ஸ்ரீரங்கம், கரிசைலம் அஞ்சனகிரிம்
தார்க்ஷாத்திரி சிம்மாசலவ் ஸ்ரீகூர்மம்
புருஷோத்தமஞ்ச பதரீ நாராயணம் நைமிசம்
ஸ்ரீமத்த்வாரவதி ப்ரயாக் மதுரா
அயோத்தியா கயா புஷ்கரம் சாளக்ராமகிரிம்
நிஷேவ்ய ரமதே இராமானுஜோயம் முநிஹி
ஸ்ரீராமானுஜர் இந்தியாவைச் சுற்றி விஜயம் செய்த பாதையைக் குறிக்கும் ஸ்லோகம். இதில் இருப்பது ஊர்களின் பெயர்கள்தான் – ஸ்ரீரங்கம், காஞ்சிபுரம், திருவேங்கடம், அஹோபிலம், சிம்மாச்சலம், ஸ்ரீகூர்மம், புரி ஜகந்நாதம், பத்ரி, நைமிசாரண்யம், த்வாரகா, ப்ரயாகம் மதுரா, அயோத்யா, கயா, புஷ்கரம், சாளக்ராமம். இந்த இடங்களை எல்லாம் கூகிள் மேப் கொண்டு பார்த்தால் பாரத தேசமே புண்ணிய பூமி என்பது தெரியும்.
2016, 2017 மேலே குறிப்பிட்ட திவ்ய தேசங்களை எல்லாம் சென்று தரிசிக்கும் பேறு கிடைத்தது. அதில் ‘புருஷோத்தம’ என்று வரும் இடம் ஒடிசாவில் புகழ்மிக்க ஸ்ரீ புரி ஜகந்நாத கோயில். அதைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை.
அக்டோபர் 6, 2017 காலை 6.30மணிக்குக் கடலில் ஸ்நானம் செய்ய கிளம்பினோம். ‘ஆழி மழைக் கண்ணா’ என்று பாடாமலே நல்ல மழை. கண்ணன் கீதையில் ‘நீர் நிலைகளுள் நான் கடலாக இருக்கிறேன்’ என்கிறான். கறுத்த மேகம், மழை, சுற்றிலும் கடல் என்று எல்லாம் கண்ணனாகவே காட்சி அளித்தது.
இங்கே உள்ள கடல் ‘சக்ர தீர்த்தம்’ என்று கொண்டாடப்படுகிறது. இந்தக் கடலிலிருந்து தான் ‘தாரு’ ரூபத்தில் (தாரு – மரக்கட்டை) பெருமாள் தோன்றினார்.
புரி ஜகந்நாதரின் ஸ்தல புராணம்
க்ருத யுகத்தில் இந்திரத்துயும்னன் என்ற அரசன் அவந்திகா நகரை ஆண்டு வந்தான். சிறந்த விஷ்ணு பக்தன். அவனுக்கு ஒரு ஆசை. நடக்கிற, ஓடுகிற, ஆடுகிற, உண்ணுகிற, கண்சிமிட்டும் பெருமாளை நேரில் பார்க்க வேண்டும் என்று. குல குருவிடம் தன் ஆசையைச் சொன்னான். குருவிற்கு உடனே பதில் சொல்லத் தெரியவில்லை. கேட்டுச் சொல்லுகிறேன் என்றார்.
யாத்திரை சென்று அரண்மனையில் வந்து உணவு உண்ணும் யாத்திரிகர்களிடம் அரசனின் ஆசையைச் சொன்னார். யாருக்கும் பதில் தெரியவில்லை. ஒரு நாள் ஒரு யாத்திரிகர், ‘நான் அனைத்து புண்ய ஸ்தலங்களையும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றவன். பாரத தேசத்தில் உத்கலதேசத்தில் (தேசிய கீதத்தில் ‘திராவிட உத்கல பங்கா’ என்று வரும் உத்கலதான் இன்றைய ஒடிசா.) கடலுக்கு வடக்கே இருக்கும் புருஷோத்தம சேஷத்திரத்தில் அடர்ந்த காடுகளுக்கு நடுவே மலை மேல் ஆலமரத்தின் பக்கம் இருக்கும் ஒரு கோயிலில் இருக்கிறார். நானே பல ஆண்டுகள் அவருக்குத் தொண்டு செய்துள்ளேன்’ என்று கூற உடனே அரசனிடம் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
குரு தன் தம்பியான வித்யாபதியை முதலில் அங்குச் சென்று விவரம் அறிந்து வரச் சொன்னார். வித்யாபதி தேடி அலைந்தார். ஒரு நாள் மாலை சூரியன் அஸ்தமனம் ஆகும் சமயம் யாத்திரிகர் சொன்ன அடையாளத்துடன் மலை உச்சியில் ஆலமரத்தைக் கண்டார். இரவு, இருட்டு என்று சேர்ந்துகொள்ள, அடர்ந்த காட்டுப் பகுதியில் செல்ல முடியாமல் அங்கேயே தங்கினார். அப்போது அங்கே பேச்சுக் குரல் கேட்டது. காட்டுவாசிகள் இவர்களை ஒரு ஆசிரமத்துக்கு அழைத்துச் சென்றார்கள். ஆசிரமத்தில் விஷ்வாசு என்பவர் இவருக்கு உணவு கொடுத்து ஓய்வு எடுக்கச் சொன்னார். ஆனால் வித்யாபதி ‘எங்கள் மன்னன் இந்தச் செய்திக்காக உபவாசம் இருக்கிறார்… ஆகவே உடனே மலை மேல் போக வேண்டும்’ என்று சொல்ல, ‘சரி வாருங்கள் போகலாம்’ என்று இருளில் அடர்ந்த காட்டுப்பகுதியில் அழைத்துச் சென்றார்.
