Posted on Leave a comment

வலம் ஆகஸ்டு 2018 இதழ் – முழுமையான படைப்புகள்


வலம் ஆகஸ்டு 2018 இதழின் படைப்புகளை இங்கே வாசிக்கலாம்.

நாகர் தலைவன் ராமனும் பார்ப்பன ராவணனும் | அரவிந்தன் நீலகண்டன்

சென்னைக் கலகமும் சிப்பாய்க் கலகமும் | ஜெயராமன் ரகுநாதன்

அரசின் புதிய பாடத்திட்ட நூல்கள் | G.E. பச்சையப்பன்

விருப்பாச்சி வீரர் கோபால் நாயக்கர் | கிருஷ்ணன் சுப்பிரமணியன்

அந்தக் கால விளம்பரங்கள்… | அரவிந்த் சுவாமிநாதன்

கால்பந்து உலகக் கோப்பை 2018 | லக்ஷ்மணப் பெருமாள்

மஸ்ரூர் என்னும் புதிர் | வல்லபா ஸ்ரீனிவாசன்

பாஜக ஆட்சியில் தமிழும் தமிழரும் | ஓகை நடராஜன்

நம்பி நாராயணன் என்னும் விஞ்ஞானி | ஆமருவி தேவநாதன்

சில பயணங்கள் சில பதிவுகள் – 11 |  சுப்பு 

நீதிமன்றத்தில் நீட் தேர்வு | ஹரன் பிரசன்னா

Posted on Leave a comment

நீதிமன்றத்தில் நீட் தேர்வு | ஹரன் பிரசன்னா


நீட் தேர்வில் தமிழில் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்களை வழங்கச் சொல்லி உயர்நீதி மன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் செல்வம் மற்றும் பஷீர் அஹம்த் அடங்கிய பென்ச், தற்போது நடக்க இருக்கும் கலந்தாய்வையும் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டிருந்தது. சிபிஎஸ்இ இரண்டு வாரங்களுக்குள் இந்த புதிய மதிப்பெண்களிடன்படி தரவரிசையை உருவாக்கவும் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் இத்தீர்ப்பை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றம் சென்றது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்துள்ளது. தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் தரச்சொல்லிய உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பல கேள்விகளையும் குழப்பங்களையும் தோற்றுவித்துள்ளது.

தமிழில் தேர்வு நடந்த உடனேயே, பல கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்தன. டெக் ஃபார் ஆல் என்னும் அமைப்பு, இக்கேள்விகளில் உள்ள தவறுகளைப் பட்டியலிட்டு, குறைந்தது 196 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளன என்றது. சிபிஎம்மின் டி.கே.ரங்கராஜன் இதை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றார்.

ஏற்கெனவே தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி தேர்வுபெற்ற புதிய மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டால், ஏற்கெனவே தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களின் நிலை என்ன? அவர்களை அப்படியே வைத்துக்கொண்டு, கூடுதலாக புதிய மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளப் போகிறார்கள் என்றால், கூடுதல் இடங்களை அரசு உருவாக்குமா? இப்படியான சிக்கலை உருவாக்கி இருக்கிறது உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு.

இப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் சிபிஎஸ்இயின் பொறுப்பற்ற தன்மைதான். நீட் பிரச்சினையில் தொடக்கம் முதலே சிபிஎஸ்இ அலட்சியமாகவே நடந்துகொண்டுள்ளது. நீட் தேர்வுக்கான மையம் ஒதுக்குதலில் சிபிஎஸ்இயின் எதிர்பாராத பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் மாணவர்களின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் கேள்வித் தாள் பிரச்சினையில் சிபிஎஸ்இ நடந்துகொண்ட விதம் நிச்சயம் பொறுப்பற்றத்தனமே. நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ, தாங்கள் மாநில அரசின் ஒப்புதலுடன் சிறப்பான மொழிபெயர்ப்பாளர்களையே நியமனம் செய்ததாகவும், அதற்குமேல் அதில் பிரச்சினை இருந்தால் தங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்றும் கூறி இருக்கிறது. இது இத்தனை எளிதாகக் கடந்து செல்லவேண்டிய விஷயம் அல்ல.

சிபிஎஸ்இயின் பாடத்திட்டப்படியான புத்தகங்கள் தமிழில் இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஆங்கிலத்துக்கு இணையான தமிழ் வார்த்தைகள் தொடர்ச்சியாகத் தமிழ்ப்பாடத்திட்டப்படியான அரசுப் பாடப் புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் தமிழக அரசுகள் தொடர்ச்சியாகப் பல காலங்களாக மிகக் கவனமாகவே செயல்பட்டு வருகின்றன. சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதப்போவதில்லை என்னும் நிலையில், தமிழில் தேர்வை எதிர்கொள்ளப் போகிறவர்கள் அரசுப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்னும் நிலையில், மொழிபெயர்ப்புக்கான சரியான அறிவியல் வார்த்தைகளை அரசுப் பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ளவற்றை ஒப்புநோக்கித் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும். மிகச் சிறிய விஷயம் இது. இதைச் செய்திருந்தால் இந்தியா முழுமைக்குமான தலைக்குனிவை சிபிஎஸ்இ சந்திக்க நேர்ந்திருக்காது. ஆனால் மாநில அரசு இப்பிரச்சினையைப் பற்றி எக்கருத்தையும் சொல்லாமல் தவிர்த்து வருகிறது.

ஆங்கிலம் மற்றும் மண்டல மொழிகளில் கேள்விகள் தரப்பட்டிருக்கின்றன என்றாலும் இறுதியான முடிவு ஆங்கிலக் கேள்வியே என்ற ஒரு பொறுப்புத் துறப்பை ((Disclaimer) சிபிஎஸ்இ செய்திருக்கிறது. “மொழிபெயர்ப்பில் சந்தேகமான வார்த்தைகள் இருப்பின், அந்தக் கேள்விகளின் பதில்களை ஏற்பதில் ஆங்கில வினாக்களின் பொருள்தான் முடிவில் ஏற்றுக்கொள்ளப்படும். தமிழில் தேர்வை எழுதும் மாணவர்கள், இதை உணர்ந்துகொள்ள வேண்டும்” என்கிறது `பொறுப்புத்துறப்பு!’ இதையும் ஏற்பதற்கில்லை. ஒன்றிரண்டு கேள்விகள் என்றால் சமாதானம் கொள்ளலாம். 49 கேள்விகள் என்றால் அதை எப்படி எடுத்துக்கொள்வது. மொத்தம் 180 கேள்விகள், 720 மதிப்பெண்கள். இதில் 49 கேள்விகள், 196 மதிப்பெண்களில் குழப்பம் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். ஆனால் சிபிஎஸ்இயின் இந்தப் பொறுப்புத் துறப்பை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தடை செய்துள்ளது.

49 கேள்விகளில் என்ன என்ன தவறுகள் நேர்ந்தன என்பதைச் சரியாக அறியமுடியவில்லை. டெக் ஃபார் ஆல் இக்கேள்விகளின் பட்டியலை வெளியிட்டதாகச் செய்திகளில் பார்க்கமுடிந்தது. ஆனால் ஒட்டுமொத்த கேள்விகளின் பட்டியலும் கைக்குக் கிடைக்கவில்லை. டெக் ஃபார் ஆல் அமைப்புக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டேன். மடல் அனுப்பினேன். என்ன தேவைக்காக என்றும் என்னைப் பற்றிச் சொல்லுமாறும் கேட்டார்கள். என் ஜாதகத்தைத் தவிர அனைத்தையும் அவர்களுக்குச் சொன்னேன். இதை அறிந்துகொள்ளவேண்டும் ஒரு முனைப்பில் கேட்பதாகச் சொன்னேன். ஆனால் அவர்களிடம் இருந்து பதிலே இல்லை.

49 கேள்விகள் அனைத்துக்குமே ஏன் மதிப்பெண் தரவேண்டும் என்பதும் கேட்கப்படவேண்டிய கேள்வியே. அனைத்துக் கேள்விகளும் சரியாகக் கேட்கப்பட்டிருந்தால் அனைத்து மாணவர்களும் சரியாக பதில் எழுதி இருப்பார்கள் என்பதை ஏற்கமுடியாது என்பதை உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்த 49 கேள்விகளில் எவையெல்லாம் மாணவர்களைக் குழப்பும் கேள்விகள் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு மட்டும் மதிப்பெண்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கலாம். அல்லது, சரியான கேள்விகளுக்கு மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை மையமாக வைத்து, தவறான கேள்விகளுக்கு மதிப்பெண்களை அளித்திருக்கலாம். ஆனால் நீதிமன்றத்தின் நோக்கம், இது போன்ற ஒரு பொறுப்பற்ற செயலைச் செய்த சிபிஎஸ்இஐப் பதற வைப்பது என்றே தெரிகிறது. அப்படி ஒன்று நடந்தால்தான் இனி எல்லாம் சரியாகச் செயல்படும் என்று உயர் நீதிமன்றம் யோசித்திருக்கிறது. இனி வரும் காலங்களில் சிபிஎஸ்இ இத்தேர்வுகளை நடத்தாது என்றும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

49 கேள்விகளின் பட்டியலில் உள்ள சில கேள்விகள் மட்டும் எனக்குக் கிடைத்தன. இவற்றைப் பார்ப்பதற்கு முன்னர், என் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்பது, மேலதிகப் புரிதலைத் தர உதவலாம். நான் தமிழ் வழிக் கல்வியில் பயின்றவன். அரசுப் பள்ளியில் படித்தவன். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் கனவில் தேர்வில் பங்கெடுத்தேன். உயிரியல் தேர்வின் கேள்வித் தாளின் முதல் பக்கத்திலேயே ம்யூட்டேஷன் என்றால் என்ன என்றொரு கேள்வி இருந்தது. நான் உயிரியலில் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க நினைத்திருந்தவன். இந்தக் கேள்வி எனக்குப் பெரிய பதற்றத்தைத் தந்தது. ஏனென்றால் ம்யூட்டேஷன் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. மரபணு மாற்றம் என்றோ மரபணுப் பிறழ்வு என்றோ தூண்டப்பட்ட மரபணு மாற்றம் என்றோ படித்தேன். (இப்போது நினைவில்லை.) இன்னும் சில கேள்விகள் இப்படி இருந்த நினைவு. தேர்வு முடிந்ததும் மாணவர்கள் அனைவரும் பேசிக்கொண்டது, தவறாக இருந்த கேள்விகளைப் பற்றிய வருத்தத்தைத்தான். இதில் நீட் தேர்வில் பங்குகொள்ளும் மாணவர்களின் வருத்தமும் பதற்றமும் எப்படி இருக்கும் என்று யூகிக்கலாம். எல்லாருமே தேர்வு பெறப்போவதில்லை என்றாலும், இக்கேள்விகளால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மாணவர்களை நாம் புறக்கணிக்கமுடியாது. ஆங்கிலத்தில் இருக்கும் கேள்விகளை அடிப்படையாகக் கொண்டு ஏன் மாணவர்களால் தமிழில் உள்ள தவறுகளையும் மீறிப் புரிந்துகொள்ளமுடியவில்லை என்ற உச்சநீதிமன்றத்தின் கேள்வி அடிப்படையற்றது. ஆங்கில அறிவும், ஒரு குறிப்பிட்ட அறிவியல் பதத்துக்கான தமிழ்க் கலைச்சொல்லறிவும் வேறு வேறானவை. மேலும் நாம் எல்லா மாணவர்களின் தரத்தோடும் சேர்ந்தே, 49 கேள்விகளின் மொழிமாற்றப் பிரச்சினையை அணுகவேண்டும். கொஞ்சம் மாற்றி மொழிபெயர்த்திருந்தாலும் ஏன் மாணவர்களால் அதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை என்பது, நம் பாடத்திட்டம் உருவாக்கும் மாணவர்களைப் பற்றிய வேறொரு பிரச்சினை. ஏன் சிபிஎஸ்இ சரியான மொழிபெயர்ப்பை உருவாக்க முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் இப்போதைய பிரச்சினை.

தமிழ் அல்லாமல் பிறமொழிகளில் எப்படி இக்கேள்விகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, அங்குள்ள மாணவர்கள் எப்படி இதை எதிர்கொண்டார்கள், அங்குள்ளவர்கள் சார்பாக ஏன் வழக்குகள் பதிவாகவில்லை என்பதெல்லாம் கூட நாம் யோசிக்க வேண்டியவையே.

என் பார்வைக்குக் கிடைத்த தவறான தமிழ்க் கேள்விகளை மட்டும் இப்போது பார்க்கலாம். இவை இணையத்தில் கிடைத்த செய்திகளில் இருந்து சேகரிக்கப்பட்டவை.

செங்குத்து என்பது நேர்குத்து என்று கேட்கப்பட்டுள்ளது. செங்குத்து என்றே நான் பள்ளிகளில் படிக்கும் காலம் தொட்டு 25 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது. இதை நேர்குத்து என்று சொன்னால் மாணவர்களுக்குப் புரியும் என்று எதிர்பார்க்கமுடியாது. சிறுத்தை என்பதற்குப் பதிலாக அதன் ஆங்கிலப் பெயரை அப்படியே தமிழில் சீத்தா என்று எழுதி இருக்கிறார்கள். சிறுநீர் நாளம் என்று கேட்காமல் யூரேட்டர் என்று கேட்கப்பட்டிருக்கிறதாம். இயல்பு மாற்றம் என்பது இயல் மாற்றம் என்றும், தாவரங்கள் என்பது ப்ளாண்டே என்றும் கேட்கப்பட்டுள்ளன. இறுதி நிலை என்பது கடை நிலை என்றாகியுள்ளது. புதிய அரிசி ரகம் என்பது புதிய அரிசி நகம் என்று கேட்கப்பட்டுள்ளது. வவ்வால் என்பது வவ்னவால் என்று அச்சிடப்பட்டுள்ளது. பலகூட்டு அல்லீல்கள் என்பது பல குட்டு அல்லீல்கள் என்றாகி உள்ளது. ஆக்டோபஸ் ஆதடபஸ் என்றாகி இருக்கிறது. நீள பரிமாணங்கள் என்பது நீள அலகுகள் என்று வந்திருக்கிறது. விதை வங்கி வதை வங்கி ஆகி இருக்கிறது.
 
இப்படியாகப் பல கேள்விகள் தவறாகவே கேட்கப்பட்டுள்ளன. டெக் ஃபார் ஆல் 49 கேள்விகள் தவறு என்று பட்டியலிட்டாலும், 18 கேள்விகளை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம் என்கிறார்கள் சிலர். ஆனால் உயர்நீதிமன்றம் கேள்விகளின் தவறுகள் எத்தகையவை என்பதற்குள் போகவே இல்லை. உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சரியான ஒன்றே.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாதம் ஒன்றில் பங்கேற்ற கோகுல ஸ்ரீனிவாஸ் இது தொடர்பான முக்கியமான கருத்து ஒன்றை வெளியிட்டார். “இத்தீர்ப்பு சரியான ஒன்றே. ஆனால் ஏன் நீதிமன்றம் இத்தீர்ப்பை முன்பே வெளியிட்டிருக்கக்கூடாது” என்பதுதான் அவரது நிலைப்பாடு. உண்மையில் இத்தீர்ப்பு முன்பே வந்திருக்குமானால் பல குழப்பங்களைத் தவிர்க்க அது உதவியிருக்கக்கூடும். ஆனால் ஏன் சிபிஎஸ்இ உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை தரவரிசைப் பட்டியலை வெளியிடாமல் காத்திருக்கக்கூடாது என்னும் கேள்வியும் நியாயமானதுதான். சிபிஎஸ்இ தான் தவறு செய்ததாகவே நினைக்கவில்லை என்பதுதான் இதற்கான வருத்தத்துக்குரிய பதில்.

நீட் தொடர்பாக ஏற்கெனவே பல பிரச்சினைகள் நிலவி வரும் சூழலில் இப்பிரச்சினை இன்னும் சிக்கலைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சேர்க்கை குறைந்து சிபிஎஸ்இ செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் எல்லாமே தங்கள் வசம் சிபிஎஸ்இ பள்ளிகள் இருக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து அவற்றைத் துவங்கத் தேவையான முயற்சிகளை எடுக்கத் தொடங்கிவிட்டன. நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையிலான புதிய பாடத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில் தமிழில் கேள்விகள் இப்படித்தான் இருக்கும் என்பது நீட் எதிர்ப்பாளர்களுக்கும், மத்திய அரசின் எதிர்ப்பாளர்களுக்கும் பெரிய வசதியாகப் போயிருக்கிறது.

நீட் தேர்வின் குழப்படிகளைக் களைவதில் ஆர்வம் காட்டுவதைவிடக் கூடுதலாக, நீட் தேர்வு ஒழிப்பில் காட்டுகிறார்கள். இனி அது சாத்தியமில்லை என்னும் நிலையையும் அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவே மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வேண்டுமென்றே வஞ்சனை செய்கிறது என்கிற பிரசாரத்தைத் துவங்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நீட் தேர்வெழுத மாணவர்களுக்கு வேறு மாநிலங்கள் ஒதுக்கப்பட்டன என்ற பிரச்சினையிலும் இவர்கள் இதையே முன்வைத்தார்கள். தமிழ்நாட்டை ஒழிக்க ஏன் மத்திய அரசு நீட் தேர்வில் பங்குபெறும் ஆயிரம் மாணவர்களை மட்டும் குறி வைக்கவேண்டும் என்று இவர்கள் யோசிக்கவே இல்லை. இதன்மூலம் தமிழ்நாட்டை என்ன செய்துவிடமுடியும்? தமிழில் தேர்வுக்கேள்விகள் இப்படி வந்திருப்பது பெரிய துரதிர்ஷ்டம், அநியாயம். ஆனால் இதன் பின்னணியில் அலட்சியம் மட்டுமே இருக்கிறதே ஒழிய தமிழ்நாட்டை ஒழிக்கவேண்டும் என்கிற எந்த ஒரு எண்ணமும் இருக்க வாய்ப்பில்லை.

இன்னொரு விஷயமும் முக்கியமானது. மத்திய அரசைக் குறை சொல்பவர்கள், இதே போன்ற தவறுகள் ஒவ்வொரு வருடமும், மாநில அரசு நடத்தும் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகளிலும் நடப்பதைப் பற்றி யோசிக்கவேண்டும். அப்படி யோசித்துப் பார்த்தால், இது நம் மாநில அரசின் எப்போதுமான பிரச்சினை என்பது புரிந்துவிடும்.

மற்ற அரசுகளுக்கும் தற்போதைய மத்திய அரசுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், தவறுகள் நேரும்போது அதைத் திருத்திக்கொள்ள எடுக்கும் நடவடிக்கைதான். இதைப் பற்றி ஏன் மத்திய அரசு பேசுவதில்லை என்ற கேள்விகள் பொருளற்றவை. பேச்சைக் காட்டிலும் செயல்பாடும் தீர்வுமே முக்கியம். இனி சிபிஎஸ்இ நடத்தப்போவதில்லை, நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸிதான் நடத்தும் என்பது, இப்பிரச்சினைகளை ஒட்டி மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு ஒரு முன்னகர்வு. அது எப்படி இயங்கும், அது சிபிஎஸ்இயில் இருந்து எப்படி வேறுபட்டிருக்கும் என்பதெல்லாம் இனிதான் நாம் பார்க்கவேண்டியது. ஆனால் நிச்சயம் காங்கிரஸ் அரசைப் போல ஒரு கண் துடைப்பு அறிவிப்பாக இது இருக்காது என்று நம்பலாம். சிபிஎஸ்இ எதிர்ப்பு மற்றும் மத்திய அரசு எதிர்ப்பு இரண்டையும் ஒன்றாக்கி, வெகுஜன மக்கள் மத்தியில் மத்திய அரசு எதிர்ப்புக்கான விதையை ஊன்றுவதுதான் சிலரின் நோக்கம். இதிலிருந்து விடுபட்டு தமிழக மாணவர்களுக்கு எது தேவை என்பதை மட்டும் யோசிப்பதுதான் சரியான நிலைப்பாடு.

உச்சநீதி மன்றத்தில் வரும் இறுதித் தீர்ப்பு இவ்விஷயத்தில் ஒரு முடிவைக் கொண்டு வரலாம். அதை ஒட்டி இன்னும் குழப்பங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறலாம். ஆனால் இனி வரும் தேர்வுகளில் இப்படியான ஒரு அலட்சியத்தை எந்த அமைப்பும் கைக்கொள்ளாது என்பதை இப்பிரச்சினை உறுதி செய்திருக்கிறது என்று நிச்சயமாக எதிர்பார்க்கலாம்.

Posted on Leave a comment

சில பயணங்கள் சில பதிவுகள் – 11 | சுப்பு


திருந்துவதற்குத் திருப்போரூர்

1971 தேர்தலில் மயிலாப்பூரில் தி.மு.க. அணியின் வேட்பாளர் ம.பொ.சிவஞானம். ஸ்தாபன காங்கிரஸ் சார்பாக மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளராவதற்கு இரண்டு பேரிடையே போட்டி ஏற்பட்டது. ஒருவர் பத்திரிகையாளர் பி.சி. கணேசன். இன்னொருவர் வழக்கறிஞர் டி.என்.அனந்தநாயகி. அந்த நேரத்தில் நானும் என்னோடு சேர்ந்த நண்பர்களும் டி.என். அனந்தநாயகியை வேட்பாளராக அறிவிக்க வேண்டுமென்று கட்சித்தலைமையிடம் வலியுறுத்தினோம். காரணம் ரொம்பச் சாதாரணமானது. டி.என்.அனந்தநாயகி நொச்சிக்குப்பத்திற்கு வந்து தன்னை ஆதரிக்குமாறு எங்களிடம் கேட்டுக் கொண்டார். பி.சி.கணேசன் இந்த வேலையைச் செய்யவில்லை. முடிவில் அனந்தநாயகிதான் வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டவுடன் நாங்கள் உற்சாகமாக வேலை செய்தோம்.

பிற்காலத்தில் பி.சி.கணேசன் எழுதிய புத்தகங்களை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எழுத்தில் நேர்மையும் அறிவின் ஆளுமையும்கொண்ட ஒருவருக்கு எதிராகச் செயல்பட்டுவிட்டோமே என்பதை நினைத்து வருந்தினேன்.

இந்தத் தேர்தலில் துக்ளக் பத்திரிகை வெளியிட்ட கார்ட்டூன்கள் தி.மு.க. எதிர்ப்பாளருக்குச் சிறந்த போர்க்கருவியாகப் பயன்பட்டது. ஒருமுறை அட்டைப் படத்தில் ம.பொ.சி. அவர்கள் பயாஸ்கோப் பார்த்துவிட்டுக் குதிப்பதுபோல் வரையப்பட்டிருந்தது. ராஜேந்திரன் மேலே குறிப்பிட்ட கார்ட்டூனை நொச்சிக் குப்பத்திற்கு எதிரிலிருந்த கார்ப்பரேஷன் பள்ளியின் சுவரில் வரைந்தான். பீச் ரோடிலிருந்த இந்த கார்ட்டூனை அந்தப் பக்கம் போகிறவர்களெல்லாம் பார்த்துக்கொண்டே போனார்கள். கோட்டைக்குப் போகின்ற மந்திரிகளும், எம்எல்ஏக்களும் கூடப் பார்த்தார்கள். விளைவு: மயிலாப்பூர் இன்ஸ்பெக்டர் எங்களைத் தேடி வந்து எச்சரித்தார். பீச் ரோட்டில் வண்டி ஓட்டுபவர்களின் கவனத்தைத் திருப்பும்படியாக எந்த பேனரும் வைக்கக்கூடாது என்று அவர் சொல்லிவிட்டார். கார்ப்பரேஷன் சுவர் வெள்ளையடிக்கப்பட்டு கார்ட்டூன் மறைக்கப்பட்டது. இதை எதிர்த்து ஏதாவது செய்ய வேண்டுமென்ற உணர்ச்சி எங்களுக்கு உண்டாயிற்று. இந்த மாதிரி சமயங்களில் என் மூளை அபாரமாக வேலை செய்யும்.

என்னுடைய ஆலோசனைப்படி கார்ப்பரேஷன் சுவரைவிடப் பெரியதாக ஒரு மரப்பலகை தயார் செய்யப்பட்டது. அதை நகர்த்திச் செல்லுவதற்கு வசதியாக கீழே சக்கரங்கள் பொருத்தப்பட்டன. முந்தைய கார்ட்டூனைவிட அழகாகப் பெரியதாக அதே கார்ட்டூனை இந்தப் பலகையில் ராஜேந்திரன் வரைந்தான். வரையப்பட்ட கார்ட்டூன் பலகை கோலாகலமாக ஊரைச் சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்ப்டது. மக்கள் கார்ட்டூன் பலகைக்கு ஆரத்தி எடுத்தார்கள். பூசணிக்காய் சுற்றி திருஷ்டி கழித்தார்கள். பட்டாசு வெடித்தார்கள். தகவல் அறிந்த இன்ஸ்பெக்டர் வந்தார். ஆனால் ஜனங்களின் உற்சாகத்தை எதிர்த்து அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை மட்டும் குறித்துக் கொண்டார்.

