Posted on Leave a comment

அறிவியலும் இந்துத்துவமும் – 2 | அரவிந்தன் நீலகண்டன்

மோடி அரசு பதவி ஏற்ற நாளிலிருந்து அது அறிவியலுக்கு எதிரானது எனும் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அது உண்மை என்பது போல சில நிகழ்வுகளும் நடந்துள்ளன. உதாரணமாக ஒரு தனியார் மருத்துவமனையை திறக்கச் சென்ற மோடி, அந்தக் காலத்திலேயே இந்தியாவில் அதி நவீன மருத்துவத் தொழில்நுட்பம் இருந்தது என்பதற்கு விநாயகருக்கு யானை தலை பொருத்தப்பட்டதை உதாரணமாகக் கூறினார். இந்திய அறிவியல் காங்கிரஸ் கூடுகையின்போது பண்டைய பாரதத்தில் விமானங்கள் இருந்ததாக ஓர் ‘ஆய்வுத்தாள்’ சமர்ப்பிக்கப்பட்டது. டார்வினின் பரிணாமம் தவறு என்று ஒரு வாதத்தை மனிதவளத்துறை அமைச்சர் கூறினார். பாரதிய ஜனதா தலைவர் ஒருவர் நியூட்டனுக்கு முன்பே இந்தியர்களுக்கு புவி ஈர்ப்பு குறித்து தெரிந்திருந்ததாகவும் அதை நியூட்டன் இந்தியர்களிடமிருந்து திருடிவிட்டதாகவும் கூறினார். மறைந்த இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாவ்கிங் வேதங்களில் ஐன்ஸ்டைனின் சமன்பாட்டை விட அதிக உண்மை உள்ள ஒரு சமன்பாடு இருப்பதாக அறிவியல் துறை அமைச்சர் டாக்டர். ஹர்ஷ் வர்த்தன் கூறினார்,

இதையெல்லாம் வைத்துப் பார்த்தால் மோடி அரசுக்கு அறிவியல் பார்வை இல்லை என்பதான பிரசாரத்தில் உண்மை இல்லை எனச் சொல்ல முடியாது என்பது போல தோன்றலாம்.

ஆனால், இந்தத் தவறான தனிப்பட்ட அமைச்சர்களின் பார்வைகளைத் தாண்டி அறிவியல் தொழில்நுட்ப உலகில் மோடி அரசு முக்கியமான நேர்மறை மாற்றங்களைக் கொண்டு வந்த வண்ணம் உள்ளது.

’இந்தியாவில் தயாரிப்பு’ எனும் திட்டத்தில் ஒரு முக்கியமான விளைவு வேறு வழியே இல்லாமல் இந்திய தொழில்நுட்பக் கல்வி மேம்பாடு அடைவதுதான். நேரு உருவாக்கிய இந்தியத் தொழில்நுட்ப மையங்கள் (Indian Institute of Technology, IIT) பொது அறிவியலிலிருந்து மாறுபட்ட தொழில்நுட்ப மேன்மையகங்கள். இங்குப் படிப்பவர்களுக்கு அடிப்படை அறிவியல் ஆராய்ச்சிகளில் ஆர்வம் பெரிதாக இருக்காது. இப்படிப்பட்ட கல்வி கட்டமைப்பைத்தான் ராமனும் சாகாவும் எதிர்த்தனர். அறிவியல் அறிவைப் பரவலாக்க கல்வி அமைப்பில் செய்ய வேண்டிய அடிப்படை மாற்றங்களையும் கடும் உழைப்பையும் நேரு அரசு முடிந்தவரை செய்யவில்லை. மாறாக ஒரு காலகட்டத்தில் ‘அறிவியல் மனப்பான்மை’ (scientific temper) என்கிற கோட்பாட்டை நேரு முன்வைத்தார். 1975ல் எமர்ஜென்ஸியின் போது அது ஒரு அரசியல் சித்தாந்த ஆயுதமாக இடதுசாரிகளால் மாற்றப்பட்டு இந்திய அரசியல் நிர்ணய சட்டத்தில் இணைக்கப்பட்டது. அதை சில இடதுசாரி அறிவி ஜீவிகள் பிரசாரமும் செய்தனர். டார்வினையும் கார்ல் பாப்பரையும் விட முக்கியமாக மார்க்ஸும் லெனினும் முன்வைக்கப்பட்டனர். இப்படிப்பட்ட பிரசாரங்கள் அறிவியல் மனப்பான்மை என்பதை அரசியல் பிரசார உக்தியாக மாற்றிவிட்டன.
இது அறிவியலை மக்களிடமிருந்து பெரிய அளவில் அன்னியப்படுத்தியது.

