Posted on Leave a comment

பாரதி யார்? – முதல் மேடை அனுபவம் | பி.ஆர்.ஹரன்


எட்டு மாதங்களுக்கு முன்னால், இசைக்கவி ரமணன், “ஹரன்! பாரதி பற்றிய ஒரு நாடகத்தின் திரைக்கதை விவாதம் (Script Reading) இருக்கு. வந்து உனது கருத்துக்களைச் சொல்” என்றார். Script reading இரண்டு முறை நடந்தது. ரமணன் அண்ணாவும் திருமதி தர்மாராமனும் (இயக்குநர் SBS ராமன் அவர்களின் மனைவி) படித்தார்கள். அருமையான வசனங்கள். இசைக்கவி பாரதிக்கடலில் மூழ்கி வசன முத்துக்களை வெளிக்கொணர்ந்திருந்தார். அவர்கள் இருவரும் பாவத்துடன் படிக்கும்போதே சில காட்சிகளில் கண்கள் பனித்தன. காட்சி அமைப்புகள் பற்றியும் கூடவே கருத்துப் பரிமாற்றம் நடந்தது.

பாரதியாக ரமணன் அண்ணாவும் செல்லம்மாவாக தர்மாஜியும் நடிக்கப்போகிறார்கள் என்பது தெரிந்த விஷயம். இருவரும் திறம்படச் செய்வார்கள் என்பதும் தெரியும். குவளைக் கிருஷ்ணன் பாத்திரத்திற்குப் பிரபல கர்நாடக இசைக் கலைஞர் விஜய் சிவா என்று ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்தனர். அவர் நடிக்கக் கூடியவர் என்கிற விஷயம் எனக்குத் தெரியாது. ஆயினும் ரமணனும் இயக்குநர் ராமனும் தேர்ந்தெடுத்ததாலும், கருத்துப் பரிமாற்றக் கலந்துரையாடல்களில் அவருடைய பங்காற்றலைப் பார்த்ததாலும், அவர் மீது முழு நம்பிக்கை பிறந்தது.

அதன் பிறகு அண்ணாவுக்கு என் வாழ்த்துக்களைத் தெரிவித்துவிட்டு, மற்ற பாத்திரங்களுக்கும் நல்ல திறமையானவர்கள் அமையவேண்டும் என்று பராசக்தியிடம் என் பிரார்த்தனையைச் சமர்ப்பித்துவிட்டு எப்பொழுதும்போல் என் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினேன்.

ஒரு வாரம் கழித்து அண்ணாவிடமிருந்து தொலைபேசி அழைப்பு. “ஹரன்! ‘பாரதி யார்?’ நாடகத்தில் ஒரு பாத்திரம் ஏற்கச் சம்மதமா?” என்று கேட்டார். “அண்ணா! எனக்கு மறதிப் பிரச்சினை உண்டு. அதனால்தான் தொலைக்காட்சி விவாதங்களில் கூடக் கலந்துகொள்வதில்லை. மேடையில் பேசும்போது குறிப்புகளை வைத்துக்கொண்டு பேசிவிடலாம். ஆனால் மேடை நாடகத்தில் முடியுமா என்று தெரியவில்லை. வசனத்தை மறந்துவிட்டால் நன்றாக இருக்காது. என்னால் மற்றவர்களுக்கும் கஷ்டம். வேண்டாம்” என்றேன்.

“இல்லை ஹரன். சிறிய கதாபாத்திரம்தான். மண்டையம் ஸ்ரீனிவாசாச்சார் பாத்திரம். இரண்டே இரண்டு காட்சிகள்தான். வசனமும் கொஞ்சம்தான். உன்னால் நிச்சயம் முடியும். எனக்குத் தெரியும்” என்று ஊக்கமளித்தார். நானும் ஒப்புக்கொண்டேன்.

சேலம் சுப்பிரமணிய நகர் சாரதா தொடக்கப் பள்ளியில் நான் ஐந்தாம் வகுப்புப் படிக்கும்போது, ராமாயணம் நாடகம் போட்டார்கள். அப்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர்களால் ராமாயணக் கதாநாயகன் “ஸ்ரீ ராமன்” வேடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் ஈடுபாடு காட்டாமலும் வசனங்களை மனப்பாடம் செய்யாமலும் இருந்ததால், ஒற்றை வரி (இரண்டே வார்த்தைகள்) வசனம் மட்டுமே கொண்ட மந்திரி வேடத்திற்குத் தள்ளப்பட்டதுதான் என்னுடைய முந்தைய நாடக அனுபவம்..