விடியற்காலை ஆலமரத்தை அடைந்து, அதன் பக்கம் பேரொளியோடு நீலக் கல் போல எழுந்தருளிய நீல மாதவனனை வியந்து வணங்கி கீழே இறங்கி ஆசிரமத்தை அடைந்தார்கள்.
அங்கே விஷ்வாசு இவருக்குப் கொடுத்த பிரசாதம் பிரமாதமாக இருக்க, ‘இது என்ன பிரசாதம்? ‘ என்று வினவ, ‘இது மஹா பிரசாதம்… இந்திரன் சமைத்து ஜகந்நாதருக்கு அளித்த பிரசாதம்’ என்று அதன் பெருமைகளைச் சொன்னார். கூடவே அதிர்ச்சியான தகவலையும் சொன்னார். உங்கள் மன்னன் இங்கே வரும் போது பெருமாள் அவருக்கு இது போலக் காட்சி அளிக்க மாட்டார். ஆனால் இந்த விஷயத்தை மன்னனிடம் சொல்லாதீர்கள் என்றார். வித்யாபதி கொஞ்சம் பிரசாதத்தைக் கட்டிக்கொண்டு மன்னரைக் காண விரைந்தார்.
மன்னனிடம் நடந்தவற்றைச் சொல்லி நீல மாதவப் பெருமாளின் வடிவழகைச் சொல்லி, பிரசாதத்தைக் கொடுத்தார். மன்னன், ராணி குண்டிச்சா, பிரஜைகள் புடை சூழ உடனே புறப்பட்டார்கள். அந்தச் சமயம் நாரதர் அங்கே வர அவரும் சேர்ந்துகொண்டார்.
உத்கல தேசத்தை அடைந்த போது அந்த தேசத்து மன்னன் இவர்களை வரவேற்று, ‘சூறாவளியால் நீல மாதவப் பெருமாள் மண்ணால் மூடப்பட்டுள்ளார். நாட்டையும் பல ஆபத்துகள் சூழ்ந்துள்ளன’ என்ற தகவலைச் சொன்னான். மன்னன் ஸ்ரீநரசிம்ம பெருமாளைத் தியானித்து ஆயிரம் அசுவமேத யாகங்களைச் செய்தான். அவனுக்குக் கனவில் ‘பாற்கடலுள் பையத்துயின்ற’ என்பது போல பெருமாள் காட்சி தந்தார்.
நாரதர், ‘பெருமாள் எழுந்தருளும் தருணம் நெருங்கிவிட்டது அவர் மரக்கட்டையாக உருவெடுக்கப் போகிறார்’ என்று கூறி எல்லோரையும் கடற்கரைக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு மரம் மிதந்து வந்தது.
இந்த மரத்தை அரசனும், ராணியும் பயபக்தியுடன் பெற்றுக்கொண்டார்கள். அப்போது ஒரு அசரீரி கேட்டது. ‘இந்த மரத்தை வஸ்திரத்தில் சுற்றி வையுங்கள், சில நாட்களில் ஒரு தச்சன் வந்து செதுக்குவார். செதுக்கும் ஒலி வெளியே கேட்காதபடி வெளியே வாத்தியம் வாசிக்க வேண்டும், தச்சன் செதுக்கும் போது அதை யாரும் பார்க்க கூடாது’ என்றது.
அசரீரி சொன்ன மாதிரியே சில நாள் கழித்து தச்சன் ஒருவன் வந்தான். தனி அறையில் பூட்டப்பட்டுச் செதுக்க ஆரம்பித்தான். சத்தம் கேட்காமல் இருக்க வாத்தியங்கள் இசைக்கப்பட்டன.
பதினைந்து நாள்கள் சென்றது. ராணிக்கு ஆவல் அதிகமாகியது. கதவில் காதை வைத்துக் கேட்ட போது செதுக்கும் ஒலி வரவில்லை. அரசன் தடுத்தும் கேளாமல், ராணி கதவை திறக்க அங்கே தச்சனை காணவில்லை. ஆனால் அங்கே கண்ணன் அவர் அண்ணன் பலராமர் தங்கை சுபத்ராவின் விக்கிரகங்கள் அங்கே காட்சி அளித்தார்கள். ஆனால் திருக்கைகள், திருப்பாதங்கள் இல்லாமல் பாதி முடிந்த நிலையில் இருக்க அனைவரும் திகைத்தனர்.
மீண்டும் அசரீரி, ‘பகவான் எளிய ரூபத்தில் இங்கே தரிசனம் தருவார்’ என்று கூற அன்று முதல் இன்று வரை பகவான் அதே ரூபத்தில் நமக்குக் காட்சி தருகிறார். (இந்தத் திருமேனிகள் சில ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றப்படும் – பார்க்க நவ கலேவர உற்சவம்.)