மோடி அரசு இதற்கு நேர் மாறான பார்வையை முன்வைக்கிறது.

அடல்-தொழில்நுட்பப் புத்தாக்க முயற்சிப் பட்டறைகள் பள்ளிகளில் இப்போது இணைக்கப்பட்டு வருகின்றன. மாணவர்கள் தங்கள் அறிவியல் அறிவைத் தம் புத்தாக்க உணர்ச்சியுடன் இணைத்துத் தம் கரங்களாலேயே புதிய கருவிகளையும் பரிசோதனைகளையும் உருவாக்கும் வாய்ப்பை இந்த பள்ளிக் கூட பட்டறைகள் நல்குகின்றன. இதன் விளைவுகள் என்ன?

சர்வதேச புத்தாக்க வல்லமை அளவுகோல் – Global Innovation Index – GII – ஆண்டு தோறும் வெளியிடப்படுகிறது. அதில் இந்தியாவின் தர மதிப்பீடு 2013ல் 66 ஆக இருந்தது 2014ல் 76 ஆக வீழ்ச்சி அடைந்திருந்தது. 2014ல் மோடி அரசாங்கம் பதவியேற்ற போது இதுதான் நிலை. 2015ல் இதே வீழ்ச்சி தொடர்ந்தது. இந்தியாவின் GII மதிப்பீட்டு எண் 81 ஆக வீழ்ச்சி அடைந்தது. 2011ல் இந்தியாவின் மதிப்பீட்டு எண் 62. 62ல் இருந்து 81 என்பது மோசமான வீழ்ச்சி என்பது மட்டுமல்ல. சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அது குறைக்கும். இந்தியாவில் சர்வதேசத் தரம் வாய்ந்த ஆராய்ச்சி நிறுவனங்கள் இந்தியாவில் உருவாகும் வேகம் மட்டுப்படும்.

மோடி அரசாங்கம் தொழில்நுட்பப் புத்தாக்க முயற்சிகளைப் பள்ளிகளிலிருந்தே மேம்படுத்தும் முனைவுடன் செயல்படுகிறது. அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்படும் அடல் பட்டறைகள் ஒரு முக்கிய முன்னோக்கிய செயல்பாடு. அடல் பரிசோதனைப் பட்டறைகள் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரைக்குமான பள்ளிகளில் நிறுவப்பட்டு வருகின்றன. இப்பரிசோதனைப் பட்டறைகள் மூலம் மாணவ-மாணவியர் உள்ளூர்ப் பிரச்சனைகளுக்கு அறிவியல் தொழில்நுட்பம் மூலம் தீர்வு காண ஊக்குவிக்கப்படுவர். அரசு சார்ந்த திட்டங்களுக்கே உரிய சவால்கள் தடங்கல்கள் செயல்முறை இடர்பாடுகள் ஆகியவை இருந்த போதிலும் கூட இந்தியா முழுக்க எல்லாத் தரப்பு மாணவர்களையும் சென்றடையும் விதமாகச் செயல்முறை அறிவியல் கல்வி ஜனநாயகப்படுத்தப்படுவது மோடி அரசினால்தான் என்பது முக்கியமான விஷயம்.

2016ல் இந்தியாவின் GII மதிப்பீட்டு எண் 66 ஆகியது. இந்த ஆண்டு ஜெனிவாவில் GII மதிப்பீட்டு எண் வெளியிடப்பட்ட போது இந்தியாவின் மதிப்பீட்டு எண் 60. இது குறித்த அறிக்கையில் தரப்பட்டுள்ள விவரங்கள் ஒரு விஷயத்தைத் தெளிவாக்குகின்றன. மோடி அரசின் செயல்பாடுகள் இந்தியாவில் அறிவியல் தொழில்நுட்ப கல்வியின் தரத்தை உயர்த்தியுள்ளன.

