Posted on Leave a comment

வால்மார்ட் – ஃப்ளிப்கார்ட் என்னும் ரோலர் கோஸ்டர் | ஜெயராமன் ரகுநாதன்

இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகம் (e Commerce) கடந்த ஓரிரு வருடங்களாக வெறிபிடித்தோடும் ரேஸ் குதிரையாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்பம் தறிகெட்டுப்பரவ, மொபைல் ஃபோன்களின் பயன்பாடு எகிற, வீட்டில் இருந்தபடியே வாங்குவதும் விற்பதும் நாளுக்கு நாள் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. கையில் பணம் புழங்கும் இருபது முப்பது வயது ஜனம் மந்திரிக்கப்பட்டது போல ஆன்லைனில் ஈடுபட்டிருக்கின்றது.

இந்தியாவின் ஆன் லைன் வர்த்தக ஓட்டத்தில் முன்னணியில் இருந்து வருவது ஃப்ளிப்கார்ட் (Flipkart) நிறுவனம். கடந்த சில வருடங்களில் இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலருக்கு (ரூ 65,000 கோடி) மேல் போய்விட்டது. இதற்குப் போட்டியாக அமேசான் நிறுவனம் வந்து சேர்ந்து மார்க்கெட்டில் ரகளை செய்ய, ஃப்ளிப்கார்ட் கொஞ்சம் தடுமாறி அமேசானின் சந்தைச்சண்டையில் சோர்வடையத் தொடங்கியது.

இந்தியாவின் வளரும் பொருளாதாரத்தின் மீது கண் கொண்ட அமெரிக்காவின் நிறுவனங்கள் எப்படியாவது இந்த 130 கோடி மக்களின் சந்தையைப் பிடிக்க முயன்று வருகின்றன. அந்தப் படையெடுப்பில் அமேசான் சில வருடங்களுக்கு முன் இங்கே வந்து ஆன்லைன் வர்த்தகத்தில் புகுந்து புறப்பட்டு இந்திய கம்பெனியாகிய ஃப்ளிப்கார்ட்டுக்குத் தூக்கமின்மையைக் கொடுத்துக்கொண்டிருந்தது. கடுமையான முயற்சிகளுக்குப்பின் ஃப்ளிப்கார்ட் இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகத்தில் 40% மர்க்கெட்டைப் பிடித்து வைத்திருக்க, அமெரிக்காவிலிருந்து வந்து அமேசான் தனது தொழில்நுட்பம், அளவில்லா விளம்பரச் செலவு மற்றும் தேர்ந்த அமெரிக்க அனுபவத்தினால் மடமடவென 31% இந்தியாவின் ஆன்லைன் மார்க்கெட்டைப் பிடித்து விட்டது.

அமெரிக்காவில் இன்றும் மாபெரும் சூப்பர்மார்க்கெட் நிறுவனமான வால்மார்ட்தான் சில்லறை வர்த்தகம் என்னும் ரீடெயில் வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கிறது. அங்கே அமேசானின் மொத்த விற்பனை 178 பில்லியன் டாலர்தான். ஆனால் வால்மார்ட்டின் விற்பனை 500 பில்லியன் டாலராக இருந்தாலும் ஆன்லைன் வர்த்தகத்தில் வால்மார்ட் அமேசானைவிட மிகக்குறைவே. சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக்காத்துக் கொண்டிருந்த வால்மார்ட் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிட்டது.

இந்தியாவில் நுழையவும் அதே சமயம் ஆன்லைன் வர்த்தகத்தில் ஒரு பெரிய முயற்சியை எடுக்கவும் துணிந்து வால்மார்ட் வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருந்த ஃப்ளிப்கார்ட்டை விலைக்கு வாங்கி விட்டது. அமேசானின் தாக்குதலைச் சமாளித்துவந்த ஃப்ளிப்கார்ட்டுக்கும் இந்த வால்மார்ட்டின் வருகை ஒரு பெரிய வரமாகிவிட்டது. ஃப்ளிப்கார்ட்டின் 77% பங்குகள் இப்போது வால்மார்ட்டின் கைகளில்! இன்னும் 5% சதவீதம் பங்குகளைக்கூட வாங்கிவிடப்போவதாகப் பட்சிகள் சொல்கின்றன.

என்ன விலை கொடுத்திருக்கிறார்கள் தெரியுமா? அதிகமில்லை, பதினாறு பில்லியன் டாலர்தான். (ஒரு லட்சத்தி நாலாயிரம் கோடி ரூபாய்.)

