எழிலார்ந்த மயிலிறகை
அணியெனச் சூடியது
மனதிற்கினிய கருமையால் நிரம்பியது
அழகெனும் ஒரே ரசம்
எங்கும் நிரம்பும் வடிவுடையது
திருமகளெனும் தடாகத்திற்கு
மழைக்காலமானது
நுண்ணுணர்வு கொண்டோரின்
புண்ணிய மனங்களை
விளையாட்டாய்க் கவர்ந்திழுப்பது
லீலைகளெனும் அமுதம் ததும்புவது
கோபியரின் அன்புக்கிடமானது
ஐயோ, அந்தப் பேரொளியின் மீது
யார் தான் ஆசைகொள்ள மாட்டார்கள்?
– ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம், 3.62
“சம்ஸ்கிருதத்தில் இதிகாச புராணங்கள் உள்ளன. காவியங்களும் பல உள்ளன. தத்துவ நூல்களும், பல பாரம்பரிய அறிவுத்துறை சார்ந்த நூல்களும் உள்ளன. ஆனால் உணர்ச்சிகரமாக உள்ளத்தை உருக்கும் பக்தி இலக்கியம் தமிழில் உள்ளதைப் போல வடமொழியில் இல்லை என்றே கருதுகிறேன்” என்று ஒரு நண்பர் கூறினார். நான் அதை மறுத்து, “தமிழில் நாயன்மார்கள், ஆழ்வார்களின் அருள் மொழிகள் மகத்தானவை என்பதில் ஐயமில்லை. ஆனால் சம்ஸ்கிருதத்திலும் மனமுருக்கும் பக்தி இலக்கியம் உண்டு. ஸ்ரீமத் பாகவதம் பதினெட்டுப் புராணங்களில் ஒன்றானாலும், அது பக்தி ரசத்தின் பிரவாகம் என்றே அழைக்கப்படுகிறது. அதோடு கூட, பற்பல அருட்கவிகள் எழுதிய பக்தி நூல்களும் உண்டு” என்று கூறினேன். அப்போது நான் வாசித்துக் கொண்டிருந்த ஸ்ரீகிருஷ்ண கர்ணாமிருதம் என்ற நூலிலிருந்து சில சுலோகங்களையும் எடுத்துக் காட்டினேன். அதன் தொடர்ச்சியே இக்கட்டுரை.
இந்த அழகிய நூலை இயற்றியவர் பில்வமங்களாசாரியார் என்னும் மகத்தான கவி. ஸ்ரீமத் பாகவதத்தை எடுத்துரைத்த சுக முனிவரைப் போன்று கிருஷ்ண லீலையில் ஆழ்ந்து ஈடுபட்டிருந்ததால், லீலாசுகர் என்ற தனது சிறப்புப் பெயராலேயே பிரபலமாக அழைக்கப்பட்டார். பதின்மூன்றாம் நூற்றாண்டில், பொ.பி 1220 – 1300 காலகட்டத்தில் கேரளத்தில் பரூர் என்ற ஊரில், கல்வி கேள்விகளில் சிறந்து, அற்புதமான கவிதையாற்றலும் பெற்று கிருஷ்ண பக்தியில் ஆழ்ந்திருந்தவர். வாழ்வின் பிற்பகுதியில் திருச்சூரில் சங்கரரின் சீடரான பத்மபாதர் நிறுவியதாகக் கருதப்படும் தெக்கோல மடம் மூலம் சன்னியாச தீட்சை பெற்று கிருஷ்ண பக்த துறவியாக வாழ்ந்தார் என்று கூறப்படுகிறது.