‘பாரதி யார்?’ நாடகத்தின் வசன ஒத்திகை ஆரம்பித்தது. அவரவர்களின் வசனங்களை அனைவருக்கும் மின் அஞ்சலில் அனுப்பி வைத்தார் இயக்குநர் ராமன். ஏற்ற இறக்கங்களுடன் காட்சிகளுக்கு ஏற்றவாறு உணர்ச்சிகளைக் காண்பித்து வசனங்கள் பேசிப் பயிற்சி செய்தோம். இந்த வசன ஒத்திகை சுமார் மூன்று வாரங்களுக்குச் சென்றது. பார்த்துப் படிப்பது முடிந்து ஒவ்வொருவராக மனப்பாடம் செய்து பேச ஆரம்பித்தோம்.

அத்தனை வசனங்களை பாரதியும், செல்லம்மாவும் பேசுவதைப் பார்த்து எனக்கும் நம்பிக்கை வந்தது. மனப்பாடம் செய்து பேச ஆரம்பித்துவிட்டேன். இதனிடையே ஆரம்பத்தில் சில நாட்கள் செல்லம்மாவின் அண்ணன் அப்பாதுரையாகவும், சுப்பிரமணிய சிவாவாகவும் நடிக்க வேண்டியவர்கள் ஒத்திகைக்கு வர இயலாத சூழலில் அவர்களின் வசனங்களையும் பேசவேண்டி வந்தது.

என்னையும் அறியாமல் நாடகத்தில் முழுவதுமாக ஒன்றிப்போனேன். “நீங்கள் அப்பாதுரை, சிவம் வசனங்களையும் மனப்பாடம் செய்து கொள்ளுங்கள். அவற்றை ஏற்று நடிக்க வேண்டி வரலாம்” என்று ராமன், ரமணன் இருவரும் சொன்னார்கள். சரி என்று அதற்கும் என்னைத் தயார் செய்துகொள்ள ஆரம்பித்தேன். நல்ல வேளையாக கிரி டிரேடர்ஸ் ரங்கநாதன் அப்பாதுரையாக வந்து சேர்ந்தார். திறமையான செய்தி வாசிப்பாளராகவும், பாடகராகவும் அறியப்பட்டிருந்த ரங்கநாதன் அருமையாக வசனம் பேசுவதைப் பார்த்தவுடன் நல்ல பொருத்தமான ஒருவர் குழுவில் சேர்ந்துள்ளார் என்கிற மகிழ்ச்சி ஏற்பட்டது.

பின்னர் சுப்பிரமணிய சிவம் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டவர் தவிர்க்க முடியாத காரணங்களால் வர இயலாமல் போகவே, அந்த வேடத்தை நான் ஏற்றுக்கொள்ள நேர்ந்தது.

மற்றொரு முக்கியமான கதாபாத்திரமான யதுகிரி (மண்டையம் ஸ்ரீனிவாசாச்சார் மகள்) பாத்திரத்திற்குப் பிரபல பரதநாட்டியக் கலைஞர் ராதிகா சுரஜித் அவர்களின் மகள் கிருத்திகா சுரஜித் பொறுப்பேற்றுக்கொண்டார்.

எட்டையபுரம் மஹாராஜாவாக டாக்டர் ஆர்.எல்.ராஜா அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார். ராஜா என்னுடைய நெடுநாள் நண்பர். நான் பத்திரிகை உலகிற்கு வருவதற்கு முன்னால் விற்பனைப் பிரிவில் வேலையில் இருந்தபோது, அவருடன் பல வருடங்கள் பணியாற்றியிருக்கிறேன். அப்போது நாங்கள் விற்பனை தொடர்பான கருத்தரங்கங்களில் Topic Presentations செய்யும்போது அவற்றைக் கிட்டத்தட்ட ஒரு நாடகம் போலவே செய்வோம். அதைப்பற்றியெல்லாம் எனக்கு நினைவுபடுத்தி, உன்னால் இங்கும் நன்றாகச் செய்ய முடியும் என்று அவரும் என்னை ஊக்கப்படுத்தினார்.