இதன் அர்த்தம் என்னவென்றால் ஃப்ளிப்கார்ட்டின் மொத்த சந்தை மதிப்பு 21 பில்லியன் டாலர்கள். (ஒரு லட்சத்தி முப்பதாறாயிரத்தி ஐநூறு கோடி ரூபாய்.)

இன்னொரு விஷயம் என்னவென்றால் ஃப்ளிப்கார்ட்டே இது வரை பெரும் நஷ்டத்தில்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. அது மட்டுமில்லை, இன்றைய கணக்குப்படி இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு ஃப்ளிப்கார்ட்டால் லாபம் ஈட்ட முடியாதாம்.

மேலும் இந்த வியாபாரத்தை வால்மார்ட்டின் தலைவர் டக்ளஸ் மாக்மில்லன் (Douglas McMillon) வெளியிட்ட சுருக்கில் அமெரிக்க ஸ்டாக் மார்க்கெட்டில் வால்மார்ட்டின் பங்கு விலை சரிந்து கிட்டத்தட்ட 10 பில்லியன் டாலர்கள் வரை வால்மார்ட்டின் சந்தை மூலதனம் (Market Capitalisation) அடி வாங்கியிருக்கிறது.

இவ்வளவு விலை கொடுத்து வாங்கின பிறகும் எப்பதான் லாபம் பார்க்க முடியும்? அதுக்காகவா இவ்வளவு விலை.

அதுதான் இந்தியா.

வளரும் இந்தியாவின் பொருளாதாரத்தினாலும் உயரும் இளைய சமுதாயத்தின் எண்ணிக்கையாலும், அவர்களின் சம்பாதிக்கும் செலவழிக்கும் திறனாலும், பரவி வரும் தொழில்நுட்பங்களினாலும் இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகம் மிகப்பெரியதாகிக்கொண்டு வருகிறது. இந்த வர்த்தகத்தில் பங்கு பெற உலகமெங்கும் பலரும் முயன்று வருகின்ற நிலையில் வால்மார்ட் நிறுவனம், இந்த ஃப்ளிப்காகார்ட் கூட்டின் மூலம் மிகப்பெரிய ஜாக்பாட் அடித்திருக்கிறது எனலாம்.

ஆன்லைன் வர்த்தகத்தில் விற்பனையைத்தாண்டி பணப்பட்டுவாடா, டெலிவரி, கஸ்டமர் சர்வீஸ் என்று பல விஷயங்கள் இருக்கின்றன. அலிபாபா என்னும் இன்னொரு பெரிய ஆன்லைன் நிறுவனம், பேடிஎம் (Paytm), சொமாடோ (Zomato), ஸ்னாப்டீல் (Snapdeal), பிக் பாஸ்கெட் (Big Basket) போன்ற தன் சக நிறுவனங்கள் மூலமாக இந்த ஆன்லைன் வர்த்தகத்தில் தன் பெயரைப் பொறிக்க முயலுகிறது.

இந்த வால்மார்ட் – ஃப்ளிப்கார்ட் ஒப்பந்தம் பற்றிச்செய்திகள் வெளியானவுடன் பல தரப்பட்ட எதிரொலிகளைக்கேட்க முடிந்தது.

“ஐயகோ! வெளிநாட்டுக்காரன் நுழைகிறானே” என்று சிலர் அலறாமலில்லை, அதே சமயம் “இந்தியா வயசுக்கு வந்துவிட்டது, இதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் சிறக்கும், வேலை வாய்ப்புகள் பெருகும், நமது ஏற்றுமதி அதிகரிக்கும், வெளி நாட்டு மூலதனம் இங்கே வந்து சேரும்” என்றெல்லாம் பொருளாதார நிபுணர்கள் பேட்டிகள் கொடுத்தார்கள்.

இந்திய இளைய சமுதாயம் ஸ்டார்ட் அப் (Start Up) என்னும் சுய வேலை வாய்ப்புத் தொழில்களுக்கு ஃப்ளிப்கார்ட் ஒரு முன்னோடி. ஃப்ளிப்கார்ட்டைத் தொடங்கிய பின்னி பன்சல் தன்னிடம் உள்ள பங்கின் ஈடாக சம்பாதித்தது 6,500 கோடி ரூபாய். நாமும் அதே போல கம்பெனி தொடங்கிப் பின்னாளில் வெளி நாட்டு நிறுவனத்துக்கு விற்றுப் பல ஆயிரம் மடங்கு லாபம் சம்பாதிக்க வேண்டும் என்னும் உந்துதலைக் கொடுத்திருக்கிற ஒப்பந்தம் இது.

