ஏன் இப்படி?
இந்துத்துவர்களே இப்படித்தான், அவர்களுக்கு அறிவுப்புலமோ அல்லது அறிவுஜீவிகளிடம் மதிப்போ கிடையாது; அவர்கள் பழமையான அசட்டுத்தனங்களையும் பிராம்மண மேட்டிமைவாதத்தையும் மட்டுமே பேசுபவர்கள் என ஒரு தரப்பு பிரசாரம் செய்து வருகிறது. அந்தத் தரப்பை நிரூபிப்பது போலவே இத்தகைய விஷயங்கள் நிகழ்கின்றன.
இதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல பாகிஸ்தானிய இயற்பியலாளர் ஒருவர், ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். இந்திய அறிவுஜீவிகள் பலரால் அது பகிரப்பட்டு வருகிறது. விரைவில் அது தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு பெரும் பரவலாக்கப்படும். அவர் சொல்வது இதுதான்: “இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக நேரு இருந்தார். அவருக்கு அறிவியல் பார்வை இருந்தது. எனவேதான் இன்றைக்கு இந்தியாவில் இந்துத்துவர்களும் கூடப் பெருமைப்படும் அறிவியல் தொழில்நுட்பச் சாதனைகள் நிகழ்ந்தன. அணுத்துறையிலும் விண்வெளி ஆராய்ச்சியிலும் இன்று இந்தியா தலை நிமிர்ந்து நிற்க நேருவின் அறிவியல் பார்வைதான் காரணம். நேருவுக்கு பதிலாக மோடி இந்தியாவின் முதல் பிரதமராக ஆகியிருந்தால் இன்றைக்கு இந்தியா மூட நம்பிக்கைகளின் தேசமாக பசு சாணத்தையும் கோமூத்திரத்தையும் மட்டுமே ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்திருக்கும்.”
இந்தியாவின் முதன்மைப் பத்திரிகையாளர்கள் பாகிஸ்தானிய இயற்பியலாளரின் இந்தக் கட்டுரையைப் போட்டி போட்டுக் கொண்டு பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
முதல் வாசிப்பில் சரிதானே என்றுதான் பலருக்குத் தோன்றும். இந்துத்துவ ஆதரவாளர்களுக்குக் கூட.
காரணம் என்னவென்றால் கார்கோகல்ட் இந்துத்துவம்தான். அதென்ன கார்கோகல்ட் இந்துத்துவம்?
பசிபிக் தீவுகள் சிலவற்றில் இரண்டாம் உலகப் போரின்போது நேச நாட்டு விமான தளங்கள் அமைக்கப்பட்டன. பெரும்பாலும் இவை போர்க்கால அவசரத் தேவைகளுக்காக அமைக்கப்பட்டன. அவ்வப்போது படைகள் இறங்கும். அங்கிருக்கிறவர்களுக்குத் தேவையான பொருட்கள் (கார்கோகள்) பாரசூட்களில் இறக்கப்படும் அல்லது விமானங்களில் வந்தும் இறங்கும். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்தத் தீவுவாசிகளின் மத நம்பிக்கைகளில் இவை ஒரு தாக்கத்தை ஏற்படுத்தின. அவர்கள் விமான கண்ட்ரொல் டவர் ஆசாமிகள் ரேடியோவில் பேசுவது போலவே உபகரணங்களை உருவாக்கிக் கொண்டார்கள். அதன் மூலம் பேசினார்கள். மந்திர உச்சாடனங்கள். அப்படிப் பேசினால் வானில் மீண்டும் விமானங்கள் தோன்றி அவர்களுக்கு வேண்டிய உணவும் செல்வமும் கார்கோகளாக வானிலிருந்து விழும் என நம்பினார்கள். அல்லது பெரும் கப்பல்கள் மூலமாக வந்திறங்கும் எனவும் நம்பினார்கள். மிஷினரிகள் வந்த காலம் முதலே உருவாகியிருந்த குறுநம்பிக்கைகள் பின்னர் பெரிய அளவில் மத அரசியல் இயக்கங்களாகக் கூட மாறின.
