Posted on Leave a comment

உலகக் கலாசாரங்களில் கடல்கோள் கதைகள் | சுமதி ஸ்ரீதர்

கடந்த வருடம் ஜூலை மாதம் அண்டார்டிக்கா கண்டத்தில் மனித குலத்தின் வருங்காலத்தைப் புரட்டிப்போடக்கூடிய ஒரு மாபெரும் பூகோள நிகழ்வு ஏற்பட்டது பலருக்குத் தெரிந்திருக்கும். 5,000 சதுரடிக்கும் பெரிதான பனிப்பாறை ஒன்று அதைத்தாங்கும் அதைவிடப் பன்மடங்கு பெரிய பாறையிலிருந்து (Larsen c ice shelf) உடைந்து கடலுக்குள் மிதக்கத் துவங்கியது. மூன்று டிரில்லியன் டன் எடையுள்ள அந்தப் பனிப்பாறை மெல்ல மெல்ல உருகி உலகெங்கும் கடல் மட்டங்களை உயர்த்தக்கூடிய சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள் வல்லுநர்கள். இவ்வகை நிகழ்வுகளால் கடல் மட்டம் உயர்ந்து, மனித நாகரிகத்துக்குப் பேரழிவு ஏற்படுத்தக்கூடிய அபாயம் மனித குலத்தின் மேல் தொங்கும் கத்தி போன்றது. இந்தக் கத்தி என்றைக்கு வேண்டுமானாலும் நம் தலை மேல் விழலாம்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், மனித சமுதாயத்தைக் கடல் கொண்டு சென்றுவிடுமோ என்ற பயம் இன்று நேற்றல்ல, புராதனக் காலம் தொட்டே இருந்ததாகத் தெரிகிறது. உலகம் முழுவதும் பரந்து விரிந்த புராதனக் கலாசாரங்கள் அனைத்திலும் இந்த பயத்தை எதிரொலிக்கும் கடல்கோள் கதைகள் (flood myths) உள்ளன.

புராதன எகிப்தியர்கள் தங்களின் ஆக்கும் கடவுளான ரா, மனிதனால் மிக துயரப்பட்டு மீண்டும் இவ்வுலகை ‘நன்’ என்னும் ஆழ்கடலுக்கே திருப்பிவிடுவார் என்று நம்பினார்கள்.

பண்டைய எகிப்தியர்கள் மட்டுமல்ல, நார்டிக் நாடுகள் எனக் கூறப்படும் வடதுருவத்தை ஒட்டிய பிரதேசங்களில் வாழும் மக்களில் ஆரம்பித்து, தென் அமரிக்காவைச் சேர்ந்த மாயா இன மக்கள், ஆஃப்ரிக்க, இந்திய, கிரேக்க, சீன மற்றும் ஆஸ்திரேலிய மக்கள் வரை உலகின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்களும் இந்தக் கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள் என்பது மிக ஆச்சரியமான விஷயம்.

பொதுவாக இந்தக் கதைகளில் கடவுள் மனிதனின் தவறான நடவடிக்கைகளால் கோபமுற்று, ஒரு பெரும் வெள்ளத்தை அனுப்பி, தவறு செய்யும் மனித இனத்தைப் பூண்டோடு அழித்து, மறுபடி ஒரு புதுயுகம் பிறக்க வழி செய்கிறார்.

இந்தக் கதைகளில் கடவுள் தன் திட்டத்தை நிறைவேற்ற முதலில் மனித குலத்தின் பிரதிநிதியாக ஒருவனைத் தேர்வு செய்கிறார். அந்த மனிதனிடம் ஆழி பெருக்கெடுத்து உலகம் அழியப்போவதாக எச்சரிக்கை விடுக்கிறார். வரப்போகிற வெள்ளத்தில் அவன் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றிக்கொண்டு வெள்ளம் வடிந்தபின் தன் வாழ்க்கையை மறுபடி தொடரவும் மனித குலம் மறுபடி தழைக்கவும் வழிகாட்டுகிறார்.

