Posted on Leave a comment

ஸ்டெர்லைட் கலவரம் – ஹரன் பிரசன்னா

ஸ்டெர்லைட் கலவரத்தில் 13 பேர் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்தப் பதிமூன்று பேரில் அப்பாவிகளும் உள்ளார்கள், போராட்டத்தில் கலந்துகொண்டவர்களும் உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் நம் கண்ணீர் அஞ்சலி. ஒரு போராட்டம் வன்முறையாக, கலவரமாக மாறும்போது ஏற்படும் இத்தகைய கொடூரங்களுக்கு அப்போராட்டத்தைத் திசை திருப்புபவர்களே பொறுப்பு.

தமிழ்நாட்டில் எதற்கெடுத்தாலும் போராட்டங்கள் என்ற நிலையைச் சில சமூகவிரோதிகள் செயல்படுத்துகிறார்கள். முன்பெல்லாம் ஒரு கட்சி முன்னின்று போராட்டங்களை நடத்தும். அப்போராட்டத்தினால் கிடைக்கும் நன்மை தீமைகளுக்கு அக்கட்சியே பொறுப்பேற்கும். ஆனால் இப்போது இந்தப் போராட்ட வடிவத்தை, மக்களின் போராட்டம் என்ற போர்வையில் சிலர் பயன்படுத்திக்கொள்கிறார்கள். எப்படியும் தாங்கள் நினைத்தது நிறைவேறப்போவதில்லை என்றும் பொதுமக்களின் ஆதரவு இருக்கப்போவதில்லை என்றும் இச்சிறு குழுக்களுக்குத் தெளிவாகத் தெரியும். எனவே பொதுமக்களின் போராட்டம் என்ற போர்வையில் சில குழுக்களை முன்வைத்துப் போராட்டங்களை நடத்துகிறார்கள். அல்லது மக்கள் செய்யும் போராட்டங்களில் ஊடுருவி, தங்கள் கொள்கை முழக்கங்களையும் இந்திய எதிர்ப்புப் பிரசாரங்களையும் திணித்து, அப்போராட்டத்தையே நாசம் செய்துவிடுகிறார்கள். இதனால் ஒட்டுமொத்த மக்களின் எதிர்பார்ப்பும் தியாகமும் வீணாவதோடு தேவையற்ற வன்முறையும் ஏற்படுகிறது. உண்மையான பிரச்சினை பின்தள்ளப்படுகிறது.

தமிழ்நாடு என்றுமே தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகியதில்லை. தொடர்ச்சியாக தனித் தமிழ்நாடு கோஷம் ஒலித்தாலும் அது என்று மக்களால் அங்கீகரிக்கப்பட்டதில்லை. அனைத்துக் கட்சிகளும் தங்களுக்குத் தேவை ஏற்படும்போதெல்லாம் இக்கோஷத்தைக் கையில் எடுப்பதும் மற்ற சமயங்களில் அதை மறந்துவிடுவதும் நாம் அறிந்ததே. இவர்களது நோக்கம் இதன் மூலம் தமிழ்நாட்டில் ஒரு பிரச்சினையை உருவாக்குவதும் நிம்மதியின்மையைக் கொண்டு வருவதும் ஆளும்கட்சிக்கும் மத்திய அரசுக்கும் குறிப்பாக பாஜக தலைமையிலான அரசுக்குப் பிரச்சினையை உருவாக்குவதும்தான். எனவேதான் எந்த ஒரு பிரச்சினையையும் போராட்டமாக்குகிறார்கள்.

தமிழ்நாட்டை அறிவியலுக்கு எதிரான மாநிலம் என்ற எண்ணத்தை இந்திய அளவில் விதைத்துக்கொண்டிருக்கிறார்கள் இக்குழுக்கள். இதனால் ஏற்படும் பெருந்தீமைகளை நாம் எதிர்வரும் வருடங்களில்தான் உணரமுடியும். எனவே அடிப்படையற்ற இப்போராட்டங்களை நாம் இப்போதே வேரறுக்கவேண்டும். ஆனால் இங்கிருக்கும் வலிமையற்ற மாநில அரசோ செய்வதறியாமல் திகைத்துக் கிடக்கிறது. அரசியல் வலிமையற்ற சூழல் இக்கலவரக்காரர்களுக்குப் பெரிய வசதியாக அமைந்துவிட்டிருக்கிறது.

