லது பதினைந்து வயது இருக்கும். (அவன் வீட்டின் ஆசாரமான பக்தி சூழ்நிலையினாலும், நிறைய ஸ்வாமிகள் அவன் வீட்டிற்கு வந்து தங்குகிற தொடர்புகளினாலும் (முக்கியமாக, பூர்வ ஜன்ம வாசனையினாலும்) அவன் வயதுக்கு மீறிய பக்தி பாவனையோடு இருந்தான்.) அந்தச் சமயத்தில் புதுக்கோட்டையில் ஒரு பெரிய ஸ்வாமிகள் புவனேஸ்வரி அம்மனுக்கு கோடி தில ஹோமம் நடத்துகிறார் என்று கேள்விப்பட்டு கிளம்பினான். அவர்கள் வீட்டில் அது ஒன்றும் பெரிய ஆச்சரியத்தை உண்டு பண்ணவில்லை. அம்மா பத்து ரூபாய் கொடுத்து விட்டு, “ஜாக்ரதையா போய்ட்டு வா” என்றாள். அப்போது திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்குப் பேருந்து கட்டணம் ஒரு ரூபாய். கிளம்பிப் போனான்.
அந்தப் பெரிய யாக சலையின் அளவே பிரமிப்பு ஊட்டக்கூடியதாக இருந்தது. பெரிய பத்து அடிக்கு பத்து அடி அளவுள்ள யாக குண்டங்கள் நாற்பது இருந்தன. ஒன்றொன்றிலும் பதினோரு வேத விற்பன்னர்கள். அந்த யாக சாலையின் ஒரு பக்கத்தில் பெரிய பிரமாண்டமான மேடை. அதில் ரொம்ப பெரிய புவனேஸ்வரி அம்மனின் படம் பூ அலங்காரங்களோடு. அதன் இரண்டு பக்கமும் ஆளுயர குத்து விளக்குகள் ஐந்து முகமும் ஏற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. பந்தல் முழுக்க நிறைத்து கூட்டம். அந்தச் சூழ்நிலையே அவனுக்கு ஒரு உற்சவம் அளிக்கிற மகிழ்ச்சியையும், தானும் பெரியவன்தான் என்கிற உணர்வையும் தந்தது.
எத்தனை நேரம் ஆயிற்று என்று தெரியவில்லை. பக்கத்தில் இருந்த மாமி இன்னொரு மாமியிடம், “சரி, மணி ஒண்ணாயிடுத்து, நாம இப்போ போய்ட்டு சாயங்காலம் வரலாம். இவாளும் இரண்டு மணிக்கு நிறுத்திட்டு அப்புறம் நாலு மணிக்குத்தான் ஆரம்பிப்பா” என்றாள்.
இவனும் சாப்பிட்டுவிட்டு வரலாம் என்று கிளம்பினான்.
புது ஊரில் தெரியாத தெருக்களில் அலைவது ஒரு விதமான விடுதலை உணர்ச்சியை அளித்தது. இரண்டு, மூன்று தெருக்களைத் தாண்டி லலிதாம்பிகா மெஸ் என்ற பேரைப் பார்த்தவுடன் பிடித்தது. உள்ளே போனான். கொஞ்சம் கூட்டமாகத்தான் இருந்தது.
“வா அம்பி! வா!” பெரிய தொப்பையும், சிரித்த முகமுமாக ஒரு மாமா வாஞ்சையுடன் அழைத்தார்.
சுடச் சுடச் சாப்பாடு, பசித்த வயிற்றில் அமிர்தமாக இறங்கியது.
இன்னும் இரண்டு நாளைக்குச் சாப்பாட்டிற்குத் தன்னிடம் இருக்கும் பணம் போதுமா என்று கணக்குப் பார்த்துக்கொண்டான்.
சாயங்கால பூஜை முடியும்போது கிட்டத்தட்ட எட்டு மணி இருக்கும் என்று தோன்றியது. ‘ராத்திரி எங்கே தங்குவது… இங்கே யாக பந்தலில் தங்க விடுவார்களா?’ சுற்றும் முற்றும் பார்த்தான்.
காக்கி உடை உடுத்திக் கொண்டு இருந்த ஒரு மாமா இவனைப் பார்த்தார்.
“என்ன அம்பி, அம்மா, அப்பாவைத் தேடறயா?”
“இல்ல மாமா. நான் மட்டும் தனியாத்தான் வந்தேன்.”
“எந்தத் தெரு?”
“இந்த ஊர் இல்ல மாமா. நான் திருச்சியிலேந்து வந்திருக்கேன்.”
“இங்க எங்க தங்கியிருக்க?”
