Posted on Leave a comment

இந்தியக் கதைகளில் ஜொலிக்கும் ஆபரணங்களும் அணிகலன்களும் | சுமதி ஸ்ரீதர்

உலகிலேயே மிக அதிகமாகத் தங்கத்தை நுகரும் நாடுகளில் சீனாவுக்கு அடுத்தபடியாக இருப்பது இந்தியாதான் என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த தகவல்தான். இந்தியா கடந்த ஆண்டு (2017) மட்டும் சுமார் 855 டன் தங்கத்தை இறக்குமதி செய்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.

இந்தியர்களான நாம் இந்த விலைமதிப்புமிக்க மஞ்சள் உலோகத்தின் மேல் வைத்திருக்கும் அளவற்ற மோகம் இன்று நேற்றல்ல, அது நமக்குத் தொன்று தொட்டு வந்த மரபு.

சுமார் 2,000 வருடங்களுக்கு முன்னால் பரந்து விரிந்து கிடந்த ரோமாபுரி சாமராஜ்ஜியம் காலம் தொட்டே உலகில் பொன்னை விரும்பும் பூமியில் முதல் இடத்தில் இருந்திருக்கிறது இந்தியா.

குறு மிளகு உட்பட சமையலுக்கு நறுமணம் சேர்க்கும் ஏனைய மசாலா பொருட்களுக்கும், நம் கடல் முத்துகளுக்கும் மற்றும் நம்முடைய சிறந்த மஸ்லின் துணிகள் தவிர, அத்துணிகளுக்குப் போடப்படும் சாயத்துக்கும் மாற்றுப் பண்டமாக ரோமானியர்கள் தங்கள் கப்பல்களில் வண்டி வண்டியாகத் தங்கத்தை கொண்டு வந்து நம் நாட்டில் கொட்டியதாக சரித்திரம் கூறுகிறது. இப்படி குறு மிளகுக்கும், மஸ்லின் துணிகளுக்கும் பொன்னை வாரியிறைத்தே திவாலாகக்கூடிய தருணம் ஒன்று ரோமபுரி சாமராஜ்ஜியத்திற்கு ஏற்பட்டது என்பதற்கான சரித்திர ஆவணமும் உண்டு.

அப்படி வந்திறங்கிய தங்கத்தை வைத்து இந்தியர்கள் பல வித ஆபரணங்களையும், அணிகலன்களையும் செய்து அணிந்து மகிழ்ந்திருக்கிறார்கள். அப்படிச் செய்வதற்கான உலோகவியல் அறிவும், தேர்ச்சியும் அந்நாளிலேயே நம்மிடம் இருந்தது என்பது கவனிக்கப்படவேண்டிய விஷயம்.

காலப்போக்கில், ஆபரணங்கள் மற்றும் அணிகலன்களின் மேல் நமக்கு இருந்த கொள்ளை ஆசை நம் கதைகளிலும் நுழைந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

நம் கதைகளில், தங்க நகைகளும், இரத்தினங்களும் பல விதமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், அவை கையாளப்பட்ட விதத்தில் பல ஒற்றுமைகள் இருப்பதைக் காணமுடிகிறது.

பெரும்பாலும், நகைகளை ஒரு குறிப்பிட்டப் பொருளைக் குறிக்கும் குறியீடாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் நம் கதையாளர்கள்.

இவ்வகைக் குறியீடுகளில் ஒன்று, அடையாளக் குறியீடு. இராமாயணத்திலும் மஹாபாரதத்திலும் நகைகள் ஒருவகையான அடையாளக் குறியீடாக பல சந்தர்ப்பங்களில் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். அதாவது, ஒரு நகையையோ அல்லது ஆபரணத்தையோ ஒரு குறிப்பிட்ட நபரோடு இணைக்கின்றன இக்கதைகள்.

உதாரணத்திற்கு, கர்ணனின் கவச குண்டலம். கவச குண்டலம் என்றாலே கர்ணன்தான் நம் ஞாபகத்துக்கு வருகிறான். கர்ணனை ஹஸ்தினாபுரத்தில் முதன்முதலாகக் குந்தி பார்க்க நேர்கையில் அவனை அவன் உடம்போடு ஒட்டியிருக்கும் கவச குண்டலத்தைக் கொண்டுதான் அடையாளம் காண்கிறாள்.

