Posted on Leave a comment

மாறி வரும் சவுதி அரேபியா | லக்ஷ்மணப் பெருமாள்சவுதி அரேபியாவில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இந்தக்கட்டுரை எனது அனுபவத்திற்குள்ளான காலகட்டத்தில் நடந்த மாற்றங்கள் பற்றி மட்டுமே சொல்லப்போகிறேன். 

மற்ற நாடுகளுக்கு முதன்முறையாகச் செல்வோருக்கு வழங்கப்படும் அறிவுரைகளுக்கும் சவுதி அரேபியாவிற்கு நீங்கள் பணி நிமித்தமாகப் பயணப்பட வேண்டி வந்தால் சொல்லப்படும் அறிவுரைகளுக்குமே ஒரு வித்தியாசமிருக்கும். சவுதி அரேபியா பற்றிய பொதுவான சித்திரம் இந்தியர்களான நமக்கு ஒரு பயத்தை, எச்சரிக்கையைச் சொல்வதாகவே இருக்கும். குறிப்பாக சுதந்திரமற்ற நாடு என்ற மிரட்டல் இருக்கும். அதைப் பிரதிபலிக்கும் விதமாக வேலைக்கு எடுத்த நிறுவனத்தின் அதிகாரியும் பணியில் சேர்ந்த நாளிலோ அல்லது பயணத்திற்கு முன்பாகவோ அப்பயத்தை உறுதிப்படுத்தும் வகையில் சவுதி அரேபியாவிற்குள் வரும்போது என்ன கொண்டு வரலாம், எதையெல்லாம் அறியாமல் கொண்டு வந்துவிடக் கூடாது என்பதில் ஆரம்பித்து, ஆடைக் கட்டுப்பாட்டிலிருந்து ஆட்சியாளர்களைப் பற்றி பொது வெளியில் எங்கும் எதுவும் பேசக் கூடாது என்ற அறிவுரையில் வந்து முடியும்.  குறிப்பாக மன்னரைப் பற்றியோ ஆட்சியைப் பற்றியோ வெளிப்படையாக எழுதினால் விசாரணையின்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரையும் சவுதிக்கு முதன்முறையாக வருபவர்கள் விமான நிலையத்திலே மோசமான அனுபவங்களைச் சந்தித்திருப்பார்கள். துளியும் ஆங்கிலம் பேசாத விமானநிலைய அதிகாரிகள். களைப்போடு பயணம் செய்து வந்து சேர்ந்திருக்கும் மனிதர்கள் பற்றிய அக்கறை சிறிதும் அதிகாரிகளிடம் இருக்காது. எந்த வரிசையில் நிற்க வேண்டும் என்பது கூடப் புரியாமல் மாற்று வரிசையில் நின்றவர்கள், மீண்டும் சரியான வரிசையில் வந்து நின்று வெளிவருவதற்குள் போதும்போதுமென்றாகி விடும். எத்தனை மணி நேரம் காத்திருந்து நீங்கள் Immigration clearance செய்து வெளி வருவீர்கள் என்பதெல்லாம் உங்கள் அதிர்ஷ்டம்! சிலருக்கு ஏன் காக்க வைக்கிறார்கள் என்று தெரியாது. அங்கிருந்து பாக்கேஜ் எடுத்து வெளி வரும் போது பயணிகள் தங்களின் அனைத்து பாக்கேஜையும் திறந்து காண்பிக்க வேண்டும். அறிந்தோ அறியாமலோ  CD க்கள், கதைப் புத்தகங்கள்,  மடிக்கணினியில்  Pirated software, சாமி படங்கள் கொண்டு சென்று அவர்கள் பார்த்து விசாரித்தால் என்ன செய்வார்கள் என்ற அச்சத்திலேயே மனிதன் பாதி செத்துப் போய் விடுவான். சில நேரங்களில் அவற்றைப் பறிமுதல் செய்து விட்டு சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் பறித்து வைத்த பொருட்களைச் சில தினங்கள் கழித்து அதற்கென உள்ள ஒரு அதிகாரியிடம் சென்று CD யில் தவறாக எதுவுமில்லை என்று நிரூபித்தால்,  உங்கள் பொருளைத் தாராளமாக எடுத்துச் செல்லலாம் என்ற அறிவிப்பு உண்டு. ஆனால், எவரும் அத்தனை எளிதில் சென்று வாங்க மாட்டார்கள். ஏனெனில் அவரையும் அறியாமல் அதில் தேவையற்ற கவர்ச்சிப் படங்களோ, தகாத காட்சிகள் உள்ள வீடியோக்களோ இருந்தால் தேவையற்ற பிரச்சினையில் மாட்டுவோம் என்று அப்பக்கமே செல்ல மாட்டார்கள்.

