Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 9 | சுப்பு

தமிழக முதல்வர் அண்ணாதுரை மறைவு

பெரியப்பா வீட்டில் சினிமாவுக்குப் போவது முடியாத காரியம். பள்ளியில் படித்தவரை நான் வருடத்துக்கு நான்கு சினிமா பார்த்தால் அதிகம். விடுமுறை நாட்களில் அத்தையைத் தயார் செய்தால் ஏதாவது புராணப் படம் பார்க்கும் வாய்ப்புண்டு. அதற்கும் ஏகப்பட்ட நிபந்தனைகள். தியேட்டரில் விற்கும் பொருள் எதையும் பார்த்து ஆசைப்படக்கூடாது. சினிமா போவதற்கு முன்பும், போய் வந்த பிறகும் சினிமாவைப் பற்றி எதுவும் பேசக்கூடாது. எந்த நடிகரையோ, நடிகையையோ தெரிந்ததாகக் காட்டிக் கொள்ளக்கூடாது. இந்த அத்தையின் சலுகையும், அண்ணன்மாரின் அவசரப் புத்தியால் பறிக்கப்பட்டது. ‘பாமா விஜயம்’ புராணப்படம் என்று சொல்லி அவரை ஏமாற்றிவிட்டார்கள். அதற்குப் பிறகு அவர் சினிமாவுக்குப் போவதை நிறுத்திவிட்டார். வருடாந்திர விடுமுறையில் கிராமத்துக்குப் போகும்போது ஏதாவது ஒன்றிரண்டு படம் பார்க்கலாம். நயினா சென்னைக்கு வந்த பிறகு அதுவும் கிடையாது.

கல்லூரி நாட்களுக்குப் பிறகு என்னைக் கண்காணிப்பதற்கு ஆளில்லாமல் போயிற்று. சினிமா பார்க்கும் பழக்கம் இந்தக் காலத்தில் என்னை ஒரு வியாதிபோல் வருத்தியது. திருவான்மியூர் டூரிங் தியேட்டரில் முப்பது பைசாவுக்கு மூன்று சினிமாக்கள். இரண்டு தமிழ். ஒரு இங்கிலீஷ். மணலைக் குவித்து வைத்துக்கொண்டு படுத்தவாறே சினிமா பார்க்கலாம்…

*

1967 தேர்தலின்போது காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக தமிழக மக்களின் மனநிலை திரண்டிருந்தது. அதற்கு இரண்டு காரணங்கள்: (1) மாணவர்கள் நடத்திய இந்தி எதிர்ப்பு போராட்டம் (2) சந்தையில் ஏற்பட்ட அரிசித் தட்டுப்பாடு.

தி.மு.க. தலைவராக இருந்த சி.என். அண்ணாதுரை அமைத்த தேர்தல் கூட்டணியும் ஒரு காரணம் என்று சொல்லலாம். ராஜாஜி போன்றோர் இந்த அணியில் இருந்தது அதற்கு கௌரவத்தை கொடுத்தது. பொதுவாக திராவிட இயக்கங்கள் பக்கம் எட்டிப் பார்க்காத பிராமணர்கள் இந்தத் தேர்தலில் தி.மு.க.வின் பக்கம் சாய்ந்தனர்.

ஆனால் பதவி ஏற்ற உடனேயே சி.என். அண்ணாதுரை செய்த காரியம் தெய்வ நம்பிக்கை உள்ளவர்களுக்குக் கசப்பான உணர்வைக் கொடுத்தது. தொடர்ந்து பல ஆண்டுகள் தன்னையும் தன் இயக்கத்தையும் நிஷ்டூரமாக விமர்சனம் செய்து வந்த ஈ.வெ.ரா.வைச் சந்தித்து அவரது ஆசியை வேண்டினார் அண்ணாதுரை.

இது மட்டுமல்ல, ‘அரசு அலுவலகங்களில் தெய்வங்களின் உருவப் படங்கள் இருக்க வேண்டாம்’ என்ற உத்தரவும் போடப்பட்டது. இந்த உத்தரவுக்கு வலுவான எதிர்ப்பு வந்தவுடன் அரசின் தலைமைச் செயலாளர் ராமகிருஷ்ணனின் சமாளிப்பு அறிக்கையும் வெளிவந்தது.

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தொழிலாளர்களின் குறைகள் தூர்ந்து போய்விடும் என்ற நம்பிக்கையும் பொய் ஆனது. சென்னை விம்கோ தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு தர்மராஜ் என்ற தொழிலாளி பலியானார். இந்தத் தொழிலாளர் சங்கம் தி.மு.க. சார்புடையது என்பதையும், அதன் தலைவர் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் இராம. அரங்கண்ணல் என்பதையும், தர்மராஜ் ஒரு உடன்பிறப்பு என்பதையும் குறித்துக் கொள்ள வேண்டும்.

தொழிலாளர் போராட்டம் பற்றி கழக அமைச்சர் மாதவன் ‘கழக ஆட்சிக்குக் களங்கம் ஏற்படுத்த கம்யூனிஸ்ட்டுகள் சதி செய்கிறார்கள்’ என்று சொன்னார்.