அறிக்கை கூறுகிறது:

ஈரான், கஜகஸ்தான் , பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் முக்கியமான முன்னகர்வுகள் உள்ளன. ஆனால் முதன்மையாக இந்தியாவின் தற்போதைய நிதர்சனமான மேம்பாடும் அந்த பிராந்தியத்தின் புத்தாக்க முயற்சி மேம்பாட்டுக்கு அதன் பங்களிப்பும் இக்காலகட்டங்களில் மிக முக்கியமானவை. கடந்த சில ஆண்டுகளாகவே GII மதிப்பீட்டு எண் காட்டுவது போல. அதன் புத்தாக்கத் தரம் அதன் GDPயைக் காட்டிலும் விஞ்சி நிற்கிறது. அண்மையில் புத்தாக்க உள்ளீட்டிலும் அதன் உற்பத்தி வெளிப்பாட்டிலும் சரி முக்கியமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. இந்த வளர்ச்சி தொடர்ந்து இருப்பது அவசியமாகும்.

அறிவியல் தொழில்நுட்பப் புத்தாக்க முயற்சிகளும் அவை வணிக மயத்தன்மையுடன் நிறுவனப்படுத்தப்படுவதும் பல காரணிகளைப் பொருத்தது. அவற்றில் நிறுவனங்கள் ஒரு நாட்டில் செயல்படும் விதம் முக்கியமானது. மோடி அரசின் கீழ் அது நான்கு புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. உள்கட்டமைப்பு 14 புள்ளிகள் உயர்ந்திருக்கிறது. இந்தியாவின் பலவீனமாக கருதப்படும் கல்வித்தரம் நான்கு புள்ளிகள் உயர்ந்திருக்கின்றன. இதைக் குறிப்பாகச் சுட்டிக்காட்டி அறிக்கை கூறுகிறது – இதற்கு காரணம் ஒவ்வொரு மாணவனுக்குமாக அரசு செய்யும் செலவு சீர்மை அடைந்திருக்கிறது என்று. இதையெல்லாம் செய்ய மோடி எத்தனை வசைகளை வாங்க வேண்டியிருந்தது என்பதை நாம் மறந்துவிட முடியாது. ஆனால் இந்தியா அறிவியல் தொழில்நுட்பத்தில் சர்வ நிச்சயமாக முன்னேறுகிறது என்பது உண்மை.

நேருவைப் போல ஜோடனை வார்த்தைப் பூச்சுக்கள் அறியாதவராக மோடி இருக்கலாம். ஏன் அறிவியல் சித்தாந்த அறிவு நேருவைப் போல அவருக்குக் கிடைத்திருக்காது. சிறைச்சாலைகளில் கூடப் பூப்பந்து விளையாடவும் பொழுது போக்கு நூலகம் வைக்கவும் பிரிட்டிஷ் வசதிகள் செய்து கொடுத்த கோமான் நேரு. ரயில் நிலையத்தில் தேனீர் விற்றும் எமர்ஜென்ஸியில் ஒளிந்து போராடியும் வாழ்ந்த களப் போராளி வாழ்க்கை மோடியுடையது. ஆனால் நிச்சயமாக நேருவைக் காட்டிலும் இந்தியாவை அறிவியல் தொழில்நுட்ப பாதையில் மோடி முன்னோக்கியே அழைத்துச் செல்கிறார் என்பது உறுதி.

இதைத் தாண்டி பசுமைத் தொழில்நுட்பத்தில் சர்வதேச தலைமை இடத்துக்கு இந்தியாவை மோடி கொண்டு சென்று கொண்டிருக்கிறார். அமைதியாக ஆனால் திடமாக அந்தப் பயணம் நடந்து கொண்டிருக்கிறது.

பொதுவாக இந்துத்துவர்களை வலதுசாரி என வகைப்படுத்துவோர் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் இது.