குழுவில் கடைக்குட்டியாக வளரும் கவிஞன், பாரதியைப் பெரிதும் நேசிக்கும் இளைஞன், தம்பி விவேக் பாரதி, பாரதி தாசனாகவும், கனகலிங்கமாகவும், பம்பாட்டியாகவும் பொறுப்பேற்றுக்கொண்டான்.

ஏற்கெனவே அறிமுகமான நண்பர் விட்டல் நராயணன் வ.உ.சிதம்பரமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் வானவில் பண்பாட்டு மையத்திலும், பாரதி விழாக் குழுவிலும் பொறுப்பில் இருந்தமையால் அவற்றையும் கவனித்துக்கொண்டு, ஒத்திகைகளிலும் கலந்துகொண்டு ஓயாமல் உழைத்தார்.

அரசவைப் புலவராகவும், சிஐடியாகவும் பொறுப்பேற்றுக்கொண்ட ஸ்ரீகணேஷ் சின்னத்திரையில் பிரபலம். நாயனக்காரர், ரௌடி தம்பலா, வண்டிக்காரர் என்ற பாத்திரங்களை ஏற்றுக்கொண்ட பரமேஸ்வரன் ஹரிஹரன் எஸ்.பி கிரியேஷன்ஸின் ‘அந்த நாள்’ நாடகத்திலும் நடிப்பவர். அரசவைப் புலவரின் மனைவி கோமுவாகவும், நெல்குத்தும் பெண்ணாகவும் பொறுப்பேற்றுக்கொண்ட சரண்யா, சகோதரி நிவேதிதையாக பொறுப்பேற்றுக்கொண்ட தீபா, எட்டையபுரம் மகாராணி பாத்திரத்தை ஏற்றுக்கொண்ட டாக்டர் புவனா, வக்கீலாகவும் பாகவதராகவும் பொறுப்பேற்றுக்கொண்ட தர்மராஜன் மற்றும் ஸ்ரீவத்ஸன், கலா, ஆறுமுகம், யுவராஜ் என்று நடிகர்கள் அனைவரும் மற்றும் பின்னணியில் திறமையாகப் பணிபுரிந்தவர்களும் புதிய நண்பர்களாகக் கிடைத்தது மற்றொரு சந்தோஷம்.

பிறகு ஒத்திகைகள் வேகம் பிடித்தன. வசன ஒத்திகை முடிந்து தள ஒத்திகைக்குள் நுழைந்தோம். ஒத்திகைகள் பெரும்பாலும் கலாட்டாக்கள்தான். ராமன் அவர்கள் வீட்டிலேயே கூடத்தில் ஒத்திகை நடத்தினோம். விரைவிலேயே ‘பாரதி யார்?’ குழு ஒரு குடும்பமாக மாற்றம் கண்டது. ஒவ்வொரு நாள் ஒத்திகையின் போதும் அவரவர்கள் இனிப்புகளும் தின்பண்டங்களும் கொண்டுவருவதும், ராமன், தர்மா ராமன் தம்பதியர் அவர்களின் விருந்தோம்பலும், ஒத்திகைக்கு முன்பும் பின்பும் களைகட்டின. மாலை தேநீர் முதல் இரவு உணவு வரை அனைத்தும் தயார் செய்யப்பட்டு ரகளையாகத்தான் ஒத்திகைகள் நடக்கும்.

காட்சிகளுக்குத் தேவையான பொருட்கள் ஏற்பாடு செய்யப்பட்டதும், அவற்றைக் காட்சிக்குக் காட்சி மாற்றியமைப்பதிலும் ஒத்திகை தேவை என்பதால், வீட்டுக் கூடத்திலிருந்து மொட்டை மாடிக்கு ஒத்திகைத்தளம் மாற்றப்பட்டது. மழை நாட்களில் மீண்டும் வீட்டுக் கூடத்திலேயே ஒத்திகை நடந்தது.

இதனிடையே பாடல்களும் இசையும் பதிவு செய்யப்பட்டன. ராமன் – தர்மா ராமன் தம்பதியரின் மகன் வீணைக்கலைஞர் பரத்வாஜ் ராமன் அருமையாக இசை அமைத்திருந்தார். விஜய் சிவா, இசைக்கவி ரமணன், சைந்தவி பிரகாஷ், அனந்து, டாக்டர் காயத்ரி கண்ணன், வைஜயந்தி, ‘கிரி’ ரங்கநாதன் ஆகியோர் அருமையாகப் பாடியிருந்தனர்.

