Posted on Leave a comment

சிற்றோவியங்களில் சௌர பஞ்சாஸிகா அல்லது பில்ஹண பஞ்சாஸிகா | அரவக்கோன்

இந்தியாவில் பொ.மு. முதலாம் நூற்றாண்டு தொடங்கி பொ.பி.எட்டாம் நூற்றாண்டு வரை அஜந்தா, எல்லோரா, காஞ்சி, சித்தன்னவாசல், வாதாபி போன்ற இடங்களில் அகழப்பட்ட, கற்களைக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஆலயங்களில் இடம்பெற்ற சுவர் ஓவியங்களுக்குப் பின்னர் நலிந்து தொய்வுற்றிருந்த ஓவியக்கலை கி.பி. 16,17,18 ஆம் நூற்றாண்டுகளில் மீண்டும் தலையெடுத்தது. வசந்த காலத்தில் மலரும் மலர்களைப்போல பெரு நகரம் / சிறு ஊர் என்னும் பாகுபாடு இல்லாமல், அரசவை, செல்வந்தர் இல்லம் என எங்கும் சிற்றோவியங்கள் படைப்பது என்பது ஒரு மேட்டிமைக் குறியீடாக விரிவடைந்தது. மஹாபாரதம், இராமாயணம், பாகவதபுராணம், கீதகோவிந்தம், ராகமாலா, பாரமாஸா போன்ற நூல்கள் தொகுப்பு ஓவியங்களாக மீண்டும் மீண்டும் வடநாடெங்கிலும் தட்சிணப் பகுதியிலும் படைக்கப்பட்டன. ‘சௌரபஞ்சாஸிகா’ அல்லது ‘பில்ஹணபஞ்சாஸிகா’ என்பது அவற்றுள் ஒன்று.

பில்ஹணர் என்னும் வடமொழிக் கவி தமது எதிர்காலப் புகழைத்தேடி காஷ்மீரத்திலிருந்து புறப்பட்டு ராமேஸ்வரம் வரை வருகிறார். ஆனால் அவருக்குக் கிட்டுவது ஏமாற்றமே. சோர்வுற்று மீளும் அவரை சாளுக்கிய மன்னன் 4ஆம் விக்ரமாதித்யன் வரவேற்று, தனது அரசவைப் புலவராக நியமிக்கிறான். அங்குதான் அவர் ‘சௌர பஞ்சாஸிகா’ அல்லது ‘பில்ஹண பஞ்சாஸிகா’ என்னும் வடமொழிக் காவியத்தைப் படைக்கிறார். இதன் காலம் கி.பி.11ஆம் நூற்றாண்டு என்கிறது வரலாறு. இதற்கு ‘சஸிகலா பஞ்சாஸிகா’ என்னும் பெயரும் உண்டு.

இதை ஒட்டின இரண்டு விதமான கதைகள் உண்டு. ஒன்று தென்நிலம் சார்ந்தது, மற்றது வடநிலத்தது.

தென்நிலத்துக்கதை இவ்வாறு போகிறது:

சௌரன் என்பவன் கற்றறிந்த அந்தண இளைஞன். தென்னாட்டில் ஒரு அரசனின் அவையில் தனது கல்விப்புலமையால் கல்வி பயிற்றுவிக்க அமர்த்தப்படுகிறான். அவனது திறமையில் மகிழும் அரசன் தனது மகள் சஸிகலாவுக்கும் அவனை ஆசிரியனாக நியமிக்கிறான். ஆனால் அவள் அரசகுமாரி என்பது அவனிடமிருந்து மறைக்கப்பட்டு பார்வையற்ற பெண் என்று சொல்லப்படுகிறது. அவ்விதமே அரசகுமாரியிடம் ஆசிரியன் தொழுநோய் பீடிக்கப்பட்டவன் என்றும், எனவே இருவரும் ஒருவரை மற்றவர் காணலாகாது என்றும் தடைவிதிக்கப்படுகிறது. நடுவில் தொங்கும் திரைக்கு இருபுறத்திலும் இருந்தவாறு கற்றலும் கற்பித்தலும் நிகழ்கிறது. ஆனால் விரைவிலேயே இருவருக்கும் இந்த நாடகம் தெரிந்துவிடுகிறது. இருவர் இடையிலும் இருந்த திரை அகன்று காதல் மலர்கிறது. காற்றால் ஊதப்பட்ட தீப்போல வளர்கிறது. களவுமணத்தில் முடிகிறது. காலம்கடந்தே இச்செய்தியை மன்னன் அறிகிறான்.