கர்ணாம்ருதம் என்றால் செவியமுதம். “கிருஷ்ணா, லீலாசுகனால் உனக்கென சமைக்கப்பட்ட இந்த செவியமுதம் நூறு கல்ப காலங்களுக்குப் பின்னும் இனிமையுடன் விளங்குக” (1.110) என்று கவியே தனது பெயரையும் நூலின் பெயரையும் ஒரு சுலோகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம் என்ற இந்த நூலில் மொத்தம் 328 சுலோகங்கள் உள்ளன. இவை மூன்று பகுதிகளாக, முறையே முதலாவது, இரண்டாவது, மூன்றாவது ஆசுவாஸங்கள் என்று பகுக்கப்பட்டுள்ளன. ஒரே மூச்சில் கிருஷ்ணானுபவத்தை இடையறாது பாடும் வேளையில் கவி கொஞ்சம் மூச்சுவாங்கிக் கொண்டிருக்கிறார் என்பது போல இந்தப் பகுப்பு அமைந்துள்ளது (ஆசுவாஸம் – மூச்சுவாங்குதல்).
கண்ணனின் குழலிசை மண்ணையும் விண்ணையும் மயக்குவது மட்டுமன்றி வேதப் பொருளையும் விளக்குகிறது என்கிறார் கவி.
உலகங்களைப் பித்தாக்கும்
வேதங்களை சப்திக்கும்
மண்நின்ற மரங்களை மகிழ்விக்கும்
மலைகளை உருக்கும்
மான்களை வசமிழக்கச் செய்யும்
பசுக்கூட்டங்களுக்குக் களிப்பேற்றும்
இடையர்களை மயக்கும்
முனிவர் மனங்களை மலர்விக்கும்
சப்த ஸ்வரங்களில் ஆரோகணிக்கும்
ஓங்காரப் பொருள் அதிரும்
அந்தக் குழந்தையின் குழலிசை
வெல்க. (2.109)
கண்ணன் மெய்மறந்து தன் சிறுவிரல்களால் தடவிக் குழலூதும்போது, முகம் சற்றே இடப்புறம் சாய்ந்திருக்கும். குழலும் நேராக இல்லாமல் சற்றே சாய்ந்து அதன் ஒரு முனை இதழில் பதிந்து மற்றொரு முனை வலதுகாதைச் சென்று தொடுவது போலத் தோன்றும். இந்தக் காட்சியைப் பல படங்களிலும் சிற்பங்களிலும் நாம் பார்த்திருக்கலாம். இதனை அப்படியே மனக்கண்ணால் தரிசித்து புல்லாங்குழலிடம் முறையிடுகிறார் கவி.
அடி புல்லாங்குழலே
முகுந்தனின் முறுவல் பூத்த முகமலர்
மூச்சில் ததும்பும் மதுரசம் அறிந்தவளே
உன்னை வணங்கி ஒன்று யாசிக்கிறேன்
அவன் மணியிதழ் அணுகும் பொழுதில்
நந்தன்மகன் செவிகளில்
என் நிலையை
ஓசைப்படாமல் சொல்லிவிடேன். (2.11)
லீலாசுகர் தன் இளமைக் காலத்தில் சிந்தாமணி என்ற தாசியிடம் பெரும் ஆசை கொண்டிருந்தார். எந்நேரமும் அவளது மோக லாகிரியில் ஆழ்ந்திருந்தார். ஒரு முறை வெளியூர் சென்றுவிட்டு அவளைப் பார்க்கவேண்டும் என்ற பதைபதைப்புடன் கொட்டும் மழையில் நள்ளிரவில் திரும்பி வருகிறார். வழியில் நதியில் பெருவெள்ளம். அதையும் பாராமல் நீரில் குதித்து, மூழ்கிவிடாமலிருக்க கட்டை என்று நினைத்து ஆற்றில் மிதந்து வந்த ஒன்றைப் பற்றிக் கொள்கிறார். கரையேறிய பிறகு தான் அது ஒரு சடலம் என்று தெரிகிறது. ஆனால் அவருக்குத் தன்மீது அருவருப்பு எதுவும் தோன்றவில்லை. அந்நிலையில் அவர் மனதில் வெட்கம், தயக்கம் எதற்கும் இடமில்லை. ஓடோடிச் சென்று அவள் வீட்டுக் கதவைத் தட்டுகிறார். அவரது கோலத்தைக் கண்ட அவள், “என்னிடம் வைத்த இந்த ஆசையின் தீவிரத்தில் நூற்றிலொரு பங்கை பகவான் மீது வைத்தால் நீர் பிழைத்துப் போயிருக்கலாமே” என்கிறாள். அந்தக் கணத்தில் அவரது அகவிழி திறக்கிறது. தனக்கு நல்வழி காட்டிய அவளது காலில் விழுந்து பணிகிறார். பின்பு சோமகிரி என்ற ஆசாரியரை குருவாக ஏற்று கிருஷ்ண பக்தியில் ஈடுபடுகிறார். இத்தகைய ஒரு கர்ணபரம்பரைக் கதை லீலாசுகரைக் குறித்து வழங்குகிறது. அதனால்தான் தனது முதல் குருவையும் பிறகு ஆசாரியரையும் போற்றும் முகமாக “சிந்தாமணிர் ஜயதி ஸோமகிரிர் குருர்மே” என்று ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதத்தின் முதல் சுலோகம் தொடங்குவதாகக் கூறப்படுகிறது.
