Posted on 2 Comments

டிஜிடல் இந்தியாவின் மூன்று ஆண்டுகள் | ஜடாயு

பிரதமர் நரேந்திர மோதி 2015ம் ஆண்டு ஜூலை – 1 அன்று டிஜிடல் இந்தியா என்ற பெயரில் ஒரு மாபெரும் முன்னெடுப்பை அறிவித்தார்.   ஏற்கெனவே இந்திய அரசின் பல துறைகள் தகவல் தொழில்நுட்பத்தையும் இணையத்தையும் வைத்துப் பல்வேறு விதமான மக்கள் சேவைகளை வழங்குவதற்கான சிலபல திட்டங்களைத் தத்தம் போக்கில் செயல்படுத்தி வந்தன. அவற்றைச் சீராக்குவதோடு மட்டுமின்றி, இத்திசையில் ஒரு துரிதமான பாய்ச்சலையும் நிகழ்த்தவேண்டும் என்ற குறிக்கோளுடன் ‘டிஜிடல் இந்தியா’ அறிவிக்கப்பட்டது.

கிராமப் புறங்கள் உட்பட இந்தியாவின் அனைத்துப் பகுதிகளுக்கும் இணையத் தொடர்பைக் கொண்டு செல்வது, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தத் தெரிந்தவர்கள்,  தெரியாதவர்கள் என்ற இரு சாராருக்குமிடையே உள்ள Digital Divide எனப்படும் இடைவெளியைக் குறைப்பது போன்றவை இதன் மையமான நோக்கங்களாகும்.

இந்த மூன்று வருடங்களில் புதிதாக சுமார்  2,74,246 கி.மீ. நீளத்திற்கான அதிவேக ஒளியிழைக் கம்பிகள் (Optial Fibre) நாடு முழுவதும் பதிக்கப் பட்டுள்ளன (ஒப்பீட்டில் இதற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் கடைசி மூன்று வருடங்களில் 358 கிமீ நீளத்திற்கே இவை பதிக்கப்பட்டன).  தற்போது ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியக் கிராமப் பஞ்சாயத்துக்களில் அகல அலைக்கற்றை (Broadband) தொடர்புச் சேவை உள்ளது  (2014 அக்டோபரில் வெறும் 59 கிராமப் பஞ்சாயத்துகளில் மட்டுமே இது கிடைத்து வந்தது). கிராமங்களுக்கு அதிவேக இணையத் தொடர்பு அளிப்பதற்கென்றே BharatNet எனப்படும் தகவல் தொடர்புக் கட்டமைப்பை அரசு உருவாக்கியுள்ளது. 

வாட்ஸப், ஃபேஸ்புக் முதலான சமூக வலைத்தளங்கள் கடந்த 2 – 3 வருடங்களில் பட்டிதொட்டிகளில் எல்லாம் பரவியுள்ளது என்பது எவருக்கும் தெரியும்.  பிராண்ட்பேண்ட் இணைய சேவைக்கான கட்டணம்  இப்போது மூன்று வருடங்களுக்கு முன்பிருந்ததை விட, சுமார் 400% குறைந்திருப்பதே இதற்கு முக்கியமான காரணமாகும். டிஜிடல் கட்டுமானங்கள் மேற்கண்டபடி பெருமளவில் அதிகரிக்கப்பட்டிருப்பதால்தான் தொலைத்தொடர்புச் சேவை வழங்கும் நிறுவனங்கள் இவ்வளவு குறைவான விலைக்கு இணையச் சேவையைத் தரமுடிகிறது.

தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் அரசு அளிக்கும் பல்வேறு விதமான சேவைகளை மக்களுக்கு நேரடியாக JAM (Jandhan, Aadhaar, Mobile) என்ற மும்முனைக் கட்டமைப்பின் வழியாக வழங்குவதை சாத்தியப்படுத்துவதும் டிஜிடல் இந்தியா திட்டத்தின் மற்றொரு முக்கியமான குறிக்கோளாகும். இதில் மிகப்பெருமளவு வெற்றி கிடைத்துள்ளது.