புகழ் பெற்ற இயற்பியலாளர் ரிச்சர்ட் பெய்ன்மான் அறிவியலின் வார்த்தைகளைப் பயன்படுத்திப் பரப்பப்படும் அறிவியல் அடிப்படையற்ற புலங்களுக்கு கார்கோகல்ட் அறிவியல் எனும் பெயரை பயன்படுத்துகிறார். ‘காஸ்மிக் எனர்ஜி’ ‘வைப்ரேஷன்’ என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தும் மதக்குழுக்கள் பலவற்றை நாமே கண்டிருப்போம். அதென்ன காஸ்மிக் எனர்ஜி எனக் கேட்டால் அதன் பின்னால் எவ்விதச் சமன்பாடும் இருக்காது குழு நம்பிக்கையே இருக்கும்.
மார்வின் ஹாரிஸ் போன்ற சமூகவியலாளர்கள் இந்த கார்கோகல்ட் நம்பிக்கைகளுக்குப் பின்னால் ஒரு ஆழ்ந்த நியாயம் இருப்பதாகக் கருதுகிறார்கள். தீவுவாசிகளுக்கு சர்வதேச அளவில் வளங்களும் செல்வங்களும் பயன்படுத்தப்படும் விதத்தில் ஒருவித அநீதி இருப்பது உள்ளூரத் தெரிகிறது. அதனை அவர்கள் வெளிப்படுத்தும் விதம் இது.
இந்துத்துவத்துக்கு இதையே நீட்டித்துப் பார்க்கலாம்.
அறிவியல் நிறுவனப்படுத்தப்பட்ட இயக்கமாக மாறியபோது அதனை ஒரு ஐரோப்பிய அல்லது மேற்கத்தியப் பண்பாட்டின் விளைவாக மட்டுமே அது முன்னிறுத்தப்பட்டது. அவ்விதத்தில் அது மேற்கத்தியரல்லாத பண்பாடுகளுக்கு, அவற்றின் வரலாறுகளுக்கு, அவற்றின் தத்துவ தரிசன மரபுகளுக்குச் செய்யப்பட்ட பெரும் அநீதி என்றே கூற வேண்டும்.
கணிதம், வானவியல், தாவரவியல், உளவியல், மொழியியல் – எனப் பலதுறைகளில் இந்தியா ஒரு பண்பாட்டுப் புலமாகத் தொடர்ந்து பங்களித்து வந்துள்ளது. தொடர்ந்து ஏற்பட்ட அன்னியப் படையெடுப்புகள், பாதுகாப்பற்ற சூழ்நிலைகள் ஆகியவற்றால் மேற்கைப் போல நிறுவனப்படுத்தப்பட்ட அறிவியல் வளர்ச்சியை பாரதத்தால் உருவாக்க முடியவில்லை என்றாலும் கூட இன்று நாம் காணும் மேற்கத்தியப் பண்பாடு சார்ந்த புத்தெழுச்சியில் ஏறக்குறைய சரிசமமான, இன்னும் சில துறைகளில் முக்கியமான பங்களிப்புகளை பாரதம் நல்கியுள்ளது.
ஆனால் இதனை நாம் சரியான விதத்தில் புரிந்து கொள்ள வேண்டும். அறிவியல் என்பது பண்பாட்டு உரையாடல்கள் மூலம் வளர்ந்தது. இந்தியக் கணித முறைகள் ‘திருடப்’ படவில்லை. அவை கொண்டு செல்லப்பட்டன. கணிதவியலாளர் சி.கே.ராஜு இக்கணித முறைகள் ஏசுசபை பாதிரிகளால் மேற்கத்திய நாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டன எனக் கூறுகிறார். இன்றைக்கு லெபினிட்ஸ்-நியூட்டன் கணித முறைகளின் வேர்கள் கேரளக் கணித மரபிலிருந்து பெறப்பட்டன. கேரளக் கணித முறை அதற்கு முந்தைய ஆரிய பட்டர், பாஸ்கரர் ஆகியவர்களின் மரபின் தொடர்ச்சி. நியூட்டானிய அறிதலின் அடிப்படைக் கணிதங்கள் பாரதத்தின் கணித மரபு.