“சிந்தாமணிக்கும் எனது குருவான சோமகிரிக்கும் ஜெயம். மேலும் என்னைத் தடுத்தாட்கொண்ட தலையில் மயிற்பீலி சூடிய தெய்வத்திற்கு ஜெயம். கற்பக மரத்தின் தளிர்போன்ற அவனது திருவடிகளைத் தம் தலையில் சூடியவர்களிடம் வெற்றித்திருமகளாகிய ஜெயலக்ஷ்மி தானாகவே வந்து, விளையாட்டாக சுயம்வரத்தில் நாயகனைத் தேடி மாலையிடும் பெண்ணின் உவகையை அடைகிறாள்.” (1.1)
கண்ணனின் குழந்தை விளையாட்டுகளைப் பற்றிய மனம் மயக்கும் சித்திரங்கள் பல இந்நூலில் வருகின்றன.
யாரடா அது பையன்
நான் தான் பலராமன் தம்பி
நீ இங்கே எப்படி
எங்கள் வீடென்று நினைத்து வந்துவிட்டேன்
அது சரி அந்த வெண்ணெய்ப் பானைக்குள் ஏன் கைவிட்டாய்
அம்மா கோபித்துக் கொள்ள வேண்டாம்
கன்றுக்குட்டி ஒன்று காணாமல் போய்விட்டது
தேடிக் கொண்டிருந்தேன்
ஆய்ச்சியர் திலகத்திடம் கண்ணனின் இந்த வாயாடல்
அது நம்மை என்றும் மகிழ்வித்திடுக. (2.81)
வேத வனங்களில் வெகுவாக அலைந்து திரிந்து
களைத்தவர்களே
இந்த நல்லுபதேசத்தை ஆதரியுங்கள்
கோபிகைகளின் வீடுகளில் தேடுங்கள்
உபநிஷத உட்பொருளை அங்கேதான்
உரலில் கட்டிப் போட்டிருக்கிறது. (2.28)
கரத்தாமரையால் பதத்தாமரை மலரைப் பிடித்து
இதழ்த்தாமரையில் வைத்துக்கொண்டு
ஆலிலைமேல் துயிலும் பால முகுந்தன்
அவனையே தியானிக்கிறது என் மனம் (2.57)
கோபிகைகளின் அதீத பிரேமையும், கள்ளங்கபடமற்ற அவர்களது அந்தரங்க பக்தியும், அவர்களுடன் கண்ணனின் காதல் விளையாட்டுகளும் களியாட்டங்களும் மீண்டும் மீண்டும் இந்த நூலில் பல்வேறு வண்ணங்களில் வந்துகொண்டேயிருக்கின்றன.
