Posted on Leave a comment

யஷஸ்வீ ஹோங் யா – கோ. எ. பச்சையப்பன்

(யஷஸ்வீ ஹோங் யா – மராட்டி மொழி. தமிழில் ‘புகழுடன் திரும்பி வா’ என்று பொருள்) 

நான் துயரத்தின் வாயிலாக சாமானத்தை அடைய விரும்புகிறேன் – காந்தி

1948 ஜனவரி 30. நேரம் தவறாமைக்காக இன்றளவும் புகழப்படும் காந்தி, தனது எளிய சொத்துக்களில் ஒன்றான இங்கர்சால் கடிகாரத்தைப் பார்த்தபடி, சர்தார் படேல் உடனான திட்டமிடப்படாத திடீர் சந்திப்பால் பிரார்த்தனைக் கூட்டத்திற்குத் தாமதமாவதை உணர்ந்தார். ‘மனிதக் கைத்தடிகள்’ என காந்தி அழைக்கும் மனு மற்றும் ஆபா ஆகியோரின் தோள்களில் கை வைத்தபடி பிரார்த்தனைக்கு விரைந்தார். ஜனவரி 12லிருந்து 18 வரை உண்ணாவிரதமிருந்த 78 வயது முதியவரான காந்தி தன் ஆரோக்கியத்தை மீண்டும் பெறத் தொடங்கியிருந்தார். அவர் நடையில் பழைய வேகத்தினைப் பார்த்தவர்களுக்கு, (காந்தி அவ்வப்போது கூறும் வண்ணம்) 110 வயது வரை காந்தி வாழ்வார் என தோன்றிற்று. ஆனால் சில நிமிடங்களில் அவர் சுடப்பட்டார். 9 மிமீ பெரெட்டா தானியங்கி பிஸ்டலைப் பயன்படுத்தி காந்தியின் 110 வயது வரையிலான வாழ்வென்ற கனவைத் தகர்த்தவர் நாதுராம் கோட்ஸே.

கொலைக்கு தான்மட்டுமே காரணம் என கோட்ஸே கூறினாலும் – அவர் சட்டைப் பையில் வைத்திருந்த செலவின விவரம், தங்கியிருந்த விடுதி என போலிஸ் புலனாய்வு செய்து, நாராயண ஆப்தே, நாதுராம் கோட்ஸே, கோபால் கோட்ஸே, மதன்லால், விஷ்ணு கார்க்கரே, பார்ச்சகர், திகம்பர் பாட்கே, பாட்கேயின் பணியாள் சங்கர் மற்றும் வீரசாவர்க்கர் ஆகியோரைக் கைது செய்தது.

கொலை, கொலை செய்யச் சதி, ஆயுதச் சட்டத்தின் கீழ் தண்டிக்க ஏதுவான குற்றங்கள் ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. ஆனால் கைது செய்யப்பட்ட ஒன்பது பேரில் இதற்கான எந்த சாட்சியங்களுமற்று தடைக்காவலில் வைக்கப்பட்டவர் சாவர்க்கர். இதன்படி சாட்சியங்கள் ஏதுமற்று கைது செய்யலாம், சாட்சிகளைப் பின்னால் ‘ஜோடித்துக் கொள்ளலாம்.’ வியப்புக்குரிய வகையில் இந்திய விடுதலைக்கு முன்பு இந்தத் தடைக்காவல் சட்டத்தினை எதிர்த்து நேருவின் காங்கிரஸ் வெள்ளையர் ஆட்சியில் போராடிற்று. ஆட்சியதிகாரம் கைக்கு வந்த பின்னர் காலனி ஆதிக்கத்தின் நீட்சியாகவே காங்கிரஸ் நடந்துகொண்டது.

கைது செய்யப்பட்டவர்களுள் ஒருவரான, ‘வீர’ என்ற அடைமொழியுடன் விளிக்கப்பட்டவரான சாவர்க்கரின் அப்போதைய வயது 64. ஓராண்டிற்கும் மேலாக சுகவீனத்துடன் இருந்தவர். சிவாஜி, திலகர் மற்றும் பேஷ்வாக்களுக்கு இணையாக மராட்டியத்தில் மதிக்கப்பட்டவர். எல்லாவற்றிற்கும் மேலாக, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக அந்தமானிலும் வீட்டுச்சிறையிலுமாக 26 ஆண்டுகள் வெள்ளையரின் அரசால் சிறை வைக்கப்பட்டவர். ஒப்பீட்டளவில் அவருடைய சமகாலத்தில் வேறெந்த இந்தியத் தலைவர்களை விடவும் அதிக நாட்கள் விடுதலைப் போராட்டத்திற்கென சிறைபட்டவர். பின்னாட்களில் இந்தியரல்லாத ஒருவருக்கு தனது தேசவிடுதலைக்காக 27 ஆண்டுகள் சிறையிலிருந்தார் என்பதற்காக பாரதரத்னா விருதே வழங்கப்பட்டது. அவர் தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா. ஆனால் சாவர்க்கருக்குச் சிறை!