ஷோபனா ரமேஷ், லலிதா கணபதி ஆகியோர் தங்கள் நடனக் குழுவினருடன் ஒத்திகையில் சேர்ந்துகொண்டனர். ஆகவே, இசை, நடனம் ஆகியவற்றுடன் ஒத்திகைப் பார்த்தது மிகவும் உற்சாகத்தைக் கொடுத்தது.

அந்தப்பக்கம் ஒத்திகை நடக்கும்போது, இந்தப்பக்கம் நண்பர்கள் பேசிக்கொண்டிருப்போம். சிலர் கைப்பேசியும் கையுமாக இருப்பார்கள். யாராவது பேசிக்கொண்டிருந்தாலோ, கைப்பேசியும் வாட்ஸப்புமாக இருந்தாலோ இயக்குநர் ராமனுக்குக் கோபம் வந்துவிடும். காட்சியில் இல்லாதவர்களும் ஒத்திகை செய்யப்படும் காட்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்பதில் குறியாக இருப்பார். அவர் அந்தப்பக்கம் காட்சியில் கவனம் செலுத்தும்போது, மீண்டும் இந்தப்பக்கம் குசுகுசுவென்று பேசுவதும் கைப்பேசியில் தட்டுவதும் தடவுவதும் தொடரும். மீண்டும் வேகமாக வந்து எல்லோரையும் கடிந்துகொண்டு, தன்னைச் சாந்தப்படுத்திக்கொள்ள ஒரு லட்டையோ அல்லது சமோசாவையோ வாயில் போட்டுக்கொண்டு போவார்.

எங்களுடன் இந்தப்பக்கம் பேசிக்கொண்டும், அந்தப்பக்கம் டைரக்டரிடம் தான் மிகவும் ஈடுபாட்டுடன் இருப்பது போலக் காட்டிக்கொண்டும் தர்மாராமன் அசத்துவார். அதிலிருந்துதான் அவரின் நடிப்புத்திறமையைப் புரிந்துகொண்டேன். அரசவைப் புலவராக நடிக்கும் ஸ்ரீகணேஷ் தன்னுடைய சின்னத்திரை அனுபவங்களையெல்லாம் பகிர்ந்துகொள்வார். நடனமாடும் குழந்தைகளுடன் விடுகதைகளும் puzzles, Riddles போன்றவையும் கேட்டுக்கொண்டு விளையாடிக்கொண்டு இருப்போம்.

இவை எல்லாவற்றிலும் கலந்துகொண்டும், அதே சமயத்தில் இனிப்புகளையும் காரங்களையும் காலி செய்துகொண்டும் இருப்பான் தம்பி விவேக் பாரதி. பாரதி ரமணன்தான் பாவம். முதல் மற்றும் கடைசிக் காட்சிகள் தவிர மற்ற அனைத்துக் காட்சிகளிலும் இருப்பதால் அவரால் இந்தக் கலாட்டாக்கள் எதிலும் கலந்துகொள்ள முடியாது. கலாட்டாக்கள், ரகளைகள், தமாஷ்கள் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்தோம் என்பது சத்தியம். பாரதமாதாவுக்கும், பாரதிக்கும் செய்யும் சேவையாக அர்ப்பணிப்புடன் ஒத்திகை பார்த்தோம். அதன் முழுப்பயனையும் அரங்கேற்றத்தின் நிறைவில் பெற்றோம். 

டிசம்பர் 9ம் தேதி (2017) வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி விழா துவக்கம். துவக்க விழாவின் முதல் நிகழ்ச்சியாக தி.நகர் பாரத் கலாச்சார் அரங்கில் நாடகத்தை அரங்கேற்றம் செய்வதென முடிவு செய்யப்பட்டது.

எனவே, நிறைவாக 6, 7 தேதிகளில் பாரத் கலாச்சார் அரங்கிலேயே முழு ஒப்பனைகளுடன் ஒத்திகை பார்த்தோம். 8ம் தேதி அனைவருக்கும், ஒரு நாள் ஓய்வு தேவை என்பதால் ஒத்திகையை ரத்து செய்தோம்.