31 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள்
120 கோடி ஆதார் அட்டைகள்
121 கோடி மொபைல் தொலைபேசிகள்

இந்த மூன்றையும் ஒன்றுடன் ஒன்று இணைப்பதன் மூலம் எத்தகைய பிரம்மாண்டமான அளவில் அரசு சேவைகளும், வேறு பல சமூக, பொருளாதார முன்னேற்றங்களும் சாத்தியம் என்பதை இன்றைய இந்தியா நேரடியாக உணர்ந்து வருகிறது.

JAM கட்டமைப்பின் வழியாக அரசின் நலத்திட்டங்களில் தரப்படும் பணம் நேரடியாகப் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்குச் செல்வதால் மட்டுமே அரசின் கணக்கில் சுமார் 90,000 கோடி ரூபாய் சேர்ந்துள்ளது. இந்தத் தொகை முழுவதும் இடைத்தரகர்களின் குறுக்கீடுகளால் விளையும் ஊழல்களாலும், ஆதார் போன்ற ஒரு ‘டிஜிடல் அடையாளம்’ இல்லாததால் பல போலிப் பயனாளர்களைக் கணக்குக் காட்டித் திருடப்பட்டதாலும் வீணாகி வந்தது.

அரசு சேவைகளைத் தடையின்றி வழங்குவதற்காக உள்ள Common Services Centres (CSCs) என்ற சேவை மையங்கள் தற்போது 3 லட்சத்திற்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் விரிவாக்கப்பட்டுள்ளன (2014ல் இவற்றின் எண்ணிக்கை 80,000 ஆக இருந்தது). வங்கிச் சேவைகள், ஆயுள் காப்பீடு, ஓய்வூதியம், நிலப் பத்திரங்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட சேவைகள் கிராமப் பகுதிகளிலும் இவற்றின் மூலம் நேரடியாக வழங்கப்படுகின்றன. இந்த மையங்கள் கூடுதலாக அவை அமைந்துள்ள பகுதிகளில் சிறுதொழில்களை ஊக்குவிப்பதற்கும் பயன்படுவது கண்டறியப்பட்டுள்ளது. 

LED பல்புகள் தயாரிப்பு, அடிப்படை கம்ப்யூட்டர் கல்வி வழங்கல் ஆகியவற்றிலும் இவை ஈடுபட்டுள்ளன.  இது போக, இரண்டாம் கட்ட சிறு/குறு நகரப் பகுதிகளில் கம்ப்யூட்டர் திறன்களைக் கற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளைப் பெருக்கும் வகையில் அரசே தனது BPO மையங்களை அந்த இடங்களில் உருவாக்கி நடத்தி வருகிறது. இம்ப்பால், குவஹாத்தி, பாட்னா, முஜபர்நகர், மதுரை, கயா, ஜான்ஸி, ஜஹானாபாத் போன்ற கணிசமான மக்கள்தொகை கொண்ட நகரங்களில் சுமார் 100 BPO மையங்கள் இயங்கி வருகின்றன. மத்திய அரசின் ‘திறன் இந்தியா’ (Skill India) திட்டமும் டிஜிடல் இந்தியா திட்டமும் இணைந்து இத்தகைய செயல்பாடுகளுக்கு வடிவம் கொடுக்கின்றன.

இந்தியாவிலேயே இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்களால் உருவாக்கப்படும் செயலிகள் (Apps) மிகவும் பிரபலமாகி வருகின்றன. இந்திய அரசால் மின் பணப்பரிவர்த்தனைக்காக (E – payment) உருவாக்கப்பட்ட UPI இடைமுகத்தின் (interface) அடிப்படையில் அமைந்த BHIM செயலி மிகவும் வெற்றிகரமாக நாடெங்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மாதாந்திரப் பணப்பரிவர்த்தனை மதிப்பு 2017 அக்டோபரில் ரூ. 5325 கோடி என்ற அளவில் இருந்து 2018 மார்ச்சில் ரூ. 24,172 என்ற அளவில் குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது.