இன்று வரையிலும் கசகசா சவுதி அரேபியாவில்  ஒரு போதைப் பொருளாகத்தான் பார்க்கப்படுகிறது. மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று எண்ணும் சக இந்தியனுக்கு வழங்கப்படும் அறிவுரையில் கசகசா கொண்டுவரக்கூடாது என்பது தவறாமல் இடம் பெறும். இன்று வரையிலும் மாறாத விஷயங்களைக் கடைசியில் சொல்கிறேன். தற்போதைக்கு எங்கிருந்த சவுதி அரேபியா எப்படி மாறுகிறது என்ற சித்திரம் கிட்டவே கடந்த கால நடைமுறைகள், சட்ட திட்டங்கள் பற்றிச் சொன்னேன்.

முத்தவாக்களின் அதிகார பலம்

கடைகளில் குமுதம், குங்குமம் போன்ற புத்தகங்கள் அப்போதே வந்து கொண்டிருந்தன. அட்டைப்படத்தில் ஆரம்பித்து புத்தகத்தின் இறுதிப்பக்கம் வரை கவர்ச்சிப்படங்கள் அனைத்திலும் கரி பூசப்பட்டிருக்கும். சேலை கட்டிய நடிகைகளின் இடுப்புப் பகுதி கூடக் கரி பூசப்பட்டிருக்கும். வீடுகளில் மாற்று மதத்தினர் தங்களது சாமி படங்களை வைத்திருக்கக்கூடாது. அப்படி வைத்திருப்பது தெரிந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் போன்ற பயமுறுத்தல்களால் சாமி படங்கள் கூட வெளியாட்கள் கண்களில் படாத வண்ணம் மறைக்கப்பட்டிருக்கும். அப்போது மதக் காவலர்கள் என்று சொல்லப்படும் முத்தவாக்களுக்கு பலத்த அதிகாரமிருந்தது. அவர்களைக் கண்டால்  இஸ்லாமியரில் ஆரம்பித்து மாற்று மதத்தினர் வரை அனைவரும் பயந்து நடுங்குவார்கள். ஏனெனில் சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் சிறைக்கு அனுப்பி விடுவார்கள். தொழுகை நடக்கும் ஐந்து வேளைகளில் வெளியே யாரேனும் சுற்றித் திரிந்தால் உடனடியாகக் கைதுதான். குறிப்பாக இஸ்லாமியர்கள் தொழுகைக்குச் செல்லாமல் திரிந்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும். மாற்று மதத்தினர் அவர்கள் தொழுகை செய்வதை மதித்து அமைதியாகச் செல்ல வேண்டும். வாகனத்தில் அமர்ந்து இருப்பவர்கள் வரை விசாரணை செய்வார்கள் என்பதால் பலரும் முத்தவா வருகிறார் என்றாலே அவ்விடத்தை விட்டு வேகமாக மாற்று இடங்களுக்குச் சென்று விடுவார்கள். அதை உணர்ந்துகொள்ள வேண்டுமென்றால் திடீரென ஒரு கும்பல் வேகமாக ஓடும். அதுதான் முத்தவா வருகை பற்றிய சமிக்ஞை.

ஆண்கள் கையிலோ கழுத்திலோ தங்க மோதிரம் அணிந்தால் முத்தவாக்கள் பிடுங்கிச் சென்று விடுவார்கள். ஆண்கள் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது, கைகளில் கறுப்புக் கயிறுகளைக் கட்டி இருக்கக் கூடாது. இதற்குப் பொருள் மோதிரம், கறுப்புக் கயிறு கட்டி இருக்க மாட்டார்கள் என்ற அர்த்தமல்ல. மாட்டினால் பதில் சொல்ல வேண்டி வரும் என்பதே. ஒருமுறை யான்பு என்ற நகரில் சலா (தொழுகை) நேரத்தில் வழக்கம் போல ஒரு கும்பல் ஓட நாங்களும் காரை விட்டு இறங்கி வேகமாக ஓடி விட்டோம். வந்து பார்த்தால் அவசரத்தில் காரின் ஹெட்லைட்டை அணைக்காமல் சென்றுள்ளேன். பாட்டரி முற்றிலும் படுத்து நண்பர்களின் உதவியோடு காரை எடுத்துச் செல்ல வேண்டிய அவஸ்தை ஏற்பட்டது.