மரக்கட்டையாக பெருமாள் வந்த இடத்தில் அலைகளிடம் செல்லமாக அடி வாங்கி நெஞ்சால் வாரிப் பருகி குளித்துவிட்டு மீண்டும் மழையில் நனைந்து ‘குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவனை’ சேவிக்கக் கோயிலுக்கு புறப்பட்டேன்.
ஒடிசாவில் மழையை இடைஞ்சலாகக் கருதாமல் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் வேலை செய்வதைப் பார்க்க முடிகிறது. சாலை நடுவே தள்ளு வண்டியில் டீக்கடை நடத்துகிறார்கள். மழையில் பிளாஸ்டிக் குல்லா போட்டுக்கொண்டு சொட்ட சொட்ட நனைத்துக்கொண்டு வெதர்மேனை நாடாமல் ‘சாய்’ குடிக்கிறார்கள்.
தச்சன் வேலை செய்த இடம் குண்டிச்சா மந்தர் என்று அழைக்கப்பட்டு இன்றும் இருக்கிறது. கோயிலுக்குச் செல்லும் முன் ஸ்ரீ புரி ஜகந்நாத பெருமாள் வித்தியாசமாக இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். கண்கள் அகல விரிந்து ஆச்சரியமான ஸ்வரூபத்தில் இடமிருந்து வலமாகப் பலராமர், சுபத்ரா, கண்ணன் என்று காட்சி தருகிறார்கள். (கண்ணன் கருப்பு . பலராமர் வெள்ளை – பார்க்க பின்குறிப்பு.)
அவர்களுக்கு கை கால்கள் இல்லாமல் அரைகுறையாக இருப்பதற்குக் காரணத்தை மேலே பார்த்தோம். கண்கள் ஏன் விரிந்து ஆச்சரியமாகப் பார்க்கிறார்கள்?
இதோ இன்னொரு கதை!
புரியில் கண்ணனின் தோற்றம் பற்றிய கதை:
கண்ணன் துவாரகையை ஆண்ட போது அவர் நினைவில் கோகுலp பெண்களே நிறைந்திருந்தார்கள். அங்கே செய்த லீலைகளைக் கண்ணன் நினைத்து நினைத்து ஆனந்தப்பட்டுக்கொண்டிருந்தான். கண்ணனின் ராணிகள் இதைப் பார்த்து அவர்களுக்கு ஆர்வம் அதிகமாகியது. யாரிடம் சென்று சிறு வயது கண்ணனின் கதைகளைக் கேட்பது ? அவர்கள் ரோஹிணி தேவியை அணுகி கண்ணனின் லீலைகளைச் சொல்லுங்கள் என்றார்கள்.
ரோஹினி, ‘சரி சொல்லுகிறேன். ஆனால் கண்ணனும் பலராமனும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்று வாசலில் காவலுக்கு சுபத்ராவை நிறுத்தி வைத்து, கண்ணன் வந்தால் சமிக்ஞை கொடு என்று கூறி கண்ணனின் லீலைகளை,
ஆனைகாத்து ஓர் ஆனை கொன்று, அது அன்றி, ஆயர் பிள்ளையாய்
ஆனை மேய்த்து; ஆ-நெய் உண்டி; அன்று குன்றம் ஒன்றினால்
ஆனை காத்து மை-அரிக்கண் மாதரார் திறத்து – முன்
ஆனை அன்று சென்று அடர்த்த மாயம் என்ன மாயமே?
– திருமழிசை ஆழ்வார்
கஜேந்திரனைக் காத்தாய், குவலயாபீடமென்ற ஒரு யானையைக் கொன்றாய், பசுக்களை மேய்த்தாய், நெய்யை உண்டாய், ஆவொடு ஆயரையும் குடைக்கீழ் சேர்த்தாய், நப்பின்னையை அடைய ஏழு எருதுகளைக் கொன்றாய். நீ மாயன்!
என்று ரோஹினி தேவி கதையைச் சொல்ல சொல்ல, அவள் சொன்ன கதையில் லயித்து சுபத்ரா தன்னையே மறந்தாள். அருகே பலராமனும், கண்ணனும் வந்ததைக் கவனிக்கவில்லை.
பிறந்த ஆறும், வளர்ந்த ஆறும்,
பெரிய பாரதம் கைசெய்து*, ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச்
செய்து போன மாயங்களும்*
நிறம் தன் ஊடு புக்கு எனது ஆவியை
நின்று நின்று உருக்கி உண்கின்ற* இச்
சிறந்த வான் சுடரே! உன்னை
என்றுகொல் சேர்வதுவே?
என்கிறார் நம்மாழ்வார்.
கண்ணா இங்கே வந்து பிறந்ததை நினைத்தால் நெஞ்சம் உருகுகிறது. உன்னை மறைத்துக்கொண்டு வளர்ந்தாய். பாரதப் போரில் பாண்டவர்களுக்கு வெற்றி வழிகளைக் காட்டிக்கொடுத்த உன் மாயங்கள்தான் என்னே ! உன் மாயங்களை நின்று நின்று நினைத்துப் பார்க்கும் போது என் உள்ளத்தை உருக்குகிறது.