இதெல்லாம் போக நமது வருமான வரி இலாகாவும் தங்களுக்குக் கிடைக்கப்போகும் மூலதன லாப வரி (Capital Gains Tax)ஐ எண்ணி நாக்கைச் சப்புக்கொட்டிக்கொண்டு இருக்கிறது.

இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவுக்குக் கிடைக்கப்போகிற மிக முக்கிய நன்மை என்று நான் கருதுவது வால்மார்ட்டின் அசுர நிர்வாகத் திறனும் அனுபவமும் இந்திய வியாபார உலகில் உண்டாக்கப்போகும் சில நல்ல தாக்கங்களும்தான்.

அமேசானைவிட வால்மார்ட்டின் பலம் இருப்பது அதன் ஒப்பீட்டுப் போட்டியாளர் வலிமை (Competitive Strengths) என்பதில்தான். சில வருடங்களாகவே வால்மார்ட் புதிய, உயர் தரக் காய்கறிகள், பழங்கள் மற்றும் விவசாயப் பொருட்களை விற்பனைச் சங்கிலி (Supply Chain) மூலம் திறமையான விநியோகத்தைச் செய்து வருகின்றது. இந்த விநியோக முறையில் பல நுணுக்கங்களைப் புகுத்தி பொருட்களை நுகர்வோருக்கு எளிமையாக, திறமையாக, குறைந்த விலையில் கொண்டு சேர்த்துவிடும் இயலில் வால்மார்ட் பிரசித்தி பெற்றிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்னால் ரிலையன்ஸ் ஃப்ரெஷ் கூட இதை முயன்று அவ்வளவாக வெற்றி பெற முடியவில்லை. வால்மார்ட்டின் பரிசோதனை முயற்சியாக சில வருடங்களுக்கு முன்பே இந்தியாவில் அவர்கள் மொத்த விற்பனை நிலையங்களை நடத்தி வந்திருக்கிறார்கள். 21 சிறந்த விலை (21 Best Price) என்னும் பெயர் கொண்ட மொத்த விற்பனை நிலையங்கள் ஏற்கெனவே பத்து லட்சம் சில்லறை வியாபாரிகளை உள்ளடக்கியிருக்கிறது. இப்போது வால்மார்ட் இதை இன்னும் விரிவுபடுத்தி ஒவ்வொரு இந்தியக் குடும்பத்துக்கும் டெலிவரி செய்யக்கூடிய வகையில் பெரிதுபடுத்த திட்டம் வைத்திருக்கிறது.

ஒரு திருமணத்துக்குத் தேவையான அனைத்தையும் ஃப்ளிப்கார்ட்டில், வால்மார்ட்டில் வாங்கலாம் என்பது மிகப்பெரிய சௌகரியம் என்றாலும் இதுபோன்ற மாபெரும் நிறுவனங்களின் வரவால், உப்பு புளி முதற்கொண்டு எல்லாமே ஆன்லைன் எனறாகிவிட்டால், தெருக்கோடியில் ஒன்று, இரண்டு என்று நம்பர் எழுதின பலகைகளைக் கதவாய் வைத்துச் செயல்படும் சிறுசிறு கடை வியாபாரிகள் நிலைமை என்னாகும்?

டக்ளஸ் மாக்மில்லன் தயங்காமல் Inclusive என்னும் வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்.

“கிரானா கடைகள், (அதான் தெருக்கோடி நாடார் கடை என்று நாம் சொல்லுவது) எங்களுக்கு மிக முக்கியம். அவர்களோடு தொடர்பு கொண்டுதான் நாங்கள் பொருட்களை கஸ்டமர்களுக்குக் கொண்டு சேர்க்கப்போகிறோம். எங்களின் வெற்றியில் அவர்களும் உள்ளடங்கியிருக்கிறார்கள்.”

முதன்முதலில் வால்மார்ட் இந்தக் கிராம அளவில் இருக்கும் சிறுசிறு கடைகளுக்கு வியாபாரத் திறனை மேம்படுத்தும் பயிற்சிகள் தரப்போகிறது. சரக்கு மேலாண்மை (Inventory Management), டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை (Digital Payment) மற்றும் போக்குவரத்து தொழில்நுட்பம் (Logistics Technology) ஆகிய துறைகளில் அவர்களுக்குத் திறனை அதிகரிக்கச் செய்து தத்தம் சிறு வியாபாரத்தை மிகத் திறமையாகவும் ஒழுங்காகவும் செய்து லாபம் ஈட்டும் கலையைக் கற்றுத் தரவிருக்கிறார்கள்.