அடையாரிலிருந்த ஸ்தாபன காங்கிரஸ் ஆதரவாளர்கள் ஒரு பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். காமராஜர் பேசிக் கொண்டிருந்தார். பேச்சுக்கு இடையே அரசியல்வாதிகளுக்கு ஒழுக்கம் இல்லை என்றும், மந்திரிகளில் ஒருவரைத் தவிர மற்றவர் எல்லாம் இரண்டு பெண்டாட்டிக்காரர்கள் என்றும் கூறினார். கீழே உட்கார்ந்திருந்த ஒருவன் எழுந்து ‘அது, ஆதித்தனார்’ என்று கூவினான். ‘எலே எனக்குத் தெரியாதா? உட்காருலே. பொதுக்கூட்டத்திலே பேரைச் சொல்லக்கூடாதுங்கறது பண்பு. நீ சும்மாயிரு’ என்று சத்தம்போட்டு அவனை அடக்கிவிட்டார். அரசியல்வாதிகளில் காமராஜர் வித்தியாசமானவராயிருந்தார். பேச்சாளர்களில் யாராவது தரக்குறைவாகப் பேசினால் அவரை அங்கேயே கண்டிப்பார்.

தேர்தலன்று சென்னை நகரில் திமுகவினரின் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அடையாரில் என்.எஸ்.வரதாச்சாரி என்ற பழம்பெரும் தியாகி, வித்தகன் என்ற தி.மு.க. தொண்டரால் தாக்கப்பட்டார். மயிலாப்பூர் மாட வீதிகளில் சோடாபுட்டி வீச்சு. பிராமணர்களை ஓட்டுப் போடாமல் தடுக்க வேண்டுமென்பதுதான் சதித்திட்டம். தேர்தலன்று நொச்சிக்குப்பத்திலிருந்த என்னைச் சுற்றி திமுகவினரின் வியூகம். எனக்கு ஆபத்து வரவிருந்தபோது நண்பன் ஒருவனால் காப்பாற்றப்பட்டு அங்கிருந்து தப்பித்தேன்.

தேர்தல் முடிவு வந்தவுடன் திமுகவின் கை ஓங்கிவிட்டது. நொச்சிக்குப்பத்திலிருந்த காங்கிரஸ்காரர்களை போலீசாரும் திமுககாரர்களும் சேர்ந்து தாக்கினார்கள். ஒருமுறை திமுககாரர்களிடம் ராஜேந்திரன் வசமாகச் சிக்கிக் கொண்டான். நான்கு பாட்டில்களை அவன் தலையிலேயே அடித்து உடைத்தார்கள். முகத்தில் வழிந்த ரத்தம் சட்டையில் இறங்கி இரத்தமயமாகிவிட்டது. ஆள் பிழைக்கமாட்டான் என்று நினைத்து அவனை அனுப்பிவிட்டார்கள்.

பலத்த காயங்களோடு வீட்டுக்கு வந்த ராஜேந்திரனை உடனடியாக இராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு போகும்படி சொல்லி அனுப்பினோம். செலவுக்குப் பயந்துகொண்டு பஸ்ஸில் போக வேண்டாம் என்றும் சைக்கிள் ரிக்ஷாவில் போக வேண்டும் என்றும் சொல்லி அனுப்பினோம்.

ராஜேந்திரன் என்னுடைய வார்த்தையை மீறவில்லை. இரத்தக்கறையோடு சைக்கிள் ரிக்ஷா ஸ்டாண்டுக்கு போயிருக்கிறான். அவனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சைக்கிள் ரிக்ஷாக்காரர் மயக்கம் அடைந்துவிட்டார். அவரை ரிக்ஷாவில் உட்கார வைத்து அதை ஓட்டிக்கொண்டு இராயப்பேட்டை மருத்துவமனை வரை போய்விட்டான் ராஜேந்திரன். அங்கே இரண்டு பேருக்கும் சிகிச்சை செய்யப்பட்டது. திரும்பி வரும்பொழுது சைக்கிள் ரிக்ஷாவை யார் ஓட்டி வந்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

இதே நேரத்தில் அடையாரில் தங்கியிருந்த சில மலேசிய மாணவர்களுக்கும், எங்கள் கோஷ்டிக்கும் மோதல் ஏற்பட்டு, பெரிய தகராறாக முற்றியது. வெகு நாட்களாக என்னைக் குறிவைத்திருந்த போலீஸார் இந்த வழக்கு விசாரணைக்காக ஸ்டேஷனுக்கு அழைத்துச்சென்று நன்றாக விசாரித்தார்கள். அவர்கள் என்னை அடித்ததைவிட எதிர்க்கோஷ்டியாரின் முன்னிலையில் இது நடந்தது என்பது அதிக வேதனையைக் கொடுத்தது. காங்கிரஸ் நடவடிக்கைகளுக்காக என்னை மயிலாப்பூரில் கண்காணித்து வந்த இன்ஸ்பெக்டர் பிர்லா போஸ் அப்போதுதான் அடையாருக்கு மாற்றலாகி வந்திருந்தார். அவருடைய கை வலிமையைக் காட்டி என் மூக்கெலும்பு உடைக்கப்பட்டது. உடலெங்கும் ஊமைக்காயம். ஐந்து போலீஸார் அரை மணி நேரம் அடித்தார்கள். பிறகு ஜட்டியோடு லாக்கப்பில் தள்ளப்பட்டேன். வெகு நேரம் கழித்து நயினா வந்து ஜாமீனில் அழைத்துப் போனார்.

போலீசாரும் திமுகவினரும் மட்டும்தான் வன்முறையைக் கையிலெடுத்தார்கள் என்று சொல்ல முடியாது. நாங்களும் எங்கள் பங்கைக் குறைவில்லாமல் செய்தோம். நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த பலராமன் இதில் ஸ்பெஷலிஸ்ட். கோபம் வந்தால் போலீஸ்காரருடைய சட்டையைப் பிடித்து அப்படியே தூக்கிவிடுவார். அவரிடமிருந்து போராடி போலீஸ்காரரை மீட்பதற்கு ஒரு படையே தேவைப்படும். பிறகு விசாரணைக்கு என்று அழைத்துப்போய் பலராமனை லாக்கப்பில் வைத்து போலீசார் ரவுண்டுகட்டி அடிப்பார்கள். ஆனால் அவர் அஞ்சமாட்டார். வெளியே வந்தவுடன் அடுத்தமுறை எந்தப் போலீஸ்காரர் மாட்டுவார், எப்பொழுது சட்டையைப் பிடித்துத் தூக்கலாம் என்பதில் கவனமாக இருப்பார்.

பொதுவாக அரசியல் களத்தில் அதிகம் அறியப்படாத ஒரு விஷயத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். 1967 தேர்தல் வரை திமுகவைக் கடுமையாக எதிர்த்து வந்தவர் ஈ.வெ.ரா. அதனால் அவருடைய இயக்கத் தோழர்களும் திமுகவிற்கு எதிராகவும், காங்கிரஸுக்கு ஆதரவாகவும் செயல்பட்டார்கள். பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஈவெரா தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு திமுகவிற்கு ஆதரவாகப் பேசினார். எழுதினார். அவருடைய இயக்கத் தோழர்களில் பலருக்கு இது சரியாகப் படவில்லை. அவர்கள் காங்கிரஸ் ஆதரவு என்ற நிலையிலிருந்து மாறவில்லை. இப்படிப்பட்டவர்கள் நொச்சிக்குப்பத்திலும் இருந்தார்கள். தமிழ்நாடெங்கும் இந்தப் பிரிவு தொடர்ந்தது. இவர்களால் தீவிர திமுக எதிர்ப்பும் ஓரளவு பிராமண எதிர்ப்பும் என்கிற விநோதமான நிலைப்பாடு தமிழக காங்கிரஸில் ஒரு பகுதியாக இன்றளவும் தொடர்கிறது.

வன்முறையில் எங்களுடைய பங்களிப்பைப் பற்றிச் சொல்கிறேன். என்.எஸ்.வரதாச்சாரி என்ற தியாகி வித்தகனால் தாக்கப்பட்டதில், எங்களுக்கு ரொம்பவும் வருத்தம். வெள்ளைக்காரன் ஆட்சியில் இருந்தபொழுது சைமன் கமிஷனை எதிர்த்து காங்கிரஸ்காரர்கள் போராட்டம் நடத்தினார்கள். சென்னை பாரிமுனையில் நடந்த இப்போராட்டத்தில் போலீஸ்காரர்கள் துப்பாக்கியை நீட்டியபோது வரதாச்சாரி சட்டையைக் கிழித்து மார்பைக் காட்டினார். அன்று முதல் அவர் சட்டை அணிவதில்லை. நோ ஷர்ட்டு வரதாச்சாரி என்று புகழடைந்தார். இப்படிப்பட்ட தியாகியை தாக்கிவிட்டார்களே, அதற்குப் பதிலாக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குப் பலமாக இருந்தது.

வித்தகனோடு பழக்கம் உள்ள சிலர் எனக்கு நண்பர்களாக இருந்தார்கள். அவர்களோடு பேசி ஒரு ஏற்பாடு செய்தேன். ‘திருப்போரூருக்குப் பக்கத்தில் இளநீரில் கலந்து சாராயத்தை விற்கிறார்கள். அது அற்புதமாக இருக்கும்’ என்றுசொல்லி வித்தகனை ஒரு காரில் ஏற்றி அழைத்துப் போனார்கள்.

அந்தக் காலகட்டத்தில் சென்னைக்கும் திருப்போரூருக்கும் இடையே அதிகப் போக்குவரத்து இருக்காது. முருகன் கோயிலில் விசேஷமான நாட்களில் மட்டும் அந்த வழியில் பஸ் போக்குவரத்து இருக்கும். நான் ஸ்கெட்ச்சு போட்டுக் கொடுத்தபடி சம்பவ இடத்தில் வித்தகன் தாக்கப்பட்டார். சட்டை பேன்ட்டை கழற்றிவிட்டார்கள். செருப்பும் பறிக்கப்பட்டது. உள்ளாடை மட்டும்தான் பாக்கி. ஆசை தீர அடித்துவிட்டு, வித்தகன் கையில் ஒரு பீடிக்கட்டையும் வத்திப்பெட்டியையும் கொடுத்துவிட்டு நண்பர்கள் காரில் ஏறி சென்னைக்கு வந்துவிட்டார்கள்.

உடலில் காயங்களோடு பீடியைப் புகைத்தபடியே ஊருக்கு வருவதற்கு வித்தகன் படாதபாடு பட்டிருப்பார். எண்ணாததை எல்லாம் எண்ணியிருப்பார். அதன் விளைவாக அவர் திருந்திவிடுவார் என்பதுதான் என்னுடைய வரைவுத்திட்டம். அது நிறைவேறிவிட்டது.


(தொடரும்…)

Posted on Leave a comment

நம்பி நாராயணன் என்னும் விஞ்ஞானி – ஆமருவி தேவநாதன்


இந்திய விண்வெளித்துறையை அழிக்க நடந்த அமெரிக்கச் சதியில் பங்குகொண்டு, மாலத்தீவைச் சேர்ந்த முன்னாள் பெண் உளவாளிகள் மூலம் இஸ்ரோவின் தன்னிகரில்லா விஞ்ஞானிகள் இழிவுபடுத்தப்பட்ட நிகழ்வை விவரிப்பதே ‘Ready to fire’ என்னும் நூல். எழுதியவர் நம்பி நாராயணன் என்னும் ஏவுகணை விஞ்ஞானி.

இந்த நிகழ்வை, கேரளத்தின் அன்றைய காங்கிரஸ் முதலமைச்சர் கருணாகரனை வீழ்த்த ஏ.கே.அந்தோணி மற்றும் உம்மன் சாண்டி பயன்படுத்திக் கொண்டதும், அதற்காக தேசத்தின் மிகப்பெரிய திட்டத்தையே வீழ்த்தத் துணிந்ததும், அந்த முயற்சியில் கேரளக் காவல்துறையை வெறும் ஏவல் வேட்டை நாய் போல் பயன்படுத்தியதும், இண்டெலிஜன்ஸ் பீரோ என்னும் மத்தியப் புலனாய்வுத் துறையில் அமெரிக்க ஊடுருவலும் பக்கத்துக்குப் பக்கம் அதிர வைக்கின்றன.

க்ரயோஜெனிக் ராக்கெட் இஞ்சின் தயாரிக்க இந்தியா முயல்கிறது. அதற்கு ரஷ்யா உதவுகிறது. அந்த முயற்சியில் நம்பி நாராயணன் முன்னின்று செயல்படுகிறார். அமெரிக்கா தனது க்ரயோஜெனிக் இஞ்சினை மிக அதிக விலைக்கு விற்க முயல்கிறது (935 மில்லியன்). இந்தியா மறுத்து ரஷ்யாவிடம் 235 மில்லியனுக்கு வாங்குகிறது. இதனைத் தடுக்க இயலாத அமெரிக்கா மத்திய உளவுத்துறையை ஊடுருவி, இந்திய அதிகாரிகளை விலைக்கு வாங்கி, இந்திய விண்வெளி அறிஞர்களுக்குக் களங்கம் ஏற்படுத்தி, இதற்கு ஒரு மாநில அரசின் உட்கட்சிப் பூசலைப் பயன்படுத்திக் கொள்கிறது. தனது நற்பெயருக்கு ஏற்பட்ட களங்கத்தைத் துடைக்க விஞ்ஞானி நம்பி நாராயணன் பட்ட பாட்டை விவரிக்கிறது இந்நூல்.

எளிமையான குடும்பப் பின்னணி கொண்ட நம்பி நாராயணன், சிறு வயதில் தந்தை தாய் இருவரையும் இழந்தது, பொறியாளராவது, கரும்பாலையில் பணியில் சேருவது, பின்னர் இந்திய விண்வெளிக் கழகத்தில் இணைந்து பணியாற்றுவது என்று துவங்கும் நூல், நம்பியின் வாயிலாக அந்நாளைய விண்வெளி ஜாம்பவான்களான ஹோமி பாபா, விக்ரம் சாராபாய் முதலிய நட்சத்திரங்களை நமக்கு அடையாளம் காட்டுகிறது. விக்ரம் சாராபாயின் தன்னிகரில்லாத் தொண்டு, எப்பாடுபட்டாகிலும் பாரதத்தை விண்வெளித் துறையில் சிறந்த நாடாக்க வேண்டும் என்ற அவரது தணியாத தாகம், அதே உத்வேகத்தைத் தன்னுடன் பணிபுரிபவர்களுக்கும் ஏற்படுத்துவது என்ற அவரது எண்ணம் முதலியன பெருவியப்பளிப்பன.

நம்பி நாராயணன் தனது கதையைச் சொல்லும் வழியே இந்திய விண்வெளித்துறையின் வரலாற்றையும் சொல்லிச் செல்கிறார். தும்பாவில் Sounding Rocket ஏவப்பட்ட காலம் தொட்டு க்ரயோஜெனிக் இஞ்சின் பொருத்திய ராக்கெட் ஏவும் காலம் வரை இந்திய விண்வெளித்துறையின் அடுக்கடுக்கான வளர்ச்சியையும், ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் சந்தித்த இடையூறுகளையும் வெற்றியடைவதற்கு எடுத்துக் கொண்ட சிரமங்களையும் விறுவிறுப்பான திரைப்படம் போன்று விவரித்துச் செல்கிறது நூல்.

இந்நூலின் மூலம் நம்பி மற்றும் அவருடன் பணியாற்றிய பொறியாளர்கள் முதல் களப்பணியாற்றிய வெல்டர், பிட்டர் முதலியோர் வரை அத்தனை ஊழியர்களின் பங்களிப்பும் ஆவணப்படுத்தப்படுகிறது. ஒருபுறம் சாராபாய், சத்திஷ் தவான் என்று ஜாம்பவான்கள், மறுபுறம் அதிகார அடுக்கில் கீழ் நிலையில் உள்ள ஊழியர்கள் என்று இரு வேறு நிலைகளில் உள்ள அனைவரும் பாரதத்தின் உன்னதம் கருதியே செயல்பட்டனர் என்பதைப் பார்க்கும்போது, தன்னலம் சிறிதும் அற்ற தியாகிகளைக் கொண்ட நமது பாரதத்தாயின் உன்னதத்தை உணரமுடிகிறது.

ஒரு வெல்டரை பிரான்ஸிற்கு அழைத்துச் செல்கிறார் நம்பி. அங்கு மிகத் திறமையுடன் செயலாற்றுகிறார் அந்த வெல்டர். அவரது திறமையைப் பார்த்து பிரான்ஸ் நிறுவனம் அவரை வேலைக்கு எடுத்துக் கொள்ள முயல்கிறது. வெல்டர் மறுத்துவிடுகிறார். நான் பாரதத்தின் சேவையையே விரும்புகிறேன் என்று மீண்டும் பாரதம் திரும்பிவிடுகிறார். வந்த சில ஆண்டுகளில் இறந்துவிடுகிறார். அவரது இறுதிச் சடங்கில் கலந்துகொண்ட நம்பி அவரது வீட்டைப் பார்க்கிறார். மிகவும் எளிமையான வீடு. அதுவும் கடனில் உள்ளது. நம்பி நினைப்பது – இவர் பிரான்ஸின் வேலையை ஒப்புக் கொண்டிருந்தால் இந்த வீட்டை விடப் பெரிய அளவிலான பத்து வீடுகளைக் கட்டியிருக்க முடியுமே என்று வருந்துகிறார்.

இதைப் போலவே மற்றொரு பொறியாளர் பிரான்ஸ் வருகிறார். வந்தவுடன் பாரதத்தில் அவரது சிறு குழந்தை இறந்துவிடுகிறது. அந்தச் செய்தியை அவரது தந்தையாரும் நம்பியும் மறைத்துவிடுகின்றனர். குழந்தை இறந்த செய்தி தெரியாமல் பொறியாளர் பணியாற்றுகிறார். நம்பியும் பொறியாளரும் வாரயிறுதி நாட்களில் கடைகளுக்குச் செல்லும் போது பொறியாளர் தன் குழந்தைக்குப் பொம்மைகள் வாங்குகிறார். நம்பிக்கு அடக்கமுடியாத துக்கம். இறுதியில் பொறியாளர் பணி முடிந்து பாரதம் திரும்பியவுடன் செய்தியைத் தெரிவிக்கச் செய்கிறார் நம்பி. பொறியாளரும் நிதர்சனத்தை உணர்ந்து மேலும் உத்வேகத்துடன் பணியாற்றுகிறார். இப்படிப் பல தியாகங்கள், கண்ணீர் பனிக்கும் நிகழ்வுகள் என்று விரிகிறது நூல்.

தொழில்நுட்பப் பணியாளர்கள்தான் பாரதத்தாயின் உன்னதத்திற்கு உழைத்தார்களா என்னும் கேள்வி எழலாம். அந்நிலையில் டி.என்.சேஷன் என்னும் பேராளுமை முன்னின்று ‘நிர்வாகத்தினரும் அவ்வாறே’ என்று சொல்கிறது. பாரதத்திற்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையிலான நெருடலான ஒப்பந்தம் தயாரித்தல், பிரான்ஸ் நாட்டின் விண்வெளித்துறையின் தலைமையுடன் மோதுதல், பிரதமரின் ஆணையைப் பெற்று மஹேந்திரகிரியில் விண்வெளித்துறைக்கு இடம் வாங்கிக்கொடுத்தல், ஊழல் புகார்களை விசாரித்தல் என்று பல துறைகளிலும் டி.என்.சேஷன் தனது அறிவுத்திறத்தையும் தேசபக்தியையும் பறைசாற்றுகிறார். நூலிற்கு முன்னுரையும் அளித்துள்ளார் சேஷன்.

நூல் வழியே விண்வெளித்துறை பற்றி நமக்குத் தெரியவருவன:

* மற்ற துறைகள் போன்றே போட்டி, பொறாமை, பழிவாங்குதல் முதலியவற்றால் சூழப்பட்டுள்ளது

* திறமை, கடின உழைப்பு, துறை சார்ந்த நுண்ணறிவு பெற்ற பொறியாளர்கள்

* உட்பூசல்களால் ஏற்படும் நேர, உழைப்பு இழப்புகள்

* பொறியாளர்களும் ஊழியர்களும் கத்தி மேல் நடப்பது போன்று மிகக் கவனத்துடன் நடக்க வேண்டிய நிர்ப்பந்தம்

* இஸ்ரோவில் உள்ள இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளின் தொழில் நுட்ப அறிவின்மை

நூல் வழியே வேறு பல செய்திகளும் கிட்டுகின்றன. அவை: காங்கிரஸ் ஆட்சியாளர்கள் தங்களின் பதவி வெறியில் பாரதத்தைப் பலிகொடுக்கத் தயங்க மாட்டார்கள். தமிழகத்தில் நிறுவப்பட இருந்த ராக்கெட் ஏவுதளம் ஆந்திர மாநிலத்திற்குச் சென்றதற்கு அண்ணாதுரையின் அரசே காரணம்.

எம்.ஜி.ஆர். நமது விண்வெளித்துறைக்குச் செய்த நன்மையையும் விவரிக்கிறார் நம்பி.

காமராஜர் பற்றிய ஒரு நிகழ்வு மனதை உலுக்குகிறது. நம்பி நாராயணன் கல்லூரியில் படிக்கும்போது காமராஜர் தமிழக முதல்வர். அவரைக் கல்லூரியின் விழாவிற்கு அழைக்க விரும்புகிறார் நம்பி. திராவிடத் தாக்கம் மாணவர்களிடையே இருந்த நிலையில் பலர் ஏளனம் செய்கின்றனர். பொறியியல் கல்லூரியில் அறிஞர்களை அழைத்துப் பேச வைக்க வேண்டும். காமராஜர் 6ம் வகுப்பே பயின்றுள்ளார். தற்போது ‘அறிஞர்’ என்று வலம் வரும் அண்ணாதுரையை அழைப்பதே சரி என்று பேசுகிறார்கள். நம்பிக்குக் காமராஜரை அழைக்க விருப்பம். அவரைச் சந்திக்கிறார்.

‘தம்பி, சரியா வருமாண்ணேன். நான் படிக்கவே இல்ல. நீங்களோ இஞ்சினியரிங் காலேஜ் பசங்க. நல்லா படிச்சவங்களைக் கூப்புடுங்கண்ணேன்’ என்கிறார் முதலமைச்சர் காமராஜர்.

நம்பி வற்புறுத்தவும், காமராஜர் இசைகிறார். பேச்சு பெரும் வரவேற்பைப் பெறுகிறது.இப்படியும் ஒரு முதலமைச்சர் இருந்துள்ளாரா என்று எண்ண வைக்கும் நிகழ்வை அளிக்கிறார் நம்பி நாராயணன். இதற்கு நேர்மாறான அரசு பற்றிய செய்தியும் இடம்பெறுகிறது.

விக்ரம் சாராபாய் கன்யாகுமரி அருகில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க விரும்புகிறார். அது கிழக்குக் கடற்கரையில் அமைவது, பூமியின் சுழற்சியால் ராக்கெட்டுக்கான எரிபொருள் சேமிப்புக்கு உதவும் மற்றும் அருகில் கடல் இருப்பதால் பாதுகாப்பானதும் என்பதால். தமிழக முதலமைச்சரைச் சந்திக்கக் காத்திருக்கிறார். முதல்வருக்கு முதுகுவலி. எனவே தனது அமைச்சரை அனுப்புகிறார். அமைச்சர் ‘கைத்தாங்கலாக’ எடுத்து வரப்படுகிறார். (தாமதமாக) வந்தவர் வாய்குழறல் + ஒப்புக்கொள்ள முடியாத கடுமையான ‘எதிர்பார்ப்பு’களை முன்வைக்கிறார். சாராபாய் வெறுத்துத் திரும்புகிறார். ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா என்னுமிடத்தில் உள்ள 23,000 ஏக்கர் தீவை இஸ்ரோவிற்கு அளிக்கிறது. விண்வெளித் தளம் அங்கு அமைகிறது.

அப்போதைய முதலமைச்சர் அண்ணாதுரை. ‘தூக்கி’ வரப்பட்ட அமைச்சர் மதியழகன்.

மற்றொரு சமயம் தமிழகக் கடற்கரையோரக் கிராமத்தை விட்டுத்தரச் செய்ய அவ்வூரில் உள்ள தேவாலயப் பாதிரியார் ஒப்புக்கொள்வதும், பின்னர் பின்வாங்குவதும் தற்காலத்தை நினைவுபடுத்துவன.

மிக அதிகமான தொழில் நுட்ப விவரங்கள் கொண்ட இந்த நூல் பல நேரங்களில் மீண்டும் மீண்டும் சொன்னதையே சொல்வதாகவும் அமைந்துள்ளது ஒரு குறையே.