“தெரியல மாமா, எனக்கு இங்க யாரையும் தெரியாது.”
“அடடா பாவமே. சின்னக் குழந்தை தனியா வந்திருக்கயே… பரவாயில்லை, இப்போ என்னைத் தெரிஞ்சுண்டுட்ட இல்லயா? கவலைப்படாதே. எங்காத்துக்கு வா.”
மாமாவுடன் அவர்கள் வீட்டுக்குப் போனான். பெரிய கிராமாந்திர வீடு.
உள்ளே நுழையும்போதே, “ராஜம், இங்க பாரு, ஒரு குழந்தை வந்திருக்கான்” என்றார்.
வீட்டின் முற்றத்தில் நுழையும்போது, வலது பக்கம் தாழ்வாரத்தை ஒட்டி இருந்த கூடத்தில் சமையலறை வாசலையடுத்து நாலைந்து குழந்தைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்ததைப் பார்த்தான்.
மாமி அழகிய மஞ்சள் நிறத்தில் சரிகை போட்ட மடிசார் புடைவையும், அரக்கு வண்ண ரவிக்கையும் அணிந்துகொண்டு, கையில் கரண்டியோடு வந்து இவனைப் பார்த்து வாஞ்சையாகச் சிரித்து,
“வாடா குழந்தை, கையை, காலை அலம்பிண்டு சாப்பிட வா.”
இவனுக்கு அன்னபூரணியைத் தரிசித்தது போல இருந்தது.
முற்றத்தில் கைகால் அலம்பிக் கொண்டிருக்கும் போது மாமா சொல்லிக் கொண்டிருந்தார்.
“இந்தக் குழந்தை திருச்சியிலேந்து ஹோமத்தைப் பாக்கணும்னு தனியா வந்திருக்கான், அதான் இரண்டு நாளும் நம்மாத்திலேயே இருக்கட்டும்னு கூட்டிண்டு வந்தேன்.”
குழந்தைகள் பக்கத்தில் உட்கார்ந்தான்.
மாமி பரிந்து பரிந்து பரிமாறினாள்.
பெரிய வாழை இலையில் சுடச் சுட வெள்ளை சாதத்தைப் பார்த்தபோது அதில் மாமா, மாமியின் பெருங்கருணையும், அன்பும் தெரிவது போல இருந்தது.
சாப்பிட ஆரம்பித்தான்.
*
மேற்சொன்ன இரண்டு சம்பவங்களும் நடந்து நாற்பத்தைந்து, ஐம்பது வருடங்கள் ஆகியிருக்கும். இத்தனை வருடங்களில் உலகமும் வாழ்க்கை முறையும் எத்தனையோ மாறியிருக்கின்றன. அப்பொழுது இருந்தவர்கள் எல்லாரும் பெரிய மனதுக்காரர்கள், இப்பொழுது இருப்பவர்கள் எல்லாரும் யாருக்கும் எந்த உதவியும் செய்யாதவர்கள் என்ற முடிவுக்கு வருவது மிகவும் மேலோட்டமானது. அன்றும் தன் வீட்டுப் பிள்ளைகளை மட்டும் உள்ளே அழைத்து தின்பண்டங்கள் கொடுத்துவிட்டு வாயைத் துடைத்துக்கொண்டு வெளியே விளையாடப் போ என்று சொன்னவர்கள் இருந்திருக்கிறார்கள்.
மனிதனின் மனம் எப்போதுமே பிரமிக்கத்தக்க உயரங்களை அடையக் கூடிய சாத்தியங்களோடும், கற்பனைக்கு அப்பாற்பட்ட கீழ்மைகளில் திளைக்கக்கூடிய சாத்தியங்களோடும் இருந்து வந்திருக்கிறது, அன்றும், இன்றும்.
ஆனால், சில விழுமியங்கள், பண்பாட்டுக் கூறுகள், தனி மனித, குடும்ப, சமூக அறன்களின் மீதான நம்பிக்கைகளுக்கு இன்றைய வாழ்க்கை முறையில் இருக்கின்ற இடம் என்ன என்ற ஆதாரமான கேள்விக்கான விடை என்ன? வீழ்ச்சி என்பது இல்லையென்றாலும் கூட, சரிவுகளும், சறுக்கல்களும் இருப்பது ஓரளவு கண்கூடு.
என்றாலும், சாதாரணமான மனிதர்கள், சாதாரணமான தருணங்களில் கூட வெளிப்படுத்துகிற மனித நேயத்தை இன்றும் காண நேருகிற பொழுது, நாம் இன்னும் முற்றாக இழந்து விடவில்லை என்ற ஆசுவாசம் ஏற்படுகிறது.