பிறகென்ன! பண்டிதன் செய்த குற்றத்திற்கு மன்னன் மரணதண்டனை விதித்து இருள்சிறையில் அடைக்கிறான். தண்டனை நிறைவேற்றப்படும் நாளை எதிர்நோக்கி பண்டிதன் காத்திருக்கிறான். ஆனால் அவன் அதற்காக வருந்தவில்லை. அரசகுமாரியுடனான தனது காதலைப் போற்றிச் செய்யுட்களாக சுவடியில் எழுதுகிறான் அவை மொத்தம் எண்ணிக்கையில் ஐம்பதாகும்.(பஞ்சாஸிகா என்றால் ஐம்பது.) ஒவ்வொரு செய்யுளும் ‘நான் அவளை இன்றும் நேசிக்கிறேன்’ என்று தொடங்குகிறது.

மரணதண்டனைக்கான நாளும் வருகிறது. அரசன் பண்டிதனிடம் இறக்கும் முன் அவன் ஏதும் கூற விரும்புகிறானா என்று வினவுகிறான். புலவன், “நான் அவள்மேல் கொண்ட காதலின் சுவையுடனேயே இறக்கவிரும்புகிறேன். அந்தச் சுவை எத்தகையது என்பதை செய்யுட்களாக எழுதியுள்ளேன். என் மரணத்துக்குமுன் மன்னர் அதைப் படிக்கவேண்டும் என்பதே எனது கடைசி ஆசை” என்கிறான்.

நூல் பண்டிதன் கையிலிருந்து மன்னனிடம் போகிறது. நூலைப் படித்த அரசன் அதன் புலமைச் சிறப்பில் நெகிழ்ந்துபோகிறான். தண்டனையை விலக்கி தனது மகளை அவனுக்கு மணமும் செய்துகொடுக்கிறான்.

இக்கதையே வடபகுதியில் “காவ்யமாலா” என்னும் நூலில் 13ஆம் பகுதியில் “பில்ஹண பஞ்சாஸிகா” என்னும் தலைப்பில் உள்ளது. கதைவடிவில் மாற்றம் இல்லை என்றாலும் புலவன் சௌரன் ‘பில்ஹணன்’ ஆகிறான். அரசனின் பெயர் வீரசிம்மன் என்றும் அரசகுமாரியின் பெயர் சம்பாவதி என்றும் உள்ளது. கதைக்கான விளக்கச்செய்யுட்களுடன் மொத்தம் 74 செய்யுட்கள் உள்ளன. கதையின் முடிவு சொல்லப்படவில்லை.

அரசர்களும் செல்வந்தரும் இந்த நூலில் உள்ள ஐம்பது செய்யுட்களுக்கும் ஓவியர்களைக்கொண்டு தொடர் ஓவியங்களைத் தீட்டச் செய்து அவற்றை அரிய செல்வம்போல கருவூலத்தில் பாதுகாத்து வைத்தனர்.

பெருவிழாக்காலங்களிலும் அரச விழாக்களிலும் அவை உயர்குடிமக்களுக்குப் பார்வைப்படுத்தப்பட்டன. (பொதுமக்களுக்கானது அல்ல அவை.) ஜைனமுனி பத்மஸ்ரீ ஜினவிஜயஜி என்பவரிடமிருந்து N.C.மேத்தாவின் பொறுப்பில் வந்த பில்ஹண பஞ்சாஸிகா ஓவியங்கள் (எண்ணிக்கையில் 18) குறிப்பிட்ட தனிச்சிறப்புடையவையாகும். இவற்றில் மஞ்சள் நிறப் பின்புலத்தில் கருப்பு மசிகொண்டு வடமொழியில் நாகரி எழுத்தில் செய்யுட்கள் உள்ளன. அதன் இருபுறத்திலும் உள்ள பரப்பில் ஓவியங்கள் காணப்படுகின்றன. ஆனால் அவை நூல்வடிவில் இல்லை. உதிரியாகவே உள்ளன. பொ.பி. 16ஆம் நூற்றாண்டில் மேவாரில் அவை படைக்கப்பட்டிருக்கப்படவேண்டும் என்று நம்பப்படுகிறது.

இந்த ஓவியங்களில் செய்யுட்களின் காதல் சார்ந்த உணர்வு, நிகழும் இடம் சார்ந்த விவரங்கள், செய்யுட்களின் பொருளை வெளிக்கொணரும் விதமான உடல் அசைவுகள் போன்றவை ஓவியரால் மிகவும் கவனமும் அக்கறையும் கூடியவிதமாக ஓவியமாகியுள்ளன. எழுத்தும் ஓவியங்களும் கூடிய நூல்போலவே புழக்கத்தில் இருந்துள்ளது. செய்யுட்கள் எவ்வாறு முழுமையானதோ அவ்விதமாகவே ஓவியங்களும் தம்மளவில் முழுமையானவை. தனித்தே கண்டுகளிக்கத்தக்கது. இவற்றில் குஜராத் மாநில ஜைன ஓவிய வழி அழுத்தமாகக் காணப்படுகிறது.