இந்த நூலைப் படித்த பின் பாரதீயர்கள் நினைவில் கொள்ள வேண்டியது: ஒவ்வொரு முறை வெற்றிகரமாகப் பறக்கும் இஸ்ரோவின் ராக்கெட்டிலும், அதன் பின்னால் பல பொறியாளர்களின் உழைப்பு மற்றும் தியாகம், பல வெளி நாடுகளின் சதிகள், அவற்றை முறியடித்த இந்திய விஞ்ஞானிகளின் திறமை முதலியன பயணிக்கின்றன என்பதே.

Posted on Leave a comment

பாஜக ஆட்சியில் தமிழும் தமிழரும் | ஓகை நடராஜன்


2014ம் ஆண்டு பதவியேற்ற பாஜக அரசு அந்த ஆண்டு தொடங்கி இன்று வரை தொடர்ந்த ஆதரவையும் நலன்களையும் தமிழ்நாட்டுக்கும் தமிழருக்கும் தமிழுக்கும் அளித்து வந்திருக்கிறது.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிகழ்வு, சென்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து கொண்டிருந்தவரை தொடர்ந்துகொண்டிருந்தது. ஆனால் பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஏதோ மந்திரம் போட்டதுபோல் அது நின்று போனது. அது யார் போட்ட மந்திரம்? இந்தச் செயல்பாட்டை அங்கீகரிக்கவோ பாராட்டவோ தமிழகத்தின் ஊடகப் பரப்புரை பலாத்காரத்தினால் அனுமதிக்கப்படவில்லை. கச்சுத் தீவு விவகாரத்தில், இந்தியாவுக்குத் துரோகம் இழைத்த முந்தைய அரசாங்கத்தின் செயல்பாடுகளிலிருந்து, தமிழ்நாட்டு விவகாரங்களில் மிகுந்த பொறுப்புடனும் அக்கறையுடனும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு புதிய வீரிய அரசாங்கம் நமக்கு வாய்த்திருக்கிறது. வாய்த்திருந்தாலும் அது உணரப்பட்டதாகவே தெரியவில்லை. இன்னொரு மாயமும் நிகழ்ந்தது. இலங்கை அரசால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு மரணத்தின் வாயிலில் நாட்களை எண்ணிக் கொண்டிருந்த ஐந்து தமிழ் மீனவர்களை, 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் உயிரோடு மீட்டு அவர்களுக்குப் புணர்வாழ்வு கொடுத்தது பாஜக அரசு. நமது பிரதமர் மோடி நேரடியாகத் தொலைபேசியில் இலங்கைப் பிரதமரை தொடர்புகொண்டு சட்டென இதைச் சாதித்தார். ஆனால் அப்போது சிலரால் உண்மையாகவும் பலரால் ஒப்புக்காகவும் நன்றி தெரிவிக்கப்பட்டு அத்தோடு மறக்கடிக்கப்பட்ட நிகழ்வாக இது இருக்கிறது.

தமிழக அரசியலின் உயிர்நாடியாக சில உதிரிக் கட்சிகளாலும் முதன்மைப் பிரச்சினைகளில் ஒன்றாக மாநிலக் கட்சிகளாலும் எடுத்தாளப்பட்ட ஒரு பிரச்சினை இலங்கை இனப் பிரச்சனை. தொப்புள் கொடி உறவு என்றெல்லாம் ஊரை ஏமாற்றி தமிழ்நாட்டில் அரசியல் செய்கின்ற நீலிக்கண்ணீர் அரசியல்வாதிகளுக்கிடையில் உண்மையாகவும், ஆத்மார்த்தமாகவும், அங்குள்ள மக்களை அணுகியவர் பிரதமர் மோடி மட்டுமே. 14-03-2015 பாரதப் பிரதமர் தனது இலங்கைப் பயணத்தின் முதன்மை நிகழ்வாக யாழ்ப்பாணம் சென்றார். யாழ்ப்பாணத்துக்கு வருகை தருகின்ற முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்தான். வடக்கு மாகாணத்தில் இந்திய ஆதரவுத் திட்டங்களைத் தொடங்கி வைத்ததுடன் அப்பகுதி மக்களிடம் உரையாடியதன் மூலம் அவர்களுக்கும் தமது ஆதரவை உறுதிப்படுத்தினார். ரயில் பாதைத் திட்டம், வீடமைப்புத் திட்டம் போன்றவற்றைத் திறந்து வைத்துப் பேசினார். இலங்கைத் தமிழர்கள் அமைதியாகவும் கௌரவமாகவும் சம உரிமைகளுடன் வாழ அதிகமான நிர்வாக நடவடிக்கைகளை இலங்கை அரசு எடுக்க வேண்டும் என்பதை மோடி வலியுறுத்தினார். யாழ்ப்பாணத்தில் ஓர் இந்திய எதிர்ப்பு மனநிலை இருந்துகொண்டிருந்த காலகட்டத்தில் அங்கு சென்றார் மோடி. இதையும் இங்குள்ளவர்கள் தங்கள் வன்ம விமர்சனங்களுக்கு உள்ளாக்கத் தவறவில்லை. ஆனால் இந்த நிகழ்வு இலங்கைத் தமிழர்களின் இந்திய எண்ணப் போக்கை மாற்றியது. இங்கு மலிவான ஈழ அரசியல் செய்தவர்களையும் அவ்விஷயத்தில் அடக்கி வாசிக்க வைத்தது.

ஒருமுறை இந்தியப் பாராளுமன்றத்தில் தமிழில் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழில் பதிலளித்தார். ஒரு தமிழ்ப் பெண்மணிக்கு மிக உயர்ந்த பதவியான பாதுகாப்பு அமைச்சர் பதவியை அளித்திருக்கிற இந்த அரசு, திருக்குறளுக்காக பாராளுமன்றத்தில் ஒரு விழா எடுத்திருக்கிறது. 17-12-2015 நமது பாராளுமன்ற நிகழ்வுகளில் ஒரு பொன்னாள். 133 தமிழக மாணவர்கள் திருக்குறள் ஓதவும், தமிழகப் பிரபலங்களுக்கு விருது வழங்கவும், திருக்குறள் பற்றிய உரைவீச்சுகள் ஒலிக்கவுமாக நிகழ்ந்த நிகழ்ச்சி நெகிழ்வை ஏற்படுத்தியது. இப்படி ஒரு நிகழ்வு இதுவரை நிகழ்ந்ததில்லை. இதற்கான முன்னெடுப்புகளை பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் செய்திருந்தார்.

கடல்கடந்து தம் படைகளைச் செலுத்தி வெற்றிக் கொடி நாட்டிய ராஜேந்திரச் சோழன் தனது நிகரற்ற கடற்படை ஆளுமையை நிலைநாட்டியிருந்தான். ஆனால் இப்பெருமைமிகு மன்னனின் பெயரை நமது கடற்படை தொடர்பிலான எதற்காவது சூட்டும் முயற்சி நிறைவேறாமலேயே இருந்தது. ஆனால் மஹாராஷ்ட்ராவின் பாஜக அரசு காட்டிய முனைப்பினால் அது நிகழ்ந்தது. 29-09-2016 அன்று மும்பையில் உள்ள பிரபலக் கப்பல் கட்டுமான நிறுவனத்துக்குத் தமிழ்ப் பேரரசர் மாமன்னர் ராஜேந்திர சோழனின் திருவுருவப்படத்தை மராட்டிய அரசு அர்ப்பணித்தது. இந்தச் செய்தி கூட தமிழகத்தில் எத்தனை பேருக்குத் தெரியும் என்பது அந்த ஊடகத்துறைக்கே வெளிச்சம்.

உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவருக்கு உலகெங்கும் தமிழர் வாழும் பகுதிகளிலெல்லாம் உருவச் சிலைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்தியாவில் தமிழகத்தைத் தவிர வேறெங்கும் உண்டா? இந்தச் சங்கடமான கேள்விக்குச் சங்கடமான பதில் அல்லவா இருந்தது. மிக அதிகமாக தமிழர்கள் வசிக்கும் பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை எடுக்க முயற்சி செய்யப்பட்டு, சிலையும் செய்யப்பட்டு, திறக்கப்படாமல் பல தடைகளைக் கண்டது. அங்கே பாஜக அரசின் எடியுரப்பா முதல்வராக இருந்தபோதுதான் அந்தச் சிலை திறக்கப்பட்டது. அதுவும் பண்டமாற்று முறையில் சென்னையில் சர்வக்ஞர் என்ற கன்னட அறிஞரின் சிலை திறக்கப்பட்டே நிகழ்ந்தது. ஆனால் பாஜக அரசில் கங்கைக் கரையில் 9-12-2016 அன்று, உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டது. இதற்கான முன்னெடுப்புகளையும் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் செய்திருந்தார். மாநில முதலமைச்சர் ஹரீஷ் ராவத் சிலையைத் திறந்து வைத்தார். சிலை அமைக்கப்பட்டுள்ள இடத்துக்கு திருவள்ளுவர் பூங்கா எனப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

முந்தைய அரசின் தவறான சட்டத்தாலும், விலங்கு நல ஆர்வலர்களின் ஜல்லிக்கட்டுக்கு எதிரான நீதிமன்ற முயற்சிகளாலும் தடைப்பட்டிருந்த தமிழக வீர விளையாட்டு ‘ஜல்லிக்கட்டு’ தமிழகத்தில் அரசு ஆதரித்த ஒரு போராட்டமாக உருவெடுத்தது. இந்தப் போராட்டத்தை தமிழருக்கு எதிரான மத்திய அரசின் மாபெரும் செயல்பாடாகச் சித்தரித்து எல்லா பாஜக எதிர்ப்பாளர்களும் ஒன்று சேர்ந்தனர். அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் முழு அரசு ஆதரவோடு மக்கள் போராட்டமாகக் காட்சிப்படுத்தப்பட்டது. ஆனால் பாஜக மத்திய அமைச்சர்கள் பொன் இராதாகிருஷ்ணனும் நிர்மலா சீதாராமனும் மத்திய அரசின் முழு இயந்திரத்தையும் பயன்படுத்தி ஜல்லிக்கட்டுக்கான தடையை தமிழ்நாட்டில் நீக்கினர். 23-01-2017 ஜல்லிக்கட்டுக்கான அனுமதி உத்தரவை தமிழக ஆளுநர் பிறப்பித்தார். இதற்கான தீர்வை முந்தைய ஆண்டே அமைச்சர் நிர்மலா சீதாராமன் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவித்திருந்தார். ஆனால் அது வீம்புக்காக நடைமுறைப்படுத்தாமல் விடப்பட்டது. மீண்டும் அதே தீர்வே ஜல்லிக்கட்டு நடைபெற உதவியாக இருந்திருக்கிறது. இவையெல்லாம் மறக்கப்பட்டு இப்போதும் ஜல்லிக்கட்டு மத்திய அரசுக்கு எதிரான பரப்புரை ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவது விநோதம்தான்.

இலங்கைத் தமிழர் என்று பொதுவாக தமிழகச் சுயநல அரசியல்வாதிகளால் முன்னிறுத்தப்படுபவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்கள்தான். ஆனால் இலங்கை முழுதும் தமிழர்கள் இருக்கிறார்கள். மத்திய இலங்கையில் அதிகமான அளவில் இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்கள் இருக்கிறார்கள். எந்தத் தமிழக அரசியல்வாதியும் இலங்கை மலையகத் தமிழர்களைச் சற்றும் கண்டுகொள்ளாத நிலையில், அவர்களுக்கான வாழ்வில் அக்கறை கொண்ட மாமனிதராக பாரதப் பிரதமர் திகழ்கிறார், பாஜக அரசு திகழ்கிறது. 12-05-2017 அன்று மத்திய இலங்கையில் இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்களிடம் ஒரு பொதுக் கூட்டத்தில் பாரதப் பிரதமர் பேசினார். இந்தப் பகுதிமக்களிடம் பேராதரவு பெற்ற இந்த நிகழ்ச்சி அவர்களுக்குப் பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. இந்திய ஆதரவில் நடத்தப்பெறும் ஒரு மருத்துவ மனையை அவர் திறந்துவைத்தார். ஏற்கெனவே இப்பகுதிக்கு 4,000 வீடுகளை இந்திய அரசாங்கம் கட்டித்தருகின்ற நிலையில் மேலும் 10,000 வீடுகளைக் கட்டித் தருவதாக உறுதி அளித்தார். 2015ம் ஆண்டில் மோடி இலங்கை சென்றபோதே தங்கள் பகுதிக்கு வரவேண்டும் என்ற வேண்டுகோள் மலையகத் தமிழரிடமிருந்து வைக்கப்பட்டது. அவர்கள் எதிர்பார்ப்பை இந்த அரசு நிறைவேற்றியிருக்கிறது.

இலங்கையில் மட்டுமல்ல, தமிழர் வாழும் மலேசியா, சிங்கப்பூர் மற்றும் புலம்பெயர்ந்து வாழ்கிற, வேலை வாய்ப்புக்காகச் சென்றிருக்கிற வெளிநாட்டுத் தமிழர்களிடமும் பாரதப் பிரதமர் நெருங்கி உரையாடத் தவறுவதே இல்லை. வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் நமது பிரதமர் தமிழ் மொழியைப் பாராட்டத் தவறுவதேயில்லை. நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழ்மொழி ஒரு பூரண மொழி என்று பாராட்டினார். மேலும் அன்மையில் தமிழ்மொழி சமஸ்கிருதத்தை விடவும் பழமையானது என்றும், தமிழ் கற்றுக் கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது என்றும் கூடப் பேசினார். குஜராத்தி மொழியில் திருக்குறளைப் பிரதமர் வெளியிட்டார்.

பொதுவாக ஆர்எஸ்எஸ் கொள்கைகள் தேசம் தழுவிய கொள்கைகள். சங்கத்தின் தினசரி வணக்கப் பாடலான ஏகத்மதா மந்திரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த கண்ணகி, திருவள்ளுவர், நாயன்மார்கள், ஆழ்வார்கள், கம்பன், ராஜேந்திர சோழன், CV.ராமன், கணிதமேதை இராமானுஜன், பாரதியார் ஆகியோர் வணங்கப்படுகிறார்கள். பாரதநாட்டின் எல்லாப் பண்பாட்டுக் கூறுகளையும் பேணிக் காப்பதையே இலட்சியமாகக் கொண்டது சங்கம். சங்கத்தின் ஏக்நாத் ரானடே அவர்கள் முன்னெடுத்ததே இன்றைக்குக் கன்னியாகுமரியில் இருக்கும் திருவள்ளுவர் சிலையாகும். பாஜக, சங்கத்தின் கொள்கைகளைச் செயல்படுத்தும் அரசியல் சக்தியாகத் திகழ்கிறது. தமிழும் தமிழரும் இந்தியப் பாரம்பரியத்தின் பெருமைமிகு அங்கமாகக் கருதுகிற பாரதிய ஜனதாகட்சியின் செயல்பாடுகள் தமிழகத்தில் பரப்பப்படும் பொய்ப்பரப்புரைகளை அடியோடு முறியடித்து, உண்மையை நிலைநாட்ட வேண்டும்.

Posted on 1 Comment

மஸ்ரூர் என்னும் புதிர் | வல்லபா ஸ்ரீனிவாசன்

பரந்து விரிந்து கிடக்கும் இமயமலையின் தௌலாதர் மலைத் தொடரின் ஒரு பகுதியில் பியாஸ் நதிக்கரையின் அருகே இருக்கும் ரம்மியமான இடம் மஸ்ரூர். சிம்லாவிலிருந்து தரம்சாலா போகும் வழியில் தரம்சாலாவுக்கு 40 கிமீ முன்னால் இருக்கிறது இந்தக் கோவில். காங்க்ரா கோட்டையிலிருந்து 50 கிமீ. சிம்லா தரம்சாலா பிரதான சாலையிலிருந்து பிரிந்து ஒரு பத்து கிலோமீட்டருக்கு மேல் செல்லவேண்டும்.

வரலாறு

கடல் மட்டத்திலிருந்து 2,500 அடி மலையில் ஒரு குன்று அப்படியே கோவிலாக மாற்றப்பட்டிருக்கிறது. கிழக்குப் பகுதியில் ஒரு குளம். இப்போதும் தண்ணீர் இருக்கிறது. இதைப்போல குடையப்பட்ட குகைகள் குன்றின் அந்தப்பக்கமும் இருக்கின்றனவாம். அதனால் வரலாற்றாசிரியர்கள் இங்கு ஒரு ராஜ்ஜியம் இருந்திருக்க வேண்டும் என்று அனுமானிக்கின்றனர். இந்த மாதிரி ஒரு கோவிலை எழுப்ப நிறைய பொருளும், ஆட்களும், கலைஞர்களும் தேவைப்பட்டிருக்கும் என்பதாலும் இந்த ஊகம் சரியாகிறது. இது பஞ்ச பாண்டவரால் அஞ்ஞாத வாசத்தின்போது கட்டப்பட்டது என்று அங்கிருக்கும் மக்களால் நம்பப்படுகிறது.

மற்றபடி இந்தக் கோவிலைப் பற்றிய ஆவணங்களோ கல்வெட்டுக்களோ எதுவும் இல்லை. அதனால் மஸ்ரூர் வரலாற்றாசிரியர்களுக்கு ஒரு புதிராகவே இருந்து வருகிறது. இதன் கலைப்பாங்கை வைத்தும் பெரிதாக ஒன்றும் தொடர்பு படுத்த முடியாத நிலையே இருக்கிறது. இங்கிருந்து 40 கிமீ தூரத்தில் இருக்கும் காங்க்ரா கோட்டையில் இதே போன்ற வேலைப்பாடுகள் இருந்தாலும் முழுவதுமாக தொடர்புப்படுத்த முடியவில்லையாம். ஆனால் கம்போடியாவில் இருக்கும் அங்கோர்வாட் கோவிலுடன் பல ஒற்றுமைகள் இருப்பதாகச் சொல்கின்றனர். இருப்பினும் இதற்கும் அதற்குமான தொடர்பும் விளங்கவில்லை. கலைநயத்தை வைத்து சுமாராக எட்டாம் நூற்றாண்டு குப்தர் காலத்தினதாக இருக்கலாம் என்பது அனுமானம். கலைநயத்திலும் வித்தியாசங்கள் இருப்பதால் ஒரு காலத்தில் தொடங்கிப் பின்னர் மற்றொரு காலத்தில் தொடரப்பட்டிருக்கலாம் என்றும் கருதுகின்றனர்.

இமாலயத்தில் தற்போது காணப்படும் கோவில்கள் பகோடா போன்ற கூரை அமைப்பைக் கொண்டதாக இருப்பதால் இந்த மாதிரி நகரா விமானம் இங்கு எப்படி வந்தது என்பதும் புதிராக இருக்கிறது. காஷ்மீரை ஆண்ட லலிதாதித்யன் கற்கோவில்களைக் கட்டினான். மஸ்ரூர் காஷ்மீருக்கு அருகிலிருப்பதால் லலிதாதித்யன் கட்டியிருக்கலாம். ஆனால் அவன் கட்டிய மார்த்தாண்டர் கோவில் வெகுவாக சிதைந்திருப்பதால் ஒற்றுமைகளைக் காண்பது கடினமாகிறது. சில சிற்ப முகங்களில், புன்னகையில் ஒற்றுமை தெரிகிறது.

அவன் விஷ்ணு பக்தனாக இருந்ததாக வரலாறு கூறுவதால் இந்தச் சிவன் கோவில் சைவம் தழுவிய அரசனால் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று ஆசிரியர் என்.கே.சிங் கருதுகிறார். ஆனால் அத்தகைய வேறுபாடு அக்காலத்தில் இருந்ததா என்பதையும் பார்க்கவேண்டும். உதாரணமாக, பல்லவர் காலத்தில் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் கோவில்கள் இருக்கின்றன. மத்ய தேசத்தை ஆண்ட யஷோவரமன் அங்கிருந்து கலைஞர்களைக் கொணர்ந்து கட்டியிருப்பானோ என்று மேலும் ஊகிக்கிறார் சிங். காஷ்மீரத்திற்கோ மத்ய தேசத்திற்கோ இந்தக் கோவில் சம்பந்தமுள்ளதாக இருக்குமெனில் வரலாற்றில் மிக முக்கியமானதாகும். அதனால் இதில் நிறைய ஆராய்ச்சி தேவைப்படுகிறது.


கட்டுமானக்கலை

பொதுவாக கற்கோவில்களை வகைப் படுத்தலாம். மாமல்லபுரம் போன்ற ஒற்றைக் கற்றளி. அதாவது ஒரே கல்லில் கட்டப்படும் மோனோலிதிக் கோவில்கள். சிறு குன்றுகளைக் குகை போலக் குடைந்து செய்யப்படும் குகைக் கோவில்கள். உதாரணம் மாமல்லபுரம் ஆதி வராக மண்டபம். கற்களை அடுக்கிக் கட்டப்படும் கட்டுமானக் கோவில்கள். இதற்குப் பல உதாரணங்களைச் சொல்லலாம். பெரும்பாலான கற்கோவில்கள் இவ்வகையைச் சாரும். மலையைக் குடைந்து கோவில் வளாகமாக உருவாக்குவது. எல்லோரா கைலாசநாதர் போல. கிட்டத்தட்ட இந்த மஸ்ரூர் கோவிலும், அளவில் எல்லோராவை விடச் சிறியதானாலும் இந்த வகையைச் சேரும். மாமல்லபுரம் தனிப் பாறைகளில் செதுக்கப்பட்ட ஒற்றைக்கற்றளிக் கோவில்கள் கொண்ட வளாகம். மஸ்ரூர் ஒரே குன்றில் செதுக்கப்பட்ட கோவில்கள் கொண்ட வளாகம்.

மாமல்லபுரம், எல்லோரா இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நகரி விமானத்துடன் கட்டப்பட்ட கோவில் வளாகம். வட இந்தியாவில் காணப்படும் நகரி விமானங்கள் தனிக்கற்களால் கட்டப்பட்டவை. ஒற்றைக் கல்லில் கட்டப்பட்ட நகரி விமானக் கோவில் இது ஒன்றே. இருபுறமும் படிகள் அமைத்து மேலே சென்றும் பார்க்க முடிகிறது.

படத்தில் உள்ளது போல ஒரு சீரான திட்டத்துடன் அமைக்கப்பட்டிருக்கிறது. சர்வதோபத்ரா எனப்படும் வகையில் எல்லாப்புறத்திலிருந்தும் வழி அமைக்கப்பட்டிருக்கிறது. கர்ப்பகிரகமானது கிழக்கு நோக்கி குளத்தைப் பார்த்தவாறு அமைந்துள்ளது. தற்போது வைஷ்ணவ ஸ்தலமாக மாற்றப்பட்டிருந்தாலும், கர்ப்பகிரகத்தின் மேலே காணப்படும் முகப்பிலிருக்கும் சிற்பங்களை வைத்து இது ஒரு சிவன் கோவிலாக இருந்திருக்கிறது என்பதை அறியலாம்.

1875ல் தான் ஒரு ஆங்கிலேயரால் முதலில் இக்கோவில் கண்டறியப்பட்டிருக்கிறது. அதன்பிறகு 1905ல் பூகம்பத்தால் பெரிதும் அழிந்திருக்கிறது இக்கோவில். நகரா விமானத்தின் (நகரா என்பது ஒருவகை விமானம்) சிகரத்திலிருக்கும் அமலகா (அமலகா என்பது நகரா விமானங்களின் மேற்பகுதியில் வட்டமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் ஒரு பாகம். சிகரம் இதன் மீது வைக்கப்பட்டிருக்கும்.) அனைத்தும் கீழே விழுந்து கிடக்கின்றன. விமானத்தின் ரதப் பகுதியின் வேலைப்பாடு நிறைந்த முன்புறமும் சிதைந்து கிடக்கிறது. சிம்லாவை ஒட்டிய இடங்களில் நிறைய ஸ்லேட் ராக் வகையைப் பார்த்தோம். இந்தக் குன்று ஒரு மலையின் உச்சியில் உள்ளது. அந்தக் கல்லுக்கும் ஸ்லேட் ராக்கைப் போல தட்டையாகப் பெயர்ந்து வரும் தன்மை இருக்கும் போலத் தெரிகிறது. உடைந்து விழுந்த பிரமாண்டமான துண்டங்கள் பல இடங்களில் சமதளமாக இருக்கிறது. சான்ட்ஸ்டோன் வகை என்று இருந்தாலும் எல்லா இடத்திலும் அதன் அடர்த்தி ஒன்று போல இருப்பதாகத் தெரியவில்லை. சில மிகவும் தேய்ந்திருக்க சில நன்றாக இருக்கின்றன.