இந்தியக் கணித மரபுக்குச் சில சிறப்புத்தன்மைகள் இருந்தன. அவை உண்மை உலகிலிருந்து உருவாக்கப்பட்ட கணித மரபுகள். உலகுக்கு அப்பாலான உலகைப்படைக்கும் இறைக் கோட்பாடு இல்லாத காரணத்தால் அனைத்திலும் நம்பிக்கைக்கு இசைவான ஒரு ஒழுங்கு கட்டாயமாக இருக்க வேண்டும் என்கிற தேவை இந்திய மரபில் இல்லை. எனவே √2 போன்ற எண்களை இந்தியர்களால் கவலை இல்லாமல் கையாள முடிந்தது. பிரம்மம் எனும் கோட்பாடும் மாயை கோட்பாடும் அடிப்படையில் கொண்டிருந்த முரண், பூஜ்ஜியம், முடிவிலி ஆகிய கணிதக் கோட்பாடுகளை வந்தடைய உதவியாக இருந்தன.
மாயை கோட்பாட்டினால் உலகை மறுக்கும் தன்மையும் அதனால் உலகமே மாயை என்பதால் அறிவியல் அக்கறையின்மையும் இந்தியர்களுக்கு ஏற்பட்டது என்கிற மேற்கத்திய பிரசாரம் இந்திய அறிவுஜீவிகளால் ஏற்கப்படுகிறது. மார்க்சியர், நேருவியர், திராவிடியர் இன்ன பிற இந்து எதிர்ப்பாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தியல் இது. காலனிய வாதிகளால் உருவாக்கப்பட்டது. ஆனால் மாயை கோட்பாடு இந்தியாவில் அறிவியல் மறுமலர்ச்சிக்கும் முன்னெடுப்புக்கும் மிகவும் உதவிய கோட்பாடு. இதனைப் பின்னர் விரிவாக காண இருக்கிறோம்.
இந்தியா அறிவியலின் வளர்ச்சிக்கு உரிய பங்காற்றியிருந்த போதிலும், அது உதாசீனப்படுத்தப்பட்டு இந்தியப் பண்பாடே ஏதோ ஒரு விதத்தில் அறிவியல் வளர்ச்சிக்கு ஒவ்வாத, குறை கொண்ட ஒன்றாகக் காட்டப்பட்டது. அது காலனியக் காலகட்டத்தில் மட்டுமல்ல, நேருவியக் காலகட்டத்திலும் தொடர்ந்தது.
எனவே ஒரு இந்துத்துவனுக்கு பாரதப் பண்பாடு அறிவியலுக்கு எதிரானதல்ல, அது ஏதோ ஒரு விதத்தில் பங்களித்திருக்கிறது எனத் தெரிகிறது. ஆனால் அது என்ன என்பதை அறிவதற்கான அனைத்து வாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன. அவன் கல்வி நிலையம் அதை அறிய அவனுக்கு எவ்வித வாய்ப்பும் அளிக்கவில்லை. இதுவே பொதுவாக இந்துத்துவர்களை ’புஷ்பக விமானம், ‘மகாபாரத கால இண்டர்நெட்’, ‘கம்ப்யூட்டர்களுக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம்’ என்றெல்லாம் பேச வைக்கிறது. இது சர்வ நிச்சயமாக உளறல். ஆனால் இந்த உளறலுக்குப் பின்னால் ஒரு துல்லியமான தாழ்வு மனப்பான்மையும், தன் பண்பாட்டுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்த ஒரு உணர்வும் இருக்கிறது.
இந்த மனநிலையே இங்கு கார்கோகல்ட் இந்துத்துவம் எனக் குறிப்பிடப்படுகிறது.
இங்கே நாம் கண்ட ஒரு குற்றச்சாட்டையே எடுத்துக் கொள்வோம். நேரு அவர்கள் அறிவியல் பார்வை கொண்டவர். அவர்தான் இன்று நாம் காணும் அறிவியல் அமைப்புகளை, நிறுவனங்களை உருவாக்கினார். மோடியால் அது முடியாது, ஏனென்றால் அவர் இந்துத்துவர். இந்துத்துவர்கள் பழம்பெருமை பேசுகிறவர்களே தவிர அவர்கள் அறிவியல் பார்வை கொண்டவர்கள் அல்லர்.
இது உண்மையா?
விடுதலையின்போது இந்தியாவின் அறிவியல் மனித வளம் சர்வதேசத் தரத்தில் இருந்தது. சந்திரசேகர வேங்கட ராமன், கிருஷ்ணன், மேகநாத் சாகா, ஹோமி பாபா, சத்யேந்திரநாத் போஸ் என மிகச் சிறந்த அறிவியலாளர்கள் இங்கு இருந்தார்கள். அன்றைய நிலையில் ஆசியாவின் முன்னணி அறிவியல் தேசமாக இந்தியா இருந்தது. இதற்கு முக்கியமான காரணம் தேசிய விழிப்புணர்வு.