கடல்கோள் கதைகளில் மிகவும் புராதனமாகக் கருதப்படுவது பழங்கால சுமேரிய/பாபிலோனிய கலாசாரத்தில் சொல்லப்பட்ட கில்கமிஷ் காப்பியம். இந்த காப்பியம் சுமார் பொ.மு.18ம் நூற்றாண்டு காலகட்டத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. ‘என்லில்’ என்ற காற்றுக்கான கடவுள் (நம் புராண கதைகளின் வரும் வாயு பகவானுக்கு ஒப்பானவர்) மனித இனத்தின் பெருகும் ஜனத்தொகையையும், அதிகரிக்கும் சத்தத்தையும் கண்டு மிகவும் கோபமுற்று உலகை அழிக்க வேண்டி மாபெரும் வெள்ளத்தை அனுப்பி வைக்கிறார். என்லிலின் திட்டத்தை அறிந்த இயா என்ற தண்ணீருக்கான கடவுள், மனித குலத்தின் பிரதிநிதியாக உத்னபிஷ்டம் என்பவனைத் தேர்ந்தெடுத்து, அவனுக்கு வரப்போகும் வெள்ளத்தைப்பற்றி எச்சரிக்கை செய்கிறார். மரத்தால் ஆன தன் வீட்டை உடைத்து ஒரு படகைத் தயார் செய்யச் சொல்கிறார். உத்னபிஷ்டம் இயா கூறியவாரே செய்கிறான்.

கில்காமெஷ், அஸ்ஸீரிய சிற்பம்

தன் குடும்பத்தோடு சேர்த்து மற்ற ஜீவராசிகளையும் படகில் ஏற்றிக்கொண்டு வெள்ளத்தை எதிர்கொள்ளத் தயாராகிறான். இயா கூறியதுபோல் பெருமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுக்கிறது. கடுங்காற்று வீசுகிறது. இவ்வாறு ஆறு இரவு ஆறு பகல் தொடர்ந்தபின் இயற்கையின் சீற்றம் மெல்ல மெல்லக் குறைகிறது. ஆனால் வெள்ளத்தில் நிலங்கள் முழுவதும் மூழ்கிக் கிடக்கின்றன. பார்க்கும் இடமெங்கும் மனிதர்கள் களிமண் சிலைகளாக மாறியிருக்கிறார்கள். வெள்ளத்தில் இங்கும் அங்கும் புரட்டப்பட்ட உத்னபிஷ்டத்தின் படகு இறுதியில் நிமுஷ் என்ற மலையின் மீது சென்று நிற்கிறது. ஏழாவது நாள், சற்று அமைதி புலப்பட உத்னபிஷ்டம் ஒரு புறாவைப் படகிலிருந்து வெளியே அனுப்புகிறான். ஆனால் உட்கார்ந்து கொள்ள ஒரு மரக்கிளைகூடக் கிடைக்காமல் அது படகுக்கே திரும்பிவிடுகிறது. பிறகு இன்னொரு பறவையைப் படகிலிருந்து வெளியனுப்புகிறான். அதுவும் மறுபடி படகுக்கே திரும்பி விடுகிறது. கடைசியாக அவன் ஒரு காகத்தை அனுப்புகிறான். அது திரும்புவதில்லை. சூழ்ந்திருக்கும் தண்ணீர் வடிய தொடங்கியதைப் புரிந்துகொண்டு, மற்ற ஜீவராசிகளைப் படகிலிருந்து மெல்ல மெல்ல விடுதலை செய்கிறான். உத்னபிஷ்டம் உயிரினங்களுக்கு ஆற்றிய சேவைக்காகச் சாகா வரம் பெற்று கடவுள்களோடு ஒன்றாகிறான்.

இதே கதை சிறு சிறு வித்தியாசங்களோடு அத்ரஹஸீஸ் என்ற பாபிலோனியக் காப்பியத்திலும் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. உத்னபி்ஷ்டத்திற்கு பதில் அத்ரஹஸீஸ். மற்றபடி அதே ஏழு நாட்கள் மழை, அதே வெள்ளம், படகு என எல்லா விவரங்களும் ஒன்றுதான்.