நடுவில் அமைந்திருக்கும் சதுர வடிவ கர்ப்பகிரகம் உயரமான விமானத்தைக் கொண்டிருக்கிறது. முன்னால் வாயிலில் அழகான வேலைப்பாடுகள். மேல்முகப்பிலும் வேலைப்பாடுகள். இந்த கர்ப்பகிரகத்தின் முன்னே ஒரு மண்டபம் காணப்படுகிறது. இதில் இருபுறமும் 5மீ உயரத்திற்கு உருளையான கற்தூண்கள் காணப்படுகின்றன. இவை அந்த மோனோலித் குன்றைச் சேர்ந்தவை அல்ல. ரொம்பவே வித்தியாசமாகத் தெரிகின்றன. வேலைப்பாடும் இல்லாமல் வெறுமையாக இருக்கின்றன. பிற்காலத்தில் கட்டப்பட்டவையாக இருக்கலாம். தூண்களின் மேலே மேற்தளம் இருந்த அடையாளம் ஏதும் இல்லை. மேற்கூரை மரத்தால் இருந்திருக்கலாம் என்கிறார் நிசர்கான் என்ற வரலாற்றாசிரியர். மரக்கூரைக்கு ஏன் இவ்வளவு பெரிய கல்தூண் என்று கேள்வி எழுகிறது. இந்த கூரையில்லா மண்டபத்தின் நடுவே ஒரு பலி பீடம் இருக்கிறது. இந்த மண்டபத்தின் முன்னால் ஒரு முக மண்டபம்.

கர்ப்பகிரகத்தின் இருபுறமும் அதே போல சற்றே உயரம் குறைவான இரண்டு விமானங்கள். ஒரு புறம் குடையப்படவே இல்லை. முன்பகுதி சமதளமாக அப்படியே ஒரு ஃப்ரேம் போல இருக்கிறது. குடைந்து கர்ப்கிரகமாக மாற்றப்பட திட்டம் இருந்திருக்கலாம். இந்த வகைக்கல் உடைந்து போவதால் பாதியிலேயே விடப்பட்டிருக்கலாம்.

மறுபுறம் ஒரே இடிபாடு. விமானம் விழுந்து பெரிய கல்லாக அப்படியே கிடக்கிறது. வடக்குப் புறம் பெரிய குகை போல இருக்கிறது. அதே போல தென்புறமும் இருப்பதாக ஏஎஸ்ஐ படத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனால் அந்தப்புறம் செல்ல அனுமதியில்லை.

பல இடங்களில் செங்கல் வைத்துக் கட்டியும், வேறு விதமான ஆதாரம் (சப்போர்ட்) கொடுத்தும் செய்திருக்கின்றனர். ஆனால் அவை பொருத்தமில்லாமல் இருக்கிறது. இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சியும் சீரமைப்பும் மிகவும் தேவை. இதை நிசர் கானும் வருத்தத்துடன் குறிப்பிட்டிருக்கிறார்.

சிற்பக்கலை

உடைந்து விழுந்ததைத் தவிர வெகுவாகத் தேய்ந்தும் போயிருக்கின்றன சிற்பங்கள். பல ஊகிக்க வேண்டியதாகவே உள்ளது. ஆனாலும் விழுந்த துண்டங்களிலும், மீதமிருக்கும் பகுதிகளிலும் அழகான சிற்பங்கள் தென்படுகின்றன. மயில் மேலமர்ந்திருக்கும் முருகனைப் பார்த்து ஆச்சரியம் உண்டாகும். வட இந்தியாவில் இந்த கார்த்திகேயனின் உருவம் அதிகம் காணக்கிடைக்காது. தமிழ்க் கடவுளாகவே முருகன் கருதப்படுகிறான். ஆனால் இந்தக் கோவிலில் முருகனின் வடிவங்கள் காணப்படுகின்றன. அந்தக் குன்றையும் நம் குமரன் பிடித்திருக்கிறான் போல.

இதனாலும் இந்தக் கோவில் தென்னிந்தியாவிலிருந்து வந்த மன்னனால் கட்டப்பட்டதோ என்ற ஐயமும் வருகிறது. இந்திரன் போலவும் சூரியன் போலவும் சில. ஒரு சதுரமான ஃப்ரேம் போன்ற அதிகம் ஆழமில்லா பள்ளத்தினுள்ளே புடைப்புச் சிற்பங்களாய் இவை காணப்படுகின்றன. கலசமும் பூங்கொடிகளும் அழுத்தமாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன. கர்ப்பகிரக வாசல் நுழைவில் வேலைப்பாடுகள் மிக நுணுக்கமானவை. மேலே லின்டல் எனப்படும் மேற்பகுதியில் சிவனுக்கு பட்டாபிஷேகம் நடக்கும் அரிய காட்சி செதுக்கப்பட்டிருக்கிறது. வாசல் வெகுவாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. இந்த வாசல் வேலைப்பாடு புவனேஷ்வரில் கந்தகிரியில் இருப்பது போலவே இருக்கிறது.

பூ வேலைப்பாடும், அலங்காரங்களும் கோவிலைச் சுற்றிலும் காணப்படுகின்றன. விமானங்களைத் தவிர மீதமிருக்கும் இடங்களில் தரைப்பகுதி பாறை சமன்படுத்தப்பட்டு நல்ல தளமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு சிறப்பான விஷயம். சிற்பங்களில் காணப்படும் புன்னகை மனதைக் கவருகிறது. மனித உருவங்கள் விரிந்த கண்களும், புன்னகையும், வடிவான அகன்ற உடம்புடனும் காணப்படுகின்றன. கார்த்திகேயன் அமர்ந்திருக்கும் விதம் அழகாக இருக்கிறது. அதே போல சிவனின் பல சிற்பங்களைக் காண்கிறோம்.

பல தேய்ந்து விட்டதால் முழுவதுமாக ரசிக்க முடியவில்லை. ஆனாலும் மீதமிருப்பதிலேயே எழில் கொஞ்சுகிறது. விமானத்தின் மீதமிருக்கும் நாசிகா, முகங்கள், வேலைப்பாடுகள் பாதுகாக்கப்பட வேண்டும். அழகிலும் வரலாற்றிலும் கட்டிடக் கலையிலும் முக்கியத்துவமான மஸ்ரூர் இன்னும் அறியப்பட வேண்டும். ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Posted on Leave a comment

கால்பந்து உலகக் கோப்பை 2018 | லக்ஷ்மணப் பெருமாள்


சாக்கர் (Soccer) என்றழைக்கப்படும் கால்பந்து விளையாட்டுதான் உலகின் மிக அதிக ரசிகர்களைக் கொண்டது. உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி நான்கு ஆண்டுகளுக்கொருமுறை நடக்கிறது. 1930ல் முதல் உலகக்கோப்பைக் கால்பந்துப் போட்டி நடைபெற்றது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1938-1950 வரையிலான காலகட்டத்தில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிகள் நடக்கவில்லை. 21 வது உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியானது ( 2018 ) ரஷ்யாவில் கோலாகலமாக நடந்தது.

32 அணிகளை எட்டு பிரிவுகளாகப் பிரித்து லீக் சுற்றுகள் நடந்தன. லீக் சுற்றைப் பொருத்தவரையில் ஆட்ட நேரமான 90 நிமிடங்களில் மோதும் இரு அணிகளின் பலத்தைப் (வெற்றி-தோல்வி-சமன்) பொருத்துப் புள்ளிகளைப் பெறுகின்றன. லீக் சுற்றில் தமது பிரிவிலுள்ள மாற்று அணிகளுடன் விளையாடி முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள், சுற்று 16 என்று சொல்லப்படும் நாக் அவுட் (தோற்கிற அணி அடுத்த சுற்றுக்குச் செல்ல இயலாது) போட்டிக்குத் தகுதிபெறும். ஒருவேளை இரு அணிகள் இரண்டாமிடத்தில் சம புள்ளிகளுடன் இருக்கும் பட்சத்தில், எந்த அணி அதிக கோல்களை லீக் சுற்றில் போட்டுள்ளதோ அது தகுதி பெறும். அதிலும் சிக்கல் என்றால், எதிரணியைக் குறைவாக கோல் போட அனுமதித்த அணி அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறும்.

சுற்று 16 ஐப் பொருத்தமட்டில் உலகக் கோப்பைக் கால்பந்து அட்டவணைப்படி அணிகள் விளையாடுகின்றன. ஒரு பிரிவில் முதலிடம் பெற்ற அணியும் அடுத்த பிரிவில் இரண்டாமிடம் பிடித்த அணியும் நேரடியாக மோத வேண்டும். அதில் தேர்ச்சி பெறும் அணி காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும். இதில் தோல்வியுற்ற அணி உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியிலிருந்து வெளியேறி விடும். காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டிகளின் போட்டிகளும் சுற்று 16 ஐப் போலவே மாற்றுப் பிரிவில் வெற்றி பெற்று வரும் அணியுடன் மோத வேண்டும். தோற்கும் அணிகள் வெளியேறி விடும்.

உலகக் கோப்பை கால்பந்து 2018

உலகப் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் ஒவ்வொரு முறையும் சில அதிர்ச்சிகளும் ஆச்சரியமான முடிவுகளும் காத்திருக்கும். அவ்வகையில், 2006 உலகக் கோப்பையை வென்ற இத்தாலி , 2010 உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் லீக் சுற்றிலிருந்து சுற்று 16 க்குக் கூட தகுதி பெற இயலாமல் வெளியேறியது. 2010 உலகக் கோப்பையை வென்ற ஸ்பெயின் 2014 உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் இத்தாலி போலவே லீக் சுற்றிலேயே வெளியேறியது. மீண்டும் இந்தாண்டு அதே அதிர்ச்சியைத் தந்தது, 2014 உலகக் கோப்பையை வென்ற ஜெர்மனி. ஆம், மிக வலிமையான அணியாகப் பார்க்கப்பட்ட ஜெர்மனி இந்தாண்டு லீக் சுற்றிலேயே வெளியேறியது.

உலகக் கோப்பை வரலாற்றில் நான்கு முறை உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இத்தாலி 2018 உலகக் கோப்பையில் விளையாடும் வாய்ப்பை தகுதிச் சுற்றிலேயே இழந்து வெளியேறிய சோகமும் நடந்தது. கூடவே 2014 உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம் வரை வந்த நெதர்லாந்து அணியும் தகுதிச் சுற்றிலேயே வெளியேறி இருந்தது. அதாவது இரு அணிகளும் உலகக் கோப்பை போட்டிக்கே தகுதி பெறவில்லை. ஆப்பிரிக்க அணிகளில் அதிகமாகக் கலந்து கொள்ளும் கானா, கென்யா அணிகளும் உலகக் கோப்பை போட்டியில் விளையாடும் தகுதியை இழந்திருந்தன. அமெரிக்க நாடுகளில் USA, சிலி போன்ற அணிகள் தகுதி பெறவில்லை.

2018 உலகக் கோப்பை போட்டிக்கு வந்த அணிகளில் நட்சத்திர வீரர்களைக் கொண்ட போர்ச்சுக்கல் (கிறிஸ்டியானா ரொனால்டோ), அர்ஜென்டினா (மெஸ்ஸி) இரு அணிகளும் சுற்று 16ல் வெளியேறின. ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி லீக் சுற்றிலிருந்து சுற்று 16க்குக் கூடத் தகுதி பெறாமல் வெளியேறின.

இதுவரை உலகக் கோப்பைக் கால்பந்து வரலாற்றில் அதிகமுறை ( 5 முறை) கோப்பையைக் கைப்பற்றிய பிரேசில் (நெய்மர்) அணி காலிறுதியில் பெல்ஜியம் அணியிடம் தோல்வியுற்று வெளியேறியது. உண்மையில் பெல்ஜியம் அணி மிகுந்த துடிப்புடன் விளையாடிய அணி. ஆனால் பெல்ஜியம் பிரான்சுடனான அரையிறுதியில் தோல்வியைத் தழுவியது. பிரான்ஸ் 2-0 என்ற கோல்கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்திய போதே கால்பந்து ரசிகர்கள் பிரான்ஸ்தான் உலகக் கோப்பையை வெல்லும் அணி என்று கணிக்கத் தொடங்கியிருந்தார்கள்.

மறுபிரிவில் குரோஷியா ஆரம்பத்திலிருந்தே கடின உழைப்புடன் ஒவ்வொரு சுற்றிலும் ஆச்சரியப்படத்தக்க வகையில் விளையாடி வந்தது. அதிலும் ரவுண்டு 16 சுற்றில் டென்மார்க்கையும், காலிறுதியில் உள்ளூர் அணியான ரஷ்யாவையும் பெனால்டி முறையில் வீழ்த்தி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இங்கிலாந்து அணி நம்பிக்கை தரும் வகையில் காலிறுதி வரை எளிதாகவே வெற்றி பெற்று வந்தது. ஆனால் அரையிறுதியில் குரோஷியா 2-1 என்ற கணக்கில் வீழ்த்தியது. மூன்றாம் இடத்திற்காக நடைபெற்ற போட்டியிலும் பெல்ஜியம் அணியிடம் இங்கிலாந்து தோற்றது.

உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக குரோஷியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதும் ஒருங்கிணைந்த அந்த அணியின் ஆட்டமும் பெரும்பாலும் நேர்த்தியாகவே இருந்தது. ஆனால் இறுதிப் போட்டியில் பிரான்ஸ் அணியிடம் (France 4- Crotia 2) என்ற கோல்கணக்கில் தோற்றது. குரோஷியா மற்றும் பிரான்ஸ் இரு நாடுகளின் அதிபர்களும் இறுதிப் போட்டியைக் காண வந்திருந்தார்கள். கூடவே ரஷ்யாவின் விளாடிமிர் புதினும்! உண்மையில் குரோஷியா தோல்வியைத் தழுவினாலும் அந்நாட்டு அதிபர் மற்றும் மக்கள் தங்களது வீரர்களையும் பயிற்சியாளரையும் இன்முகத்துடனே வரவேற்றார்கள். பிரான்ஸின் வெற்றியை அந்நாட்டு ரசிகர்கள் விடியவிடிய கொண்டாடித் தீர்த்தார்கள்.

விருதுகள் வாங்கிய வீரர்கள் -2018:

Golden Ball Award – குரோஷியா கேப்டன் லுகா மோட்ரிக் (LUKA MODRIC). மிகச் சிறந்த வீரர் என்ற விருதினை தட்டிச் செல்வதற்குக் காரணம், middle லிலிருந்து அதிக நேரம் பந்தைக் கொண்டு செல்வதும் நேர்த்தியாக விளையாடியமைக்காகவும் இந்த விருதைத் தட்டிச் சென்றார் லுகா.

Golden Boot Award – இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் (HARRY KANE). அதிக அளவில் 6 கோல்களை 2018 உலகக் கோப்பையில் அடித்ததால் இந்த விருது ஹாரி கேனுக்கு வழங்கப்பட்டது.

Young Player Award – பிரான்ஸ் அணி வீரர் க்ளியான் மாப்பே ( KYLIANAN MBAPPE). மிக வேகமாகப் பந்தைக் கடத்திச் சென்ற வல்லமையும் இறுதிப் போட்டி வரை வந்த காரணத்தாலும் இளம் வீரரான இவருக்கு விருது வழங்கப்பட்டது.

Golden Glove Award – பெல்ஜியத்தின் கோல் கீப்பர் திபாத் கோர்த்யாஸ் (THIBAUT COURTOIS). ஏழு போட்டிகளில் வெறும் 6 கோல்களை மட்டுமே எதிரணியனரால் போட முடிந்தது. குறிப்பாக பிரேசிலுடனான காலிறுதிப் போட்டியில் பல கோல்களைத் தடுத்ததும் மற்ற அணியினரின் கோல் போடும் பல்வேறு வாய்ப்புகளைத் திறம்பட தடுத்தமையால் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

*

உலகில் கால் பந்தாட்டத்தில் பல்வேறு வீரர்கள் இன்று வரையிலும் விளையாடும்போதும், விளையாட்டில் ஏற்படும் காயங்கள் காரணமாகவும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பலனில்லாமல் இறந்துபோகும் துயரச் சம்பவங்கள் நின்றபாடில்லை. பல விளையாட்டு வீரர்களுக்கு எலும்பு முறிவுகள் ஏற்பட்டு முடமான சம்பவங்கள் உண்டு. இதுவரை இத்தனை வீரர்கள் இறந்துள்ளார்கள் என்று கணக்கிட முடியாத அளவிற்கு வீரர்கள் இறந்து வருகின்றனர். உள்ளூர்ப் போட்டிகள், நட்பு ரீதியிலான போட்டிகள், சர்வதேசப் போட்டிகள் என நடத்தப்படும் அனைத்துப் போட்டிகளிலும் உயிரிழப்புகள் தொடர்ந்து வருகிறது.

உலகக் கால்பந்து அமைப்பு பல்வேறு சட்ட விதிகளை மேம்படுத்தி வந்தபோதிலும் இன்னமும் இறப்புகள் தொடர்கின்றன. 1889ல் வில்லியம் க்ரோப்பரில் ஆரம்பித்த மரணம் இன்றுவரை தொடர்கிறது. வேகமாக ஓடும்போது இன்னொரு வீரர் குறுக்கே கால் நீட்டி விழுவதால், பந்தைத் தன் அணி வீரருக்கு பாஸ் கொடுப்பதற்காக தலையை வைத்து முட்டும்போது, கால்களை உயர்த்தி எப்படியேனும் பந்தைத் தன் அணி கைவசமாக்க வேண்டும் என்று எண்ணிக் காலைத் தூக்க எதிரணி வீரரின் முகத்தில் படுவது, இப்படியான நிகழ்வுகளில், காயத்தில் ஆரம்பித்து மரணம் வரை அனைத்தும் நொடிப்பொழுதில் நடந்து விடுகிறது. முன்பெல்லாம் கோல் கீப்பர்கள் பந்தைப் பிடிக்கும் போது இருந்த விதிமுறைகளால் அதிக கோல்கீப்பர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதையொட்டியே இப்போது பல சட்ட திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளது உலகக் கால்பந்தாட்ட அமைப்பு.

*

1970ம் ஆண்டு உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி நடக்கவிருந்தது. அதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் மத்திய அமெரிக்க நாடுகளான எல் சல்வேடர் ( El Salvador ) க்கும் ஹோண்டுரஸ் ( Honduras )க்கும் நடந்தது. மொத்தமுள்ள மூன்று போட்டிகளில் வெற்றி பெறும் அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெறும் என்பதே விதி. முதல் போட்டியை ஹோண்டுரஸ் அணி வென்றது. இரண்டாவது போட்டியை எல் சல்வேடர் அணி வெற்றி பெற்ற போதே விளையாட்டரங்கில் ஹோண்டுரசின் கொடிகள் கிழித்தெறியப்பட்டன. மூன்றாம் போட்டி பெரும் சர்ச்சைக்குள் நடந்து எல் சல்வேடர் அணி வெற்றி பெற்றது. இதையொட்டி ஏற்பட்ட கலவரங்களால் ஹோண்டுரஸ் தனது ராஜ்ய உறவை எல் சல்வேடருடன் துண்டித்தது. இதையடுத்து நடந்த போர் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் 1000 முதல் 2000 பேர் இறந்திருக்கலாம் என்று செய்திகள் அறிவித்தன.

இந்தப் போருக்கு வெறும் விளையாட்டுப் போட்டி மட்டுமே காரணமல்ல. ஏற்கெனவே இரு நாடுகளுக்கும் வர்த்தகம், எல்லைப் பிரச்சினை மற்றும் மற்றொரு நாட்டில் குடிபுகுதல் போன்ற பிரச்சினைகள் இருந்துள்ளன. விளையாட்டரங்கில் ஹோண்டுரசின் தேசியக் கொடிகள் மற்றும் மக்கள் அடிக்கப்பட்டு இன்னலுக்குள்ளானதால்தான் போராக மாறியது. இதையடுத்து எல்லைப் பிரச்சினை சர்வதேச வழக்காக மாறி இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட புரிந்துணர்வின் படி 1992 ல் ஹோண்டுரசிடம் சர்சைக்குரிய பகுதியை ஒப்படைத்தது எல் சல்வேடர்.

*
உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் இந்தியாவில் எழுப்பப்படும் கேள்வி 125 கோடி மக்கள் தொகையுள்ள நாட்டிலிருந்து 11பேர் கொண்ட ஒரு அணியை உருவாக்கி உலகக் கோப்பைக்குத் தகுதி பெறச் செய்ய இயலாதா என்பதே! உண்மையில் கிரிக்கெட்டில் உலக ஜாம்பவான்களில் இன்று மிக முக்கிய அணியாக மாறியுள்ள இந்தியாவில் ஏன் கால்பந்து ஆட்டத்தில் சோபிக்க இயலவில்லை. கால்பந்துப் போட்டியில் விளையாட சர்வதேச அளவில் இந்திய அணி தகுதி பெற்றதே இல்லையா போன்ற கேள்விகள் நமக்கு எழலாம்.

1951ல் நடந்த ஆசியக் கோப்பைக்கான கால்பந்துப் போட்டியில் தங்கம் வென்ற அணிதான் நமது இந்திய அணி. மீண்டும் 1962ல் ஜகர்தாவில் நடந்த ஆசியக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் தங்கம் வென்றது இந்தியா. 1956ல் நடந்த உலக ஒலிம்பிக் போட்டியில் நான்காவது இடத்தைப் பெற்ற அணிதான் இந்திய கால்பந்து அணி. இதே காலகட்டத்தில் இந்தியாவின் கிரிக்கெட் அணி எந்த சாதனையும் செய்ததில்லை. சொல்லப்போனால் அது கலந்துகொண்ட போட்டிகளில் தோல்வியை மட்டுமே கண்டது.

1950களில் விளையாடிய இந்திய கால்பந்து விளையாட்டு வீரர்கள் மிகுந்த திறமையானவர்கள். அத்தகைய திறமை வாய்ந்த இந்திய கால்பந்து அணி 1950ல் பிரேசிலில் நடக்கவிருந்த உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது. உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியா கலந்து கொள்ளாது என்று இந்திய கால்பந்தாட்ட அமைப்பு (AIFF) அறிவித்தது. அதற்குச் சில நடைமுறைச் சிக்கல்களை மேற்கோள் காட்டிப் பங்கு பெறாது என அறிவித்தது. Barefoot பயிற்சி மட்டுமே இந்திய வீரர்கள் பயிற்சி பெற்றுள்ளனர், மேலும் 70 நிமிட போட்டிகளில் மட்டுமே இந்தியா விளையாடி வருகிறது என்ற காரணங்களைச் சொல்லியது. அதோடு, போட்டிக்குச் செல்வதற்கான பயணச் செலவுகள் அதிகமாகும் என்பதால் இந்தியா பங்கேற்காது என்று AIFF அறிவித்தது. இதில் கொடுமை என்னவென்றால், உலகக் கால்பந்தாட்ட அமைப்பு (FIFA) தங்கும் வசதி மற்றும் பல செலவுகளைத் தாங்கள் பார்த்துக் கொள்வதாகவும் இந்தியா FIFA வகுத்துள்ள விளையாட்டு விதிகளின் படியும் விளையாடினால் போதுமென்றது.

இந்தியாவின் அப்போதைய பிரதமரான ஜவகர்லால் நேரு இந்தியக் கால்பந்து அணியை உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிக்கு அனுப்ப எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அவரின் அக்கறை எல்லாம் இந்திய கிரிக்கெட் அணியை ஊக்கப்படுத்துவதிலேயே இருந்தது. காமன்வெல்த் போட்டிகளை நடத்துவதில் நேருவுக்கு இருந்த அக்கறை, இந்தியக் கால்பந்து அணியை பிரேசிலுக்கு அனுப்புவதில் இல்லை. நேரு இதற்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது உண்மையிலேயே துரதிருஷ்டவசமான விஷயம். அந்தக் காலகட்டத்தில் நேரு தாமாக விருப்பப்பட்டு கிரிக்கெட் போட்டியைத் துவங்குவது மற்றும் கிரிக்கெட் உடையுடன் pad சகிதமாகக் கலந்து கொள்வது என ஆர்வம் காட்டினார். வெற்றியோ தோல்வியோ இந்தியக் கால்பந்து அணியை பிரேசிலுக்கு அனுப்ப முயற்சி செய்திருந்தால், உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் இந்தியா இடம்பெற்றது என்றாவது வரலாற்றில் பதிவாகியிருக்கும். ஓர் ஆட்சியாளர் மற்றும் அரசு தருகிற முக்கியத்துவம்தான் குறிப்பிட்ட விளையாட்டில் அந்த நாட்டின் நிலையை எந்தளவுக்கு மாற்றும் என்பதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் சொல்ல இயலாது. இதை மறைக்க நேரு கோப்பை என்ற பெயரில் 1982ல் கால்பந்துப் போட்டிகள் நடந்தன என்பது மற்றொரு கொடுமை.