இப்படிப்பட்ட பல்வேறு காரணங்களால் தி.மு.க. ஆதரவு என்கிற நிலைப்பாட்டிலிருந்து நான் விடுபட்டேன். இது உடனடியாக ஸ்தாபன காங்கிரஸ் ஆதரவாக மாறியது.

இந்த நாட்களில் ராஜேந்திரன் தொடர்பு வலுப்பெற்றது. நொச்சிக்குப்பத்திற்கு தினமும் போக ஆரம்பித்தேன். ராஜேந்திரன் காங்கிரஸ் ஆதரவாளனாயிருந்தான். எனக்கும் தி.மு.க. மீது சலிப்பு ஏற்பட்டுவிட்டது. மாணவர்களுக்கும் பஸ் ஊழியர்களுக்கும் நடந்த மோதலை தி.மு.க. மாணவர்களை ஒடுக்கப் பயன்படுத்தியது. தி.மு.க. தலைமை படாடோபத்தின் இருப்பிடமாகிவிட்டது. மலர்க்கிரீடம், செங்கோல், மணிமேடை இவற்றை என்னால் சகிக்க முடியவில்லை. தமிழகத்தைப் பொருத்தவரை காங்கிரஸ் என்பது காமராஜரைத்தான் நம்பியிருந்தது. இந்தச் சூழலில் ராஜேந்திரனும் மற்ற குப்பத்து நண்பர்களும் சேர்ந்து சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம் ஒன்றை நடத்தி வந்தார்கள். நானும் அவர்களோடு சேர்ந்துகொண்டு ரசிகர் மன்றத்தின் செயலாளர் ஆனேன்.

நொச்சிக் குப்பத்தில் தி.மு.க.வுக்கத்தான் மெஜாரிடி. இருந்தாலும் ராஜேந்திரனைச் சுற்றிக் கட்டுப்பாடுடைய வாலிபர் கூட்டம் ஒன்று இயங்கியது. ரசிகர் மன்றம் தீவிர அரசியல் களமாகியது. புதுப்படம் ரிலீசாகும்போது முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் சௌகர்யமும் இருந்தது. ‘ராஜராஜசோழன்’ திரைப்படம் வெளிவந்தபோது மன்றத்தின் சார்பாக மலர் ஒன்று வெளியிட்டோம். அதில் நான் ஒரு கட்டுரை எழுதினேன்.

ஒருமுறை காங்கிரஸ் ஊர்வலம் திருவல்லிக்கேணித் தேரடியில் துவங்குவதாகவும் ஊர்வலத்தை சிவாஜி கணேசன் துவக்கி வைப்பதாகவும் ஏற்பாடாகி இருந்தது. மதியம் 3 மணிக்குத் துவங்க வேண்டிய ஊர்வலம் சிவாஜி கணேசன் வராததால் 4 மணிவரை துவங்கவில்லை. இதற்கிடையே வேடிக்கை பார்க்க வந்த ஜனங்கள் எங்களிடம் ‘சிவாஜி வந்தால் அவரை சரியாகப் பார்க்க முடியுமா அல்லது அவசரமாய் புறப்பட்டு விடுவாரா?’ என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். “நேரமானாலும் பரவாயில்லை. நீங்கள் அவரைப் பார்ப்பதற்கு வசதியான சந்நிதித் தெருவில் ஒருமுறை அவரை வரச்சொல்கிறோம்” என்று சொல்லி வைத்திருந்தோம். சிவாஜி கணேசன் வந்தவுடன் அவரை அணுகி மக்களுடைய விருப்பத்தைத் தெரிவித்தோம். அவருடன் வந்த நபரொருவர் பிடிவாதமாக மறுத்துவிட்டார். இதற்கிடையே எங்களோடு வந்த சிறுவனொருவன் சிவாஜி கணேசனைத் தொட வேண்டுமென்ற ஆசையில் வேன் மீது ஏறிக் கையை நீட்டினான். இதைக்கண்டு சிவாஜி கணேசன் முகம் சுளித்தார். இதனால் கோபமுற்ற நாங்கள் ஊர்வலத்தை விட்டு வெளியேறினோம். இரவோடிரவாக ரசிகர் மன்றத்தை மாற்றி ‘மகாத்மா காந்தி நற்பணி மன்றம்’ என்று பெயரிட்டோம்.

சிம்சன் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக ஸ்தாபன காங்கிரஸ் கட்சி நடத்திய ஊர்வலத்தில் நாங்கள் கலந்து கொண்டோம். ஊர்வலத்தைக் கலைக்க தி.மு.க.வினர் தாக்குதல் நடத்தினார்கள். கட்சிக்காரர்களும் கொடியை உருவி விட்டுக் கையிலிருந்த கம்பத்தால் தாக்கினார்கள். சைக்கிள் டயரைக் கொளுத்தி வீசினார்கள். கண்ணீர்ப்புகை வீசினால் காற்றுத் திசைக்கேற்றவாறு ஓட வேண்டும் என்று எனக்குச் சொல்லப்பட்டது.