இராமாயணத்திலும் பல சந்தர்ப்பங்களில் நகைகள் அடையாளச் சின்னங்களாக பிரயோகப்படுத்தப்பட்டிருக்கின்றன. சீதையை இராவணன் இலங்கைக்குக் கடத்திச் செல்லும்போது அவள் தான் செல்லும் வழியெங்கும் தனது நகைகளை ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்துகொண்டே செல்கிறாள். அவளின் நகைகளை அடையாளம் கொண்டுதான் இராமன் அவள் சிறையெடுத்துச் செல்லப்பட்ட பாதையைக் கண்டறிகிறான். சீதை தன் நகைகளால் விட்டுச் சென்ற தடயத்தைத் தொடர்ந்துகொண்டே அனுமன் இருக்கும் கிஷ்கிந்தாவைச் சென்றடைகிறான். அங்கு இராமன் சுக்ரீவனைச் சந்திக்கிறான். சுக்ரீவன், தனக்கு கிடைத்ததாகச் சொல்லி மேலும் சில ஆபரணங்களை இராமனிடம் காண்பிக்கிறான். இராமன் அவற்றையும் சீதையுடைதென அடையாளம் கண்டுகொள்கிறான். அந்த நகைகள் அவனுக்குச் சீதையை ஞாபகப்படுத்துகின்றன. துக்கமும் கோபமும் ஒன்று சேர இராமன் சீதையைச் சிறைபிடித்தவனைக் கொன்று தீர்க்கச் சபதம் இடுகிறான்.

அதே போல் சீதையைத் தேடி அனுமனை இலங்கைக்கு அனுப்பும்போதும் இராமன் அனுமனிடம் தனது கணையாழியைக் கொடுத்து அனுப்புகிறான் . இராமனின் கணையாழியைக் கொண்டுதான் சீதை அனுமனைத் தன் கணவனின் தூதனாக அடையாளம் காண்கிறாள்.

இதேபோல் காளிதாசனின் அபிஞ்யானசாகுந்தலத்திலும் மோதிரத்தின் கதை ஒன்று உண்டு. கதையின்படி தன் காதலியான சகுந்தலைக்குத் தனது மோதிரத்தை நினைவுப்பரிசாக அளிக்கிறான் துஷ்யந்தன். பின்னாளில், அவன் அவளை மறக்க நேரிடுகையில், அந்த மோதிரத்தைக் கொண்டுதான் சகுந்தலை துஷ்யந்தன் தன்னுடன் கழித்த காதல் தருணங்களை அவனுக்கு நினைவுபடுத்துகிறாள்.

சொல்லப்போனால், காளிதாசனின் படைப்புகளில் மணிகள் மற்றும் ஆபரணங்கள் கதையின் பல முக்கியத் திருப்புமுனைகளுக்குக் காரணமாக இருப்பதைப் பார்க்கலாம். மாளவிகாக்னிமித்ரம் என்ற காவியத்தில் அக்னிமித்ரன் என்ற அரசனுக்கும் மாளவிகா என்னும் அரசிளங்குமரிக்கும் காதல் மலர்கிறது. ஆனால் அக்னிமித்ரனின் மனைவி மற்றும் அரசியான தாரிணிக்கு காதலர்கள் இணைவதில் விருப்பம் இல்லை. அவள் மாளவிகாவைச் சிறை வைக்கிறாள். ஆனால், அக்னிமித்ரன் தன் விதூஸகனைக் கொண்டு தாரிணியிடம் ஒரு பொய்யைச் சொல்லி அவளுடைய கணையாழியைக் கொண்டு மாளவிகாவைச் சிறையிலிருந்து மீட்கிறான். இப்படி நகைகளை அடையாளச் சான்றாக உபயோகப் படுத்தியிருக்கிறார்கள் நம் கதையாளர்கள்.