கேலிச்சித்திரம் (கார்ட்டூன்) பார்க்கும் போது ஆச்சரியமான பல முகபாவங்களைப் பார்த்திருக்கிறோம் அப்போது கண்கள் விரிந்து உடம்பு சிறியதாக காட்சி அளிக்கும். அதே போல தங்கள் கதையைக் கேட்டு மூவரும் மெய்மறந்து கைகால்கள் சுருங்கி விழிகள் விரிய புளங்காகிதம் அடைந்து நின்று கொண்டிருந்தார்கள்.
கீதையில் கண்ணன் இப்படிச் சொல்லுகிறார்:
ஜன்ம கர்ம ச மே திவ்யம்
ஏவம் யோ வேத்தி தத்த்வத:
த்யக்த்வா தேஹம் புனர் ஜன்ம
நைதி மாம் ஏதி ஸோ அர்ஜுன
அதாவது, ‘அர்ஜுனா, எனது தோற்றமும் செயல்களும் திவ்யமானவை என்பதை எவனொருவன் அறிகின்றானோ, அவன் இந்த உடலைவிட்ட பின், மீண்டும் இவ்வுலகில் பிறவி எடுப்பதில்லை’. இதற்கு ஸ்வாமி வேதாந்த தேசிகன் தாத்பர்ய சந்த்ரிகாவில் உரை எழுதும் போது ஒரு படி மேலே சென்று இப்படிச் சொல்லுகிறார்: ‘எனது தோற்றமும் செயல்களும் மற்றவர்களுக்கு மட்டும் இல்லை, எனக்கே திவ்யமானவை’ என்கிறார்! மேலும் கருட புராணத்திலும் கீதையிலும் கண்ணன் தன் கதையைக் கேள் என்று சொல்லுகிறான்.
அங்கு வந்த நாரதர் மூவரும் இருக்கும் நிலையைக் கண்டு, ‘தேவரீர் ஆனந்தத்தில் மயங்கி நிற்கும் இந்நிலையில் பக்தர்கள் தரிசிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க இன்றும் அதே போல நமக்குக் காட்சி அளிக்கிறான்.
குண்டிச்சா கோயிலுக்கும் புரி ஜகந்நாத கோயிலையும் இணைக்கும் அகலமான சாலைக்கு பெயர் ‘கிரண்ட் ரோட்’ சுமார் மூன்று கிமீ தூரம் அகலமான சாலை.
இந்தச் சாலையில்தான் பிரசித்திபெற்ற புரி ஜனந்நாத ரத யாத்திரை நடைபெறும். புரியின் ரதயாத்திரை உலகப் பிரசித்தி பெற்றது.
கோயிலுக்குள் சென்ற போது கூட்டம் ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி போல காட்சி அளித்தது. கொஞ்சம் நேரம் பிரமிப்புடன் நின்று கொண்டு இருந்தேன். பிறகு படிகளில் காலை வைத்தேன். கூட்டம் என்னை உள்ளே உறிஞ்சிக்கொண்டது.
ஆண் பெண் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், புரி பெருமாளை சேவிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் கூட்டம் என்னை மத்து போலக் கடைய, சிறிது நேரத்தில் நம்மாழ்வார் பாடிய ‘கறந்த பாலுள் நெய்யே போல்’ எனக்கு ஸ்ரீ ஜகந்நாதர் காட்சி கொடுத்தார்.
வெளியே மழை விடவில்லை, அதனால் வெளியே போகாமல் பக்தர்களுடன் மீண்டும் மீண்டும் அவர்கள் நெருக்கத்தில் பிழியப்பட்டேன். ஒவ்வொரு முறையும் பெருமாள் சில நிமிஷங்கள் காட்சி கொடுத்தார். அப்போது ஸ்ரீ சைத்தன்ய மஹா பிரபு பற்றி நினைவுக்கு வந்தது.
ஸ்ரீ சைதன்யரும் புரி ஜகந்நாதரும்
ஸ்ரீ சைத்தன்ய மஹா பிரபு வங்காளத்தில் நாடியாவில் மாயாபூர் என்னும் கிராமத்தில் 1486ம் ஆண்டு பிறந்தவர். ஒரு முறை புரிக்கு வந்த நேராக ஜகந்நாதனை பார்த்தவுடன், காவலர்களை எல்லாம் மீறி, அவரைக் கட்டிக்கொள்ள உள்ளே ஓடியவர், பெருமாளைக் கிட்டே பார்த்தபோது அவர் தன்னையும் மறந்து மயங்கி விழுந்தார். மயங்கியவரைப் பக்கத்தில் இருந்த ஒரு இல்லத்துக்கு அழைத்துச் சென்று மயக்கத்தைத் தெளிய வைத்தார்கள்.
அங்கே இருந்த ஒருவர், ‘கண்ணை கிட்டே சென்றால் நீங்கள் நினைவிழந்துவிடுகிறீர்கள் அதனால் கருட ஸ்தம்பத்துக்குப் பின் புறத்திலிருந்து பாருங்கள்’ என்று அறிவுரை கூறினார். சைத்தன்யரும் சம்மதித்து, அன்றிலிருந்து அங்கிருந்து கையை ஒரு தூணில் வைத்து கண்ணனைத் தரிசிக்க ஆரம்பித்தார். .