கிட்டத்தட்ட இதே கதை மீண்டும் பல வருடங்களுக்குப் பிறகு கிறித்துவப் புனித நூலான பைபிளிலும் மற்றும் யூதர்களின் புனித நூலான டோராவிலும் ‘நோவாவின் படகு’ என்ற கதையாக மறு பிறவி எடுத்திருக்கிறது. அத்ரஹஸீஸின் கதைக்கும் நோவாவின் கதைக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. நோவாவின் படகு நாற்பது நாட்களுக்குப் பிறகு அராரத் என்ற மலையைச் சென்றடைகிறது. நோவா நிலத்தைத் தேடி மூன்று முறை புறாவைத் தூது விடுகிறான். மூன்றாவது முறை அது படகுக்குத் திரும்பாதபோது வெள்ளம் வடிந்து நிலம் தென்பட்டுவிட்டதாகப் புரிந்துக் கொள்கிறான். நோவாவைக் காப்பாற்றிய கடவுள் அவனுக்கு (மனித குலத்துக்கு) ஒழுக்கத்துடன் வாழ ஏழு கட்டளைகள் இடுகிறார். அந்த ஏழு கட்டளைகளைத்தான் ஏழு வண்ணம் கொண்ட வானவில் சுட்டிக்காட்டுவதாக நம்பப்படுகிறது. அழகான அந்த வானவில் ஆபத்தான வெள்ளத்திலிருந்து மீண்டு வரும் மனிதக்குலத்தின் நம்பிக்கையின் குறியீடும் ஆகும்.

இதே கதை ‘நூ கீ கஷ்தி’ என்னும் பெயரில் இஸ்லாமிய கலாசாரத்திலும் பிரபலம்.

நம் நாட்டிலும் கடல்கோள் கதைகளுக்குப் பஞ்சமில்லை. அதில் விஷ்ணுவின் மத்ஸ்ய அவதாரக் கதை மிகவும் பிரபலம். இந்தக் கதைக்கான வித்து சதபத பிராம்மணம் என்ற யஜுர்வேத நூலில் இருந்தாலும், இந்தக் கதை பின்னாளில் இயற்றப்பட்ட மஹாபாரதத்திலும், மத்ஸ்ய புராணத்திலும் சிறு சிறு மாற்றங்களுடன் சொல்லப்படுகிறது.

சதபத பிராம்மணத்தில் சொல்லப்படும் கதையின்படி பிரஜாபதி என்ற ஆக்கும் கடவுள் ஒரு சிறிய மீன் உருவமெடுத்து மனு என்ற ஆதி மனிதனிடம் சென்று கடலில் தன்னை விழுங்கக்கூடிய பெரிய மீன்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றும்படி கேட்டு தஞ்சம் புகுகிறார். (சதபத பிராம்மணம் மனுவை ஒரு அரசனாகவும் அடையாளம் காட்டுகிறது.)

மனு அந்தச் சிறிய மீனுக்கு அடைக்கலம் தருகிறான். அந்தச் சிறிய மீன் மெல்ல மெல்ல மிகப் பெரிய மீனாக வளர்ந்து மறுபடி கடலுக்கே திரும்பி விடுகிறது. திரும்பிச் செல்லும் முன் மனு தனக்காற்றிய உதவிக்கு நன்றிக்கடனாக அவனிடம் வரவிருக்கும் வெள்ளத்தைப் பற்றி எச்சரித்து ஒரு படகு செய்து தயாராகும்படிக் கூறுகிறது. அந்த மீன் எச்சரித்தபடியே, குறிப்பிட்ட நாளில் கடல் பொங்குகிறது. தக்கச் சமயத்தில் மீன் வந்து மனுவின் படகை தன் கொம்பில் கட்டி இழுத்துச் சென்று இமய மலையில் சேர்த்துவிடுகிறது. வெள்ளத்திலிருந்து காப்பாற்றப்பட்ட மனு புதிய யுகத்தில் மறுபடி உயிரினங்கள் தழைக்க யாக-யஞ்யங்கள் செய்யத் துவங்குவதாகக் கதை முடிகிறது.