எந்த ஒரு அறிவியல் முன்னேற்றத்தையும் எதிர்ப்பதால் நமக்கு இழப்பே அன்றி நன்மை ஒன்றுமில்லை. ஒரு புதிய தொழிற்சாலை அமையுமானால் அதனால் ஏற்படும் விளைவுகளை விளக்கி, அதிலிருந்து தப்பிக்கும் வழிகளைக் கண்டறிந்து, அந்த தொழிற்சாலையைத் திறம்பட நடத்திக் காண்பிப்பதே வளர்ச்சிக்கான வழி. ஆனால் இக்குழுக்கள் விளைவுகளைப் பற்றிய பயத்தை அதீதமாக ஊட்டி, அத்தொழிற்சாலைகளையே முடக்கப் பார்க்கிறார்கள்.

அதிலும் தொழிற்சாலைகளைத் தேர்ந்தெடுத்தே முடக்குகிறார்கள். தமிழ்நாடு முழுமைக்கான ஒட்டுமொத்த ஒரே அளவிலான அளவுகோல்கள் இவர்களிடம் இல்லை. இவர்களது நோக்கம் குறுகலானது. உடனடி வாய்ப்பும் வசதியும் இவர்களுக்குத் தரவல்லது. இதனால்தான் மக்கள் போராட்டம் என்ற பெயரில் களம் புகுந்து பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள்.

தமிழ்நாடு முழுக்க உள்ள பல தொழிற்சாலைகளால் மாசுபாடு நிகழ்ந்தவண்ணம் உள்ளது. இதைக் கண்காணிக்கவேண்டிய அமைப்பு என்ன செய்கிறது என்பதுதான் நம் கேள்வியாக இருக்கவேண்டும். ஒரு தொழிற்சாலையால் காற்றோ நிலமோ மாசடையும் என்றால் அதை மூடும் முடிவை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் பேரில் அரசு எடுக்கவேண்டுமே அன்றி, சில குழுக்கள் அல்ல.

இன்று ஸ்டெரிலைட்டை எதிர்த்துப் போராடும் அனைத்துக் கட்சிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதில் பங்கு கொண்டிருக்கின்றன. ரிபப்ளிக் டிவி வெளியிட்ட செய்தியின் படி மொத்தம் 7 முறை ஸ்டெர்லைட் ஆலை இயங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. அதில் ஆறு முறை காங்கிரஸ் தலைமையிலான அரசும் ஒரு முறை பாஜக தலைமையிலான அரசும் ஒப்புதல் தந்திருக்கிறது. ஆறு முறை கலவரங்களோ துப்பாக்கிச்சூடோ இல்லை. ஏழாவது முறை சரியாக நிகழ்த்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் இன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக ஒரு கட்சிகூடப் பேசுவதில்லை. அத்தனை தூரம் அத்தனை கட்சிகளும் பயந்து போயிருக்கின்றன. திமுக இன்று ஸ்டெர்லைட்டுக்கு எதிராகக் குரல் எழுப்புகிறது. ஆனால் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஒப்புதல் அளிக்கும்போது திமுகவும் ஆதரவாகவே இருந்திருக்கிறது. அன்று அமைதியாக இருந்துவிட்டு இன்று வீராவேசம் பேசுவதெல்லாம் எந்த நியாயத்தில்வரும் எனத் தெரியவில்லை. இதற்கான காரணத்தைப் பொது மக்களுக்கு விளக்கவேண்டும் என்று கூட இவர்கள் நினைப்பதில்லை.

இன்றைய நிலையில் எப்படிக் கட்சியை வளர்ப்பது என்று தெரியாத அனைத்துக் கட்சிகளும் எவ்வித யோசனையும் இன்றி, கையில் கிடைக்கும் எந்த ஒரு போராட்டத்தையும் தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கின்றன. இதனால் போராட்டம் எந்த ஒரு வடிவமும் இன்றி, திக்குத் தெரியாத காட்டில் அலைவது போன்று தினம்தோறும் ஒரு வடிவம் கொள்கிறது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான். ஆனால் இக்கட்சிகளுக்குப் பொதுமக்களைப் பற்றி எந்தக் கவலையும் இல்லை.

