Posted on Leave a comment

சில பயணங்கள் – சில பதிவுகள் (8) | சுப்பு

சுலோசனாவின் சபதம்

பள்ளிப் பருவத்தில் ராஜேந்திரன் என்னோடு நண்பனானான் என்பதையும், நாங்கள் தயாரித்த நாடகம் பற்றியும் முன்பே சொல்லியிருக்கிறேன்.  இதைத் தொடர்ந்து ராஜேந்திரன் வீடு இருக்கும் மயிலாப்பூர் நொச்சிக்குப்பம் என்னுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான களமாக மாறியது.  இந்தத் தொடர்பு இருபது ஆண்டுகள் நீடித்தது.  பலவிதமான அனுபவங்களைக் கொடுத்தது.  ராஜேந்திரனைப் பற்றி பிறகு விவரமாக எழுதுகிறேன்.  இப்போது சொல்ல வந்த செய்தி மயிலாப்பூர் சுலோசனா பற்றியது.

சுலோசனா மயிலாப்பூரைச் சேர்ந்த பாலியல் தொழிலாளி.  காலம் 70கள்.  நொச்சிக்குப்பத்தை சேர்ந்த செல்வம் என்பவர் சுலோசனாவின் வாடிக்கையாளர்.  ஒரு கட்டத்தில் தொழில் ரீதியான உறவு என்பது காதலாக மாறி, தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி சுலோசனாவிடம் கோரிக்கை வைத்தார் செல்வம்.

‘இதெல்லாம் சரிவராது’ என்று மறுத்த சுலோசனா இறுதியில் செல்வத்தின் பிடிவாதத்திற்கு இணங்கிவிட்டார்.  திருமணமும் நடந்தது.

ஒரு வருடத்திற்குப் பிறகு புதுவிதமான பிரச்சனை வடிவெடுத்தது.  செல்வத்திற்குத் திடீரென்று சுலோசனாவின் நடத்தை மீது சந்தேகம் ஏற்பட்டது.  இத்தனைக்கும் சுலோசனா ஒழுங்காகத்தான் இருந்தார்.  சந்தேகம் என்ற பேயால் பிடிக்கப்பட்டதுபோலச் செயல்பட்ட செல்வம் சுலோசனாவைக் கொடுமைப்படுத்தினார். அவர் எவ்வளவு கொடுமை செய்தாலும் அந்தக் கட்டத்தில் சுலோசனா பத்தினியாகத்தான் இருந்தார்.

விவகாரம் முற்றிப்போய் விவாகரத்து செய்து கொள்ளலாம் என்று செல்வம் சொன்னபோது சுலோசனா அதற்கு உடன்பட மறுத்துவிட்டார்.

கோபத்தின் உச்சியில் இருந்த செல்வம் செய்யக்கூடாத ஒன்றைச் செய்தார். போலீசுக்கு மாமுல் கொடுத்து சுலோசனாவை விபச்சார வழக்கில் கைது செய்வதற்கு ஏற்பாடு செய்தார்.

ஊரே திரண்டு வேடிக்கை பார்க்கும்போது காவல்துறை அதிகாரி தங்கராஜ் சுலோசனாவைக் கைது செய்து போலீஸ் வண்டியில் ஏற்றினார்.  அப்போது சுலோசனா அழுத அழுகையும், கதறலும் உள்ளத்தை உலுக்கும்படியாக இருந்தன.

‘தங்கராஜ், நான் செல்வத்துக்கு பத்தினியாய் இருந்தது உண்மை என்றால் நீ வாழக்கூடாது’ என்று சொல்லிவிட்டு சுலோசனா போலீஸ் வண்டியில் ஏறினார்.

மறுநாள் ஊரே அதிர்ச்சியில் உறைந்துபோனது. தங்கராஜ் மாரடைப்பால் இறந்துவிட்டார்.

இந்தச் சம்பவம் என்னுள் மிக ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.  இந்தப் பிரபஞ்சத்தை இயக்கக்கூடிய, மாற்றக்கூடிய, நிர்மூலமாக்கக்கூடிய ஆற்றல் உண்மையான வார்த்தைகளுக்கு உண்டு என்பதை சுலோசனாவின் சபதத்தின் மூலம் நான் தெரிந்து கொண்டேன்.

*

கல்லூரியில் ஹாஸ்டலில் தங்கிப் படிப்பவர்கள் அதிகம்.  பாதிப்பேர் வகுப்புக்கே வரமாட்டார்கள்.  ஹாஸ்டலில் மும்முரமாக சீட்டாட்டம் நடக்கும்.  பிரின்ஸ்பால் இதையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார்.  அவரைப் பொருத்தவரை யாராவது தவறு செய்தால், கண்டுபிடிக்கப்பட்டவுடன் அதற்கான அபராதத்தைச் செலுத்திவிட வேண்டும்.  அவ்வளவுதான். 