முன்னோட்டங்களுக்கு வந்த வரவேற்புகளையும் கருத்துகளையும் பார்க்கும்போதே, அரங்கம் நிறைந்துவிடும், இருக்கைகள் இல்லாமல் பார்வையாளர்கள் நின்றுகொண்டும் பார்க்க நேரிடும் என்று எதிர்பார்த்தோம். நாடக அரங்கேற்றமான 9ம் தேதி சனிக்கிழமை அன்று அதே போலவே ஆயிற்று. ஒரு சில முக்கிய மனிதர்களுக்கே (VIPs) கூட இருக்கைகள் இல்லாமல் போய், அவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யும்வரை அவர்கள் நின்று கொண்டு பார்க்க வேண்டியதாகிவிட்டது.

அரங்கேற்ற நாள் காலையிலிருந்தே வயிற்றில் பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்திருந்தன. தொடர் ஒத்திகைகள் ஓரளவுக்கு நம்பிக்கை அளித்திருந்தாலும், அரங்கேற்றத்திற்குச் சற்று முன்னால் மேடையின் பக்கவாட்டிலிருந்து வந்திருக்கும் பார்வையாளர்கள் கூட்டத்தைப் பார்த்தவுடன் வயிற்றில் பறக்கும் பட்டாம்பூச்சிகளின் இறக்கைகள் படபடப்பது காதிலும் கேட்க ஆரம்பித்தது.

மூடியிருந்த திரைக்குப் பின்பக்கம் குழுவினர் அனைவரும் வட்டமாக நின்று கைகோர்த்து எங்கள் பிரார்த்தனையை கணபதிப் பெருமானுக்குச் செலுத்தியவுடன் படபடப்பு மறைந்து தைரியம் எழுந்தது. வசனங்களை மனதில் சொல்லிப்பார்க்கும்போது, தங்குதடையின்றி வந்தன. நாம் நன்றாகச் செய்து விடுவோம் என்கிற நம்பிக்கை பிறந்தது. அந்த நம்பிக்கையுடன் சுற்றிலும் பார்த்தபோது, ஒவ்வோர் மூலையிலும் ஒவ்வொருவர் தங்கள் வசனங்களைச் சொல்லி நடித்துப் பார்த்துக்கொண்டிருந்ததைக் கண்டேன். அனைவரும் ஒருமனதாக நாடகம் வெற்றி பெறவேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் இயங்கிக்கொண்டிருந்தோம்.

கவிமாமணி ரவி அவர்களின் சுருக்கமான அருமையான அறிமுகமும் ராஜ்குமார் பாரதியின் பிரார்த்தனைப் பாடலும் சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்தன.

தொடக்கக்காட்சியில் முதல் வசனம் நான்தான் பேசவேண்டும். ஒழுங்காகத் தொடங்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு நல்லபடியாகப் பேசிமுடித்தேன். அதன் பிறகு நாடகம் முடியும் வரை ஒவ்வொரு காட்சியிலும் பார்வையாளர்களின் கைத்தட்டல்கள் பெரும் உற்சாகத்தைக் கொடுத்தன. பங்கேற்ற அனைவரும் மிகச் சிறப்பாகச் செய்தனர். நான் பங்கு பெறாத காட்சிகளை மேடையின் பக்கவாட்டில் மறைந்திருந்து பார்த்தபோதும், அவைகளுக்குப் பார்வையாளர்கள் அளித்த வரவேற்பைக் கண்டபோதும் பெருமிதமாக இருந்தது. நடித்தவர்கள் யாருமே தொழில்முறை நடிகர்கள் கிடையாது என்பதுதான் சிறப்பான விஷயம். பலருக்கும் என்னைப்போலவே இதுதான் முதல் மேடை அனுபவம்.

பின்னணியில் எல்.இ.டி. திரையில் காட்சிகள் அரங்கேறும் பின்னணி நேரலையாகக் காட்டப்படுவது மேலும் மெருகூட்டியது. அது நாடகத்திற்குக் கூடுதல் மதிப்பைக் கொடுத்தது. Thandora Event கதிர் தன் குழுவினருடன் அருமையாகச் செய்திருந்தார். அதே போல பேபி சார்லஸின் ஒளி அமைப்பு அட்டகாசமாக இருந்தது. எல்லாமாகச் சேர்ந்து நாடகத்தை ஒரு முழுமையான விருந்தாகப் பார்வையாளர்களுக்கு வழங்கின.