தூத்துக்குடியில் 13 பேர் கொல்லப்பட்டதற்குக் காவல்துறைக்குக் கண்டனம் தெரிவிப்பதும், அவர்கள் சுடுவதற்கு முன்பாக அத்தனை தேவையான அறிவிப்புகளையும் போராட்டக்காரர்களை நோக்கிச் செய்தார்களா என்பதையும் நாம் நிச்சயம் ஆய்வுக்குட்படுத்தவேண்டும் என்பதில் இரண்டாம் கருத்தில்லை. காவல்துறை நிச்சயம் புனிதர்களின் புகலிடம் அல்ல. எந்த ஒரு அரசின் முடிவும் அதற்கான சட்டத் தேவைகளின்படி நடந்திருக்கவேண்டும். ஆனால் இங்கே காவல்துறையின் தரப்பைப் பற்றி ஒரு கட்சிகூட யோசிக்கவில்லை. 99 நாள் சுடாத காவல்துறை 100வது நாள் ஏன் சுட்டது என்ற கேள்வியை எழுப்பினால் அவர்களைத் துரோகிகளாகச் சித்திரிக்கிறார்கள். கலவரம் நடந்து முடிந்தபின்பு வந்த வீடியோக்களில் போலிஸார் எப்படித் தாக்கப்பட்டார்கள், பொதுச் சொத்துக்கள் எப்படி வேண்டுமென்றே நாசமாக்கப்பட்டன, எப்படி கலவரக்காரர்கள் பெருங்கூட்டமாக கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டார்கள் என்பதையெல்லாம் பார்க்கும்போது, வேறு வழியின்றியே காவல்துறை சுடத் துவங்கியது என்பது புரிகிறது. ஒரு பெருங்கூட்டம் வன்மத்துடன் காவல்துறையினர் மீது பாயும்போது தங்களைக் காத்துக்கொள்ளவும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதும் பிற பொதுமக்களைப் பாதுகாப்பதும் காவல்துறையின் முக்கியக் கடமையாகிறது. இந்நிலைக்குக் காவல்துறையைத் தள்ளாமல் இருப்பதே போராட்டக்காரர்கள் செய்திருக்கவேண்டியது. ஆனால் இந்நிலைக்குப் போராட்டக்காரர்களைத் தள்ளுவதே, போராட்டத்தைப் பின்னணியில் இயக்கியவர்களின் தேவை என்பதைத் தனியே நமக்குச் சொல்லத் தேவையில்லை.

தமிழ்நாட்டில் இப்படி இந்திய எதிர்ப்பை மூலதனமாக வைத்து, தனித் தமிழ்நாடு என்ற ஒருபோதும் நடக்க இயலாத கனவுடன் திரியும் கூட்டத்தை தமிழ்நாடு அரசு கட்டுக்குள் வைக்கவேண்டிய உச்சகட்ட நேரம் இது. இந்நேரத்தைத் தவறவிட்டால் அது தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் நல்லதல்ல. ஓட்டரசியல் மட்டுமே குறி என்பவர்களுக்கு இவையெல்லாம் பெரும் அரசியல் தருணங்கள். ஆனால் தமிழ்நாடு என்றைக்குமே இத்தகைய குழுக்களுக்குப் பெரிய வெற்றியைத் தந்ததில்லை. இம்முறையும் தமிழ்நாடு தேசத்தின் ஒரு அங்கமாக நின்று இவர்களைத் தோல்வி அடையச் செய்யும் என்று நம்புவோம்.

ஸ்டெர்லைட்டை அரசு மூட எடுத்திருக்கும் முடிவு, கலவரக்காரர்களுக்குப் பயந்துதான். இது தமிழ்நாட்டுக்குப் பல வகைகளில் பின்னடைவை ஏற்படுத்தும். பல முதலீட்டாளர்கள், தொழில் ஆர்வலர்கள், இனி தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அனைவரும் தயங்குவார்கள் என்று சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். ஸ்டெர்லைட்டை மூடுவதால் அங்கு பணிபுரியும் ஆயிரக்கணக்கானோர்களுக்கும், அத்தொழிற்சாலையால் மறைமுகமாகப் பணி கிடைத்த பல்லாயிரக் கணக்கானோர்களுக்கும் அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? ஏற்கெனவே இப்படி ஸ்டெர்லைட் மூடப்பட்டபோதெல்லாம், ஆலையைத் திறக்கக்கோரி இவர்கள் அரசுக்கு எதிராகப் போராடி இருக்கிறார்கள். ஸ்டெர்லைட் ஆலைக்கு அனுமதி மறுக்கவேண்டியது மாசுக்கட்டுப்பாட்டு வாரியமே. அவர்கள் இப்போது அனுமதி மறுத்தால், முன்பு ஏன் எதற்காக யார் சொல்லி அனுமதித்தார்கள் என்பதை விளக்கவேண்டும். ஸ்டெர்லைட்டால் ஏற்படும் பாதிப்பை ஆணித்தரமாக நிரூபிக்கவேண்டும். இவை எதுவுமே இல்லாமல் கலவரக்காரர்களுக்கு பயந்து ஒரு ஆலையை மூடுவது மாநில அரசின் தோல்வியும் கையாலாகாத்தனமும்தான்.

Leave a Reply