சர்வதேச வலதுசாரிகள் பசுமைத் தொழில்நுட்பங்களை எதிர்ப்பவர்கள். உலக பருவநிலை மாற்றத்தை ஏதோ அவர்களுக்கு எதிரான சர்வதேச சதித்திட்டமாகப் பார்ப்பவர்கள். டொனால்ட் ட்ரம்ப் உலக பருவநிலை மாற்றத்தையே ஏதோ சீன சதியாக ட்வீட்டியிருக்கிறார். ட்ரம்ப் பதவியேற்ற பின் அவர் வெளிப்படையாகவே இந்தியாவை விமர்சித்தார். அமெரிக்கா சர்வதேச சூழலியல் அரசியலிலிருந்து விலகி நிற்க ஆரம்பித்தது. இயல்பாக அந்த இடத்தை மற்றொரு மேற்கத்திய நாடோ அல்லது சீனாவோ கைப்பற்ற இது இடம் வகுத்தது. ஆனால் மோடியின் தலைமையில் இந்தியா திட்டவட்டமாக அந்த இடத்துக்கு நகர்ந்தது. சூரிய ஒளி தொழில்நுட்பத்தை முன்னிறுத்தும் ஒரு சர்வதேச அணி ஒன்றை மோடி உருவாக்கினார். அறிவியல்-தொழில்நுட்பமும் சர்வதேச அரசியல் மதிநுட்பமும் இணைந்த ஒரு சாணக்கிய மூளையுடன் மோதி அரசு இவ்விஷயத்தில் செயல்பட்டது. இதன் விளைவாக இந்தியா சர்வதேச சூரிய தொழில்நுட்ப கூட்டணி ஒன்றின் தலைமையில் செயல்படுகிறது. இது ஒரு சாதாரண வெற்றியல்ல. மோடி ஆதரவு மோடி எதிர்ப்பு அரசியலைத் தாண்டி இந்தியாவுக்கு மோடி பெற்றுத்தந்திருக்கும் ஒரு வரலாற்று மைல்கல்லாகவே இது காணப்பட வேண்டும்.

ஒப்பீட்டளவில் நேரு உருவாக்கிய அணி சேரா நாடுகள் என்கிற கனவு அமைப்பைப் பார்ப்போம். இந்த அணி வெறும் சித்தாந்தக் கனவு மட்டும்தான். அதுவும் மிக விரைவில் சோவியத் துதி பாடிகள் க்ளப்பாக மட்டுமே மாறிய ஒரு விஷயம். வெறும் உணர்ச்சி ரீதியிலான வெற்றுரைகளை மக்கள் வரிப் பணத்தில் கொண்டாடித் தீர்க்கும் சோவியத் துதிபாடி அமைப்பு கேஜிபி போன்ற உளவு நிறுவனங்களுக்கு உதவிய அளவுக்கு இந்தியாவுக்கு எவ்விதத்திலும் உதவவில்லை. சோவியத் யூனியன் தகர்ந்த பிறகு நேருவின் இந்தக் கனவு அமைப்பு ஒட்டுமொத்த செல்லாக் காசாக மாறியது. ஒரு அகில உலக அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த கூட்டணி அமைப்பு ஒன்றை நேரு உருவாக்கவில்லை என்பதையும் வெற்று கோஷங்களாலான ஒரு பகட்டு மேடை ஒன்றையே அவர் உருவாக்கி அதன் மூலம் தேசிய வளத்தையும் நேரத்தையும் விரயம் செய்தார் என்பதையுமே இங்குக் காண வேண்டும்.

மாறாக மோடி நாடு நாடாக அலைந்து இந்தியாவை முன்னிறுத்தும் ஒரு அறிவியல் தொழில்நுட்பக் கூட்டணியை உருவாக்கி அதன் மூலம் வளரும் நாடுகளுக்கு ஒரு பாதுகாப்பாகவும் முன்னுதாரணமாகவும் இந்திய அறிவியல் தொழில்நுட்ப மூலதனத்தை மாற்றுகிறார். வாய்ப்பேச்சு, செயலின்மை, முன்னோக்குப் பார்வையின்மை ஆகியவற்றைக் கொண்ட நேரு அறிவியல் மனப்பாங்கு கொண்டவராகவும்; உண்மையிலேயே அறிவியல் பார்வையுடன் சர்வதேச நிலவரங்களை அணுகி அதனை இந்தியாவுக்கும் வளரும் நாடுகளுக்கும் உதவும் விதத்தில் மாற்றும் மோடி பிற்போக்கானவராகவும் காட்டப்படும் முரண்நகை நேருவின் இருட்கொடையான போலி மதச்சார்பின்மையின் பரிசு என்றால், எதையும் இந்தியாவுக்கும் வளரும் நாடுகளுக்குமான வளர்ச்சி பாதையில் அறிவியல் பூர்வமாக அணுகுவது இந்துத்துவ அறிவியலின் அடிப்படை.

எனவேதான் இந்துத்துவம் அதிகாரத்தில் இருக்கும்போது மேற்கத்திய வலதுசாரிகளைப் போலச் சுவர்களை எழுப்புவதில்லை. மாறாக மக்களை இணைக்கும் அறிவியல் தொழில்நுட்பப் பாலங்களை உருவாக்குகிறது. அதைக் குறித்து அடுத்த இதழில் பார்க்கலாம்.

(தொடரும்)

Leave a Reply