உண்மையில் சாவர்க்கரின் பங்குதான் என்ன? காந்தி கொலையில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அவர் ஈடுபட்டாரா?

சுந்தர ராமசாமி தன் கட்டுரையொன்றில் இப்படி எழுதினார் – ‘சிறுவயதில் நோயுற்றுக் கிடந்தேன். அப்போது வாசித்த புத்தகங்களில் மறக்க முடியாதது ‘எரிமலை’ என்ற நூல். சாவர்க்கர் எழுதியது.’

மேற்கண்ட வரிகள் எரிமலையை வாசிக்க வேண்டும் என்ற ஆவலை என்னிடம் தூண்டிற்று. அடிப்படைக் கல்வி முதல் முதுநிலைப் பட்டப்படிப்பு வரை அந்த நூலைப் பற்றியோ, அதன் ஆசிரியரான சாவர்க்கரைப் பற்றியோ நான் படித்த எந்தப் பாடப் புத்தகங்களிலும் இல்லை.

குஹாக்களும், பாமிதத்களும், தாப்பர்களும், சர்மாக்களும் கோலோச்சும் பல்கலைக்கழகங்களின் வராந்தக்களில் இன்றளவும் ‘இந்துத் தீவிரவாதி’ எனத் தூற்றப்படுபவர் சாவர்க்கர். ‘சமயச்சார்பற்ற’ மேற்படி வரலாற்றுநூல் ஆய்வாளர்கள் ஒருவரை மதத்தீவிரவாதி என முத்திரை குத்த, அவர் தன்னை இந்து என அடையாளப்படுத்திக் கொண்டாலே போதுமானது என்பது வேறு விஷயம்.

நாசிக் அருகில் ஒரு சிறிய கிராமத்தில் 1883ல் பிறந்தவர் விநாயக் தாமோதர் சாவர்க்கர். தனது 12 வயதிலேயே தன் கிராமத்திலிருந்த சில குண்டர்களை தனது பள்ளி சகாக்களோடு இணைந்து விரட்டியவர் சாவர்க்கர். 16 வயதில் பிரிட்டிஷாரை எதிர்த்து ஒரு அமைப்பையும் ஏற்படுத்தியவர். பள்ளிக் கல்வியில் சாதாரண மாணவராக இருந்தபோதும் விரிவான வரலாற்று நூல்களின் வாசிப்பிலும், சமஸ்கிருத வேத நூல்களிலும் ஆழமான அறிவைப் பெற்றிருந்தார். 1903ல் மெட்ரிகுலேஷன் தேர்வினில் வென்று நாசிக்கை விட்டு பூனாவிற்கு கல்லூரிப் படிப்பிற்குச் சென்றபோது, நாசிக்கின் முக்கியப் புள்ளிகளின் திரண்ட வழியனுப்பு விழாவைப் பெறும் அளவிற்குச் செல்வாக்கினைப் பெற்றிருந்தார்.

பூனாவில் கல்லூரியில் பயின்றபோதே அனல் கக்கும் பேச்சுகளால் அறியப்பட்ட மாணவரான அவர், அந்நிய ஆடைகளை எதிர்த்ததால் கல்லூரியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அந்நாளைய அரசியல் ஆர்வலர்களின் பலரின் அடியொற்றி சாவர்க்கரும் சட்டம் பயில இங்கிலாந்து சென்றார். 22 வயதிலேயே அரசால் கண்காணிப்பிற்கு உள்ளாக்கப்பட்ட இவருடைய வெளிநாட்டுப் பயணம் அப்போதைய பிரிட்டிஷ் அரசிற்கு நிம்மதியை அளித்தது. ஆனால் அது தற்காலிகமானதே.