கல்லூரி நாட்களில் கூச்சல் போடுவது, ராக்கெட் விடுதல் ஆகியவற்றில் நான் தேர்ச்சி பெற்றேன். ஏடாகூடமாகக் கேள்வி கேட்டு ஆசிரியர்களைத் தொந்தரவு செய்வேன்.  ஜேம்ஸ் என்ற ஆங்கில விரிவுரையாளர் என் தொல்லை பொறுக்க முடியாமல் வகுப்பில் நுழைந்தவுடன் என்னை அழைத்து இரண்டு ரூபாய் கொடுப்பார்.  அந்தக் காசை வாங்கிக் கொண்டு நான் வெளியேறிவிட வேண்டும்,  வகுப்பிலிருந்து கலாட்டா செய்யக்கூடாது என்பது கோரிக்கை.  நான் காசை வாங்கிக் கொண்டு கேண்டீனுக்குப் போய் ஐஸ்கிரீம் சாப்பிட்டுவிட்டு மீண்டும் வகுப்புக்கு வந்து அமர்ந்து ஜேம்ஸுடைய வயிற்றெரிச்சலைக் கிளப்புவேன்.

விஷ்ணு என்னுடைய சக மாணவன்.  அவன் அடையாரிலிருந்து வந்து என் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தான்.  டைட் பேண்ட்டும், ஷூவும் அணிந்து பாப் இசையில் மூழ்கியிருந்தவனோடு எனக்கு அறிமுகம் ஏற்பட்டு, நட்பு பிறந்தது.  சீக்கிரமே இருவரும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம்.  விஷ்ணுவின் தந்தை உருக்குத் துறையில் உயர் பதவியிலிருந்த இஞ்சினியர்.  அவர் பீஹாரில் இருந்தார்.  விஷ்ணுவின் பள்ளிப்படிப்பு பம்பாயில்.  அப்போதுதான் விஷ்ணுவின் குடும்பம் சென்னைக்கு வந்திருந்தது.  மாதம் அவனுக்கு பாக்கெட் மணியாக நூறு ரூபாய் தருமளவுக்கு அவன் வீட்டாருக்கு வசதியிருந்தது.  விஷ்ணு படிப்பிலும் தேர்ச்சி பெற்றிருந்தான்.  விஷ்ணுவோடுதான் நான் முதன்முதலில் தியேட்டருக்குப் போய் ஆங்கிலப் படம் பார்த்தேன்.  சபையர் It is a mad, mad, mad, mad world என்ற படம்.

சினிமாவுக்குப் போக வேண்டுமென்று முடிவு செய்தவுடன் டிக்கெட் தொகையை என்னிடம் அவன் கேட்டு வாங்கிக்கொண்டான்.  தான் டிக்கெட் வாங்கிவிடுவதாகவும், மறுநாள் இருவரும் போகலாமென்றும் கூறிவிட்டான். மறுநாள் சினிமாவுக்கு முதல் நாளே டிக்கெட் வாங்க முடியுமென்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை.  அவனைச் சந்தேகப்பட்டு கேள்வி கேட்கவும் கூச்சமாயிருந்தது.  எப்படியோ நம்மை ஏமாற்றிவிட்டான் என்ற கவலையில் அன்று இரவு தூங்கவில்லை.

மறுநாள் விஷ்ணு டிக்கெட்டைக் காண்பித்தபோது என்னால் ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை.  அவனிடமே கேட்டுவிட்டேன்.  தியேட்டருக்கு அழைத்துப்போய் கரண்ட் புக்கிங், அட்வான்ஸ் புக்கிங் என்று இருக்கும் கவுண்டர்களை காட்டி விஷயத்தை எனக்கு விளங்க வைத்தான்.

விஷ்ணுவிற்கும் எனக்கும் அரசியல் பற்றிப் பேசுவதென்றால் பொழுது போவதே தெரியாது.  விஷ்ணுவை சந்தித்த பிறகு நான் ரீடர்ஸ் டைஜஸ்ட் படிப்பதைக் குறைத்துக் கொண்டேன்.  அமெரிக்கன் லைப்ரரியிலிருந்து புத்தகங்கள் வாங்கி வந்து அமெரிக்காவின் நீக்ரோ பிரச்சனை, மாபியா வளர்ச்சி பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதுமளவுக்கு செய்திகளைச் சேகரிப்போம். 