பெண்களைப் பொருத்தவரையில் எந்த மதத்தினராக இருந்தாலும் புர்கா போட்டே வெளியில் செல்ல வேண்டும். தலையிலும் அவசியம் அபயா போட்டிருக்க வேண்டும். பெண்கள் ஆண் துணையின்றி, அதாவது கணவன், அண்ணன், தந்தை, தம்பி தவிர்த்த எந்த ஆணுடனும் வெளி இடங்களில் செல்லக் கூடாது. ஒருவேளை மால்களிலோ பூங்காக்களிலோ அப்படி மாட்டினால் சிக்கல்தான். இன்று வரையிலும் சட்டம் அப்படியே சொல்கிறது.

மிகப்பெரிய மால்களுக்குள் வியாழன், வெள்ளி ஆகிய வார விடுமுறை நாட்களில் கல்யாணமாகாதவர்கள் அல்லது குடும்பமல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். மற்ற பணி நாட்களில் மட்டுமே உள்ளே செல்ல அவர்களுக்கு அனுமதி உண்டு. வீடியோ கடைகள் உண்டு. அதிலும் சில ஊர்களில் அதற்கும் தடை. மறைத்து வைத்து விற்பவர்கள் முத்தவாக்களிடம்  பிடிபட்டால் அவ்வளவுதான். வெளியூர்களுக்கு மட்டுமே அரசுப் பேருந்துகள் இயங்கி வந்த காலமது. நம்மூரில் வேன் என்று சொல்வோமல்லவா அதுபோன்ற பேருந்து மட்டுமே ரியாத் போன்ற மாநகரங்களில் உண்டு. சிறு நகரங்களில் அதுவும் கிடையாது. வாகனங்கள் இல்லாதவர்கள் டாக்சியில் மட்டுமே செல்ல வேண்டும். விலை மிக மிகக் குறைவுதான். கலை நிகழ்ச்சிகளை எல்லாம் அதிகாரபூர்வமாக நடத்த இயலாது என்பதான காலகட்டமது.

*

நான் துணை மின் நிலையத்தில் பணி புரிந்தபோது கேள்விப்பட்ட நிகழ்வு இது. சவுதி பொறியாளர் ஒருவரையும் இந்தியப் பொறியாளர் ஒருவரையும் அந்த மின் நிலையத்தில் பணி புரிய அமர்த்தியுள்ளார் மேலாளர்.. சவுதி இளைஞர் தொழுகைக்குச் செல்கிறேன் என்று சென்றால் மூன்று மணி நேரம் வரமாட்டார். கேட்டால் சலா சென்றேன், நீ எப்படிக் கேட்கலாம் என்பார். இப்படியாகச் செல்ல சீனியர் மேலாளரிடம் தன்னால் அவரைக் கட்டுப்படுத்த இயலாது என்று இந்தியப் பணியாளர் சொல்லியுள்ளார். இதை அறிந்த சவுதி இளைஞர் நேரடியாக முத்தவாவிடம் சென்று, ‘நான் தொழுகை செல்லக் கூடாது என்று இவர் சொல்கிறார்’ என்று புகார் கொடுக்க, எந்த விசாரணையுமின்றி அந்த நிறுவனமே அவரை இந்தியாவிற்கு final exit செய்து வெளியேற்றியுள்ளது. வெளியற்ற வேண்டும் என்பது மதக்காவலரின் உத்தரவு. இது போன்ற பல செவி வழிச் செய்திகள் மட்டுமல்லாமல் அனுபவத்திலும் பெரும்பாலான சவுதிகள் வேலைக்குக் குறிப்பிட்ட நேரத்திற்கு வராமல் இருப்பது, முழு நேரமும் அலுவலகத்திலோ பணியிடத்திலோ வேலை செய்யாமல் இருப்பது என்பதெல்லாம் தெரிந்தும் எந்த மேலாளரும் கண்டுகொள்ளாமல் செல்வார்கள். ஏனெனில் காவல் நிலையத்திலோ அல்லது வெளியிலோ தனக்கு இடைஞ்சல் வரலாம் என்பதால்தான்.