இலண்டனில் சாவர்க்கர் இருந்தபோது எழுதியதுதான் ‘எரிமலை.’ ‘1857 – கலகம்’ என்று கொச்சையாக பிரிட்டிஷாரால் அழைக்கப்பட்டதும், அதனைக் கூச்சமின்றி சிப்பாய்க் கலகம் எனப் பாடப்புத்தகங்களில் மொழிபெயர்த்துப் பல வருடங்கள் இந்தியர்கள் வாசித்த முதல் இந்திய சுதந்திரப் போரை சாவர்க்கர் எழுதினார். இலண்டனில் இந்திய விடுதலைக் கழகத்தில் இதன் முதல் இரண்டு அத்தியாயங்களை வாசித்துக் காட்டினார். அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இந்தியாவிற்கும் அனுப்பினார். விடுதலை உணர்ச்சியைத் தூண்டும் அபாரமான நூலின் தொடக்கம் என்பதை அறிந்த ஆங்கில அரசு அதனைத் தடைசெய்துவிட்டது. ஒரு நூல் முற்றாக எழுதப்படும் முன் தடைசெய்யப்பட்டதும் ‘சாதனை’தான்

1909ல் லண்டனில் இந்திய விடுதலைக் கழகத்தின் தீவிர உறுப்பினராக இருந்த மதன்லால் திங்கரா, சர் கர்சன் வைலி என்பவரைச் சுட்டுக் கொன்றார். சாவர்க்கர் மீதான கண்காணிப்பு இப்போது ஸ்காட்லாண்ட் யார்ட் வசம் சென்றது. எனவே அவர் பாரிஸிற்குச் சென்றார். என்றாலும் இந்தியா திரும்ப லண்டன் வந்தபோது கைது செய்யப்பட்டார். நீதிமன்றம் அவரை இந்தியாவிற்கு அழைத்துச் செல்ல உத்தரவிட்டது.

எஸ்.எஸ்.மௌரியா என்ற கப்பல் மூலம் இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்ட சாவர்க்கர் ‘மார்ஸேல்’ இடத்திற்கு வரும்போது கப்பலில் இருந்து குதித்து தப்பிக் கரையை அடைந்தார். அமெரிக்க ஹாலிவுட் படத்தில் இத்தகைய காட்சி வைக்கப்பட்டால்கூட நம்புவதற்குக் கடினம்தான். ஆனால் அது நிகழ்ந்தது.

ஆனால் விதி வேறாக இருந்தது. மார்ஸேலின் போலிஸார் அவரை மீண்டும் பிரிட்டிஷ் போலிஸிடமே ஒப்படைத்துவிட்டனர். பிரிட்டிஷாரால் 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அந்தமான் சிறைக்கு அனுப்பப்பட்டார். பிரிட்டிஷாருக்கு எதிரான அவருடைய நேரிடையான விடுதலைப் போர் இவ்விதம் முடிந்தது.

அந்தமான் சிறையொன்றும் பிர்லா மாளிகையல்ல. ஒரு மனிதனை உயிருடன் கொல்லவும், மனரீதியாகச் சிதைவடையவும் போதுமான எல்லா ‘வசதிகளும்’ கொண்டது அது. பத்தாண்டுகளில் சாவர்க்கர் நலிந்துபோனார். பிறகு இந்தியச் சிறைக்கு மாற்றப்பட்டார். நான்கு ஆண்டுகளில் மேலும் நலிவுற்ற பின்னர் ‘இரத்தினகிரி’ என்ற மாவட்ட எல்லையை விட்டு வெளியேறக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீனில் வெளிவிட்டது பிரிட்டிஷ் அரசு. இருவேறு சிறைகளில் 14 ஆண்டுகள் – இந்தியாவின் ஆயுள் தண்டனைக்குச் சமம். சிறையிலிருந்த அவர் மிகவும் நலிந்திருந்தார் – ஆனால் உள்ளத்தளவில் அல்ல.

1929. ஒரு கோடைக்காலத்தில் இவரைச் சந்தித்தார் ஒரு இளைஞர். அவருடைய பெயர் நாதுராம் கோட்ஸே. தீவிர தேசப்பற்றும் மதச்சீர்த்திருத்தக் கருத்துக்களையும் கொண்டிருந்த சாவர்க்கரை கோட்ஸே ஒரு திருவுருவாகவே எண்ணிப் பின்பற்றினார். 1944ல் ‘தி அக்ரானி’ என்ற இதழை சாவர்க்கரின் ஆதரவின் பேரில் கோட்ஸே வெளியிட்டார். இதன் தீவிரப்போக்கால் 1947 ஜுலை 03ல் தடைசெய்யப்பட்டது. பத்தே நாட்களில் கோட்ஸே வேறு இதழைத் தொடங்கினார். அதன் பெயர் ‘இந்து ராஷ்ரடிரம்.’ இதன் டெலிபிரிண்டரில்தான், காந்தி உண்ணாவிரதம் தொடங்கிய செய்தி வெளியானது. 1948 ஜனவரி 12ல் உண்ணாவிரதம் தொடங்கிய காந்தி தன் நோக்கத்தில் வெற்றியடைந்தார். பாகிஸ்தானுக்கு இந்தியா 55 கோடி வழங்கும் என்று முடிவானது. ஏறக்குறைய தனக்கெதிரான ஆயுதங்கள் வாங்க, பங்காளிக்கு இந்தியா தானே பணம் தந்தது எனலாம். ஜனவரி 18ல் உண்ணாவிரதம் நிறைவுபெற்றது.