இந்தியாவின் பல பகுதிகளிலும் இவை ஓவியமாயின. சிவப்பு, மஞ்சள், பச்சை, கருப்பு போன்ற வண்ணங்கள் ஓவியத்தின் பின்புலமாக உள்ளன. மரங்கள், மற்றும் தாவரங்கள் அழகியல் வடிவம் கொண்டுள்ளன. நிகழ் களம் இல்லத்தின் உட்புறம் எனில் மெத்தையுடன் கூடிய கட்டில், அதன்மேலே மஞ்சம், நிழலுக்காகக் கட்டிலின் நாட்புறமும் கம்புகளில் இணைத்துப் பரப்பப்பட்ட துணி, சாளரத்தில் தொங்கும் திரை, திறந்தவெளி அல்லது முற்றம் எனில் மலர்த்தோட்டம், குட்டையான சுற்றுச்சுவருடன் கூடிய தாமரைத் தடாகம், சுற்றிலும் காணப்படும் பல்வகைப் பறவையினங்கள், பின்னால் தெரியும் வானில் உலவும் மேகத் திட்டுக்கள் போன்றவை ஓவியமாகி உள்ளன.

பில்ஹணன் அணிந்திருக்கும் உடை முகலாய உடைவகையைப் பெரிதும் சார்ந்துள்ளது. (இது முகலாய, ராஜஸ்தான, தட்சிண நிலத்துச் சிற்றோவியங்களில் காணப்படும் பொதுத் தன்மையாகும்.) தலையைச் சுற்றியுள்ள துணியின் மேல் கூம்புவடிவத் தொப்பி காணப்படுகிறது. உடைகள் ஊடுருவும் விதத்தில் (மஸ்லின் வகைத்துணி) சன்னமாக உள்ளன.. கால்களைக் கவ்விய விதமாக இருக்கும் பைஜாமா, இடுப்பிலிருந்து உடலைவிட்டு அகன்று காணப்படும் சுற்றாடை நான்குமுனைகள் கூடியது. முழங்கால்வரை மடிப்பில்லாது விரைத்து நீளும். பூவடிவங்கள் மற்றும் வடிவியல் வடிவங்கள் அவற்றில் இடம்பெற்றுள்ளன. பில்ஹணன் மீசையுடனும் நெற்றியில் ஒற்றைக்கோட்டு நாமத்துடன் காணப்படுகிறான். பெரும்பாலும் இருவர் மட்டுமே கொண்ட ஓவியங்களில் எப்போதேனும் அரசகுமாரியின் தோழியும் இடம் பெறுவாள். உருவங்களின் தலையின் மேற்புறம் அவர்களது பெயரும் காணப்படுகின்றன.

இப்போது வரலாறாகிவிட்ட ஒரு சுவையான செய்தியுடன் இதை நிறைவு செய்வோம். 1944ல் மாடர்ன் தியேடர்ஸ் முதலாளி சுந்தரம் ‘பில்ஹணன்’ என்னும் பெயரிலான திரைப்படத்தில் எம்.கே.தியாகராஜபாகவரை பில்ஹணன் வேடத்தில் ஒப்பந்தம் செய்தார். ஆனால் லக்ஷ்மீ காந்தன் கொலைவழக்கில் பாகவதர் சிறை சென்றதால் அது கைவிடப்பட்டது. பின்னர் T.K.S. சகோதரர்கள் அதை மேடை நாடகமாகவும் திரைப்படமாகவும் கொணர்ந்து பெரும் வெற்றிபெற்றனர். 1948ல் அதே ‘பில்ஹணன்’ என்னும் பெயரில் கே.ஆர். ராமசாமி கதாநாயகனாக நடித்த திரைப்படம் வெளிவந்தது. (அப்போதெல்லாம் பெயருக்குக் காப்புரிமை இல்லைபோலும்.) ஆனால் படம் மக்களை ஈர்க்கவில்லை என்று ‘ராண்டர்கை’ தமது கட்டுரையில் குறிப்பிடுகிறார். ஏறத்தாழ கதை மாற்றமில்லாததாகவே உள்ளது.

பின்குறிப்பு:

கட்டுரையை ஓவியங்களுடன் படிப்பதுதான் முறை. ஓவியங்களைக் காண விரும்புவோர் கூகுளில் இந்தத் தலைப்புப் பெயரை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்தால் காணலாம்.

Leave a Reply