இராமாயணத்தில் இராமனின் கணையாழியைப் பெற்றபின் சீதையும் தன் பங்கிற்குத் தனது சூடாமணியைக் கழற்றி அனுமனிடம் கொடுத்து இராமனக்குத் தான் உயிருடன் இருப்பதைத் தெரியப்படுத்துகிறாள். எப்படி அந்தச் சூடாமணி பிரிந்து வாடும் இரு காதலர்களை ஒன்று சேர்க்கிறதோ, அப்படியே விக்ரமோர்வஸ்யம் என்னும் காளிதாசனின் காவியத்தில், ஊர்வசியையும் அவளது காதலனான புருரவஸையும் இணைக்கிறது சங்கமணீயமணி.

கதையின்படி ஒரு சிறு ஊடலால் இரு காதலர்களும் பிரிய நேர்கிறது. ஊர்வசி புருரவஸிடம் கோபித்துக்கொண்டு பெண்களுக்கு அனுமதியில்லாத, சுப்ரமணியருக்குச் சொந்தமான குமரவனத்திற்குள் தவறாக நுழைந்துவிடுகிறாள். அதனால் சுப்ரமணியரின் சாபத்திற்கு ஆளாகி ஒரு கொடியாக உருமாறுகிறாள்.

விரகதாபத்தில் துடிக்கும் புருரவஸ், ஊர்வசியைத் தேடி இங்குமங்கும் அலைகிறான். அப்போதுதான் அவனுக்கு சங்கமணீயமணி கிடைக்கிறது. சங்கமணீயமணி பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கக்கூடிய (சங்கமம் = சேர்க்கை) சக்தி வாய்ந்தது. அந்த மணியைக்கொண்டு புருரவஸ் ஊர்வசியோடு இணைகிறான். ஊர்வசியும் அந்த மணியால் சாபவிமோசனம் பெறுகிறாள்.

காளிதாசனின் காவியங்களைத் தவிர ஸம்ஸ்க்ருதத்தில் இன்னொரு பிரபலமான படைப்பு, ஸுத்ரகா என்னும் மன்னனால் எழுதப்பட்ட மிருச்சகடிகம் என்னும் நாடகம். மிருச்சகடிகம் என்றால் களிமண்ணினாலான சின்ன கட்டைவண்டி. கதையின் முக்கிய கதாபாத்திரம், வசந்தசேனை. அவள் ஒரு பணக்கார நாட்டியக்காரி. வசந்தசேனையின் நகைகள் கதையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சொல்லப்போனால், அவள் ஆபரணங்களைச் சுற்றித்தான் கதையே நகர்கிறது.

ஆபரணங்கள், அடையாளக் குறியீடுகளாக மட்டுமல்ல, பல சூழ்நிலைகளில் ஒரு நபரின் புனிதத்தன்மையையும், கற்பையும் வெளிப்படுத்தும் உரைகற்களாகவும் பயன்படுகின்றன.

இதற்கு ஒரு சிறந்த உதாரணம், சிலப்பதிகாரத்தில் வரும் சிலம்பு. கண்ணகி தன் கால் சிலம்பை உடைத்துத்தான் தன் கணவனின் குற்றமின்மையை நிரூபிக்கிறாள். உடைக்கப்பட்ட கால் சிலம்பும் அதிலிருந்து சிதறும் இரத்தினங்களும் அவள் கணவன் உத்தமன், கள்ளமற்றவன் என்பதைப் பறைசாற்றுகின்றன.

ஆனால் பாவம் கண்ணகியின் கால் சிலம்பால் ஒரு பொய்யான குற்றச்சாட்டினால் தண்டிக்கப்பட்ட கோவலனின் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. ஆனால், திருக்கடையூர் அபிராமியின் காதணியோ அபிராமி பட்டர் தவறுதலாகக் கூறிய ஒரு பொய்யை மெய்யாக்கி அவரை மரணத்திலிருந்து காப்பாற்றுகிறது. இந்தக் கதையில் அன்னை அபிராமியின் காதணி அபிராமி பட்டரின் புனிதத்தன்மையை, அவர் அவள் மீது கொண்ட அதீத பக்தியை உலகத்திற்கு அடையாளம் காட்டுகிறது.

