சிறுவனான நான் எத்தகைய புத்தகங்களை வாசிக்கிறேன் என்பதில் என் வீட்டாரைப் போல அவர்களுக்கும் ஆர்வம் இருந்தது. அவர்களில் பலர் ராஜேஷ் குமாரை வாசிப்பதை ஊக்குவிக்கவும் செய்தனர். ராஜேஷ் குமாரின் எழுத்தில் ஆபாச வர்ணனைகள் இருக்காது என்பது ஒரு முக்கியக் காரணம். அங்குப் பணிபுரிந்தவர்களில் ஒருவர் மட்டும் பாலகுமாரனின் நாவல்களை ஓரிரு வருடங்களுக்குப் பிறகு நான் வாசிக்கத் தொடங்கவேண்டும் என்று கூறியவண்ணம் இருப்பார். ஏனையவர்கள் பாலகுமாரனைக் கொஞ்சம் எச்சரிக்கையோடுதான் அணுக வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அவரது எழுத்தில் இருக்கும் பாலியல் சார்ந்த விஷயங்கள் / மெல்லிய ஆபாசம் இதற்குக் காரணமாக இருக்கக் கூடும். பாலகுமாரன் என்னும் பெயரை நான் கேட்டது இக்காலகட்டத்தில்தான்.
வெகுவிரைவில் அசைவ உணவையும், ராஜேஷ் குமாரையும் விட்டு வெளியே வந்தேன். (ஆனால் இன்றளவும் துப்பறியும் கதைகளின் ரசிகன்தான்.) வாடகை நூல் நிலையம் ஒன்றில் பாலகுமாரனின் நாவல்களைக் கண்டபோது, பழைய உபதேசத்தால் உந்தப்பட்டு அவரது நாவல்களை வாசிக்கத் தொடங்கினேன். பாலகுமாரனின் நாவல்களில் வரும் மாந்தர்களை ஒத்த நபர்களை நான் எனது வாழ்க்கையில் எதிர்கொள்ளத் தொடங்கியிருந்த காலம் அது. கணவனை இழந்த மகளிடம் கறாராக, தனது வீட்டில் குடியிருக்க வாடகை வாங்கும் தாயை நேரில் பார்த்திருக்கிறேன். அப்படிப்பட்ட கதாபாத்திரத்தை பாலகுமாரனின் நாவலிலும் காண முடிந்தது. வித விதமான மனிதர்கள், அவர்களது செயல்கள், குணநலன்கள், சிறுமைகள் ஆகியவற்றை நிஜ வாழ்விலும், பாலகுமாரனின் படைப்புகளிலும் காணத் தொடங்கினேன். நிஜ வாழ்க்கையில் காண்பவற்றைப் படைப்புகளிலும், படைப்புகளில் வாசிப்பதை நிஜ வாழ்விலும் பொருத்திப் பார்த்து மனிதர்களைப் புரிந்து கொள்ள முயன்றேன். அதில் பயன் இருந்ததா இல்லையா என்பதை விட அக்காலகட்டத்தில் எதோ ஒரு வகையான ஆறுதலை இந்த முயற்சி தந்தது எனலாம்.
வேறு ஒரு உபரி பயனும் இருந்தது. பாலகுமாரனின் வார்த்தைகளில் சொல்வது எனில் ‘மனிதர்களைக் கூர்ந்து கவனிக்க’ தொடங்கினேன். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு புறம் அவரது எழுத்துக்களில் இருந்த மிஸ்டிக் தன்மையும் என்னைக் கவர்ந்தது. பிராணயாமம், மந்த்ர ஜபம் போன்ற விஷயங்களைக் குறித்த அவரது எழுத்தைத் தொடர்ந்து வாசிக்கத் தொடங்கினேன். Arthur Avalon அறிமுகமானது அவர் வழியாகத்தான். பாலகுமாரனின் ஆன்மீக, சமூக, சரித்திர நாவல்கள் அனைத்தையும் ஒருமுறையாவது வாசித்திருப்பேன். அவரை விட்டு நான் விலகத் தொடங்கியது அவர் புராணக் கதைகளை மறுஆக்கம் செய்து எழுதத் தொடங்கியபோதுதான்.
பாலகுமாரனையும் அவரது படைப்புகளையும் மதிப்பிடுவது எளிதான காரியமல்ல. மாபெரும் எழுத்தாளர் என்று கூறுவதும் சரி, ஒரே அடியாக வணிக எழுத்தாளர் என்று நிராகரிப்பதும் சரி, அநீதியாகவே முடியும். கடந்த 30 / 40 ஆண்டுகாலத் தமிழ் வாசகனின் வாசிப்புப் பரப்பில் அவரது இடம் முக்கியமானதும் அசட்டை செய்ய முடியாததும் ஆகும்.
பாலகுமாரன் பெரும்பாலும் வணிகப் பத்திரிகையில்தான் எழுதினார். வணிகப் பத்திரிக்கையுலகில் பிழைக்கச் செய்யவேண்டிய பல சமரசங்களை அவர் செய்யவேண்டி இருந்தது என்பதில் மறுப்பு ஏதும் இல்லை. எழுதும் அளவைக் கொண்டே பிழைப்பு என்பதால் அவரது சில படைப்புகள் தட்டையாக, யூகிக்கத் தக்கதாக இருந்தன என்பதிலும் மாற்றுக்கருத்து ஏதும் இல்லை. ஆனால் இந்த நிலை என்பது எழுத்தை முழுநேர தொழிலாகக் கொள்ளும் எந்த எழுத்தாளனுக்கும் ஒரு கட்டத்தில் ஏற்படுவதே. ஆனால் இதை அனைத்தையும் தாண்டி பாலகுமாரனின் படைப்புகளில் ஒரு உயிர் இருந்தது. அதற்குக் காரணம் அவற்றில் இருந்த உண்மைதான். அவரது படைப்புகள் பலவும் உண்மை நிகழ்வுகள்தாம்.
