Posted on Leave a comment

நேர்காணல்: இராம. கோபாலன் ஜி | சந்திப்பு: அபாகி

வைரமுத்து – ஆண்டாள் விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள ஹிந்துக்கள் எழுச்சியடைந்து வீதிக்கு வந்தபோது, அவரது வாழ்நாள் லட்சியம் நிறைவேறத் துவங்கியதாக மகிழ்ந்திருப்பார். ஹிந்து விழிப்புணர்வுப் பணிகளுக்காக அவர் சுற்றாத கிராமங்கள் இல்லை. வாங்காத ஏச்சுகளும் இல்லை. அவரது தியாகத்தை அவர் தலையில் முஸ்லிம் பயங்கரவாதி வெட்டிய காயங்களே சொல்லிவிடும். அவர்தான் இராம.கோபாலன்ஜி. சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை வேளையில் சந்தித்தோம். இந்த வயதிலும் ஹிந்து சமூகத்துக்காகவே சிந்திக்கிறார். குடும்பத்தில் உள்ள அனைவரின் உடல்நலனையும் விசாரிக்கிறார். நாம் பதிலுக்கு நலம் விசாரித்தால், “எனக்கு 92 வயதுதான் ஆகிறது” என்று கூறிவிட்டுச் சிரிக்கிறார். ‘வலம்’ இதழுக்காகப் பேட்டி கேட்டதுக்கு “இப்போ என்ன அவசியம்?” என்று கேட்டுக்கொண்டே கேள்விகளுக்குத் தயாரானார்.ஆர்.எஸ்.எஸ். இயக்கத்துக்கு எப்போது வந்தீர்கள்? உங்களுக்கு ஊக்கமளித்த சங்க பிரசாரகர் யார்?

எனது 17ஆவது வயதில் சங்கத்துக்கு வந்தேன். என்னுடன் இன்ஜினியரிங் படித்த முத்துராமன் என்ற பையன் கிரிக்கெட் கத்து தர்றேன்னு கூப்பிட்டான். எல்லோருக்கும் இருக்கும் கிரிக்கெட் ஆர்வம் எனக்கும் அப்போது இருந்தது. அப்படித்தான் ஷாகா வந்தேன். பிறகு, வாழ்க்கையே சங்கமானது. என்னை பிரசாரக்காக்கியது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முழுநேர ஊழியர் சிவராம்ஜி ஜோக்லேக்கர்.


தேசப் பிரிவினை தமிழகத்தில் எதிரொலித்ததா?

கொஞ்சம் இருந்தது. பிரிவினையால் அகதிகளாக்கப்பட்ட ஹிந்துக்களின் முகாம் ஆவடியில் இருந்தது. அங்கு சேவை செய்ய சங்கத்தில் இருந்து பல பேர் சென்றோம். அதில் நானும் ஒருவன். அந்த சோகக் கதையைக் கேட்டதும் வாழ்க்கை வெறுத்துவிட்டது. ‘என்ன கல்யாணம்…? என்ன குழந்தை குட்டி…?’ என்று சங்கத்தில் பிரசாரக்காகி விட்டேன்.

ஆரம்ப காலங்களில் சங்கத்தில் என்னென்ன பொறுப்புகளில் இருந்தீர்கள்?

முதலில் பிரசாரக்காக வந்தேன். பிறகு விபாக் பிரசாரக் (மூன்று மாவட்ட பொறுப்பாளர்), சக பிராந்த பிரசாரக் (மாநில இணை அமைப்பாளர்), பிராந்த பிரசாரக். இப்படிப் பல பொறுப்புகளில் இருந்தேன்.

ஸ்ரீகுருஜி கோல்வல்கர் தமிழகத்துக்கு வந்தபோதெல்லாம் நீங்கள்தான் மொழிபெயர்ப்பு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அது பற்றி?

அவரது வாழ்க்கையே நமக்கு வழிகாட்டி. அவ்வளவுதான்.

சங்க பிராந்த பிரசாரக்காக இருந்தபோது பல வேலைகளுக்கு உத்வேகமாக இருந்திருக்கிறீர்கள். முக்கியமாக, ஹிந்து ஆலயப் பாதுகாப்புக் குழு…?