கண்ணகியின் உடைக்கப்பட்ட கால் சிலம்பை வேறு ஒரு கோணத்திலும் பார்க்கலாம். சிலம்பும் மற்றும் அதிலிருந்து சிதறும் இரத்தச் சிவப்பு இரத்தினங்களும் கண்ணகியின் திருப்தியடையாத பாலியல் தன்மையையும் (கோவலன் அவளை விட்டுப் பிரிந்திருந்த காரணத்தால்) மற்றும் நிறைவேறாத தாய்மையையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.

இதே போல் கச்சியப்பர் தன் கந்தபுராணத்தில் உமையின் உடையும் கால் சிலம்பை அவளுடைய திருப்தியின்மையின் குறியீடாகப் பயன்படுத்தியிருக்கிறார். சூரபத்மனைக் கொல்ல வேண்டி தேவர்களின் அவசரக் கோரிக்கையை ஏற்று, சிவபெருமான் தன் ஊர்த்துவரேதஸைக் (யோக சக்தியால் விந்துவை நெற்றியில் இருக்கும் குண்டலினி சக்கரத்திற்கு ஏற்றுதல்) கொண்டு கந்தனைப் படைக்கிறார். சிவனின் தேஜஸ் (விந்து) தீப்பொறியாக மிகுந்த வீரியத்தோடு வெளிப்படுகையில் சிவனின் அருகில் அமர்ந்திருக்கும் உமை தன் இருக்கையிலிருந்து பயந்து எழுந்து கொள்கிறாள். அவள் எழும்போது கால் தடுக்கி அவள் கால் சிலம்பு உடைந்து அதிலிருக்கும் இரத்தினங்கள் சிதறுகின்றன.

கந்தன், உமையின் கர்ப்பத்தில் உருவாகாமல், சிவனின் நெற்றிக்கண் பொறியிலிருந்து உருவாகிறான் என்பதுதான் இங்குக் கவனிக்கப்படவேண்டிய விஷயம். கந்தனின் படைப்பில் தன்னை ஈடுபடுத்தாத தேவர்கள் மீது கடும் கோபம் கொள்கிறாள் உமை. தேவர்களுக்கு குழந்தைப்பேறு இல்லாமல் போகச் சபிக்கிறாள்.

இங்கேயும், உமையின் உடைந்த சிலம்பும், அதிலிருந்து சிதறும் சிவப்பு இரத்தினங்களும் அவளின் நிறைவேறாத தாய்மையைச் சுட்டிக் காட்டுகின்றன.

நகைகளைத் துறந்த சீதை ஒரு களையிழந்த மாடமாக அசோக வனத்தில் உட்கார்ந்திருந்த காட்சியானாலும் சரி, அல்லது கைகேயி தசரதரிடம் வரம் வேண்டி, நகைகளைக் களைந்து, தலைவிரிக் கோலமாகக் கோபாகிருகத்தில் படுத்திருந்த கோலமானாலும் சரி, அல்லது கண்ணகி மற்றும் உமையின் உடைந்த கால் சிலம்பானாலும் சரி, நகைகளை இழந்த பெண்கள் அமங்கலமான ஒரு நிலையைக் காட்சிப் படுத்துகிறார்கள்.

நகைகளைக் கொண்டு ஒரு மனிதனின் மெய்ப்பற்றை நிரூபிக்கும் வேறு சுவாரஸ்யமான கதைகளும் உள்ளன. அதில் ஒன்று, பெரும்தேவனாரின் பாரத வெண்பாவில் கூறப்படும் கர்ணனின் கதை. கர்ணன் திரைப்படத்தைப் பார்த்தவர்களுக்குத் தெரிந்திருக்கும் இந்தக் கதை.