அங்கே கூட்டத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு இருந்த ஒரு காவல் அதிகாரியிடம் சென்று, ‘இங்கே சைத்தன்யர் பார்த்த இடம் எது என்று கேட்க, ‘என்னை ஆச்சரியமாகப் பார்த்து, என்னைக் கையை பிடித்து அழைத்துச் சென்றார். ஒரு இடத்தில் தூணில் விரலை வைத்து அழுத்தியது போல ஒரு பள்ளம் இருக்க, இங்குதான் சைதன்யர் தன் விரல்களை வைத்து அழுத்தி இப்படி எம்பிப் பெருமாளைப் பார்ப்பார் என்று செய்து காண்பித்தார். நானும் அப்படியே செய்து பார்த்த போது அவ்வளவு கூட்டத்திலும் பெருமாள் அந்த இடுக்கில் ஒளிர்ந்தார்.
புரி ஜகந்நாதர் கோயில் சில குறிப்புகள்:
புரி ஜகந்நாத கோயில் மிகப் பழமை வாய்ந்தது. சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் இக்கோயில் அமைத்துள்ளது. நான்கு வாசல் கொண்டது.
ஸ்ரீரங்கம் கோயில் போலப் பல நூற்றாண்டுகளாகப் பல மன்னர்கள் அதைக் கட்டியுள்ளார்கள். முதலில் கர்பக்கிரஹம் அளவுக்குத்தான் கோயில் இருந்திருக்கிறது. பிறகு மணல் மேடுகளால் மூடப்பட்டு கால் மாதவ் என்ற அரசர் குதிரையில் செல்லும்போது, மணல் மேட்டில் குதிரையின் கால்கள் கோபுரத்தின் உச்சியில் பட, அரசன் மணல் மேட்டினை அகற்றிக் கோயிலைப் புனர்நிர்மாணம் செய்தார். பொபி 824ல் ஒடிசாவின் கேசலி வம்சத்தவர், பிறகு பொபி 1038ல் கங்கவம்ச அரசர்கள், பொபி 1200ல் அனந்த வர்மன் என்று பல அரசர்கள் கைங்கரியம் செய்துள்ளார்கள். 1975ல் இந்திய அரசாங்கம் புதைபொருள் ஆராய்ச்சித் துறை மூலம் சுவரில் செதுக்கப்பட்டுள்ள கலை வடிவங்களைச் சீரமைத்தது.
கிழக்கு வாசலில் 36 அடி அருண ஸ்தம்பம் 18ம் நூற்றாண்டில் கோனாரக்கிலிருந்து அன்னியப் படையெடுப்பிலிருந்து பாதுகாக்க இங்கே கொண்டு வரப்பட்டது.
மொத்தம் 18 முறை இந்தக் கோயில் சூறையாடப்பட்டுள்ளது. ஃபெரோஸ் கான் துக்ளக், இஸ்மாயில் கஸ்ஸி, கலா பஹார் என்று பல மொகலாய மன்னர்கள் லூட்டி அடித்து லூட் செய்துள்ளார்கள்.
புரி என்றால் நமக்கு உடனே நினைவுக்கு வருவது பூரி என்ற தின்பண்டம் தான். மத்தியம் இந்தக் கோயிலில் பிரசிதிப்பெற்ற ‘மஹாபிரசாதம்’ சுவைக்கக் கிளம்பினேன்.
மஹா பிரசாதம்
பத்ரி, புரி, ஸ்ரீரங்கம், த்வாரகா ஆகிய நான்கு இடங்கள் மிக புனிதமாகப் போற்றப்படுகின்றன. ஸ்ரீமந் நாராயணன் விடியற்காலை பத்திரியில் நீராடிவிட்டு, த்வாரகாவில் வஸ்திரம் தரித்து, புரியில் அமுது செய்து, திருவரங்கத்தில் சயனிக்கிறார்.
புரியில் பெருமாள் அறு வேளை அமுது செய்கிறார்.
மஹாபிரசாதம் கிடைக்கும் இடத்துக்குச் சென்றேன் – ‘ஆனந்த பஜார்’ என்று பெயர். பிரசாதத்தை உண்ணும் முன் அதை எப்படிச் சமைக்கிறார்கள் என்று பார்க்கலாம்
உலகிலேயே மிகப்பெரிய சமையல் கூடம் புரியில் இருப்பதுதான். ஒரு ஏக்கர் பரப்பில் மொத்தம் 3 x 4 அளவில் 752 மண் அடுப்புகள் கொண்டது.
விறகு, மண் சட்டி பானைகள். எந்த விதமான யந்திரமோ உலோகமோ கிடையாது. கிணற்றிலிருந்து நீரை இராட்டினம் இல்லாமல் கயிற்றால் 30 பேர் இடைவிடாமல் இழுத்துக் கொட்டுகிறார்கள். மிளகாய், வெங்காயம், பூண்டு, காரட், உருளை, தக்காளி போன்ற காய்கறிகள் உபயோகிப்பதில்லை.
சுமார் 400 பேர் உணவைச் சமைக்கிறார்கள். அவர்களுக்கு உதவியாக இன்னொரு 400 பேர் வேலை செய்கிறார்கள். இதைத் தவிர காய்கறி திருத்தவும், தேங்காய் திருகவும் சுமார் 100 பேர் உள்ளார்கள். தினமும் 7200 கிலோ பிரசாதம் தயாரிக்கிறார்கள். விஷேச நாட்களில் 9200 கிலோ. எப்போது சென்றாலும் 1000 பேர் சுலபமாக உணவு அருந்தலாம்.