காந்தி கொலையில் கைது செய்யப்பட்டவர்களுள் சாவர்க்கரைத் தவிர்த்து மற்ற அனைவர் மீதும் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த சாவர்க்கர் 1948 பிப்ரவரி 05ல் கைது செய்யப்பட்டார். காந்தி கொலைவழக்கு வழக்கமான நீதிமன்றத்தில் அல்லாமல் டில்லி செங்கோட்டையில் நடைபெற்றது. இதழாசிரியர்களின் பார்வைக்கு விசாரணை அனுமதிக்கப்பட்டது.

வீரசாவர்க்கருக்காக எல்.பி.போபட்கர் என்பவர் வழக்காட ஆஜரானார். வழக்கு விசாரணைக்காக அவர் தில்லியிலிருந்தபோது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ‘இன்று மாலை மதுரா செல்லும் சாலையில் ஆறாவது மைல்கல்லில் என்னை சந்தியுங்கள்’ என்றது மறுமுனை. அவ்விதம் அன்று மாலை போபட்கர் தன்னை அழைத்த நபரைச் சந்தித்தார். அந்நபர், “உன் கட்சிக்கார் (வீரசாவர்க்கர்) மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. பயனற்ற வெறும் குற்றச்சாட்டுகள். பட்டேல் கூட எதிர்த்தார். அமைச்சரவையிலும் பலர் எதிர்த்தனர். ஆனால் ‘அந்த ஆணைக்கு’ எதிராக ஒன்றும் செய்யமுடியவில்லை என்றாலும் நீ ஜெயிப்பாய்” என்றார். அந்த மனிதர், தனது கூரிய சட்ட மேதைமைக்காக இன்றளவும் மதிக்கப்படுபவரான டாக்டர் அம்பேத்கர். ‘ஆணையை’ விடுத்தவர் – நேரு.

பம்பாய் புலனாய்வுக் கிளையின் துணை ஆணையர் ஜாம்ஷெட் தோரவ் நாகர்வாலா காந்தி கொலையை, கொலை முயற்சி என்ற அளவிலேயே தடுத்திருக்கக்கூடிய வரலாற்று வாய்ப்பை நழுவ விட்டவர். ஏற்கெனவே பம்பாயின் உள்துறை அமைச்சரை சந்தித்து சாவர்க்கரை ஒரு சந்தர்ப்பத்தில் கைது செய்ய அனுமதி கோரியவர் நாகர்வாலா. அப்பழுக்கற்ற நேர்மைக்கு பெயர்போனவரான மகாராஷ்ட்ர உள்துறை அமைச்சர் கைதிற்கு அனுமதி மறுத்திருந்தார். அவர் மொரார்ஜி தேசாய். சாவர்க்கர் கைது விஷயத்தில் மூக்குடைப்பட்ட நாகர்வாலா, காந்தி கொலைக்குப் பின், கொலையைப் புலனாய்வு செய்துவந்த தில்லி போலிஸின் சூப்பிரண்டென்டாக நியமிக்கப்பட்டார். இம்முறை அவர் மூக்குடைபட நேரவில்லை. மேலும் சாவர்க்கரின் கைது ‘மேலிடத்தை’ திருப்தி செய்தது.