ஒரு முறை, துரியோதனனின் அந்தப்புரத்தில் அவன் மனைவி பானுமதியும் அவனது ஆருயிர் நண்பன் கர்ணனும் மிக சுவாரஸ்யமாகத் தாயம் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வெளியே சென்றிருந்த துரியோதனன் திடீரெனத் திரும்பிவிட, அவன் வருகையைக் கண்ட பானுமதி அவனை வரவேற்க விருட்டென உட்கார்ந்த இடத்திலிருந்து எழுந்திருக்கிறாள். விளையாட்டில் மூழ்கியிருந்த கர்ணன் அவள் எழுந்திருப்பதைப் பார்த்து, அவள் விளையாட்டைப் பாதியில் விட்டுச் செல்வதாகத் தவறாகப் புரிந்துகொண்டு சட்டென அவள் இடுப்பைப் பிடித்து அவளைப் போகாமல் தடுக்க முயல, அவள் இடுப்பில் கட்டியிருந்த முத்தாலான மேகலை அறுந்து முத்தெல்லாம் கீழே சிதறுகின்றன. கணப் பொழுதில் நடந்துவிட்ட இச்சம்பவத்தைத் துரியோதனன் பார்த்துவிடுகிறான். பானுமதியோ பயத்தில் உறைந்து போகிறாள். கர்ணனும், துரியோதனன் அங்கு வந்திருப்பதை அப்போதுதான் உணர்கிறான். அறியாமல் செய்தாலும் தான் செய்த இழிவான செயலை எண்ணி வெட்கித் தலை குனிகிறான், மிகுந்த வேதனை அடைகிறான்.

ஆனால் இந்த காட்சியைக் கண்ட துரியோதனனோ ஒரு கணம்கூடத் தயங்காமல், கீழே சிதறிக்கிடந்த முத்துக்களையெடுத்து, சிரித்துக்கொண்டே பானுமதி மற்றும் கர்ணனைப் பார்த்து கேட்ட ஒரே கேள்வி, “எடுக்கவோ, கோக்கவோ?”

துரியோதனின் எதிர்வினையைக் கண்டு, அவன் தன் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை உணர்ந்த கர்ணன் நெகிழ்ந்து போய், தன் நண்பனை ஆரத்தழுவுகிறான். இந்த இரு நண்பர்களுக்குள் இருக்கும் மேகலையின் முத்தைப் போன்ற தூய்மையான நட்பை எடுத்துக்காட்டும் நெகிழ்ச்சியான கதை இது.

இதேபோல் அரிச்சந்திரன் மனைவி சந்திரமதியைப் பற்றிய செவிவழிக் கதையும் ஒன்று உண்டு. அரிச்சந்திரனின் சத்திய சோதனையில், அவன் தன் மனைவி மற்றும் மகனிடமிருந்து பிரிய நேர்கிறது. கதையின் ஒரு கட்டத்தில் அரிச்சந்திரனின் மகன் இறந்துவிடுகிறான். விதியின் கொடுமையால் சுடுகாட்டில் வேலை செய்யும் அரிச்சந்திரன், இறந்தது தன் மகன்தான் என்று தெரியாமல் ஈமக்கிரியைகளைச் செய்ய சந்திரமதியிடம் காசு கேட்கிறான். ஆனால் சந்திரமதியிடமோ தன் மகனின் இறுதிப் பயணத்திற்குச் செலவு செய்யக்கூட காசுபணம் இல்லை. அப்போது, தன் மனைவியிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறோம் என்று தெரியாத அரிச்சந்திரன், அவளிடம் தன் கழுத்தில் தொங்கும் தாலியை விற்றுப் பணம் கொண்டுவரச் சொல்கிறான். சந்திரமதி இதைக் கேட்டு உறைந்து போகிறாள். ஏனென்றால், அவள் தாலியை, அவள் கணவன் அரிச்சந்திரனால் மட்டுமே பார்க்க முடியும். இடுகாட்டில் இருக்கும் மயானவன் தன் கணவன்தான் என்று புரிந்துகொள்கிறாள். சந்திரமதியின் கணவன் அரிச்சந்திரனக்கு மட்டுமே தெரியும் அவளது தாலி, அவள் கற்பைக் குறிக்கிறது.

கற்பு என்பது பாலியல் விசுவாசம் சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றில்லை, கர்ணனின் கதையில் சொன்னதுபோல அது நட்பைச் சார்ந்ததாகவும் இருக்கலாம். சொல்லப்போனால், பக்தியும் ஒரு விதமான கற்புடைமைதான். உதாரணத்திற்கு அனுமன் இராமன்மேல் கொண்டிருந்த ஆழ்ந்த பக்தி. அதை அனுமனின் கற்பு என்று எடுத்துக் கொள்ளலாம். செவிவழி வந்த இன்னொரு கதையின் படி, அனுமன் பிறக்கும்போதே இரு காதணிகளோடு பிறக்கிறான். ஆனால் அவன் காதணிகள் அவனுடைய எஜமானின் கண்களுக்கு மட்டுமே தெரியக் கூடியவை. தற்செயலாக இராமனுடனான சந்திப்பில் இராமன் அனுமனின் காதணிகளைப் பற்றிப் பேச, அனுமன் இராமன்தான் தன்னுடைய நாதன் என்பதை உணர்கிறான். சந்திரமதியின் தாலியைப் போல இராமனின் கண்களுக்கு மட்டும் தெரியும் அனுமனின் காதணிகள், அனுமன் இராமனின்பால் கொண்ட அழ்ந்த பக்தி என்னும் கற்பின் சான்று.