மாறி வரும் காட்சிகள்

பெண்கள் முன்னேற்றம்:

மன்னர் அப்துல்லாவின் காலகட்டத்திலேயே மதக் காவலர்களுக்கான அதிகாரங்கள் அகற்றப்பட்டன. அவர்கள் யாரையும் நேரடியாகக் கைது செய்யக் கூடாது, தேவைப்பட்டால் காவலர்களை அழைத்துப் புகார் செய்யலாம் என்ற வகையில் அதிகாரங்கள் சுருங்கின. குறிப்பாகப் பெண்களின் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் மன்னர் அப்துல்லாவின் காலத்தில்தான் அதிக அளவில் ஆரம்பமானது. முற்றிலுமாக பெண்களுக்கான சுதந்திரம் இன்று வரையிலும் கிடைக்காவிட்டாலும் மெல்ல மெல்ல பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த பல தடைகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. ஓர் அரசின் சில செயல்பாடுகளிலிருந்து அது எத்தகைய மாற்றத்தை நோக்கி நகர்கிறது என்று நாம் அனுமானிக்க இயலும். அவ்வகையில் உலகின் மிகப் பெரிய பெண்கள் பல்கலைக்கழகம் (Princess Noura Bint Abdul Rahman University) ரியாத்தில் அப்துல்லாவின் ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. 1970ல் ஆண்களின் கல்வி விகிதம் 15% ஆகவும், பெண்களின் கல்வி விகிதம்  2% ஆகவும் இருந்தது. உலக வங்கியின் கணக்கின் படி, தற்போது ஆண்களின் (15 -24 வயதுடையவர்களின்) கல்வி விகிதம் 98%  என்றும் பெண்கள் 95% என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. (நம்ப முடியவில்லை, ஒருவேளை அரபு மொழியில் படிக்க எழுதத் தெரிந்தவர்களாக இருக்கலாம்.) இன்றைய நிலையில் பெண்களே 60% பல்கலைக்கழகங்களில் படித்து வருகிறார்கள். ஆண்கள் 40%தான் உள்ளனர். மேலை நாடுகளுக்குச் சென்று படித்து பட்டம் பெறுபவர்களின் எண்ணிக்கையிலும் சவுதிய ஆண்களைக் காட்டிலும் பெண்களே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் அரசியலில் பங்கெடுக்கும் வாய்ப்பும் மன்னர் அப்துல்லா காலத்திலேயே தொடங்கிய ஒன்று. கலந்தாய்வுக் கூட்டங்களில் பெண்கள் பங்கெடுப்பது எனத் தொடங்கிய விஷயம் இன்று மன்னர் சல்மானின் ஆட்சிக் காலத்தில் பெண் அமைச்சர் ஒருவரை நியமித்துள்ளது என்று முன்னேற்றம் கண்டுள்ளது. தற்போதைய இளவரசர் முகம்மது பின் சல்மான் மிக வேகமாக நாட்டை மாற்றுப்பாதைக்கு எடுத்துச் செல்கிறார். அதன் சாட்சியாக பெண்கள் விஷயத்திலேயே மூன்று விஷயங்களை அவர் அறிவித்தார். பெண்களுக்கான வாகன ஓட்டுநர் உரிமையை வழங்கியது, பெண்கள் அதிக அளவில் பணியில் அமர்த்தப்படும் நிகழ்வுகள், உலகின் முதல் பெண் ரோபோவை அடையாளமாக வாங்கியது எனப் பெண்களுக்கான சுதந்திரம் சார்ந்த சமிக்ஞைகள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன. பெண்களும் விளையாட்டுப் போட்டிகளைக் காணும் வாய்ப்பு, விளையாட்டுக் கல்லூரி எனப் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இவையெல்லாம் பெரிய மாற்றமா என்று ஒருவர் கேட்கலாம். எதுவுமே வழங்கப்படாமல் மறுக்கப்பட்ட உரிமைகள் இன்று கிடைக்க ஆரம்பித்திருப்பதை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

மால்களில் ஆரம்பித்து வணிக நிறுவனங்கள் வரை இன்று பல பெண்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கான ஆடைக் கட்டுப்பாடும் விரைவில் தளர்த்தப்படலாம்.