நாடகத்தைக் கண்டு களித்தோர் அனைவரும் இசைக்கவி ரமணனிடம் பாரதியின் அவதாரத்தை தரிசித்தனர்; தர்மா ராமனிடம் வித்தியாசமான, இதுவரை கண்டிராத செல்லம்மாவின் மறுபக்கத்தைக் கண்டனர்; விஜய சிவாவிடம் குவளைக் கண்ணனின் நவரசங்களையும் கண்டு களித்தனர்; கிருத்திகாவிடம் பாஞ்சாலி முதல் யதுகிரி வரையிலான புதுமைப்பெண்களைக் கண்டனர். இவ்வாறு ஒவ்வோர் பாத்திரப் படைப்பிலும் உண்மைத் தன்மையையும் யதார்த்தத்தையும் கண்டனர்.

காட்சிகள் அமைப்பிலும், பின்னணியில் இயங்கிய ஒலி/ஒளி காட்சிகளிலும் இயக்குநர் ராமனின் திறமையைக் கண்கூடாகப் பார்த்தனர். இசையிலும் பாடல்களிலும் பரத்வாஜ் ராமனின் திறனை வெகுவாக ரசித்தனர். சிறுமிகள் உட்பட நடன மங்கையரின் நடனங்கள் காண்பவர் மனதைக் கொள்ளைகொண்டன. 

நாங்கள் எதிர்பார்த்ததைவிட மாபெரும் வெற்றியாக நிறைவடைந்தது நாடகம்.

நாடகம் நிறைவடைந்ததும் மேடையில் நாடகக் கலைஞர் ஒய்.ஜி.மகேந்திரா அவர்களும், மாநிலங்கள் அவை உறுப்பினர் இல.கணேசன் அவர்களும், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் முரளி அவர்களும் மனமாரப் பாராட்டியது மனதுக்கு நிறைவைத் தந்தது. தெரிந்தவர், தெரியாதவர் என்று அனைத்துப் பார்வையாளர்களும் மேடைக்கு வந்து கைகுலுக்கிப் பாராட்டியது உற்சாகத்தையும், பெருமிதத்தையும் ஒருங்கே தந்தது.

நாடகம் முடிந்தவுடன் நேரில் கிடைக்கப்பெற்ற பாராட்டுகளும், நல்ல விமரிசனங்களும், இன்றுவரை தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

பிரபல நாடகக் கலைஞர் கிரேசி மோகன் குழுவில் பல வருடங்கள் பணியாற்றி அனுபவம் பெற்றுள்ள அருமை நண்பர் எஸ்.வி.பத்ரி தற்போது மும்பையில் இருக்கிறார். அவரிடம் தொலைபேசியில் தெரிவித்தபோது, “நாங்கள் நடித்து ரிடையர் ஆகிவிட்டோம். நீங்கள் ரிடையர் ஆனபிறகு நடிக்க வருகிறீர்களா?” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டு, வாழ்த்துத் தெரிவித்தார்.

நாடகம் முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் நண்பர் ‘திராவிட மாயை’ சுப்பு அவர்கள் போனில் கூப்பிட்டு, “ஹரன்! நீ நேர்மையானவன் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் சரியான நடிப்புப் பேர்வழியாக இருக்கிறாயே!” என்று தனக்கே உரிய பாணியில் பாராட்டினார்.

அதற்குப் பிறகு சென்னையில் 6 இடங்களிலும், கோவை மற்றும் மதுரையில் இரண்டு முறையுமாக மொத்தம் ஒன்பது முறை அரங்கேற்றம் ஆகிவிட்டது. சில பாத்திரங்களில் சிலர் நடிக்க வர முடியாத சூழ்நிலைகளில் அவ்வப்போது புதிய நண்பர்கள் வந்து நடிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு V.V.பாலசுப்பிரமணியன், கணபதி, ப்ரியங்கா ரகுராமன், உமா ராமசாமி, வித்யா நாயர், ஸ்ருதி, ராதாகிருஷ்ணன், ஆர்த்தி விட்டல் போன்றவர்களும் குழுவில் இணைந்துள்ளார்கள். நடனக் குழுக்களும் மாறியுள்ளன. தொடர்ந்து பல ஊர்களிலிருந்து அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளன.

பராசக்தியின் அருளிலும், பராசக்தி மைந்தனின் ஆசியிலும் “பாரதி யார்?” மேலும் பல ஊர்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சென்று அரங்கேறும்; பாரதியின் புகழ் உலகமெங்கும் மேலும் பரவும் என எதிர்பார்க்கலாம்.

பராசக்தி மைந்தனுக்கும் பாரத மாதாவுக்கும் வணக்கம். வந்தேமாதரம். 

Leave a Reply