கோயில் அழிந்துகொண்டிருந்தது. அதை கவனிக்க யாரும் இல்லை. அதைச் சீரமைக்கத்தான் தொடங்கினோம்.

நாத்திகப் பிரசாரம் அதிகமாக இருந்த காலகட்டம் அது. அப்போதைய சூழல் எப்படி இருந்தது?

சேலத்தில் ராமருக்குச் செருப்பு மாலை ஊர்வலம் நடப்பதற்கு முன்னால், என்னுடன் 50 பேர் இருந்தார்கள். ஊர்வலம் முடிந்ததும் அவர்கள் பயந்து ஒளிந்து கொண்டார்கள். (சிரிக்கிறார்.) என்ன ஹிந்து சமுதாயம் இது? அது என்னை ரொம்ப பாதித்தது. அதேமாதிரி, கன்னியாகுமரியை கன்னிமேரி மாவட்டமா மாத்த திட்டம் போட்டாங்க. மீனாட்சிபுரத்துக்கு வேற பெயர் வைக்க முஸ்லிம்கள் முயற்சி பண்ணாங்க.

தேசிய சிந்தனைக் கழகம் என்ற பெயரில் அமைப்பு நடத்தினீர்களே?

தமிழ்வாணன், தீபம் நா.பார்த்தசாரதி இவங்கல்லாம் வந்தார்கள். தி.க. நாத்திக மாநாடு போட்டு ஹிந்துக்களைப் பத்தி ரொம்பக் கேவலமா பேசினாங்க, எழுதினாங்க. அதை நானும், தீபம் நா.பார்த்தசாரதியும் சேர்ந்து எதிர்த்தோம். ‘இது பைத்தியக்காரத்தனம், அவங்க முரடர்கள். எதிர்த்தா அடிச்சி காயப்படுத்திடுவாங்க’ன்னு எல்லோரும் சொன்னாங்க. ‘மிரட்டலுக்குத் தயாரா இருக்கேன்’ன்னு நான் சொன்னேன். (சிரிக்கிறார்)

நாத்திக பிரசாரத்துக்கு எதிரா பக்தி இயக்கங்கள் இல்லையா?

பக்தி இயக்கங்கள் இருந்தன. ஆனா, ஹிந்து வேற, பக்தி வேறன்னு நினைச்சாங்க. ஹிந்துக்களுக்கு அந்த பயத்தை போக்கணுங்கறது என்னோட எண்ணம்.

நெருக்கடி (எமர்ஜன்ஸி) காலத்தில் ஆதரவு எப்படி இருந்தது?

ஆதரவைத் திரட்ட வேண்டியிருந்தது. ஆனா ஆதரவைத் திரட்டினா, நெருப்பு மாதிரி பரவியது. கொஞ்சம் கொஞ்சமா நிறைய பேர் வந்தாங்க.

எந்தக் கட்டத்தில் இந்து முன்னணி தொடங்கினீர்கள்? எடுத்த முதல் வேலை எது?

ஹிந்துக்களைக் காப்பாத்தறதுதான் முதல் வேலை. அப்போ, கரூரில் சங்கத்தின் கூட்டம் நடந்தது. யாதவராவ் ஜோஷிஜி (ஆர்.எஸ்.எஸ். அகில பாரத இணைப் பொதுச் செயலாளராக இருந்தவர்), சூரியநாராயண ராவ் ஜி எல்லாம் வந்திருந்தாங்க. என்னிடம் இந்து முன்னணி ஆரம்பிக்கச் சொன்னாங்க. என்னிடம் கொஞ்சம் பேச்சாற்றல் இருந்ததா அவங்க நினைச்சாங்க. அப்படித்தான் ஆரம்பிச்சோம்.

ஆரம்பக்கட்ட வேலைகள் எப்படி இருந்தன?

ஆரம்பத்துல பொதுக்கூட்டங்கள் போடலை. ஐந்து ஐந்து பேரா தமிழ்நாடு முழுக்க 78 இடங்களில் பேசத் தொடங்னோம். சும்மா அரட்டை, அவ்வளவுதான். கால இடைவெளியெல்லாம் இல்லை. எப்போ தேவையோ அப்போதெல்லாம் பேசினோம். அப்படியே இயக்கமும் வளர்ந்தது.