திரை அரங்குகள் பொதுப் போக்குவரத்து:

பொழுது போக்குவதற்காக திரை அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இதைப் பற்றி அறிவிக்கும் போதும் முகம்மது பின் சல்மான் இவ்வாறாகக் குறிப்பிட்டார். 1979க்கு முன்பான சவுதி அரேபியாவில் திரை அரங்குகள் மற்றும் பல பொது விஷயங்களில் அனைவரும் கலந்து கொள்ளும் வழக்கம் இருந்தது. இடையில் அது மாறி இருந்தாலும் மீண்டும் பழைய சவுதி அரேபியாவாக மாறும் என்றார். இந்த வருடமே திரை அரங்குகள் வந்துவிடும்.  தற்போது பல இடங்களில் கலை நிகழ்ச்சிகளை நடத்தவும் அரசு அனுமதித்து வருவது குறிப்பிடத்தக்கது.

மாநகரங்களில் முதற்கட்ட நடவடிக்கையாக மாநகராட்சிப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் ஏற்கெனவே அறிமுகமும் ஆகிவிட்டது. ரியாத் மெட்ரோ ரயில் பணிகளும் நடந்து வருகின்றன. இனிமேல்தான் மற்ற நகரங்களுக்கும் மெட்ரோ சேவை வரவேண்டும். ஏழைகள் இதனால் மிகப்பெரிய பலனை அடைவார்கள்.

முன்பெல்லாம் இந்துக்களோ மாற்று மதத்தினரோ விழாக்களை இஸ்திரகா (resort) பிடித்துக் கொண்டாடுவார்கள். இப்போது தீபாவளி, பொங்கல் , கிருஸ்துமஸ் எனப் பண்டிகைத் தினங்களிலும் பூஜைகள் செய்து கொண்டாடுகிறார்கள். சட்ட ரீதியாக அனுமதி இல்லையென்றாலும் அரசின் மென்மைப் போக்கின் காரணமாக தைரியமாகக் கொண்டாடும் மனநிலைக்கு மக்கள் வந்துள்ளார்கள்.

விமான நிலையங்களில் இன்று

தற்போது விமான நிலையங்களில் வாடிக்கையாளர்களை வரவேற்பது மற்றும் “Immigration Clearance” பகுதிகளில் தனியார் நிறுவனத்தின் ஆட்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். ஆங்கிலத்திலேயே பேசத் தெரிந்தவர்கள் உள்ளனர். மேலும் ஒரு மணி நேரத்திற்குள்ளாக வெளியில் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்துவிடலாம். இப்போதெல்லாம் Scanning செய்வதில் சந்தேகம் ஏற்பட்டால் மட்டுமே திறந்து காண்பிக்கச் சொல்கிறார்கள். மற்றபடி விமான நிலையத்தில் எந்தப் பிரச்சினையுமில்லை. தற்போதைய அரசு இன்னொரு அறிவிப்பையும் செய்துள்ளது. விமான நிலையங்களில் அதிக அளவில் பெண்களைப் பணியில் அமர்த்தப் போவதாகவும் அவர்களுக்கு இந்தி, தகலாக், உருது, மலையாளம் எனப் பல மொழிகளில், எந்தெந்த நாடுகளிலிருந்து மக்கள் தொகை அதிகமுள்ளனரோ அவர்களை உபசரிக்கும் விதமாக அந்த மொழிகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்ற அறிவிப்பும் வந்துள்ளது. இவையெல்லாம் கடந்த கால சவுதி அரேபியா எப்படி மாறி வருகிறது என்பதற்கான அடையாளங்கள்.