மருத்துவச் சேவை (e-Hospital), கல்வி ஊக்கத்தொகை சேவை (e-Scholarship), விவசாய நில ஆரோக்கிய அட்டை (soil health cards), ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கான ஜீவன் ப்ரமான் (Jeevan Pramaan) அட்டை, விவசாய விளைபொருள் சந்தைகளை இணைத்தல் (e-NAM linking) என்று  பல துறைகளிலும் டிஜிடல் தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அரசு சான்றிதழ்களை காகித வடிவில் உருவாக்குவதும் பாதுகாப்பதும் மிகுந்த உழைப்பும் செலவும் பிடிக்கும் சமாசாரம் என்பதை உணர்ந்து இவற்றை டிஜிடல் வடிவில் சேமிக்கும் Digi Locker தொழில்நுட்பத்தையும் அரசுத்துறைகள் பரவலாக அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த வருடம் CBSE தேர்வுகள் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும்  தேர்வு முடிவுகள் வரும் முன்பே அவர்களது டிஜிடல் சான்றிதழ்களைப் பெறுவது குறித்த தகவல்கள் அவர்கள் கொடுத்திருந்த மொபைல் / மின் அஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டிருந்தன.

இந்திய ரயில்வே நடத்தும் 88,000 பணியாளர்களுக்கான தேர்வில் காகிதப் பயன்பாடு நீக்கப்பட்டு இனி அது கணினி மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதன் மூலம், உலகிலேயே மிகப்பெரிய ஆன்லைன் தேர்வு என்ற பெருமையை அது பெற்றுள்ளது. இந்தத் தேர்வுக்கான கேள்வி/விடைத் தாள்களுக்காக வெட்டப்படும் 10 லட்சம் மரங்கள் இதனால் காக்கப்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. கேள்வித்தாள் கசிவு ஊழலுக்கான வாய்ப்புகளும் மிகவும் குறைக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் வர்த்தகம் (e commerce) இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் மற்றொரு துறையாகும். அமேசான் போன்ற உலகளாவிய பெருநிறுவனங்கள் இந்தியாவின் மாபெரும் சந்தைக்கு ஈடுதரும் வகையில் தங்களது வணிகத்தை அதிகரித்து வருவது தெரிந்ததுதான். அதோடு கூட, ஏதேதோ ஊர்களில் இருக்கும் பல சிறு/குறு வணிகங்களும் தங்களது பொருட்களை இந்தியா முழுவதும் விற்பதற்கான சாத்தியங்கள் தொழில்நுட்பப் பரவலால் உருவாகியுள்ளன. 

கும்பகோணத்தில் தயாராகும் கலைப்பொருள்களையும், திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வாவையும் எந்தச் சங்கடமுமின்றி இந்தியாவில் எங்கிருந்தும் ஆன்லைனில் வாங்க முடியும் என்பது சாதாரண விஷயமாகி விட்டிருக்கிறது. மாபெரும் மக்கள்தொகையும் பல வேறுபாடுகளும் கொண்ட இந்த தேசத்தில் இணைய வர்த்தகம் மற்ற நாடுகளைப் போல வழக்கமான கடை வர்த்தகத்துடன் பெரும் மோதல்களை உருவாக்காமலே இன்னும் ஒரு பத்தாண்டுகளுக்கு வளர்வதற்கான சூழலும் வாய்ப்பும் உள்ளது என்று இத்துறை சார்ந்த நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

உள்நாட்டு தயாரிப்பு / உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக அரசு முன்னெடுத்து வரும் Make In India திட்டம்  டிஜிடல் இந்தியா திட்டத்துடன் இணைந்து எலக்ட்ரானிக்ஸ் தொழில் துறையில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளது. மொபைல் போன் உபகரணத் தயாரிப்பில் (manufacturing) இன்று இந்தியா உலகில் இரண்டாம் இடத்தில் உள்ளது. Xiomi, Foxconn, Gionee ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பு மையங்கள் இந்தியாவில் இயங்குகின்றன.

2017ம் ஆண்டில் தனது ஒட்டுமொத்த சோலார் மின்சக்தித் திறனை இந்தியா இருமடங்கு அதிகரித்துள்ளது. மெகாவாட் எண்ணிக்கையைக் கணக்கிட்டால் இது அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா ஆகியவை 2017ம் ஆண்டில் தங்கள் நாடுகளில் செய்த சோலார் திறன்  அதிகரிப்பை விடக் கூடுதலானது. இந்தப் பெருவளர்ச்சிக்கு ஈடுதரும் வகையில் சோலார் தகடுகள் உற்பத்தி மையங்களும் நாட்டில் பல இடங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

டிஜிடல் இந்தியா திட்டம் மீதான விமர்சனங்களே இல்லையா என்றால், கட்டாயம் உண்டு. 