வீதியில் தயிர் விற்கிறாள் கோப கன்னிகை
முராரியின் பாதங்களில் வீழ்ந்த சித்தமுடையவள்
மோகவசத்தால்
கோவிந்தோ தாமோதரோ மாதவோ
என்றல்லவா கூவுகிறாள் (2.55)
நீ மகிழ்ந்தாய் எனில்
என் குணங்களாலும் தகுதிகளாலும் ஆவதென்ன
நீ மகிழவில்லை எனில்
என் குணங்களாலும் தகுதிகளாலும் ஆவதென்ன
அன்பு ததும்பும் கணவன் எனில்
குங்குமம் தளிர் மலரணி
பெண்ணுக்குத் தேவையில்லை
அன்பற்றவன் எனில்
அது அவசியமே இல்லை. (2.99)
அச்சுதனிடத்தில் சித்தத்தைக் கொடுத்து
தயிரில்லாத வெறும் பானையில்
மத்தை இட்டுக் கடையும் ராதையும்
பூங்கொத்தென விரிந்த அவள் முலைகள்மீது
அலைபாய்ந்து அசையும் பார்வையுடன்
பால்கறக்க வேண்டிய நினைவில்
எருதைக் காலணையும் தேவனும்.
இப்பூவுலகைப் புனிதமாக்கிடுக. (2.25)
மகாபாரத அரசியல் சதுரங்கத்தில் ஸ்ரீகிருஷ்ணனின் ராஜதந்திரங்களும், குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அவன் தேரோட்டி கீதை உரைத்த திறமும் அறிஞர்களுக்கும் அறநெறியாளர்களுக்கும் விருந்தாக அமைந்துள்ளன. ஆனால், பெரும்பாலான பக்தர்களும் கவிகளும் பகவானின் கோகுல, பிருந்தாவன லீலைகளையே பாடிப் பரவசமடைந்துள்ளார்கள். லீலாசுகரும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனாலும் சில இடங்களில் அபூர்வமாக தேரோட்டி கிருஷ்ணனின் அழகிய சித்திரங்களும் இந்நூலில் உண்டு.
அவன் கைநகங்களினால் தினவு நீங்குகின்றன
பாண்டவன் தேர்க்குதிரைகள்.
திறந்த உடம்புடன்
தலைப்பாகையில் சாட்டையைச் செருகிக் கொண்டு
கடிவாளத்தைப் பற்களால் கடித்துக் கொண்டு
கைகளில் நீரை அள்ளி
அனுதினமும் அவற்றைக் குளிப்பாட்டுகிறான்
தேவகியின் புண்ணியத் தொகுதியாய்த் தோன்றியவன்.
அவன் நம்மைக் காத்திடுக. (2.47)
கிருஷ்ண தத்துவம் என்பது தர்க்க புத்தியால் ஆராய முற்படும் வறட்டு சித்தாந்திகள் சிலருக்கு முரண்பாடுகளின் தொகுதியாகத் தோன்றுகிறது. வேறு சில ஆராய்ச்சியாளர்களுக்கும் வரலாற்றாசிரியர்களுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற புராணங்களையும் தொன்மங்களையும் கலவையாக சேர்த்து வைத்ததாகத் தோன்றுகிறது. ஆனால், நுண்ணுணர்வும் ஞானமும் கொண்ட மேதைகளானாலும் சரி, எந்தப் படிப்பறிவுமில்லாத கிராமத்துப் பெண்களானாலும் சரி, உள்ளார்ந்த பக்தியுடனும் கபடமற்ற நெஞ்சத்துடனும் அணுகுபவர்களுக்குக் கீழ்வானில் உதிக்கும் வைகறைச் சூரியன் போலத் தெள்ளத் தெளிவாகப் புலப்படுகிறது கிருஷ்ண தத்துவம். அதன் முரண்கள் அவர்களுக்குக் குழப்பத்தை அல்ல, பெருவியப்பையும் மெய்சிலிர்ப்பையுமே ஏற்படுத்துகின்றன.