தனது அனுபவத்தையோ, அல்லது தனக்கு தெரிந்தவர் வாழ்வில் நடந்தவற்றையோ ஒரு கதாசிரியன் எழுதும்போது, நடந்த நிகழ்வைச் சொல்வதோடு நிற்காமல், அதன் வாயிலாக ஒரு தரிசனத்தை வழங்க வேண்டும் என்பது இலக்கிய ஆக்கத்தின் அடிப்படை விதி. இது பலருக்கும் பல நேரங்களில் கை கூடுவதில்லை. படைப்பாளி வெறும் கதைசொல்லியாக இருந்தாலும் அக்கதை வாசகனை எதாவது ஒருவகையில் பாதிக்கவே செய்யும். அன்றும் இன்றும் தீவிர இலக்கிய ஆக்கங்களையும் மெய்யியல் நூல்களையும் வாசிக்கிறேன். ஆனாலும் பாலகுமாரனை மறுதலிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. இதில் இன்னொரு வேடிக்கையான விஷயமும் உண்டு. பாலகுமாரன் தன்னை ஒரு இலக்கியவாதியாக முன்வைப்பதை நிறுத்தி வெகுகாலம் ஆகிவிட்டது. (அவர், தாம் ஒரு இலக்கியவாதியை விட மேலான இடத்தில் இருப்பதாகவே கருதிக்கொண்டார். அவரது பெரும்பான்மையான வாசகர்களுக்கும் அத்தகைய எண்ணமே இருந்தது.)
பாலகுமாரன் Arthur Hailey யைப் போல ஒரு குறிப்பிட்ட துறை சார்ந்த தகவல்களைச் சேர்த்து அதனை மய்யமாக வைத்துப் புதினங்களைப் படைப்பதிலும் வல்லவராக இருந்தார். உதாரணம் :பயணிகள் கவனிக்கவும் நாவல். இது அத்தனை எளிதான விஷயம் அல்ல. ஜோ டி க்ரூஸ், தாம் வாழ்க்கை முழுக்கப் புழங்கிய கப்பல் சரக்கு போக்குவரத்தைக் குறித்து எழுதிய அஸ்தினாபுரம் நாவலில், துறை சார்ந்த உலகிற்குள் வாசகனைக் கொண்டுவரமுயன்று தோற்றதை நாம் இங்கே எண்ணி பார்க்கவேண்டும்.
பாலகுமாரன் ஹிந்து மதம் சார்ந்த சடங்குகளையும், வாழ்க்கை முறையையும் வெகு ஜனங்களிடம் கொண்டு சேர்த்தார். திராவிட இயக்கங்களின் தாக்கத்தால், ஜபம் செய்வது, பூஜை செய்வது என்பதைக் குறித்தெல்லாம் பேசுவது கூட நாகரீகமானது அல்ல என்பது பொதுப் புத்தியில் இருந்துவந்த காலத்தில் பாலகுமாரன் வித விதமான ஜெப முறைகளைப் பிரபலப்படுத்தினார். ஹிந்துவாக வாழ்வது பெருமைக்குரியது என்ற எண்ணத்தை உருவாக்கினார். உதாரணத்திற்கு, உச்சிஷ்ட கணபதியை குறித்து பெரும்பாலான தமிழர்கள் தெரிந்து கொண்டது அவரது ‘என் இனிய யக்ஷிணி’ நாவல் வழியாகத்தான். இத்தகைய விஷயங்களில் பாலகுமாரன் நூறு சதவீதம் சரியான தகவல்களைத் தந்தார் என்று கூற முடியாது. இருந்தாலும் இத்துறைகளில் ஆர்வம் உடையவர்களுக்கு அவரது படைப்பு ஒரு வாசலாக இருந்தது. அதே போல பாலகுமாரன் தமது படைப்புகள் வாயிலாக இளைஞர்களை நம்பிக்கையோடு கடுமையாக உழைக்க ஊக்குவித்தார். வேறு எந்த சுயமுன்னேற்ற நூல்களையும் விடச் சிறந்தவை பாலகுமாரனின் நாவல்கள்.
பாலகுமாரனிடம் தனிப்பட்ட முறையில் பழகி பிறகு விரோதியானவர்களும், கசப்படைந்தவர்களும், ஏமாற்றம் அடைந்தவர்களும் ஏராளம் என்று அறிவேன். ஒரு படைப்பாளியைத் தெய்வமாக, குருவாக, வழிகாட்டியாக மாற்ற முயல்பவர்கள் விதி அதுதான். படைப்பிற்கு வெளியே இருப்பவன் படைப்பாளியல்ல, சாதாரண மனிதன்தான் என்னும் உண்மையை உணர்ந்துகொண்டால் இந்தச் சிக்கல் இருக்காது.
பாலகுமாரனின் மறைவு ஒரு குறிப்பிடத்தக்க வெற்றிடத்தை உருவாகியுள்ளது என்பது நிதர்சனம். அதனை நிரப்புவது எளிதல்ல.
*