அ) வழக்கமான எல்லா அரசுத் திட்டங்களையும் போல,  இந்தத் துறையிலும் அளவுக்கதிகமாக ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் அதிகாரமும் தலையீடும் உள்ளது என்று கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பங்களை விரைவாகப் புரிந்துகொண்டு ஏற்ற விதத்தில் செயல்படுத்தும் சிந்தனைத் திறனும் உத்வேகமும் எல்லா அரசு அதிகாரிகளுக்கும் சம அளவில் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்பதால் சில விஷயங்கள் மந்த கதியிலும் தொய்வாகவும் இயங்குகின்றன. 

ஆ) டிஜிடல் தொழில்நுட்பமும் பொருளாதாரமும் அடிப்படையிலேயே உலகமயமாக்கம் சார்ந்தவை என்பதால் வெளிநாட்டு நிறுவனங்களும் முதலீடுகளும் இத்துறையில் மிக அதிகமாக இருக்கும் என்பது தெரிந்ததுதான். துரித வளர்ச்சிக்காக இவற்றைக் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தி ஊக்குவிப்பது சரிதான். அதே சமயம்,  இந்தியத் தொழில்நுட்ப வல்லுநர்கள், சுயதொழில் முனைவோர், இந்திய நிறுவனங்கள் ஆகியவற்றை ஒரேயடியாக சந்தையில் ஓரங்கட்டும் வகையில் இருக்காமலும் பார்த்துக்  கொள்ளவேண்டியது அரசின் கடமை. குறிப்பாக சீன கம்பெனிகள் உருவாக்கும் பொருட்களும் செயலிகளும் இந்தியாவில் மிகப் பரவலாக அனுமதிக்கப்படுவதில் உள்ள பாதுகாப்பு சார்ந்த அபாயங்களும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.

இ) டிஜிடல் தொழில்நுட்பங்கள், செயலிகள் ஆகியவற்றில் ஆங்கிலமே பெரும்பாலும் கோலோச்சுகிறது, இவற்றில் இந்திய மொழிகளின் தீவிரப் பயன்பாடு எதிர்பார்த்த அளவுக்குச் செம்மையாக இல்லை. இது, குறைந்த ஆங்கிலப் பரிச்சயம் கொண்ட மக்கள் இவற்றைப் பயன்படுத்த தடையாக அமைகிறது

ஈ) பணப்பரிவர்த்தனை சார்ந்த விஷயங்களிலும் வங்கிகள் மற்றும் ஆன்லைன் வர்த்தகர்களின் பாதுகாப்பு அமைப்புகளில் குறைபாடுகளும் பிரச்சினைகளும் உள்ளன. சமூக வலைத்தளங்களிலும் பாதுகாப்புப் பிரச்சினைகள் உள்ளன. பொய்ச் செய்திகளைப் பரப்புதல், தனிநபர் விவரங்களைத் திருடுதல், தனிநபர்களை அச்சுறுத்துதல் போன்ற குற்றங்கள் சமூக வலைத்தளங்களின் மூலம்  நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் தொடர்ந்து அரசால் தீவிரமாகக் கண்காணிக்கப் படவேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். 

கடந்த மூன்றாண்டுகளின் வளர்ச்சி இதே வேகத்தில் செல்லுமானால், அடுத்த 5-6 ஆண்டுகளில் இந்தியாவின் டிஜிடல் பொருளாதாரத்தின் மதிப்பு 1 டிரில்லியன் டாலர் (60,00,000 கோடி ரூபாய்கள்) என்ற அளவில் இருக்கும் என்றும், 50 – 70 லட்சம் பணியாளர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்குவதாக இருக்கும் என்றும் கணக்கிடப் பட்டுள்ளது.

அரசின் கொள்கைகளும் செயல் திட்டங்களும் இந்த மாபெரும் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்ப்போம்.

2 thoughts on “டிஜிடல் இந்தியாவின் மூன்று ஆண்டுகள் | ஜடாயு

  1. மிக அருமையான பதிவு , வாழ்த்துக்கள்

  2. தனியார் தொலைக்காட்சிகளை பரவலாக்கியது வாஜ்பாய் அரசுக்கு கேடாக முடிந்தது. இப்போதைய டிஜிட்டல் இந்தியாவின் விரிவாக்கம் அவ்வகையில் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

Leave a Reply