இடையர்கள் வீட்டு முற்றத்தில்
சேற்றில் விளையாடுகிறாய்
வேதியர்களின் வேள்விச்சாலையில்
போவதற்கும் வெட்கப் படுகிறாய்
பசுக்கூட்டங்களின் ஹூம் என்ற ஓசையைக் கேட்டு
அவைகளுடன் பேசிக்கொண்டேயிருக்கிறாய்
அறிஞர்களின் நூறுநூறு துதிகளைக் கேட்டும்
மௌனம் சாதிக்கிறாய்
சபலம் வாய்ந்த கோகுலத்துப் பெண்களுக்கு
தாசனாகப் பணிவிடை செய்கிறாய்
புலன்களை அடக்கிய தபஸ்விகளுக்குத்
தலைவனாக இருக்கவும் விரும்பவில்லை
அறிந்தேன் கிருஷ்ணா
அழகிய உன் திருவடித் தாமரைகளை
அன்பினால் மட்டுமே
நிலையாகப் பெறக்கூடும்
வேறொன்றினாலும் அல்ல. (2.82)
உரலோ
யோகியரின் மனமோ
கோபியரின் பூமொட்டுப் போன்ற முலைகளோ
இம்மூன்றே அன்றோ இப்பூவுலகில்
முராரி என்று பெயர்பெற்ற யானைக்கன்றுக்கு
கட்டுத்தறியாக ஆயிற்று (2.56)
சிறுவனாயிருந்தும்
கைநுனியில் குன்றை ஏந்தியது எங்ஙனம்
கறுப்பனாயிருந்தும்
காருளில் சோதியாய்ச் சுடர்விடுவது எங்ஙனம்
தீரனாயிருந்தும்
ராதையின் நயனங்களில் கட்டுண்டது எங்ஙனம்
கள்வனாயிருந்தும் நீ
பிறவித் தளையை அறுப்பது எங்ஙனம்? (2.72)
ஆதி சங்கரர் வழிவந்த அத்வைத தத்துவத்தைப் பின்பற்றும் ஸ்மார்த்த சம்பிரதாயப் பின்னணியைக் கொண்டவர் லீலாசுகர். சிவன், விஷ்ணு, சக்தி ஆகிய மூன்று தெய்வ ரூபங்களையும் பேதமின்றி வணங்குவதும், இவற்றில் எந்த ஒரு மூர்த்தியையும் தமது இஷ்ட தெய்வமாகக் கொள்வதும் இந்த சம்பிரதாயத்தினரின் மரபு. “அகத்தில் சாக்தனாகவும், புறத்தில் சைவனாகவும், நடத்தையில் வைஷ்ணவனாகவும்” திகழ்தல் என்பது இந்த சம்பிரதாயத்தினரின் வழிபாட்டு நெறிக்கு இலக்கணமாகக் கூறப்படுகிறது [“அந்த சா’க்தோ ப3ஹி: சை’வ: வ்யவஹாரேஷு வைஷ்ணவ:”]. இந்த நூலிலும் இதற்கான தடயங்களைக் காண முடிகிறது.
சைவர்கள் நாங்கள்
சிறிதும் சந்தேகமில்லை
அதிலும் பஞ்சாட்சர ஜபத்தில் ஊக்கங்கொண்டவர்கள்
ஆயினும் என் மனமோ
காயாம்பூ வண்ணமும் புன்முறுவலும் தவழும்
ஆயர்பெண்ணின் செல்வனைத் தான்
நினைத்துக்கொண்டே இருக்கிறது. (2.24)
லலிதா பரமேஸ்வரி தேவியும் கிருஷ்ணனும் இணைந்து விளங்கும் ‘கோபால சுந்தரி’ என்ற அபூர்வமான தெய்வ வடிவத்தின் தியானம் ஒரு சுலோகத்தில் கூறப்படுகிறது.