பல கோணங்களில் இந்தியக் கதைகளை ஒற்றி இருக்கும் கிரேக்கக் கதைகளிலும் கடல்கோள் கதைகள் மூன்று உண்டு. அதில், பிப்லியோதேகா என்ற கதைக் களஞ்சியத்தில் சொல்லப்பட்டிருக்கும் டியுகாலியான் என்ற கதை மிகப் பிரபலம். இந்தக் கதையில் ஜூஸ் (zeus) என்ற நம் இந்திரனுக்கு நிகரான கடவுள், கிரேக்கர்கள் மீது கொண்ட கோபத்தால் பிரளயம் ஏற்படுகிறது. இதை முன்கூட்டியே அறிந்த ப்ரொமீதியஸ் என்ற தேவன் தன் மகன் டியுகாலியானிடம் தோணி ஒன்றைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ளச் சொல்கிறான். பிரளயம் வருகிறது. டியுகாலியான் மற்றும் அவன் மனைவி மட்டுமே பிழைக்கின்றனர். மழை ஓய்ந்தபின் டியுகாலியானும் அவனது மனைவியும் கடவுளின் உதவியோடு ஆண், பெண் இரு ஜாதியையும் படைக்கின்றனர். டியுகாலியான் மனித குலத்துக்கு அரசனாகி அவர்களுக்கு உழவு மற்றும் பல உபயோகமான தொழில்களைக் கற்றுவித்து அவர்களை நாகரீகப்படுத்துகிறான்.

மேலே சொல்லப்பட்ட ஒவ்வொரு கதையைக் கேட்கும்போதும், அவற்றில் இருக்கும் ஒற்றுமைகள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. உலகின் வெவ்வேறு பகுதிகளில் இருந்த மக்கள் எப்படி ஒரே மாதிரியான கதைகளைச் சொன்னார்கள்?

இப்படி உலகளவில் சொல்லப்படும் கதைகளில் உள்ள ஒற்றுமைகளை மனித சிந்தனையில் இருக்கும் ஒற்றுமையாகக் கொள்வதா அல்லது இந்தக் கதைகள் உண்மையில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்வதாக எடுத்துக்கொள்வதா?

உலகக் கலாச்சாரங்களில் கடல்கோள் கதைகளை ஆராய்ச்சி செய்த வல்லுநர்கள் இந்தக் கதைகள் உலகம் முழுவதும் பரவிக் கிடப்பதற்கு இரு வகைக் காரணங்கள் இருக்கக்கூடும் என்கிறார்கள்.

ஒன்று, சுமார் ஏழாயிரம் வருடங்களுக்கு முன் முந்தைய பனியுகம் முடிந்து பனிப்பாறைகள் உருகி கடல் நீர்மட்டங்கள் உயர்ந்து உலகம் முழுவதுமே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம். அந்தப் பேரழிவு நிகழ்ச்சி மனித குலத்தின் கூட்டு நினைவில் பதப்படுத்தப்பட்டு கதை உருவமெடுத்து காலம் காலமாக அடுத்து வரும் சந்ததியினருக்கு கடத்தப்பட்டிருக்கலாம்.

இதைத் தவிர வெள்ளத்திற்கு வேறு பல காரணங்களும் இருந்திருக்கலாம். பழங்கால மக்கள் பெரும்பாலும் நதிக்கரையில் வசித்து வந்தனர். நதிகளில் வெள்ளம் பெருக்கெடுக்கும் போதெல்லாம் கடும் துயரம் அடைந்தனர். அவர்கள் வாழ்க்கைக்கான ஆதாரத்தை இழக்கச் செய்த இந்த அனுபவங்களே கடல்கோள் கதைகளுக்கான விதையாகவும் இருந்திருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

டைகிரிஸ் மற்றும் யுஃப்ரேடஸ் என்ற இரு நதிகளுக்கிடையே உருவான கலாசாரம்தான் பழம்பெரும் சுமேரிய/பாபிலோனிய கலாசாரம். இந்த இரு நதிகளில் அடிக்கடி ஏற்பட்ட வெள்ளத்தால் சுமேரிய மக்கள் பாதிக்கப்பட்டனர் என்று பூகோள வல்லுநர்கள் கூறுகிறார்கள். இந்த நிகழ்வுகளே கில்கமேஷ் காப்பியத்திற்கு வழி வகுத்திருக்கலாம் என்பது ஆராய்ச்சியாளர்களின் அனுமானம்.