நமக்கு இந்த விஷயம் மிக முக்கியமான செய்தி ஒன்றைத் தெரிவிக்கிறது.

மேற்சொன்ன பயிற்சிகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டால் இந்தியாவின் இ-காமர்ஸ் என்னும் இணைய வர்த்தகம் நமது கிராமப்புற மற்றும் இதர சிறு குறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் தொழில் வாழ்க்கைத் தரத்தையே மற்றியமைத்துவிடும் என்பது என் கணிப்பு. ஆனால் இவற்றையெல்லாம் நாம் மிகக் கவனமாகக் கண்காணிக்கவேண்டும் என்பது முக்கியமானது.

இதெல்லாம் செய்து முடிக்க வால்மார்ட்டுக்கு இன்னமும் அதிகம் முதல் தேவைப்படும். அதன் தலைவர் ஏற்கெனவே தாம் இன்னும் 5 பில்லியன் டாலர் முதலீட்டைச் செய்யப்போவதாக அறிவித்துவிட்டார். இதனால் உடனடியாக 1 கோடி வேலை வாய்ப்புக்கள் உண்டாகும் என்பது விற்பன்னர்களின் எதிர்பார்ப்பு. சென்ற சில வருடங்களாகவே வால்மார்ட் இந்தியாவில் வாங்கும் பொருட்களில் 97% வரை சிறு குறு வியாபாரிகளிடம் வாங்கி, கிட்டத்தட்ட 4-5 பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார்கள்.

நாம் அடையாறில் வாங்கும் ஒரு கிலோ உருளைக்கிழங்குக்கு ரூ 20 வரை கொடுக்கும்போது, அந்த உருளைக்கிழங்கை விளைவித்த விவசாயிக்குக் கிடைப்பது ரூ 4 கூட இருக்காது. கடந்த சில வருடங்களில் ரிலையன்ஸ், பிக் பசார் போன்ற பெரும் சூப்பர் மார்க்கெட்டுகள் வந்த பின்னர் ஓரளவுக்கு நடுத்தரகர்கள் மறைந்து போய் விவசாயிக்கு இன்னும் அதிகம் கிடைக்கிறது. ஆக இனி ஏஜண்ட்டுகளும் மொத்த வியாபாரிகளும் நிச்சயம் இழப்பைச் சந்திப்பார்கள். அவர்களும் இந்த மெகா மாற்றத்தினால் இந்த லாஜிஸ்டிக் சங்கிலியில் உள்ளிழுக்கப்பட்டால் அவர்களுக்கும் கிடைக்க வேண்டிய நியாயமான லாபம் கிடைக்க வழி இல்லாமலில்லை.

ஒரு விவசாயி தன் பயிரை அறுவடை செய்து, மாட்டு வண்டியில் ஏற்றி, நாற்பது ஐம்பது கிலோமீட்டர் ஓட்டி வந்து சந்தையில் நின்றால், அங்கு இருக்கும் நடுத்தரகர்களின் சந்தர்ப்பவாதக் கூட்டால் விவசாயி தன் பொருளை மிகக்குறைவான விலைக்குத்தான் விற்க முடியும் என்னும் நிலைதான் இருக்கிறது. இந்தக் கொடுமையைத் தடுக்கவே அரசாங்கம் Agricultural Produce Marketing Committees (APMC) என்னும் விவசாயப் பொருள் விற்பனை கமிட்டிகளை ஒழித்துப் புதுவித மாற்றங்களைக்கொண்ட திருத்தச் சட்டத்தை ஏற்படுத்தியது. ஆனால் மகாராஷ்டிரா, பிஹார் போன்ற ஓரிரு மாநிலங்கள் மட்டுமே இந்தச் சட்டத்தை நிறைவேற்றியிருக்கின்றன. மற்ற மாநிலங்கள் ஏன் மெத்தனமாக இருக்கின்றன, அரசியல்வாதிகள் ஏன் இது பற்றி அதிகம் பேசுவதில்லை என்பதற்கான உண்மைக் காரணத்தை வெளியே சொன்னால் நம்மைச் சுளுக்கு எடுத்துவிடுவார்கள். e NAM என்னும் இணையத்தளம் விவசாயிகளுக்குச் சுற்று வட்டார மார்க்கெட் நிலவரத் தகவல்களை உடனுக்குடன் தெரிவிக்க வேண்டும் என்பதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாலும் பல அரசுத்திட்டங்கள் போலவே இந்த eNAM திட்டமும் அப்படி ஒன்றும் வெற்றியடையவில்லை.