அகண்டமான கரும்பு வில்லும் மலர்க்கணைகளும்
சங்கு சக்கரமும் பாசாங்குசமும்
பொன்னொளி திகழும் புல்லாங்குழலும்
எட்டுக் கரங்களில் தாங்கி
உதிக்கின்ற செங்கதிர் போல விளங்கும்
மதன கோபால உருக்கொண்ட ஹரியை
தியானிப்போம். (3.104)
ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம் கேரளத்தில் தோன்றிய கவியால் இயற்றப்பட்டிருப்பினும் நாடெங்குமுள்ள கிருஷ்ண பக்தர்களைத் தொடர்ந்து வசீகரித்து வந்துள்ளது. சைதன்ய மகாபிரபு தனது தென்னிந்திய யாத்திரையின்போது இதன் அழகில் மயங்கி திருவனந்தபுரத்திலிருந்து இதன் பிரதியை எடுத்துச் சென்று அதற்குத் தாமே ஒரு உரையும் எழுதி வட இந்தியாவில் பரவச் செய்தார் என்று கூறப்படுகிறது.
செவியமுதம் என்ற அடைமொழிக்கேற்ப இதன் பல சுலோகங்கள் மிக்க இனிமையும் ஓசையழகும் கொண்டவை. பாடுகையில் சம்ஸ்கிருத ஒலியின் கம்பீரத்துடன் இணைந்து அவை உருவாக்கும் அனுபவம் சிலிர்ப்பூட்டுவது. அதன் காரணமாக கர்நாடக இசையிலும் பரத நாட்டியத்திலும் இதன் சுலோகங்கள் தொடர்ந்து கலைஞர்களால் எடுத்தாளப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு ஒன்று:
கரகமல த3லத3லித லலிததர வம்சீ’
கலநினத3 க3லத3ம்ரு’த க4னஸரஸி தே3வே |
ஸஹஜ ரஸ ப4ர ப4ரித த3ரஹஸித வீதீ2ம்’
ஸததவஹ த3த4ரமணி மது4ரிமணி லீயே ||
கரகமலங்களின் இதழ்விரல்கள் மூடித்திறக்கும் எழில்மிகு குழலின் இன்னொலி வடிவாய்ப் பெருகும் அமுதம் பொங்கி வழியும் தடாகம் அவன். இயல்பிலேயே இன்பரசம் நிறைந்த புன்முறுவலின் தொடர்ச்சியை எப்போதும் தாங்கும் மணியிதழ்களைக் கொண்ட இனிய தேவன். அவனிடத்திலேயே என் லயிப்பெல்லாம் (1.52)
ஸ்ரீ கிருஷ்ணனின் லீலைகளை மீண்டும் மீண்டும் தியானிப்பதாலும் பாடுவதாலும் என்ன கிடைக்கும்? “இந்திரனின் வஜ்ராயுதத்தால் பெரும் மலைகளும் நூறு சுக்கல்களாக உடைந்து போவதைப் போல கிருஷ்ணனின் இடையறாத நினைவாலேயே பாவக் கூட்டமாகிய இரும்புக்கூடு நொறுங்கிப் போகிறது” (3.108) என்கிறார் லீலாசுகர். அதில் சந்தேகமென்ன?
பின்குறிப்புகள்:
இக்கட்டுரையில் உள்ள சுலோக மொழியாக்கங்கள் அனைத்தும் கட்டுரையாசிரியர் செய்தவை. அடைப்புக் குறிக்குள் உள்ளவை சுலோக எண்கள்.
ஸ்ரீகிருஷ்ண கர்ணாம்ருதம் தமிழ் உரையுடன் (உரையாசிரியர் : ஸ்ரீ அண்ணா). வெளியீடு: ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை – 4.
ஸ்ரீகிருஷ்ண கர்மாம்ருதம் தேர்ந்தெடுத்த சில சுலோகங்கள் பி.சுசீலாவின் தேனினும் இனிய குரலில் – https://youtu.be/TO3IhHFysXs
தத் ஸௌந்தர்யம் ஸா ச மந்தஸ்மித
ஸ்ரீ:
ஸத்யம் ஸத்யம் துர்லபம் தைவதேஷு!!
மிகவும் அழகான கட்டுரை. மிக்க நன்றி