காந்தி கொலையில் பிடிபட்ட திகம்பர் பாட்கே-வின் வாக்குமூலம் மட்டுமே வீரசாவர்க்கருக்கு எதிரானதாக இருந்தது. பம்பாயின் கெலுஸ்கர் சாலையில் இயற்கை எழில் சூழ்ந்த ‘சாவர்க்கர் சதனில்’ கோட்சே, ஆப்தே இருவரும் அதன் புகழ்பெற்ற உரிமையாளரைச் சந்தித்தபோது அவர் ‘யஷஸ்வீ ஹோங் யா’[1] என வாழ்த்தியதாக பாட்கே சொன்னார். காந்தி கொலையில் அப்ரூவரான பாட்கே சிறையிலிருந்தபோது மது, மாமிசம், முட்டை, இனிப்புகள் மற்றும் சிகரெட்டுகள் அவருக்கு வழங்கப்பட்டன. தண்டனையிலிருந்து விடுதலையும் பெற்றார். ஊமையைக் கூட பேசவைக்கும் வல்லமை மிக்க போலிசால் விசாரணை, பாட்கேவை தமது விருப்பத்திற்கு வளைத்துக்கொண்டதைப் பின்னாளில் அவரே பேட்டிகளில் வெளியிட்டார். தனது தீவிர விசுவாசியான திகம்பர பாட்கேவிற்கு பஞ்சசீலக் கொள்கையைப் பின்பற்றிய காங்கிரஸ் அரசு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் அளித்தது. மேலும் அவருக்கு மும்பை சி.ஐ.டி. தலைமையக வளாகத்திற்குள் அதிகாரபூர்வ குடியிருப்பும் வழங்கப்பட்டது.

சாவர்க்கர் சதனில் கைப்பற்றப்பட்ட கடிதங்கள், நாதுராம் கோட்ஸே சாவர்க்கருக்கு எழுதியவை, போதுமான சாட்சியங்களாக இல்லை. சாவர்க்கர் போன்ற மாபெரும் தலைவர்களுக்குப் பல தொண்டர்கள் எழுதிய கடிதம் போன்றவையே அன்றி விஷேசமாக வேறேதும் அவற்றில் இல்லை. பணத்திற்கு விலைபோன பாட்கேவின் வேலையாள் சங்கரும் விசாரணையின்போது, ‘பாட்கே சொன்னவாறுதான் நான் வாக்குமூலம் அளித்தேன்’ என்று கூறியதால் சாவர்க்கரின் விடுதலை உறுதியானது. நாகர்வாலா இம்முறை சாவர்க்கரை கைது செய்ததோடு திருப்திபட்டுக்கொள்ள வேண்டியதாயிற்று. 1949 பிப்ரவரி 10 அன்று வீரசாவர்க்கர் விடுதலை செய்யப்பட்டார்.

‘யஷஸ்வீ ஹோங் யா’ என்ற வாழ்த்தைத் தெரிவித்ததாக பாட்கேவிடம் ‘பெறப்பட்ட’ வாக்குமூலத்தை வைத்து இன்றளவும் அவரை காந்தியைக் கொன்றவர்களுடன் இணைத்து விமர்சிக்கிறார்கள்.

மேலும் பகுத்தறிவு பேசும் ஒரு இதழ், தனது பெயருக்கு மாறாக ‘உண்மையைத்’ தவிர பொய்யை பேசும் இதழ், சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதினார் என விமர்சிக்கிறது. அவர்கள் வசதியாக மறைக்கும் வரலாற்று ‘உண்மை’, அவர்களின் கொள்கையை வகுத்தளித்த ‘பெரியாரும்’ பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்டு கடிதம் எழுதியவர்தான் என்பது.

12 வயது முதல் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் – நாடு கடந்தும் விடுதலை உணர்வை வளர்த்தவர் – தப்பிக்க நம்புவதற்கரிய சாகசங்களை மேற்கொண்டவர் – அனல் பறக்கும் பேச்சாளர் – அபாரமான எழுத்தாளர் – ஒரு தேசியத்தலைவராக மலர்ந்திருக்க வேண்டிய சகல தகுதிகளையும் பெற்ற சாவர்க்கர் – தனிப்பட்ட நபர்களின் வஞ்சத்தால் துன்புறுத்தப்பட்ட வரலாறு அதிகம் பேசப்படாதது அவலமே.

வீரசாவர்க்கருக்கு தண்டனையைப் பெற்றுத் தருவதில் காங்கிரஸ் அரசு தோற்றபோதும் அவர்மீது களங்கம் கற்பிப்பதில் வெற்றிபெற்றது என்றே கூறவேண்டும். குறைந்தபட்சம் அவர் புகழை மகாராஷ்ட்டிர எல்லைக்குள் சுருக்கி, தேசிய அளவில் பரவாமல் தடுத்ததில் மட்டுமாவது வெற்றிபெற்றது அப்போதைய அரசு. வீரசாவர்க்கர் போன்ற ஸ்திதப் பிரக்ஞனுக்கு இது மரணதண்டனைக்கு நிகரானதே.

Leave a Reply