கடல்கோள் கதைகள் உலகெங்கும் பரவ இன்னொரு சாத்தியக்கூறும் உள்ளது. வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவு உலகளவில் இல்லாமல் உலகின் ஒரு சிறிய பகுதியைப் பாதித்திருக்கலாம். மனித இனம் உலகின் பல்வேறு கண்டங்களுக்குச் சென்று குடிபெயரும்போது, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை, தங்கள் கதையை உடன் எடுத்துச் சென்று பிற இடங்களில் பரப்பியிருக்கலாம்.

ரையன் மற்றும் பிட்மன் என்ற இரு பூகோள ஆராய்ச்சியாளர்கள் இது சம்பந்தமாக ஒரு அனுமானத்தை முன் வைக்கிறார்கள். அதற்கு அவர்கள் ‘பிளாக் ஸீ ஹைபாதிஸிஸ்’ (Black Sea Hypothesis) என்று பெயரிட்டுள்ளார்கள். சுருக்கமாகச் சொன்னால், சுமார் பொ.மு 5,600ம் ஆண்டு அருகில் பனிப்பாறைகள் பெரும் அளவில் உருகியதால் மெடிட்டரேனியன் கடல் பொங்கி ஐரோப்பாவின் பிளாக் ஸீயை ஒட்டிய 1,55,000 சதுர கி.மீ பரப்பளவு நிலம் கடலுக்குள் மூழ்கியிருக்கக்கூடும் என்கிறார்கள். வேறு சில சாட்சியங்களை வைத்து சில அகழ்வாராய்ச்சியாளர்கள் இந்த அனுமானத்தை ஆமோதிக்கிறார்கள். இந்தப் பெரு நிகழ்வே கடல்கோள் கதைகள் உருவாகக் காரணமாக இருந்திருக்கலாம் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது.

மும்பை பல்கலைக்கழகத்தில் ‘கம்பாரடிவ் மிதாலஜி’ (comparative mythology) கற்றுத்தரும் பேராசிரியர் உத்கர்ஷ் படேல், “இந்தக் கதைகளில் உள்ள அபாரமான ஒற்றுமைகளைப் பார்க்கும்போது, இந்தக் கதைகளை மற்ற கதைகள் போல் ஜனரஞ்சக நோக்கத்தோடு சொல்லப்பட்ட கதைகளாகப் பார்க்க முடியாது. இந்தக் கதைகள் அடிப்படையில் ஒரு உண்மைச் சம்பவத்தை நினைவு கூர்வதாகவே தோன்றுகிறது” என்கிறார். மகாபலிபுரத்தில் உள்ள பழங்காலத்து பகோடாக்களை (pagodas) கடல் கொண்டு சென்றதாக நமக்குச் செவி வழி வந்து சேர்ந்த கதையில் ஒரு அடிப்படை உண்மை இருந்ததை, 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் கடலுக்கடியிலிருந்து வெளிவந்த இடிபாடுகள் நிரூபித்ததை நினைவுகூரும் படேல், தொடர்ந்து, “காலப்போக்கில் இந்தக் கதைகள் மெல்ல மெல்ல உருமாறி தெய்வ அம்சங்கள் சேர்க்கப்பட்டு வேறொரு பரிமாணத்தை அடைந்து விட்டதாகவே தெரிகிறது” என்கிறார்.

இந்தக் கோட்பாட்டை வலுப்படுத்தும் விதமாக உள்ளது சீனத்தின் குன்-யூ என்ற மாபெரும் வெள்ளத்தின் கதை. இந்தக் கதை சீனப் பாரம்பரியக் கலாசாரத்தின் அச்சாணியாகக் கருதப்படுகிறது. சுமார் 4,000 வருடங்களுக்கு முன்னால் சீனாவின் சோகம் என்று அழைக்கப்படும் மஞ்சள் நதியில் (yellow river) ஏற்பட்ட வெள்ளத்தால் மக்கள் அடைந்த துன்பத்தைக் கூறுகிறது இந்தக் கதை.