உங்கள் தலையில் வெட்டுப்பட்டபோது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?

டாக்டர் சொன்னாங்க. வலது கை கால் போயிடும், பேச்சு போயிடும், ஞாபகசக்தி இருக்காதுன்னு சொன்னாங்க. ஆனா, பிழைச்சு வந்தேன். (இவங்கதான் காரணம் என்று தன் அறையில் இருந்த விநாயகர், ஹனுமான் படங்களைக் காண்பிக்கிறார்.)

விநாயகர் சதுர்த்தியை எப்போது தொடங்கினீர்கள்?

புதுக்கோட்டையில ஏழெட்டு பேர் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தோம். சும்மா அரட்டை. காளியாத்தாவை கும்பிடுறவங்க மாரியாத்தாவை கும்பிடமாட்டாங்க. ஜாதி ரீதியா வேறுபாடு பார்க்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்போ எல்லோருக்கும் பொதுவான தெய்வம் எதுன்னு பேசினோம். பிள்ளையார்தான் எல்லோரும் கும்பிடறாங்க. அப்படித்தான் விநாயகர் சதுர்த்தி தொடங்கினோம்.

முதல் விநாயகர் புதுக்கோட்டையிலா…?

இல்ல, புதுக்கோட்டையில விவாதித்தோம். முதல் விநாயகர் சென்னையில், திருவல்லிக்கேணியில்தான். அப்போ ஊர்வலம் போகக்கூடாதுன்னு 200 போலீஸ்காரங்க மெஷின் கன்னோட நின்னாங்க. நான் கேட்டேன். “ஊர்வலம் போகக்கூடாதுன்னு 200 பேர் நிக்கறீங்க. ஊர்வலத்துக்காக ஒருத்தன் நிக்க மாட்டானா? நிச்சயம் நிப்பாங்க”ன்னேன்.


இந்து முன்னணி சார்பில் பல போராட்டங்கள் நடத்தினீர்கள். முக்கியமா என்னென்ன போராட்டங்கள்?

நானே லிஸ்ட் எடுக்கல. நிறைய போராட்டங்கள் நடத்தியிருக்கோம். லிஸ்ட் அனுப்பச் சொல்லி பல பேர் கிட்ட கேட்டிருக்கேன். லிஸ்ட் கிடைச்சதும் சொல்லறேன். இப்போ நினைவில் இல்லை.

ஹிந்து வாக்கு வங்கி என்று முதலில் பேசியவர் நீங்கள்?

கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களிடம் ஓட்டு இருப்பதால்தான் அரசியல்வாதிகள் அவங்களோட கால்ல விழறாங்க. அதனால ஹிந்து வாக்கு வங்கியை உருவாக்கினாதான் ஹிந்துக்களுக்கு விடிவுகாலம் கிடைக்கும்னு நினைத்தோம். கன்னியாகுமரி மாவட்டத்துல நான், தூணுலிங்க நாடார் எல்லாம் பிரசாரம் பண்ணி பாலசந்தர் என்பவரை முதன்முதலா ஜெயிக்க வச்சோம். இந்து முன்னணி வளர்ச்சிக்கு முக்கியமான காரணம் தாணுலிங்க நாடார்.


இவ்வளவு பெரிய பிரம்மாண்டமான இயக்கத்தை வளர்த்திருக்கிறீர்கள்?

ஆரம்பத்தில் பெரிய பெரிய வேலைகளைச் செய்யலே. சின்ன சின்ன பணிகள் எடுத்து கொஞ்சம் கொஞ்சமாத்தான் பிரம்மாண்டமான இயக்கமானோம்.

தெய்வத் தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பை நடத்துகிறீர்களே?

ஆமாம். தெய்வம் வேற, தமிழ் வேற இல்லை. தமிழில்லாத பக்தி இலக்கியங்கள் கிடையாது. ஹிந்து இல்லாத தெய்வங்கள் இல்லை என்பதே நோக்கம்.