காங்கிரஸார் நடத்திய ஒரு ஊர்வலத்தில் சென்னை அண்ணாசாலையிலுள்ள அண்ணாதுரை சிலை மீது செருப்பு வீசப்பட்டது என்று தி.மு.க.வினர் குற்றம் சாட்டினார்கள். இத்தகைய அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக காமராஜர் ஒரு முயற்சி செய்தார். காங்கிரஸ் நடத்திய மௌன ஊர்வலத்தின்போது அண்ணாதுரை சிலைக்கருகே காமராஜர் நின்றுகொண்டார்.

ஊர்வலத்தில் வந்த தெய்வசிகாமணி என்ற இளைஞர் காமராஜரைப் பார்த்தவுடன் உற்சாக பூபதியாகி ‘காமராஜர் வாழ்க’ என்று குரல் எழுப்பினார்.

அவருக்குக் கிடைத்தது ஒரு அறை காமராஜரிடமிருந்து. மௌன ஊர்வலத்தில் சத்தம் போடக்கூடாதென்று தெய்வசிகாமணிக்கு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் தெய்வசிகாமணி அசரவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு தவைர் தன்னை அடித்த பெருமையை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார்.

தமிழக முதல்வர் சி.என். அண்ணாதுரை அவர்களை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் (ஜனவரி 1969) சேர்த்திருந்தார்கள். அவர் வந்த உடனே கேன்சர் இன்ஸ்ட்டிடியூட்டை மக்கள் சூழ்ந்து கொண்டார்கள். போலீஸால் நிலைமையைச் சமாளிக்க முடியவில்லை. அங்கிருந்த எல்லோரும் அழுது கொண்டிருந்தார்கள். மந்திரிகளும் வரும்போதே அழுதுகொண்டே வந்தார்கள். நான் ஒரு லேம்ப் போஸ்டில் ஏறித் தொத்திக்கொண்டு இதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். என் பக்கத்திலிருந்த ஒருவர் அழுதுகொண்டே கைக்கடிகாரத்தைக் கழற்றித் தூக்கி எறிந்தார். பெண்கள் மார்பில் அடித்துக்கொண்டு அழுதார்கள். கேட்டைத் திறந்துவிடச் சொல்லி அவர்கள் தலையை கேட்டில் மோதிக் கொண்டார்கள். சிலர் நடுத்தெருவில் புரண்டு அழுதார்கள். என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. நானும் அழுதேன்.

பிறகு வேன் வேனாகப் போலீஸ் வந்தது. அண்ணா நலமாயிருக்கிறாரென்று மந்திரிகள் மைக்கில் பேசினார்கள். மக்கள் ஒருவாறு சமாதானமடைந்த பிறகு பந்தோபஸ்து ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பொது மக்கள் குறிப்பிட்ட தூரத்திற்கு அப்பால் நிறுத்தப்பட்டார்கள். பாதுகாப்பு எல்லைக்குள் முக்கியஸ்தர்களுக்கு மட்டும் அனுமதி. பெரியப்பா வீடு இந்த எல்லைக்குள்ளேயே இருந்தது. ஆகவே, எங்களுடைய நடமாட்டத்திற்குத் தடையில்லை.

அண்ணாதுரை இங்கே ஒரு மாதமிருந்தார். எந்த நேரமும் அவர் இறந்துவிடக்கூடும் என்ற நிலைமையிருந்ததால் பந்தோபஸ்து போலீஸாருக்குக் கெடுபிடி அதிகம். குளியல், சாப்பாடு எல்லாமே பிரச்சனையாகிவிட்டது. எங்களுக்கும் போலீஸாருக்கும் இந்தச் சமயத்தில் நல்ல பழக்கம் ஏற்பட்டது. ஷூவையும், காலுறையையும் கழட்டி விட்டு அவர்கள் கொஞ்ச நேரம் வீட்டுக்குள் வந்து ஓய்வெடுத்துக் கொள்வார்கள். மேலதிகாரிகளுக்குத் தெரியாமல் கிணற்றில் குளிப்பார்கள். அரசாங்கம் கொடுக்கும் பொட்டலச் சோற்றைச் சாப்பிட முடியாமல் அவர்கள் சிரமப்படும்போது அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து குழம்பு, ஊறுகாய், மோர் வாங்கிக் கொடுப்போம். லத்தி சார்ஜ் எப்படிச் செய்வது, போராட்டங்களை ஒடுக்க எப்படி சைக்கிள்களைப் போட்டு உடைப்பது என்பதையெல்லாம் அவர்கள் உற்சாகமாக விவரிப்பார்கள். ஒருநாள் காலையில் கண் விழித்தால் வாசலில் போலீஸ் இல்லை. இரவு அண்ணா காலமாகிவிட்டிருந்தார். இரவோடிரவாக எல்லாப் போலீஸாரும் ராஜாஜி மண்டபத்திற்குப் போய்விட்டார்கள்…

(தொடரும்)

Leave a Reply