ஐரோப்பிய மாதிரி  நகரம்

 ஐரோப்பிய மாதிரி நகரம் அமைக்கப்படும் என்றும் பல சுற்றுலாத் தளங்கள் அமைக்கப்பட்டு மற்ற வளைகுடா நாடுகளுக்கு இணையான பல்வேறு பொழுதுபோக்கு இடங்களும், வெளி நாட்டினர் வந்து மகிழும் வகையிலான Water Theme Park,  Disney Land எனப் பல விஷயங்கள் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் வருமானத்தில் எண்ணெய்க்கு அடுத்தபடியாக சுற்றுலா வருமானமே இன்றும் இரண்டாமிடத்தில் அதிக வருவாய் ஈட்டித் தருகிறது. சுற்றுலா வருமானம் ஒட்டுமொத்தமாக மெக்கா, மெதினாவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் மூலமே கிடைத்து வந்தது.

சவுதி அரேபியாவின் இன்றைய சிக்கல்கள்

எண்ணெய் சார்ந்த வணிகம் குறைவதாலும் அண்டை நாடுகளுடனான உறவுகளில் ஏற்பட்டுள்ள பகையாலும் சவுதி பல்வேறு சிக்கல்களையும் எதிர்கொண்டு வருகிறது. குறிப்பாக ஏமனில் ஹௌதி அமைப்புடன் நடக்கும் போர், சிரியாவிற்கான போர்ச்செலவு, கத்தாருடனான உறவில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள், என்றும் பகைவனான ஈரான் என வளைகுடா நாடுகளுக்குள்ளேயே சவுதி அரேபியாவின் அண்டைய நாடுகளுடனான  உறவு கெட்டுப்போயுள்ளது. (அதேவேளையில் ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன், குவைத், ஓமன் போன்ற நாடுகளுடனான உறவு இணக்கமாகவே உள்ளது.) இதனால் மக்கள் நலத்திட்டங்களைக் காட்டிலும் ஆண்டுதோறும் ராணுவத்திற்கு பட்ஜெட் அதிக அளவில் ஒதுக்கப்படுகிறது. இவை ஒருபுறம். மற்றொரு புறம் எண்ணெய் வளத்தை வைத்து செழிப்பாக இருந்த சவுதி அரேபியா எதிர்காலங்களில் எலெக்ட்ரிக் கார்கள், கதிராலைகள், காற்றாலைகள் என பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் ஏற்படுவதால் மிகப்பெரிய வருமான இழப்பைச் சந்திக்கும். கூடுதலாக பாரலுக்கு விலை நிர்ணயம் செய்வது தாங்கள் எடுக்கும் முடிவே என்ற இடத்திலிருந்து இன்று அதன் தேவை குறைந்துள்ளதால், பாரலுக்கான விலையையும் ஏற்ற முடியவில்லை. இதனால் அரசுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப்
பொருளாதாரச் சிக்கலைச் சமாளிப்பதில் சிக்கல் ஏற்படுவதால் மக்களிடம் வரி, வெளிநாட்டினரிடம் வரி என அரசு தனக்கான வருமானத்தைப் பெருக்கும் வழிகளைக் கொண்டு வந்துள்ளது.

வெளிநாட்டினர் குடும்பத்திலுள்ள நபர் ஒன்றுக்கு இத்தனை ரியால்கள் கட்டவேண்டும் என்பதை  ஆண்டுதோறும் அரசு அதிகரிக்கும் என்பது அமலுக்கு வந்து விட்டது. பொருட்கள் மற்றும் சேவைக்கு 5% VAT வசூலிக்கப்படுகிறது. இதனால் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. மேலும் நிறுவனங்களிடமிருந்து ஆண்டுதோறும் ஒரு வெளிநாட்டினருக்கு ஒரு விலையை நிர்ணயித்து அதன் மூலமும் அரசு வருவாயைப் பெற வேண்டிய நிலையில் உள்ளது. சுருங்கச் சொல்வதனால் வெளிநாட்டினருக்கான விசா வழங்குவதில் ஆரம்பித்து அனைத்திலும் பண வசூல் வேட்டையை அரசு அமல்படுத்தியுள்ளது.  எதிர்காலத்தில் வாகனங்கள் பார்க்கிங்கிற்கும் வசூல் பிரிக்கப்படும். சேமிப்பின் பூமி என்று அனைவராலும் மெச்சப்பட்ட சவுதி அரேபியா இனி செலவழிக்கவும் அரசுக்கு வரி செலுத்தவும் தயாரெனில் மட்டுமே தாக்குப்பிடிக்க இயலும். இத்தகைய வரிவிதிப்பு முறைகளால் பலரும் தங்கள் குடும்பங்களைத் தத்தம் நாடுகளுக்கு அனுப்புவார்கள் என்று கணிக்கப்படுகிறது. இதனால் 2020 க்குள்  35% பன்னாட்டுப் பள்ளிகள் மூடப்படும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.