ஆனால் பிற கடல்கோள் கதைகளிலிருந்து சீனக் கதை சற்று வித்தியாசப்படுகிறது. மற்ற கதைகளில் போல் இல்லாமல் சீனக் கதையில் வெள்ளம் கடவுளின் செயலாகக் கருதப்படுவதில்லை. மாறாக அது இயற்கையின் சீற்றமாகக் கருதப்படுகிறது. பெருக்கெடுத்து வந்த வெள்ளத்தை எப்படி மக்கள் சமாளித்தார்கள் என்பதையும், அதிலிருந்து என்ன பாடம் கற்றார்கள் என்பதையும் சீனக் கதைகள் மட்டுமல்ல, அந்நாட்டு சரித்திரமும் ஆவணப்படுத்துகிறது.

இந்தக் கதையில், அரசரின் கட்டளையை ஏற்று குன் என்ற இளவரசன் ஒன்பது வருடங்கள் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த நினைத்துத் தோல்வி அடைகிறான். அரசர் அவனுக்கு மரண தண்டனை விதிக்கிறார். குன்னுக்குப் பிறகு வெள்ளத்தைக் கட்டுப்படுத்துவதற்கான பொறுப்பு அவனது மகன் யூவுக்குக் கொடுக்கப்படுகிறது. தந்தையை இழந்த யூ தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை சவாலாக எடுத்துக்கொள்கிறான். பதிமூன்று வருடங்கள் போராடி வெள்ளத் தண்ணீர் வடிய வடிகால்கள் அமைக்கிறான். ஒரு வழியாக வெள்ளத் தண்ணீர் ஊரைச் சேதப்படுத்தாமல் கடலுக்குள் வடிய ஏற்பாடு செய்கிறான். இவ்வாறு ஊர் மக்களைக் காப்பாற்றி அவர்களின் தலைவன் ஆகிறான் யூ. யூவிலிருந்து தொடங்குகிறது சீனத்தை ஆண்ட சியா வம்சம்.

இதே கதை குழந்தைகளுக்குச் சொல்லப்படும்போது கவர்ச்சியான விஷயங்கள் சேர்க்கப்படுகின்றன. குன்னும் யூவும் தெய்வங்கள் ஆக்கப்படுகிறார்கள். கூடவே மந்திரம் தந்திரம் எல்லாம் சேர்க்கப்பட்டு அது ஒரு ஜனரஞ்சகமான கதையாகிறது.

சமீபத்தில் மஞ்சள் நதியில் ஆராய்ச்சி மேற்கொண்ட பூகோள வல்லுநர்கள் மற்றும் அகழ்வாராய்ச்சியாளர்கள் குன்-யூ கதையில் சொல்லப்பட்ட வெள்ளம் உண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சி என்று நிரூபித்திருக்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சி கடல்கோள் கதைகளில் ஒளிந்திருக்கும் உண்மையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஒரு மைல்கல்.

இந்தக் கதைகளை உண்மைச் சம்பவங்களின் கூட்டு நினைவு என்ற கண்ணோட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட குறியீடுகளின் கண்ணோட்டத்திலும் ஆராயலாம். உதாரணமாக, உலகம் அழிய கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளம்தான் காரணம் என்றாலும் அந்த மழையை அனுப்பி வைத்தது கடவுள்தான் என இந்தக் கதைகள் சொல்கின்றன. ஆக இந்நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஒரு தெய்வாதீனச் செயலாகவே பார்க்கப்படுகின்றன.

இந்தக் கதைகளில் வெள்ளத்தின் பேரழிவு மனிதனின் தவறுகளுக்கான தண்டனையாகவே சொல்லப்படுகிறது. தண்டனையைக் கடுமையாகக் கொடுத்தாலும் மனிதன் தன் தவறுகளைத் திருத்திக்கொள்ள இன்னொரு வாய்ப்பையும் தருகிறார் கடவுள்.