எல்லாப் பிரசாதமும் பானையில் ஏற்றப்பட்டு மூங்கில் கம்புகளில் கட்டிச் சுமந்து சென்று பெருமாளுக்குப் படைக்கப்படுகிறது. இதற்கு மட்டும் 60 பேர் வேலை செய்கிறார்கள்.
ஒவ்வொரு நாளும் 56 வகையான பிரசாதங்கள் செய்யப்படுகின்றன. 9 சித்ரான்னம், 14 வகை கறியமுது, 9 வகை பால் பாயசம், 11 வகை இனிப்பு, 13 வகை திருப்பணியாரங்கள்.
புரியில் பிரசாதத்தை உண்ண சில முறைகள் இருக்கின்றன. பிரசாதத்தைப் பூமியில் அமர்ந்துதான் உண்ண வேண்டும். மேசை நாற்காலி கூடாது. விநியோகம் செய்ய கரண்டி முதலானவற்றை உபயோகப்படுத்தக்கூடாது. உடைந்த சட்டிப்பானைச் சில்லு அல்லது இலையை மடித்து வைத்துத்தான் பரிமாறுவார்கள்.
சாப்பிடும்போது ஜகந்நாதரை நினைத்துக்கொண்டு சாப்பிட வேண்டும். சாப்பிட்டு முடித்தபின் வாய் கொப்பளிக்கும்போது முதல் வாய் தண்ணீரைத் துப்பாமல் விழுங்க வேண்டும். சாப்பிட்ட இடத்தைக் கைகளால்தான் சுத்தம் செய்ய வேண்டும். அந்த ஊரில் கல்யாணம், விழா என்றால் தனியாக சமையல் கிடையாது. இங்கேதான் சாப்பாடு.
மத்தியானம் இந்த மஹா பிரசாதத்தை ஒரு கை பார்ப்பது என்று முடிவு செய்து கிளம்பினேன். முதலில் கண்ணில் பட்டது பாதுஷா மாதிரி ஒரு பிரசாதம். சுற்றி ஈக்கள் இல்லாமல் தேனீக்கள். சுடச் சுட இலையில் கொடுத்தார்கள்.
அதைச் சாப்பிட்டுக்கொண்டே பார்த்தபோது பக்கத்துக் கடையில் திரட்டுப்பால் மாதிரி இருக்க இதை வேகமாக முடித்துவிட்டு அங்கே சென்றேன். அதையும் ஒரு கை பார்த்துவிட்டு, பால் மாதிரி ஏதோ இருக்க, ‘என்ன ?’ என்றேன். ஏதோ கீர் என்று காதில் விழ, டாப் கீயரில் அதை முடித்துவிட்டுப் பக்கத்துக் கடைக்காரர் வேடிக்கை பார்க்க, அவர் கோவித்துக்கொள்ளப் போகிறாரே என்று அவரிடத்தில் கோதுமைப் போளியைக் கொதறிவிட்டு மூச்சு விடுவதற்குள் இந்தாங்க என்று கோதுமை லட்டு சுவைபார்க்கக் கொடுத்தார். எல்லாம் வெறும் இனிப்பாக இருக்கிறதே என்று காரமாகத் தேட, ஓரமாக ஒரு கடையில் பொங்கல் மாதிரி ஒன்று இருக்க, அதைக் கேட்டபோது ஒரு காலிச் சட்டிப் பானையை உடைத்து அதன் சில்லில் பொங்கல் மற்றும் தால் (இஞ்சி தூக்கலாக) பரிமாறப்பட்டது. கையைச் சுத்தம் செய்யப் போகும் வழியில் தயிர் சாதம் கண்ணில் பட அதையும் சாப்பிட்டு வைத்தேன். அட்டகாசம்! கடைசியாக மோர் இருக்க அதைக் குடித்தபோது, அதனுள்ளே என்ன போடுகிறார்கள் என்று யோசிக்க வைத்தது. நாக்கை வாயினுள் தடவி, சீரகம் மற்றும் என்ன மசாலா பொடிகள் உள்ளே இருக்கு என்று மூளை வேலை செய்ய … முதல் முறை கண்ணன் மீது பொறாமை ஏற்பட்டது.
பெருமாளின் கல்யாண குணங்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம் அதை இந்த மஹா பிரசாதச் சந்தையில் அனுபவித்தேன்
புரியில் பல கடைகளில் புரி ஜகந்நாதரின் உருவ பொம்மைகள் கண்ணைக் கவரும். காம்பு தடியாக வெற்றிலைகள், கலர் பொடிகள் என்று எங்கும் வண்ண மயமாக இருக்கிறது. கடைகளை எல்லாம் நோட்டம் விட்டு விட்டு நேராக ராமானுச கூடத்துக்கு புறப்பட்டேன்.