கிரிக்கெட் என்பது மேல்தட்டு மக்களின் விளையாட்டாகவும் கறுப்பினத்தவரை பங்கெடுக்கச் செய்யாத ஒரு விளையாட்டாகவும்தான் இருந்தது. இன்று வரையிலும் உலகின் பெரும்பான்மையான நாடுகளில் கால்பந்து விளையாட்டு உண்டு. கிரிக்கெட் விளையாடும் நாடுகளை விரல் விட்டு எண்ணி விடலாம். சவூதி அரேபியா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் 2018 உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் பங்கெடுத்தன. சவுதியைப் போல ஒரு முக்கியத்துவத்தை இந்திய அரசு கால்பந்து வீரர்களுக்குக் கொடுத்திருந்தால் இந்தியாவும் இன்று உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டியில் பங்கெடுத்துக் கொள்ளும் நாடாக இருந்திருக்கும். சில விஷயங்கள் கனவுகளாகவே இருக்கின்றன. அதில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டிக்கு இந்தியக் கால்பந்து அணி தகுதி பெறுவதும் ஒன்று.

Posted on Leave a comment

அந்தக் கால விளம்பரங்கள்… | அரவிந்த் சுவாமிநாதன்

1930 காலகட்டங்களில் சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகளில் வெளியாயின தாது புஷ்டி லேகிய விளம்பரங்கள். ஒரு நடுத்தர வயது ஆண் சோர்ந்து போய் மேசை மீது கைவைத்துத் தலை சாய்ந்து இருக்கிறான். அவன் அருகில் சில பாட்டில்கள் இருக்கின்றன. ‘இனி உங்களுக்குக் கவலை வேண்டாம், இதோஎன்று கூறி அந்த ஆணிடம் ஒரு மருந்து புட்டியைக் காண்பிக்கிறாள் அவன் மனைவி. அந்த
மருந்து மன்மதக் குளிகை.’ ‘இது
தாது புஷ்டியைக் கொடுப்பதில் சிறந்ததுஎன்கிறது
இந்த விளம்பரம்.

இந்த
மருந்தை அந்த ஆணுக்குப் பரிந்துரைப்பது சக நண்பனோ அல்லது மருத்துவரோ இல்லை. அவன்
மனைவி. பெண்
சுதந்திரம் உச்சத்தில் இருப்பதாக நம்பப்படும் இன்றைக்குக் கூட இம்மாதிரிதைரியமானவிளம்பரங்கள் பத்திரிகைகளில் வருவதாகத் தெரியவில்லை. சரி, இதன்
விலை? அதிகமில்லை, 20 குளிகை ரூபாய் இரண்டுதான். அணுக வேண்டிய முகவரி : மலையப்பசாமி
வைத்தியசாலை, பழனி!
இது
மட்டும்தானா? நிரந்தர தாதுபுஷ்டி டானிக் மருந்து, நரசிங்க
லேகிய தங்க பஸ்பம், ஒரிஜினல்
தங்கம் சேர்த்த நர்வினஸ் டானிக் மருந்து, ஜீவாம்ருதம், ஸண்டோஜன் (இது
உறுப்புகளுக்கு வலிமை தரும் உலோக ஆகாரம் என்கிறது விளம்பர வாசகம்) வெளிப்புறத்தில்
உபயோகிக்க கஸ்தூரி லினமெண்டேன், ஒருமுறை பரிக்ஷித்துப் பார்த்துவிட்டுப் பலன் இல்லை என்றால் ‘10000/-’
இனாம் தரத் தயார் என்று சொல்லும் தாது புஷ்டிக்கான பீமவீர்விளம்பரம், நடுத்திர
வயதினர்வாலிப
வலுவுகொள்ளவும், மனைவி, ‘மீண்டும் 20 வயது இளைஞர் போலிருக்கிறீர்களேஎன்று ஆச்சரியப்படவும் கல்ஸானா (kALZANA) மாத்திரைகள் (இதனைப் பெண்களும் சாப்பிடலாமாம். சூதகக் கோளாறுகள் உள்ளிட்ட அனைத்தும் நீங்கி பெண் வலிவும், பொலிவும்
பெறுவாளாம்) என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இதெல்லாம்
படிக்கப் படிக்க ஆண்களுக்கு இதுஆதிகாலத்திலிருந்தே
பிரச்சனையாக இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. ஆனால், எனக்கு
மிகப் பெரிய அதிர்ச்சியைத் தந்தது கருங்குரங்கு ரஸாயனவிளம்பரம்.
கருங்குரங்கின்
கழுத்தில் உள்ள ஒரு நரம்பை வயதாகித் தளர்ந்த ஒரு மனிதனின் கழுத்து நரம்புடன் சேர்த்தால் அவனுக்கு வாலிப உணர்ச்சியும், உடல் பலமும் உண்டாகுமாம். இது இந்தூர் மஹாராஜா அவர்களுக்குச் செய்யப்பட்டு நிரூபிக்கப்பட்டுமிருக்கிறதாம். கருங்குரங்கின் ஜீவ உறுப்புக்களை மனிதனுடைய உறுப்புகளில் சேர்ப்பது டாக்டரின் சாமர்த்தியத்தைப் பொறுத்தது என்கிறது விளம்பரம். சகல
வியாதிகளுக்கும் ஓர் கைகண்ட ஔஷதமாம் இது. அக்காலத்தில்
ஜீவ காருண்ய சங்கத்தார் எப்படி இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்பது தெரியவில்லை.
இப்படி
சிருங்கார ரசம் பெருக்கும் விளம்பரங்கள் ஒருபுறம் என்றால் மறுபுறம் கொசுவலை விளம்பரம், பட்டுப்
புடைவை விளம்பரம், பற்பொடி
விளம்பரம், இன்ஸ்யூரன்ஸ்
கம்பெனி விளம்பரம், பிராவிடண்ட்
ஃபண்ட் ஃபைனான்ஸ் விளம்பரம், கூந்தல்
ஆகார விளம்பரம், நரை
மயிர் நீக்கும் விளம்பரம், பெண்களின்
சூதகப் பிரச்சினைகளை நீக்கும் கெற்ப சஞ்சீவி எண்ணெய் விளம்பரம், நீலகிரி
காபிக் கொட்டை, சகல
வியாதிக்கும் மருந்தாகும்மின்சார ரசம்’ (அப்படின்னா
என்னவாக இருக்கும்?) கேள்விகளுக்கு
பதில் எழுதி அனுப்பச் சொல்லும் ஜோதிட விளம்பரம், நினைத்ததை
நிறைவேற்றித் தரும்மாந்த்ரீக
மோதிரம்’ (இதன்
மூலம் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என எல்லாம் தெரிந்து கொண்டு விடலாமாம். ஆவிகளுடனும்
பேச முடியுமாம்; ஏன் புதையல் எங்கே இருக்கிறது என்பதைக் கூட இதன் மூலம் கண்டறிந்து விட முடியுமாம்) என்று பல விளம்பரங்கள் அக்காலச் சமூக நிலையைக் காட்டுகின்றன.
இவ்வகை
விளம்பர வாசகங்களில் சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமேயில்லை. ரோமங்களை நீக்கும் ஜனானா கிரீம், வேண்டா
ரோமத்தை உடனே நீக்கி சருமத்தை மிருதுவாக்கிப் பாதுகாக்கின்றதாம். பெரிய குடும்பங்களால் உபயோகிக்கப்படும் அதன் பெரிய ட்யூப் விலை 12 அணா. பாட்டிலிலும் கிடைத்திருக்கிறது, விலை 14 அணாதான். சிடுசிடுவென்றிருக்கும் மனைவியைகுளு’ ‘குளுஎன்று
மாற்ற தினமும் அவளுக்குகுவேக்கர்
ஓட்ஸ்கொடுக்குமாறு
பரிந்துரைக்கிறது ஒரு விளம்பரம். ‘கோடைக்
காலத்தில் மனைவி அடுப்படியில் கஷ்டப்பட வேண்டாம். அவளுக்கு
ருக்மணி குக்கர் வாங்கிக் கொடுங்கள். ஒரு
மணி நேரத்தில் சாதமும் ஐந்துவித பதார்த்தங்களும் செய்யலாம்என்கிறது
இன்னொரு விளம்பரம்.


*
மேனகா,
(1935
ல் வெளிவந்த இப்படம்தான் தமிழில் வெளியான முதல் சமூகப் படம்; வடுவூர்
துரைசாமி ஐயங்காரின் நாவலைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில்தான் என்.எஸ்.கிருஷ்ணன் அறிமுகமாயிருக்கிறார்) ஆயிரம் தலைவாங்கி அபூர்வசிந்தாமணி, சந்திரலேகா, கண்ணகி, பாலாமணி (இதுவும் வடுவூராரின் பிரபல நாவல்தான்; பாரதிதாசன்
முதன்முதலில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள்
எழுதி வெளியான படம்) என்று
பெண்களை மையப்படுத்தி வெளியான திரைப்படங்களுக்குக் குறைவே இல்லை. இப்படங்களில்
குறிப்பிடத்தகுந்த ஒரு படம் சிந்தாமணி.’ எம்.கே. தியாகராஜ
பாகவதரின் வாழ்க்கையில் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் இது. 1937ல்
வெளியாகி 52 வாரங்கள்
தொடர்ந்து ஓடி, தமிழில்
அதுவரை வெளியான படங்களிலேயே அதிக நாட்கள் ஓடிய படம் என்ற பெயரைப் பெற்றது இப்படம். (மூன்று
தீபாவளிகள் கண்டஹரிதாஸ்பின்னர் 1944ல்தான் வெளியானது.) சிந்தாமணி
படத்தின் மூலம் கிடைத்த லாபத்தைக் கொண்டு மதுரையில் ராயல் டாக்கீசார் கட்டிய திரையரங்கம் தான் சிந்தாமணிதியேட்டர்.
இந்தப்
படத்தின் பாடல்களை கிராமபோன் ரெக்கார்டாக (இசைத் தட்டாக) வெளியிடத்
தயாரிப்பாளர்கள் கருதினார்கள். பாகவதரை அணுகினார்கள். ஆனால், பாகவதருக்குத்
தயக்கம். காரணம், அதற்கு முன்னால் படங்கள் வெளியான பின்னர்தான் பாடல்கள் கிராமபோன் ரெகார்டாக வெளிவந்தன. ஆனால், இப்போது படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கும்போதே ரெகார்ட் வந்தால், பலரும்
அதை மட்டும் வாங்கிக் கேட்டுவிட்டு, படத்தைப் பார்க்காமல் இருந்துவிடுவார்களோ என்று அவர் நினைத்தார். மேலும் அதற்கு முன்னால் அவரது பாடல்கள் தொகுப்பை வேறு ஒரு நிறுவனம்தான் வெளியிட்டிருந்தது. இது புதிய நிறுவனம். அதனால்
கிராமபோன் ரெகார்ட் வெளிவர அவர் ஒத்துழைக்கவில்லை.
இதனால்
தயாரிப்பாளர்கள் ஒரு தந்திரம் செய்தார்கள். படத்தில் நாயகி அஸ்வத்தம்மா, பாகவதருடன் பாடிய டூயட் பாட்டான மாயப்பிரபஞ்சத்தில் ஆனந்தம்என்ற
பாடலை கர்நாடக இசை வல்லுநரும், இசையமைப்பாளரும், பாடகருமான துறையூர் ராஜகோபால் சர்மாவை வைத்துப் பதிவு செய்து வெளியிட்டு விட்டனர். இதற்கு
அவர் குரல் பாகவதரின் குரலை ஒத்திருந்ததாக அவர்கள் கருதியதே காரணம். (ராஜகோபால்
சர்மா தான் எம்.எஸ்.சுப்புலட்சுமிஜி.என்.பி. நடித்தசகுந்தலைபடத்தின்
இசையமைப்பாளர்.) கூடவே பாடியது யார் என்று விளம்பரம் செய்யாமல் சிந்தாமணி படப்பாடல்என்று
மட்டுமே தயாரிப்பாளர்கள் இசைத்தட்டில் குறிப்பிட்டிருந்தார்கள்.
இசைத்
தட்டும் நிறைய விற்பனையாகியது. ஆனால் மக்களுக்கு உண்மை புரிந்துவிட்டது. கண்டனம் எழுந்தது. அதனால்
வேறு வழியில்லாமல் அவர்கள் மீண்டும் பாகவதரை அணுகி, சமாதானம்
செய்து, அவர்
கேட்ட தொகைக்கு ஒப்புக்கொண்டு மீண்டும் படத்தின் பாடல்களை ஒலிப்பதிவு செய்து வெளியிட்டனர். ஆனால், ‘மாயப்பிரபஞ்சத்தில்..’ பாடலை மட்டும் மீண்டும் பாட பாகவதர் சம்மதிக்கவில்லை. ‘ஏற்கெனவே அந்த இசைத்தட்டுதான் வெளிவந்து விட்டதே!. மீண்டும்
எதற்காகப் புதிதாகப் பாட வேண்டும்?’ என்று
கூறி, அந்தப்
பாடலை மட்டும் பாட மறுத்து விட்டார். ஆக, படத்தில் தியாகராஜ பாகவதர் குரலில் ஒலிக்கும் அந்தப் பாடல், இசைத்தட்டில்
ராஜகோபால் சர்மாவின் குரலில் ஒலித்தது. அந்த
வகையில் தமிழின் முதல் பின்னணிப் பாடகர் என்று துறையூர் ராஜகோபால் சர்மாவைச் சொல்லலாம்.
அந்தக்
கால நகைச்சுவை நடிகை டி..மதுரம் கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார் என்பது பாண்டுரங்கன் அல்லது ஜே ஜே விட்டல்என்ற
பட விளம்பரத்தின் மூலம் தெரிய வருகிறது. நாயகனாக
நடித்திருப்பவர் மஹாராஜபுரம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி. அக்காலத்தின் பிரபல இசையறிஞர் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயரின் சகோதரர் இவர். உடன்காளிஎன்.ரத்னம், பி.எஸ்.சிவபாக்கியம், எம்.எஸ்.சரோஜா உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இதே கிருஷ்ணமூர்த்தி நாயகனாக நடித்திருக்கும் மற்றொரு படம் ரத்னாவளி. இதில்தான்
டி..மதுரம் அறிமுகமானார். (மஹாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தியும் கர்நாடக இசை வித்வான் ஜி.என்.பாலசுப்ரமணியமும் இணைந்து நடித்த படம் பாமா விஜயம். இந்தப்
படத்தில் கிருஷ்ணமூர்த்திக்குக் கிருஷ்ணன் வேடம். ஜி.என்.பி. நாரதர். துவாபரயுகத்துக்
கிருஷ்ணன், கலியுகத்தில், 18ம் நூற்றாண்டில் தோன்றிய தியாகராஜ சுவாமிகளின் கீர்த்தனையைப் படத்தில் பாடுகிறார். இது ஒரு முரண் என்றால் படத்தின் இறுதிக் காட்சியில் கிருஷ்ணன், பாமா, ருக்மணி, நாரதர்
எல்லாரும் ஜன கண மனபாடலைப்
பாடுகிறார்கள். முதன்முதலில் ஒரு தமிழ்ப் படத்தில் தேசியகீதம் ஒலித்தது என்றால் அது இந்தப் படத்தில்தான். இந்தக் காட்சிக்கு அந்தக் காலத்தில் அவ்வளவு வரவேற்பு. காரணம், சுதந்திரப் போராட்டம் உச்சத்தில் இருந்த 1934ல் இப்படம் வெளியானதுதான்தகவல்: ராண்டார்
கை.)
அந்தக்
காலத் திரைப்பட விளம்பரங்களிலிருந்தும் சுவையான பல செய்திகளை அறிந்து கொள்ள முடிகிறது. உதாரணமாகபாலநாகம்மாஎன்ற படம் 25 வாரங்களுக்கும்
மேல் ஓடியிருக்கிறது. தலைப்பு தமிழில் இருந்தாலும் உண்மையில் இது தமிழ்ப்படமல்ல; தெலுங்குப்படம். இது ஜெமினியின் இரண்டாவது தயாரிப்பும் கூட. (முதல்
தயாரிப்பு: மதனகாமராஜன்) ஒரு தெலுங்குப்படம், தமிழ்நாட்டில் 25 வாரம் ஓடியிருக்கிறது என்பது உண்மையிலேயே சாதனைதான். (நீண்ட
வருடங்களுக்குப் பிறகு 1978ல் வெளிவந்தமரோசரித்ராஅந்தச் சாதனையை முறியடித்தது.)
*
தமிழ்ப்
படங்களுக்கு ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பது தற்போதைய வழக்கம். ஆனால், அக்காலத்தில் சில தமிழ்ப் படங்களுக்குப் பிற மொழிகளில் பெயர் வைத்திருக்கின்றனர். அதற்கு நல்ல வரவேற்பும் இருந்திருக்கிறது. சான்று சம்சார நௌகாஎன்று
பெயரிடப்பட்டிருக்கும் ஒரு படம். நடித்திருப்பவர்கள், டி.ஆர்.ராமச்சந்திரன், பி.ஆர்.பந்துலு, பிரேமாவதி, சூர்ய குமாரி உள்ளிட்டோர். இயக்கம்: ஹெ.எல்.என்.சிம்ஹா. இவர்
கன்னடத் திரைப்பட உலகின் புகழ்பெற்ற இயக்குநர். முதலில்
கன்னடத்தில் வெளியாகி வெற்றி பெற்று பின்னர் தமிழுக்கு 1948ல் வெளிவந்தது இப்படம். கன்னடத்தில்
வெளியான முதல் சமூகப் படம் சம்சாரா நௌகா (கன்னடத்தில்
நௌகே) தான். அந்தக் காலத்திலேயே மகாத்மா காந்தி பற்றி 12 ரீல்
கொண்ட ஒரு தமிழ்ப் படம் வெளியாகியிருக்கிறது என்பதும் ஓர் ஆச்சரியமான செய்திதான்.
திரைப்படங்களை
விளம்பரப்படுத்தும் வகையில் படம் பார்ப்பவர்களுக்குப் பரிசுகளை அறிவிக்கும் உத்திகளை அந்தக் காலத்திலும் பயன்படுத்தியுள்ளனர். படத்தின் சிறந்த பாடல்களை வரிசைப்படுத்தி பரிசுகளை வெல்லுங்கள் என்கிறதுஜெமினியின்நந்தனார்பட விளம்பரம். இக்காலத்தில்
பழைய படங்களின் தலைப்புகளில் புதிய படங்கள் வெளியாவது போல் அந்தக் காலத்திலும்நந்தனார்என்னும்
இதே பெயரில் 1933லும், 1935லும் படங்கள் வெளியாகியுள்ளன. 1935ல் வெளியானபக்த
நந்தனார்படத்தில்
இசைக்கலைஞர் மஹாராஜபுரம் விஸ்வநாத ஐயர் வேதியராக நடித்திருந்தார். (நந்தனார் : கே.பி.சுந்தராம்பாள்.) வித்வான் விஸ்வநாத ஐயர் நடித்த ஒரே படம் இதுதான்.
*
அக்காலத்தில்
எம்.ஜி.ஆரை வைத்துப் படம் தயாரிக்கப் பலர் முன் வந்திருக்கின்றனர். ஆனால், எல்லாருக்கும்
அதில் வெற்றி கிடைத்ததில்லை. எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவராக இருந்து, அவரை
வைத்துப் படம் தயாரிக்க முன்வந்து, அதில்
தோல்வி அடைந்தவர்களுள் ஒருவர் கண்ணதாசன். அந்தப்
படம் ஊமையன் கோட்டை.’ ஊமைத்துரையின்
வரலாற்றை அடிப்படையாக வைத்து ஊமையன் கோட்டைஎன்ற
நாவலை எழுதியிருந்தார் கண்ணதாசன். நாவலைக்
கூட திரைப்படத்திற்கு ஏற்றவாறு சுவாரஸ்யமான அம்சங்கள் சேர்த்துத்தான் எழுதியிருந்தார். அதனைப் படமாக எடுக்கலாம் என்று தீர்மானித்தார். படத்தில் எம்.ஜி.ஆர் கதாநாயகனாக நடிப்பது என்று முடிவானது. பூஜை
போடப்பட்டு சிலநாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. உண்மையைச்
சொல்லப் போனால் மாலையிட்ட மங்கைக்கு
முன்பாக முதன்முதலில் கண்ணதாசனால் தயாரிக்கப்பட்ட படம் இதுதான். ஒருவிதத்தில்
இது கண்ணதாசனின் முதல் படம் மட்டுமல்ல; கனவுப்
படமும் கூட. ஆனால், சிலகாரணங்களால் படப்பிடிப்பு பாதியிலேயே நின்று போனது. கண்ணதாசன்
கடனாளி ஆனார். ஆனாலும்
மனம் தளராத அவர் அடுத்த ஆண்டே மாலையிட்ட மங்கைபடத்தை
எடுத்து வெளியிட்டார். தொடர்ந்து தனது கனவுப் படமான ஊமையன் கோட்டையின் நாயகன் ஊமைத்துரைபாத்திரத்தை
முதன்மைப் பாத்திரமாக்கி, எஸ்.எஸ்.ராஜேந்திரனை நாயகனாக வைத்து சிவகங்கைச் சீமைபடத்தைத்
தந்தார். ‘பாரி
மகள்என்ற
படத்தின் தயாரிப்பிலும் கண்ணதாசன் ஈடுபட்டிருந்தார். ஆனால், அது
வெளிவந்ததாகத் தெரியவில்லை.
சினிமா
விளம்பரங்கள்தான் என்றில்லை. கிராமபோன்
இசைத் தட்டு விளம்பரங்களும்கூடப் பல சுவையான செய்திகளைச் சொல்கின்றன. வஸந்தகோகிலம், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.கே.பட்டம்மாள் போன்ற இன்றைக்கும் புகழ்பெற்றவர்கள்தான் என்றில்லை; தர்மாம்பாள், கொச்சம்மாள் (ஹரிகதா), குமாரி
மாசிலாமணி (பெண்தான்!), எம்.எஸ்.விஜயாள், சுந்தர
காமக்ஷி, தாயம்மாள், நஞ்சன் கூடு நாகரத்னம்மாள், மிஸ். ரத்தினாம்பாள், மிஸ் மனோரஞ்சிதம், மிஸ்.கண்ணாமணி, மிஸ். தேவநாயகி, மிஸ். லோகநாயகி, மிஸ்.ஜயலஷ்மி
போன்ற பல பெண் வித்வாம்சினிகளின் பாடல்களும் கிராமபோன் இசைத்தட்டுக்களாக வெளியாகியுள்ளதை அறிந்துகொள்ள முடிகிறது. இக்காலத்தை
விட அக்காலத்தில் பெண் பாடகிகள் அதிகமாக இருந்திருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது அதிலும் சுந்தர காமாக்ஷி எம்.எஸ்.சுப்புலட்சுமியை விடப் புகழ்பெற்றவராய் இருந்திருக்கிறார். ‘பிராட்காஸ்ட் ரத்தினம்என்று
போற்றப்பட்டிருக்கிறார்.
முசிரி
சுப்பிரமணிய ஐயர், மதுரை
மணி ஐயர், செம்பை
வைத்தியநாத பாகவதர், சித்தூர்
சுப்பிரமணியப் பிள்ளை என இன்றைக்கும் அறியப்படும் ஆண் சங்கீத வித்வான்களைப் போலவே, இன்றும்
நாம் அறியாத டி..கே.ஸ்வாமி
பாகவதர், சௌரிராஜ
ஐயங்கார், இரத்தின
பத்தர், எஸ்.எஸ்.ராஜப்பா, பபூன் ஷண்முகம், கே.சுப்ரமணியம், விளாத்திகுளம் சுவாமிகள, மகம்மத்
பீர், எஸ்.வி. சுப்பய்யா
பாகவதர் எனப் பலரும் அக்காலத்தில் புகழ்பெற்றவர்களாய் இருந்திருக்கின்றனர். அவர்கள் பாடி கிராமபோன் இசைத்தட்டுக்களும் வெளியாகியிருக்கின்றன. கர்நாடக சங்கீதம், ஹரிகதை, நாதஸ்வரம், நாடகப்
பாடல்கள்தான் என்றில்லாமல்பாண்டு வாத்தியம்’, ‘ஹார்மோனியம்போன்றவையும் தனித்தனி கிராமபோன் ரிகார்டாக வெளிவந்திருக்கும் செய்திகள் ஆச்சரியமூட்டுகின்றன.
நாடக
விளம்பரங்களுக்கும் குறைவில்லை. பாய்ஸ் கம்பெனி, ஸ்ரீராம
பாலகான வினோத சபா, மதுரை
தேவி பாலவிநோத சங்கீத சபை (நவாப்
டி.எஸ். ராஜமாணிக்கத்தின் நாடகக்குழு இது) என
பல நாடகக்குழுக்களின் விளம்பரங்கள் மூலம் அக்காலத்தில் நாடகங்களுக்கு இருந்த வரவேற்பை அறிந்து கொள்ள முடிகிறது.
பாரதியாரின்
நூல்கள் பற்றிய பாரதி பிரசுர விளம்பரம், ‘பெண்களுக்காகப்
பெண்கள் பலர் எழுதிய, கதைகளும், கட்டுரைகளும், பாட்டுக்களும் நிறைந்து விளங்கும் ஸ்தீரிகள் சித்திர மாதப் பத்திரிகை. ஒவ்வொரு
ஸ்திரீயும் வாசித்து இன்புற வேண்டியதுகிரஹலக்ஷ்மி’, என்னும் பெண்கள் இதழுக்கான விளம்பரம், பாரதி
புதுச்சேரியில் இருந்தபோது எழுதிய, நீலகண்ட
பிரம்மச்சாரி ஆசிரியராக இருந்த சூரியோதயம்இதழ் விளம்பரம் போன்றவை ஆச்சரியப்படுத்துகின்றன.
இன்றைய
பாக்கெட் நாவல், க்ரைம்
நாவல் போல் அந்தக் காலத்தில் துப்பறியும் நாவல்களாக எழுதித் தள்ளியவர் வடுவூர் துரைசாமி ஐயங்கார். நாவல்
வெளியீட்டிற்காக அவர் ஆரம்பித்து நடத்திய இதழின் பெயர் நவரசமாலிகாஎன்பதை ஒரு விளம்பரத்தின் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. ’மனோரஞ்சனிஎன்னும் மாத இதழ் மூலமும் வடுவூரார் துப்பறியும் நாவல்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்ததை அறிந்து கொள்ள முடிகிறது. ஒரே
முகவரியில் இருந்து ஆனால், வெவ்வேறு
நிறுவனப் பெயர்களில் அவர் செயல்பட்டு வந்ததையும் விளம்பரங்கள் காட்டுகின்றன. அந்தக் கால நாவல் ராணியான
வை.மு.கோதைநாயகியின் நாவல்கள் பட்டியல் வியப்பைத் தருகிறது. இசை
வளர்ப்பதற்காக 1933 முதல் வெளிவந்த இதழ் ஸங்கீத அபிமானிஎன்பது. அக்காலத்தின் பிரபல ஆடிட்டர்களுள் ஒருவரான வைத்தியநாத ஐயர் இதன் ஆசிரியராக இருந்தார். . கொக்சாஸ்திரம் என்பது எதைப் பற்றிய விளம்பரம் என்பதை நான் உங்களுக்குச் சொல்லத் தேவையில்லை. ’படுக்கையறைப் படங்கள்’ (புத்தகம்தான்) விளம்பரங்களும்கூடச் சில இதழ்களில் இடம் பெற்றிருக்கின்றன.
*
1 + 0 = 2 என்கின்றன இன்றைய ஆடித்தள்ளுபடி விளம்பரங்கள். இலவசமாக ஒன்றைக் கூடுதலாகத் தருவதை இப்படிச் சொல்லாமல் சொல்கிறார்களாம். அன்றைக்கும் இப்படிச் சில பொருட்கள்இனாம்ஆக அளிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுள் ஒன்று, ‘றாவ்ஸ்
டெவலப்பர்என்னும்
உயர்ந்த ரப்பரினால் ஆன தேகப்பயிற்சி உபகரணம். 12 வயதுமுதல் 70 வயதுவரை
யாவரும் உபயோகிக்கலாம் என்கிறது இவ்விளம்பரம். கடிதம் எழுதிப் போட்டால் போதுமாம். வீடு
தேடி வந்து விடுமாம். இரண்டாயிரம்
ரூபாய்க்கு 20 பொருள்கள், ஆயிரம்
ரூபாய்க்கு 10 பொருள்கள் என்று மிக்ஸி, ஃபேன், குக்கர், கேஸ்
ஸ்டவ் எல்லாம் ஆங்காங்கே இக்காலத்தில் விற்கப்படுவது போல, அந்தக்
காலத்திலும் சில பொருள்கள் விற்கப்பட்டிருக்கின்றன. ரூ. 6க்கு 15 நல்ல சாமான்கள் என்ற தலைப்பில், டார்ச்
லைட், ஸேப்டி
ரேஸர், ப்ளேட், ப்ரஷ், பொத்தான்கள், செண்ட்பாட்டில், ரோல்டு கோல்டு நிப் பேனா என்று அளிக்கப்படும் பொருட்களின் பட்டியல் நீளுகிறது.
1937களில் விலைவாசி எப்படி இருந்தது என்பதைக் காட்டுகிறது ஒரு விளம்பரம் (உப்பு
ஒரு படி 1 அணா; துவரம் பருப்பு 15 அணா, உளுத்தம்பருப்பின் விலை: 1 ரூபாய் 2 அணா, களிப்பாக்கு
ஒரு வீசை: 5 ரூபாய், 6 அணா..) 1943ல்
சோப்களின் விலை என்ன என்று விளக்குகிறது மற்றொரு விளம்பரம். சர்க்கரை
வியாதி அந்தக் காலத்திலும் இருந்திருக்கிறது என்பதைஏழே
நாளில் குணமாகும்என்ற
அறிவிப்புடன் வெளியாகியிருக்கும் விளம்பரம் காட்டுகிறது. தான் விலாசம் மாறியதை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் மிருதங்கம் கண்ணன் என்ற இசைக்கலைஞர் கொடுத்திருக்கும் விளம்பரம், தொழில்
மீதான அவரது அக்கறையைக் காட்டுகிறது. லாட்டரி விளம்பரங்களுக்கும் பஞ்சமில்லை.
நெய்
விளம்பரம் குறிப்பிடத்தக்க ஒன்று. தங்கள்
நெய் சுத்தமானது; கலப்பிடமில்லாத அசல் நெய் என்பதற்காக பி.கே.வி. பிராண்ட்
நெய் ஆதாரச் சான்றிதழ் ஒன்றையும் தன் விளம்பரத்தோடு சேர்த்து வெளியிட்டிருக்கிறது. காளிகட்டைச் சேர்ந்த கேரளா சோப் இன்ஸ்டிட்யூட்பரிசோதனை செய்து சான்றளித்திருக்கிறது. சோப் இன்ஸ்டிட்யூட்டிற்கும் நெய்க்கும் என்ன சம்பந்தம் என்பது கண்களில் அசல் விளக்கெண்ணெய் விட்டுக்கொண்டு தேடியும் அகப்படவில்லை. அதுபோல விகடனுக்கும் பாக்குத்தூளுக்கும் என்ன சம்பந்தமோ தெரியாது; விகடன்
தாத்தாவின் படத்தோடு விகடன் பரிமள பாக்குத்தூள்என்ற விளம்பரம் வெளியாகியிருக்கிறது. ஸ்தீர்கள் ஆரோக்கியமாக இருக்கச் சாப்பிட வேண்டியது லோத்ராவாம். ருசித்துச் சாப்பிட நீங்கள் வரவேண்டியது மவுண்ட்ரோடில் இருக்கும் ஷாங்காய் பிறாமணாள் காபி ஹோட்டல்என்று
வரவேற்கிறது ஒரு விளம்பரம். ‘ஷாங்காய்க்கும் பிறாமணாள்க்கும்
என்ன சம்பந்தம் என்பது தெரியவில்லை.
*
இன்றைக்கு
ரயில்களில் பயணம் செய்ய டிக்கெட் கிடைப்பதே அரிதான விஷமாய் இருக்கையில் அந்தக் காலத்தில் ரயிலில் பயணம் செய்யச் சலுகைகளை அறிவித்திருக்கும் விளம்பரங்கள் ஆச்சரியத்தைத் தருகின்றன. தீபாவளிக்கான
பயணத்தில் ‘100-மைல்களுக்கு மேற்பட்ட பிரயாணத்திற்கு எல்லா ஸ்டேஷன்களுக்குமிடையே எல்லா வகுப்புகளுக்கும் மலிவான ரிடர்ன் டிக்கட்டுகள் கொடுக்கப்படும்என்கிறது ஒரு விளம்பரம். மைசூர்
மகாராஜா பிறந்த தினத்தையொட்டி நடக்கும் குதிரைப் பந்தயம் காண மலிவு விலையில் டிக்கெட்டுகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ரிடர்ன் டிக்கெட்டுகளை கிட்டத்தட்ட 1 மாதத்திற்குள் உபயோகப்படுத்திவிட வேண்டுமாம். 3 வயதிற்கு மேல் 12 வயதுக்குள்
உள்ள குழந்தைகளுக்கு அரை சார்ஜாம். இன்றைக்கும்
குழந்தைகளுக்கு 5-12 வயது முதல் அரை சார்ஜ் என்பதை நினைத்து ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.
செவிடர்களே இங்கே வாருங்கள்; நான்
உங்களுக்குக் கேட்கும் ஆற்றலைத் தருகிறேன்என்று
செவிடர்களைக் கூவி அழைக்கிறது ஒரு விளம்பரம். ‘கால்செவிடு, அரைச்செவிடு, முழுச்செவிடு எதுவாக இருந்தாலும் எங்கள்டெப்கில்லர்மூலம் சரி செய்துவிடலாம்; ‘செவிடர் செவ்வையாகச் செவியுறுகிறார்’’ என்கிறது அது.
கேசவர்த்தினி, மாதவிடாய்க் கோளாறுகளை நீக்கும் ஸ்திரி சோதரி, காட்லிவர்
ஆயில் விளம்பரம், குட்டிக்
கூரா பவுடர் விளம்பரம், குமார
சஞ்சீவினி, கெற்ப
சஞ்சீவினி, எல்.ஜி. பெருங்காயம், நெ.1. மணிமார்க்
பட்டணம் மூக்குத் தூள், வைர
நகை விளம்பரம் என விதவிதமாக விளம்பரங்கள் வெளியாகியிருக்கின்றன.
லக்ஸ்சோப்பை
மேனியின் அழகுக்கு அழகு சேர்க்கும் சோப்பாகத்தான் நாமறிந்திருக்கிறோம். ஆனால், அது
ஆரம்ப காலத்தில் துணி துவைக்கும் சோப்பாகத்தான் இருந்திருக்கிறது என்பது ஓர் ஆச்சரியம். குழந்தையின்
உத்தமான துணைவன், மேனிக்கு
அழகு தரும், தோல்
வியாதியை நீக்கும்இதெல்லாம்
குட்டிக்கூராவின் பெருமைகள். இது
ஆயிண்மெண்டாகவும் கிடைத்திருக்கிறது. மூன்று தலைமுறைகளாகத் தாய் மகளுக்குக் கொடுக்கச் சொல்லித் தரும் உட்வர்ட்ஸ் க்ரைப் வாட்டர் (1937 விளம்பரம் இது) என்று
விதம் விதமான விளம்பரங்கள் அக்கால இதழ்களை அலங்கரிக்கின்றன.
குஜராத்தில் உங்கள் வியாபாரம் நன்கு நடக்க எங்கள் பத்திரிகைகளில் விளம்பரம் செய்யுங்கள்என்கின்றன குஜராத் சமாச்சார் மற்றும் பிரஜாபந்து இதழ்கள். ஆங்கிலத்தில்
கடிதம் எழுத வேண்டும் என்பதுதான் நிபந்தனை. ‘வியாபாரத்திற்கு
அழகு விளம்பரம் செய்தல்என்று
சொல்லி விளம்பரத்திற்கே விளம்பரம் செய்கிறது எம்.சி.அப்பாசாமி செட்டி & கம்பெனி விளம்பரம். இப்படி
அந்தக் கால இதழ்களின் விளம்பரங்கள் மூலம் நமக்குக் கிடைக்கும் செய்திகள் பலப்பல.
பெண்ணை
ஆணாக மாற்றிய அதிசய அறுவை சிகிச்சை, இறந்தவரைச்
சில மணி நேரம் உயிர்ப்பித்த ஐரோப்பியர், கயிற்றை வானில் வீசி தூண் போல நிற்க வைத்து குழந்தையும் தானும் அதில் ஏறிச் சென்று மறைந்து பின் திரும்ப வந்த அதிசய மந்திரவாதி, ஆதினகர்த்தர் மேல் வழக்குத் தொடர்ந்த அனவரதம் நாயக பிள்ளை, அந்தக்
காலத்திலேயே கோயில்களில் சிலையைக் கொள்ளையடித்த சிலைத் திருடர்கள் போன்ற செய்தித் துணுக்குகள் பற்றியெல்லாம் எழுதினால், ஏற்கெனவே
நீண்டிருக்கும் இந்தக் கட்டுரை, இன்னும்
நீநீண்டுவிடும் என்பதால் இத்துடன் நிறைவடைகிறது.