சைனாக்காரர்கள் பாம்பு தின்பார்கள். சைனா நேருவை ஏமாற்றிவிட்டது என்பதுதான் சைனாவைப் பற்றி அதுவரை நான் தெரிந்து வைத்திருந்த விவரம்.  சைனா என்றவுடனே கோபுலு வரைந்த டிராகன்தான் நினைவுக்கு வரும்.  விஷ்ணு இதையெல்லாம் உடைத்துத் தகர்த்தான்.  விஞ்ஞானம், தொழில் அபிவிருத்தி, பொருளாதாரப் பங்கீடு போன்றவற்றையும், புள்ளி விவரங்களையும் எனக்குக் கற்பித்தான்.  நானும் என் பங்கிற்கு, தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் வரலாறு, காங்கிரஸின் உட்கட்சி சண்டைகள் போன்றவற்றை அவனுக்குத் தெரிவித்தேன். 

பரீட்சை வரும்போது படிக்க வேண்டுமென்ற எண்ணத்துடன் ஒருநாள் முழுவதும் செலவிட்டு அட்டவணை தயாரிப்பேன்.  அதில் எந்தப் பாடத்தை எப்போது படிக்க வேண்டும், எப்போது சாப்பாடு, எப்போது தூக்கம் என்ற எல்லா விவரமும் துல்லியமாகக் கணிக்கப்பட்டிருக்கும்.  அட்டவணை தயாரிப்பதோடு சரி, அதைக் கடைப்பிடிப்பது கிடையாது.  மீண்டும் பத்து நாட்களுக்குப் பிறகு இன்னொரு அட்டவணை.  இது முந்தைய அட்டவணையை விட இன்னும் ஜரூராக இருக்கும்.  இதைத் தயாரிப்பதற்கு நிறைய சிரமப்படுவேன்.  அதோடு சரி.  இப்படியே அட்டவணை அட்டவணையாக நீண்டு, நாளைக்குப் பரீட்சை என்றால் இன்றும் ஒரு அட்டவணை. 

இதெல்லாம் ஒரு புறமிருக்க, வருட முடிவில் ரிசல்ட் வந்தபோது விஷ்ணு பாஸ் செய்துவிட்டான்.  நான் பெயிலாகி விட்டேன்.  நம்முடனே எப்போதும் இருந்த இவன் எப்போது படித்தான் என்ற எனக்குப் புதிராய் இருந்தது.  விஷ்ணுவைக் கேட்டேன்.  இரவு வீட்டுக்குப் போன பிறகு வெகுநேரம் கண் விழித்துப் படித்ததாகக் கூறினான்.  நமக்கு இது தெரியாமல் போயிற்றே, நாம் தூங்கி விட்டோமே என்ற வருத்தத்தில் ‘நீ ஏன் ராத்திரி படித்தேன் என்று என்னிடம் இதுவரை சொல்லவில்லை?’ என்றேன். ‘நீ அட்டவணை தயாரித்த காலத்தில் படித்திருக்கலாம்’ என்று விஷ்ணு சொன்னான்.

*
பரீட்சையைப் பற்றிச் சொல்லும்போது அவசியம் பெரியப்பாவைப் பற்றிச் சொல்ல வேண்டும்.  பரீட்சை எழுதுவதற்காக நான் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன்.  வாசல் சோபாவில் பெரியப்பா ‘எல்லாம் எடுத்துக்கொண்டாயா?’ என்கிறார்.  ‘எடுத்துக் கொண்டேன்’ என்கிறேன்.  ‘Clarks tables எங்கே?’ என்கிறார்.  ‘Clarks tables ஆ’ என்று விழிக்கிறேன்.  இஞ்ஜினியரிங் படிப்பவர்களுக்கு Clarks tables எப்படிப் பயன்படுத்துவது என்பது பால பாடம்.  நானோ வருடக் கடைசியில் ‘Clarks tables ஆ’ என்கிறேன். பெரியப்பா நிலவரத்தை நன்றாகப் புரிந்து கொண்டார்.  ஒன்றும் பேசவில்லை.  கைக்கடிகாரத்தைப் பார்த்தார்.  ‘உள்ளே போய் அலமாரியில் மேல் அறையில் டயரி அட்டை போட்ட Clarks tables சின்ன புத்தகம் இருக்கும் எடுத்துவா?’ என்றார்.  எடுத்து வந்தேன்.  அடுத்த இருபது நிமிடங்களில் அவர் சத்தியால் முடிந்தவரை Clarks tables -ஐ என் மூளையில் ஏற்றினார்.  இந்த மாதிரி நிகழ்ச்சிகளால் எனக்கு பெரியப்பா மீதிருந்த மரியாதை அதிகமானதே தவிர படிப்பில் எதுவும் முன்னேற்றமில்லை.

… தொடரும்

Leave a Reply