ஸ்ரீராமானுசர் புரி விஜயம்
ஸ்ரீராமானுசர் புரி ஜகந்நாதனைத் தரிசிக்க வந்தபோது இங்கே பூஜை முறைகள் ஆகமத்தின்படி இல்லாததைக் கண்டு அதைச் சரி செய்ய முற்பட்டார். ஆனால் பல்லாண்டுகளாக இங்கே கைங்கரியம் செய்பவர்கள் அதை விரும்பவில்லை. புரி ஜகந்நாதர் ஸ்ரீராமானுசரை இரவோடு இரவாக அவர் உறக்கத்தில் இருக்கும்போது அவரை ஸ்ரீகூர்மத்தில் கொண்டு போய் விட்டுவிட்டார். விடியற்காலை எழுந்து பார்த்த ஸ்ரீராமானுசர் தான் வேறு இடத்தில் இருப்பதைக் கண்டு ஜகந்நாதரின் திருவுள்ளம் அப்படி என்றால் அதற்கு மறுப்பு கிடையாது என்று விட்டுவிட்டார். இன்றும் புரியில் ஸ்ரீராமானுசர் தங்கியிருந்த மடம் மற்றும் எம்பார் மடம் ஆகியவை உள்ளது.
1068ம் ஆண்டு முதல் 1074 ம் ஆண்டு வரை தம்முடன் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இங்கே தங்கியிருந்தார் என்று சொல்லப்படுகிறது. அந்தச் சமயம் ஆண்டு வந்த மஹாராஜா ஆனந்தவர்மன் சோடகங்கதேவா ஸ்ரீராமானுசருக்குக் கோயிலிலிருந்து சிறிது தூரத்தில் அவர் தங்க நிலம் கொடுத்தான். அங்கு ஒரு மடம் நிர்மாணித்து அவர் அங்கே நித்திய திருவாராதனம் செய்ய, ஸ்ரீவேணுகோபாலன், ஸ்ரீதேவி, பூதேவியைப் பிரதிஷ்டை செய்தார். இன்று அந்த இடம் ‘ராமானுஜகோட்’ என்று அறியப்படுகிறது. அவருக்குப் பிறகு அந்த மடம் எம்பார் தலைமையில் நடைபெற்றது. அப்போது எம்பார் மடம் என்று அழைக்கப்பட்டது. இன்று அதன் பெயர் மருவி ‘எமார் மட்’ என்று அழைக்கப்படுகிறது.
இன்றும் ஸ்ரீராமானுசர் நிறுவிய மடத்தில் பரம்பரையாகக் கைங்கரியம் செய்துகொண்டு இருக்கிறார்கள்.
புரி கோயிலில் உள்ளே தாயார் சன்னதியில் (இங்கே லக்ஷ்மி மந்திர்) சுவரில் ஆழ்வார், ஆசாரியர்கள், ஸ்ரீரமானுசர் மியூரல் ஓவியங்களைக் கொஞ்சம் நேரம் ரசித்துவிட்டுக் கொடியேற்றம் பார்க்க ஆயத்தமானேன்.
புரி கொடியேற்றம்
கோயில் மீது உற்று நோக்கினால் கோயில் விமானத்தில் சக்கரத்தாழ்வாரும் அதன் மீது சில கொடிகளும் இருப்பதைப் பார்க்கலாம். இந்தக் கோயிலையும், ஊரையும் விமானத்தின் மீதிருந்து ரக்ஷிக்கிறான். கோயிலுக்குச் செல்ல முடியவில்லை என்றால் கோயில் விமானத்தின் மீது இருக்கும் சக்கரத்தாழ்வாரைத் தரிசித்தால் போதும் என்பார்கள். தினமும் மாலை சுமார் நான்கு மணிக்கு இந்த வைபவம் நடைபெறும். குரங்குகளே பார்த்துக் கைதட்டும் அளவுக்கு இவர்கள் கோபுரத்தின் மீது நம்மைப் பார்த்துக்கொண்டு ஏறுவார்கள். கீழே இறங்கி வரும் போது நேற்றைய கொடியை எல்லாம் எடுத்துக்கொண்டு வருவார்கள். பல கொடிகள் விதவித சைஸில் இருக்கும். நான் சின்னதாக ஒன்றை வாங்கினேன். விலை நூறு ரூபாய்.
ஜகந்நாதரின் விமான கோபுரத்தின் உயரம் 214 அடி. அதன் மீது நீலச் சக்கரம் என்று பெயர் பெற்ற சுதர்சனச் சக்கரம் எட்டு உலோகங்களால் செய்யப்பட்டது. 36 அடி சுற்றளவு. அதன் மீது சிகப்பு, வெள்ளை, மஞ்சள் நிறத்தில் கொடிகள் தினமும் சாற்றப்படுகிறது. கருட சேவகர்கள் என்று அழைக்கப்படும் கைங்கரியம் செய்பவர்கள் இதைப் பரம்பரையாகச் செய்து வருகிறார்கள். சுமார் 15 நிமிடத்தில் இந்தக் கோபுரத்தை ஏறிவிடுவார்க்ள். பத்து நிமிடத்தில் கொடிகளை மாற்றி விடுவார்கள். என்ன விதமான சூறாவளி அடித்தாலும் கொடி கட்டப்படும். எட்டு வயதிலிருந்து பயிற்சி கொடுக்கப்படுகிறது.
மாலை கோடியேற்றம் முடிந்த பின் கிஞ்சித்காரம் டிரஸ்ட் சார்பில் ஸ்ரீரமானுஜருடன் புரி ரத யாத்திரை போகும் சாலையில் பல்லக்கில் வீதி உலா சென்றது இனிய அனுபவம். ஸ்ரீராமானுஜர் காலத்தில் அவருடன் செல்ல முடியவில்லை. ஆனால் 1000 ஆண்டுகள் கழித்து செல்ல முடிந்தது.