Posted on Leave a comment

விருப்பாச்சி வீரர் கோபால் நாயக்கர் | கிருஷ்ணன் சுப்பிரமணியன்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு கணிசமானது. அதிலும் வட இந்தியாவின் அரசர்கள் ஒருங்கிணைந்து போர்க்கொடி தூக்குவதற்கு முன்னரே, தென்னிந்தியாவில், அதிலும் குறிப்பாக தமிழகத்தின் ஆட்சியாளர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கடும் போராட்டத்தில் இறங்கிவிட்டனர். இதில் பங்குபெற்ற பூலித்தேவர், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, வீரமங்கை வேலு நாச்சியார், மருது பாண்டியர்கள் போன்ற பெயர்கள் நாம் நன்கு அறிந்தவை. இவர்களோடு இணைந்து பிரிட்டிஷருக்கு எதிரான போரில் செயல்பட்டவரும், அதன் மூளையாக விளங்கியவருமான கோபால நாயக்கர் அதிகம் அறியப்படாத ஒருவர்.

நாயக்கர்கள் ஆட்சியின் ஆரம்பத்தில், தளவாய் அரியநாத முதலியாரால் பிரிக்கப்பட்ட எழுபத்தியிரண்டு பாளையங்களில் ஒன்றுதான், திண்டுக்கல்லுக்கு அருகில் இருக்கும் விருப்பாச்சி. சுற்றிலும் மலைகள் சூழ்ந்து, இயற்கையாகவே நன்கு பாதுகாப்பான இடம். நாயக்கர்களோடு தமிழகம் வந்த ஒரு பிரிவினரால் ஆளப்பட்டது விருப்பாச்சி. இவர்கள் ராஜகம்பளம் என்னும் நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவர்கள். சிறந்த வீரர்கள். இந்த வம்சத்தில் பொயு 1725ம் ஆண்டு பிறந்தவர் கோபால் நாயக்கர் என்று அழைக்கப்பட்ட திருமலை கோபால சின்னப்ப நாயக்கர். இவர் தந்தையின் பெயர் வீரையா நாயக்கர், தாயார் காமாட்சி அம்மாள்.

கோபால் நாயக்கர் பாளையத்தின் 19வது ஆட்சியாளராகப் பொறுப்பேற்றபோது, தமிழகம் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தது. சந்தாசகேப்பை வீழ்த்தி ஆற்காட்டு நவாப்பாக மீண்டும் முகமது அலி பதவியேற்றிருந்தார். இந்தப் போரில் தமக்கு உதவியதற்காக பிரிட்டிஷாருக்கு தமிழகத்தின் பாளையக்காரர்களிடமிருந்து வரி வசூலிக்கும் பொறுப்பையும் விட்டுத் தந்திருந்தார். இதைச் சாக்கிட்டு பாளையக்காரர்களை பிரிட்டிஷார் நெருக்கத் தொடங்கியிருந்தனர். இது ஒருபுறமிருக்க, பிரிட்டிஷ் அதிகாரத்திற்கு எதிராகப் போர்முழக்கம் எழுப்பிய ஹைதர் அலி தமிழகத்தின் சில பகுதிகளை வெற்றிகொண்டு திண்டுக்கல்லையும் பிடித்து அங்கே தங்கியிருந்தார். பாளையக்காரர் ஆட்சிக்கு பிரிட்டிஷாரால் ஆபத்து கட்டாயம் விளையும் என்பதை உணர்ந்த கோபால் நாயக்கர் ஹைதர் அலியுடன் சேர்ந்துகொண்டார்.

பிரிட்டிஷ்காரர்களுக்கு வரி கொடுக்க மறுத்த பாளையக்காரர்களை அடக்குவதற்காக கர்னல் அலெக்ஸாண்டர் ஹெரானின் தலைமையில் புறப்பட்ட படை, முகமது யூசூப் கான் என்ற மருதநாயகத்தோடு இணைந்து எதிர்ப்பாளர்களைக் கொன்று குவித்தது. பிரிட்டிஷாரை எதிர்த்த சிவகங்கை அரசர் முத்து வடுகத்தேவர் யூசூப்கானின் படையால் கொல்லப்பட்ட பிறகு அரசி வேலுநாச்சியாரும் தளபதிகளான மருது சகோதரர்களும் திண்டுக்கல்லுக்கு வந்து சேர்ந்தனர். திண்டுக்கல்லில் தங்கியிருந்த ஹைதர் அலியைச் சந்தித்த வேலுநாச்சியார் சிவகங்கையை மீட்க அவரிடம் உதவி கோரினார். தம்மிடம் அடைக்கலமாக வந்த வேலுநாச்சியாரையும் மருது சகோதரர்களையும் விருப்பாச்சியில் ஹைதர் அலி தங்க வைத்தார். கோபால் நாயக்கரும் மருது சகோதரர்களும் நெருங்கிய நண்பர்களாக உருவெடுக்க இந்தச் சந்தர்ப்பம் உதவியது. சிவகங்கையை மீட்க ஒரு படையைத் திரட்டவும் கோபால் நாயக்கர் உதவி செய்தார். இப்படித் திரட்டப்பட்ட படையுடன் ஹைதர் அலி அளித்த படையையும் சேர்த்துகொண்டு மீண்டும் சிவகங்கையைத் தாக்கி அதைக் கைப்பற்றினார் வேலுநாச்சியார். அதன்பின் வேலு நாச்சியாருக்கு உடல்நலன் குன்றிய தருணத்தில், மருது சகோதரர்கள் அவரைத் தம் நண்பரான கோபால் நாயக்கரின் பாதுகாப்பில் இருக்கும் வகையில் மீண்டும் விருப்பாச்சிக்கே அனுப்பி வைத்தனர். இப்படி சிவகங்கை அரசும் விருப்பாச்சியும் நெருங்கி வந்தன.

முதல் முயற்சி

சிவகங்கையில் பின்னடைவைச் சந்தித்தாலும், பாளையக்காரர்களுக்கு எதிரான போர்களை பிரிட்டிஷ் படை தொடர்ந்தது. நெற்கட்டான்செவல், பாளையங்குறிச்சி, எட்டயபுரம் ஆகிய இடங்களில் கடுமையான போர்கள் நடைபெற்றன. பாளையக்காரர்களின் இருபத்தொன்பது கோட்டைகள் அழிக்கப்பட்டன. 1763ம் ஆண்டிற்கும் 1767ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் டொனால்ட் காம்ப்பெல், மேஜர் வில்லியம் ஃப்ளிண்ட், மேஜர் ப்ரஸ்டன், காப்டன் ரும்லி ஆகியோர் ஒன்றன்பின் ஒன்றாகப் பாளையங்களை வெற்றிகொண்டு பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் கொண்டுவந்தனர். நாட்டில் பிரிட்டிஷாரின் கை ஓங்குவதைக் கண்ட கோபால் நாயக்கர், வலிமையான பிரிட்டிஷ் படையை எதிர்க்க, பிரிந்து கிடக்கும் பாளையக்காரர்களால் இயலாது என்று கணித்தார். இருப்பினும் கர்னல் ஃபுல்லர்ட்டனின் தலைமையில் திண்டுக்கல்லைத் தாக்கவந்த படையோடு 1792ம் ஆண்டு மோதினார். ஆனால் அது பலனளிக்கவில்லை. திண்டுக்கல் பகுதி மைசூர் ராஜ்யத்துடன் இணைக்கப்பட்டது. இனிமேலும் தகுந்த முன்னேற்பாடுகள் இல்லாமல் பிரிட்டிஷாரை எதிர்ப்பது முட்டாள்தனமானது என்று கருதிய கோபால் நாயக்கர், அவர்களோடு சமாதானமும் செய்துகொண்டு முறையாக வரி செலுத்த ஆரம்பித்தார்.

அதே சமயம், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஒரு வலுவான கூட்டமைப்பு உருவாக்கும் முயற்சியிலும் இறங்கினார். ஆங்கிலேயரோடு நிகழ்ந்த போர்களில் தோல்வியுற்றுத் தாங்கள் ஆட்சி செய்த பகுதிகளை அவர்களிடம் இழந்தவர்கள், அவர்களின் கடுமையான வரிவசூலிப்பு முறைகளால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரைத் திரட்ட ஆரம்பித்தார். திண்டுக்கல், மணப்பாறை, கோவை, சேலம் ஆகிய இடங்களுக்குத் தமது தூதர்களை அனுப்பி அங்கு ஆட்சி செய்த பாளையக்காரர்களோடு பேச்சு வார்த்தை நடத்தினார். அவர்களுக்கிடையே மண உறவுகள் ஏற்படவும் உதவி செய்தார்.

மணப்பாறையின் லக்ஷ்மி நாயக்கர், ஆனைமலையின் அருகில் இருந்த டெல்லிக்கோட்டையின் யதுல் நாயக்கர், தேவதானப்பட்டியின் பூஜாரி நாயக்கர், கன்னிவாடியின் பாளையக்காரர், ரத்னகிரி, நத்தம் ஆகிய இடங்களின் தலையாரி ஆகியோர் இந்தக் கூட்டணியில் முக்கியப்பங்கு வகித்தனர். திண்டுக்கல்லுக்குத் தென்பகுதியில் மதுரையைச் சுற்றி இருந்த பகுதிகளின் தலைவர்களாக இருந்த கள்ளர் தலைவர்களோடும் கோபால் நாயக்கர் பேச்சு நடத்தினார். கல்யாணித் தேவர், பெருமாள் சாமி போன்ற கள்ளர் தலைவர்கள் திண்டுக்கல் வந்து இந்தக் கூட்டணியில் சேரச் சம்மதம் தெரிவித்தனர். தலைவர்களோடு மட்டும் நின்றுவிடாமல் நாட்டின் குடிமக்களோடும் உள்ளூர்த் தலைவர்கள் மூலம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டு அவர்களுடைய ஆதரவையும் பெற்றார் நாயக்கர்.

விருப்பாச்சியின் அருகில் இருந்த அடர்ந்த மலைக்காடுகளில் கூட்டணித் தலைவர்கள் அடிக்கடி சந்தித்து தாங்கள் மேற்கொள்ள வேண்டிய முயற்சிகளைப் பற்றி விவாதித்தனர். இந்த ரகசிய ஆலோசனைகள் பற்றி பிரிட்டிஷ் ஒற்றர்களால் அதிகம் அறிய முடியாமலிருந்தது ஒரு பெரிய அனுகூலமாக இருந்தது. 1799ம் ஆண்டு ஆரம்பத்தில் லக்ஷ்மி நாயக்கரும் மற்ற தலைவர்களும் விருப்பாச்சி வந்து சேர்ந்தனர். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு எதிராக பிரிட்டிஷார் மும்முரமாகச் செயல்பட்டுக்கொண்டிருந்த தருணம் அது. கட்டபொம்மனும் ராஜகம்பள நாயக்கர் இனத்தைச் சேர்ந்தவர் என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது. இந்தக் கூட்டத்தில் கட்டபொம்மனுக்குத் தேவையான உதவிகள் அனுப்புவதென்றும், கூட்டணிக்கு மேலும் வலுச்சேர்க்க திப்பு சுல்தானுக்குத் தூது அனுப்புவதென்றும் முடிவு செய்யப்பட்டது. திப்புவிடம் லக்ஷ்மி நாயக்கரே தூது சென்றார். பிரிட்டிஷாருக்கு எதிராக திப்பு பெற்ற வெற்றிகளும், அவரது படை வலிமையும் அவரோடு கூட்டுச்சேர தமிழகத் தலைவர்களைத் தூண்டின. ஆனால் இது ஒரு ‘போக்குக் காட்டும் விஷயம் மட்டுமே, திண்டுக்கல் கூட்டணிக்கு அவரைத் தலைவராக்கவோ அல்லது அதற்கான கொள்கை முடிவுகளை எடுப்பவராகவோ ஆக்க கூட்டணித் தலைவர்கள் விரும்பவில்லை’ என்று திண்டுக்கல்லின் கலெக்டராக இருந்த ஹர்டிஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

எது எப்படியிருந்தாலும் லக்ஷ்மி நாயக்கரின் தூது பலனளித்தது. திப்பு தன்னுடைய படைத் தலைவர்களில் ஒருவரான ஹாஜி கானை கூட்டணித் தலைவர்களுக்கு உதவும் வண்ணம், மைசூரின் தென்பகுதி எல்லையான பள்ளிப்பட்டிக்கு அனுப்பி வைத்தார். அவரோடு பேச்சுவார்த்தை நடத்த கள்ளர் தலைவர்களான கல்யாணி நாயக்கரையும், பெருமாள் சாமியையும் கோபால் நாயக்கர் அனுப்பி இருந்தார். இருவரையும் வரவேற்றுக் கௌரவித்த ஹாஜி கான், தகுந்த சமயத்தில் தாக்குதல் நடத்த தம் படைகள் தயாராக இருப்பதாகக் கடிதம் ஒன்றை கோபால் நாயக்கருக்கு அனுப்பினார். தவிர பிரிட்டிஷ் படையை ஊடுருவி அவர்கள் முகாமில் இருந்து துப்பாக்கிகள், குதிரைகள் ஆகியவற்றைக் கைப்பற்றுமாறு கூட்டணித் தலைவர்களுக்கு அந்தக் கடிதம் அறிவுறுத்தியது. இந்த முயற்சிகளைப் பற்றி அறிந்து கொண்ட பிரிட்டிஷ் கலெக்டர் ஹர்டிஸ் போர்ட் ஆஃப் ரெவென்யூவிற்கு மார்ச் 18, 1979ல் எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார் :

‘லக்ஷ்மி நாயக்கரும் ஹாஜி கானும் கூட்டணித் தலைவர்களை ஒரு தாக்குதலுக்குச் சம்மதிக்க வைத்துவிட்டனர். கம்பெனியின் பகுதிகளை, குறிப்பாக மாம்பாறை, எர்ரக்கோட்டை போன்ற தகுதிகளை தாக்கிக் கைப்பற்றுவது அவர்கள் திட்டம். இந்தத் தாக்குதலைச் சமாளிப்பதற்கு போதுமான வசதிகள் இங்கே இல்லை. இதை நீடிக்கவிட்டால் இந்தப் பகுதிகள் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்படும்.’