தீண்டாமையை எதிர்த்து இந்து முன்னணி போராடிய அனுபவங்கள் இருக்கா?

நிறைய இருக்கு. எங்கேயாவது ஜாதிச் சண்டைகள் நடந்தா அங்க போய், சம்பந்தப்பட்ட ரெண்டு ஜாதிகள் கிட்டயும் பேசுவோம். முதல்ல ரெண்டு தரப்பிலயும் தனித்தனியா பேசுவோம். அப்புறம் சேர்த்து வச்சி பேசுவோம். நாம் எல்லாம் ஒண்ணுதான்னு பேசுவோம்.

ஆண்டாள் பிரச்சினையில் ஹிந்து சமுதாயம் ஒருங்கிணைந்து வந்ததா?

ஆண்டாள் பிரச்சினை பத்தி ஒரு கூட்டம் நடக்குது, வாங்கன்னு ஒருத்தர் கூப்பிட்டார். நானும் கலந்துகொண்டேன். நிறைய பேச்சாளர்கள் இருந்தாங்க. ஹிந்து சமுதாயத்துல பேச்சாளர்களுக்கு குறைச்சல் இல்ல. ஒருங்கிணையணும். அப்போ இவங்கதான் என் கண் முன்னாடி வர்றாங்க. (பிள்ளையார், ஹனுமான் படங்களை கை காண்பிக்கிறார்.)


திராவிட கட்சிகள் வீழ்ந்து வரும் நேரத்தில், தேசிய சக்திகளுக்கும் எதிர்ப்புகள் இருக்கிறதே?

இல்லை. எல்லோரிடமும் ஹிந்து உணர்வு இருக்கு. அப்படித்தான் தனித்தனியா பல பேரிடம் பேசும்போது எனக்குத் தெரிகிறது.


ஆனால் தமிழகத்தில் பா.ஜ.க. வளரவில்லையே?

தினம் ஒரு பேட்டி கொடுப்பதால் பயனில்லை. குழுவாக இணைந்து களப்பணி செய்யணும். ஒருத்தர் என்கிட்ட வந்து, ‘ஆயிரம் பேர் இருக்கற மீட்டிங் ஏற்பாடு செய்தா அதுல பேசி அவங்களை நம்ம பக்கம் கொண்டு வர்றேன்’ன்னார். ஐந்து பேர் இருந்தா நான் பேசறேன்னு சொன்னேன். சிறுக சிறுகதான் கூட்டம் வரும். நான் தமிழ்நாடு முழுக்க 25 வருஷம் சுத்தினேன். அப்போது சாப்பாடு கிடைக்காது. மதியம் ஓய்வெடுக்க இடம் இருக்காது. ரெண்டு சோடா பாட்டில் வாங்கி ஒண்ணை கைகால் கழுவறதுக்கும் இன்னொன்னை குடிக்கறதுக்கும் வச்சிப்பேன். இதை எதற்கு சொல்றேன்னா, உழைச்சா பலன் உண்டு. ஒரே நாள்ல வளர்ந்துலாம்னு நினைக்கறாங்க. நரேந்திர மோடியா மாறணும்னு நினைக்கறாங்க. மோடியும் உழைச்சதாலதான் முன்னுக்கு வந்தார். சும்மா வரலை.

ஊடகம், இலக்கியத் துறையில் ஹிந்துக்களுக்கு எதிரான சூழல் இருக்கிறதே?

திராவிட மாயை போல இதுவும் ஒரு மாயைதான். மாயை என்பது ரொம்ப நாளைக்கு நிலைக்காது. இது எனது அனுபவம்.


உங்கள் வாழ்க்கை லட்சியம் நிறைவேறியுள்ளதா?

இப்போதான் நிறைவேற ஆரம்பிச்சிருக்கு. ஆரம்ப காலத்துல இருந்ததை விட வேலைகள் இப்போ அதிகமாயிருக்கு. பாஜக ஒப்புக்கறதோ இல்லையோ, என் கனவு ஹிந்து சாம்ராஜ்யம்தான். அதனால்தான் என் அறையில வீர சிவாஜி படத்தையும் மாட்டியிருக்கேன்.

Leave a Reply