ஆனால் வால்மார்ட் போன்ற மாபெரும் சில்லறை விற்பனை நிறுவனங்கள், குளிர் சேமிப்புத் தலங்கள், குளிரூட்டப்பட்ட வாகனங்கள், தரம் பிரிக்கும் வசதிகள் போன்றவற்றில் பெரும் முதலீடு செய்வார்கள். இது, அறுவடைக்குப் பின்னால் உண்டாகும் சேதம், அழுகல் போன்ற இழப்புக்களைப் பெருமளவில் குறைக்கும்.

பல நன்மைகள் உண்டாகும் என்றாலும் வால்மார்ட் இந்த அளவு முதலீடு மற்றும் அதிக மேல் செலவுகள் கொண்டு வியாபாரத்தை நடத்தும்போது நிச்சயம் லாப நோக்கில்தான் இருக்கும் என்பதையும் மறுக்க முடியாது.

இதில் டெல்லிக்கும் ஒரு செய்தி இருக்கிறது.

உண்மையாகவே இந்த பாஜக அரசு விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் பட்ஜெட் குறிக்கோளை சீரியஸாக எடுத்துக்கொள்ளுமாயின், முதலில் அவர்கள் செய்ய வேண்டியது இந்த APMCக்களின் நேர்மையற்ற கூட்டைக் கலைக்க வேண்டும். இந்தக் கூட்டுதான் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை என்னும் ஆக்ஸிஜன் வழங்கும் ஊற்றுக்கண் என்றொரு ஊகம் இருப்பதால் (சந்தேகம் என்றே சொல்வோம்) இந்த APMC ஒழிப்பை நடத்துவார்களா என்பது கேள்வி. அப்படி நடந்தால் வால்மார்ட், அமேசான், ஸ்னாப்டீல், அலிபாபா போன்ற நிறுவனங்களுக்கிடையே ஏற்படும் கடும் போட்டியினால் நுகர்வோர் பயனடைய முடியும்.

அமேசான் இந்த வால்மர்ட் – ஃப்ளிப்கார்ட் கூட்டினால் தன் நிலையை ஸ்திரப்படுத்திக்கொள்ள இன்னும் ஆக்கிரமிப்பை அதிகரிக்க முயலும். இலவசங்கள் என்னும் மழை பெய்யும். விலைக் குறைப்பு என்னும் இடி இடிக்கும். டிஸ்கவுண்ட் என்னும் புயல் வீசும். நமக்கு நல்ல பொருட்கள் சகாய விலையில் தட்டிக்கொண்டு போகும் வாய்ப்புக்கள் பெருகும். அமேசானைவிட வால்மார்ட் மிகப்பெரிதாகையால் அதன் பலதரப்பட்ட லேபிள் பொருட்கள் இந்தியாவில் அதிகமாகக் கிடைக்கும்.

இந்தியாவின் ஆன்லைன் வர்த்தகம் இனி ஒரு ரோலர் கோஸ்டர் பயணம். திரில்களுக்கும் ஆச்சரியங்களுக்கும் குறைவிராது. விபத்துகள் இல்லாதிருக்க அரங்கனை வேண்டுவோம்.

ஃப்ளிப்கார்ட்டில் வேலை செய்த 3,000 பேருக்கு அந்த நிறுவனம் ஆரம்பித்த புதிதில் Employee Stock Option என்னும் ஊழியர் பங்கு உரிமை கொடுத்திருந்தது. இந்த ஃப்ளிப்கார்ட் வால்மார்ட் ஒப்பந்தத்தின்படி இப்போது வால்மார்ட்டுக்கு 77% பங்குகள் விற்கப்படுவதால், ஃப்ளிப்கார்ட் தன் ஊழியர்களிடமிருந்து அந்தப் பங்குகளைப் பணம் கொடுத்து வாங்கவிருக்கிறது. உறுதிப்படுத்தாத செய்திகள் தெரிவிப்பது ஒவ்வொரு பங்கின் விலையும் 150 டாலர் இருக்கலாமாம். ஆயிரம் பங்குகள் வைத்திருப்பவருக்குக் கிடைக்கப்போவது கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய்!
எண்பதுகளில் இன்ஃபோஸிஸ் செய்த அதே மாஜிக்கை இப்போது ஃப்ளிப்கார்ட் செய்யவிருக்கிறது.

Leave a Reply