இந்தத் தருணத்தில் தொடங்கிய நான்காம் மைசூர்ப்போர் கம்பெனியின் பிரச்சினைகளை அதிகமாக்கியது. தங்களுக்குத் திறை செலுத்திய பாளையக்காரர்களுக்கு, அப்போரில் தங்களுக்கு உதவுமாறு பிரிட்டிஷ் நிர்வாகம் கோரிக்கை வைத்தது. இதுதான் சரியான தருணம் என்று எண்ணிய கோபால் நாயக்கர் அந்த வேண்டுகோளுக்குச் செவிமடுக்க மறுத்ததோடு மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் தளங்களுக்கு எதிராகப் பலமுனைத் தாக்குதலில் இறங்கினார். திண்டுக்கல் படைகள் தாராபுரம், எர்ரக்கோட்டை ஆகிய இடங்களில் தாக்குதல் நிகழ்த்தின.

இச்சமயத்தில் தென்தமிழகத்தில் கட்டபொம்மனின் படை பிரிட்டிஷாரிடம் தோல்வியடைந்து, கட்டபொம்மன் ஆங்கிலேயரால் வேட்டையாடப்பட்டு வந்தார். சிவகங்கையிலும் மருது சகோதரர்கள் வெளிப்படையாக பிரிட்டிஷாரை எதிர்க்க ஆரம்பிக்கவில்லை. மைசூர்ப்போரில் திப்பு தோல்வியடைந்த செய்தியும் கோபால் நாயக்கரை வந்தடைந்தது. இந்நிலையில் பிரிட்டிஷாரோடு பெரும் போர் ஒன்றைத் துவக்குவது அபாயகரமானது என்று முடிவு செய்த கோபால் நாயக்கர் தாக்குதல்களை அளவோடு நிறுத்திக்கொண்டார்.

கோபால் நாயக்கர் அமைத்த கூட்டணி பற்றியும் அதன் வலிமை பற்றியும் அறிந்திருந்த பிரிட்டிஷ்காரர்களும் அவரோடு போரில் ஈடுபட விரும்பவில்லை. இருப்பினும் இந்தத் தாக்குதல்களைப் பற்றிக் காரணம் கேட்க அவரை விசாரணைக்கு அக்டோபர் 1799ம் ஆண்டு அழைத்தனர். ஆனால் கோபால் நாயக்கர் அதை மதிக்கவில்லை. இதற்கிடையில் கட்டபொம்மன் பிரிட்டிஷ் படையிடம் பிடிபட்டு கயத்தாறில் நவம்பர் 1799ல் தூக்கிலிடப்பட்டார். தங்கள் அழைப்பை கோபால் நாயக்கர் ஏற்காததால் ஆத்திரமடைந்த பிரிட்டிஷார், கட்டபொம்மனை முறியடித்த மேஜர் பானர்மானை விட்டு கோபால் நாயக்கருக்கு எச்சரிக்கைச் செய்தி ஒன்றை செப்புப் பட்டயம் ஒன்றில் அனுப்பினர். அதில் கம்பெனிக்கு எதிராகப் போரில் ஈடுபட்டால் கட்டபொம்மனுக்கு ஏற்பட்ட கதிதான் அவருக்கும் ஏற்படும் என்று கூறப்பட்டிருந்தது. (தற்போது இடையக்கோட்டை ஜமீனில் இந்தப் பட்டயம் உள்ளது.) இம்முறையும் கோபால் நாயக்கர் இந்த ஆணைக்குப் பணிய மறுத்தார். ஆனாலும் அவரோடு தாக்குதலில் இறங்க பிரிட்டிஷார் விரும்பவில்லை. அவரை எச்சரிக்கை மட்டும் செய்யுமாறு கலெக்டர் ஹூர்டிஸுக்கு சென்னை கம்பெனியார் அறிவுறுத்தினர்.

இரண்டாம் முயற்சி

பாஞ்சாலங்குறிச்சிப் படைகள் தோல்வியடைந்ததும், மைசூரில் திப்புவை பிரிட்டிஷார் வீழ்த்தியதும், தமிழகத்தில் பாளையக்காரர்களுக்குத் தளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தன. பொயு 1800ம் ஆண்டு ஆரம்பத்தில் ஏற்பட்ட இந்தத் தொய்வை நீட்டிக்க கோபால் நாயக்கர் விரும்பவில்லை. கூட்டணித் தலைவர்களை ஒருங்கிணைத்து மீண்டும் பிரிட்டிஷாருக்கு எதிரான நடவடிக்கைகளைத் துவக்கினார். அச்சமயம் அவருக்கு வயது 75. வயது முதிர்ந்தாலும் தீரம் குறையாத அவர், மதுரையிலும் திண்டுக்கல்லிலும் ரகசியக் கூட்டங்களை நடத்தினார். இந்தக் கூட்டங்களுக்கு அழைப்பு விடுக்க ஒரு வித்தியாசமான முறை பின்பற்றப்பட்டது. வெற்றிலையில் நகக்குறி இட்டு அதன் மூலம் அழைப்புகள் விடுக்கப்பட்டன. இந்த ஓலையைக் கண்டவர்கள் அதை ஒரு அவசர அழைப்புக்கான செய்தியாக உணர்ந்துகொண்டனர். பாஞ்சாலங்குறிச்சியில் சிறை வைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் தம்பிகளான செவத்தையாவுடனும் ஊமைத்துரையுடனும் தொடர்பை அவர் ஏற்படுத்திக்கொண்டார். சிறையிலிருந்து எப்படியாவது தப்பித்து திண்டுக்கல் வந்து விடுமாறும் தாம் அவர்களுக்குத் தகுந்த பாதுகாப்பு அளிப்பதாகவும் உறுதியளித்தார் அவர். பிரிட்டிஷ் படைகளுடன் மோத மீண்டும் ஒரு நல்ல தருணத்தை எதிர்நோக்கிக் காத்திருந்தார் கோபால் நாயக்கர்.

அந்தத் தருணத்தைக் காலம் அவருக்கு அளித்தது. திப்பு சுல்தான் தோல்வியடைந்தாலும், கன்னடப்பகுதிகளில் பிரிட்டிஷாருக்கு எதிரான உணர்ச்சி நெருப்பு அணையாமல் இருந்தது. அந்தப் பகுதிகளில் இருந்த பிரிட்டிஷ் எதிர்ப்பாளர்களை கிருஷ்ணப்ப நாயக்கரும் துந்தோஜி வாக் என்று அழைக்கப்பட்ட துந்தியா வாக்கும் ஒன்றிணைத்தனர். பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக சில வெற்றிகளையும் பெற்றனர். இது தமிழகக் கூட்டணித் தலைவர்களுக்கு புதிய உத்வேகம் ஒன்றை அளித்தது. வாய்ப்பை நழுவ விடாமல் கோபால் நாயக்கர் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று தூதுக் குழுக்களை துந்தோஜியிடம் அனுப்பினார். பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகப் போர் தொடுக்கப்போகும் தமிழகத் தலைவர்களுக்குத் தேவையான உதவியை அளிக்குமாறு அந்தத் தூதுக் குழுக்கள் துந்தோஜியிடம் கோரிக்கை விடுத்தன. இதை ஏற்ற துந்தோஜி, பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான தாக்குதல்கள் ஒரு கட்டத்தை அடைந்தவுடன், தமது குதிரைப்படைகளை தமிழகத்திற்கு அனுப்பி வைக்க சம்மதம் தெரிவித்தார். இந்தச் செய்தியைத் தாங்கிவந்த கடிதத்துடன் கோபால் நாயக்கரைத் தூதுவர்கள் விருப்பாச்சியில் சந்தித்தனர். அதைக் கண்டு மகிழ்ந்த கோபால் நாயக்கர் இந்த நல்ல செய்தியை மற்ற பாளையத் தலைவர்களுக்கு அளிக்க பல குழுக்களை அனுப்பி வைத்தார்.

அதே தருணத்தில் பாஞ்சாலங்குறிச்சியில் சிறை வைக்கப்பட்டிருந்த கட்டபொம்மனின் சகோதரர்கள் அங்கிருந்து தப்பியிருந்தனர். மருது பாண்டியர்களிடம் ஊமைத்துரை அடைக்கலம் கோரியதை அடுத்து, பிரிட்டிஷருக்கு எதிரான போரில் வெளிப்படையாக மருது பாண்டியர்கள் இறங்க நேரிட்டது. இதைக் கண்ட கோபால் நாயக்கர், தமது பழைய நண்பர்களான மருது சகோதரர்களிடமும் தூதுக்குழுக்களை அனுப்பி, காவிரிக்கரைக்கு தெற்கில் உள்ள புரட்சிப் படைகளுக்கு அவர்களைத் தலைமை தாங்கக் கேட்டுக்கொண்டார். காவிரியின் வடபகுதியில் துந்தாஜியின் படைகளும் கிருஷ்ணப்ப நாயக்கரின் படைகளும் ஒன்றிணைந்தன.

கேரளாவின் மலபார் பகுதியில் அதன் ஆட்சியாளர் கேரள வர்மா பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார். அவரும் இந்தக் கூட்டணியில் இணைந்து கொண்டார். ரகசியமாகக் கூட்டங்கள் நடைபெற்றன, படைகள் திரட்டப்பட்டன. எதிரிகள் அறியாவண்ணம் தகவல்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. இந்த ஒருங்கிணைப்பின் மையமாக கோபால் நாயக்கர் இருந்தார். ஏப்ரல் 29, 1800ம் ஆண்டு அவர் தலைமையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிரான போருக்கான தேதி குறிக்கப்பட்டது. முதலில் கோயம்புத்தூர்க் கோட்டையைத் தாக்குவதென்றும் அதற்கு கோபால் நாயக்கர் தமது படைகளை அனுப்பி வைப்பது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தத் தாக்குதலுக்கு உதவியாக தமது குதிரைப் படைப்பிரிவு ஒன்றை அனுப்பி வைப்பதாக துந்தோஜி வாக் உறுதியளித்தார். குதிரைப்படை வந்தவுடன் மருது பாண்டியர் தென்பகுதியில் தங்கள் தாக்குதலைத் துவங்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

முதல் தாக்குதலுக்கு கோவையைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் அது ஒரு கேந்திரமான இடம் என்பதால்தான். தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று பகுதிகளுக்கும் மையமாக அமைந்த இடம் கோவை. அந்த இடத்தைப் பிடித்துக்கொண்டால், இந்த மூன்று இடங்களுக்கும் தகவல் அனுப்புவது எளிது. 1800ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரத்தில் கோவையில் இருந்த பிரிட்டிஷ் படையைத் தாக்குவது என்ற திட்டத்துடன் கூட்டம் கலைந்தது. ஆனால், அதற்குள் கர்நாடகாவில் பல திருப்பங்கள் நிகழ்ந்துவிட்டன. எதிர்ப்பாளர்களின் நடவடிக்கைகளினால் பொறுமையிழந்த கம்பெனி நிர்வாகம் கர்னல் வெல்லெஸ்லியின் தலைமையில் கிருஷ்ணப்ப நாயக்கரை எதிர்த்துப் போரைத் துவக்கியது. இதனால் துந்தோஜியும் அந்தப் போரில் இழுக்கப்பட்டார். எதிர்பாராதவிதமாக இப்படித் துவங்கிய தாக்குதல்களினால், தமிழகத்திலும் கோவையை நோக்கிச் சென்ற படை, திட்டமிட்ட தேதிக்கு முன்னதாகவே, அதாவது ஏப்ரல் மாதத்திலேயே கோவையை நோக்கிச் செல்லவேண்டியிருந்தது.

வடக்கில் மும்முரமாகப் போரில் ஈடுபட்டிருந்த கன்னடப் படைகள் அதன் உதவிக்கு வர இயலவில்லை. கோவையைத் தாக்க இந்தப் படைகள் வருகின்ற செய்தியும் துரோகிகள் சிலரின் மூலமாக பிரிட்டிஷாரை எட்டிவிட்டது. கோட்டைக்கு வெளியில் வந்து தமிழகப் படைகளை எதிர்க்க சகல முன்னேற்பாடுகளுடன் பிரிட்டிஷ் படை தயாராக இருந்தது. அளவிலும் வலுவிலும் குறைந்த படைகளுக்கு ரகசியத் தாக்குதலே பெரும் பலம். அந்த ரகசியம் வெளிப்பட்டு விட்டதால் பாளையக்காரர்களின் படை பின்வாங்க நேரிட்டது. இருப்பினும் சத்யமங்கலம், தாராபுரம் ஆகிய இடங்களில் உள்ள பிரிட்டிஷ் படைப்பிரிவுகளைத் தாக்கிய பின்னரே இந்தப் படை மீண்டது.

இந்தப் பின்னடைவால் மட்டுமின்றி, கர்நாடகாவில் துந்தோஜி, கிருஷ்ணப்ப நாயக்கர் ஆகியோர் பிரிட்டிஷாரிடம் தோல்வியைத் தழுவியதும், அதனால் அவர்களிடம் உதவி கிடைக்காமல் போனதும், தமிழகப் படைகளுக்கு சோர்வைத் தந்தன. இதனால் டிசம்பர் 1800 வரை பாளையக்காரர்கள் அமைதி காத்தனர்.

மூன்றாம் முயற்சி

இந்த அமைதியைக் கலைத்து பிரிட்டிஷாருக்கு எதிராக மீண்டுமொரு முயற்சியைத் துவக்கினார் கோபால் நாயக்கர். ஜனவரி 1801ல், யதுல் நாயக்குடன் சேர்ந்து, பிரிந்து கிடந்த படைப்பிரிவுகளை ஒன்றிணைத்தார். பிரிட்டிஷருக்கு வரியோ அல்லது எந்த ஒரு நிதியுதவியோ செய்யக்கூடாது என்று குடிமக்களை அவர்கள் கேட்டுக்கொண்டனர். விருப்பாச்சியிலிருந்து கிளம்பிய பாளையக்காரர்களின் படை, மணப்பாறையில் இருந்த பிரிட்டிஷ் படைப்பிரிவைத் தாக்கி வெற்றிகொண்டது. அந்தப் பகுதியில் இருந்த மற்ற பாளையக்காரர்களும் பிரிட்டிஷாருக்கு எதிராகக் கலகம் செய்ய ஆரம்பித்தனர்.

நிலைமை கட்டுமீறிப்போவதைக் கண்ட கம்பெனியார், லெப்டினண்ட் கர்னல் இன்னிஸ் தலைமையில் ஒரு வலுவான படைப்பிரிவை விருப்பாச்சியை நோக்கி அனுப்பிவைத்தனர். இன்னிஸ் ஒரு பெரும் வீரர். மலபாரில் நடைபெற்ற பல போர்களில் வெற்றி கண்டவர். 1801ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தப் படை விருப்பாச்சியை வந்தடைந்தது. இதைக் கேள்விப்பட்ட கூட்டணிப் படையினர், அருகிலுள்ள காடுகளில் முகாமிட்டனர். கோபால் நாயக்கரை உடனடியாகச் சரணடையுமாறு இன்னிஸ் எச்சரிக்கை ஒன்றை அனுப்பினார். இதை சட்டை செய்யாத கோபால் நாயக்கரை, பிரிட்டிஷ் அரசின் எதிரி என்று இன்னிஸ் பிரகடனம் செய்தார். இதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் படைகளுக்கும் பாளையக்காரர் படைகளுக்கும் இடையே கடுமையான போர் துவங்கியது.

மலைப்பகுதிகளில் இருந்த வலுவான பிரிட்டிஷ் படையை கூட்டணிப் படையினர் எதிர்த்து நின்று சளைக்காமல் போர் புரிந்தனர். கோபால் நாயக்கர் தாமே களத்தில் இறங்கி பாச்சலூரில் 700 பேர் கொண்ட படைப்பிரிவுடன் இணைந்து போரில் ஈடுபட்டார். பிரிட்டிஷ் படைகளுக்குப் போதுமான உதவிகள் கிடைத்துக்கொண்டேயிருந்தன. இதனால் சளைத்த பாளையக்காரர் படை, ஒரு கட்டத்தில் ஆனைமலைக் காடுகளுக்குள் பின்வாங்க ஆரம்பித்தது.

தமது ஆதரவாளர்களுடன் கோபால் நாயக்கர் டெல்லிக்கோட்டையை அடைந்தார். அவரைத் தன்னிடம் ஒப்படைக்குமாறு டெல்லிக்கோட்டையின் தலைவரான யதுல் நாயக்கருக்கு இன்னிஸ் செய்தி அனுப்பினார். ஆனால் யதுல் நாயக்கர் இதற்குச் சம்மதிக்கவில்லை. உடனே இன்னிஸ், “கீழ்ப்படிவதன் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் காக்க இன்னும் சந்தர்ப்பம் இருக்கிறது. இல்லாவிடில் பெரும் துன்பங்களை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும். நன்றாகச் சிந்தித்து முடிவெடுங்கள். கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் நீங்கள் பதில் சொல்லவேண்டியிருக்கும்” என்ற எச்சரிக்கையை யதுல் நாயக்கருக்கு அனுப்பி வைத்தார். இதற்கும் யதுல் மசியாததால், ஏப்ரல் 13ம் தேதி பிரிட்டிஷ் படைகள் டெல்லிக்கோட்டையைத் தாக்கின. தீரத்துடன் போர் புரிந்தாலும், பாளையக்காரர்கள் முடிவில் பின்வாங்க நேரிட்டது.

மலைகளுக்குள் கூட்டணிப்படையினர் பதுங்கிவிட, டெல்லிக்கோட்டையை பிரிட்டிஷார் பிடித்துக்கொண்டனர். கோபால் நாயக்கரை எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என்ற முனைப்புடன் கர்னல் இன்னஸ் மும்முனைத் தாக்குதல் ஒன்றைத் துவங்கினார். காப்டன் விட்டில், லெப்டினண்ட் ஹாட்ஸன் ஆகியோரின் தலைமையிலான படைப்பிரிவுகள் காடுகளுக்குள் புகுந்தன. இடைவிடாத பிரிட்டிஷ் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல், கூட்டணிப்படைத் தலைவர்கள் அடர்ந்த காடுகளுக்குள் செல்ல நேரிட்டது. அப்போது ஏற்பட்ட காய்ச்சலில் யதுல் நாயக்கர் உயிரிழந்தார்.

கோபால நாயக்கர் ஆனையூர் நாடு என்ற இடத்திற்குத் தப்பிச்சென்றார். கள்ளப்பட்டியைச் சேர்ந்த பொன்னித்தேவருடன் சேர்ந்து மீண்டும் ஒரு படை திரட்டித் தாக்குதலில் இறங்க முயன்றார். ஆனால் இன்னிஸ் இதை எதிர்பார்த்து பழனி, ஜல்லிப்பட்டி, விருபாட்சி ஆகிய இடங்களில் படைப்பிரிவுகளை நிறுத்தியிருந்தால் இந்த முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. கோபால நாயக்கரைப் பிடித்துத் தருவோருக்கு இரண்டாயிரம் ரூபாயும், மற்றவர்களுக்கு ஐந்நூறு ரூபாயும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பணத்திற்கு ஆசைப்பட்டு அவர் படையிலேயே இருந்த ஒருவர் காட்டிக்கொடுத்ததால், கோபால் நாயக்கர் 1801ம் ஆண்டு மே மாதம் சிறைபிடிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினரும் பிடிக்கப்பட்டு சிறை வைக்கப்பட்டனர்.

அதன்பின் விருபாட்சிப் படைகளுக்கு ஊமைத்துரை தலைமையேற்றதும் மருது பாண்டியர்களும் அவரும் பிரிட்டிஷ் படைகளை எதிர்த்து வீரப்போர் புரிந்ததும் வரலாறு. கோபால் நாயக்கருக்குத் தூக்குத்தண்டனை விதித்த பிரிட்டிஷ் அரசாங்கம் 1801ம் ஆண்டு செப்டம்பர் மாதம் திண்டுக்கல்லில் ஒரு ஏரிக்கரையில் ஒரு புளிய மரத்தில் அந்தத் தண்டனையை நிறைவேற்றியது. அந்த ஏரி இப்போது கோபாலசமுத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இன்றும் விருப்பாச்சியில் அவரது அரண்மனையின் இடிந்த பாகங்கள் காணக்கிடைக்கின்றன. அண்மையில் தமிழக அரசு திண்டுக்கல் பழனி நெடுஞ்சாலையில் அவருக்கு ஒரு மணிமண்டபம் எழுப்பியிருக்கிறது.

 தமிழக முதல் விடுதலைப் போரில் பூலித்தேவரின் துணிச்சல், கட்டபொம்மனின் ஆக்ரோஷம், ஊமைத்துரையின் துணிச்சல், மருது பாண்டியர்களின் வீரம் ஆகியவற்றோடு கோபால் நாயக்கரின் ராஜதந்திரம் இணைத்துப் பேசப்படவேண்டிய ஒன்று. அவரது முயற்சிகள் தோல்வியடைந்ததன் முக்கிய காரணம் ஒற்றுமையின்மையும் துரோகங்களும்தான். வரலாறு மீண்டும் மீண்டும் நமக்கு அளிக்கும் பாடம் நமது எதிரிகள் வெளியிலிருந்து வருவதில்லை என்பதுதான். நம்மிடையே இருந்து துரோகம் இழைத்தவர்களால்தான் பல்வேறு காலகட்டங்களில் வீழ்ச்சியடைந்திருக்கிறோம். ஆனால், எந்த அளவிற்கு அந்நிகழ்வுகளிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டிருக்கிறோம்?

உசாத்துணைகள் :

1. South Indian Rebellion, The First war of Independence 1800-1801, K Rajayyan, Rao and Raghavan

2. Military Reminiscences by Colonel James Welsh, Smith, Elder and Co., Cornhill

Posted on Leave a comment

அரசின் புதிய பாடத்திட்ட நூல்கள் | G.E. பச்சையப்பன்

“இந்தத் தேசத்தின் எதிர்காலத் தலைமுறை உருப்பட ஒரே வழி எல்லாப் பள்ளிக்கூடங்களையும் இடித்து (?) தரைமட்டமாக்குவதுதான்” – ரஸிகமணி என்று இன்றளவும் புகழப்படும் டி.கே.சி. அவர்களின் இக்கருத்தை கல்கி தனது பல கட்டுரைகளில் மேற்கோள் காட்டியுள்ளார். இதன் பொருள் படிக்காமல் எல்லோரும் தற்குறிகளாய் ‘திகழவேண்டும்’ என்பதன்று. சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் கல்வி முறையும் தேர்வு முறைகளும் இருந்த நிலைமையைக் கண்டு அவர் மனம் வெதும்பி முன்வைத்த விமர்சனம் இது.

என் நினைவாற்றலின் மீது நம்பிக்கை வைத்து நான் பயின்ற தமிழ்ப்பாட நூல்களின் உள்ளடக்கத்தைப் பகிர்ந்துகொள்கிறேன். ‘கருத்து தெரிந்து’ நான்காம் வகுப்பு முதல் மேல்நிலைக் கல்வி வரை நான் பயின்ற தமிழ்ப்பாடங்கள் சில –

‘இவர்தாம் பெரியார்’ – பாரதிதாசன் பாடல்
‘கொடி நாள்’ – கட்டுரை கலைஞர் மு. கருணாநிதி
‘வீட்டிற்கோர் புத்தக சாலை’ – பேரறிஞர் அண்ணா
‘செவ்வாழை’ – சிறுகதை – துணைப்பாடம் அண்ணா
‘பொங்கல் திருநாள்’ – கடிதம் – அண்ணா
‘இருண்ட வீடு’ – பாரதிதாசன்.

மற்றும் சிற்பி பாலசுப்ரமணியன், சாலை இளந்திரையன் போன்ற பேராசிரியர்களின் கட்டுரைகள் இடையிடையே. அவையெல்லாம் எனது இலங்கைச் செலவு… என்று தலைப்பிலேயே தம்மை இனங்காட்டிக் கொள்ளும் வகையறாக்கள்.