கிட்டதட்ட எல்லாக் கதைகளிலும் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவன் மற்றும் அவனுடைய குடும்பத்தினர் மட்டுமே காப்பாற்றப்படுகிறார்கள். கடவுள் அவனைத் தேர்ந்தெடுப்பதற்கு அவன் ஒழுக்கமே காரணம் என்பதால் அவன் தன்னுடைய கலாசாரத்தின் முன்மாதிரி ஆகிறான். மேலும், அறத்தோடு இருப்பவனுக்கு அழிவில்லை என்ற நீதி போதனையையும் செய்கின்றன இந்தக் கதைகள். உதாரணமாக, மத்ஸ்ய அவதார கதையில் வரும் சிறிய மீன் நலிந்தோரைக் குறிக்கிறது. அந்தச் சிறிய மீனைk கடலில் வாழும் பெரிய மீன்களிடமிருந்து காப்பாற்றி மனு ஒரு அரசனுக்கான அறத்தைக் கடைப்பிடித்து ஒரு நல்ல மன்னனுக்கான முன்மாதிரியாகிறான்.

மேலும், எல்லாக் கதைகளிலும் ஒரு படகு வருகிறது. அதில் ஏறித்தான் கதையின் நாயகன் வாழ்க்கை என்னும் பெருங்கடலைக் கடக்கிறான். மத்ஸ்ய அவதாரக் கதையில் வரும் படகை மோட்சத்தின் குறியீடாகப் பார்க்கலாம். அந்தப் படகுதான் மனு என்ற மனிதனை மரணத்திலிருந்து மீட்டு அமரனாக்குகிறது.

இன்னொரு கவனிக்க வேண்டிய விஷயம், இந்தக் கதைகள் யாவும் மனிதனுக்கு வாழ்க்கை மீது நம்பிக்கை தரும் விதமாகவே முடிகின்றன. வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவின் முடிவில் ஒரு புதிய படைத்தல் காத்திருக்கிறது. இந்தப் பிரபஞ்சத்தில், படைத்தலும் அழித்தலும் மாறி மாறி வருவதை இந்தக் கதைகள் சுட்டிக் காட்டுகின்றன. பல கலாசாரங்களில் இந்த உலகே நீரிலிருந்து (primordial waters) உருவானதாக நம்பப்படுகிறது. நீரிலிருந்து தோன்றிய உலகு மறுபடி நீருக்கே திரும்பிவிடுகிறது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், இம்மாதிரியான கதைகளை நாம் இன்னும் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறோம்.

தொண்ணூறுகளில், கெவின் காஸ்ட்னர் என்னும் ஹாலிவுட் நடிகர் நடித்த ‘வாட்டர் வர்ல்டு’ என்ற ஆங்கிலப் படம் வெளிவந்தது. அப்படத்தில் உலக வெப்பமயமாதலால் துருவங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டம் ஏறி, நிலங்கள், நகரங்கள் தண்ணீரில் மூழ்கிப் போயுள்ளன. படத்தின் ஹீரோ (கெவின் காஸ்ட்னர்) எஞ்சியிருக்கும் நிலத்தைத் தேடி ஒரு கப்பலில் பயணிக்கிறான். இறுதியில் அப்படி ஒரு இடத்தை எவரெஸ்ட் மலையின் உச்சியில் கண்டுபிடிக்கிறான் எனக் கதை தொடர்கிறது.

சமீபத்தில் வெளியான ‘லைஃப் ஆஃப் பை’ திரைப்படத்தில் கூட கடல்கோள் கதைகளின் சாயலைப் பார்க்கலாம். இந்தக் கதைகளின் மூலம் மனிதனின் ஆழ்மனதில் ஆழியின் அழிக்கும் தன்மையைக் கண்டு ஒரு பிரமிப்பு, ஒரு அச்சம் இருப்பதை உணர முடிகிறது.

இந்தக் கதைகளில் வருவதுபோல், மனிதர்களான நாம் இயற்கைச் சூழலைப் பாதிக்கும் பல தவறான செயல்களில் ஈடுபட்டிருக்கிறோம் என்பது யாருமே மறுக்க முடியாத உண்மை. நம் தவறுகளின் கொடும் விளைவுகளிலிருந்து நம்மை மீட்க யார் தோணி செய்யப் போகிறார்கள் என்பதுதான் இப்போது நம் முன் இருக்கும் கேள்வி.

Leave a Reply