இன்றும் மாறாமல் நடைமுறையில் உள்ளவை

தொழுகை நேரங்களில் கடைகள் மூடப்படுகின்றன. மற்ற அராபிய நாடுகளில் இத்தகைய வழிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை. மெக்கா, மெதினா நகர எல்லைக்குள் மாற்று மதத்தினர் செல்ல இயலாதது; கோயில்கள், சர்ச்சுகள் போன்ற வழிபாட்டுத்தலங்களுக்கு அனுமதி வழங்கப்படாதது; பெண்கள் இன்றும் புர்கா அணிய வேண்டியுள்ளது; உணவகங்களில் குடும்பத்தினர் தனியாக, திருமணமாகாதவர்கள் தனியாக அமர்ந்து சாப்பிடும் வழக்கம் என மாற வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. வெளியே செல்லும் போது மறந்துகூட இக்காமாவை (அடையாள அட்டை) விட்டுச் சென்றால் முதலில் கைது. நிறுவனத்திலிருந்து வந்து இக்காமாவைக் காண்பித்தால் மட்டுமே சிறையிலிருந்து வெளிவர இயலும்.

இன்றும் ஆட்சியாளர்களை எதிர்த்து எழுதுவதோ பேசுவதோ இயலாத காரியம். கருத்துச் சுதந்திரம் கிலோ என்ன விலை என்றுதான் கேட்க வேண்டும். அப்படித் தான் இன்றும் உள்ளது. மாறி வரும் சவுதி அரேபியா என்பது அரசு தானாக முன்வந்து எடுக்கும் நடவடிக்கைகளால் மட்டுமே நடக்கும் என்பதே கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மக்கள், அரசு என்ன மாற்றம் கொண்டு வருகிறதோ அதில் சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டும். அதை மீறி மொட்டை மாடியில் நடனமாடிய பெண்ணைக் கூட கைது செய்து பின்னர் கண்டிப்புடன் விடுதலை செய்யும் வழக்கம் இன்றும் உள்ளது.

அரசு பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டு வரும் இந்தக் காலகட்டத்தில்தான் வெளிநாட்டினருக்கான செலவும் அதிகரித்து வருகிறது. இந்த ஊருக்கு வந்தபோது லிட்டருக்கு பத்து ஹலாலாவாக இருந்த பெட்ரோல் விலை இன்று இரண்டு ரியால் ஐந்து ஹலாலாவாக அதிகரித்துள்ளது. நவீனமாக மாறும் காலகட்டத்தில் அனுபவிக்கப் போகும் வெளிநாட்டினரும் உள்நாட்டினரும் மகிழ்ச்சி அடைவார்கள். அதிக செலவின் காரணமாகவும் சவுதியர்களை பணிகளில் அமர்த்துவதால் பலரும் வேலை வாய்ப்புகளை இழந்து வருகின்றனர். சவுதியும் மாறுகிறது, பணிபுரியும்  வெளிநாட்டினரில் ஒரு தரப்பின் சகாப்தமும் நிறைவுக்கு வருகிறது. புதிய சவுதி அரேபியாவில் புதிதான வெளிநாட்டினர் அனுபவிப்பார்கள் அல்லது சேமிப்பைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் இங்கே தாக்குப் பிடிப்பார்கள்.

முகம்மது பின் சல்மானின் அதிரடி நடவடிக்கைகளால் சவுதி அரேபியா எட்டுக் கால் பாய்ச்சலில் நாகரிகத்தை நோக்கி வளர்கிறது. பொருளாதாரத் திட்டங்களுக்கான சவால்களைச் சமாளித்து விட்டால் சவுதியும் செழிக்கும், பணி புரியும் வெளிநாட்டினரும் பலன் பெறுவார்கள் என்பதே நிதர்சனம்.

Leave a Reply