நேருவின் அறிவியல் குருவாக இருந்தவர் மேகநாத் சாகா. இடதுசாரி. ஆனால் தேச பக்தர். காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறும் முன்னரே நம் நாட்டில் அணு ஆராய்ச்சியைத் தொடங்க முடிவு செய்து சைக்ளோட்ரான் எனும் கருவியை நிறுவ முயற்சிகள் மேற்கொண்டவர். அதற்கு காலனிய அரசாங்கமும் கல்கத்தா பல்கலைக்கழக அதிகார வர்க்கமும் முட்டுக்கட்டைகள் போட்டபோது அவர் நேருவை அணுகினார். நேரு இந்து மகாசபை தலைவரும் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் முன்னர் துணை வேந்தராக இருந்தவருமான டாக்டர். ஷியாமா பிரசாத் முகர்ஜியை அணுகினார். முகர்ஜியின் முயற்சியால் இந்தியாவின் முதல் சைக்ளோட்ரானை சாகா நிறுவினார். இதெல்லாம் விடுதலைக்கு முன்னால்.
விடுதலை பெற்ற பின்னர் நேருவின் போக்கில் மாற்றங்கள் ஏற்பட்டன. வெளியே அறிவியல் மனப்பான்மை குறித்தெல்லாம் பேசினாலும் நேரு உள்ளுக்குள் ஜோசியம் பார்ப்பார். ஒரு கட்டத்தில் பிரதம மந்திரியின் செயலரையே தன் ஜாதகப் பணிக்காகப் பத்திரிகைகளைத் தொடர்பு கொள்ளச் செய்தார். ஆக நேரு ஒருவித இரட்டைநிலையில் வாழ்ந்தார்.
ராமன், சாகா இருவரும் எலியும் பூனையும் போல. ஏழாம் பொருத்தம். ஆனால் நேரு ஆட்சி செய்ய தொடங்கியதுமே இருவரும் முடிவுக்கு வந்தார்கள், இவரால் இந்திய அறிவியல் குட்டிச்சுவராகிவிடும் என்று. நேருவுக்குத் தனிப்பட்ட தொழில்நுட்ப மேதைமை கொண்ட தீவுகளை உருவாக்குவதில் ஆர்வம் இருந்தது. தரமான அறிவியல் கல்வியைப் பரவலாக்குவதில், அரசுக்கட்டுப்பாட்டில் இல்லாத ஆராய்ச்சிகளை ஊக்குவிப்பதில் ஆர்வம் இல்லை. இவையெல்லாம் நல்லதில்லை என சாகா, ராமன் இருவருமே சுட்டிக்காட்டினர்.
ஹோமி பாபா மிகச்சிறந்த விஞ்ஞானிதான். ஆனால் அரசியல் வட்டாரங்களில் எவ்வித நட்பை உருவாக்கி மேலே செல்வது என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. சாகா அப்படி அல்ல. மிகச்சிறப்பான விஞ்ஞானி. அரசியல் நீக்கு போக்கு குறித்து அக்கறை இல்லாதவர். தேசபக்தி கொண்டவர். ஆனால் இடதுசாரி. அவர் உருவாக்கிய முதன்மையான அணுக்கரு ஆராய்ச்சி மையம் உருவாவதில் மத்திய-மாநில உரிமைப் பிளவுகளை உருவாக்கி முட்டுக்கட்டை ஏற்படும் நிலையை நேரு உருவாக்கினார். அப்போது சாகாவுக்கு முழு ஆதாதரவு நல்கியவர் சியாமா பிரசாத் முகர்ஜி அவர்கள்தான். அரசியல் சித்தாந்தப் பிளவுகளைத் தாண்டி தேச நலன் எனும் புள்ளியில் இணைந்து நாட்டின் அறிவியல் எதிர்காலத்தை சிந்திக்க முகர்ஜியால் முடிந்தது.
நவீன இந்தியாவின் அறிவியல் இயக்க வரலாற்றில் இந்துத்துவத்தின் பங்கு இது.
அப்போது மோடி?
அடுத்த இதழில் காண்போம்.