தமிழக அரசுப்பள்ளிகளில், மாநிலப் பாடத்திட்டத்தைப் பயின்று பட்டதாரியானவன் – துரதிர்ஷ்டவசமாக அவனுக்குப் பாடப்புத்தகங்கள் தாண்டிய வாசிப்பு வாய்க்கவில்லையென்றால் – கீழ்க்காணும் முடிவுகளுக்கு வந்திருப்பான்.

– தமிழகத்தில் அண்ணாதுரை மட்டும்தான் அறிஞர்.
– திருக்குறளைவிடச் சிறந்தது குறளோவியம்.
– தமிழின் தனிப்பெருங் கவிஞர் பாரதிதாசன் மட்டுமே (இவர் புரட்சிக்கவிஞர் என்று அழைக்கப்படுவதால் ரஷ்யப்புரட்சி, சீனப்புரட்சி, பிரெஞ்சுப் புரட்சிகளில் பங்காற்றியிருக்கலாம்.)
– ஈ.வெ.ரா. மட்டும் பிறக்கவில்லை என்றால் தமிழன் பகுத்தறிவினைப் பெறாமல் ஐந்தறிவோடு வாழ்ந்து மடிந்திருப்பான்.

ஏனென்றால் ராமசாமி நாயக்கர்தான் தமிழனைக் காட்டுமிராண்டி என்றும், தமிழைக் காட்டுமிராண்டி பாஷை என்றும், ஆங்கிலமே தமிழன் உய்ய வழி என்றும் கூறியதால் அவர்தான் தமிழினத்தலைவர். பெரியார் என்று அழைக்கப்பட்ட அவர் கண்ணகியை வசைபாடியதும், தமிழின் தனிப்பெருஞ்செல்வங்களான பக்தி இலக்கியங்களைக் கொளுத்த வேண்டும் என்றதும் அன்னாரின் கூடுதல் தகுதிகள். அவருடைய தலைமை சிஷ்யரும் பின்னால் அவரால் ‘கண்ணீர்த்துளிகள்’ என்று புகழப்பட்டவருமான அண்ணாதுரை ‘தீ பரவட்டும்’ என்று தனது குருநாதரை வழிமொழிந்தார்.

தமிழகத்தின் முதலமைச்சர்களாக அடுத்தடுத்து பதவி வகித்தவர்கள் அண்ணாதுரையும் கருணாநிதியும். எனவே அவர்கள் எழுத்தாளர்களானார்கள். எனவே அவை பாடப்புத்தகங்களில் – வெவ்வேறு வகுப்புகளில் இடம்பெறத் தகுதிபெற்றனவாகிவிட்டன. இப்பட்டியலில் ஜெயலலிதாகூட தனது ஒரு கட்டுரை மூலம் இணைந்திருந்தார். 1991-96ம் ஆண்டு மேல்நிலை முதலாம் ஆண்டு தமிழ்ப் புத்தகத்தில் பாரதி கண்ட புதுமைப்பெண்கள் என்ற தலைப்பிலோ என்னவோ கட்டுரை எழுதியிருந்தார். அவர் மட்டும் எழுத்தாளரில்லையா என்ன? முதலமைச்சர் ஆகிவிட்டாரல்லவா?

நாட்டின் எதிர்காலத் தலைமுறை உருவாகும் இடம் வகுப்பறை என்பதையும், அதற்குப் பாடநூல்களின் உள்ளடக்கமும் போதனா முறைகளும் முக்கியம் என்பதையும் அரசியல்வாதிகள் உணர்ந்திருக்க எந்த நியாயமும் இல்லை. ஆனால் கல்வியாளர்கள்? உண்மையில் பாடப்புத்தகங்களின் உள்ளடக்கம் என்ற விஷயம் அதன் தீவிரத்தன்மையோடு எந்தக் காலத்திலும் அணுகப்படவேயில்லை.

தமிழ்மொழியைப் புதிதாகக் கற்றுணர்ந்த ஒருவன் நம் பாடப்புத்தகங்களை அளவுகோலாகக்கொண்டு, அவற்றில் உள்ள பாடங்களை எழுதிய ஆசிரியர்களின் வேறு நூல்களை, படைப்புகளை அணுகினால் என்ன நிகழ்ந்திருக்கும்?

தம்பிக்குக் கடிதங்கள் எழுதிய அதே கைதான் ‘ரோமாபுரி ராணிகளும்’, ‘கம்பரசமும்’ என்ற தலைப்பில் குப்பைகளை எழுதியுள்ளது என்பதை அறிந்து அதிர்ந்திருப்பானல்லவா?

இவையெல்லாம் கடந்தகாலம்.

அண்மையில் வெளிவந்துள்ள 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்களின் அடிப்படையில் தற்போதைய நிலைமையை விவாதிப்போம்.

உதயசந்திரன் ஐஏஎஸ்ஸின் கல்வித்துறை வருகை ஒரு நல்ல மாற்றமாகக் கருதப்பட்டது. அவருடைய கடந்த காலச் செயல்பாடுகள் அந்த நம்பிக்கையை விதைத்திருந்தன. பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி உள்ளாட்சித் தேர்தலை நடத்திக் காட்டியவர். மதுரையில் புத்தகக் காட்சிக்கு வழிவகுத்தவர். நியாயமானவர் என்கிற ஒரு பொதுக்கருத்தும் நிலவியது. எனவே எதிர்பார்ப்பில் நியாயமிருந்தது.

தமிழகம் முழுவதுமிருந்து கடந்த ஜூன் மாதத் தொடக்கத்திலிருந்தே கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், சிந்தனையாளர்கள் எனப் பல தரப்பினர் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு பாடத்திட்டம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இச்செயல்பாடு உண்மையிலேயே கல்வித்துறை வரலாற்றில் முதல்முறையாக நிகழ்ந்தது. பாடப்புத்தகங்கள் தொடர்பான எதிர்பார்ப்பும் அதிகரித்தது. இடையே அரசியல் நிர்பந்தத்தால் உதயசந்திரனுக்கு நேர்ந்த அதிகாரக் குறைப்பிற்கு, சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் இருந்து எதிர்ப்புக் குரல்களும் எழும்பின.

கடந்த ஜூன் முதல் தேதி அரசு அறிவித்தவாறே புதிய பாடநூல்கள் வந்துள்ளன. நமது பரிசீலனைக்கு 6, 9 மற்றும் 11ம் வகுப்பு பாடநூல்களை எடுத்துக்கொள்வோம். முதலில் மொழிப்பாடமான தமிழ்!

புறத்தோற்றத்தில் – முழுமையாக நவீன அச்சுக் கலையின் சாத்தியமான உச்சபட்ச தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி நூல்கள் உருவாக்கப்பட்டிருப்பதை உணரலாம். 90% பக்கங்கள் வண்ணத்தில் – முக்கியக் கருத்துகள் வேறு வண்ண எழுத்துகளில் அச்சடிக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கு இடமின்றி புத்தகம் பள்ளிக் குழந்தைகளைக் கவரும் என்பதில் ஐயமில்லை.

தொழில் முறை ஓவியர்களின் படத்தை மட்டுமல்லாது, கோபுலு, மணியம் செல்வன் போன்ற கலைஞர்களின் ஓவியங்கள் தேவையான இடங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது.

புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது என்பதும், ஆசிரியரின் வேறு நூல்கள் எவை என்பதும் ஆசிரியர் குறிப்புப் பகுதியில் பழைய பாடத்திட்ட நூல்களில் இடம்பெறும். புதிய பாடத்திட்டத்தில், பாட ஆசிரியரின் வேறு நூல்கள் மட்டுமின்றி, பாடப்பொருளோடு தொடர்புடைய மற்றவர்கள் எழுதிய நூல்களும் ‘நூல்வெளி’ என்ற தலைப்பில் இடம்பெறுகின்றது.. மேல்நிலையில், பாடத்தோடு தொடர்புடைய வேறு நூல்கள் ‘அறிவை விரிவு செய்’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளன.

பாடப்புத்தகத்தின் உருவாக்கத்தின்போதே பெரும் எதிர்பார்ப்பை விதைத்த மாற்றம் QR CODE முறையில் இணையத்தளங்களைப் பயன்படுத்தி ‘காட்சி வழி கற்றல்’ அனுபவங்களை மாணவர்களுக்கு வழங்குவது என்பதாகும். ஆனால் நடைமுறைச் சிக்கல்களை இம்முறை எதிர்கொள்கிறது. முதலில் ஆசிரியர்களிடம் இணைய வசதிகொண்ட ஆண்ட்ராய்ட் அலைபேசி இருக்க வேண்டும். செயலியை உள்ளீடு செய்தபின் இயக்கத் தெரிய வேண்டும். எதிர்வரும் காலத்தில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளினால் இத்தகைய குறைபாடுகளைக் களைய முடியும் என்பதும் உண்மை.

ஆனால் அலைபேசித் திரையில் தோன்றுவதை ஆசிரியர் மட்டுமே காண இயலும். நாற்பது மாணவர்களுக்கும் மேம்பட்ட வகுப்புகளில் தனித்தனியே தனது அலைபேசியை வழங்கி – கையாள – நேரம் அனுமதிக்காது. அது சாத்தியமும் இல்லை. மேலும், பெரிய திரையில் இதனைக் காண்பித்திட அனைத்து அரசுப்பள்ளிகளிலும் வசதி இருக்க வேண்டும்.

பாடப்புத்தகங்கள் தொடர்பான தனது கட்டுரை ஒன்றில், ‘செய்யுள்’, ‘தற்காலக்கவிதைகள்’ என்பதற்குப் பதில், கவிதை, புதுக்கவிதைகள் என அச்சிட என்ன தயக்கம் என்று பிரபஞ்சன் கேட்டிருப்பார். தற்போதைய பதினொன்றாம் வகுப்புத் தமிழ்ப்பாடநூல் மேலாய்வு உறுப்பினர்களுள் அவரும் ஒருவர் – எனினும் அதே ‘செய்யுள்’ நீடிக்கிறது.

‘செய்யுள்’ என்ற தலைப்பில் ‘ஆத்மாநாம் கவிதைகள்’ இடம்பெறுகின்றன.

பழைய பாடத்திட்டத்தில் துணைப்பாடமாகப் பல சிறுகதைகள் – குறைந்தபட்சம் எட்டு தரப்பட்டிருக்கும். ஜெயகாந்தன், அசோகமித்திரன், புதுமைப்பித்தன் எனத் தமிழின் ஆகப்பெரும் எழுத்தாளுமைகளை மேல்நிலையில் மாணவர்கள் (சில ஆசிரியர்கள்!) சந்திப்பர். பின்னாட்களில் தங்கள் துணைப்பாடத்தில் இடம்பெற்ற சிறுகதையாசிரியர்களின் ஒட்டுமொத்த தொகுப்பை வாசிக்க, துணைப்பாடம் ஒரு திறப்பாக இருக்கும் என்பது (மூட) நம்பிக்கை. மேல்நிலைகளில் துணைப்பாட நூல் தனி நூலாகவே வரும். உடன் இலக்கணப்பகுதி இடம்பெற்றிருக்கும்.

ஆனால், இப்போதைய பதினொன்றாம் வகுப்புத் தமிழில் துணைப்பாடங்கள் அனைத்தும் சிறுகதைகள் அன்று. பட்டிமண்டபம் என்றொரு பகுதியும், இசைத்தமிழர் இருவர் என்றொரு பகுதியும் உள்ளன. இளையராஜாவைப் பற்றியும், ஏ.ஆர். இரஹ்மானைப் பற்றியும் (ரஹ்மான் அல்ல! அப்படித்தான் இலக்கணப்படி போட்டிருக்கிறார்கள்) படிப்பது மற்றுமொரு பாடப்பகுதி போன்றே உள்ளது. சேகரின் மகன் எப்படி ‘இரஹ்மான்’ ஆனார் என்பதும் திலீப் என்பது யாருடைய இயற்பெயர் என்பதும் உதயசந்திரனுக்கே வெளிச்சம்.

ஜெயமோகனின் யானை டாக்டர் – சுருக்கப்பட்டு இடம்பெற்றுள்ளது. ‘அறம்’ என்ற தொகுப்பில் உண்மை மனிதர்களின் கதைகள் என இடம்பெற்ற யானை டாக்டர் ‘குறும்புதினம்’ என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. தமிழிலக்கிய வடிவம் குறித்துப் பாடநூல் குழு அறிந்திருக்கிறதா என்ற ஐயம் ஏற்படுகிறது. ஜெயமோகனைப் பற்றிய அறிமுகத்தில் உலகின் மிகப்பெரிய நாவல் வடிவமான அவருடைய வெண்முரசைப் பற்றிய குறிப்புகள் இல்லை. ரஷ்யாவில் கம்யூனிஸத்தின் வீழ்ச்சியை ஒரு புனைவாகப் பதிவு செய்த அவருடைய ‘பின்தொடரும் நிழலின் குரல்’ பற்றிய ஒற்றை வரிகூட இல்லை. ஏன் இல்லை என்று யோசித்தால், பாடத்திட்டக் குழுவின் உறுப்பினர்கள் யாராக இருந்திருப்பார்கள் என்பதை யூகிக்கலாம்.

தமிழில் 96 சிறுகதைகளும், ஏராளமான மொழிபெயர்ப்புகளும் எழுதிய புதுமைப்பித்தனின் படைப்புகள் குவிந்திருக்க – அவருடைய முன்னுரையொன்று பாடப்பகுதியாக இடம்பெற்றுள்ளது, வியப்பளிக்கிறது. ‘ஜீவா’ மறைவு குறித்து சுந்தர ராமசாமி எழுதிய ‘காற்றில் கலந்த பேரோசை’ கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம், அ.முத்துலிங்கத்தின் கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம், சி.சு.செல்லப்பாவின் வாடிவாசல் குறுநாவலின் சுருக்கப்பட்ட வடிவம் எனப் பதினொன்றாம் வகுப்பு தமிழ்ப்பாடநூலே சுருங்கிப்போய்க் கிடக்கிறது.

தமிழ்ப்புனைவுலகில் நாவலாசிரியராக, சிறுகதை ஆசிரியராக அறியப்பட்ட அழகியபெரியவனின் கவிதையொன்றும் இடம்பெற்றுள்ளது. புத்தகத்தில் அவருடைய வரிகளை கவிதை என்றுதான் குறிப்பிடுகிறார்கள்.

புத்தகத்தின் இயல் ஒன்றிலேயே கலை, இலக்கிய விமர்சகர் இந்திரனின் கட்டுரையொன்று இடம்பெற்றுள்ளது. அதன் உள்ளடக்கத்தினையும், மொழிநடையையும் வைத்துப் பார்க்கும்போது அடுத்த ஆண்டு மேல்நிலை இரண்டாம் வகுப்பில் கோணங்கியின் மதினிமார்கள் கதையோ (அ) பொம்மைகள் உடைபடும் நகரமோ இடம்பெறக்கூடும். மாணவர்களும் ‘சலூன் நாற்காலியில் சுழன்றபடி’ அதனை வாசித்து ‘தெளிவடையலாம்’!

6, 7 மற்றும் 11ம் வகுப்பு தமிழ்ப்பாட நூல்களில் எதிலும் கடவுள் வாழ்த்தே இல்லை. மரபாக இடம்பெறும் பல்சமயப் பாடல்களும் இல்லை. உதயசந்திரன் தன் நேர்காணல்களில் அழுத்தமாகக் கூறும் மாற்றமும் இஃதே. தமிழுக்கு பக்தி இலக்கியங்கள் வளம் சேர்த்தமைக்கு நன்றிக் கடனாகவாவது கடவுள் வாழ்த்து இடம்பெற்றிருக்கலாம்.

பன்மைத்துவம் மிக்க சமயச்சார்பற்ற பாடத்திட்டம் எனத் தற்போதைய சமூக அறிவியல் பாடத்தைப் பற்றி உதயசந்திரன் கருத்துரைத்திருந்தார். பாடத்திட்டத்தை வடிவமைப்பதில் அரசியல் குறுக்கீடுகளே இல்லை எனவும் தெரிவித்திருந்தார். ஆனால் தமிழக அரசியலில் இன்னும் அவர், ஷெர்லக் ஹோம்ஸ் கூறுவது போல், எலிமெண்ட்ரி… ஆம். சார்லி ஹெப்டோ இதழ் பிரான்சில் வெளியிட்ட கருத்துப்படத்திற்கு அண்ணாசாலையை ஸ்தம்பிக்கச்செய்யும் ஆர்ப்பாட்டம் நடத்த இங்கே கூட்டம் உண்டு. கிருத்துவ நாடுகளில் கூட வெளியான டான் பிரவுனின் டாவின்சி கோட் திரைப்படம் தமிழகத்தில் கருணாநிதி ஆட்சியில் தடை செய்யப்பட்ட வரலாறு உண்டு. மதச்சார்பின்மை என்பது இந்து மத நம்பிக்கைகளை விமர்சிப்பதே தவிர வேறல்ல என்பதே தமிழகத்தின் நிலைமை. மதச்சார்பற்ற பாடத்திட்டம் எனக் கடவுள் வாழ்த்தைப் பலிகொண்ட உதயசந்திரன் குழுமம், வரலாற்றுப் பாடத்தில் பொது ஆண்டினைக்கொண்டு காலத்தை நிர்ணயித்து, கி.மு, கி.பி நீக்கத்தை முன்வைத்து மதச்சார்பின்மையின் எல்லையை விஸ்தரிக்க முயன்றார். சட்டப்பேரவை வரை விவாதம் நீண்டது. உலகம் தழுவிய முறை என மாஃபா பாண்டியராஜன் விளக்கம் தந்ததும்,இம்முறையை ஆசிரியர்களின் பயிற்சி வகுப்பில் விதந்தோதி நீட்டி முழக்கியதும், அடடா… செங்கோட்டையனும் ஸோ கால்ட் மதச்சார்பின்மைக் கொள்கைப்படி கி.மு, கி.பியே தொடரும் என்று சொல்லிவிட்டார். சரி, அச்சிட்ட புத்தகங்களில் எப்படி மாற்றுவது? ஜெயலலிதா கடந்த காலங்களில் கருணாநிதியின் செம்மொழி வாசகத்தினை ஸ்டிக்கர் ஒட்டி மறைத்தது போன்றா என்ற விளக்கம் ஏதுமில்லை. இத்தனைக்கும் முழுமையான கிறுத்தவரான ஐ.நா சபையின் பான் கி மூன் முதல் பல வரலாற்று ஆசிரியர்கள் வரை ஏற்றது பொது ஆண்டு முறை. பாடத்திட்ட வடிவமைப்பின் போது அரசியல் குறுக்கிடாமல் இருந்திருக்கலாம். ஆனால் நடைமுறைப்படுத்தும்போது?

வரிக்கு வரி உதயசந்திரன் வாசித்து பாடநூல்களை உருவாக்கியதாக நாளிதழ் ஒன்று பதிவுசெய்துள்ளது எனில், தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் என ‘மனோன்மணியம்’ பெ.சுந்தரனார் பெயர் இடம்பெற்றுள்ளது. இதில் என்ன வியப்பு என்கிறீர்களா? மனோன்மணியம் அன்று – மனோன்மணீயம். தமிழ்த்தாய் வாழ்த்தை எழுதியவர் பெயரே தவறாக உள்ளது. சுந்தரனார் எப்போது ‘மணியம்’ வேலை பார்த்தார் என்று தெரியவில்லை. பதினோராம் வகுப்பில் சரியாக உள்ளது. பாடப்பகுதியில் ஒன்றாக மனோன்மணீயம் இடம்பெற்றதும் காரணமாக இருக்கக்கூடும். உதயசந்திரன் ரொம்பவும் வருத்தப்படத் தேவையில்லை. பழைய தமிழ்ப் பாடநூலான ஏழாம் வகுப்பிலும் சுந்தரனார் மணியமாகத்தான் பணிபுரிகின்றார். நமது மொழிப்பாட நூலாக்கத்தின் ஆசிரியர்களின் தமிழ்ப்பற்று எவ்வளவு மேலோட்டமானது என்பதற்கு இதுவே சான்று.

பழைய ஆறாம் வகுப்பு தமிழ்ப்பாடநூலில் உ.வே.சா.வின் பெயரின் விரிவாக்கத்தையே தவறாகக் குறிப்பிட்ட கடந்தகால ‘வரலாற்றுப் பெருமை’ நமது பாடநூல் குழுவிற்கு உண்டு. உ.வே.சா. பதிப்பித்த நூற்களையும் தவறாகக் குறிப்பிட்டிருந்ததை ஆய்வாளர் பொ.வேல்சாமி வெளுத்து வாங்கியிருந்தார் தன் முகநூல் பக்கத்தில். ஆனாலும் ‘மனோன்மணீயம்’ என்ற பெயரில் பல்கலைக்கழகம் இருக்கும்போதும் தவறு தொடர்ந்து நிகழ்வது பேரவலம்.

ஏழாம் வகுப்பில் பாரதிதாசன், பெருஞ்சித்திரனார், பாரதியார் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆசிரியர் அறிமுகத்தில் பாரதிதாசன் – புரட்சிக்கவிஞர் என அடைமொழியுடன் சிறப்பிக்கப்படுகிறார். பெருஞ்சித்திரனாரும் பாவலரேறு என அடையாளப்படுத்தப்படுகிறார். பாரதியார், கவிஞர் பாரதி எனப்படுகிறார். அவ்வளவுதான் அவ்வளவுதான்! பாரதி மகாகவியா இல்லையா என வ.ரா., கல்கி, ஜீவா என ஒரு இலக்கியப் போரே நிகழ்ந்த தமிழுலகில் ‘கவிஞர்’ பாரதியின் இயற்பெயர் சுப்பிரமணியன் என்று மட்டும் கூறுவதன் மூலம் எதனை நிறுவ முயற்சி செய்கிறார்கள்? மகாகவி, தேசியக்கவி என எளிய மனிதர்களால் விளித்து மகிழப்படும் பாரதி – கவிஞர் பாரதி (எ) சுப்பிரமணியன். வலம்புரிஜான் கூறியது நினைவிற்கு வருகிறது. “பாரதியாரின் இறுதி ஊர்வலத்திற்கு வந்த நபர்களை விட அவர் உடலில் மொய்த்த ஈக்கள் அதிகம்!”

பாடப்புத்தகங்களில் மொழிப்பாடமாக இடம் பெறத்தக்கவை, அதன் உள்ளடக்கம், தரம், மாணவர்களிடையே வளர வேண்டிய படைப்பாற்றல் உள்ளிட்ட மொழித்திறன்கள் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு தேர்வு செய்யப்படாமல், ஆளுங்கட்சித் தலைவர்களாலோ (அ) அவர்களுக்கு அணுக்கமானவர்களாலோ எழுதப்பட்டது என்ற ஒன்றை மட்டுமே கருத்தில்கொண்டு தேர்வு செய்யப்பட்ட நிலைமை மாறியுள்ளது என்றே கூறவேண்டும். இதற்குத் தேர்வுக்குழுவினரை மட்டும் உடனே பாராட்டிவிட முடியாது. சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தைப் பற்றிப் பேசிய எடப்பாடியாரும், தர்மயுத்தம் புகழ் ஓ.பன்னீர்செல்வமும் எழுத்தாளர்கள் அல்லர் என்ற தமிழ்மக்களின் நல்லூழும் ஒரு காரணம்.

மொழிப்பாடங்கள் திறன்களை அடிப்படையாகக் கொண்டவை (skills board), கற்றல், பேசுதல், வாசித்தல் மற்றும் எழுதுதல் (Learning, Speaking, Reading, Writing, சுருக்கமாக CRSW) திறன்களை ஆறாம் வகுப்புகளில் வளர்க்கும் வண்ணம் அமையவேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் படைப்பாற்றல் உள்ளிட்ட திறன்களை வளர்ப்பனவாக அமைதல் வேண்டும். புதிய பாடநூல் ஏராளமான செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது எனினும், அதனை செய்துபார்க்கத் தேவையான மொழி ஆய்வகம், துணைக்கருவிகள், (செயல்படுகின்ற) நூலகம் போன்ற வளங்கள் அரசுப்பள்ளிகளில் இருந்தால் மட்டுமே பாடநூல் மாற்றங்கள் முழுமையான வெற்றி தரும்.

என்றாலும், பலநூறு ஆளுமைகளின் ஆலோசனைகள், பல்வேறு கருத்தரங்குகள் – கடும் உழைப்பைக் கோரும் பாடநூல் தயாரிப்புப் பணியில் அயராமல் ஈடுபட்ட கல்வியாளர்கள் எல்லாம் வைரமுத்துவின் கவிதையைத் தமிழ்ப்பாடநூலில் இடம்பெறச் செய்யத்தானா என்று கேட்கத் தோன்றுகிறது.

முதல் படி என்ற வகையில் நாம் இப்பாடத் திட்டத்தின் குறைகளையும் மீறிப் பாராட்டலாம். ஆனால் செல்லவேண்டிய தூரம் மைல் கணக்கில் உள்ளது.