எப்படிப் பொன் ஆபரணங்கள் ஒரு நபரின் அடையாளத்தை அல்லது புனிதத்தன்மையைக் குறிக்கின்றனவோ, அவ்வாறே மணிகள் மற்றும் இரத்தினங்களும்கூட நம் கதைகளில் பல செய்திகளைக் கூறுகின்றன. பொதுவாக ஒவ்வொரு மணிக்கும் ஒரு குணம் இருப்பதாக நம்பப்படுகிறது. நம் கதைகளைப் பொருத்தவரை சில மணிகள் செல்வத்தையும் செழுமையையும் வாரி வழங்கக்கூடியவை. வேறு சில மணிகள், அவற்றை ஆட்கொள்ள நினைப்பவர்களுக்குத் துன்பத்தையும், சிக்கல்களையுமே விளைவிக்கக் கூடியவை.

எப்படி புருரவஸுக்குக் கிடைத்த சங்கமணீயமணி பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கக்கூடிய சக்தி படைத்ததோ, அவ்வாறே மஹாபாரதத்தில் குறிப்பிடப்படும் இன்னொரு மணி மிருதசஞ்சீவனி. அது பிரிந்த உயிரைத் திருப்பிப் பெற்றுத் தரக்கூடிய சக்தி வாய்ந்தது. கதையில் ஒரு கட்டத்தில் அர்ஜுனனின் மகன் பப்ருவாகனனால் கொல்லப்படுகிறான். அப்பொழுது அவன் மனைவி உலூபி, நாகர்களுக்குச் சொந்தமான மிருதசஞ்சீவனி மணியை வரவழைத்து அவனை உயிர்ப்பிக்கிறாள். மிருதசஞ்சீவனி மணி அநுகூலமான பலனையே தருகிறது.

ஆனால் பாகவதப்புராணத்தில் கூறப்படும் சியமந்தக மணியின் கதை சற்று வேறுவிதமானது. சத்ரஜீத் என்ற யாதவ குலப் பிரபுவிற்குக் கிடைக்கும் அந்த மணி அது தங்கியிருக்கும் இடத்துக்குச் சுபிட்சமும் பெருவாழ்வும் கொடுக்க வல்லது. ஆனால் கதையில் அதை ஆட்கொள்ள நினைத்த ஒவ்வொருவருக்கும் அது துரதிர்ஷ்டத்தை மட்டுமே அளிக்கிறது. ஒரு கை விட்டு இன்னொரு கை மாறும் இந்த மணியின் பயணத்தில் சத்ரஜீத், சத்ரஜீத்தைக் கொல்லும் ஸதத்வனன், சத்ரஜீத்தின் தம்பி, தம்பியை வேட்டையாடும் சிங்கம் எனப் பலர் உயிர் துறக்கின்றனர். ஒரு கட்டத்தில், சிங்கத்தைக் கொன்று, மணியை ஜாம்பவான் எடுத்துச் செல்கிறான். இதற்கிடையில், கிருஷ்ணன் மீது மணியைத் திருடியதாக பொய்க்குற்றம் சாற்றப்படுகிறது. கிருஷ்ணன், தன் மேல் சுமத்தப்பட்ட பொய்யான குற்றச்சாட்டிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ஜாம்பவானிடம் சண்டையிட்டு, மணியை மீட்கிறான்.