இரவு மீண்டும் புரி ஜகந்நாதரை சேவிக்கச் சென்றேன். பத்து மணிக்கு உள்ளே சென்றேன். கூட்டம் இருந்தது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் குறைந்து, காலை இந்த இடத்திலா இவ்வளவு கூட்டம் என்று மலைப்பாக இருந்தது. இரவு 11.30 மணிக்கு மொத்தம் 20 பேர்தான் இருந்தார்கள். பெருமாளுக்குப் பழைய வஸ்திரங்கள் களையப்பட்டன. புதிய வஸ்திரங்கள் ஒவ்வொன்றாக மாற்றப்பட்டன. பிரசாதம் கண்டருளச் செய்த பின் மூன்று கட்டில்கள் உள்ளே சென்றன. சிகப்பு, நீலம், மஞ்சள். பிறகு பாடல்கள் இசைக்கப்பட்டு விளக்குகளை ஒவ்வொன்றாக அணைத்தார்கள்.
குட் நைட் என்று சொல்லிவிட்டுத் திரும்பினேன்.
புரி ரத யாத்திரை சில குறிப்புகள்:
வருடம் தோறும், ஆனி மாதம் பௌர்ணமியில் தொடங்கி ஆடி மாதம் சுக்ல சதுர்தசியன்று முடியும் இந்த ரத யாத்திரைக்கு உலகமெங்கும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வருகிறார்கள். குண்டிசா மந்தரில் தாரு ரூபத்தில் உருவான இடம் கண்ணனின் பிறந்த இடம். அதனால் குண்டிச்சா மந்திர்தான் மதுரா. கண்ணன் பத்து வயதுக் குழந்தையாக கோகுலத்திலிருந்து தன் பிறந்த ஊரான மதுராவிற்கு வருவதை நினைவு கூர்கிறது இந்த ரத யார்த்திரை. மொத்தம் மூன்று தேர்கள். வருடா வருடம் மூன்று தேர்களும் புதுசாக 2188 மரத்துண்டுகளால் செய்யப்படுகிறது. செய்ய இரண்டு மாதங்கள் ஆகும்.
கண்ணனின் தேரின் பெயர் நந்தி கோஷ் – 16 சக்ரங்கள், உயரம் 45 அடி. தேர்ச் சீலைகளின் வர்ணம் மஞ்சள். பலராமனின் தேரின் பெயர் – தாலத்வஜம் – 14 சக்ரங்கள் – உயரம் 44 அடி – தேர்ச் சீலைகளின் வர்ணம் நீலம். சுபத்திராவின் தேரின் பெயர் – பத்மத்வஜம் – 12 சக்ரங்கள் – உயரம் 43 அடி – தேர்ச் சீலைகளின் வர்ணம் சிகப்பு.
முன் ஊர் அரசன் தங்கத் துடைப்பத்தால் பெருக்கியவுடன் தேர்கள் புறப்படும். முதலில் பலராமர், பிறகு சுபத்திரா, கடைசியில் கண்ணன். அலங்காரத்தோடு தேர்கள் கோயிலிருந்து குண்டிச்சா மந்திருக்கு நகர்ந்து செல்லும். ஸ்ரீரங்கத்தில் நடக்கும் மட்டையடி உற்சவம் மாதிரி இங்கேயும் உண்டும். போனவர்கள் எங்கே கணோம் என்று ஸ்ரீ லக்ஷ்மி தேவி தேர் இருக்கும் இடத்துக்கு வந்து தேரின் ஒரு பகுதியை உடைத்துவிட்டுச் செல்வார்.
நவ கலேவர உற்சவம்
எந்த ஆண்டில் ஆனி மாதத்தில் இரண்டு பௌர்ணமிகள் வருமோ அப்போது புதிய திருமேனியை மரத்தால் செய்கிறார்கள். நவ என்றால் புது, கலேவர என்றால் திருமேனி. இதற்காக காகாத்புர் (சுமார்அ நாற்பது மைல் தொலைவில் இருக்கிறது) என்ற காட்டுக்குச் சென்று சில அடையாளங்களுடன் இருக்கும் வேப்ப மரத்தைத் தேர்ந்தெடுக்கிறார்கள். 21 நாள் தச்சர்களைச் கொண்டு செதுக்குவார்கள். அமாவாசை அன்று இருட்டிய பிறகு ஊரில் மின்சாரம் துண்டிக்கப்படும். ஊர் முழுக்க இருட்டாக இருக்கும் சமயம், புதிய திருமேனியை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு பழைய திருமேனியின் பக்கம் வைப்பார்கள். பூசாரிகள் கண்களைக் கட்டுக்கொண்டு பழைய திருமேனியின் நாபியில் இருக்கும் பிரம்மபதார்த்தம் என்ற பெரிய சாளக்கிராம மூர்த்தியை எடுத்துப் புதிய திருமேனியில் பொருத்துவார்கள். பழைய திருமேனியை கோயிலா வைகுண்டம் என்ற இடத்தில் பூமிக்கு அடியில் புதைத்துவிடுவார்கள்.
இந்த உற்சவம் 12 முதல் 19 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும். உற்சவம் நடந்த ஆண்டுகள் – 1912, 1931, 1950, 1969, 1977, 1996, 2015.