கிருஷ்ணனுக்கே இக்கட்டு ஏற்படுத்தியதால்தானோ என்னவோ சியமந்தக மணியைச் சிலர் கோஹினூருடன் ஒப்பிடுகிறார்கள். கோடி சூரியனின் ஒளியோடு ஜொலிக்கும் கோஹினூர் வைரம் ஆங்கிலேய அரசகுடும்பத்திற்கு, குறிப்பாக ஆண்களுக்குப் பல அல்லல்கள் விளைவித்ததாக நம்பப்படுகிறது. அதனால், கோஹினூரைப் பெரும்பாலும் அரசகுடும்பப் பெண்களே அணிந்திருக்கிறார்கள்.

கோஹினூராக இருந்தாலும் சரி, சியமந்தக மணியாக இருந்தாலும் சரி, பேராசைப் படுபவனுக்கு என்றுமே பெரு நஷ்டம்தான் என்பதுதான் இந்தக் கதைகள் மூலம் நமக்குக் கிடைக்கும் செய்தி. ஒரு சக்தி வாய்ந்த மணியைப் பெறுபவனுக்கு அதை ஆட்கொள்ளக்கூடிய திறனும் ஆளுமையும் இருக்க வேண்டியது அவசியம். அப்படிப்பட்ட ஒருவன்தான் மஹாபாரதத்தில் வரும் அசுவத்தாமன். அவன் துரோணச்சாரியாரின் மகன். கர்ணனைப்போல், பிறக்கும்போதே நெற்றியில் ஒரு மணியோடு பிறந்தவன். அந்த மணி சிறந்த ஆரோக்கியத்தையும், வாழ்வில் வளமையையும் கொடுக்க வல்லது. அந்த மணி அதை அணிந்தவனை நோய்நொடியும் அச்சமும் நெருங்கவிடாது.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இப்படிப்பட்ட உயர்ந்த குணங்கள் படைத்த மணியை, அசுவத்தாமனால் கடைசிவரை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. பாரதப்போரின் முடிவில் கௌரவர்கள் தோற்றதையும், தன் நண்பன் துரியோதனின் மரணத்தையும் தாங்கிக்கொள்ள முடியாத அசுவத்தாமன், ஆத்திரம் கொண்டு இரவில் பாண்டவர் கூடாரத்திற்குச் சென்று, தூங்கும் வீரர்கள், பாண்டவரின் கூட்டாளிகள் மற்றும் பாண்டவரின் மகன்கள் உட்பட அனைவரையும் தீக்கிரையாக்குகிறான்.

தன்னுடைய மிருகத்தனமான இச்செயலால், புனிதமான மணியை அவன் இழக்க நேரிடுகிறது. மணி இருந்த இடத்தில் வெறும் சீழும் இரத்தமும் வழிய, சிரஞ்சீவியான அசுவத்தாமன் இந்த அருவருப்பான நிலையில் புவியில் என்றென்றும் அலைந்து திரிவான் எனச் சபிக்கப்படுகிறான். எங்கெல்லாம் பாரதக் கதை சொல்லப்படுகிறதோ, அங்கெல்லாம் அசுவத்தாமன் வந்து இருந்து கதையைக் கேட்பதாக இன்றும் நம்பப்படுகிறது.

அலங்கார ஆபரணங்களைக் கொண்டு இத்தனை செய்திகளைச் சொல்ல முடியுமா என ஆச்சரியப்பட வைக்கின்றன நம் கதைகள். இக்கதைகளைப் பற்றிக் கருத்து கேட்டபோது, மும்பை பல்கலைக்கழகத்தின் ஸம்ஸ்க்ருதத் துறையின் தலைவியான மாதவி நர்ஸாளே, “அலங்கார ஆபரணங்களும், வைர வைடூரியங்களும் இந்தியக் கலாசாரத்தின் இன்றியமையாத ஒரு பகுதி. இவை நம்முடைய ஆழ்ந்த அழகுணர்ச்சியையும், கைத்திறனையும், உலோகவியல் அறிவையும் எடுத்துக்காட்டுகின்றன” என்று கூறுகிறார். ஆம், நர்ஸாளே கூறுவது போல இந்தியர்களின் அழகியல் வெளிப்பாட்டிற்கு, அவர்கள் கதைகளும் ஒரு ஊடகமாக இருந்ததில் ஆச்சரியம் இல்லைதான்.

Leave a Reply